Monday, 21 September 2026

நிறமும் மணமும் களவாடப்பட்ட மலர் --- ரிஹ்லா ஹைதராபாத் நினைவுகள்

ரிஹ்லா ஹைதராபாத்திற்காக சென்னை கடற்கரைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சார்மினார் விரைவுத் தொடர்வண்டியில் ஏறிய பிறகு தேநீருக்காக நாவு அவாவத் தொடங்கியது. நெடு நேரமாகியும் ஒரு மனிதனும் தேநீர் கூவி வரவில்லை. பயணச்சீட்டுப் பரிசோதகரிடம் தேநீர் எப்போது வரும் என இந்தியில் கேட்டேன்.

ஒற்றை வரியில்ஆத்தாஎனச் சொல்லிவிட்டு நகர்ந்தார். ஹைதராபாத் இங்கிருந்தே தொடங்கிவிட்டதே என நினைத்துக்கொண்டேன். இதுவே வடக்காக இருந்திருந்தால்சாய் ஆரேதான் அவரது மறுமொழியாக இருந்திருக்கும் (‘ ரஹா ஹைஎன்பதன் சுருக்கம்). இரண்டுக்குமே பொருள்தேநீர் வருகிறதுஎன்பதுதான். இந்திக்காரரின் உச்சரிப்பில் கனத்த இரும்பொன்று துலங்கி வரும். உர்தூக்காரரின் நாவிலோ அது காற்றைப் போல இழையும். தக்னி உர்தூவில் அது ஓடு நீராக மலர்த்தப்பட்டிருக்கும்.

என் சிறு வயதில் உர்தூ பேசும் முஸ்லிம்களைதக்னிஎன அழைக்கப்படக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டு உர்தூ பேசும் முஸ்லிம்களை உர்தூவை கொச்சையாகப் பேசக்கூடியவர்கள் என்பது ரிஹ்லா ஹைதராபாத்துக்குப் போகும் முன்னர்வரை என் மனப்பதிவாக இருந்தது.

ரிஹ்லா ஹைதராபாத்தின் இரண்டாம் நாளில் குதுப்ஷாஹி கல்லறைத் தோட்டத்தில் வழிகாட்டி வஹ்ஹாஜ் ஃகான் நின்றுகொண்டு ஹைதராபாத்தை உள்ளடக்கிய தக்காணத்தின் வரலாற்றைச் சொன்னார். அதன் பிறகே தக்னிக்கும் உர்தூவுக்குமுள்ள வேறுபாடு புரிந்தது.

தக்னி உள்ளிட்ட பிராந்திய மொழிகளுடன் அறபு, ஃபார்சி, துருக்கி, கடிபோலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பெருமொழிகள் ஒன்றித்து உர்தூவாகப் பரிணமித்திருக்கிறது. பாரசீகம், மராத்தி, கொங்கனி, அறபி, இந்துஸ்தானி ஆகியவற்றின் கலவன் மொழியான தக்னியின் தாக்கத்தினால் ஹைதராபாத் உர்தூவில் கூடிய நீர்த்தன்மைதான் அதனை வடக்கிலிருந்து தெற்காகப் பிரித்து நிறுத்துகிறது.

மொழி மட்டுமல்ல ஹைதராபாத், பீதர், ஔரங்காபாத், லத்தூரை உள்ளடக்கிய பரந்த தக்காணப் பீட பூமியை ஆண்டு உருவாக்கிய குதுப்ஷாஹி அரசர்களும் அவ்வாறு தனித்துதான் நின்றனர். இந்தியாவையே ஒருங்கிணைத்த முகலாயப் பேரரசு என்ற பேரலையின் ஒரு துளியாகக்கூட அவர்கள் தங்களை உணரவில்லை. பொதுவே முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் ஒரு நடைமுறை இருந்தது. அதிகாரத்திற்கு வந்ததும் தங்கள் காலத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் உலகளாவிய அமீர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்வது வழமையாக இருந்தது. பக்தாது, எகிப்து ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு ஆண்ட கிலாஃபத் அரசுகளிடம் அங்கீகாரம் பெற்றது போன்றே இஸ்தான்புல்லை மையமாக்கி ஆண்டுவந்த உஸ்மானிய கிலாஃபத்தின் கீழ் தங்களைப் பொருத்திக்கொண்டதை வரலாற்றில் காணலாம்.

