Tuesday, 12 November 2019

அரக்கனின் கல்லறை



              The safest nuclear plant in the world ; 2012

              இயக்குநர்:  Helena Hufnagel

               28 நிமிடங்கள்

               ஜேர்மானிய மொழி ஆவணப்படம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பரமண்டலங்களிலிருக்கிற
எங்கள் பிதாவே

உம்முடைய நாமம்
பரிசுத்தப்படுவதாக . 

அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை
எங்களுக்கு இன்று தாரும். 

எங்களை சோதனைக்குள்
பிரவேசிக்கப்பண்ணாமல்

தீமையினின்று
இரட்சித்துக்கொள்ளும்.  ஆமென் “ .

கண்களை மூடி இதயங்களின் வழியாக

உருக்கமாக பிரார்த்திக்கும் விசுவாசிகளின் விளிகள்

தேவாலயத்தின் முகடுகள் வழியாக விண்ணேகுகின்றன.

தேவாலயத்தின் அடுத்ததாக உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் பாரம்பரிய உணவை சுவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்சம் தொலைவில் குழந்தைகளின் குதூகல ஒலிகளுடன் மழலையர் பள்ளிக்கூடம்.

எந்த ஒரு ஊரிலும் அன்றாடம் விரியும் வாழ்க்கை சித்திரங்களின் வழமையான காட்சிதானே இவை  என  நாம் அத்தனை எளிதில்  கடந்து போக முடியாது.


காரணம் கருவறைக்குள்ளேயே தன் கல்லறையை கண்டு கொண்ட ஒரு அணு உலை வளாகத்தின் தினசரி நிகழ்வுகள் இவை. அணு ஆற்றல் ஒடுங்கும் இடத்தில் வாழ்க்கை துளிர் விடும் என்பதை இந்தக்காட்சிகள் வழியே ஆவணப்படுத்தியுள்ளார் படத்தின் இயக்குநர்.


1960 ஆம் ஆண்டு தனது மின்சார தேவைக்காக அணு உலை நிறுவுவது பற்றி முடிவெடுத்தது ஆஸ்திரிய அரசு. அதன்படி 1972 ஆம் ஆண்டு தலை நகர் வியன்னாவிலிருந்து நாற்பது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள Zwentendorf  நகரத்தில் 700 மெகா வாட் திறனுள்ள கொதி நீர் அணு உலையை நிறுவத்தொடங்கியது.


மின்சார உற்பத்தி என்ற வேடங் கட்டி வரும் நிரந்தர ஆபத்தை ஆஸ்திரிய குடிமக்கள் உடனே அடையாளங்கண்டு கொண்டனர்.


அணு உலையின் வரவால் கதிரியக்க கசிவு , ஈனுலையின் தீராத தொழிற் நுட்ப சிக்கல்கள் , தீர்க்கவே முடியாத அணுக் கழிவு கழித்துக்கட்டலும் அதன் மேலாண்மையும்  , குடிமைத்தேவைக்கான அணு தொழில் நுட்பத்திற்கும் அணு குண்டு தொழில் நுட்பத்திற்கும் இடையேயான தொடர்பு , அணுப் பேரழிவு ஒன்று நடக்கும் பட்சத்தில் பல நகரங்களை உடனடியாக நெருக்கடி கால இடப்பெயர்ச்சி செய்ய இயலாமை போன்ற ஆபத்துக்களை உணர்ந்தனர் ஆஸ்திரிய மக்கள்.


அரசும் , தொழில் துறையினரும் அணு உலைக்கு ஆதரவான வலுவான  கருத்துருவாக்க குழுவும் சேர்ந்து மக்களின் அச்சத்தை போக்க பல மில்லியன் கணக்கில் பணம் செலவழித்து அனைத்து வகையான பரப்புரையையும்  மேற்கொண்டனர் .


அணு உலை எதிர்ப்பு அணியினரும் தளர்ந்து விடவில்லை. தங்கள் பக்கம் இருக்கும் நீதியின் வலிமையை மட்டு நம்பி மிக கடினமாக உழைத்தனர் .  ஒவ்வொரு குடிமகனிடமும் அணு உலையின் இடரைப் பற்றி எடுத்துரைத்தனர். பரப்புரையை தங்கள் கைக்காசை செலவழித்து நடத்தினர்.


