Tuesday, 21 July 2026

அனல் வாயில்

 தோல் பையிலுள்ள துணிப் பந்தையெடுத்துக்  கை விரல்களின் இண்டு இடுக்குகளையும் நகக்கண்களையும் கூர்த்தவாறே  நிதானமாக அழுத்தித் துடைத்தார். விரல்களிலிருந்து கண்களை விலக்காமலேயே சொன்னார் “ இது எல்லாத்துக்கும் வர்ற வாய்வு புடிப்புதான். பயப்புடறதுக்கு ஒன்னுமில்ல. ஆனா ஒங்களுக்கு வந்த மாதிரி வேற யாருக்கும் வந்து நான் பாத்ததில்ல. வெந்நில ஒத்தடம் வச்ச பொறவு மூணு சொட்டு தைலத்த எடுத்து ராத்திரிக்கும் பகலய்க்கும் தேய்ச்சுட்டு வாங்க. வலி இருந்தா மட்டும் திங்க கிழம கடப்பக்கம் வாங்க…. ”. முந்நூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டுக் கிளம்பினார் பண்டாரவிளைக்காரர்.

குப்பியை உயர்த்திப்பார்த்த பின் அதை  இரு முறைக் குலுக்கியவள் “அரக்காவாசி கூட இல்லங்க. இந்த புளியங்கொட்ட தைலத்துக்கா இவ்ளோ ரூவா?.” சுவர் பேழைக்குள் தைலக் குப்பியை வைத்துச்சென்ற மனைவியிடம் எதையும் திரும்பப் பேசிடும் மன நிலையில் ஹாரிஸ் இல்லை. ஏதாவது  குறை கண்டு கொண்டேயிருப்பவளுக்கு இன்னொரு நேரமாகயிருந்திருந்தால் திருப்பி சொல்லியிருப்பான்.

அது நடக்கும்போது. பகல் பதினொன்றரை மணி இருக்கும். அடுப்பங்கரை நடைச்சுவரில் கோணலாகச் சாய்ந்ததும் “என்னங்கோ” என வெங்காய வாசத்துடன் பதறியோடி வந்து அவன் முதுகைத் தாங்கினாள்.

முள் கம்பிகளால் சுற்றி கட்டியிறுக்கிய மாதிரியான வலி. இடுப்பின் இரு ஓரங்களுக்கிடையிலும் அருவமாகச் சுண்டித் தெறித்த  மின்கோடாகத்தான் அது அத்தனை வேகத்துடன் நெளிந்தது என்பதை அத்தனை வேதனையிலும் ஹாரிசின் மனம் குறித்துக் கொள்ளத்தவறவில்லை.

வெளிச்சமும் வெப்பமுமாக வெளியே முழுப்பகலும் நிறைந்துக் கிடக்க. சாளர மறைப்பை இழுப்பதற்காகக் கையைத்தான் நீட்டினான். “அல்லாகு…” இடுப்பைப் பிடித்தான். மூச்சு தடைப்பட்டு மீண்டது. அனிச்சையாக அதே வேகத்தில் மறுபக்கம் திரும்பியது மட்டுமே நினைவிருந்தது. “அடே முட்டாள் நாயீ….” வீறிட்டான்.

கீழேயிருந்து மெத்தைக்கு ஒவ்வொரு படியாகப் பிடித்து வரும்போது கூட அவ்வளவு வலியில்லை. இரு உள்ளங்கைகளையும்  சேர்த்து நெஞ்சிலிருந்து அங்குலமங்குலமாக கைகளை உயர்த்தும்போது புதியதாக வலி எதுவும் வரவில்லை. கொக்கிப் போட்டு இழுத்த முதல் வலியுடன் அடுத்து  வந்த வலி அடங்கலாக எல்லா வலி நொம்பலங்களும்  நீங்கிட துஆக் கேட்டான்.

