Tuesday, 12 October 2021

ஷுஅய்ப் காக்கா

 




பகடி பண்ணி எதிர்பார்த்திருந்தது  கடைசியில் வந்தே விட்டது.

 

ஷுஅய்ப் காக்கா கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கூடுதலாகவே வாழ்ந்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயம் அவருக்கு  கடும் மாரடைப்பு  வந்தது. இதைப்பற்றி அவரே எழுதியும் இருக்கின்றார்.


 உள்ளூரில் பார்க்க முடியாது என்று சொல்லி அவரை மதுரைக்கு கொண்டு போகச் சொல்லி விட்டார்கள். மதுரைக்கு வண்டி ஏற்றும்போது  காயல் நியூஸ் இணைய தளத்தின் நிர்வாகி தம்பி முஜாஹிதிடம்  முகம் வெளுத்தவராக “ எழுத்தாளர்  ஷுஅய்ப் இறப்பு என செய்தி போட்டு  விடு என்றிருக்கின்றார்.  முடிவின் கட்டத்திலும் நிதானம்.  அவருக்கு உடல் நலமில்லை என்ற செய்தி வரும்போது  நான் சென்னையில்தான் இருந்தேன்.அந்த சமயங்களில் அவருக்காக அழுது வேண்டியிருக்கின்றேன். இறப்பு செய்தி கிடைத்த இந்த நிமிடமும் நான் சென்னையில்தான்.

 

வட்சப் குழுமத்தில் அவரின் பிரிவுச் செய்தியை பார்த்தவுடன் உடல் நடுங்கி விட்டது. மாற்றவியலாத பேருண்மைகளை ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

 

அவரிடம்  நான் ஏறுக்கு மாறாக பேசுவதுண்டு.  உரிமையில் வா போ என்றுதான் விளிப்பேன். மதுரைக்கு கொண்டு போய் விட்டு நலமடைந்து ஊர் மருத்துவமனையில் இருந்தார். அவரை மதுரைக்கு பரிந்துரைத்த மருத்துவர் அவரிடம் சொல்லியிருக்கின்றார் “ மதுரைக்கு போகும் வரைக்கும் தாங்காது என்றுதான் நினைத்தேன்”. அவருக்கு முழு இதய தமனிகளும் அடைப்பு. நூலிழையில்தான் இரத்தம் ஓடிக் கொண்டிருந்திருக்கின்றது.

 

அவரின் இந்த உடல் நலிவையும்  பெருந்தொற்றுக்கால இறப்புக்களையும் மனத்தில் வைத்து எதற்கும் இருக்கட்டுமே என்ற நினைப்பில் அவருக்கு பலமுறை கீழ்க்கண்டவாறு செல்பேசியில் பேசினேன்.

 

“ காக்கா! நிறைய  பேர் போயிட்டாங்க. கவலையா இருக்கு”

 

“ ஆமாப்பா. அதுக்கு என்ன செய்ய முடியும்?”

 

“ஹயாத் மவ்த் யாரு முந்தின்டு  யாருக்கு தெரியுது?. சரி  நான் ஒன்னு கேக்குறேன்”

 

“ என்ன சொல்லுவேன்”

 

“ காக்கா! சீக்கிரம் போய்றாதீங்கோ. நான் தனிமப்பட்டுடுவேன்.  அப்டித்தான் போயாவணும்ன்டு பிடிவாதம் இருந்தா சொல்லாமக் கொள்ளாம போவாதீயும்”.

 

திட்டி விட்டு சிரித்தார்.

 

“ நான் முந்தி போய்ட்டா நீங்க எனக்கு இறப்பு குறிப்பு எழுதணும். நீங்க போய்ட்டா நான் போடுவேன். என்னா?” என்றவுடனும்  சிரித்தார்.

 

“  நீர் போய்ட்டா  ஒம்ம பத்தி……………………..  இப்படித்தான் எழுதுவேன் என்றேன்.

 

மேலுக்கு கிண்டலாக தோன்றினாலும் அதன் அடியினூடாக ஒழுகும் யதார்த்தத்தினால்தான் அவரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் ஏற்பட்ட முதல் நடுக்கத்திற்குப்பிறகு நான் உடனே என்னை மீட்டுக் கொண்டேன்.   

 

அவருடன் எனக்கு  கிட்டத்தட்ட முப்பது வருட கால பழக்கம். என் உம்மா வீட்டு தெருவான அம்பலமரைக்காயர் தெருவில்தான் அவரின் பெண் வீடு இருந்தது.பின்னாட்களில்தான் அவர் சதுக்கைத் தெருவிற்கு வீடு கட்டிப்போனார்.

