Saturday, 16 May 2026

பந்து மேச்

 

போட்டியில் பங்கேற்க வந்திருந்த பஞ்சாப் கால்பந்தாட்ட அணியினரின் சப்பாத்தி பருப்பில் மனத்தையும் வாயையும் பறி கொடுத்த கொட்டு ஒலி மாமா வயிறு வீங்கி மருத்துவமனையில் நாட்கணக்கில் கிடந்தார்.

காயல்பட்டினம் அய்க்கிய விளையாட்டுச்சங்கம் தனது வருடாந்திர மௌலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு கால்பந்தாட்ட போட்டியின் அய்ம்பத்தியோராவது போட்டியை இவ்வருடம் நடத்திக் கொண்டிருக்கிறது. இப்பந்தாட்டம் ஊர் மொழியில் சொல்வதானால் ‘பந்து மேச்.’ காயல்வாசிகளுக்கு வேனில் கால விடுமுறைக் கொண்டாட்டம். கேரளம்,பெங்கால் போல காயல்வாசிகள் தீவிர கால்பந்தாட்ட சுவைஞர்கள் மட்டுமில்லை. இங்குள்ள பெரும்பாலான குடும்பத்தினரில் ஒருத்தராவது கால்பந்தாட்டக்காரராகத்தான் இருப்பர். பன்னாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வரும் இளம் வீரர்களும் உண்டு.

எனது விடலைப்பருவத்தில் பார்த்த பிறகு இப்பொழுது அப்பா(தாத்தா)வான பிறகு பார்க்க வந்திருக்கிறேன்.1986 அல்லது 1987க்குப்பிறகு இப்போட்டிகளைப்பார்க்கவென நான் இப்பக்கம் வந்ததேயில்லை. நாற்பது வருட இடைவெளி. வாழ்க்கையின் ஓட்டங்கள், விருப்பங்கள்,தேர்வுகள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக  மேல் கீழாக புரண்டதின் விளைவு.

இவ்வாரத்தில் தொடங்கிய அய்க்கிய விளையாட்டு சங்கத்தின் 51வது போட்டியைக்காண நேற்று பார்வையாளர் மாடத்திற்குள் நுழைந்தபோது வயிறு வீங்கிய ஒலி மாமாதான் நினைவிலிருந்து எழுந்து வந்தார். கொட்டு ஒலி மாமா என் சிறு வயது நாயகர்களில் ஒருவர். கசபத் நாவலில் அவரும் ஒரு பாத்திரமாக நிற்கிறார். பார்வையாளர் மாடத்தில் ஏறும்போது அதன் இடது மேல் ஓரத்தில் மேனாள் கால்பந்தாட்ட வீரர் உமரொலீ காக்கா அமர்ந்திருந்தார், இப்போட்டி தொடங்குவதற்கு சின்னாட்களுக்கு முன்னர் இங்கு விளையாடிய மேனாள் கால்பந்தாட்ட வீரரொருவர் தனது எண்பதாம் வயதில் இறைவனிடம் மீண்டிருந்தார்.

நேற்றைய ஆட்டம் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அணிக்கும் சென்னை நகர காவலணிக்கும் இடையே. நான்கரை மணிக்கு நடுவர் ஊதலை ஒலிக்கவும் ஆட்டம் தொடங்கியது.

இரு தினங்களுக்கு முன் நடந்த ஆட்டத்தில் வென்றிருந்த சென்னை நகரக்காவலணியால் நெல்லை அணியின் தற்காப்பை உடைக்கவியலவில்லை.  பெரும்பாலான நேரங்களில் பந்து காவலணியின் கோல் கம்பத்தினருகில்தான் சுழன்றது. மீறிக் கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பும் சென்னை வீரரின் வலுவற்ற உதையால் தவறிப்போனது. இரண்டுக்கு சுழியம் என்ற கணக்கில் நெல்லை வென்றது.

திருநெல்வேலி அணியிலிருந்து மலையாளம் ஒலித்தது. பல்கலைக்கழக அணியென்பதால் குமரி மாவட்ட எல்லைப்புற கடலோரக் கிராமங்களிலிருந்தும் ஆட்டக்காரர்கள் இருந்தனர். கடலின் மகன்கள் ஆனதால் திண்மையேறிய உடல் வாகு, பிழையாட்டம் ஆடிய அப்படியான வீரரொருவருக்கு சிவப்பட்டை காட்டப்பட்டு மாடத்தினருகில் மேற்சட்டையை கழற்றி காலாறிக் கொண்டிருந்தார். உருக்கு சதுரம்.

நடுவர்களின் சீருடையும் கைக்கொடியும் மாறியிருக்கிறது. பந்து சிறார்கள் எனப்படும் வெள்ளுடை வேந்தர்களின் எண்ணிக்கை மிகவும் சிறுத்திருந்தது. ஆட்ட அரங்க அறிவிப்பாளர்களாகவிருந்த மூணு மாடி வீட்டு சைபுத்தீன் காக்கா, தைக்காத்தெரு சதக்கத்துல்லாஹ் காக்கா ஆகியோரின் குரல்களிலிருந்த  நிமிர்வும் தெளிவும் இப்போதைய அறிவிப்பாளரில் இல்லை. சதக்கத்துல்லாஹ் இவ்வருடம்தான் காலமானார். சைபுல்லாஹ் ஊரில்தான் உள்ளார்.

நான் முதன்முதலாக வரும்போது ஆடுகளத்தை சுற்றி கொச்சுக்கயிறு மட்டுமே கட்டப்பட்டிருந்தது. அதன் பின்னரே கம்பி வலை வேலியை அமைத்தார்கள். அவ் வேலியை தாண்டி குதிக்கும் நிகழ்வு பொதுவாக ஆட்டம் முடிந்த பிறகுதான் நடக்கும். ஒரு சமயம் ஆட்டத்தின் நடுவேயும் சுவைஞர்கள் ஆவேசத்துடன் களத்தினுள் பாய்ந்தனர். தூத்துக்குடி அணியின் வீரருக்கு சிவப்பட்டை காட்டப்பட்ட ஆத்திரத்தில் அதை கிழித்தெறிந்த பின் நடுவரின் கன்னத்தில் அவர் ஒரு குத்து விட்டார். சுவைஞர்கள் அவரை எல்லைத்தாண்டிப்போய்  பிளந்தனர்.

எல்லை மீறிய சுவைஞர்களைக் காவலர்கள் பிடித்துச் சென்ற நிகழ்வும் நடந்தது. தங்களுக்கு பிடிக்காத அணியினர் கோல் கம்பத்தை நெருங்கும்போது ஊதல் ஒலித்தது. பந்து உறைந்தது. ஆட்டக்காரர்களும் திகைக்க அவர்களுடன் நடுவர்களும் திகைத்தனர். கள்ள ஊதல் ஒலித்த தீவிர சுவைஞரை பணியிலிருந்த காவலர்கள் இழுத்துக் கொண்டு போயினர்.

நடுவரின் தீர்ப்பை வெறுப்பவர்கள் அவரை ‘’ மாலைக்கண்ணா” என ஏச அணியினர் வெற்றி மீது “கட்டீ” பந்தயம் கட்டப்படும். கப கப மாமா ஒருவர் கட்டீ கட்டீ எனக் கூவுவார். வேறொன்றுமில்லை. அவரின் எச்சிலொழுகும் படபடத்த வாய் சொல்லை அருகிலிருந்தவர் கோதுடைத்தார் “ கப் டீ “ என.

முதலில் தென் மாநில போட்டியாகத் தொடங்கி பின்னர் நாடாளாவிய போட்டியாக 2015 வரை நடைபெற்று வந்தன மௌலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு சுழற் கோப்பை போட்டிகள். .தில்லி,ஹோஷியார்பூர்,மீரட்.பெங்களூரு, அந்தமான்,கொச்சி என நாற்புறங்களிலிருந்தும் விளையாடும் அணியினருடன் ராணுவம்,சுங்கம், துறைமுகம்,காவல்துறைகளிலிருந்துமுள்ள விளையாட்டு அணியினரும் வருவர்.

1955 ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட அய்க்கிய விளையாட்டு சங்கத்தில் 1965 ஆம் ஆண்டு கால்பந்தாட்டப் போட்டியை தொடங்கியிருக்கிறார்கள்.

மே மாதத்தில் வந்து போன றமளான் காலம், பெருந்தொற்று, திடல் சீரமைப்பு என பத்தாண்டுகள் விளையாட்டே நடைபெறவில்லை. இவ்வருடம்தான் மாவட்டங்களுக்கிடையேயான போட்டியாக மட்டுப்படுத்தப்பட்டு தொடங்கியுள்ளது, வரும் வருடங்களில் தென்னிந்திய, அகில இந்திய போட்டியாக உருவெடுக்கும் இன்ஷா அல்லாஹ். பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் கோடையின் களியாட்டத்தை மீட்டெடுத்த அய்க்கிய விளையாட்டு சங்க பொறுப்பாளர்களும் புரவலர்களும் வாழ்த்துக்குரியவர்கள்.

சிறுவனாக,இளைஞனாக இப்போது வாழ்வின் பிற்பகுதியை தொட்டுக் கொண்டிருக்கும் மனிதனாக அய்க்கிய விளையாட்டு சங்கத்தின் திடலில் நிற்கிறேன். அப்போதும் இப்போதும் எனக்கு விளையாட்டு சரி வந்ததில்லை. ஆனால் ஆட்டக்காரர்களின் உடல் தொட்டு சுழலும் பந்தாக மாற்றங்கொள்வது மட்டும் மாறவேயில்லை. நெகிழ்வின் தருணம் போல, நல்லூணின் சுவை போல, அரும் புனைவின் மூளைக் களி போல நேற்றைய ஆட்டம் எனக்குள்ளும் அதற்குள் நானுமாக ஃபனாவின் ஹாலாத்.

எனக்கு விளையாட்டு வராது. அதனாலென்ன? நான் இப்போது நான்கு கால்களில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். என் மகன்கள் இருவரும் கால்பந்தாட்டக்காரர்கள்.

இவ்வருட கால்பந்தாட்ட தொடர் என் இளமையை அதன் களிப்பு,துடிப்புடன் திரும்ப வழங்கியிருக்கிறது. அய்க்கிய விளையாட்டு சங்கத்தின் அடையாள  இசைக்கீற்றான கம் செப்டம்பர் என்ற அமெரிக்க நகைச்சுவை  திரைப்படத்தின் பாடலிசை ஒன்றே போதும் பாதாளக் கொக்கி போல எல்லாவற்றையும் மீட்டெடுக்க.

ஆட்ட நாயகர்கள் வருவர் போவர், அணிகள் மாறும், ஆட்டங்கள் முடிந்து விடும்….. ஆனால் அவைகளுடனான நினைவுகள் மட்டும் மண்ணைப்போல… கதிரொளியைப்போல கம் செப்டம்பர்   போல அங்கேயே உறைந்து கிடக்கும்.



 




No comments:

Post a Comment

பந்து மேச்