அந்நடைமுறையை இந்தியப் பெருநிலத்தை ஆண்ட சுல்தான்களும் முகலாயப் பேரரசின் சுல்தான்களும் அடியொற்றினர். டெல்லி சுல்தான்களிடமிருந்து விடுவித்துக்கொண்ட முதலாவது பாமினி சுல்தான், எகிப்து அமீரின் ஒப்புதலைப் பெற்றதை வரலாற்றில் காணலாம்.

கோல்கொண்டா சுல்தான்களான குதுப்ஷாஹி ஆட்சியாளர்களும், பீஜாப்பூர் சுல்தான்களான ஆதில்ஷாஹி ஆட்சியாளர்களும் ஷீஆக்களாக இருந்ததால், பாரசீக ஸஃபவீ ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன் தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். ஆலம்கீர் என்ற உலகப்பட்டத்துடன் வலம்வந்த மகா ஔரங்கசீப் போன்று தங்களை வேறுபட்டவர்களாக, தனித்துவமிக்கவர்களாகத்தான் குதுப்ஷாஹி அரசர்களும் காட்டிக்கொண்டனர். இவ்வேறுபாடுதான் ஹைதராபாத்தின் முகத்தை மாற்றியமைக்கவும் காரணமாயிற்று.

ஆதில்ஷாஹி, குதுப்ஷாஹி ஷீஆ ஆட்சியாளர்களின் வரிசைத் தொடரும் ஷீஆப் பெரும்பான்மையும் ஔரங்கசீபின் பரந்து விரிந்த முகலாய ஆட்சியின் கீழ் வலுவில் அகற்றப்பட்டன.

இரு அதிகார மாமத யானைகள் முட்டி மோதும்போது உண்டாகும் அழிவுகள் குறைவற நடந்தேறிய பிறகு குதுப்ஷாஹிகள் வீழ்ந்தனர். மகா ஔரங்கசீப்பின் கீழ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த நிஜாம்களின் ஆட்சி தொடங்கியது. முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது ஹைதராபாத் நிஜாம்கள் முகலாய அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தன்னாட்சி பெற்ற ஆட்சியாளர்களாக உருவெடுத்தனர்.

அதிகார மரபினர் மாறும்போது நிகழும் வேறுபாட்டை மொழியில் மட்டுமல்ல கட்டடக்கலை, உணவு, உடை என எல்லாப் பண்பாட்டு அம்சங்களிலும் காணலாம். ஹைதராபாத்தின் உணவு வகைகளில் ரொட்டி, நாணுக்கு நிகராக ஊண் சோறும் புலவுச்சோறும் தங்களிருப்பை விடாப்பிடியாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றன.

ஷீஆக்களான குதுப்ஷாஹிகளுக்கும் சுன்னீகளான முகலாயர்களுக்குமிடையே நடந்த அதிகாரப் போட்டியில் தக்காணத்து மக்கள் பிரிந்து பிளந்திடவில்லை என்பதுதான் இம்மண்ணின் தனித்தன்மை. இது எதுவரை நீடித்தது என்றால் ஆப்பரேஷன் போலோ என்றழைக்கப்படும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்வரை. ஹைதராபாத்தின் வரலாற்றில் முதன் முதலாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதும் மக்கள் இந்துமுஸ்லிம் எனச் சண்டையிட வைக்கப்பட்டதும் இக்காலக் கட்டத்தில்தான்.

ஹைதராபாத்தைக் கட்டியெழுப்பிய ஷீஆ, சுன்னீ ஆட்சியாளர்கள் தங்களின் தனித்துவத்தை இன்னொன்றுக்கு எதிராகக் காட்டியெல்லாம் நிலைநிறுத்திடவில்லை. தங்களுக்கு முன்னர் தக்காணப் பீடபூமியை ஆண்ட காகதீயர்களையும் தங்களின் மரபு வழி வேர்களாகவே கண்டனர் குதுப்ஷாஹிகள். ‘கோவில், ஏரி, நகரம்என்ற காகதீயர்களின் நகர உருவாக்கச் சூத்திரத்தை அவர்கள்ஏரி, பள்ளிவாசல், நகரம்என்பதாக்கிப் பின்பற்றினர்.

கிட்டத்தட்ட உலகின் நானாபக்கங்களிலிருந்தும் கலைச் செல்வங்களை இங்கு கொண்டுவந்து சேர்த்தார்கள். உடலின் பழுப்பு நிறத்தோலைத் தவிர மற்றெல்லா விடயங்களிலும் தன்னை பிரிட்டானியனாகக் காட்டும் முனைப்பில் எகிப்திலிருந்து மம்மியைக் கொண்டுவந்த அசட்டு நிஜாம் நசீர் நவாஸ் ஜங் ஆகட்டும், நிஜாம்களின் தலைமையமைச்சரான நவாப் மீர் யூசுஃப் அலீ ஃகானின் கொடையில் உருவான சாலர் ஜங் அருங்காட்சியாகட்டும், இவையனைத்தும் தக்காணத்தின் ஆட்சியாளர்கள் உலகளாவியக் கண்ணோட்டம் கொண்டவர்கள் என்பதை எதிரெதிர் முனைகளிலிருந்து நிறுவுபவை.

நாகரிகமென்பது ஆற்றல் மிக்க மனிதனின் சிந்தனையே. சமூகங்களின் தன்கட்டுப்பாடுதான் பேரரசுகளை உருவாக்குகிறதுஎன்கிறார் மகாகவி அல்லமா இக்பால் (றஹ்). தங்களுக்குள் எதிரெதிராக நின்றாலும் ஷீஆ, சுன்னீ ஆட்சியாளர்கள் ஹைதராபாத்தை உள்ளடக்கிய தக்காணத்து நாகரிகத் தொட்டிலைக் கட்டிச் சமைத்ததில் குறைவொன்றும் வைக்கவில்லை.

சாலர் ஜங் அருங்காட்சியகத்தை காணுகையில் உடன் வந்த நண்பர்இவ்வளவு ஆடம்பரங்களுக்கான பணம் மக்களை கசக்கிப் பிழிந்து பெறப்பட்டிருக்கும், இல்லையா?” என்றார்.

சாலர் ஜங் அருங்காட்சியகம் மட்டுமல்ல, குதுப்ஷாஹி கல்லறைத் தோட்டமும் அவ்வகைமையில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். அவை பாரசீகப் பண்பாட்டுச் செழுமையின் தடயங்களின் நீட்சிகளில் ஒன்றாகவே அன்றைய ஆட்சியாளர்களால் பார்க்கப்பட்டன.

குதுப்ஷாஹி கல்லறைத்தோட்டம்

வாழ்வின், ஆட்சியதிகாரத்தின் நிலையாமையை மறக்காமலிருப்பதற்காக குதுப்ஷாஹி அரசர்கள் தங்களின் வாழ்நாளிலேயே தங்களுக்கான கல்லறைகளை உருவாக்கினர் என வஹ்ஹாஜ் ஃகான் வர்ணித்ததை ஏற்கவியலவில்லை. வெளுத்து விறைத்த சடலத்தின் கைமுட்டிக்குள் வாழ்வைச் சுருட்டியுருட்டி எடுத்துச் செல்லும் எத்தனிப்பின் பேதைமையாகத்தான் குதுப்ஷாஹி கல்லறைத்தோட்டம் நிற்கிறது.

மன்னராட்சிகளில் பெரும்பான்மையானவை மக்களின் வியர்வையிலும் நிணத்திலும் குளித்தவைதாம். ஆனால் அவ்விருளை இருளாக மட்டுமே தக்கவைத்துக்கொண்டவர்களும் ஒளியைக் கொண்டு சமன் செய்ய முயன்றவர்களும் உண்டு. அவ்வகையில் ஷீஆக்களான குதுப்ஷாஹி ஆட்சியாளர்களாகட்டும், சுன்னீகளான நிஜாம்களாகட்டும் — இருவருமே இருளையும் ஒளியையும், முரண்களையும் ஒத்திசைவையும் தங்களின் இரு பக்கங்களாகக் கொண்டவர்கள்தாம் எனலாம். ஹைதராபாத் நகரத்தையும் இப்படிப்பட்ட புரிதலுடன்தான் காண வேண்டும்.

ஷீஆக்களின் புனிதத்தலங்களான இரு ஆஷூர்ஃகானாக்களுக்கு அழைத்துக்கொண்டு போனார் வஹ்ஹாஜ் ஃகான். முதலாவது ஆஷூர்ஃகானாவான, ஆஷூர்ஃகானா ஸஹ்றாவின் இடத்தில் முன்னர் நின்றிருந்தது தாருஷ் ஷிஃபா என்ற பெயருடைய பழம் மருத்துவமனை. தற்காலம் அது மறைந்து ஆஷூர்ஃகானா ஸஹ்ராவாக மட்டும் எஞ்சியுள்ளது. ஆஷூர்ஃகானா என்பது ஷீஆக்கள் தங்களின் சடங்குகளைச் செய்வதற்கான இடம். முஹர்ரம் மாதச் சடங்குகளை நிறைவேற்ற சுன்னத் ஜமாத்தினர் நிறுவியிருந்த சில ஆஷூர்ஃகானாக்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன.

