Tuesday 5 May 2020

விதைக்குள் முடியும் மரம்






காயல்பட்டின சகோ. எஸ்.ஏ.கே. ஸுலைமான் ( 52) நேற்று ( 04/05/2020 திங்கள் கிழமை ) சவூதி தலைநகர் ரியாத் மருத்துவமனையில் இதய சிகிச்சையின்போது காலமடைந்தார். அவரின் மறைவையொட்டி எங்களூர் தம்பி முஹம்மது இப்ராஹீம் ஃபைஸல் தனது முகநூல் நினைவேந்தல் குறிப்பில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

“என்னதான் நமது குடும்பங்களின் பொருளாதார படிநிலை இந்த வெளிநாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் அது சார்ந்து கிடைக்கப்பெற்ற பல முன்னேற்றங்கள் இருந்தாலும் இதற்காக நம்மவர்கள் இழந்தது அதை காட்டிலும் பெரிது. அந்த இழப்பின் அருமையும், அந்த இழப்பின் உருவமும் ஒருசேர ஒரு ஏழையின் கண் முன்னால் காண்பிக்கப்பட்டால் அவன் இழந்தது ஒன்றும் பெரிதல்ல என்று நமக்கு ஆறுதல் கூறுவானோ என்று தோன்றுகிறது.

அவ்வளவு பெரிய தேவை நமக்கு ஏற்பட்டதா? அல்லது ஏற்படுத்தப்பட்டதா?
எமது முன்னோர்கள் எமக்கு சரியான பாதையை தான் இந்த விடயத்தில் காண்பித்து தந்தார்களா என்று சிந்திக்க வைக்கிறது.
இதன் சரியான பாதை என்ன? எங்கு நோக்கி பயணிக்கிறோம்?
அதிலும் பெரும்பான்மையான வெளிநாட்டு மக்களுக்கு பலவகையிலும் இழப்பு தான் மிச்சம்..

இதை பலரும் உணர்ந்து இருப்பீர்கள்.

நீ ஏன் இன்னும் அங்கு இருக்கிறாய் என்று என்னை பார்த்து நீங்கள் கேட்டால், அதற்கு ஏதோ வகையில் நீங்களும் தான் காரணம் என்பது எனது பதில்.
பலர் குடும்பத்தினரோடு வெளிநாட்டில் பணிபுரிய கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விட்டது, இருந்தாலும் குடும்பம் மட்டும் வாழ்க்கை இல்லை. அதை சுற்றியும் பல தேவைகள் இருக்கிறது. அந்த ஒட்டுமொத்த தேவை தான் மனிதனின் முழு வாழ்க்கை.

வெளிநாட்டு வாழ்வின் மூலம் பெற்ற இன்பத்தை விட, பெறப்படாத இன்பங்களே அதிகம்! அதில் மனிதன் அவசியம் பெறப்பட வேண்டிய இன்பங்களும், தேவைகளும் அடங்கும்.
வெளிநாட்டு வாழ்க்கையின் மூலம் அதிகம் நாம் பெற்றது  பகட்டும், பகைமையும்"
-- முஹம்மது இப்ராஹீம் ஃபைஸலின் முகநூல் பதிவு
------------------------------


ரியாதில் காலஞ்சென்ற சகோ.எஸ்.ஏ.கே.ஸுலைமான் அவர்கள் என்னை விட வயதில் எட்டு மாதங்கள் மூத்தவர். மூன்று பெண் பிள்ளைகளுக்கு தகப்பன்.  நான் அவரோடு பழகியதில்லை. அவர் என் மனைவியின் உம்மாவிற்கு உறவினர். கே.எஸ்.சி. திடலில் விளையாடும்போது அவதானித்திருக்கின்றேன்.  அலையலையான தலைமுடியுள்ள பேரழகன். அமைதியும் நிதானமும் மிக்கவர்.


பெருந்தொற்றுகாலம்  ஏற்படுத்திய நாடு முடக்கின் கொடுந்தனிமையில் அவரின் இறுதிக்கணங்கள் சிக்கியிருக்கின்றன. ஒற்றைவழிப் பயணத்திற்கு விடை சொல்லக்கூட ஆளில்லாமல் தனியே பயணித்து விட்டார்.


அயல் மண்ணில் இதுபோன்ற பிரிவுகள் கொஞ்சகாலமாகவே நடக்கத் தொடங்கியிருக்கின்றன. போன வருடம்  ஹூஸைன் என்ற எனது மனைவி வழி உறவுப்பையன் . அவனுக்கு வயது முப்பதிற்கு மேலிருக்கும். சவூதியில்  மருத்துவமனையில் தன்னந்தனியாக சிகிச்சைக்கு போனவன் வீடு திரும்பவேயில்லை.


