Sunday, 15 February 2026

பல்பு

மின்சாரமில்லாத மழை இரவுகளில் பேசுவதையும் கேட்பதையும் தவிர வேறெதையும் செய்ய முடியாது. அப்படியானதொரு இரவில்தான் ஆடறுத்து இரத்தத்தைத் துணியில் நனைத்து அசைத்து இரயிலை நிறுத்தியக் கதையைச் சொன்னாள் என் றாத்தா.அது மீச்சிறு கதையாக இருந்ததால் அவள் நெடுந்தொடரொன்றை சொல்லத் தொடங்கினாள்.ஜின் வசிய வீட்டுக்காரிகளைப்பற்றியது.அவ்விரவில்  அரிக்கேன் லாந்தர்களின் அலையும் வெளிச்சப் படலுடன் சுவர் கடிகையின் ‘டிக்’ ஒலியும் மட்டும் இல்லாதிருந்தால் அந்த இருளால் இவ்வளவு மட்டுக்கும் வீட்டுக்குள் அலைந்திருக்க முடியாதுதான்.

‘அந்த ஜின் வாசலாத்துக்கார ஊட்டுல மூணு பேர்தான் இந்தாளுவோ”. லாந்தர் வெளிச்சம் தாவியிராத இடத்திலிருந்து றாத்தாவின் குரல் தொடர்ந்தது. மொத்த அறைக்கும் ஒரே ஒரு லாந்தர்.அணைவதற்கான படபடப்புடன் திண்ணையிலிருக்கும் குத்து விளக்கு.வெளிச்சங்களின் எல்லைகளுக்குள் இருக்கிற மாதிரி நான் படுத்துக் கொள்வேன்.

வசியங்களின்  இரவுகளை அடுத்து வரும் காலைகளில் கண் விழித்தவுடன் நான் போய்ப் பார்ப்பது றாத்தாவின் பாதங்களுக்கும் சுவர் மூலைக்கும் இடைப்பட்ட இடத்தைத்தான்.

முதன்முதலில் சென்னைக்கு போய் வந்த பின் ஆடு,இரத்தம்,இரயில் அதன்  நிறத்தையிழந்தது.றாத்தா சொன்ன ஜின் வசியம் மட்டும் அதன் சுவாரசியங்களினால் சிலைத்திருந்தது.

வசியக்கார வீட்டின் சுற்று வட்டம்தான் ஓட்டமும் ஒளிவுமான என் வயது பையன்களுக்கு விளையாட்டும் கூத்தும்  நிகழுமிடம். அங்கு குப்பை மேடு உண்டு. ஜின் களிகளைக் கேட்ட பிறகு அங்கு எறியப்படும் கரிந்த பல்புகளை சேகரிக்கத் தொடங்கினேன்.பவர் பல்புகளுடன் நீலம்,சிவப்பு,மஞ்சள்,பச்சை நிறங்களில் ஜீரோ வாட்ஸ் குட்டி இரவு பல்புகளும் அவ்வப்போது கிடைத்து வந்தன.கவண் கல்லிற்காக வேட்டைக்கார காதர் சுலைமானிடம் ஓரிரண்டு பல்புகளைக் கைமாற்றியது போக மீதியை வீட்டுத் தோட்டத்தின் மூலையில் பானைச் சில்லுகளை அடையாளம் வைத்துப்புதைத்தேன்.

குப்பை மேட்டில்  கிடந்த சிறியதும் பெரியதுமான மாத்திரைகளை மம்மாக்கார்மாவின் பேரன் விழுங்கியதோடு நாயின் செவியையும் கடித்த செய்தியை வருத்தமும் புதினமுமாக அவ்வட்டாரத்து முதிய பெண்கள் பேசி முடிந்த கதைகளுடன் அவ்வப்போது பல வகை புதுக் கதைகளும் குப்பைமேட்டுபகுதியிலிருந்து வந்து சேருவதில் குறைவிருக்கவில்லை.அக்கம் பக்க வீடுகளில் ஊதல் ஓசையுடன் ஏவல் கல் வந்து விழுவதும் சுடு சோற்றுச்சட்டிக் கவிழுவதுடன் மையும் பசையும் தடவிய கோல் கள்ளர்களின் நடமாட்டம் பற்றிய செய்திகளும் அந்திக்குப் பிறகு அங்கு ஆள் நடமாட்டத்தை வெகுவாக குறைத்திருந்தன.

