Sunday 19 July 2020

ஏர்வாடி நவ்ஃபல்


நெல்லை ஏர்வாடி முஹிய்யித்தீன் நகரைச்சார்ந்த ரிஸ்வான் அவர்களின் மகன் நவ்ஃபல் நேற்றிரவு ஒன்பது மணியளவில் ( 18/07/2020 சனிக்கிழமை ) வள்ளியூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார்.

"Be slow to criticize and fast to appreciate".
( விமர்சிப்பதில் மெதுவாகவும் பாராட்டுவதில் வேகமாகவும் இரு )


இதுதான் அவனின்  வட்ஸப் நிலைத்தகவல். வட்ஸப்பில் கடைசியாக நவ்ஃபல் இருந்த நேரம் இரவு 08:41 மணி.  அதற்குப்பிறகுதான் விபத்து   நடந்து நினைவிழந்திருக்கின்றான். திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு அங்கு  உயிர் பிரிந்திருக்கின்றது.

சென்ற மாதம் ( ஜூன் ) 15 ஆம் தேதி திங்களன்று ஏர்வாடி செல்ல  நேரிட்டது.  இரவு தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் முஹிய்யித்தீன் நகரில் உள்ள நவ்ஃபல் ஹவுஸில்  நானும் நண்பர் மிடாலம் அன்ஸரும் தங்கினோம். அதுதான் அவனது வீடு. அவனது பெற்றோர் வளைகுடாவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆண் மகன் இவன்.  வலிய பெரிய வீட்டில் நவ்ஃபல் மட்டும்தான்.

 இந்த பயணத்தில்தான்  இந்த பையனை நான் முதன்முதலாக சந்திக்கின்றேன். ஏர்வாடியோடு எனக்கு கால் நூற்றாண்டு கால தொடர்புண்டு. அதாவது காலஞ்சென்ற நவ்ஃபலை விட எனது தொடர்பு மூத்தது. நவ்ஃபலின் வயது இருபத்தியிரண்டு. என் பிள்ளைக்கு சமம்,

நேருக்கு நேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவன் கண்களின் வெட்டு சிமிட்டல் அவனை ஒரு முதிரா இளைஞனாக எனக்கு காட்டிற்று. ஆனால் இரவு அமர்வில் அவன் மெல்ல தன்னை திறந்தான். “ காக்கா , உங்களை நான் இப்போது முதன்முறையாக  நேரடியாக சந்தித்தாலும் உங்களது எழுத்துக்களை பலகாலமாக நான் வாசித்துதான்  வருகின்றேன்” என அதே துள்ளல் கண்களோடு சொன்னான். கிட்டதட்ட பதினைந்து வயதில் சாமுவேல் ஹன்டிங்க்டனின்  ‘ நாகரிகங்களின் மோதல் “ நூலை வாசித்திருக்கின்றான். இளம் வயதிலிருந்து அவன் மேற்கொண்டு வரும்   ஆங்கில தமிழ் நூல் வாசிப்பின் விரிவும் அந்த  வாசிப்புகளிலிருந்து அவன் திரட்டிக் கொண்ட ஞானமும் திகைக்க வைத்தது.

திங்கள் மாலை வள்ளியூருக்கு அருகில் கிழவனேரியில் வசிக்கும் இயற்கை அறிவியலாளர் அலீ மனிக்ஃபான் அவர்களை கூட்டாக போய் சந்தித்தோம். அப்போது சில ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டோம்.

அன்றைய இரவு அமர்வில் அவன் வயதையொத்த இளைஞர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் நிறைய திறப்புக்களும் வெளிச்சமும் கிடைத்ததாக தொலைபேசி உரையாடலில் நினைவு கூர்ந்தான்.

இளமைக்குரிய மிடுக்காக அவனிடம் இருந்தது அவனிடம் இருந்த விலையேறிய வெண் அம்பு போன்ற பைக் மட்டும்தான். மற்றபடி முதிர்ந்த மனிதனின் கனிவும் அகலமும் உடைய இளைய பெரியவன். கடந்த வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கான குத்பா உரையை அவன்தான் ஆற்றியிருக்கின்றான். பெருந்தொற்றுக்கால அச்சங்களிலிருந்து  விடுபடல் குறித்த அறிவுரையாக இருந்திருக்கின்றது அவனது உரையின் சாரம்.

நவ்ஃபலின் உடல் சாயலை வைத்து “ அரபி, பலஸ்தீனி “ என செல்லமாக அழைத்தேன். அவனது நண்பர்களும் அவனை அதே பெயரில் ஆதுரத்துடன் அழைத்ததாக அறிய நேர்ந்தது. பலஸ்தீன சிறார்களைப்போல இளைஞர்களை போல இவனும் மலர்ந்து கொண்டிருக்கும்போதே என்றென்றைக்குமாக பறந்து அல்லவா போய்விட்டான்.

அவனது விசாலமான வீடு ஒர் உடற்பயிற்சிக்கூடம். அதோடு நல்ல தரமான ஆவணப்படங்கள், இசைக்கோவைகளுக்கான தயாரிப்புக்கூடமாகவும் நற்பணிகளுக்கான ஆலோசனை நடுவமாகவும் திகழ்ந்திருக்கின்றது. அவனது நண்பர்கள் அனைவருமே ஒரே அலைவரிசையில் உள்ள செயல் விசை மிக்க நல்லிளைஞர்கள். கிரிக்கெட் விளையாட்டானாலும் சமூக பணியானாலும் சரி. இரண்டிற்கும் சம ஊக்கத்துடன் பங்களிக்கும் இளம் படையணியினர்.

 நவ்ஃபலை முதன்முறையாக பார்த்ததிலிருந்து முப்பத்து  மூன்று நாட்களுக்குள் அதுவே  அவனுடனான கடைசியான சந்திப்பாகவும் ஆகி விட்டது.  . ஏர்வாடியிலிருந்து  நான் ஊருக்கு புறப்படும்போது அவன்  தலையோடு தலை சேர்த்து  கட்டியணைத்து  விடை  கொடுத்தான். அந்த   தொடுணர்வின்  அகலமும் நீளமும் கொஞ்சங்கூட குறையாமல் அவனது இளந்தாடியின் குறுகுறுப்புடன் அப்படியே உறைந்து கிடக்கின்றது.








8 comments:

  1. إنا لله و انا اليه راجعون.. اللهم اغفر له و ارحمه

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. Inna Lillahi Wa Inna Ilaihi Rajihoon

    ReplyDelete
  6. Inna lillahi wa inna ilaihi rajioon

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. إنا لله و انا اليه راجعون.. اللهم اغفر له و ارحمه

    ReplyDelete