எல்லோரும் கூடியிருக்க இந்த நிலத்தில் முளைத்தெழும் நாம், யாருமற்று எங்கோ ஒரு தொலை நிலத்தில் இறகைப்போல முடிந்து போவதில் உள்ள துயரத்தின் கனத்தை எதைக்கொண்டு சுமப்பது?

------------------------------

“ரோட்டுல போற ஒருத்தன் என்ன நெனப்பாங்கிறதுதான் தனக்காக சொந்த வீடு கட்டும் ஒரு மலையாளியோட ஆகப்பெரிய கவலை” என்பார் எனது நண்பரும் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி.


மலையாளிகளுக்கு மட்டுமில்லை அதை அப்படியே நமதூருக்கும் புள்ளி விலகாமல் எடுத்து பொருத்திக் கொள்ளலாம்.


கணவனும் மனைவியும் வெளி நாட்டு அமைவு . வீட்டில் இருக்க ஆளில்லை. ஆனாலும் மாடி வைத்துதான் கட்ட வேண்டும். பாவம்! எலிக்கும் அணிலுக்கும் காக்கைக்கும் பேள மோள இடமில்லாமல் போய் விடுமே? அப்படி பார்த்து பார்த்துக் கட்டப்பட்ட வீடுகளும் இருபத்தைந்து ஆண்டுகள் கூட நீடிக்க விடப்படுவதில்லை.


தண்ணீர் சிந்திக்கிடப்பது கண்ணுக்குத்தெரியாமல் வழுக்கி இடுப்பையோ கை கால்களையோ நொறுக்கிக் கொண்டாலுஞ்சரி . வயதானவர்கள் வாத தொல்லையுள்ளவர்களுக்கு எசகு பிசகாக இழுத்து வலித்து கோணிக்கொண்டாலுஞ்சரி. வீட்டிலும்  கழிப்பறையிலும் பளபள ஓடுதான் (டைல்ஸ்) பதிக்க வேண்டும். ஏன்? சிமிண்ட் தரைக்கு என்ன பிரச்னை? எனக்கேட்டால் “ நம்மள ஏழ ஊடுண்டு நெனச்சுக்குறுவாளே ” என்பது என் வீட்டிலிருந்து வரும் மறுமொழி. என் பழைய  வீட்டிற்கு வாடகை வரக்கூடியவர்களும் கேட்கக் கூடிய தலையாயக் கேள்விகளில் ஒன்று  “ டைல்ஸ் போட்டிருக்கா? “


‘பள பள ஓடு’ சட்டகத்திற்குள் அடைபட்ட மன நிலையை அப்படியே நமது மொத்த வாழ்க்கைக்குள்ளும் பொருத்திப்பாருங்கள்:


ஒரு திருமணத்திற்குள்ளேயே பல திருமணங்கள் என எண்ணுமளவிற்கு  செலவேறிய சீர் சடங்குகள். திருமணத்திற்கு முன்னர் ‘சம்பந்தம்’ பேசியதிலிருந்து திருமணத்திற்குப் பிறகு தலைப்பிள்ளை பிறந்து அதற்கு பெயரிட்டு சுன்னத்/காது குத்துவதிலிருந்து காசை ஓசையின்றி தீய்த்துப்போடும் பெரியதும் சிறியதுமான சடங்காச்சாரங்கள். தங்கத்திற்கான ஜக்காத் கொடுக்க காசில்லா விட்டாலும் அட்டி அட்டியாக நகைகளை உருட்டி வைத்துக் கொள்ளும் பேராசை.


எளிமையின் தூய்மையின் பட்டினியின் குறியீடான, நுகர்வு வெறியின் எதிர் பண்பாட்டுச் செயல்பாடான புனித ரமழான் மாதத்தில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகின்றது.


சோற்றுக்கு வழியிருக்கின்றதோ இல்லையோ பிழையின்றி தாய் மொழியை எழுத பேச முடிகின்றதோ இல்லையோ  வகுக்க பெருக்கத்தெரிகின்றதோ இல்லையோ  ஒரு போதும் முழுமையாக பயன்படுத்தித் தீர இயலாத செயலிகளையும் தொழில் நுட்பங்களையும் உள்ளடக்கிய   ஆடம்பர செல்பேசிகளின் வாங்கல் , தெருவில் வருபவர்கள் போகின்றவர்களின் கையை காலை அல்லது கூடிப்போனால் உயிரை மட்டும் காவு கேட்கும் வேட்டை நாய் போன்ற நீளமான இரு சக்கர ஊர்திகள். இடுப்பில் செல்பேசியை செருகி  முதுகுப்புறம் சட்டை புடைக்க பறந்து சென்றடையும் பரலோக இன்பத்தை பிறருக்கு அளிக்க வேண்டாமா நாங்கள் பெற்ற நெடு மரப் பிள்ளைகள் ?

ஒருவன் பெண் பிள்ளையை பெற்றால் போதும் அவனை ஓட்டாண்டியாக்குவதற்கான எல்லா நடைமுறை செலவு ஆயுதங்களையும் கூர் தீட்டி நம் வாழ்வின் இருள் மூலைகளில் சேகரித்து வைத்திருக்கின்றோம். பருவம் வரும்போது தகப்பனின் பொருளாதார நாளத்தில் குறி தவறாமல் குத்திச் சரிக்க வேண்டுமே?


நமக்கான மண்ணறையை நமது சொந்தக்கரங்களாலேயே பிறாண்டிக் கொள்கின்றோம்.


குடும்பத்தோடு வெளிநாட்டில் அமைந்து விட்டால் போதும் என்று நினைக்கின்றோம். விண் மண்ணளாவிய நம் வாழ்க்கையை கடுகுக்குள் சுருக்கி அணுவுக்குடும்பமாகிப்போகின்றோம். கண்ணும்மா அப்பாமார்களின் அரவணைப்பற்ற கதைகளற்ற நினைவுகள் நீக்கப்பட்ட புதிய தலைமுறை வளர்கின்றது. மரபணு மாற்றப்பட்ட தலைமுறை. தாய்மொழி அவர்களுக்கு வேற்று மொழியாகிப்போகின்றது. நமது பிள்ளைகளை நிலத்துடனும் பண்பாட்டுடனுமான  ஆணி சல்லி வேர்கள் துண்டிக்கப்பட்ட திடீர் மரங்களாக்கி விடுகின்றோம். கவனிப்பாரற்ற முதிய பெற்றோர்களின் எண்ணிக்கை ஊருக்குள் மெல்ல கூடிக் கொண்டே வருகின்றது.


என்னருமை காயலின் காக்கா தம்பிமாரே ராத்தா தங்கச்சிமாரே! உண்டு உறங்கி புணர்ந்து ஈன்று முடிவில் இற்று  மூச்சடங்குவதற்குப் பெயர் வாழ்க்கை இல்லை. அதற்கு பெயர் பிழைத்திருத்தல் அல்லது வயிற்றை மட்டும் கழுவுதல்.


இயல்பிலேயே நாம் வணிகச்சமூகமாக வளர்ந்து இப்போது இன்னொரு முதலாளிக்காக மாரடிக்கும் கூலிச்சமூகமாக பரிணமித்துள்ளோம். ஊதிப்பெருக்கப்படும் ரப்பர் பலூனைப்போல வீடு கட்டுமானம், திருமணம் மட்டுமில்லை நம் உடையிலும் உணவிலும் பொருட்களிலும் தளவாடங்களிலும் நுகர்வுத்தாகங்கொண்டவர்களாக மேன்மேலும் வீங்கிக் கொண்டேயிருக்கின்றோம்.  அதன் விலையைத்தான் ஹீஸைன்களாகவும் ஸுலைமான்களாகவும் நாம் செலுத்த நேரிடுகின்றது.


சடங்குகளும் விழாக்களும் திருநாள்களும் இல்லாத ஒரு வறண்ட வாழ்க்கையை வாழச்சொல்லவில்லை.  அந்த களிகூறும் நல் தருணங்களுக்குள் நாம் முடிந்து வைத்துள்ள  பாரங்களையும் முதுகை ஒடிக்கக் கூடிய செலவேறிய கடினங்களையும்  தலையைச் சுற்றி  எறிவோம்.  செலவு கூடினால்தான் அது கொண்டாட்டம் மகிழ்ச்சி என்ற இலக்கணத்தை உடைக்கும்போது மலையளவுள்ள வாழ்க்கைப்பாரம் கூழாங்கல்லின் கனத்தையடையும். ஒரு நத்தை தன் கூட்டை தன் முதுகில் வைத்துக் கொண்டு நகர்வது  போல வாழ்க்கை அதன் வழிக்கு நம்மை கையைப்பிடித்து கூட்டிச்செல்லும்.


