றமளான் காலம் மட்டும் இவ்வட்டணைவகளெல்லாம் தலை கீழாகி விடுகின்றன.இரவெழுந்து
பகல் துயில். இரவில் நேரத்தோடு படுத்தாலும் ஒன்றரை மணிக்குத்தான் உறக்கத்தின் அண்மைக்
கிட்டுகிறது. இது போன்ற சமயங்களில் பக்கத்து ஊர் ஆறுமுகநேரிக்கு ஒரு நடை போய் தேநீரருந்தி
விட்டு வருவதுண்டு.
இவ்வருட புதிய நூலிற்காக பயணக்கட்டுரைகளை செம்மையாக்கித்
தொகுக்க வேண்டிய வேலை இருப்பதால் இராப்போக்கைக் கிட்டத்தட்ட நிறுத்தி விட்டேன் எனச் சொல்லலாம்.
தவழ்ந்து நடந்தும் கடந்து விட்ட முதலிரண்டுப் பத்துகளுக்குப்
பிறகு இது நோன்பின் ஓடும் கடைசிப்பத்துக் காலம்.கைகளில் அள்ளுவதற்குள் பறந்து விடும்
விரைவு.எனவே இயன்ற வரை நேரத்தை விரயமடிப்பதில்லை.
பின்னிரவு தொழுகை மூன்று மணிக்கு தொடக்கம்.எனவே முன்னிரவுத்தொழுகைக்குப்பிறகு
கையிலிருக்கும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தை எழுத்துக்காக எடுத்து வைத்து விடுவேன்.
ஒரு தகவலுக்காக நான் நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்த ஆவணம்
வாராது வந்த மாமணியாய் வந்து சேர்ந்தது.என்றாலும் வேலை நடக்கவில்லை. கோப்பின் பைட் அளவு பெரிது.அது
பதிவிறங்குவதற்கு எடுக்கும் சமயமோ கூடுதல்.அதைப் புரியாமல் பலமுறை முயன்றுத் தோற்றுக்
களைத்து மேலும் முயலாமல் விட்டிருந்தேன்.
மீண்டும் அதை பதிவிறக்க முயன்றும் இணையத்தின் தரவு இருப்பு தீர்ந்ததுதான் மிச்சம்.நண்பர் உவைசிடம் ஆலோசனைக்
கேட்டபோது அவர் தொழில் நுட்ப ஆலோசனையெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அது பதிவிறங்கும்
வரைக் காத்திருந்து முயலுங்கள் என்றார்.அது போலவே செய்தேன்.பல மாதச் சிக்கல் தீர்ந்தது.
தீர்வுக்கும் நமக்குமிடையே வெங்காயச்சருகின்பருமனுள்ள திரைதான்.அதையும்
இன்னொருவர் வந்து நீக்கிக் காண்பித்த பிறகே மூளைக்குப்படுகிறது.
வேண்டிய தகவல்கள் தாம்பாளத்தில் வெண்ணெயுருண்டை போல ஆவணத்தில்
திரண்டு நின்ற உற்சாகத்தை சிறுக் களிப்பாக மாற்றாவிட்டால் எப்படி?
இளைய மகன் அப்துல்காதிர் ஜியாதிடம் “ஆறுமுகநேரிக்கு டீ
குடிக்க வர்றியா?” அழைத்தேன்.அவன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு படிக்க வேண்டியிருப்பதால்
மறுக்கவே வண்டியைத் தனியாகவேக் கிளப்பினேன்.”தனியாவா போறியோ?” என்றான்.நேரம் பன்னிரண்டே
முக்கால். கூட்டுக்கு ஆள் வரும் நேரமல்ல. கிளம்பினேன்.
புற வழிச்சாலையில் ஊரின் நெரிசல் குறையுமிடத்தில் காற்றில்
தண்மை ஏறிக் கொள்கிறது. புதியதாய் தேநீர்க்கடையொன்றை ஊர்க்காரப்பையன் திறந்திருக்கிறான்.
நல்ல தேநீருடன் சுவையும் வகைகளுமான நொறுவைகளுமுண்டு. எனக்கோ கொஞ்சம் தொலைவு தேவை. ஆறுமுகநேரிக்கே
வண்டியை விட்டேன். ஊரின் வெளிப்பாடுகள் ஒடுங்கிய பின் சாலை மட்டும் நமக்காகக் காத்திருக்கும்
நெருக்க அனுபவம். சாலையின் இரு மருங்குகளும் வீட்டறைச் சுவர்களாகி விட்டமாதிரி எண்ணம்.
தொடர்வண்டிக் கடவைகளைத் தாண்டி கொஞ்சம் தொலைவில் துரையண்ணன்
தேநீர்க்கடை. ஏற்கனவே இக்கடை பற்றி முகநூலில் பதிந்த நினைவு. நள்ளிரவிற்குப் பிறகே
கடை திறக்கும்.அருகிலுள்ள தாரங்கதாரா நச்சு ஆலையின் இரவுநேரப் பணியாளர்களைக் கருத்தில்
கொண்டு திறக்கப்படும் கடை. காலை ஒன்பது மணி வரைக்கும் கடையிருக்கும்.
தேநீருக்கான விழைவு எதுவும் அச்சமயம் இல்லை.களிக்காக ஒரு
காரணப்பயணம். அவ்வளவுதான்.பருப்பு வடையும் போண்டாவும் காத்திருந்தன.இவரிடம் பால் தேயிலை
அடர்த்தியுடன் இலைக்கடுப்பத்தின் மணம் கொண்டது.அதுவே ஆட்களைத் திரும்ப திரும்ப வரவழைக்கிறது.
எவ்வளவு கூட்டமிருந்தாலும் ஒவ்வொரு ஆளுக்கும் என தனியேதான் போட்டுத்தருவார்.அந்த மெனக்கெடல்தான்
இவரின் கடை தேநீருக்கு நிலைத்தரமான சுவையையளிக்கிறது.எனக்கு பசித்தாவடியில்லையென்பதால்
வெறுந்தேயிலைக்குச் சொல்லி விட்டு துணைக்கும்
இவ்வளவு தொலைவிற்குமாக சேர்த்து ஒரு போண்டாவை எடுத்துக் கொண்டேன்.
வருவதற்கான உந்துதலின் தாகம் தீர்ந்தது.வீடு கிளம்பினேன்.இரண்டு
மணியிலிருந்து இரண்டே முக்கால் வரை நல்லுறக்கம்.முழு இரவு உறக்கத்தின் நிறைவு.
No comments:
Post a Comment