இதன் விளைவாக அரசு இறங்கி வந்தது. கருத்துக்கணிப்பு நாடெங்கும் நடந்தது. மக்கள் தொகையில் 49.5 % பேர் அணு உலைக்கு ஆதரவாகவும் 50.50 % பேர் எதிராகவும் வாக்களித்தனர். மக்களின் தீர்ப்பிற்கு முன் அரசு பணிந்தது.
டிசம்பர் 15 ,1978 அன்று ஆஸ்திரியாவின் முதல் அணு உலை தொடங்குவதற்கு முன்னரே மூடப்பட்டு விட்டது.


வீழ்த்தப்பட்ட பூதத்தின் தீத்தடங்கள் போல ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன கட்டுப்பாட்டு அறையினுள் உள்ள கணினி பலகங்கள்.


பரந்த நிலப்பரப்பில் மௌனம் பொங்க நிற்கின்றது அந்த கட்டிட அமைப்பு . பெரும் பெரும் தொட்டிகளும் கொள்கலன்களும் நிரம்பிய மொத்த கட்டிடத்தையும் பராமரிக்க  ஒரே ஒருவர் மட்டும்தான் உள்ளார் . அங்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த சிற்றுண்டி சாலையின் பணியாளர்தான் அவர். அங்குள்ள மின் விளக்குகளைத் தவிர வேறு எதுவும் இயங்குவதில்லை.


“ திட்டமிட்டபடி இந்த  உலை இயங்கியிருந்தால் நன்றாக இருக்குமே  “ என்று விசனப்படுகின்றார்  அந்த பராமரிப்பு பணியாளர் .

ஒற்றை ஆளின் முனகலாக முடிந்திருக்கின்றது ஆஸ்திரியா நாட்டின் முதலும் முடிவுமான அணு உலை.

முப்பத்தேழு வருடத்திற்கு முன்னால் ஆஸ்திரிய மக்கள் பெற்ற வெற்றியின் சாட்சியாக அவை நிற்கின்றன. பிறக்காத அணு உலையின் உயரமான வெளிப்புறத்தூண்களில் முழக்கங்கள் தாங்கிய பதாகைகளுடன் கிரீன் பீஸ் அமைப்பின் தொண்டர்கள் ஒத்திகை பார்க்கும் விதமாக அவ்வப்போது வந்து தொங்கி செல்கின்றனர்.


நிகழ் கால உலகின் தீரா தலைவலியாக மாறியிருக்கும் அணு ஆற்றலானது ஆஸ்திரியாவில் மட்டும் இறந்த காலமாக மாறி விட்டது.
அணு ஆற்றல் வழியாக மின்சார உற்பத்தி இல்லையென்று ஆன பின்னர் ஆஸ்திரியா ஒன்றும் கற்காலத்திற்குள் தேங்கிடவில்லை. தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது.


கருவிலேயே கலைந்த இந்த அணு உலையின் வரலாற்றை புரட்டி பார்க்கும்போது வன்முறைக்கும் அவதூறு பரப்புரைக்கும் பொய் வழக்குகளுக்கும் காவல்துறை அடக்குமுறைக்கும் எந்த வித இடமும் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடியும் .


ஆஸ்திரிய அரசும் அணு உலை எதிர்ப்பாளர்களும் முற்றிலும் சனநாயக தளத்தின் முதிர்வில் நின்று கொண்டுதான் இந்த சிக்கலை எதிர் கொண்டு தீர்த்துக் கொண்டார்கள் .


முழுக்க முழுக்க அமைதியான வழியில் தங்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் கூடன் குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கையாளத்தெரியாத நமது மாநில , நடுவண் அரசுகள் சின்னஞ்சிறு நாடான ஆஸ்திரியாவைப் பார்த்து கற்றுக் கொள்வது நல்லது.
ஆஸ்திரியாவின் இயங்காத அணு உலை குறித்த தனது ஆவணப்படத்திற்கு “ உலகின் மிக பாதுகாப்பான அணு உலை “ என பெயரிட்டதின் வழியாக  அதன் இயக்குநர் அழுத்தமான ஒரு செய்தியை பளிச்சென உலகிற்கு சொல்கின்றார்.


 இயங்கும் அணு உலைகள் அனைத்துமே ஆபத்தானவைதான் என்பதுதான் அந்த செய்தி. அணு உலைகளை வம்படியாக ஆதரிப்போர் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
இந்தக்கட்டுரை சில மாற்றங்களுடன் 28/02/2015 தேதியிட்ட தி இந்து தமிழ் நாளிதழில் உயிர் மூச்சு இணைப்பிதழில் வெளிவந்துள்ளது.
http://tamil.thehindu.com/general/environment




No comments:

Post a Comment