உற்பத்தி சமூகமாக தற்சார்பு சமூகமாக இயற்கையோடு ஒத்திசைந்து செல்லும் எளிமையழகு  நிரம்பியவர்களாக  நாம் மாறத்தொடங்கும்போது நமது செல்வங்களை கனவுகளும் ஆசைகளும் நிரம்பி வழியும் நம் பிள்ளைகளை எங்கோ ஒரு அன்னிய நிலத்தில் பலி கொடுக்க வேண்டியதில்லை. விதை மலர்ந்தால் மட்டுமே மரம்.


நமதூரின் கடலும் மண்ணும் என்பது  வெறுமனே அஃறிணைப்பொருளல்ல. நீர் மண்ணாலாகிய பெரும் நினைவுப்பெட்டகம்.  ஏமனிலிருந்து இந்தோனேஷியா வரை சிறகுகளைக் கொண்ட கண்டப்பறவை.  


ஏற்றுமதி இறக்குமதி வணிகங்கள், காலனியாதிக்கத்திற்கு எதிராக நடந்த போர்கள், ஆன்மீக மொழி பண்பாட்டசைவுகள், முயக்கங்கள் என அனைத்தும் இம்மண்ணில் தங்களின் ரேகைகளை தடங்களைப் பதித்துள்ளன.


தமிழக கேரள இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுத்தலை நகராகவும் ரோம சீன பாரசீக அரபு  நாகரிகங்களின்  சந்தியாகவும் திகழ்ந்திருக்கின்றது நமதூர் . வணிக பொருளாதாரத் துறைகளில்  நம் முன்னோர்கள் அடைந்த வெற்றியும் புகழும் காலனியாதிக்க ஆக்கிரமிப்பாளர்களினால் பலமுறை சிதறடிக்கப்பட்டும் கொடுங்காற்றிடை நாணல் போல மீண்டும் மீண்டும் நிமிர்ந்திருக்கின்றனர் நம் முன்னோர்.


உள்நாட்டில் ஃபாஸிஸ அரசு தனது மக்கள் எதிர் தொடர் நடவடிக்கைகளினால் எல்லா வித சிறு குறு தொழில் முனைவோர்களையும் வாய்ப்புக்களையும் நசுக்கியழித்து வருகின்றது. பெருந்தொற்றுக்கால பொருளாதார முடக்கத்தை காரணங்காட்டி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களும் பறிக்கப்பட்டு வருகின்றன.


இந்த  நெருக்கடிகளுக்கு நடுவே பிழைப்பதற்கான வாய்ப்பாக நமக்கு முன்னே வைக்கப்படும் உள் நாடு x வெளிநாடு என்ற இரு தேர்வுகளில் நாம் இயல்பாகவே நம் பிறந்த மண்ணையே தேர்ந்தெடுப்போம்.  என்ன பிரச்னையிருந்தாலும் நம் சொந்த மண் நமக்களிக்கும் துணிவும் ஆறுதலும் தனிதான்.


வீண் பகட்டு பெருமைகளிலிருந்து ஆடம்பர டாம்பீகங்களிலிருந்து  நம்மை நாம் விடுவித்துக் கொண்டால் நமது வாழ்க்கை தானே எளிதாகும். அரசிடமிருந்து  நமக்கு கிடைக்க வேண்டிய மீதிப்பகுதியை  கோரியும் போராடியும் பெற்றுக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் நம் பாதையின் விளக்குகளை நாம் அணைய விடாமல் காத்தவர்களாவோம். 

கோடிக்கணக்கில்  வரிகளாக ஆண்டுதோறும் நகராட்சிக்குள் கொட்டப்படும் நம் வியர்வையின் பணம். ஊழல் அலுவலர்களால் வரைமுறையின்றி சுரண்டப்படுகின்றது.  நமக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களை நேர்மையாகவும் முறையாகவும்  செயல்படுத்த அரசிற்கு நெருக்கடி கொடுத்தாலே போதும். இதைத் தட்டிக் கேட்க ஆள் வலுவில்லாததினால் நம் அன்றாட வாழ்வின் சுமை கூடித்தான் போகின்றது.

கல்வி, மருத்துவத்துறைகளிலும் நம்முடைய அறியாமையினாலும் மண்ணில் கால் பாவாத வாழ்க்கையினாலும் வெள்ளை யானைக்கான விலையை கொட்டிக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

எந்த உலகில்  போய் உருண்டு புரண்டு திரவியம் தேடிக் கொண்டுவந்தாலும்  பச்சை களிமண் பானையில் நீர் ஊற்றுவது போல செல்வத்தையும் வாழ்க்கையையும் ஒரு சேர வீணடிப்பதில்தான் போய் முடிகின்றது.


