“
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
உரியது. அவனே வானங்களையும், பூமியையும்
படைத்தான்; இருள்களையும், ஒளியையும்
அவனே உண்டாக்கினான் “ { அல்குர் ஆன் 6:1 }
ஆழமும்
அடர்த்தியும் மிக்க இந்த இறைவாக்கு நமக்கு உணர்த்த முற்படும் எண்ணற்ற பொருளின் ஒரு
கீற்றை கர்நாடக இசைப்பாடகி நித்ய சிறீ மஹாதேவன்
அலையலையாக மிதந்து இறங்கும் தனது குரலில் இசையாக மாற்றித்தருகின்றார்.
“ ஒருவன் உனக்கே
வணக்கம் அனைத்தும்
அதில் உரிமை இல்லை
எவருக்கும்....
.............
அண்ட பேரண்டமாயினும்
ஒரு அணுவின்
சிறு துகள்
ஆயினும்
கண்டம் சூழ்
கடல் ஆயினும்
வெறும்
தண்ணீர்த்துளியே
ஆயினும்
உந்தன் படைப்பு
அதிசயம்
அதில்
உயிர்க்கும் ஞான ரகஸியம்.... “ ( நன்றி : ஏகம் பாடல் தொகுப்பு )
கண்களை
மூடிக்கொண்டு இந்த வரிகளை செவியின் வழியாக நம் இதயத்திற்குள் நாம்
அனுமதிக்கும்போது புலன்கள் நிறைந்து கண்களின் வழியாக கசிகின்றது . எல்லையும்
காலமும் பொருளிழந்து போகின்ற பிரபஞ்சத்தின் வெளியில் நம் ஆன்மா மெல்ல கரைகின்றது.
முதலும் முடிவுமற்ற அந்த மூல ஆற்றலை கண்டுணர மனம் உன்மத்தம் கொள்கின்றது.
“ எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு லயம் உண்டு..
இயற்கைக்குள்ளும் அது இருக்கின்றது. இசையின் வழியாக அந்த தாளலயத்துடன் நாம் இணைய
முடியும் “ என நேர்காணல் ஒன்றில் சூழலியல்வாதி ஒருவர்
கூறினார்.
உண்மைதானே !
இருளும் ஒளியும் இசையும் மௌனமும் எங்கிருந்து பிறக்கின்றதோ அந்த முதல்
புள்ளிக்குத்தானே நாம் சுவைக்கும் இசையும் நம்மை அழைத்து செல்ல வேண்டும்.
அண்ட
சராசரத்திலுள்ள உயிருள்ள உயிரற்ற அனைத்து படைப்புகளும் இறைவனை துதிக்கின்றன. இறுதி
வேதமான அல் குர்ஆன்தான் மனிதன் ஜின் உள்ளிட்ட அனைவருக்குமான பொது விதி என
அல்குர்ஆனே சாட்சி பகர்கின்றது.
ஒரு ஸஹாபி
குர்ஆனின் ஒரு அத்தியாயத்தை மனம் ஒன்றி
இசைபட ஓதும்போது அவருக்கு மேல் மேகம் நிழலிட்டதையும் அவரின் குதிரை
பரவசமடைந்ததையும் அவரின் இதய உணர்வுகளின் வெப்பம் தணிந்து மனம் அமைதி அடைந்ததையும்
நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறிகின்றோம்.
ஏழு முறைகளில்
குர்ஆனை இசைபட ஓதுதல் என்பதே எல்லா படைப்புகளின் இறை நினைவு என்ற தாள லயத்துடன் இணைய
வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாமோ ? இறைவனே அறிந்தவன்.
எந்த
படைப்பினதும் எல்லைக்குட்பட்ட அறிவிலிருந்து பிறந்ததல்ல இஸ்லாம். அனைத்து
பிரபஞ்சங்களையும் தோற்றுவித்த ஆற்றலின்
பிறப்பிடமான அல்லாஹ்விடமிருந்து புறப்படும் உயிர் நதி அது.
அல்லாஹ்
அழகானவன். அவன் தனது படைப்புக்கள் அனைத்தையும் அழகாகவும் சீராகவுமே படைத்துள்ளான்.
இஸ்லாம் என்ற
இந்த பெரும் மெய்ம்மையும் நேரானது அழகானது
.
இந்த அழகிய
மெய்ம்மையை சாத்தியமான அனைத்து அழகியல் கவின் கலைகளின் வழியாக எடுத்து
செல்லும்போது மட்டுமே நாம் அதற்குரிய நியாயத்தை வழங்கியவர்களாக ஆவோம்.
No comments:
Post a Comment