எனது இரவுகளில் அதிலும் உறங்கும் முன்னரும் இடை விழிப்புத் தட்டும் பின்னிரவுகளிலும் ஜின் வசிய வீட்டினுள்ளே ஒரு பல்பும் வெளியே வீட்டின் நெற்றியில் ஒரு பல்புமாக கட்டாயம் எரியும். பகல்களில் மட்டும் அவ்விடத்தில் இருப்பது கிணறும் அதிலிருந்து நீளும் சிமிட்டித் தாவளத்தின் ஓரத்திலுள்ள சேறு பிடித்த மண் நுரைப்பில் நெளியும் மண் புழுக்களும்தான்.

வசியக்காரிகள் எப்போதும் நின்றிருப்பது பல்பின் மஞ்சள் வெளிச்சம் முடிந்து இருள் தொடங்கும் இடத்தில்.வீட்டின் கொல்லைக்கடையிலிருந்து அவர்கள் குமரி வயதுள்ள ஜின்களை எண் திசைகளுக்கும் கிளப்புவதுண்டு. அவர்களுக்கான அதிகாரக் கால அளவென்பது முதல் சேவல்கூவும் வரைக்கும்.

அந்நேரங்களில் பூனையின் கறாவுதலில் தொடங்கி நாயின் ஊளையில் முடியும் கலவையொலிகளை காதருகில் வந்து மோதும் கொசுக்களிடமிருந்து கேட்டதாக அவ்வீட்டைக் கடக்க நேரிடும் வெளித்தெருக்காரர்கள் பலர் சொல்லி தெருக்களுக்குள் செய்தி பரவியிருந்தது. ஈரக்கையுடன் ஹோல்டரில் பல்பை செருகும்போது மவ்த்தாகிப்போன இஸ்மாயீல் காக்காவின்  கறிக்கடையும் வசிய வீட்டிற்கு வடமேற்குத் திசைதான்.

“ நட்ட நடு ராத்திரில பறக்குற கொமரி மட்டய்கள் என்ன செய்வாளுவோ தெரியுமா..?” விரியும் தன் கண்களை கதை முடியும் வரைக்கும் சுருக்காமலேயே அந்த ஜின்கள் ஒவ்வொரு நாளும் செய்து முடிக்கும் வேலைகளை றாத்தா வரிசைப்படுத்துவாள்.பிடிக்காதவர்களின் வீட்டு நடு முற்றத்தில்  மலங்கழிப்பது,நள்ளிரவில் குழந்தையின் குரலில் வீறிடுவது,புதிய புடவைகளில் பொத்தல் போடுவது…. இப்பட்டியலில் ஒரு நாள் வரும் சேட்டைகள்அடுத்த நாள் இடம் பெறுவதில்லை.ஒவ்வொரு நாளும் வண்ணமும் வகையுமான புதிய புதிய சேட்டைகள்.

இரவில் கேட்டவைகள் மறுநாள் பகலில் பள்ளிக்கூட நண்பர்களிடம் ஊறிப் பெருகின.அது மர்மங்களுக்கான அரசவை.எனது அரியணையிலிருந்து இரண்டடி தள்ளியே நண்பர்கள் அமர வேண்டும் என்பது யாரும் சொல்லாமலேயே நடைமுறைக்கு வந்தது..ஒவ்வொரு நாள் பகலிலும் சுவாரசியங்களுக்கான பசி அவர்களை பிடித்தாட்டியது. பசிய குலைகளுக்காக ஏங்கும் ஆடுகளைப்போல என் ஒவ்வொரு சொல்லையும் அவர்களின் கண்கள் பின் தொடர்ந்தன.செவி மடல்கள் கூர்த்தன.கடலை மிட்டாய், சவ்வு மிட்டாய்,எலந்தைப்பழம், சொடக்குத் தக்காளிகளுடன் அவ்வப்போது பளிங்கு போலாக்களும் திறையாகக் கிடைத்து வந்ததன.விளையாட்டுச் சமயங்களில் நடக்கும் சச்சரவுகளையும் என்னிடம் நண்பர்கள் கவனமாகத் தவிர்த்தனர். அடுத்த நாளைக்கான புதிய கையிருப்புகளுக்காக நானும் பகல் முழுக்க இரவை எதிர்பார்க்க வேண்டியிருந்தது.

வீட்டுத்திண்ணையிலுள்ள கரிந்த பல்பைக் கழற்றி புதியதொன்றை  காக்கா மாட்டும்போது மறக்காமல்  அவரிடமிருந்து கேட்டு வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டேன்.

பல்பைச் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து பெஞ்சில் எடுத்து வைத்த பிறகு அன்றைய அவையின் செயல்பாடு தொடங்கியது.ஆணியடித்து கயிறு சுற்றியிருந்த புதிய பம்பரமொன்றை பக்கத்து பெஞ்சு அன்சாரி என்னிடம் நீட்டியவன் மறு கையை உருண்டை வடிவில் பிடித்துக் காட்டினான்.பல்பை கையில் வாங்கியவனின் தோள்பட்டைகளிரண்டும் வெடுக்கென தாழ்ந்தன.அதைக் கீழே போடப்பார்த்தவன் சுதாரித்தவனாக ‘’சரியான கனம் ‘’ என பதட்டமும் புன்னகையும் கலந்து முனகினான்.

இருவரைத் தவிர மற்றெல்லோரும் ஏழாம் வகுப்புக்குத் தேறினோம்..எங்களது கோடை விடுமுறைகளையும் அதல்லாத மற்ற நாட்களின் மாலைகளையும் இரவுகளையும் நிரப்பியவர்களின் பட்டியலில் பயில்வானப்பா,காக்கப்பா, போல்முட்டாய்,புளிடோங்கா,மம்மிப்பேய்,அஞ்சீசா…….மழைக்கும் வெய்யிலுக்கும் யாராவது எங்கிருந்தாவது வந்து போயினர்.

அபின் கஞ்சா என்ற பட்டப்பெயரும் உமர் என்ற உண்மைப் பெயருங் கொண்ட  நெட்டையான கறுத்த மனிதர் அப்போதுதான் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தார்.அவரைப்பற்றிய செய்தி பரவி கிழக்குத் தெருக்களிலிருந்தும் பைபாஸ் சாலையிலிருந்தும் பையன்கள் பார்க்க வந்தனர்.

உமர் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரையில் பிறந்தவர்.காட்டு மொகுதூம் பள்ளிக்கு பரிகார சில்லா வந்த இடத்தில் இங்கேயே கடைசி வரைக்கும்  தங்கி விட்டார். அவருக்கு நீண்ட முடியிருந்தது.அதை முடிந்து தலைப்பாகைக் கட்டியிருப்பார்.அதை அவர் அவிழ்க்கும் சமயம் நீண்ட கைகளைப்போல தலை முடிக் கற்றை அவிழ்ந்து விழும்.அதற்குள் குட்டிக் காகிதப் மடிப்புகளைத் தொங்க விட்டிருந்ததாக பள்ளிக் கிணற்றில் குளிக்க வந்த சிறுவர்கள் செய்தியைக் கிளப்பி விட ‘அபின் கஞ்சா’  என்பதே பெயராகியது.தெருக்களில் யாராவது ‘உமர்’என ஒன்றுக்கும் மேல் தடவைகள் விளித்தால்  அவரும் திகைப்புடன் திரும்பிப்பார்த்தார்.

பள்ளிவாயில் குறட்டில் எரியும் பல்பின் வெளிச்சம் சிறுக்கும் பகுதியில்தான் அபின் கஞ்சாவின் தங்கல். “அஃபீன் கஞ்சாஆஆ….. சேம்பாரியின் முக்கால் தெரு கடக்கும் விளியைத் தொடர்ந்து கும்பலிலுள்ளவனின் தலையையோ முகத்தையோ பதம் பார்த்த பிறகே கல் புறப்பட்டது தெரிய வர தினமும் அவ்வழியாக வரும் பெரியவர்கள் துணையுடன் ஒற்றை பல்பு கல் குறட்டைத் தாண்ட வேண்டியிருந்தது.

“வசியக்காரியளுக்கு மலயாளம் தெரியுமா?”றாத்தாவிடம் கேட்டதற்கு “மலயாளம் மட்டுமில்லே அவளுவலுக்கு நம்ம நாட்டுல உள்ள எல்லா பாசயும் தெரியும்.”

தேசிய மாணவர் படையில் மலையாளம்,ஹிந்திக்கார அலுவலர்கள் வருவதாகவும் அதில் சேர்ந்தால் இராணுவத்தில் சேர்வது எளிது.அப்படி சேரக் கிடைத்தால் நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் போய் வேலை செய்ய வேண்டி வரும்.அப்படியே புதிய மொழிகளையும் படிக்கலாம் என ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எங்கள் தெரு மம்மா லெப்பை சொன்னான்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடமும் திறந்தது.எட்டாம் வகுப்பில் கணக்கு வகுப்பு எடுக்கும் பட்டப்பா நாராயணன் சார்தான் தேசிய மாணவர் படையின் ஏஎன்ஓ.

விக்கிரமசிங்கபுரத்தில் நடக்கவிருக்கும் பதினைந்து நாட்கள் தேசிய மாணவர் படை பயிற்சித் தங்கலுக்கு பெயர் கேட்டார்கள்.நான் பிறந்ததிலிருந்து அதுதான் முதன் முதலான தொலைவுப் பயணம். பாசறையினருகில் குளமிருந்த காரணத்தினால் பொறுப்புத் துறப்பு படிவத்தில் பெற்றோர் கையெழுத்துக் கேட்டிருந்தனர்.“இருவத்தொன்னு குண்டுலோ சுடுவானுவோ” வாப்பாவின் தயக்கத்தை  உம்மா சமன் செய்தாள்.இருந்தாலும் நான் புறப்படும் வரைக்கும் வாப்பாவின் முக வாட்டம் மாறவில்லை.

இராப்பயணத்தில் வடமலைசமுத்திரம் கிராமத்திற்கு திசைகாட்டி உதவியுடன் பெயர் தெரியா பூச்சிகளின் ஓசைகளுக்கு இடையே கூட்டிச் சென்றார் ஹிந்திக்கார ஹவில்தார்.அவரின் நடை வேகத்திற்கு அணியினர் யாராலும் ஈடுகட்ட இயலவில்லை.இடுப்பு மட்டும் அந்தரத்தில் மிதக்கும் ஒட்டக நடை.அழகிய மணவாளப்பெருமாள் கோயிலருகிலுள்ள கொட்டகையில் உட்கார வைத்து தேநீரும் பிஸ்கட்டும் தந்தனர்.

அங்குள்ள சுவற்றில் எரிந்துக் கொண்டிருந்த குண்டு பல்பு மென் காற்றில் அங்குமிங்கும் உருண்டது. வைக்கோல் போர் பொன் மழைச்சரமாகி இன்னும் மஞ்சளாகியிருந்தது.பாசறை முடிந்து வீடு திரும்பிய அடுத்த நாள் இரவிலிருந்து  வடமலைசமுத்திரத்தை தஞ்சாவூரின் கிராமமேதான் என மனம் அச்சாக நினைக்கத் தொடங்கியிருந்தது.

உடல் முழுக்க பல்புகளாலான இருவர் என் முகத்திற்கு மிக நெருக்கமாக வந்து உற்றுப்பார்க்கின்றனர்.திருநெல்வேலி சர்க்கஸில் பார்த்த அதே அளவுள்ள தலை பெருத்து வால் நீண்ட பல்புகள்.கண் துளைகளின் வழியே அவ்வெளிச்சம் ஏறியதில் மூளையும் தகித்து மஞ்சள் நிறமாகி விட்டிருந்ததை தெளிவாகப் பார்க்க முடிகிறது. வேகமாகப் பின் வாங்கியதில் குட்டை மதிலொன்றில் தட்டி வீழ்ந்தேன்.பல்புகள் ஆணிக்கூர் நகங்களாகி என் ஹல்கை குறி வைத்து நீண்டன.விரல் நுனிகளில் மஞ்சள் வெளிச்சம் ஆவித்திவலைகளுடன் சொட்டியது. “ ….என்ட றப்பே லாயிலாஹ இல்லல்லாஹு இல்லல்லாஹு இல்லல்லாஹு  அல்லா அல்லா ஹூ ஹூ ஹூ…. மூச்சிரைத்தது.இடக்கையில் கடும் வலி. சுட்டுருக்கும் வெப்பத்தில் முகம் பொசுங்கப்போகிறது. ‘ஆஆஆ… உம்மா….’  கத்தலும் தொண்டையிலிருந்து வாய்க்கு வந்து சேரவேயில்லை.விக்கலொலி என் செவிக்குள்ளேயே மடங்கி விழுகிறது வலப்பக்கமும் இடப்பக்கமும்  அசைந்தும் முடியவில்லை. முழங்கையை ஊன்றி எழப்பார்த்தேன். கழுத்துக்கு கீழே உடல் எழும்பவில்லை.முக்கினேன். மார்பின் படபடப்பில் எல்லாப்பக்கமும் வியர்வை பெருகியது. திடீரென பெய்தது மழை.வெந்நீர் மழை. கால் இடுக்குகளில்  இளஞ்சூடு.”வெடிச்சிரும் பல்புத்தலய்லாம் # * % & …..”

“மாடு நெளியுற மாதிரி நெளியிறியே. பண்டி பண்டி. வயசாக்காணாது…” தொடையில் முழு வீச்சில் கம்பு இறங்கியது. கூடவே தலையணையில் ஒரு எத்தும்.

“ஏந்தலய்ல பேஞ்சுட்டான்” தங்கையின் கூப்பாட்டில் தூக்கம் கலைந்த ஆவேசத்துடன் வாப்பா ஸ்கேலோடு ஓடி வந்திருக்கிறார்.றாத்தாவைத் திட்டிய உம்மா எனக்கு தண்ணீர் ஓதித் தந்ததோடு அரை ஞாண் கயிற்றில் துஆக்கூட்டையும் கோர்த்து விட்டாள். காக்காமார்களை வற்புறுத்தி பரணையும் ஸ்டோர் ரூமையும் தவிர மற்ற எல்லா இடங்களிலுமுள்ள பல்புகளைக் கழற்றி குழல் விளக்குகளை மாட்ட வைத்தாள்.

அது வெறும் கனவே இல்லை.இவ்வளவு உக்கிரமாக சூடும் புகையுமாக… முகம் சுட்டது நெஞ்சு வியர்த்தது தொடை நனைந்தது……ஒன்றுமே பொய்யில்லை. கனவு உருவத்தில் வந்த நனவுதான்.இவ்வளவும் உள்ளடங்கிய ஒன்றை கனவென்று மட்டும் எப்படி ஒதுக்குவது?இதை யாரிடமாவது சொன்னால்தானே பகடி.அதையே எழுத்தில் கொண்டு வந்தால் காவியமாக உலகம் கொண்டாடத்தான் செய்யும்… இன்றில்லாவிட்டால் நாளை கட்டாயம்…

கனவு கரைவதற்குள் டைரியில் எழுதி வைத்துக் கொண்டால் நல்லதுதான்.பின்னர் எப்பவாவது ஒரு திகில் கதை எழுதுவதற்கான முன் குறிப்புக்கு உதவும்.இதை எழுதி முடித்த பிறகு அதனடியில் இப்படி ஒரு பின் குறிப்பையும் எழுதினேன்:பல்பின் நிறம் ஓமப்பொடி முறுக்கில் அப்படியே இறங்கியது எப்படி? வடமலை சமுத்திரம் தஞ்சாவூராகின மாதிரிதான் இதுவும்…… இதை எதற்கு எழுதினேன். காரணம் சொல்லத் தெரியவில்லை.அடிக்கப்போனேன்.வேண்டாம்.எழுதியாகி விட்டது.

***

நின்ற நிலையில் மார்பு,இடுப்பு பகுதிகள். கவிழ்ந்த நிலையில் மார்பிலுமாக துப்பாக்கியைப் பொருத்திச் சுடுவது பற்றிய ஜேசிஓ ரமேஷ் நாயரின் விளக்க வகுப்புக்குப் பிறகு இடது கண்ணில் தொங்க விடுவதற்காக வட்டத்திரை ஒன்றை தைத்துக் கொண்டேன்.மொட்டை மெத்தை வெய்யிலில் காக்கை,குருவி,அணில்கள்,சில வேளை கள்ளப்பருந்துகளும் கிரிக்கெட் மட்டையின் குறியெல்லைக்குள் வந்தன.பழகுவதற்காக சுடுவதில் பாவமில்லை.ஒவ்வொன்றாகச்சுட்டேன்.

ஒற்றை பல்பு எரியும் கல் குறட்டைக் கடக்க வேண்டி வரும் போது  கிரிக்கெட் மட்டையும் உடன் வந்தது.அபின் கஞ்சா ஏறிட்டுப் பார்த்தார்.மனம் களிப்பில் கூவியது.மட்டைக் கனத்ததால் அதே நீளத்தில் பருங்குச்சியை வைத்துக் கொண்டேன்.கையை விறைப்பாக்கி நடந்து பழகிய பிறகு குச்சியும் இல்லை.

குளிர் என்றில்லை மழையென்றில்லை… எல்லா பருவக்காலங்களிலும் பள்ளிவாயில் தலாக்கிணற்றில் விடிகாலை நான்கு மணிக்கே அபின் கஞ்சாவால்  எப்படி குளிக்க முடிகிறது.? வாப்பா கண்ணைப் பொத்திக் கொண்டு பைத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து மெல்லக் கேட்டேன்.

எனது கேள்விக்குள்ளிருப்பதைப் புரிந்துக் கொண்டவராக “இதுல ஜின் பேய்லாம் ஓன்னுமில்லடா.பெரிய வித்த ஒன்னுமில்ல.அபின் கஞ்சாவும் மனுசந்தான்.இதுலாம் ஒரு பழக்கம்தான்.” என் பக்கம் திரும்பி “நீ பத்து நாளய்க்கி ஒரு தடவ குளிக்கிறதுனால  இதுலாம் பெரிசா தெரியுது.ஏங்கிட்டயும் ஒரு குளியல் கத இக்கிது.கேளூ…”

இரண்டாம் உலகப்போர் காலத்தில்  கொழும்பில் நிலவிய நீர்த்தட்டுப்பாட்டினாலும்  சென்னை அங்கப்பன் தெருவிலிருந்த எங்கள் கட்டிடத்தில் வாடகைக்குத் தங்கியிருந்த கேரளியர்களின் பழக்கவழக்கங்களிலிருந்தும் தனக்கும் இளம் பருவத்திலேயே நேரத்தோடு குளிக்கும் வழமை தொற்றிக் கொண்டதாக சொன்ன வாப்பா தனது கொல்கத்தா குளியல்  நடப்பை விவரித்தார்.

கூதல் காலத்தில் வணிக நிமித்தம் அங்கு சென்றவர் பதினைந்து பாகைக் குளிரில் அதுவும்  தஹஜ்ஜுத் நேரத்தில் குளித்திருக்கிறார்.”அரே கோன்ரே பாகல்… மர்ஜாயேகாத் தூ…” வீட்டு உரிமையாளரின் கூப்பாடு கிளம்பிய சமயம் அவர் தலை துவட்டி முடித்திருந்தார்.