அருமைத் தம்பி முஹம்மது இப்ராஹீம் ஃபைஸல் முன்மொழிந்திருக்கின்றார். எல்லா நினைவுகளையும் சாத்தியங்களையும் தன் உப்புக்காற்றின் ஈரலிப்போடு பரத்திக் கொண்டிருக்கும் மன்னார் வளைகுடாவின் மென் காற்றிடம் கொஞ்சம் நம்மை ஒப்படைத்துத்தான் பார்ப்போமே.


தொடர்புடைய பதிவுகள்


பே ஓட்டம்


ஆடு வாழ்க்கை - முதல் பகுதி


ஆடு வாழ்க்கை -- நிறைவுப்பகுதி

1 comment:

  1. சிந்திக்க வைக்கும் வரிகள், கருத்துக்களில் மிகுதி வலி நிறைந்த பகுதியின் குறியீடுகள், நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு, நம் வழி தோன்றல்க்கும் இதில் பாடம் இருக்கின்றது, நிச்சயம் மரணம் குறிக்க பட்ட ஒன்று தான் அது எங்கிருந்து வருகிறது என்று யாரும் அறிய முடியாது, ஆனாலும் இன்றைய வாழ்வியல் சார்ந்த இயக்கத்தில் தற்காலம் விதி விலக்கு இன்றி நுகர்வு கலாச்சாரத்தில் நம்மையும் அறியாமல் அல்லது விரும்பாமல் சிக்கி தவிக்கும் மனிதனாக மாற்றி விட்டது,

    அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் கடல் கடந்தும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வாணிபம் செய்து வந்தார்கள், ஆனாலும் நம் நாட்டில் வியாபார சாம்ராஜ்யதினை கட்டி அமைத்தவர்கள் மிகவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு உள்ளவர்கள் மட்டுமே, அவ்வாறு அமைத்த மக்களின் பிந்தைய சந்ததிகள் பல்வேறு காரணத்தினால் வியாபரதினை தொடர முடியாமல் போனது துரதிர்ஷ்டம், மிக பெறும் கொடை வள்ளல்களை கண்ட நகரம் நமது ஊர், அன்றைய காலத்தில் நவீன கல்வி முறைகள் இல்லை என்றாலும் மிகவும் மதி நுட்பம், கல்வியும் நிறைந்த மக்கள், வாழ்வியலை பாடமாக கற்றவர்கள்,
    நிகழும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் நம் சமூகம் மீண்டும் அதன் மரபு வழி சார்ந்த வியாபார சமூகமாக மாறவேண்டும், 9to5 கலாச்சாரம், நுக்கிளியர் ( அணு) குடும்ப வாழ்வு முறைகளை மாற்றி மீண்டும் கூட்டு குடும்ப வாழ்வு, குடும்பமாக சேர்ந்து செய்யும் வியாபார முறைகள் உருவாக வேண்டும், உறவுகளுக்கு இடையே உள்ள இணக்கம் வலிமையான சமூகம் உருவாக காரணமாக அமையும், செலவினங்கள் குறைக்க பட வேண்டும், சில சம்பிரதாய முறை களை மருபரிசீலனைக்கு உட்படுத்தப் வேண்டும். விரும்ம்பியவர்கள் அரசு முறை பணிகளிலும், மருத்துவ பணி களிலும் உருவாக வேண்டும்.
    காயல் தொழில் முனைவோர் குழுமம் ஒன்று உருவாக்க பட்டு பல் வேறு தொழில் மற்றும் வணிக கருத்து பரிமாற்றங்கள் எதிர் கால தலைமுறையினரின் நலன் சார்ந்து பரிமாற பட வேண்டும்.

    ........... இன்று நாம் அனைத்தையும் கற்று இருக்கிறோம் நவீன கல்வி முதல் மார்க்க விளக்க கல்வி வரை ஆனால் உயிரோட்டம் நிரம்பிய வாழ்வியலை நான் உட்பட கற்க மறந்து விட்டு நிற்பது வேதனை அளிக்கிறது....... நிறைய எழுத தோன்றுகிறது ஆனாலும் மற்றவர்களின் கருத்துக்கு வழி விட்டு நிறைவு செய்யும் முன்.... எஞ்சி இருக்கும் காலத்தில் இறைவா உன்னை வணங்க வேண்டிய முறையில் வணங்கி, நீ விரும்பும் வழியில் வாழ வைத்து, அனைத்து மக்களையும் காப்பாற்று என்று பிரார்த்தனை செய்வது மட்டுமே எனக்கு தெரிந்த ஒன்று என்று கூறி முடிக்கிறேன்.

    எனது கருத்தினில் யாரும் மனம் வருந்தும் படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

    a.b.h
    Shaik

    ReplyDelete