சென்னை ஆலந்தூரிலும் ஆஷூர்ஃகானா பெயரில் ஒரு தெருவே உள்ளது. ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பாதுஷாஹி ஆஷூர்ஃகானாவில் ஒரு காலத்தில் ஆயிரம் விளக்குகளை ஏற்றி ஆஷூரா சடங்குகளை நிறைவேற்றியதாக வஹ்ஹாஜ் ஃகான் சொன்னபோது, சென்னை ஆயிரம் விளக்கு மஸ்ஜிதிலுள்ள அப்பாஸி ஆஷூர்ஃகானாவில் ஒருகாலத்தில் முஹர்ரம் மாதச் சடங்கில் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதால் ‘ஆயிரம் விளக்குப் பள்ளிவாசல்’ என்று நிலைத்துவிட்டதன் பெயர்க்காரணமும் நினைவுக்கு வந்தது.

ஆஷூர்ஃகானா ஸஹ்ராவின் மதில்களில் வரையப்பட்டும் செதுக்கப்பட்டுமுள்ள ஷீஆக்களின் ‘அலம்’ (போர்க்களக் கொடிகள்), அன்னாசிப்பழம், இறக்கைகளும் நீள நாக்குகளும் கொண்ட குறை உடல் உயிரிகள் உள்ளிட்ட உருவகங்களை கோதுடைத்துக் கொண்டிருந்தார் வஹ்ஹாஜ் ஃகான். இஸ்லாத்தில் உருவப்படம் வரைதலுக்கான தடையை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவைதாம் அந்தக் குறையுடலி உயிரிகள் என்பதையும் விளக்கினார். ஷீஆக்களின் முஹர்ரம் ஆஷூரா சடங்குகள் ஷீஆக்களையும் தாண்டி சுன்னீகளாலும் ஏன் இந்துக்களாலும் கூட ‘பீர் பண்டுகா’ (ஆன்மிகப் பெரியவரின் பண்டிகை) என்ற பெயரில் கொண்டாடப்படுவதாகச் சொன்னார்.

இந்நகரில் கணிசமான எண்ணிக்கையில் ஷீஆக்கள் இருந்தாலும் ஹைதராபாத் நகரத்தை உருவாக்கிய தொடக்கக் கால ஷீஆக்கள், அதாவது உண்மை ஹைதராபாதிகள் என எவரும் இன்றில்லை. இன்றைய காலகட்டத்தில் ஆஷூரா நாளின் சடங்குகளைக் கொண்டாடுபவர்களில் பெரும்பாலோர் அன்றைய தினத்தில் மட்டும் தம்மை ஷீஆக்களாக உணரக்கூடிய சுன்னீகள்தாம் என்ற சுவாரசியமான உண்மையைச் சொன்னார் வஹ்ஹாஜ் ஃகான்.

பாதுஷாஹி ஆஷூர்ஃகானாவிற்குச் செல்லும் வழியில் நிஜாமின் கணக்காளரால் (முன்ஷி) தொடங்கப்பட்ட முன்ஷி நாண் (முன்ஷி ரொட்டிக்கடை)க்கும், சட்டா பஜாரிலுள்ள மெஹ்பூப் வானொலி சர்வீஸ் கடைக்கும் வஹ்ஹாஜ் ஃகான் கூட்டிக்கொண்டு போனார்.

முன்ஷி நாணுக்கு நிஜாமின் அங்கீகாரம் கிட்டியதன் அடையாளமாய் தஸ்தார் எனப்படும் தலைப்பாகை இலச்சினை கடையின் அறிவிப்புப் பலகையில் பொறிக்கப்பட்டிருந்தது. பொது மக்களுக்காக விற்கப்படும் சுவையான மென் ரொட்டிகள் வரை ஹைதராபாத் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

ஹைதராபாத் வீழ்த்தப்பட்ட பிறகு நிஜாம்களின் அரச வானொலி நிலையமாகவிருந்த நிஜாம் வானொலி அகில இந்திய வானொலியின் ஹைதராபாத் நிலையத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது. அந்நிலையம் இருந்த இடமானது மெஹ்பூப் வானொலி சர்வீஸஸ் ஆக மாற்றப்பட்டது. படைகளிடம் ஹைதராபாத் வீழ்ந்த ஆண்டான ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டிலிருந்து தற்போது இருக்குமிடத்தில் வானொலிப்பேழை விற்பனை / திருத்தும் கடையாகச் செயற்பட்டுவருகிறது. தக்காணத்தில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு அனலாக் வானொலிப்பேழை நடுவமாக இது நீடிக்கிறது.

