Sunday, 17 November 2019

இறந்த பின்பும் வாழ்தல் , ஆனந்த் பட்வர்த்தன்---நேர் காணலின் தமிழாக்கம்







ஆனந்த் பட்வர்த்தன் பல பட்டடைகள் கொண்ட வைரம் போல ஒரு மின்னும் போராளி. ஆங்கில இலக்கியம், சமூகவியல், தொடர்பாடல் ( communication)  துறைகளில் பட்டம் பெற்றவர்.

தனது மாணவப்பருவம் தொட்டே வல்லாதிக்க எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, சன நாயகம் & குடிமக்கள் உரிமைக்கான போராட்டம், அணு  குண்டு தேசிய வாத எதிர்ப்பு,  ராணுவ மயமாக்க எதிர்ப்பு , ஹிந்துத்வ ஃபாஸிச எதிர்ப்பு , தொடர்ச்சியற்ற நிலையற்ற மேம்பாட்டு எதிர்ப்பு, வகுப்பு நல்லிணக்கம் , நகர்ப்புற சேரி வாசிகளுக்கான வாழ்விட உரிமை ,கிராமப்புறம் & கல்வி வளர்ச்சிக்காக உழைத்தல் என அவரது பொது வாழ்வின் பட்டியல் நீள்கின்றது.

தெருவில் இறங்கி மக்களுக்காகவும் , நீதிக்காகவும் போராடிய ஆனந்த் பட்வர்தன் அவற்றை கீழ்க்கண்ட திரைப்படங்களின் வாயிலாக வரலாற்று ஆவணங்களாகவும் பதிந்து விட்டார்.

ராம் கே நாம் {கடவுளின் பெயரால்1992},
பித்ர புத்ர தர்ம யுத்த (தந்தை மகன் புனிதப்போர் 1995)
 நர்மதா டயரி[1995)
ஜங்க் அவ்ர் அமன்{ போரும் அமைதியும் 2002}

அவரின் மிக சமீபத்திய வெளியீடான ஜய் பீம் காம்ரேட் என்ற படமானது 1997 ஆம் ஆண்டு நடந்த காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தலித்கள் தொடர்பானது.
அவர்  மொத்தம் 16 ஆவணப்படங்களை எடுத்துள்ளார். அவைகள் 31 உள் நாட்டு , வெளி நாட்டு விருதுகளை பெற்றுள்ளன.

நடுவண் திரைப்பட தணிக்கை வாரியம், தூர்தர்ஷன் ஆகிய அரசு நிறுவனங்கள் விதித்த தடைகளை உடைத்தெறிந்து அவரின் பிரபலமான எட்டுப்படங்கள் ( ராம் கே நாம் , ஜங்க் அவ்ர் அமன், பித்ர புத்ர தர்ம யுத்த அடங்கலாக)  வெற்றிகரமாக நாடெங்கும் திரையிடப்பட்டது.

அவருடனான நேர்காணல் The hindu,metroplus,September 29,2012   நாளிதழில் வெளி வந்தது. அதன் மொழியாக்கத்தை தருகின்றோம்.


வரலாற்று நாயகர்களில் எவரோடு நீங்கள் உங்களை கூடுதலாக அடையாளப்படுத்துவீர்கள்?

யாரை முன்னோடியாகக்கொள்கின்றோம் என்பதும் யாருடன் அடையாளப்படுகின்றோம் என்பதும்  வெவ்வேறானவை. இரண்டு வகையானவை.

காந்தியுடன் நான் வளர்ந்தேன். மார்க்ஸையும் அம்பேத்கரையும் பின்னர் கண்டடைந்தேன். எனது முன்மாதிரி என்பது இவர்களின் கலவைதான் என்றாலும் அவர்களில் வரலாற்றின் புரிதல் வழியாக தன்னை  சரிப்படுத்திக்கொள்ளும் வலிமை படைத்தவரே எனது முழுமையான முன் மாதிரியாகும்.

 தன்னுடைய மன சாட்சியை நச்சரிக்கக்கூடிய , இன்பத்தையே நோக்கமாகக்கொண்ட ஒருரோடுதான்  என்னை நான் அடையாளப்படுத்த முடியும்.  இதற்கு எடுத்துக்காட்டாக சாப்ளினைக்கூறலாம்.

வாழும் மனிதர்களில் யாரை நீங்கள் மிகவும் மதிக்கின்றீர்கள்?

தற்சமயம் சுப. உதய குமாரைத்தான் மிகவும் மதிக்கின்றேன். இவர் வலுவான நீதி நியாயத்திற்காகவும் ,சுகாதாரத்திற்காகவும் கூடன்குளம் அரக்கனுக்கெதிராகவும் சமரை முன்னெடுத்து செல்லுகின்றார்.

உங்களுக்குள்ளேயே நீங்கள் மிகவும் வருந்தும் தனித்த பண்புக்கூறுகள் எவை?

