Thursday, 28 May 2026

பந்து மேச்(சி) -- சில நினைவுகள்

 நேற்றைய இறுதிப்போட்டியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது காயல்பட்டினம் அய்க்கிய விளையாட்டு சங்கம் (யுஎஸ்சி USC) நடத்தும் மௌலானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பையின் 51 வது ஆண்டு கால்பந்தாட்டப்போட்டிகள்.

சுழற்கோப்பையுடன் காயல்பட்டினம் யுஎஸ்சி அணியினர்



பெரும்பாலான சிறப்பான ஆட்டங்களுடன் ஓரிரண்டு அணியினரின் மோசமான ஆட்டங்களைத் தவிர்த்து பத்து வருட கால இடைவெளிக்குப்பிறகு மீளத்தொடங்கிய இவ்வருட  போட்டி நல்லபடியாகவே நிறைவிற்கு வந்தது.

இந்த இரு வாரகாலமும் கால்பந்தாட்டம் காணுதலைத்தவிர்த்து எழுத்துப் பணிகள் மட்டுமே மேற்கொண்டேன். மற்ற பணிகளை தவிர்த்தேன். காரணம் போட்டித் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே மனது உருளத்தொடங்கி  அது நிற்பதற்கு போட்டி முடிந்து சில மணி நேரம் வரை  ஆகுகிறது என்பதினால். நல்லாட்டம் ஆடும் இரு அணிகளில் நாம் விரும்பும் அணி வென்றாலும் கூட போராடித்தோற்ற அணியினரைப்பார்த்து பாராட்டுகளைத் தெரிவிப்பதுண்டு. அந்நேரங்களில் அவர்களின் முகங்களில் தவழும் இழப்புணர்வு நம் மனத்திலும் வலியை உண்டாக்கி விட்டே செல்லும்.

ஆட்டத்தைக் கவனிக்கும் முறையுடன் கூர்த்த விமர்சனங்களையும் உடனிருந்த மேனாள் கால்பந்தாட்ட வீரர்களின் வாயிலிருந்து கேட்டபடியால் நிறைய அறிய இயன்றது. கால்பந்தின் எல்லா உணர்வலைகளையும் அகங்கொள்வதை சாத்தியமாக்கிய யுஎஸ்சியின் நிர்வாகிகளுக்கும் அனுசரணையாளர்களுக்கும் நன்றிகள் பல. அடுத்த வருடத்திலிருந்து மீண்டும் இது அகில இந்திய காற்பந்தாட்டமாக மலரப்போகும் நற்செய்தியை பகிர்ந்தனர் ஏற்பாட்டாளர்கள்.

கடைசி நாளுக்காக வழமையான நேரத்திற்கு முன்னதாகவே திடலுக்கு சென்று இடம் போட்டேன். சிறிது நேரத்தில் பார்வையாளர் மாடம் நிரம்பி விட்டது. வெய்யில் மந்தகதியடைய ஆட்டம் தொடங்கியது. மாவட்டக் கால்பந்துக்கழகம் தூத்துக்குடி அணியுடன் காயல்பட்டினம்  யுஎஸ்சியின் சொந்த  அணியினர் விளையாடிய இறுதிப்போட்டியில்  1 – 2 என்ற கோல்கள் விகிதத்தில் யுஎஸ்சியின் சொந்த  அணியினர் வாகை சூடினர்.

வயதில் மூத்த வலுவான தூத்துக்குடி அணியினருடன் காயல்பட்டினம் அணியினர் மோதி வென்றது சாதனைதான். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்குக் குறைவில்லை. ஆனால் அந்த விறுவிறுப்பில் வெப்பமேறி வன்முறையாக நகரப்பார்த்தது இறையருளால் தவிர்க்கப்பட்டது.

இரண்டாம் அரையிறுதிப் போட்டி வரை மிகச் சுமுகமாக நடைபெற்ற விளையாட்டுப்போட்டியின் இன்பங்கள் இறுதிப்போட்டியின் சலசலப்பில் ஆவியாகி விட்டது. போட்டி முடிந்து வெகு நேரம் வரைக்கும் மனம் சமநிலையடைய மறுத்தது.