பழம் வானொலிப்பேழைகள், இசைத்தட்டு ஒலிப்பான்கள் (கிராம போன் பிளேயர்), ஒலி நாடா பதிவிகள் (டேப் ரெக்கார்டர்), குமிழ் (வால்வு) வானொலிப்பேழைகள் என ஒரு பேரரசின் இறப்பை அறிவிக்கும் மின்னணுச் சடலங்கள். குரல் நாணின் இடத்தில் செவி மாற்றீடு செய்யப்பட்ட மோசடியான பரிமாற்றம். பெரும் வீழ்த்தப்படுதலின் தொழில்நுட்பப் படிமங்கள். முற்றுப்புள்ளியை நோக்கி உந்தப்படும் காவியத்தின் கடைசிப் பக்கம்.

பாதுஷாஹி ஆஷூர்ஃகானாவின் வரலாற்றை விவரித்துக்கொண்டிருந்த வஹ்ஹாஜ் ஃகான் அங்கு நின்றிருந்த சதுர வடிவக் கட்டுமானத்தைச் சுட்டியவாறு இதுதான் ‘தம் கா ரோட்’ பிறந்த இடம் என்றார். பால் திரட்டு, நெய், சர்க்கரை, ஏலம், வாதுமைப்பருப்பு கலவையில் செய்யப்படும் தித்திப்புக் கூழ் அடை இது. கேரளம் நீங்கலாக தென்னகம் முழுக்க அறியப்படும் பெயரும் புகழும் பெற்ற இனிப்பு வகை. ஆஷூரா நாளன்று வளர்க்கப்படும் இந்த எரி அகழியின் தகிப்பு நாள்கணக்கில் நீடிக்கும். அதன் கல் விளிம்புகளுக்கு மேல் கோதுமை ரொட்டி, பலகாரங்களை வைத்து ஏழை பாழைகள் சுட்டெடுப்பனராம்.

ஹைதராபாத்தின் புகழுக்கும் வரலாற்றுக்கும் சான்றாதாரமாக எஞ்சியிருக்கும் இவையும் நகர விரிவாக்கப் பெருந்திட்டங்கள் என்ற முதலை வாய்க்குள் அரைபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என வேதனைப்பட்டார் வஹ்ஹாஜ் ஃகான்.

ஹைதராபாத்தின் உணவு வகைகளில் நல்ல ஹலீமைத் தவிர ஏறத்தாழ மற்றவை ஓரளவு உண்ணக் கிடைத்தது. நூற்றாண்டுகளாக உருவாகிவந்த உணவு மரபை இரண்டரை நாள்கள் அவகாசத்தில் பறவைக் கொத்தாகத்தான் கொத்திக்கொள்ள முடியும். ஒரு குவளைத் தேநீரின் விலை முப்பத்தைந்து ரூபாய்கள். கவனமாகத் திட்டமிட்டு உணவுச்செலவு எகிறிவிடாமல் பார்த்துக்கொண்டார் எங்கள் குழுவிலிருந்த வரலாற்றுப் பேராசிரியர் சுமைஸ். அவர் இதற்கு முன் பல தடவைகள் இங்கு ஆய்வுக்காகவும் தன் மாணவர்களை அழைத்துவந்த பட்டறிவுகளினாலும் இது சாத்தியமாயிற்று எனலாம். ஹைதராபாத்தின் கிரீடங்களில் ஒன்றான பிரியாணிக்கு அப்பால் சுண்டக்காய்ச்சிய பாலுடன் சிறு பழங்கள், உலர்பழங்கள் சேர்த்துச் செய்யப்படும் டெஸர்ட் வகைகள், குடிப்புகள் இங்கு அபாரமானவை. அவற்றை ஒவ்வொன்றாக விவரிப்பதற்கு தனிப்பதிவுதான் இட வேண்டும். அவை நம் நாவில் ஹைதராபாத்தை நிறுத்தி வைப்பவை.

