எங்கள் சிறு பருவத்து
நிதிச்சுரபி..உம்மா,கண்ணும்மாமார்களின் இடுப்பில் தொங்கும் சுருக்குப்பை.
பனிக்குழை,கடலை மிட்டாய், வேர்க்கடலை, வண்ண வண்ண பொரி,கல்
மிட்டாய்கள், சவ்வு மிட்டாய், கல் கோனா, எலந்தைப்பழம், மாங்காய், பால்கோவா, கிரீம்
பன், கிரீம் குழல், பஞ்சு மிட்டாய், கரும்புச்சாறு, தேங்காய்ப்பூ பன்,தேன் மிட்டாய்,
முதலான தீனி வகைகளுடன் வாடகை சைக்கிளுக்கான கூலி, குருவி வாங்கித்தருகிறேன் என்று ஏமாற்றியே
என்னிடம் பறித்த கிமு கச்சேரித்தெரு ஜலீலிடம்
ஏமாந்த நாணயங்கள், கட்டபோல் என்ற கவண், பட்டம் வாங்குவதற்கான சல்லி என வீடுகளின் கருவூலமது.
வட்டுவம் போய் காலத்துக்குள் சுருண்டுக் கொள்ள பிற்கால
பெண்கள் கையடக்க ஜிப் பைகளை மார்புக்கூட்டுக்குள் பாந்தமாய் செருகிக் கொள்கின்றனர்.
புன்னக்காயல்,ஏரல்,விழிஞ்சம் போன்ற பகுதிகளில் மீன் விற்கும்
கடற்புரத்து மகளிரிடம் மட்டுமே இன்று எஞ்சி நிற்கும் வள்ளுவம்(ஏன் வீட்டு அம்மணியின்
மொழியில்) என்ற வட்டுவம் இன்று என் வீட்டிற்குள் மறு வரவாகியது. அகவையின் நிறைவில்
அமர்ந்திருக்கும் மாமியாரின் இடுப்பில் பட்டு அணி போல தொங்கிக் கிடந்த போது கிளிக்கியது.
கிட்டும் மீந்த துணிகளில் அவரே உண்டாக்கும் பண்டைய சாதனம்.
வள்ளுவம் போல வட்டுவத்துடன் மூதாட்டியும் நீடிக்கட்டுமாக....
No comments:
Post a Comment