அரவிந்தனின் ‘ பயணம் ‘ புதினம் .தத்துவ பின்னணி உள்ள ஒரு மடத்தின் மையத்தையும்
குறுக்கும் நெடுக்குமான அதன் உள் நீரோட்டங்களையும் விரிவாக பேசுகின்றது.
கால் நடைகளின் அன்றாட உயிர் வாழ்க்கை அட்டவணையை ஒத்த சராசரி
மனித குடும்ப வாழ்வின் சுமையையும் சலிப்பையும் முன் உணரும் ஒருவன் குடும்ப வாழ்வு எனும்
சட்டகத்துக்குள் அடங்க மறுத்து மீறி எழுந்து மடத்தினுக்குள் நுழைகின்றான்.
இந்த நுழைவு என்பது ஒரு நீர் துளியானது பெரு நீரில் கலந்து
தன்னை கரைத்துக் கொள்ளும் வெறும் சங்கமமாக மாறி விடவில்லை.
மடத்தின் பொது நீரோட்டத்தில் அவனது ஆளுமையில் புதைந்துள்ள வலிமை அவனை அறியாமலேயே
பெரு வடிவம் எடுக்கின்றது.
கூடவே அவனின் பலவீனங்களும் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்
செத்தை போல வெளிப்படத் தொடங்குகின்றது.
இந்த இடத்தில் அமைப்பு என்ற பொறியமைப்பும் அதனுள் செலுத்தப்பட்டு
புடமாக்காப்பட வேண்டிய தனி மனிதனும் தங்களுக்கே உரிய தர்க்க நியாயங்களை முன் வைத்து
முரண்படுகின்றனர். ஒரு கரு மையம்
பிறிதொரு கரு மையத்தை பரஸ்பரம் ஈர்க்கும் இழுபறியாக அது முரண் வடிவம் எடுக்கின்றது.
பின்னர் அதுவே நீண்ட மௌன மோதலாக மாறுகின்றது.
மெல்லிய தூசு படலம் போல மடத்தின் நிர்வாக அடுக்குகளுக்குள்
ஒளிந்து கிடந்த மன கருமைகள் குப்பை கிடங்குகளாக உருவெடுக்கின்றன . அதன் தொடர் வினையாக
தந்திரங்களும் கள்ள உத்திகளும் தலை தூக்குகின்றன.
ராமநாதனைக் கையாளத் தெரியாமல் பல திசைகளிலும் தூக்கியடிக்கின்றனர்.
மடத்தில் நடக்கும் நுண்மையான இழுபறியின் பெறு
பேறாக துறவின் வண்ணம் நீங்கி அதிகாரத்தை நோக்கிய நகர்வானது கடலடியில் நகரும் நத்தை
போல மெல்ல முன் நகர்கின்றது.
அமைப்பானது எந்த ஒரு புதிய வருகையையும் மாற்றங்களையும்
அதனோடு இழைந்து வரும் வளர்ச்சியையும் கண்டு அஞ்சுகின்றது. எந்த ஒரு மாற்று பக்கத்தையும்
எதிர் கொள்ள தயங்குகின்றது.
ஆனால் அமைப்புக்குள் இருந்து அதிர்வுகளை எழுப்பும் ராமநாதனுக்குள்
மன சாட்சியானது தன் விசாரணை வடிவில் அவனது ஒவ்வொரு நகர்வுகளையும் அசைத்து பார்க்கின்றது.
ஆனால் அமைப்பின் இறுக்கமானது அவனது தன் விசாரணையை மெல்ல மெல்ல ஒடுக்கி முட்டு சந்துக்குள்
தள்ளுகின்றது. அந்த முட்டுச்சந்தின் முடிவில் தன் விசாரணை கரைந்து “தான்” என்கின்ற
அகம் ராமநாதனை முழுக்க ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இறுதியில் ராமநாதன் புதிய மடம்
ஒன்றை நிறுவுகின்றான். பழங் கள்ளிப்பேழையானது குட்டிப்பேழை ஒன்றை ஈனுகின்றது.