 

அவர் வாசித்து சஞ்சிகைகளையும்  புத்தகங்களையும் எனது வீட்டின் சாளரம் வழியே போட்டு விட்டுச் செல்வார். நான் புதியதாக வாங்கி வாசித்த  நூல்களை அவர் வாங்கி  வாசித்து விட்டு திரும்பத் தருவார்.

 

ஒரு நாள் அவர் என்னிடம் புத்தகங்களை இரவல் கேட்டார். வேண்டுமென்றே ஆகாத போகாத புத்தகங்களாக பார்த்து எடுத்து என் மகன் மூலம் அவருக்கு கொடுத்தனுப்பினேன்.  அடுத்த நாள் என்றுதான் நினைக்கின்றேன். அவரிடமிருந்து  தொலைபேசி வந்தது.

 

“ என்னப்பா இத்துப்போன புக்குலாம் கொடுத்திக்கிறா?” என அங்கலாய்த்தார்.

 

“ வேணும்ன்டுதான் குடுத்து உட்டேன்”

 

“…………” என்ற வசைக்குப் பிறகு “ ஏண்டா அப்டி செஞ்சா?”

 

“ இல்ல இது கொரோனா காலமாயிருக்கே. மண்டய கிண்டய போட்டா  புக்க எடுக்க முடியாமப் போயிட்டா என்ன பண்றதுங்கற ஒரு முன்னெச்சரிக்கதான்”

 

“ அட அத ஏன் கேக்குறா. ரோட்டுல போவும்போது  ஒரு பையன் கேக்குறான். காக்கா நீங்களும்   போயிருப்பியோன்டுலோ நெனச்சேன்” என்றார். அவருக்கு எல்லாமே பகடிதான்.

 

அவரின்  எழுத்துக்கள் அத்தனை ரசமானவை. உள்ளூர் இணையதளங்களுக்கு அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும்  மணியானவை.  எல்லா சுவைகளிலும் தரங்குன்றாது எழுத வல்லவர். பொறாமைப்படும் எழுத்து நடை அவருக்கு. காயல் மண்ணிலிருந்து ஒரு தரமான எழுத்தாளர் உருவாகும் முன்னரே சிதைந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


 காலச்சுவடு, சம நிலை சமுதாயம், தி இந்து தமிழ் நாளிதழ், சமரசம் உள்ளிட்ட பல்வேறு அச்சு ஊடகங்களில் வாசகர் கருத்துக்களை செறிவான உள்ளடக்கத்துடன் எழுதக்கூடியவர். இது அப்படியே நீடித்திருந்தால் கூட  தி.க.சி. போல அவர் ஒரு வாசகர் கடித எழுத்தாளராகவாது உருவெடுத்திருப்பார். என்றைக்கு அவர் முகநூலில் கால் வைத்தாரோ அன்றிலிருந்து அவருக்குள்ளிருந்த எழுத்தாளன் இறந்து விட்டான்.  கிட்டத்தட்ட இருபது மணி நேரமும் முக நூல் வாசம்தான். பல தடவை அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை. வம்படி வல்லடி பகடி பதிவுகளினால் அவர் பலருக்கு நேரப்போக்காகவே ஆகிப்போனார். குமிழுக்குள் குமிழாகி விட்டது.

 

பெரும் ஓட்டத்தை எதிர்க்கின்றேன் திமுகவை எதிர்க்கின்றேன் என்ற பெயரில் அவர் எழுதும் கருத்துக்களுக்கு நான் நேர் எதிரானவன். அதில் வலதுசாரி சாய்மானம் கூடுதல் உண்டு. பல நேரங்களில் அவை  பொது நலன்களுக்கு எதிரானவையாக இருக்கும். அவற்றைப்பார்க்கும்போது அவரை அடிக்க வேண்டும் போல இருக்கும். அப்போதும் சரி  நடப்பாகவும் சரி அவரை  ‘ நாடார்’ என்ற செல்லப் பட்டம் போட்டு  அவரது கருத்துக்களை விமர்சித்து கடுமையாக பதிவிடுவதுண்டு.

 

சில சமயங்களில்  நான் போட முடியாததை அவரிடம் ஏற்றி விட்டு முக நூலில்  போட வைப்பதுண்டு. அவற்றை அவரும் பெரும்பாலும் போட்டு விடுவார். அந்த துணிவிலும் அவர் மேல் உள்ள கருத்து கடுப்பிலும்    நான்கைந்து மாதங்களுக்கு முன் அவரைக் கூப்பிட்டு “ காக்கா ஒங்க இறப்பு செய்தி போட்டு விட மாட்டியளா? கொஞ்சம் பரபரப்பாகி நீங்க இன்னும் ஃபேமசாகலாமே” என்றேன்.

