Tuesday 28 July 2020

உயிருதிர் காலம்


ரமழான் தலைப்பிறையிலிருந்து தொடங்கிய கணக்கு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இறப்பின் பிரிவின் எண்ணங்களைத்தான் சொல்கின்றேன்.


சண்டையும் சமாதானமுமில்லாத முன்னாள் பால்காரரும் அண்டை வீட்டுக்காரருமாகியவர் அதிகாலை படுத்தவர் எழுந்திருக்கவில்லை.

எனது ஆசிரியரும் வரலாற்றாய்வாளரும்  கல்வித்தந்தைகளில் ஒருவருமானவர்.

எனது மார்க்க நிலைப்பாட்டின் காரணமாக எனது வாழ்நாள் வைரியாக தன்னைத்தானே வரித்துக் கொண்ட முஹல்லா வாசி.

வளைகுடா நாட்டில் தன்னந்தனியாக மருத்துவமனை படுக்கையில் இறந்து போன ஒத்த வயதுக்காரர்.

பொது வாழ்க்கையில் அறிமுகமாகி வாழ்வின் பல இன்னல்களை கடந்து நல்ல நிலையை எட்டிய தருணத்தில் இரவில் குடும்பத்தினருடன் காண் பேசி வழியாக உரையாடியவர் பகலில் இல்லாமலாகி விட்டார். இவரும் எனது சம வயதுக்காரரே.

ஒரு நாள் பழக்கத்தில் அணுக்கமாகி ஒரு மாத இடைவெளியில் சாலை விபத்தில் போன 21 வயதுக்காரர்

கொடை வள்ளலும் ஊரின் முக்கியஸ்தருமான ஒருவர்

முன் பிணங்கி இறுதியில்  இணங்கியும் இருந்து கொரோனா கொண்டு போன ஒருவர்

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு பிரிந்த போன பதினெட்டு வயது இளைஞனும் கால்பந்தாட்ட வீரனும் என் மகனின் கூட்டாளியுமானவர்

 நள்ளிரவு காவல் துறை அலைக்கழிப்பில்  எனது சகாவுமாக இருந்தவர். வயது எழுபதை கடந்தும் ராணுவ வீரனின் மிடுக்குள்ள கராத்தே ஆசான்.  கொரோனா பீதியின் காரணமாக சாதாரண மூச்சுத்திணறலில் முடிந்து போனவர்

குழந்தை பெற்று ஒரு வார காலத்தில் இதய சிக்கலுக்கு கொரோனா அச்சம் காரணமாக தகுந்த மருத்துவ பரிகாரம் கிடைக்காமல் துடித்தும் கதறியும் மூச்சை  விட்ட முப்பத்தி மூன்று வயதுக்காரர்

பணமிருந்தும் கொரோனா நெருக்கடி காரணமாக நிமோனியாவிற்கு சிகிச்சை கிடைக்காமல் எந்த மருத்துவமனையும் ஏற்க மறுதது இறந்து போன அறுபதைக்கூட தொடாத வாட்டசாட்ட மனிதர்

இவரும் அறுபது வயதைத் தொடாதவர். எனது உறவினரும் காலை நடை தோழருமாக இருந்தவர் இதய அடைப்பில் விடைபெற்றவர்.

கவண்கல்லில் பட்டு வீழ்கின்ற மாங்காய் போல சுற்றிலும் உள்ள ஒவ்வொரு தலையாய் சரிகின்றதே என அங்கலாய்த்து கொண்டிருக்கும்போதே புதிய இறப்புச் செய்திகள் காற்றைப்போல வந்து மோதிச்செல்கின்றன.

வெளியூர் நண்பர்களுக்கும் இதே போலவே அவரவர் ஊர்களிலும்  அகால இறப்புக்கல், இள வயது மரணங்கள், முக்கியஸ்தர்களின் மறைவுகள் நடப்பதாக பதறுகின்றனர். மக்கள் மருத்துவர்கள், மார்க்க சேவகர்கள், சிறு பருவத்து நண்பர்கள்  என அவர்களிடமும் என்னிடம் இருப்பதைப்போல நீண்டதொரு ஓலை  இருக்கின்றது.

ஒரு இறப்பின் பிரிவின் துயரை உணர்ந்து தீர்வதற்குள் அடுத்தொன்று. இது முடிவதற்குள் பிறிதொன்று.

 நீர் வளையம் போல தொடர் அதிர் விளைவை உண்டுபண்ணும் இது போன்ற இழப்புக்களும் பிரிவுகளும் வாழ்வின் மீதான பிடிப்பையும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களையும்  கரை மண் எழுத்துக்களை கடலலை  மாய்ப்பது போல  காணாமலடிக்கின்றன.

எனது சகோதரனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது “ இந்த வருட டிசம்பரைக்கடந்த பிறகும் மிஞ்சுவதுதான் கணக்கு “என்றேன்.

இப்போது அந்த சொல்லில் ஒரு திருத்தம்: காலையில் இருந்தால் பார்க்கலாம் என்ற சொல்லின் கூர்மை மீது மெல்லிய துணியாகி இழைகின்றது ஒவ்வொரு மூச்சும்.




Sunday 19 July 2020

ஏர்வாடி நவ்ஃபல்


நெல்லை ஏர்வாடி முஹிய்யித்தீன் நகரைச்சார்ந்த ரிஸ்வான் அவர்களின் மகன் நவ்ஃபல் நேற்றிரவு ஒன்பது மணியளவில் ( 18/07/2020 சனிக்கிழமை ) வள்ளியூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார்.

"Be slow to criticize and fast to appreciate".
( விமர்சிப்பதில் மெதுவாகவும் பாராட்டுவதில் வேகமாகவும் இரு )

Friday 3 July 2020

மஹ்லறா நகர் முதல் காட்டு மொஹ்தூம் பள்ளி வரை....




தலைப்பை பார்த்து விட்டு ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்கா முதல் கங்கை வரை’ மாதிரி என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை என்ற பொறுப்பு துறப்புடன் தொடக்கமாகின்றது.