நூரா வீட்டு மழைக் குழாய்க்குக் கீழே பகல் வெளிச்சம் இறங்கிய கணக்குப்படி மணி அய்ந்து இருக்கும். மாடியில் ஹாரிஸ் உலாவப்போவது வெளியே சிறுமிகளின் விளையாட்டுக் குரல்கள் கேட்கும்  இந்நேரத்திற்குத்தான். மொட்டை மெத்தை நீர்த்தொட்டிக்குக் கீழே வைத்துக் கேட்கும் வானொலியின் தபேலா ஒலிக்குள் கூடுதலாக ஏதோ ஒன்றிருக்கும். அது தொட்டியின் நிழலினாலா? அதற்குள்ளிருக்கும் நீரினாலா? அல்லது கிழக்கிலிருந்து வரும் கடல் காற்றிலானா? என்றெல்லாம் அவன் ஆராய்ந்ததில்லை. பழைய கள்ளிப்பேழையிலிருந்துதான் தபேலா கனிந்துப் பழுத்துப் புறப்படுகிறது என்பது ஒன்றே அவனுக்குப் போதுமாகயிருந்தது.

சலிப்புடன் வானொலிப்பேழையை தலையணையிலிருந்து இரண்டடி  நகர்த்தி வைத்தான். சிறுமிகளிடமிருந்து தப்பியோடும் ஆட்டுக்குட்டியின் வலுவிழந்த குரல் எழவும் சாளரக் கம்பியைப் பற்றுவதற்குக் கை நீண்டது. அதற்கு மேல் அதை நகர்த்த வேண்டும் என்றால் இடுப்புடன் முதுகையும் சேர்த்துத் திருப்பியாக வேண்டும். அது இயலும் எனத் தோன்றவில்லை.

மடிக்கணினியின் மேல் அமர்ந்திருக்கும் மாலை வெய்யிலின் விளிம்புகள் மெல்ல நடுங்கி ஏறின. வெய்யில் சதுரத்தின் அளவும் பெயர்த்தியுடைய வண்ணத்தாளின் அளவும் ஒன்றுதான். என்ன… வெய்யிலுக்குள் கூடுதலாக ஒரு பொன்னிறம். இன்னும் ஒரு மணி நேரங்கூட இல்லை. அதற்குள் பகலின்  இறுதிச் சொட்டும் வடிந்து விடும்.

மாடத்துக்கதவு வழியாக வந்த செங்குளவி அறைக்குள் குறுக்குமறுக்காகப் பறந்து தோட்டத்துப் பக்கக் கண்ணாடி சாளரத்தை மேலும் கீழுமாக முட்டியவாறே “சிர்ர்” ஒலியுடன் ஆய்ந்தது. சாளர விளிம்பில் அமர்ந்த பின் மீண்டும் அதே ஒலி. உக்கிரம் கூடிக் கூடி வரும் ஒலியில் அறை நிரம்பத் தொடங்கியது. கண்ணாடி சாளரத்தைத் தவிர்க்க இடப்பக்கம் திரும்பினான். இம்முறை அவனிடமிருந்து ஓசையெதுவுமில்லை. தன்னைத்தானே சபித்தவனின் கண்களில் நீர் வழிந்தது.

பஜார் பள்ளிவாயிலில் ஒலிவாங்கியைக் கொட்டுகிறார்கள். மஃரிப் பாங்கு சொல்லும் நேரம். சிறுநீர் முட்டுகிறது. பெய்த கையோடு ஒலூவும் செய்து விட்டால் அதற்கென இன்னொரு முறை மெனக் கெடத் தேவையில்லை. மனைவியைக் கூப்பிட்டான். பாங்கின் ஓசைக்குள் ஹாரிஸின் விளி ஆழ்ந்து போனது. மீண்டும் அழைக்கத்தோன்றாமல் கட்டிலில் அசைவின்றிக்கிடந்தான்.

ஆறு வரை கை விரல்களை மடக்கி எண்ணினான். பிஸ்மில்லாஹ் சொல்லி கால் விரல் நுனியால் கட்டிலின் அருகில் கிடந்த நாற்காலியை தன் பக்கம் இழுத்தான். பாதி முதுகை  நகர்த்தி நாற்காலி விளிம்பைப்பற்றவும் அது மாயத்துக்குள் தவறுவது போல நழுவியது. ஓசைக் கேட்டு மனைவியும் மகனும் கீழேயிருந்து ஓடி வந்தனர்.

“எங்கங்க ஓடீறப்போவுது தொழுவ. அதான் சேத்து தொழுவலாமங்கோ. இப்புடி இழுத்து உட்டு கூத்துபாக்குறியளே’ அழுகையுடன் கூச்சலிட்டாள். தன்னைத் தூக்க வேண்டாம் என்பதை  கை சைகையால்  காட்டி விட்டுக் கழிப்பறைக்குத் தவழ்ந்து சென்றவன் படுக்கைக்கு மீள அரை மணி நேரமெடுத்தது.

படுக்கையிலிருந்து அரையடி உயரத்தில் தோளையும் முதுகையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளப்பி வலி வராத அரைக்கால் கோணமாகப்பார்த்து இடக் கையை மெல்ல ஊன்றிய பிறகு மூச்சை நிதானப்படுத்தினான். தொழுகைத் தொடங்கியது. சப்போட்டா வாசனையால் ஓர்மை சற்று விலகியதற்காக தொழுகையை சில நிமிடங்கள் கூடுதலாக நீடிக்க வேண்டி வந்தது. பழத்தட்டை அவன் கையெட்டுமிடத்தில்தான் மனைவி வைத்து விட்டுப் போயிருந்தாள்.

ஏரல் அக்யூஹீலர் சொன்ன பிறகு ஹாரிசுக்கு பழங்கள் மட்டுமே இரவுணவு என்றானது. பேரீத்தம்பழங்களை மட்டுமே உண்டு வந்த அவனுக்கு அது பல்லில் ஒட்டிக் கொண்டு கூச வைப்பதால் பூளாச்செண்டு வாழைப்பழம், பலா, மா, பப்பாளி, கொய்யா என பட்டியலை மாற்றியமைத்தான். வைக்கம் பஷீர் கூட தேன் மா என்றுதான் கதையெழுதியிருக்கிறார். தேன் வாழை என ஏன் எழுதவில்லை.? வாழைப்பழத்தை முக்கனி பட்டியலிலிருந்து நீக்கி விட்டு சப்போட்டாவை வைத்தால் தமிழ்க் குடியொன்றும் புரண்டு விடப்போவதில்லைதான்...

ஏன் இப்படி கண்ட மாதிரி  நினைப்புகள்…? வாயுப்பிடிப்பிற்கும் மூளைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? யாருக்குத் தெரியும்? நம்பவியலாத சங்கதிகளைக் கேள்விப்படும்போதெல்லாம் மனைவி சொல்வாள் “ சூத்துல தட்டுனானாம் பல்லு போச்சாம்.“

கீழ் தளத்திலிருந்து வெளியாளின் உரத்தக்குரல் கேட்டது. நூறு வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஹாரிசின் மாமியிடம் மூன்றாவது தடவையாக அவர் நலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“சும்மாவே கெடந்தாவே மூள பழுதாத்தான் போவும். தேவயில்லாததுலாம் நெனவுக்கு வரும். வழமயா வாகிஆ சூறா ஓதி அவ்றாதும் திக்ரும் செய்யுற நேரம் இது. இப்பம் பாரு  எல்லாத்துலயும் மண்ணு.” செல்பேசியை எடுத்தவன் கீழே வைத்தான். மஞ்சள் நிற அட்டை கொண்ட  இக்கிகய் புத்தகத்தை கால் பெரு விரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்துக் கவ்வினான். இங்குமங்கும் அதை அசைத்த பின் உந்தித் தரையில் விழச்செய்தான். பெரிய குத்பா பள்ளிவாயில் மரத்திலிருந்து விழுந்த கொக்கு இப்படித்தான் இறக்கை சரிந்துக் கிடந்தது.

நீலமும் வெள்ளையுமில்லாத  வானத்தைப்போல  மனது இருப்பதாகவும் மண்ணுக்கடியில் காற்றும் வெளிச்சமுமின்றி சிக்கிக் கிடப்பதாகவும் மாறி மாறித் தோன்றியது. தலையை இரு முறை வேகமாக குலுக்கினான். வேகமாக மூச்சை வெளியேற்றிய பின் முனகினான்.

  நா இக்கிறது ஏன் ஊட்டு அறய்லயேதான் வேறெங்கயுமில்ல.” கத்தினான். அது அப்படியே காதுக்குள் சொல் பிசகாமல் திரும்ப  வந்தடைந்தது. கண்களும் சரியாகவே அறையின் நாற்சதுரத்தையும் கண்டுக் கொண்டன. மனது இலேசாகத் தொடங்கியது. திடுக்கிட்டான். நாளை அஸருக்குப் பிறகு கடலாடிக்குப்பயணம். வள்ளிசாக மறந்தே விட்டது. இந்த வலிப்பிரகண்டத்தில் எல்லாம் புரண்டு விடுகிறது. கடலாடி நிக்காஹில் கலந்து விட்டு கமுதிக்குப் போக வேண்டும். அங்குதான் மூன்று நாள் வாழ்வியல் முகாம்.  கேட்டு வாங்கிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வேறு. “விரி வேஷ்டி, குர்த்தாவுக்குலாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே  இஸ்திரியப்போட்டுட்டு தம்மடை,வெங்காயப்பணியம், வளர்பிற மிக்சரல்லாங்கூட வாங்கிட்டமே…?”

செல்பேசியில் மணி பன்னிரண்டரை. அஹமது தூங்கியிருந்தாலும் சிக்கலில்லை. தகவலை வைத்து விடலாம். “இடுப்பில்தான் வலி. ஆனால் மொத்த உடலையும் அசைப்பதே பெரும்பாடாகவுள்ளது” என வாட்சப்பில் தட்டச்சியவன் தன்னால் வர முடியுமென்றுத் தோன்றவில்லை. இடத்துக்கு சொந்தக்காரர் யூசுப் பாய் வழியாக எல்லா ஏற்பாடுகளையும் தான் செய்து விட்டதாகவும் அஹமது தலையைக்காட்டினால் மட்டும் போதும் விஷயங்கள் அதனதன் வழிக்கு நடந்து விடும் என்பதையும் சேர்த்துக் கொண்டான்.

காலண்டரில் அந்தத் தேதிக்கு மேல் பூவை வரைந்திருந்தான். மூன்று மாதங்களாகப் பார்த்து பார்த்து செய்த ஏற்பாடுகள். யூசுப் பாயின் அத்தா மலேசியாவில் சம்பாதித்து கமுதி கண்மாய்க்கருகில் வாங்கிப்போட்ட வானம் பார்த்த பூமி. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் வெளிக்கிருந்தால்  அடி காய வேண்டியிருந்ததாலேயே ஏக்கர்கள் சில ஆயிரங்களுக்கு மலிந்துக் கிட்டியது.

நிலம் கைக்குள் வந்தவுடன் அத்தா வேலி போடவில்லை கிணறு தோண்டவில்லை குட்டை வெட்டவில்லை. ஒரு துகள் மண்ணை இங்கிருந்து அங்கு தூக்கியும்போடவில்லை. உணவகங்களிலுள்ள எச்சில் இலைகளை கேட்டு வாங்கியதோடு காய்ந்த புல், இலை சருகுகளையும் தன் நிலத்தில் போடும்படி பக்கத்து நிலத்துக்காரர்களிடமும் கேட்டுக் கொண்டார். அண்மை ஊர்களுக்கு தனக்கு தெரிந்த  தேவர்,குளுவ ஆட்களைசொல்லியனுப்பியதோடு  அவர்கள் தினசரி  கொண்டு வரும் எலிகளையும் பெருச்சாளிகளையும் தன் நிலத்தில் விட்டார். அங்கு அவற்றின் கிறீச்சிடல்கள்  எப்போதும் கேட்டுக் கொண்டேயிருந்தன. தோட்டாக்களால் துளைக்கப்பட்டதைப்போலவும் பெரியம்மை கண்டவன் உடல் போலவும்  நிலம் தோற்றமளிக்கத்தொடங்கிய  ஏழாம் நாள் பருவமழை தொடங்கியது. அதன் பிறகு சுற்று வட்டாரத்தில் அங்கு மட்டுமே வருடம் முழுவதும் பசுமையிருந்தது.

அங்குதான் மூன்று நாட்கள் முகாம். வட்டக் கிணறும் குளமுமான நீர்க் கோட்டைகள். நடுவே களிமண்ணினாலான பள்ளிவாசல். அதற்குப் பக்கத்திலேயே விலையில்லாத முவ்வேளை ஊட்டுப்புரை. சுற்றிலும்  பூசப்படாத சுவர்களைக் கொண்ட தங்கும் அறைகளும் வட்ட வட்ட அரங்குகளும் கல் இருக்கைகளுமான செம்பொன் வெளி. முகாமிற்கு வரவிருப்பவர்கள் அனைவருமே புதியவர்கள். அவர்களுக்காக இந்நிலத்தின் கதைகளுடன் புறமே கிடக்கும்  மாயச்சுழல் கதைகளையும் சரிக்கட்டி வைத்திருந்தான்.

“ச்ச… நேந்திரம்பழ இனிப்ப ஒரு மட்டோட தின்டிருக்கணும். இப்போ ஒரு பயணமும் போயி உடம்பயும் நவுட்ட முடியல.” இடப்புறம் புரளப்போகும்போது இரு எலும்பு இணைப்புக்களிலும் ‘விர்க்’. ஒரே மாதிரியான ஒலி. வெளியில் கேட்கவில்லையேத் தவிர அதேதான். பிறந்ததிலிருந்தே  இடமும் வலமும் பல முறை புரண்ட பின்னரே தூங்கிப் பழகியவன். இரவு பகலைப்போல இத்தனை வருடங்களாக அனிச்சையாக நடந்து வந்த விஷயம். இன்று இடுப்பை நகர்த்துவதென்பது மொத்த பூமியையும் புரட்டிப்போடும் பெருஞ்செயலாகி விட்டிருக்கிறது. புழு நகர்கிறது. தன்னுடலை இரண்டாக மடிக்கிறது. மேலும்… கீழுமாக… வலமும்… இடமுமாக… முன் பின்னாக…. சுழற்சியின்றி அண்டரண்டங்களுமில்லை.

 “இப்போ ஒரு இஞ்சுக்கும்….”  மூச்சு முட்டியது. கல்பில் இனி வேறெதெற்கும் இடமில்லை.  புல்லும் புழுவும் இஞ்சும் மண்ணும் மட்டையும்  உட்பட  இங்கு எல்லாமே அருட்கொடைகள்தான்.

எங்கோ தொலைவிலிருந்து நாயின் சன்னமான ஊளை. அது முழு ஊளையாகவுமில்லை. இடையே ஒரு பிசிறல். பிசிறில்லை. மிகச் சிறிதாகத் தேம்பல். ஆற்றிலிருந்து கரை தாண்டித் தெறிக்கும் ஒற்றைத்துளியினளவில்.

பெரிய காக்கா சொன்ன அனகாபள்ளி காசிமின் கதையைப்போல இங்கும் திரும்பிப்பார்க்க நிறைய உண்டு. காசிமின் மகளுக்கு இரு முறை மணவிலக்கு. அதுவும் முதலிரவு முடிந்த அடுத்த நாளிலேயே.

ஆமையோட்டில் மோதிரம் செய்து போட்டிருந்த கோயாத் தங்ஙள் காசிமிடம் கேட்ட முதல் கேள்வி “ அந்த பொட்ட நாய் ஒன்ன மொறச்சது நெனவுல இருக்கா.?” குமைந்தான் வாசமடிக்கும் மருதாணி தாடி அலைய அவர் சிரிக்கவும் காசிம் முழித்தார்.

“அதாங்க ஜோடி சேர்ந்த ரண்டு நாய்ங்க…”

காசிமின் முகம் இருண்டது.

“மண்ட ஓடு தெறிக்கற மாதிரி ஊள ..… இப்ப நெனச்சாலும் தலய்க்குள்ள எறயுது...”  தன் இரு காதுகளையும் இறுக்கிப் பொத்தினார். போட்டிருந்த வெள்ளை முழுக்கைச் சட்டை,பனியன் எல்லாவற்றையும் கழற்றி தன் காலடியில் போட்டபடி வாய் விட்டழுதார். பதினேழாம் வயதில் அது நடந்தாக நினைவு கூர்ந்தார். இணை சேர்ந்துக் கொண்டிருந்த இரு நாய்களின் பிறப்புறுப்புகளில் சுடு சாம்பலைக் கொட்டியிருக்கிறார்.

“நீ கெக்கலி போட்டுக்கிட்டு இருந்ததுனால பொட்ட நாய் ஒன்ன மொறச்சதக் கவனிக்கல…. எத நீ கவனிக்கலயோ அதான் பொல்லாப்பு.” கோயாத்தங்ஙள்  தொடர்ந்தார். காக்காவின் கண்களுக்கப்பால்  எதையோ ஏறிட்ட காசிம் தன் நெஞ்சின் குறுக்கே இரு கைகளையும் கோர்த்திணைத்துப்பிடித்தார்.

“ மனுசங்க யாருக்காவது அநியாயம் அக்கிரமத்த  நாம செஞ்சிட்டோன்டு வய்ங்க. அந்த ஆளுங்க உசிரோடு மட்டும் இரிந்தா போதும். எப்டியாவது அவங்கள தேடி போய் கைய்ய காலப் புடிச்சி மன்னிப்ப கேட்டு வாங்கிக்கிரலாம்.”

அடுத்து கோயாத்தங்ஙளிடமிருந்து  என்ன வரப்போகிறது என்பதை ஊகித்தார் காசிம்.

“ஆனா இந்தக்கேசு அப்பிடியில்லயே”

வெற்றிலைப்படிக்கனை அருகில் இழுத்தவர் பல்லை சுண்டு விரலால் துளாவி விட்டு அதற்குள் துப்பினார். “வாயில்லாததுகள்ட  ஒத்த சத்தம் மட்டும் போதுமே அர்சக் குலுக்க… அந்த ரண்டு நாய்ங்களும் உயிரோடு இருக்குதுன்னே வச்சிகுருவோம். ஆனா அதுகள எங்க போய் தேடி புடிப்பீங்க?”

“இங்கயோட மட்டும் முடிஞ்சு போற விசயமில்ல இது.” சாரத்தை நீவி சரி செய்தவாறே திண்டுத் தலையணையில் சாய்ந்தார் தங்ஙள். இப்போதே ரூஹு போய்  விட்டால் நல்லது  என காசிம் எண்ணினார்.

காசிமை வெளியே கொஞ்ச நேரம் இருக்கச்சொல்லி விட்டு மீண்டும் அழைத்தவர் இரண்டு இளைத்து மெலிந்த நாய்களுக்கு ஒரு வேளை நல்லுணவு கொடுக்கும்படியும் சொறி சிரங்கு தொற்றிய இரு நாய்களுக்கு மருத்துவம் பார்த்த பிறகு அல்லாஹுத்தஆலாவிடம் மன்றாடுமாறும் பரிகாரம் உரைத்தார். பரிகாரத்திற்குப்பின்னர்  சில மாதங்களிலேயே காசிமின் மகளுக்கு மூன்றாம் முறையாகத் திருமணம் முடிந்து  எல்லாம் சலாமத்தானது.

முகவாய்க்கட்டை,கழுத்து எல்லாம் வியர்த்தொழுகியது. மின் விசிறிக்குமிழைத்தடவினான் ஹாரிஸ். இதற்கு மேல் வேகத்தைக்கூட்ட வழியில்லை. ஒவ்வொன்றாக வரிசைக்கட்டி நினைவிழெலத் தொடங்கியது.

குருதி சொட்டும் மீனின் கண், “ம்மே” ஓசை, கதவிடுக்கில் புடைத்த நரம்புடன் தோல் சுருக்கங்கொண்ட வலக்கை மணிக்கட்டு, தாரகைத் தொலைவிலிருந்து உற்று நோக்கும் நான்கு இணைக் குருத்துக்கண்கள்……  “கடும் இருட்டுக்குள்ள  இவ்ளோ  துலாம்பரமா…. கண்ணாடியப்போல….. ஒன்னா? ரண்டா?.... “எண்ணத் தொடங்கியவன் தொய்ந்து நிறுத்தினான். தீக்கங்குகளின் நெடும் பட்டியல். இரு கால்களும் நடுங்கின. எவ்வளவு இறுக்கிப்பிடித்தும் நிறுத்த முடியவில்லை. நெஞ்சில் இரு கைகளாலும் மாறி மாறிக் குத்தினான்.

இடுப்பில் வலி மட்டுமில்லையென்றால்….. முழுத்தொண்டையாலும் கத்தியபடியே தெருவிலிறங்கி ஓடியிருக்கலாம். தேங்காய் நாரைப்பிய்த்து பறக்க விடுவது போல…. இந்த உடலையும் செய்ய முடிந்தால் எல்லாம் எல்லாமே முடிந்து போகும் இனி எதையும் நினைக்கத் தேவையில்லாதபடிக்கு….. 

தலையிலிருந்து தொடங்கி முகம் இரு கைகளையும் புயங்களிலிருந்து விரல் நுனிகள், முதுகு, இடுப்பு,தொடைகள் ஈறாகத் தடவி இறக்கினான் …. எல்லாம் அங்கங்கு அப்படி அப்படியேதான் இருக்கின்றன. மரம் இறுகி உண்டான  ஆடிப் படிகத்தைப்போலக் கெட்டியாக…. அத்தனைக் கெட்டியாக… தெளிவாக … “எதுலயிருந்தும் தப்ப ஏலாது….”  திடுமென வலம் திரும்பினான். வலியில்லாத நாட்களில் திரும்புவதை விட கூடுதல் சடுதியுடன். ஒரு புயலின் தீர்மானம்.  போர்வையின் நுனியை எடுத்து வாயில் திணித்தவாறே இயன்ற மட்டுக்கும் கத்தாமலிருக்க முயன்றான். வரி வரியாக சுழன்றிறங்கியது வலி.

பேரலைகளோடு மடங்கி விழுந்த ஓசைகளும் ஓங்காரங்களும்….. மார்பின் மேல் மௌனக்கூம்பாரமாக…. அவ்வளவு உயரமும் கனமுமாய்…. ஆழியின் இருட்குழியில் துயிலும் அமைதி. உலகிலேயே மிகவும் அச்சமூட்டக்கூடியது ஈரலித்த  இருளுக்குள் உறையும் ஓசையின்மைதான். உருவம் அருவம் என எல்லாமும்  இதற்குள்தான்… இதில் அடங்கி ஒடுங்காதது என எதுவுமில்லை.

படுக்கையறையின் சாளரக் கண்ணாடி மட்டும் அவ்வப்போது காற்றில் சன்னமாகக் கிடுகிடுத்தது. காற்றின் தபேலா .. மிருதங்கம்… என்ன பெயரை வைத்துக் கூப்பிட்டாலும் சரி. அதில் அப்படியொரு இலயம். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விடாதபடிக்கு…. இந் நேரங்களில் துல்லியமான காதே ஒரு வரம்தான்…

மின்விசிறியை நிறுத்தி விட்டு செவி கூர்த்தான். சாளரக்கண்ணாடியின் கிடுகிடுப்பொலியைக் காணோம். வெளியே இலைகள் அலையும் சன்ன ஒலியைத்தவிர இன்னொரு ஒலியில்லை. வலி கூடுதலாகியிருப்பது போலிருந்தது. இல்லையில்லை. அது  வெறும் மனத் தோற்றந்தான்.

 “டிர்க்…” .

சிறிய இடைவெளிக்குப்பின்னர் அதே ஒலி இன்னும் இரு தடவைகள். இருட்டுக்குள் ஒன்றும் விளங்கவில்லை. சுவர்க்கடிகை ஒலியளவை விட அரை மாத்திரைக் கூடுதல். சரியாகச் சொன்னால் பொடித் துளையிலிருந்து பீறிடும்போது நீர் ஏற்படுத்தும் ஒலியைப்போல.  

கண்களை மூடினான்.

“டிர்க்….”.

அறையின் இடது மூலையிலிருக்கும் பரண் கதவிடுக்கிலிருந்துதான். அதுதான் அந்த அருவறுப்பூட்டும் கண்களுடைய சாம்பல் நிறப்பல்லியின் ஒளிப்பிடம். ஆனால் இது அது இல்லையே. அது போடும் ஒலிக்கும் இதற்கும் தொடர்பேயில்லை. இது வேறு அது வேறு. விளக்கைப்போட்டால் சரியாக இருக்காது.

“டிர்க் டிர்க் டிர்க்….” தாளம் துரிதமாகி நீண்டு நீண்டு ஒரு இடைவெளிக்குள்  திசை திரும்பி அடி சிறுத்து ‘’ரம் ரம் “ என்றது.

“ரம் ரம் ரம்

அது

கின்னாரம்

அது

ஒரு

சொல்

சொல்

அது

சொல்லாரம்

இல்லை

இல்லை

அது

பொன்னாரம்

பூம்பொன்னாரம்…”

முழவை பேரிகை பேரியாழ் தஃப் கலவனாகப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் பொருளைத்தாண்டி இராகத்தைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றான் ஹாரிஸ். சிறு வயது முதற்கொண்டே அழவும் உன்மத்தங்கொள்ள வைக்கும் பாடல்கள் ஒவ்வொன்றாக சரங்கட்டின. மலைச் சிகரத்திலும் கடல் மடுவிலும் ஆன்மாவை கொண்டு போய் நிறுத்தும் அவற்றின் வரிகள். அனைத்தையும் நினைவில் கொண்டு வந்து ஒவ்வொன்றின் முதல் வரிகளாகப் பாடிப்பார்த்தான்.

ஒரு சின்னப்பறவை

எழில் முத்துப்போல

தேன் இனிமையிலும்

தந்தானைத் துதிப்போமே

ஏ அப்னா தில் து ஆவாரா

ஆயர் பாடி மாளிகையில்

மம்புரப்பூ மகாமிலே

பாடித்துதி மனமே

அனவாக்கி ரூஹுல்

 “ம்ஹூம்… இதுலாம் எதுவுமில்ல.” இவை எதற்குள்ளும் அடங்காதது. அனைத்தையும் மீறியது. ஊண் உயிருக்குள் அடங்க மறுப்பது. இருப்பும் இன்மையும் ஒன்றாகிக்கலந்தது. எல்லாம் கரைந்தழிவதை அறியத் தொடங்கும்போது  நீள நீளமான வரிகள் குறைந்து சுதி மட்டுப்பட்டு இன்னொன்றாகக் கேட்டது.

“சுனைக்குள்

ஒரு

சொல்லுண்டு

அந்த

சொல்லுக்கு

ஒரு

விலையுண்டு

சொல்லுக்கடிமை

சொல்லுவான்.”

“வாஆஆன்” என நீண்டு பின் அதுவும் இல்லையென்றானது. இசை இராகம் சுதி எல்லாம் நின்றன. மொத்த அண்டமும் தன் ஓட்டத்தை நிறுத்தியிருந்தது. சிறகுகள் பறிக்கப்பட்ட  பறவையாகி எல்லாம் தரையின் மேல் சட்டென வீழ்ந்தன.

ஒரே ஒரு குரல் ஒற்றைக்குரல்  மட்டும்  தனித்தே இவ்வாறு ஒலித்தது:

“அந்தி

சொல்

முதற்றே

உலகு”

பெரும் வெண் உலோக ஊசல். புலரிக்கும் நடு நிசிக்குமிடையே ஏற்றமாகியும் ஆடியவாறு பொன் துகள்களை தொட்டு தொட்டு எடுத்து கருமைக்குள் சிந்திக் கொண்டிருந்தது.

குருதி சொட்டும் மீனின் கண், “ம்மே” ஓசை, கதவிடுக்கில் புடைத்த நரம்புடன் தோல் சுருக்கங்கொண்ட வலக்கை மணிக்கட்டு, தாரகைத் தொலைவிலிருந்து உற்று நோக்கும் நான்கு இணைக் குருத்துக்கண்கள்……  எல்லாம் அதனதன் வடிவங்கள் பிரியாமலேயே அளவான இதழ்களாகி பின்னர் பொன்னொளி வாயில்களாக தோற்றம் பெற்று  ஒன்றுக்குள் ஒன்றாக….. பலவாக ….. கூடையிலிருந்து சரியும் பூக்களைப்போல மொத்த மொத்தமாக….

சுபஹிற்குப்பின் ஹாரிசிற்கு தேன் கலந்த  வெறுந்தேயிலைக் கொண்டு வந்த அவன்  மனைவி  “என்ட அல்லாகுவே” எனப் பெருங்குரலெடுத்தாள்.

சொல்முதலி

மஃரிப்– சந்தியா கால தொழுகை

பாங்கு – தொழுகையழைப்பு

ஒலூ -- தொழுகைக்கான உறுப்புத்தூய்மை

பிஸ்மில்லாஹ் --அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

வாகிஆ சூறா--  குர்ஆனின் 56 வது அத்தியாயம்

அவ்றாது -- கிரம ஓதுகை

திக்ர்-- இறை ஊழ்கம்

கல்ப்-- மனம்

அர்ஸ்--இறைவனின் அரியணை

சாரம்-- கைலி

ரூஹ்--ஆன்மா

சலாமத் --மீட்சி, விடுதலை,நலம்

தஃப்--பறை

 


மணல் வீடு (எண்:59#ஏப்ரல்,மே,ஜூன்,2026) இதழில் இச்சிறுகதை வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

அனல் வாயில்