தன்னலமும் தன்னை மையப்படுத்துதலும்தான்.

மிகக்குறைந்த அளவில்தான் என்றாலும் பொறாமைக்கு எதிராகவும் சிந்தனையற்ற  விமர்சனத்திற்கு எதிராகவும் கூடுதல் கூருணர்வுடன் இருத்தலும்தான். அதை விட்டு விட்டு நான் லட்சக்கணக்கான உடன்பாடான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்ததாக என்னிடம் உள்ள வருத்தமளிக்கக்கூடிய பண்பாக சோம்பேறித்தனம்தான் என சொல்ல நான் முனைந்தாலும் இவ்வுலகிற்கு சோம்பேறித்தனம்தான் சிறந்தது.

நாம் எல்லோரும் வேகத்தை குறைக்க வேண்டும். அத்துடன் குறைவாக செயல்பட வேண்டும்.
பிறரிடம் இருக்கக்கூடிய வருந்தக்கூடிய அம்சங்களாக நீங்கள் எதைப்பார்க்கின்றீர்கள்?  
 மனிதாபிமானமின்மை, கொடூரம்,மனக்காழ்ப்பு ஆகும்.

 இவ்வகையான வக்கிரங்களுக்கு நுணுகிக்காணக்கூடிய ஒரு சார்பு நலம் அல்லது  மதி கெட்ட நடத்தை இயல்பாகவே இருக்கும்.

 ஆனால் துயர் தரும் தரும் விடயம் என்னவெனில் இவைகளுக்கு ஒரு விளைவு இருக்கும். அத்துடன் அந்த வளையம் நீடித்ததாகவும் இருக்கும்.

உங்களின் மிகப்பெரும் ஊதாரித்தனம் எது?

காலாவதியாகக்கூடிய சாதனங்களை எனது திரைப்படங்களை முடிக்கும்முன்னர்  வாங்குவதாகும்.

நவீன தொழில் நுட்ப விஷயங்களில் நான் பின் தங்காமல் இருப்பதற்குள்ள பொருத்தமான வழி என்னவென்றால் அத்தகைய சாதனங்களை நான் வாடகைக்கு எடுப்பதாகும்.

ஆனால் ஒரு படத்தயாரிப்பாளாராகிய நான் படப்பிடிப்பை முற்கூட்டியெல்லாம் திட்டமிட இயலாது. நான் எனது போக்கிலேதான் படத்தயாரிப்பு வேலைகளை செய்வதை நான் விரும்புகின்றேன். எனவே நான் தயங்குவதில்லை.


மகிழ்ச்சி என்கின்ற உணர்வு  தொடர்பாக தங்களின் கருத்தென்ன?

மகிழ்ச்சி என்பதை நினைக்கும் பட்சத்திலேயே அது எளிதாக அழியக்கூடியது. சென்ற காலத்தை மீட்டிப்பார்க்கும்போது மகிழ்ச்சி என்பது நினைவிற்கு வரக்கூடியது.  
நீண்ட காலத்திற்கு முன் நான் எழுதிய கவிதையின் வரிகள் எனக்கு நினைவிற்கு வருகின்றது.

“ பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கேட்டார்
எங்களில் மகிழ்வாக இருப்பவர்கள்
கைகளை உயர்த்தட்டும்
நான் எனது கையை உயர்த்தினேன்
வேறெவரும் கைகளை உயர்த்தவில்லை
மகிழ்வாயிருத்தல் என்பது
மிகக்கடினமான ஒன்று என்ற
முடிவிற்கு வந்தேன் ”.

உங்களுக்கு பிடித்தமான பயணம் எது?

முதலில் பயணம் என்பது வார இறுதியில் எனது பெற்றோர்களை காணச்செல்வதாக இருந்தது. அவர்கள் காலமான பிறகு அது போன்ற பிடித்தமான பயணங்கள் என்று எதுவும் இல்லை..

நான் முன்னர் கூறியது போன்று மகிழ்ச்சி என்பது சென்ற காலத்தை மீட்டிப்பார்ப்பதில்தான் உள்ளது எனக்கூறுவேன்.
இன்றிலிருந்து சில வருடங்கள் கழித்து என்னிடம் நீங்கள் கேட்டால் தற்காலத்தில் நான் மேற்கொள்ளும் பயணங்கள் பிடித்தமானவையாக   இருக்கும் என விடையளிப்பேன்.

உங்களுக்கு பிடித்தமான ஓவியர் யார்?