இறுதி நாள் ஆட்டத்தில் தூத்துக்குடி அணிக்கு விழுந்த ஒற்றை கோலுக்குப்பிறகு காயல்பட்டினம் அணியினர் முழுமையாகப் போராடி இரண்டு கோல்களை வெகு இலாகவகமாக உள்ளே தள்ளினர். முதல் கோல் விழும் வரைக்கும் இயல்பாக போய்க் கொண்டிருந்த விளையாட்டு காயல்பட்டினம் அணியினர் முதல் கோலை போட்டவுடன் எதிரணியினரின் மீது தங்களின் தவறாட்டத்தைத் தொடங்கினர் தூத்துக்குடி அணியினர். அதன் விளைவாக நடுவர் கையால் பல மஞ்சள் அட்டைகளை அவர்கள்  வாங்க வேண்டி வந்தது. அதன் எதிர்வினை காயல்பட்டினம் அணியிலும் படர திடலுக்குள்ளும் பார்வையாளர் மாடத்திற்குள்ளும் சண்டை மனம் சிலிர்க்கத் தொடங்கியது.

தூத்துக்குடி அணியினர் நடுவரின் முடிவைகளை ஆட்சேபிக்கத்தொடங்க அவர்களின் தவறாட்டமும் தொடர்ந்தது. தூத்துக்குடி அணியினரின் பெரு முயற்சி எதுவுமின்றி அவர்களுக்கு விழுந்த முதல் கோல் என்ற அருள் பேற்றை தங்களின் தவறாட்டத்தால் இழந்தனர் என்றே நான் பார்க்கிறேன். இரண்டாம் கோலையும் இறைவன் காயலணியினருக்கு பரிசளித்தான். இத்தனைக்கும் ஆட்டத்தில் காயணியை விட வலுவும் சிறந்த நகர்வும் ஓட்டத்திறனும் கொண்டிருந்த தூத்துக்குடி அணியினர் தங்கள் நிதானத்தை தவற விட்டதற்கான தொடர் விளைவு இது.  தங்களுக்கு எதிரான கோலை அவமானமாக எடுக்கத்தொடங்கியதால் நேர்ந்த வீழ்ச்சி. விழுந்த கோலை விளையாட்டுக்கான ஆன்மாவுடன் எடுத்துக் கொண்டிருந்தால் காயலணி அவர்களை எளிதாக வென்றிருக்க இயலாது என்றே எனக்குப்படுகிறது.

பார்வையாளர் மாடத்தில் என்னுடன் அமர்ந்திருந்த உள்ளூரின் மேனாள் காற்பந்தாட்ட வீரர்களும் தூத்துக்குடியின் ஆட்டத்தை சிலாகித்தனர். ஆட்டந்தொடங்கிய சிறிது நேரத்திலேயே தூத்துக்குடி அணியினருக்கு விழுந்த கோலுக்குப்பிறகு நமதூர் அணி ஒருவேளை வெல்லாமல் போனாலும் போகலாம் என்ற மன நிலைக்கு எங்களை அணியப்படுத்திக் கொண்டிருக்கும்போதுதான் தவறாட்டங்களினால் நாங்களும் காயலணியின் காலும் தலையும் மனமுமானோம்.

போட்டி நிறைவுறவும் சலசலப்புகள் தொடங்கின. தூத்துக்குடி அணியினர் முறுமுறுக்கத் தொடங்கினர். பார்வையாளர் மாடத்திலிருந்து அடையாளங்காணவியலாத சிறுவனொருவன் தூத்துக்குடி அணியின் கோல் காப்பாளரை வசவு பாட எதிர் வினையாக அவ்வணியின் தலைவனும்(கேப்டன்) சில பொருத்தமற்ற சொற்களை உதிர்த்தார். சிறிய அளவில் கைகலப்பு உள்ளூர் பார்வையாளர்களுக்கும் தூத்துக்குடியிலிருந்து வந்த பார்வையாளர்களுக்கு நடுவே ஏற்பட்டது. இறைவனருளால் அது விரியாமல் அங்கேயே உதிர்ந்து போனது.

இங்கு பார்வையாளர் மாடத்திலிருந்த சில உள்ளூர் பார்வையாளர்களின் தகாத நடத்தைகளையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இறுதி நாள் போட்டி என்பதால் முரசு குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தவறாக வழி நடத்திய சிலரினால் ஆட்டம் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. நடுவரின் ஊதல் ஒலியைக் கேட்கவியலவில்லை. சொல்லி சொல்லிப் பார்த்து நடுவரே சலித்து ஆட்டத்தை நிறுத்தினார். வம்பினால் செய்யப்பட்ட இரு தடி உருளையர்கள்தான் இந்த அமளிக்குக் காரணம். நாங்களும் அவர்களைத் தடுத்தோம். எதற்கும் நிற்பவர்களாகத் தோன்றவில்லை. இனி வரும் வருடங்களில் முரசு குழுவினரை போட்டி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் வைப்பதுதான் நல்லது.

மூன்று அணிகளுடன் மோதி வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த காயலணி தனது முந்தைய ஆட்டங்களில் குறைவு வைத்திருந்த பல அமசங்களை சரி செய்திருந்தது. மிக வலுவான தற்காப்பு அணியினரைக் கொண்டிருந்தவர்களிடம் முன்னேறியாடும் ஆட்டத்தில் இருந்த குறையை இறுதியாட்டத்தில் காணவியலவில்லை. ஆட்ட நுணுக்கமும் குன்றா ஊக்கமும் கொண்டிருந்தாலும் அணியின் பல வீரர்கள் தங்கள் உடல் வலுவை மேம்படுத்த வேண்டும். ஒருவருக்கு கை முறிவு. இன்னொருவருக்கு காலில் தகடு. கோல் காப்பாளரின் உடல் நிலையும் சொல்லும்படியாக இல்லை. ஊட்ட உணவுக்காக கூடுதல் செலவழிக்கவியலாத வாழ்க்கை பின்னணியுள்ள  வீரர்களுமுண்டு. அத்துடன் ஒன்றிரண்டு வீரர்களைத்தவிர மற்றவர்கள் இருபது வயதிற்கும் கீழானவர்கள். பல காயங்களையும் இயலாமைகளையும் தாண்டி அவர்கள் அடைந்த வெற்றி சிறப்பானது.

பிற ஊர் அணிகளுக்கும் காயலர்களின் அணிக்கும் பொதுவான ஒரு வேறுபாடு உள்ளது. பிற ஊர்க்காரர்கள் பெரும்பாலும் கால்பந்திற்காக தங்களின் வாழ்வின் முதல் பகுதியில் பெரும் பங்கை செலவிடுகின்றனர். அதனால் அவர்களின் ஆட்டத்தில் ஒரு தொழில் முறை தேர்ச்சி உள்ளது. சிறப்பாக விளையாட்டில் மேலேறி வரும் ஊர் பிள்ளைகளில் தாரகை அந்தஸ்தைப் பெறுபவர்கள் பாராட்டத்தக்க அளவில் விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் மேல் படிப்பு, அரசுப் பணி என சென்றாலும் பெரும்பாலானவர்கள் தங்களது கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவுடன் கால்பந்தாட்டம் அவர்களிடமிருந்து வெளியேறத் தொடங்குகிறது. இனி வருங்காலங்களில் இவ்வாறான இளம் வீரர்களின் வாழ்க்கையோட்டத்தை ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை பொறுப்பெடுக்கும் நிதி நல்கைகளும் அனுசரணையாளர்களும் காலத்தின் கட்டாயம். வழங்குவதில் எப்போதும் பின் நிற்காத  காயல்பதி இதை கவனத்தில் கொள்ளும் என நம்பலாம்.

கதாநாயகன் ஒருவரை சொல்லாமல் இப்பதிவு முழுமையடையாது. காயலணியின் பயிற்சியாளர்களில்  தலையாயவர் காழி அலாவுத்தீன். ஊர் மகுடத்தின் மணிகளிலொருவர்.தாரகை ஆட்டக்காரராகவிருந்து விளையாட்டு ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசுப்பணியிலிருப்பவர். ஏ கிரேடு சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர். மாநில அரசின் முன்னாள் அணித்தலைவர்.ஒன்றிய அரசின் கால்பந்தாட்டப் பயிற்சியாளரகவும் கடமையாற்றுகிறார். காயலணி ஆடும்போதெல்லாம்  தன் மொத்த உடல் ஆவியையும் அவர்கள் மேல் குவித்து வழிநடத்துபவர். ஆட்டத்தின் நுட்பங்களுடன் அணியினரின் உளவியல் கையாளுதல், பின்னடைவிலிருந்து உடன் மீட்டுதல், எதிராளியை முழு மன வலிமையுடன் எதிர் கொள்ள வைக்கும் சொற்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அவர் தனது அணியை வழி நடத்திய இடத்திற்கு நேர் பின்னாடி நான் அமர்ந்திருந்ததால் இவையனைத்தையும் அவதானிக்க இயன்றது. அவர் ஒரு பயிற்சியாளர் என்பதற்கும் பல படி மேலானவர். ஒரு தந்தையின் ஆசானின் கனிவும் வலுவும் ஒருங்கே வழங்கப்பெற்றவர். காயலணி இவ்வருட கோப்பையை தன்வயமாக்கியதில் அவரின் பங்கு சிங்கப்பங்குதான். ஆளும் சிங்கம்தானே.

தொடர்புடைய பதிவுபந்து மேச்

No comments:

Post a Comment