”எரநூறு  வாட்ஸு பல்பு எரியிற துணிச்சல்ல குளிச்சுட்டன். என்னத்ததான் பல்பு பத்துனாலும் உடம்ப நல்ல சூடு வர்ற மாதிரி தேச்ச பொறவுதான் குளிச்சேன். இல்லாட்டி ஹாட்டு நின்டுறுமே.” தொண்டையை செறுமியபடி சிரித்தவர் “அந்த வயசுல ஒன்னும் தெரியல இப்பங் காட்டுது.”

சாஹிப் தைக்கா கந்தூரி மாதம்.ஆழ்வை உஸ்மானின் பாட்டுக் கச்சேரிக்கு போட்டிருந்த இருநூறு வாட்ஸ் பல்பை ஹேப்பி சவுண்ட் சர்வீஸ்காரர் அணைக்கும்போதுதான் அது கண்ணில் பட்டது.குழல் விளக்கைப்போல பல்பின் இழைகளிலிருந்து ஒளி வெட்டென மறைந்து விடவில்லை.நிதானம்.மின்னி அணையும் ஆன்மாவின் கடைசிச் சுடரைப்போல… நிதானிப்பதற்குள் உயரங்களில் கொழுவிக்கொள்ளும்  எழுஞாயிறின் செம்மைத் தீற்றல் போல எங்கோ போய் புகுந்துக் கொள்ளும் ஒரு கணத்தின் சுணக்கம்.

“இப்ப இதுலயிருந்த வெளிச்சம் எங்க போச்சு காக்கா?” சவுண்ட் சர்வீஸ்காரரிடம் கேட்டேன். கச்சேரியின் பெருத்த ஓசை இலயத்தில் தலையை ஆட்டிக் கொண்டிருந்த  அவர் என் உதட்டசைவைக் கண்டு இன்னும் பெரிதாக தலையை ஆட்டத் தொடங்கினார்.வேறு வழியில்லை.தீன் காக்காவிடம் போக வேண்டியதுதான்.அவர்தான் இது மாதிரி விசயங்களுக்கு சரி.

வளைகுடாப்போரில் அமெரிக்கர்கள் பக்தாதில்  போட்ட குண்டுகள் இறை நேசர் முஹ்யித்தீன் அப்துல்காதிரின் தர்காவின் மேல் விழாதக் காரணத்தை தீன் காக்கா இப்படித்தான் சொல்லியிருந்தார்: “ கேட்டியா! மொய்தீன் ஆண்டவங்க தன்ட வலது சுண்டு வெரல ஒசத்தி மிஸய்லய்லாம் ஒரு சுண்டு சுண்டிதான் உட்டாங்க பாத்துக்கோ” தீன் காக்காவின் கைப் பட்டு கொளுக்கியில் கிடந்த தூக்குக் கவிழ்ந்தது அதிலுள்ள புத்துருக்கு நெய் அவர் தலையிலும் உடையிலும் சிந்திய பிறகுதான் தன்னிலை மீண்டார்.

அணையும்  பல்பின் வெளிச்சம் போகுமிடம் குறித்து அவருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.வீட்டுத் திண்ணையில் முதுகைக் காட்டியபடி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவரிடம்  நடப்பைச் சொன்னேன்.கருத்தில்லாமல் என் முகத்தைப் பார்த்தவர் ரொம்ப நேரத்திற்கு ஒன்றுமே சொல்லவில்லை.அவர் மகனிடம்  சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன்.

அறிவியல் வகுப்பெடுக்கும் லூர்து சங்கீதராஜ் சாரிடம் போய்க்கேட்கலாம்தான்.”உறிஞ்சுக்கொழலத்தான் வரயச்சொன்னேன் ஆட்டுப்புடுக்க இல்ல”.சார் வீசியெறிந்த தாள் தரையைத் தொடுவதற்குள் ”ஒம்ம மொகத்தயுந்தான் படமா வரய யாராலயும் முடியாது.”.சேக்கனா ஓட சார் துரத்த.. அது இன்றைக்கு நடந்தது போலிருக்கிறது.