 



இறுதி நாளன்று வாய்ப்புக் குறைவென்பதால் பயணத்தின் இரண்டாம் நாளிரவே ஹைதராபாத்தின் அடையாளங்களில் ஒன்றான வெவ்வேறு அடுமனைகளுக்குச் சென்று இரகம் இரகமாக மாச்சில்லு(பிஸ்கட்)களை வாங்கிக்கொண்டோம். பழம் சேர்க்கப்பட்டவை, குருணையாக உதிர்பவை, வெண்ணெய்போலக் கரைபவை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைச் சுவை கொண்டவை.

செறிவான பாரசீகப் பண்பாட்டின் வாழும் தொடர்ச்சிகளில் ஒன்றான ‘இஸ்ஃபஹான்’ நகரத்தைப் போலவும், இஸ்லாமிய மூலாதாரங்களில் வர்ணிக்கப்படும் சுவனத்தின் வடிவத்தைப் போலவும் கிப்லாவை முன்னோக்கியதாகவும் ஹைதராபாத் திட்டமிடப்பட்டுச் செதுக்கப்பட்டது. சுவனத்தை நினைவுறுத்தும் வகையில் ஏராளமான மலர்க்காடுகள் அமைக்கப்பட்டதால் பூங்காக்களின் நகரம் எனப்பொருள்படும் வகையில் ‘பாகா நகர்’ என்ற இன்னொரு பெயரும் அதற்குண்டு.

வெள்ளிக்கிழமையன்று காலை சார்மினார் பகுதிக்கு தேநீர் அருந்தச் சென்றபோது திகைத்துப்போனோம். சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தவர்களால் மொத்த சார்மினாரும் வளைக்கப்பட்டிருந்தது. சிங்கத்தின் உயிரற்ற உடலத்தை எறும்புகள் சுமந்துசெல்வது போலிருந்தது. சார்மினாரின் தென்கிழக்குப்பகுதியில் கடந்த சில பத்தாண்டுகளாக பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புக் கோயிலுக்காகத்தான் இவ்வளவு திரள்.

கோல்கொண்டாவில் கொள்ளை நோயின் தாக்கம் நிலவிய காலத்தில் மூசி ஆற்றிங்கரையில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைதராபாத் நகரம், திட்டமிட்டு தோட்டங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய நகரமாகும். தக்னி மொழியில் ‘பாக’ என்றால் தோட்டம் என்பதால் ‘பாக நகர்’ என்றும் கூறினர். அதை ‘பாக்ய நகர்’ என்று உருமாற்றி பாக்கியலட்சுமி என்ற பெயரில் திட்டமிட்டு ஆக்கிரமித்துள்ளனர்.

கோல்கொண்டா சுல்தான் முஹம்மது குலி குதுப்ஷா இந்நகரை புதியதாக உருவாக்கியபோது நான்காவது கலீஃபாவான ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்களின் நினைவாக இப்பெயரைச் சூட்டினார். அலீ (ரலி) அவர்களின் வீரத்தைக் குறிக்க ‘ஹைதர்’ (சிங்கம்) என்ற பட்டப் பெயரை ஷீஆக்கள் கூடுதலாகக் குறிப்பிடுவர். இதுவே ஹைதராபாத்தின் (ஹைதர்+ஆபாத்) பெயர்க்காரணம்.

ஹைதராபாத் என்பது திட்டமிட்ட புதிய நகராக உருவாக்கப்பட்டு அதன் அடையாளமாக சார்மினாரும் இருக்க, பாக்கியலட்சுமி என்ற பெயரில் விஷமத்தனத்துடன் வைக்கப்பட்ட இவ்வாக்கிரமிப்பை ஒன்றிய தொல்லியல் துறை ஏற்கவில்லை. இவ்வாக்கிரமிப்பு தொடர்பாக விவாதம் எழுந்தபோது உண்மையை விளக்கும் வகையில் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் ஆக்கிரமிக்கப்படாத சார்மினாரின் ஒளிப்படத்துடன் ஆக்கிரமிப்பு ஏற்பட்ட காலகட்டத்திலுள்ள ஒளிப்படத்தையும் தனது சேகரத்திலிருந்து வெளியிட்டது.

