Friday, 3 April 2026

டி.ஐ. அரவிந்தன் -- நினைவேந்தல்


அரவிந்தனை முதலில் அறிமுகமானது அவரது 'பயணம்' நாவலுக்கு நான் எழுதிய மதிப்புரையின் மூலமாகத்தான்.

அவ்வமயம் அவர் ஹிந்து தமிழ் திசை நாளிதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனது மதிப்புரையை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதை அவர் செம்மையாக்கி எனக்கே மீண்டும் அனுப்பி அதை நான் முகநூலில் இட்டேன்.
அரவிந்தனின் செம்மையாக்கத்திற்குப் பிறகு அதை நான்தான் எழுதினேனா? என எனக்கே அய்யம் வந்தது. தேவையற்ற வரிகளை செதுக்கி வடித்தெடுந்திருந்தார்.
வாசிக்க :பயணம்
அப் பதிவை பார்வையிட்ட என் நண்பர் ஃபழ்ல் இஸ்மாயீல் முக நூல் பதிவென்பது ஓடுகிற நீரில் உலக்கையைக் கொண்டு எழுதுவது போல. பேசாமல் ஒரு வலைப்பூவைத் தொடங்குங்கள். இணையதளத்தைப் போல அதற்கு வருடாந்திர செலவெல்லாம் இல்லை என்றார்.
இலங்கை நண்பர் Insaf Salahudeen சில நாட்களிலேயே என் பெயரில் வலைப்பூவை உருவாக்கி வடிவமைத்துத் தந்தார்.
தமிழ் இந்து நாளிதழில் அவர் பணியாற்றியக் காலத்தில் நல்ல தமிழில் பிழையற எழுதுவது பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார் . அருமையான தொடர். அவர் அங்கிருந்து விலகிய பிறகு அதுவும் நின்று போனது.
அதன் பிறகு அவருடன் தொடர்பெதுவுமில்லை. சென்னை புத்தகக் காட்சியில் சீர்மை அரங்கு போடத்தொடங்கிய பிறகு அவரை காலச்சுவடு அரங்கில் சந்தித்தேன். உடலில் நன்கு களைப்பு தெரிந்தது. சீர்மையின் புத்தக வடிவமைப்பு குறித்து தனது ஆலோசனைகளைச் சொன்னார். அரங்கிற்கு வருமாறு அழைத்தேன்.வருகிறேன் என்று சொன்னார். அவரால் வரவியலவில்லை. ஓரிரு முறை நினைவூட்டினேன். பணி நெருக்கடி.
ஒரே நேரத்தில் எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றியவர். வாழ்க்கைச் சூழலினால் அவரின் எழுத்தாளர் பரிமாணம் வலுக்காமலேயே போய் விட்டது. கூடுதல் பேசாதவர். தனது துறைக்கு நீதம் செய்தவர். அவரை ஊடகக்கறையான்கள் என ஜெயமோகன் வசைபாடியபோதும் அதை மிகக் கண்ணியமாக மறுத்துக் கடந்தவர்.
காலச்சுவடில் அவரும் எழுத்தாளரும் நண்பருமான களந்தை பீர்முகம்மதுவும் களந்தை பீர்முகம்மது ஒன்றாகப்பணி புரிவதால் நாகர்கோவிலில் இருவரும் ஒரே வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.
அரவிந்தனின் மேசை மீது எனது 'கசபத்' நாவல் இருந்ததைக் கண்ணுற்றக் களந்தையார் அது குறித்துக் கேட்டிருக்கிறார் எனது நாவலுக்கு சாளைபஷீர் எழுதியிருந்தார். எனவே நான் அவரின் நாவலுக்கு எழுத வேண்டும் என்றாராம். பணியழுத்தம் காரணமாக அவரால் அதை வாசிக்கவோ எழுதவோ முடியாததால் களந்தையார்தான் அதற்கான மதிப்புரையை எழுதி அது காலச்சுவடு இதழிலும் வெளிவந்தது.
நண்பரே! நல்ல ஓட்டத்தை ஓடி அதை நிறைவும் செய்தீர்.
இறைவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீளுகிறோம்

No comments:

Post a Comment