எனது நண்பரின் கண்ணும்மா ( தாய் வழிப்பாட்டி ) தான் அவர்.
“ வாப்பா கலீலு ! அந்த குட்ட மனிசனை அடியேன்.. எவ்வளவு
சொன்னாலும் அவன் போவவே மாட்டேங்குறான். ஒரு குச்சியாவது தாவேன். நானாவது அவன தொரத்தி
விடறேன் “ என்றபடி தனது பிள்ளைகளையும் பெயரன்களையும்
பெயர்த்திகளையும் வாய் ஓயாமல் அழைத்துக் கொண்டே இருக்கின்றார் அந்த மூதாட்டி.
கண்ணும்மாவின் மூளை பிசகி விட்டது என்பதை நேரடியாக சொல்லிடாமல்
அவரை அலட்சியத்துடன் புறக்கணித்து செல்லும் சிறியதும் பெரியதுமான வீட்டு உறுப்பினர்கள்
அவர் முழு நலத்துடன் குடும்பத்தை வளர்த்த காலத்தில் சைவம்
அசைவம் எதுவானாலும் அவரின் கைவிரல்களின் வழியே ஊற்றெடுக்கின்ற சுவைப்பெருக்கில் நனைந்தவைதான்.
பருவமடைதல், தாய்மை , பிள்ளை பிறந்த வீடு , பிள்ளைக்கு
பல் முளைத்த நாட்கள், குர்ஆன் ஓதி முடித்தல்,
மண வீடு , ஷஃபே பராஅத், நிஸ்ஃபு ஷஃபான், பெரு நாட்கள், ரமழான் மாதம் என வாழ்க்கையின்
ஒவ்வொரு பருவத்திற்கும் விதம் விதமாக உண்டிகளையும் பானங்களையும் செய்து தள்ளியவர்.
சோறு கறிக்கான ஆணத்தில் சற்றே சுவைக்குறைவை தனது பிள்ளைகள்
உணர்ந்தாலும் உடனடியாக மாங்கு மாங்கென்று தேங்காய்
துருவி பால் பிழிந்து அந்த ஆணத்தில் சுவையை நிலை நிறுத்துவதில் மாஸ்டர் .
தனது குழந்தைகளின் எல்லாவித தேவைகளையும் தானே உணர்ந்து
நிறைவேற்றக்கூடியவர்.
கண்ணை விட்டு பார்வை விடை பெற்ற நிலை. கடந்த காலங்கள்
மட்டுமே நினைவுகளின் தொலை ஒளியில் அலைந்து திரிகின்றன. இருளுக்குள் அழிந்து போன வெளிச்சம்
போல நினைவுகளின் மென் தடத்தில் சுழலும் விந்தை உலகில் வாழும் அந்த மனுஷியின் சொற்களை பொருட்படுத்துவார் யாருமில்லை.
சரியாக சொல்லப்போனால் புறக்கணிப்பின் மொத்த சுமையையும்
முதுகில் சுமக்கின்ற இரண்டாம் குழந்தைப்பருவம் எனப்படும் யாராலும் கொண்டாடப்படாத முதிய
குழந்தை. .
இயன்றும் இயலாமலும் அதனை சுமக்கும் மனிதர்கள் . இவை அனைத்தையும் நினைத்து
பார்ப்பதின் வழியாக பொது அறிவில் நேர்ந்துள்ள வளைவு நெளிவு கீழ்க்கண்ட வரிகள் மூலம்
நிமிர்த்தப்படுகின்றது .
ஒரு
முதியவர் இறக்கும்போது ஒரு உலகம் முடிந்து போகின்றது
.. … என்ற தொடக்க வரிகளின் மூலம் வாழ்க்கை தேய்ந்து கரையும் கடைசி இடத்திலிருந்து தனது
எழுத்தை தொடங்குகின்றார் இன்ஸாஃப். ( சுவர்களோடு பேசுதல்
) .
ஆமாம். பல சமயங்களில்,
முடிவின், தன்வெறுப்பின் விளிம்பில் கொண்டு போய் தன்னைத்தானே நிறுத்திக் கொண்டு உலகம்
தடுமாறும் இடத்தில்தான் ஒரு எழுத்தாளனின் படைப்பாளியின் ஆக்கங்கள் அங்கு மீட்பர் போல
நேர் நிற்கின்றன.
பரிசளிக்கப்படும் எந்தவொரு பொருளானாலும் அதற்கு ஒரு
விலையுண்டு.. ஆனால் அருவமான அன்பை மனிதர்களின் உணர்வுகளுக்குள் தூலமான வடிவில் பரிமாற்றி
பதிக்கும் ஒரு மாய மனது கடத்தியாக பரிசுப்பொருளை காண கற்றுக் கொடுக்கப்படுகின்றது (
இன்னும் கொடுக்கப்படாத பரிசு ) .
எல்லாவித செயற்கை ஓடுகளையும் தன் மீது போர்த்திக்கொண்டு
வாழ்க்கையானது கல் இரும்பு ஆமை போல காட்சியளித்தாலும் அதனுள் தடதடக்கும் இதயத்தின்
மெல்லிய ஒலிதான் மென் உணர்வுகள்தான் வாழ்வின் அடி நாதம், மையக்கரு.
மனிதனின் உண்மையான மென்மையான உணர்வுகளின் வழி கசிகின்ற
அவனது இதயத்தோடு நடத்தப்படாத எந்தவொரு உரையாடலும் ஒரு போதும் அவற்றின் இலக்குகளை எட்டுவதில்லை.