 

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் சேகரத்திலிருந்து

குதுப்ஷாஹிக்களின் வரிசையில் ஐந்தாவது சுல்தானான முகம்மது குலி குதுப்ஷா, அதாவது சார்மினாரின் தந்தை, பொது ஆண்டு ஆயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்றொன்றில் சார்மினாருக்கு அடித்தளமிடும்போது, “கடலில் மீன்களை நிரப்பியதுபோல, என் நகரத்தையும் மக்களால் நிரப்புவாயாக” என இறையை வேண்டினாராம். தனது கட்டுமானம் மக்களைப் பிளந்துபோடுவதற்கான பேராயுதமாக மாற்றப்படும் எனத் தன் வாழ்நாளில் என்றைக்காவது அவர் நினைத்துப் பார்த்திருப்பாரா?

ஹைதராபாத் வீழ்த்தப்பட்டதற்கான நிறைய அக-புறக் காரணங்களிருந்தாலும் இதில் ஆர்ய சமாஜத்தினரின் வகிபாகம் பெருமளவில் எனலாம். ஹைதராபாத்தை தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் கனவும் திட்டமும் அவர்களுக்கிருந்தது. சுத்தி சடங்குகள் மூலம் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்துக்களாக்கப்பட்டனர். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் மானம் சூறையாடப்பட்டது. இவற்றை எதிர்த்து நின்றனர் இரஸாக்கர்கள்.

பொதுவுடைமையாளர்களுக்கெதிராக இரஸாக்கர்களை நிலப்பிரபுக்கள் தூண்டியதினால் கொடூரமான கொலைகள் நடந்தேறின. இதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கெதிரான இனப்படுகொலை என்பதாகப் பரப்புரை செய்து இந்தியப் படைகள் ஹைதராபாத்தில் குவிக்கப்படுவதற்கான பொது மக்களின் ஏற்பைத் தேடிக் கொண்டது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் தக்காணம் குருதியைச் சூடிக் கொண்டது.

தக்காணம் இந்தியாவின் கீழ் கொண்டு வரப்படுவதை எதிர்த்து இரஸாக்கர்கள் போராடினர். இரஸாக்கர்கள் என்றவுடன் அது முஸ்லிம்களால் நிரம்பிய படை என்ற பொய்யானது இன்றைய காலகட்டத்தில் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இரஸாக்கர்களில் முஸ்லிம்கள், இந்துக்கள் என எல்லோரும் விரவியிருந்தனர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஹைதராபாத் இந்தியக் கரங்களில் வீழ்வதை எதிர்த்து இரஸாக்கர்களுடன் ஆர்ய சமாஜத்தினரும் கைகோர்த்துக்கொண்டனர். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் ஹைதராபாத்தை உள்ளடக்கிய தக்காணப் பீடபூமியின் ஆட்சி நிஜாம்களிடமிருந்து பறிக்கப்பட்டது. ஒன்றுபட்ட ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் என்ற மூன்று மொழிவாரி மாநிலங்களுக்கிடையில் பிய்க்கப்பட்டது தக்காணம். இந்த அமளியில் ஏறத்தாழ மூன்று இலட்சம் முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

வெளியிலிருந்து குவிக்கப்பட்ட காடையர்கள் முதலில் ஏவி விடப்பட்டனர். உயிருக்கும் மானத்துக்கும் அஞ்சிய முஸ்லிம் பெண்கள் சோளக் கொல்லைகளுக்குள் போய் ஒளிந்துகொள்ள, நெட்டைக்கதிர்களின் சலசலப்பை வைத்து அவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டனர். நிறைய பெண்கள் கிணற்றுக்குள் குதித்திருக்கின்றனர். தன் தாய்வழிப் பாட்டியின் தங்கையும் அவ்வாறு கிணற்றில் குதித்து உயிரை விட்டதாகவும், அவரின் சடலத்தைக் கூட காடையர்களும் படைகளும் விட்டு வைக்காததை தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவாறு வஹ்ஹாஜ் ஃகான் விவரித்தார்.

ஹைதராபாத் நகரத்தில் நடந்ததை விட தக்காணத்தின் தொலைக் கிராமப் பகுதிகளில்தான் மனிதர்கள் கொத்துக் கொத்தாக வேட்டையாடப்பட்டனர். தக்காணம் சந்தித்த பேரழிவை ஏ.ஜி.நூரானி, உமர் ஃகாலிதி உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்கள் நூல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளனர். மக்தூப் ஊடகத்திலிருந்து When Pomegranate Turns Greyஎன்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஆவணப்படத்துடன் வேறு சிலவும் இத்துயரைப் பற்றிப் பேசுகின்றன.

ஒரு பெரும் இனப்படுகொலைக்கு ‘காவல்துறை நடவடிக்கை’ என மென்பெயர் சூட்டப்பட்டது. மலபாரில் வெள்ளையர்களால் நடத்தப்பட்ட வேகன் படுகொலையானது ‘வேகன் துன்பியல் நிகழ்வு’ என அழைக்கப்பட்டதைப் போல. இரத்தச் சேற்றின் மீது சொற்களால் அடிக்கப்படும் புகை மூட்டம்.

இஸ்லாமிய நாகரிகத்தின் தொடர் விளைவாக அலங்கரிக்கப்பட்ட தக்காணத்தின் உடல் படைகளின் வலுவோடு முதலில் வீழ்த்தப்பட்டது, பிறகு சிலை வழிபாட்டுக் குறியீடுகள் / இந்துத்துவக் கதையாடல்களின் வழியாக அதன் ஆன்மாவான ஏகத்துவ அடையாளங்கள் தொடர்ந்து திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுவருகின்றன.

ஹைதராபாத்தின் பெயரை ‘பாக்ய நகர்’ என மாற்றுவதற்கான எத்தனங்களும் நகரின் மையத்திலிருக்கும் ஹுசைன் சாகர் ஏரியை ஏரிக்கரை எனப் பொருள் தரும் வகையில் TANK BUND எனக் குறிப்பிடும் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டிருப்பதும் பெரும் திட்டத்தின் சிறு நுனிகள்தாம்.

போதாக்குறைக்கு கோல்கொண்டா கோட்டையில் காட்டப்படும் ஒலியொளிக்காட்சிகளிலும் அப்பட்டமான வெறுப்புப் பரப்புரை இடம்பெறுவதாக நண்பர்கள் தெரிவித்தனர். நாங்கள் போன சமயம் அக்காட்சி நடைபெறவில்லை.

பயணத்தின் நிறைவாக நாங்கள் சென்ற இடம் தெலங்கானா சட்டமன்றத்திற்கு அருகிலுள்ள பொதுப்பூங்காவில் அமைந்திருக்கும் தெலங்கானா மாநிலத் தொல்லியல் அருங்காட்சியகம். இது கூடுதல் கவனம் பெறாத இடம். ஹைதராபாத்துக்குச் செல்பவர்கள் கட்டாயம் போக வேண்டிய இடமும் கூட.

இங்கு புத்த பிரானின் எச்சங்கள், அசட்டு நவாபுக்கு கொடுங்கனவுகளைக் கொண்டுவந்த எகிப்திய மம்மி, மகா ஔரங்கசீப்பும் அவருடைய சகோதரர் தாரா ஷிகோவும் தங்கள் கைப்பட எழுதியதாகச் சொல்லப்படும் திருக்குர்ஆன் படிகள் எனப் பார்க்க நிறையவுள்ளன.

தக்காணத்தின் எச்சங்களென நீடித்திருப்பவை எங்களது மொழியும் இங்குள்ள உணவு வகைகளும் மட்டும்தான் எனச் சொல்லிப் பயணத்தின் மேல் முத்திரையிட்டார் வஹ்ஹாஜ் ஃகான்.

தி டெக்கான் ஆர்க்கைவின் வஹ்ஹாஜ் கான்

 வஹ்ஹாஜ் ஃகான் அடிப்படையில் ஆங்கில இளங்கலைப் பட்டதாரி. சோர்வறியா இளவல். என் மூத்த மகன் முனவ்வர் ஸாஜிதின் வயதையொத்தவர். அவருடைய தாய்வழி முன்னோர் செங்கல்பட்டைச் சேர்ந்தவர்கள். தக்காணத்தின் வரலாற்றை சொந்த ஆர்வத்தில் கற்று தன்னுடைய அண்ணனும் கட்டடக் கலைஞருமான சிப்கத்துல்லாஹ் ஃகான் உருவாக்கிய தி டெக்கான் ஆர்க்கைவ் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். தக்காணத்தின் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி அதன் எல்லாப் பக்கங்களையும் உள்ளடக்கிய விதத்தில் நல்ல ஆங்கிலத்தில் முன் வைக்கிறார். ஹைதராபாத்தை அறிய விரும்புபவர்கள் தவறவிடக் கூடாதவற்றின் பட்டியலில் டெக்கான் ஆர்க்கைவையும் வஹ்ஹாஜ் ஃகானையும் மறவாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

No comments:

Post a Comment