துறவு நிலையானது அதிகாரமாக திரிந்து போகும் எதிர் பரிணாம
வளர்ச்சியில்தான் அமைப்பும் தனி மனிதனும் தங்களது உன்னத நோக்கங்களிலிருந்து நழுவி தோல்வியை
வாரித்தழுவுகின்றனர். வாழ்வின் துயர்களிலிருந்து
மக்களை மீட்கும் நிழலாக விளங்கிய ஆலமரம் போன்ற அமைப்புகள்,மடங்கள் காலத்தின் பழுப்பு
ஏற ஏற தங்களுடைய சொந்த நிழலையே வழிபடும் தன் வழிபாட்டுக்காரர்களாக உருவெடுக்கும் படி
நிலை மாற்றங்கள் பாய்ந்து விரியும் தாரை போல
பயணம் புதினத்தில் கசிந்து படர்கின்றது.
```````````````````````````````````````````````````````````````````````````
துறவைக்கோரும் பொது வாழ்க்கைக்காக தனது பெற்றோருடனான உறவை
வலிக்க துடிக்க வெட்டுகின்ற ராமனாதன் இல்லறம் எனும் குடும்ப வாழ்க்கையின் சுமைகள் குறித்தும்
அஞ்சுகின்றான். இந்த விலகலை அன்றாடம் உறுதிப்படுத்திக் கொண்டே அன்னிய பெண்ணுடனான முறையற்ற
உறவை அவன் ஆழமாகப் பேணுகின்றான் .
ராமநாதனின் இந்த பிறழ்வு வழியாக துறவு நிலையில் உள்ள சம
நிலை தவறுதலைப்பற்றிய விவாதங்கள் எழுகின்றது.
பசி தாகம் போல காமமும் மனிதனின் இயல்பான தவிர்க்க இயலாத
இயற்கை உணர்வாகும். அதனை அடக்கி ஒடுக்க முனைந்தால் மறு பக்கத்தின் வழியாக கட்டுக்கடங்கா
விசையுடன் அது பீறிடும் என்ற நடைமுறை உண்மை
இங்கு உறுதியாகின்றது.
அத்துடன் பொது நலனிற்காக குடும்ப உறவுகளை அர்ப்பணம் செய்கின்றேன்
என்ற வாதமானது மறைவில் தான் என்ற தேவதைக்கான
நேர்த்திக்கடன் பலியைத்தவிர வேறொன்றுமில்லை என்பதும் அப்பட்டமாகின்றது.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
மோதி தெறிக்கும் இல்லாமைகளை கதையின் தலையாய ஓட்டத்தில்
முரண்படும் இரு பிரிவிற்கும் மொத்தமாக கையளித்து இறுதித்தீர்ப்பு வழங்கி விடாமல் ஓசையின்
சிறு துணுக்கின் மூலமே அறியப்படும் மெல்லிய நீரோட்டங்களையும் கவனப்படுத்துகின்றார்
கதையாசிரியர் அரவிந்தன்.
பாலில் கரைந்த சர்க்கரை போல தன் அடையாளங்களை சுமந்து திரியாமல்
பணிகளிலும் அது சென்றடையும் இலக்கில் மட்டுமே குறியாக இருக்கும் மடத்தின் சுசீந்திரம்
கிளை பொறுப்பாளரான பாஸ்கர யோகி.
பெரிய அலட்டல்களும் முறையீடுகளும் எதுவுமின்றி பணிகளில்
மட்டுமே முங்கித் திளைக்கும் பிரபு.
மடத்தின் இந்த இரண்டு ஆளுமைகளையும் பெரு ஈர்ப்பு முறையில்
சித்தரிக்காமல் விட்டதின் வழியாக அரவிந்தன் அவர்களுக்கு மெல்லிய இதமும் சோகமும் விரவிய
நீடித்த தன்மையை வழங்குகின்றார்.
```````````````````````````````````````````````````````````````````````````````````````
1980களில் இந்திய வெகு மக்கள் பின்பற்றும் தொன்மங்கள் ,
மரபுகளின் வழிமுறையில் ஏற்பட்ட இரு பெரும் பிளவுகள் அவற்றிற்கான முழு விவாதங்களோடு
எழுந்து நிற்கின்றன.
அரவிந்தனின் கதையில் வரும் மடமும் அதன் ஆளுமைகளும் ஆண்டாண்டு
கால மரபின் நம்பிக்கையின் நீட்சியில் அடங்குவர். ஆயிரம்
பிரச்னைகள் இருந்தாலும் மடமும் அதனுடன் முரண்படுபவர்களும் நலப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக்
கொண்டேதான் இருக்கின்றனர். மடத்தின் உள்ள
சிக்கலெல்லாம் இயங்கும்போது ஏற்படும் உராய்வுக் கோளாறுகள்தான்.
ஆனால் மஸ்ஜித் இடிப்பிற்கு அழைப்பு விடுக்கும் முத்துசாமி
போன்ற ஃபாஸிஸ்டுகளின் கணக்கு கூட்டலோ வேறு மாதிரியாக உள்ளது.
முத்துசாமிகள் கிளப்பும் பேரினவாத அலையில்
அடித்துச் செல்லப்பட மடமும் அதன் நேர் எதிர்
ஆளுமைகளும் தங்களை அனுமதிக்கவில்லை என்ற காட்சியின் வழியாக ஒரு நல்லிணக்க சமூக பண்பாட்டு பருண்மையும் ”பயணம்”
புனைவிற்குள் தனக்கான இடத்தை இயல்பாகவே பிடித்திருக்கின்றது.
ஓட்டம் எதிர் ஓட்டம் என ஓடி களிக்க வைக்கும் பெரு நதி போல
ஆயிரம் உள்ளோட்டங்களுடன் மனிதர்களை பல வண்ண கலவை கொண்ட ஊடுவும் பாவுமாக இணைக்கும் மடம் ஒருஅணி .
எந்த ஒரு விவாதத்திற்கும் இடமளிக்காத சனநாயக நீக்கம் செய்யப்பட்ட
முத்துசாமியின் ஒற்றை கும்பல் மற்றொரு அணி.
என் மனது என்னவோ மடத்தின் மனிதர்களான சிவானந்தரையும் பாஸ்கரயோகியையும்
பிரபுவையும்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றது.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
சராசரி மனிதர்களுக்கு பணி புரிவதற்காக அன்றாட வாழ்க்கை
உலகிலிருந்து விலகிய உயர் நிலை உலகத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் என்ற உரிமை கோரலை துறவும்
அது சார்ந்த நிறுவனங்களும் சமூகத்தின் நினைவுகளுக்குள்
திரும்ப திரும்ப முன் வைத்துக் கொண்டே இருக்கின்றன. அது பற்றிய ஒரு உள் நோக்கு பார்வையை
உரிய தர்க்க நியாயங்களுடனும் விவாதங்களுடனும் எல்லா திசைகளிலிருந்தும் முன் வைக்கின்றது
பயணம் புதினம் . தீர்ப்பை நம்மிடம் விட்டு
விடுகின்றார் அரவிந்தன்.
ஈர்ப்பும் விலக்கமும் கொண்ட கடலலைப்போல தன்னியல்பான சித்திரங்களாக
அரவிந்தனின் மொழி புதினத்துக்குக்குள் அலையடித்துக் கொண்டிருக்கின்றது. புதினத்தை வாசிக்கத்
தொடங்கும் வாசகர்கள் கதை மாந்தர்களிடம் தங்களை முழுவதுமாக ஒப்படைத்தேயாக வேண்டும் என்பதுதான்
புதினத்தின் வலிமை.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
பயணம் நாவல்
ஆசிரியர்: டி.ஐ.அரவிந்தன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
No comments:
Post a Comment