````````````````````````````````````````````````
.பிழைப்பிற்காக இடையறாத நெடும் பயணங்களை கால் நூற்றாண்டுகளாக
மேற்கொள்பவன் நான்.
பொருள் தேடும் சுமையானது பாசத்தின் ஒவ்வொரு கண்ணியையும்
வலிக்க துடிக்க பறித்தெடுத்து உண்டாக்கும் காயங்களை ஒவ்வொரு பயணத்திலும் இடையறாது சுவைக்க
வேண்டியிருக்கின்றது .
நாசியின் இரு துளைகளின் வழியாக நுழைதல் வெளியேறுதலுமாக
ஓடிக்கொண்டிருக்கும் மூச்சின் இடையறாத ஓட்டம்தான் உயிரியக்கம்.
சந்தித்தலும் விடைபெறலுமான தருணங்களும் அது போன்றதொரு
வாழ்க்கை பருண்மைதான். ஆனாலும் மலர்தல் கசங்குதல்
மீண்டும் மலர்தல் கசங்குதல் என்ற இடையறாத இரு பெரும் உருளைகளுக்கிடையே தொழிற்படும்
இரு எதிர் நிலை உணர்வுகள் மிகத்துல்லியமாக கவனப்படுத்தப்பட்டிருக்கின்றது (விடை பெறும் தருணங்கள்
).
--------------------------------------------------
ஒரு மனிதன், அவன் நல்லவனாயினும் கெட்டவனாயினும் சரியே
. கடந்த கால சித்திரங்கள், துயரம், உயிர் தரித்தல், காத்திருப்பு, தவற விடுதல், ஏக்கம்
போன்றவற்றை தன்னுள் பொதிந்து கொண்டவனாகத்தான் இருப்பான். அந்த மனிதன் நாமாகவும் இருக்கலாம்
நம்மை அடுத்து வாழும் மனிதனாகவும் இருக்கலாம்.
அத்தகைய மனிதனுக்குள் உறையும் மேற்கண்ட ஏதாவது ஒரு
புள்ளியில் அவனுடன் நாம் நமது நன்னடத்தைகளால் தூய உணர்வலைகளால் உரையாடித் தொடும் கணத்தில்
அவன் தன் முழுமையை தரிசிக்கும் நல் வாய்ப்பைப் பெறுவான். இந்த பாதையில் இந்த நூல் ஒரு
திசை காட்டியே..
மலைப்பாதை அல்லது கானகத்தினூடான ஒரு பயணத்தில் நம்மைத்
தீண்டும் புத்திளங்காற்றைப்போல இன்ஸாஃபின் எழுத்துக்கள் உள்ளேயும் வெளியேயும் நம்மைத்
தழுவுகின்றது.
நண்பர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீன் இலங்கை கண்டியைச் சார்ந்தவர்.
ஜாமிஆ நளிமீய்யாவில் முறையாக மார்க்கக் கல்வி கற்று தேறியவர்.
அவர் நளீமிய்யாவின் பாடசாலை வளாகத்தில் கூடு கட்டிக்
கொண்டிருந்த நாட்களிலேயே தனது இறகுகளை காற்றின் பிரமாண்ட வெளிக்குள் ஊடகம் கலை இலக்கியம்
என மெல்ல அசைக்கத் தொடங்கியவர்.
இன்ஸாஃப் தனது தொடர்ச்சியான எழுத்தியக்கத்தின் வழியாக
முன்னகர்ந்து கொண்டே இருக்கின்றார். அவர் இவ்வகை எழுத்துக்களின் அடுத்தக்கட்டத்தை நோக்கி
தாவ வேண்டும்..
மனித மென்னுணர்வுகளைப் பற்றி பேசிடும் ஏராளமான கதைகள்,
திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்ஸாஃபின் எழுத்துக்கள் மென்னுணர்வைப்பேசினாலும்
அதில் நுண்ணிய வேறுபாடுகள் இருக்கின்றன. நமது நெறி, பண்பாடு, மொழி, நிலப்பரப்பு சார்ந்து
பல புதுமையான வித்தியாசமான கூறுகள் இருக்கின்றன.
எனவே இந்த எழுத்துக்களை அவர் கதையாகவோ நாடகமாகவோ
திரைப்படமாகவோ மொழி மாற்றினால் அதன் வீச்சும் எல்லையும் மிகப்பாரியது. அவர் இந்த வழியில்
புத்தடிகளை எடுத்து வைக்க வேண்டும்.
நூல் சிறப்பாக
வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்டைப்பட ஓவியம் உள்ளில் வண்ணத்தை நிறைக்கும் அந்தரங்க மொழியாக
நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.
கட்டுரைகளில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் எழுத்துப்பிழைகளில்
கவனஞ்செலுத்தியிருக்க வேண்டும்.
-----------------------------------------
நளீமிய்யா மாணவர்களுக்கு சீனி, பிஸ்கோத்து, எழுது
பொருட்கள் விற்கும் குணசிறீ மஹத்யாவின் நினைவுகள்
இலைகளின் நுனியில் தங்கிய கனத்த துளி
போல நம் நினைவுகளுக்குள் தேங்கி விடுகின்றது. ( நூல் பக்கம் : 97 )
-----------------------------------------------------------------------------------
நூல் : இலையில் தங்கிய துளிகள்
NIHAL PUBLICATION
12 / E, DASKARA
MURUTHAGAHAMULA
SRILANKA
MOBILE : 00 94 773 925 923
No comments:
Post a Comment