Tuesday, 5 November 2019

ஒரு தலைமுறைக்கு ஒரு வருடம் குறைய….


கூட்டாளிக்கு மெல்லிய உடல். அடித்து நீட்டிய குச்சி போலிருப்பான். துருத்திய முன்னம் பற்கள்.  எல்.கே.மேனிலைப்பள்ளியில்   எட்டாம் வகுப்பு. எங்களின்  தமிழாசிரியர்  அபுல் பரக்காத் எங்களிருவரையும் அண்ணன் தம்பிகள் என்றே அழைப்பார். முகச் சாடை ஒற்றுமையை வைத்து அப்படி அழைத்திருப்பார் என நினைக்கின்றேன்.


நானும் அவனும் தேசிய மாணவர் படையில் இருந்தோம். நடப்பான செய்திகளையுங்கூட  ‘ எல மக்கா ‘ என்ற தீவிரத்தொனியுடன்தான் தொடங்குவான். சண்டை சச்சரவிட மாட்டான்.


ஒரு நாள் மதிய வேளை. கண்களில் உக்கிரம் கொப்பளிக்க நடுத்தர வயதுக்காரர் ஒருவர்  வந்தார்.  கூட்டாளியின் வாப்பா. அவனின் வயதான வடிவம் அவர். வீட்டில் அவன் செய்த அற்ப தவற்றிற்காக மூஞ்சி மோரையென புரட்டியெடுத்து விட்டார்.


காயமடைந்த முகமும் குருதி சுண்டிய உதடுகளுமாக நின்றவனின் தோற்றமானது உச்சி பொழுதின் வெளிச்ச வீச்சில் அப்படியே என்னுள் உறைந்து விட்டது.


பத்தாம் வகுப்பிற்குப்பிறகு நான் முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன்  மேனிலைப்பள்ளிக்கு மாறி விட்டேன். அதன் பிறகு அவனை பார்க்கவேயில்லை. அவன் என்ன படித்தான்? என்ன செய்கின்றான்? எதுவும் தெரியாது.


அவனது  உறவினனும் எனது இன்னொரு வகுப்பு தோழனுமான நண்பனை வெளியூரில் சந்திக்க நேர்ந்தது. பலவாறாக சுழன்று வந்த உரையாடலுக்கிடையே கூட்டாளியின் பெயர் நினைவில் ஏறியது. எண் தந்தான். வளைகுடாவில் இருக்கின்றான். கட்புலனில் பேசினேன்.



அவனைப்பற்றி எதுவும் தெரியாது என இப்போது நான் எழுதும் சொற்களுக்கும் அவனிடம் பேசினேன் என்று எழுதுவதற்கும் இடையில் எண்ண இயலாத நொடிகளும் நிமடங்களும் அடங்கிய முப்பத்தியிரண்டு வருடங்கள். ஒரு தலைமுறைக்குரிய கால அளவில் ஒரு வருடம் குறைவு.



அவனின் ஒளிப்படத்தை அனுப்பச் சொன்னேன். தலைமுடி தன்னிளமையை முற்றிலும் இழந்திருந்தது. கண்களில்தான் அவனிருந்தான். அப்பாவித்தனமும் உற்சாகமும் சுழித்தோடும் அதே கண்கள்.



நான் அப்பா ( மகள் வழி தாத்தா ) வான செய்தியை சொன்னேன். அதற்கு முன்னதாக அவனிடம் நான் சொல்லியிருக்க வேண்டிய என் திருமணம், வாப்பா உம்மாவின் இறப்பு, தொழில், சமூக வாழ்க்கை, பிள்ளைகள், புதிய வீடு, பிள்ளையின் திருமணம் என  நீண்டு செல்லும் இந்த பட்டியலில் அடங்கியும் அடங்காமலுமிருக்கும் எத்தனை எத்தனையோ விஷயங்கள்…… 


வருடங்கள் என்ற பாட்டையில் காலம் உருண்டு இறங்கியதில் அவை எல்லாமே காலாவதியாகிவிட்டன.

No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka