ஆடி முடிந்து ஆவணியும் தொடங்கி விட்டது. அம்மி பறக்கிறதோ இல்லையோ அடிக்கிற வெய்யிலில் படைப்பாற்றலாவது கிடைப்பாற்றலாவது உருண்டு திரண்டு எல்லாம் உருகுகிறது. சித்திரை,வைகாசியை மிஞ்சுமளவிற்குத் தகிக்கிறது. அப்போது வராத வேர்க்குரு இப்போது வருவதை மரு நிலத்து மலர் என எடுத்துக் கொண்டு அமைதி கொள்ள வேண்டியதுதான். அல்லது எழுத்துருகி வேனல் குருவாகி வந்தனை எனப் பாட வேண்டியதுதான்.
மௌலானா ரூமி சொன்ன மூன்று பருவங்களும் ஒன்று மற்றொன்றில் உறைவதுதான். அதை மறுக்கவில்லை. மனிதன் நீர்,நிலம்,விசும்பில் செய்த குழப்பங்களின் குழந்தையாக எல் நினோ வந்ததில் ஆடிக்குள் கோடை கூதலுக்குள் மாரி என எல்லாம் புரண்டுக் கிடக்கிறது. இதற்கும் ரூமி என்ன சொல்லியிருக்கிறாரோ தெரியவில்லை.
இம்மாபெரும் அண்டத்தில் எல்லாம் வெய்யோனில் தொடங்கி வெய்யோனிலேயே முடிந்து விடுகிறதா என்ன? இருக்கவே இருக்கிறாள் விரலின் நுனிக்குக் கீழே பரணி இருக்கிறாள். எங்கள் தாமிரபரணி. அது பார்க்காத வெய்யிலா வேனலா சூடா?. நீ இருப்பாய் என்றால் அவளும் இருப்பாள் என்ற எல்லாம் அறிந்த ஏற்பாட்டின் கீழ் எல்லாப் பருவங்களிலும் ஓயாமல் ஓடி ஓடி கதிரவனின் அனல் ஈட்டிக்கு தன் அயர்ச்சியின்மையை மறு சொல்லாக்கி முன் வைக்கிறாள் உயிர் நதி தாமிரபரணி. எங்களூரின் வடகிழக்கெல்லையில் தாமிரபரணியின் கடை மடை. வடமேற்கில் கடைமடைக்கு சற்று முன்னதாக ஏரல், சேதுக்குவாய்த்தான்,வடக்காத்தூர் பகுதிகளில் அகன்ற வடிவங்கொள்கிறாள் அவள்.
தாமிரபரணி ஓடுறது ஒளிக்கிறதுங்குற தத்துவமெல்லாம் சரிதான். எரியிற ஒடம்ப எங்கயாவது கொண்டு தாழ்த்து என்றது உடல். நண்பரும் ஒளிப்படக்கலைஞருமான தாரிக்கைக் கூப்பிட்டேன். காலை ஆறே காலுக்குக் கிளம்பினோம். சேதுக்குவாய்த்தான் பாலத்தைத் தாண்டிய பிறகுதான் அவ்வளவு மக்கள் திரள் கண்ணில்பட்டது. எஞ்சியிருந்த திருவிழாக்கடைகளும் ஆற்றுப்படுகை முழுக்க நிறைந்திருந்த பக்தர்களும் அவர்களின் ஊர்திகளும். ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோயிலில் ஆடி அமாவசைத் திருவிழாவுக்கு ஏராளமானோர் வந்திருந்தார்கள். ஞெகிழி விரிப்புகளினால் தடுப்பும் மறைப்பும் உருவாக்கி கொஞ்சம் பேர் உறங்கிக் கிடந்தார்கள். மற்றவர்கள் சமைத்துக் கொண்டும் தலைத்துவட்டிக் கொண்டுமிருந்தனர். அண்டை மாவட்ட பதிவெண்கள் கொண்ட வண்டிகள்தான் நிறையத் தென்பட்டன. ஏரலிலிருந்து தலைமுறை தலைமுறையாகப் பரந்து கிளைத்துப் பல்வேறு ஊர்களில் வேர்களைக்கொண்டவர்கள் தங்கள் குல தெய்வத்தைத் தேடி வந்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கடந்து ஆற்றை நெருங்க நெருங்க குப்பைக்குவியலுடன் கழிவுகளும் விரவிக் கிடக்க நீராடும் மன நிலை அப்படியே வாடிச்சுருங்க அருகிலுள்ள இராஜபதி கிராமத்திலுள்ள வாய்க்காலுக்குப் போக வேண்டியக் கட்டாயம்.
இராஜபதி வாய்க்காலில் நீர் வரத்துக் குறைவுதான். ஆனால் ஓடு நீரிருந்தது. சேதுக்குவாய்த்தான் வாய்க்காமல் போன வருத்தம் இங்கு கால்வாயோரம் நின்றிருந்த முது மூப்பன் ஆலமரத்தைக் கண்டதும் தீர்ந்தது. இரு பெண்கள் குளித்துக் கரையேறினர். பொதுவாக மனித நடமாட்டம் குறைந்த பகுதி.
ஆலமரத்துக்கு வயது எப்படியும் குறைந்தது நூறிலிருந்து நூற்றைம்பது வருடங்களிருக்கும். ஒன்று இரண்டாகி இரண்டு பலவாகி கிளை பரப்பி நிற்கிறது. கால்வாயின் அக்கரைவரைத் தொட்டு நிற்கும் அவற்றின் பசுந்தலைகள் அடுத்த தலைமுறைக்குள் இரு கரைகளுக்குமான உயிர்ப்பாலமாகியிருக்கும்.
ஒளிப்படங்கள்: தாரிக்
No comments:
Post a Comment