 

“ என்ன பைத்தியக்காரனாக்குறதுக்கு வழி சொல்றா நீ? அப்டி யாராவது  அவங்கட  மரண அறிவிப்ப போடுவாங்களாப்பா?” என்றவாறே போனை வைத்து விட்டார்.

 



சமூக வாழ்க்கையில் அவரை போர்க்களம் போன்ற  சூழலில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். ஒரு நாளிரவு. குறுங்குழுவாத மோதலில் கல் பறக்கின்றது. தனது கனத்த உடலுடன் ஷுஅய்ப் காக்கா மெல்ல நடந்து கிமு கச்சேரி தெருவிற்குள் செல்கின்றார். அப்போது அவர்  புஸ் புஸ் என்றுதான் இருப்பார். மெலிவு வந்தது இன்சுலின் போடும் அளவிற்கு நீரிழிவும் இதய நோயும் வந்ததினால்தான்

 

அவர் மெல்ல நடந்து கொண்டிருக்கவே “ அடேய்  சொய்பு போறான்டா. அவனும் சிம்முடா. அடிங்கடா அவனை” என்ற கூக்குரல். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. பதட்டப்படவில்லை. பூப் போல  அங்கிருந்து  போய் விட்டார்.

 

அவரின் இயல்பென்பதே பெருவாரியான கருத்துக்களுக்கு எதிராக நிற்பதுதான்.  ஒட்டு மொத்த ஊரே கலைஞர்பட்டினமாக திகழ இவரும் இவரின் மனைவி வீட்டுக்காரர்களும்  உரத்த  அதிமுக. சலஃபி, தர்கா என்ற முரணினால்  ஊர் பிளவுபடும்போது அப்போதும் அவர் சிறுபான்மை  சல்ஃபி பக்கம்தான்.

 

தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர்.நட்புக்குகந்தவர். முகநூலின் உதவியால் அவரின்  காலம் முழுக்க மக்கள் எதிர் அரசியலிலும் பகடியிலுமாக கழிந்தது கண்டு வேதனையடையாமல் இருக்க முடியவில்லை. மிக சொற்பமாகவே  ஆள்வோரின் தவறுகளுக்கு எதிராக  பெரும்போக்குகளின் அபத்தங்களுக்கு எதிராக  எழுதியுமிருக்கின்றார். அவற்றை நான் சுவைக்கவும் பின்பற்றவும் தயங்கியதில்லலை.

 

மிகவும் வலுவற்ற இதயத்தை வைத்துக் கொண்டு  வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி ஏன் மதுரைக்கு கூட  ஒரு முறை புத்தக கண்காட்சி என போய் விட்டு அன்றிரவிற்குள் வீடு திரும்பி விட்டார். ‘இவ்ளோ பொஸ்தவத்த போட்டு அடச்சி வச்சிக்கிறியளே” என்ற அவரது வீட்டுக்காரியின் கண்டனத்திற்கு “ நான் இக்கிற வர  இதுகளும் இங்கதான் இக்கும்” என்றிருக்கின்றார்.

 

அவரிடம் பிடித்தது அவரின்  பரந்துபட்ட வாசிப்பும்  வாசிப்பு மீதான் நினைவாற்றலும் பகடியும்தான். எவ்வளவு பண நெருக்கடியிலும்  புத்தகங்களை வாங்கி விடுவார். ஒருமுறை அவருக்கு மருந்து வாங்கியாக வேண்டிய கட்டாயம். அப்போதும் பணத்தின் இடத்தில் அவரிடம் புத்தகங்கள்தான் இருந்தது. இதை நான் அழாமல் எழுத இயலவில்லை.  உடல் நலிவின் காரணமாக பணமீட்ட முடியாமல் போய் விட்டாலும்  அவர் எப்போதும்  எதன் பொருட்டும்  தன் கம்பீரத்தை இழக்காதவராகவே இருந்தார்.


இறப்பதற்கு இருபது மணி நேரங்களுக்கு முன்பு தன் வீட்டுக் கட்டிலில் படுத்துக் கிடந்து அதை படமெடுத்து  அவர்  தனது முகநூல் சுவற்றில் பதிவிட்டிருந்தார். அவரது புறப்பாடும் அதே கட்டிலில்தான் நடந்துள்ளது. அவரது கட்டிலிலிருந்து இருபது புத்தகங்களை எடுத்து அகற்றியதாக அவரது மருமகன்  சொன்னார்.




 

 


3 comments:

  1. So sad to know about his loss sir.

    ReplyDelete
  2. ஒரு நூலிலிருந்து துண்டிக்கப்பட்ட
    இன்னுமொரு நூல்... நண்பர் "சுஅய்ப்*

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃபிர்லஹு வர்ஹம்ஹு

    ReplyDelete