“ உன் சகோதரரை
புன்னகையுடன் எதிர்கொள்வதும் ஒரு அறச்செயலாகும். கனிவு சொட்டும் எந்த ஒரு சொல்லும்
அறச்செயலாகும் . ஒரு
இறையடியார் மற்றொரு இறையடியாரின் சகோதரர் ஆவார். அவரை ஆதரவின்றி
விட்டு விடமாட்டார். எவர் தன் சகோதரரின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை இறைவன் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு
இறையடியாரின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் இறைவன் அவருடைய துன்பத்தை நீக்குவான். “ ---- முஹம்மது நபி
அண்மையில் ஒரு
முக்கிய ஆளுமை காலமானார். அவருக்கு ஒரு நண்பருண்டு. இவரும் ஒரு முக்கியமான
ஆளுமைதான். இருவரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள் . இறந்தவரின் நினைவேந்தல் நிமித்தம்
தன்னுடைய முக நூலில் கீழ்க்கண்டவாறு பதிந்தார் அந்த நண்பர் .
“ நான்
என்னுடைய ஊர்தியில் சென்று கொண்டிருக்கும்போது என் நண்பர் தெரு முனையில் நின்று
கொண்டிருந்தார். அவர் என்னைப்பார்த்து கையசைத்தார். நானும் திரும்ப கையசைத்து
விட்டு என் வழியே சென்று விட்டேன். அந்த இரவில் அவர் காலமாகி விட்டதாக செய்தி
கிடைத்தது. அவர் கையசைத்தபோது வண்டியை நிறுத்தி இரண்டு சொற்கள் பேசாமல் போய் விட்டோமே
என்ற நினைப்பு என் நெஞ்சை உறுத்துகின்றது. “
நம் வாழ்வில் இது
போல எத்தனை கையசைப்புகள் , புன்னகைகள் , நலம் விசாரிப்புகள் , ஆறுதல் சொற்கள்
நம்மை விட்டு கை நழுவி போயிருக்கும் ?
இயந்திரமயமாகி
விட்ட வாழ்க்கை முறையில் ஒவ்வொரு மனிதரும் முடுக்கி விடப்பட்ட பொம்மையாக
மாறிப்போயிருக்கின்றோம். வாரத்தின் இறுதி நாட்களில்தான் குடும்ப உறுப்பினர்
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிகின்றது. நோயாளிகள் மருத்துவ
தாதியரின் தயவிலும் மூத்த குடிமக்கள் தனிமையின் பிடிக்குள்ளும் தள்ளப்படுகின்றனர்.
ஆனால் இந்த
இயந்திர மிடுக்கு மனிதர்கள் அனைவருக்குமே ஐபாட் , டேப் எனப்படும் பல வகையான செல்
பேசிகளுடனும் கணினி திரையின் முன்னரும் சமூக வலைத்தளங்களுடனும் செலவழிக்க நேரம்
நிறையவே இருக்கின்றது. நிஜ மனிதர்களை முகத்துக்கு நேராக பார்க்கும் தருணங்கள்
அருகிப்போய் மின்னியல் சாதனங்களும் அவைகள் உண்டாக்கியிருக்கும் மெய் நிகர்
வெளியில் திரியும் அரூப தொடர்புகளும்தான் மனிதர்களின் உற்ற நண்பர்களாக
மாறியிருக்கின்றன.
தொழில் நுட்ப
வளர்ச்சியின் பயன்பாட்டிற்கும் ஒரு எல்லை உண்டு. அது மனித வாழ்வின் உணர்வு
வெளிகளையும் அந்தரங்க வேளைகளையும் ஆக்கிரமிக்கும்போது மனிதர்கள் இயந்திரங்களாகவும்
இயந்திரங்கள் மனிதர்களாகவும் மாறுகின்ற அவலம் நடக்கின்றது. இதன் விளைவாக விதம்
விதமான மன நெருக்கடிகள் முளை விடுகின்றன. மின்னியல் சாதனங்களும் இணைய உலகும்
உண்டாக்கும் வெறுமையை மதுவும் தற்கொலையும் வேகமாக வந்து நிரப்புகின்றன.
நாம் வாழ்ந்திருக்கும் இந்த கணம் மட்டுமே நம்
கையில் உள்ளது. அடுத்த நொடியைப்பற்றிய உத்திரவாதமில்லை என்னும்போது நாம்
சந்திக்கும் ஒவ்வொரு ஆளும் உறவும் முக்கியமானவர்களாக ஆகி விடுவர். நாம் எந்த மனித
உறவுகளையும் வெறுக்கவும் நிராகரிக்கவும் மாட்டோம். ஏனென்றால் கண்ணீரும் முக
மலர்ச்சியும் புன்னகையும் கனிவும் பரிவும் மனித முகத்தில் மட்டுமே பூக்கும்
மலர்களாகும்.
No comments:
Post a Comment