ஒரே ஒரு ஓவியரையே காலாகாலத்திற்கும்  அவர்தான் பிடித்தமானவர் எனக்கூற முடியாது.
ஆனால் தற்சமயம் எனக்கு பிடித்த ஓவியர் யாரெனில் ராம்கிங்கெர் பைஜ் என்பவராவார். அவர் சாந்தி நிகேதனில் எனது தாயாரின் ஆசிரியராக இருந்தவர். 
சாந்தி நிகேதனை சுற்றிலும் வாழ்ந்த தலித்துகளும் ஆதி வாசிகளும்தான் அவரின் படைப்புகளுக்கு தூண்டுதலாக இருந்தன.
மிகைப்படுத்தப்பட்ட ஒழுக்க பண்புகளாக  எவற்றை நீங்கள் கருதுகின்றீர்கள்?
உடற் துணிவு, நாட்டுப்பற்று, மத உணர்வு,

எந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் பொய்யுரைப்பீர்கள்?

பிறரை காயப்படுத்தாமலிருக்க அறிந்தே பொய் சொல்லுவேன்.
 நான் காயப்படாமலிருக்க என்னையறியாமலே பொய் கூறுவேன்.
உங்களது தோற்றத்தைப்பற்றி மிகக் கூடுதலாக நீங்கள் விரும்பாத விஷயம் எது?

விரும்பாத விஷயம் என எப்போதும் ஏதாவது இருந்து கொண்டேதான் இருக்கின்றது.
-- நான் இளையவனாக இருந்த போது குள்ளமாக இருந்தது
--வயதாகும்போது முடி கொட்டி உடல் தடிமனாகுதல்.
இந்த தேய்மானங்கள் என்னை ஒரு ஒழுங்கிற்கோ அல்லது உடற்பயிற்சிக்கோ இட்டுச்செல்லவில்லை என்பதுதான் துயரமானதாகும்.

 நீங்கள் மிகையாக பயன்படுத்தும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எவை?

எதிர்ப்பு , போராட்டம், நீதி , சன நாயகம் , வெளிப்படையான தன்மை.
இவை தேய் வழக்குகளைப்போல் ஒலிக்கின்றன.  ஒருவர் இந்த கொள்கைகளை புதிய முறையில் வெளிப்படுத்துவதற்கு வழியொன்றை கண்டு பிடிக்காத   வரையில் அவைகளை பயன்படுத்துவதற்கு மிகச்சிறிய வாய்ப்புகள்தான் உள்ளன.

உங்களது மிகப்பெரும் அச்சம் எது?

அச்சமென்பது முன்னர்  என் பெற்றோர்களின் இறப்பை குறித்து இருந்தது.
தற்பொழுது எனக்கு முன்னர் என் நேசத்திற்கு உரியவர்கள் இறப்பது பற்றிய அச்சம் எனக்கு இருக்கின்றது.
அல்லது தலையாய விஷயங்களை செய்யுமுன்னர் அல்லது அவற்றை பாதியில் செய்த நிலையில் நான் இறப்பது என்பதுவும் எனக்கு அச்சமளிக்கக்கூடியதாகும்.

உங்களது மிகப்பெரும் துயர் என்ன ?

மகிழ்ச்சியென்பது விரைவில் கடந்து செல்லக்கூடியதாக உள்ளது. நீங்கள் நேசிக்கும் ஆட்கள் என்றென்றைக்கும் உயிர் வாழப்போவதில்லை என்பதுதான் எனது மிகப்பெரும் துயரமாகும்.

உங்களது வாழ்வின் மிகப்பெரும் அன்பிற்குரிய விடயம் எது? அல்லது அன்பிற்குரிய  ஆளுமை  யார்?

94 வயது வரை எவ்வித வன்ம நோக்கமும் இல்லாமல் வாழ்ந்த எனது தந்தைதான் எனது மிகப்பெரும் அன்பிற்குரியவர். முன்னுணர்வுடனும் தன்னையறிந்தும் வாழ்ந்த அவர் எப்பொழுதும் சிரிப்பை இழந்ததேயில்லை.
\
எப்பொழுது எங்கு நீங்கள் மிகவும் மகிழ்வாக இருந்திருக்கின்றீர்கள்?

இந்த கேள்விக்கு நான் முன்னரே விடையளித்திருக்கின்றேன் என நினைக்கின்றேன். சுருக்கமாக சொல்வதெனில் எனது இரு பெற்றோர்களும் உயிருடன் இருந்த வரை தாக்குதல்களிலிருந்தும் காயப்படுவதிலிருந்தும் பாதுகாப்பு பெற்றவனாக என்னை நான் உணர்ந்திருக்கின்றேன்.

தற்பொழுது உங்கள் மன நிலை என்னவாக உள்ளது?

என்னால் முடிந்த அளவு சிறந்ததை  செய்தல்.
நீங்கள் எப்படி இறக்க விரும்புகின்றீர்கள்?

உடனடியாக இறப்பைப்பற்றிய கவலையின்றி வலியின்றி எனது இறப்பு  என்பது  நிகழ வேண்டும்.
நான் காலமான பிறகும் நீண்ட காலத்திற்கு பயனளிக்கக்கூடிய விடயங்களில் பங்களிப்பதற்கு  முன்னர்  விரைவாக நான் இறந்து போக விரும்பவில்லை.


No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka