Sunday, 7 June 2026

வெய்யில்

 கொச்சியிலிருந்து நண்பர் மன்சூர் நெய்னா இவ்வருட கோடை விடுமுறையின் தொடக்கத்தில் செல்பேசியில் அழைத்து இராமநாதபுரம் பக்கம் சுற்றுலா போக வேண்டும். பருவ நிலையெல்லாம் எப்படி எனக் கேட்டார். இதே கேள்வியை போன வருட கோடை விடுமுறைத் தொடக்கத்திலும் கேட்டார்.


இரண்டு தவணைகளாக அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒரே மறுமொழிதான். “ஆழிக்கத்துந்ந தீயாக்கும் இவிடே” எனவே வர வேண்டாம். ஆகஸ்ட் தாண்டி வரவும் என்றேன்.

இரவில் மூன்று காற்றாடிகளும் பகலிரவு என இரு வேளைக் குளியல்களுமாகத்தான் நான் இந்த முதுவேனிலைக்கடந்துக் கொண்டிருக்கிறேன். எத்தனைதான் காற்றாடிகள் வைத்தாலும்  காலை பதினோரு மணியிலிருந்து மாலை நான்கு மணி வரைக்கும் தன் வெப்ப நாசியிலிருந்துதான் மூச்சு விடுகிறது பகல். சொல்லாமல் கொள்ளாமல் விலாவிலும் முதுகிலும் அனல் கோடாய் இறங்கும் உப்பு நீர் ,எதையும் வெட்டி முறிக்காமலேயே மேல் வலி, இன்னொரு நடுப்பகலோ என நினைக்க வைக்கும் மாலைகள் என நிறைந்து நகரும் முதுவேனிலை “ஒவ்வொரு பருவகாலத்துக்குள்ளும் இன்னொரு பருவகாலம் உறைகிறது”என்ற மௌலானா ரூமியின் வரிகளை நினைத்துதான் பொருந்த வேண்டியிருக்கிறது.

இனியொரு தடவை கொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் என்னவெல்லாம் சொல்லலாம் என மூளையைப் புரட்டியதில் “100% விழுக்காடு தூய கலப்படமில்லாத முதல் தர வெய்யில், வெளிச்சமுள்ள அளவிற்கு வெப்பமும் வெப்பமுள்ள அளவிற்கு வெளிச்சமும் குறைவின்றி சம பங்காகக் கிடைப்பதற்கு முழு உத்திரவாதம், எத்தனை கலன்கள் கொண்டு வந்தும் அள்ளிக் கொள்ளலாம் யாரும் மறுக்கவோ தடுக்கவோ குறைப்படவோ மாட்டார்கள் என்பதெல்லாம் திரண்டு வந்தன.

மழையை குப்பிக்குள் சேகரிக்கிற மாதிரி, நல்ல கூதலுக்குள் புரண்டு புரண்டு உறங்குவதைப்போல இந்த வெய்யிலை எதிலாவது பிடித்து வைக்க (சோலார் மின் உற்பத்தி தவிர்த்து) அதற்குள் விகற்பமின்றி முறுமுறுப்பின்றி இருக்க ஏதாவது வழியுண்டா குடிமக்களே?

 

No comments:

Post a Comment

வெய்யில்