அரசு கிளை நூலகத்திற்குப் போய் கல்கண்டு,குங்குமம்,முத்தாரம் போன்றபருவ இதழ்களில் வரும் அறிவியல் செய்திகளையும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய துணுக்குகளையும் விடாப்பிடியாக வாசித்து வந்தேன்.ஒரு துப்புமில்லை.ஆங்கில அகர முதலிகளிலும் தேடிப்பார்த்தேன்.

புதியதாக வரத் தொடங்கியிருந்த  சிற்றிதழொன்றில் பல்பு உள்ளிட்ட நுகர்வு பொருட்களின் உருவாக்கத்தின் பின்னால் தொழிற்படும் அரசியல் பற்றி விரிவாக எழுதியிருந்தனர்.ஆட்களிருந்ததால் இதழை இடுப்புக்குள் பத்திரப்படுத்த  முடியவில்லை.அங்கேயே அமர்ந்து வாசித்தேன்.

முதலில் உருவாக்கிய பல்பு கிட்டத்தட்ட நூறாண்டுகள் வரை எரிந்ததினால் ஒன்று ஒன்றரை ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட பல்புகளை உருவாக்கத் தொடங்கினார்களாம்.இந்த சூக்குமத்தைக் கண்டுபிடித்த பிறகுதான் முதலாளிகளுக்கு விழிப்புத் தட்டியிருக்கிறது.தாங்கள் உருவாக்கும் பொருட்களின் ஆயுளை முடிந்தளவுக் குறைத்தார்கள்.அது மாதிரியான தொழில் நுட்பங்களையும் பரவலாக்கினார்கள்.அதிலொன்றுதான் காங்கிரீட்.நூறாண்டுகளைத் தாண்டும் கட்டிடங்களின் இடத்தில் முப்பதாண்டுகளைக்கூடத் தாண்டாத காங்கிரீட் கட்டிட முறை. செங்கல் அடித்தளங்களுக்கு மாற்றாக காங்கிரீட் தூண்கள்.பழைய பாணியை மக்கள் ஒதுக்கத்தொடங்கினர். இது மாதிரி உத்திகளை ஃபிரீ மேஷன்  கமுக்க அமைப்பின் மூலம் உலகம் முழுக்க செயல்படுத்துகிறார்கள் என அக்கட்டுரை முடிந்திருந்தது.

எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாந்தாலும் கட்டுரை தந்த பெயர்களுக்கும் சுவையான தகவல்களுக்கும் பின்னால் கொஞ்ச காலம் நடந்தேன். அதில் கிடைத்தவைகளின் பரபரப்பில் நண்பர்களை கொஞ்ச நாளைக்கு கிறங்க வைக்க முடிந்தது.

டங்ஸ்டன் இழைக்குள்மின்சாரம் பாய்வது எல்லாம் சரிதான்.இந்த இரண்டுமில்லாமல் வெளிச்சமில்லையென்றால்?..... மற்ற வெளிச்சங்கள் எப்படி?.வெளிச்சம் எனத் தனியாக ஒன்றில்லையா? தனியாக அப்படி இருக்கத்தானே வேண்டும்?. அப்படி தனியாக இருக்குமென்றால் பல்புக்குள்ளிருக்கும் வெளிச்சம் எங்குதான் போய் தொலைகிறது?...... சுவிட்சைப்போட்டால் உடனே வரவும் செய்கிறதே… அப்போ அது புறப்படுமிடம்? போகுமிடம் தெரிந்தால் புறப்படுமிடமும் தெரிந்து விடும்தானே? விஷயம் எளிதுதான். 1+1 = 2   2-1 = 1   1-1 = 0. எப்படி கணக்குப் போட்டாலும் வேறு வேறு இலக்கங்கள். எண்கள் வெளிச்சங்கள் வகுத்தல் கழித்தல் கூட்டல் கழித்தல் ச்சை….  ராஜ பைத்தியம் நம்பர் ஒன் கிறுக்கு……பல்புக்கும் வெளிச்சத்துக்கும் பல்லி மிட்டாயாவது எவனாவது தருவானா…?

தோட்டத்திற்கு  போய் கிணற்று நீரை இறைத்து தலைக்கு விட்ட சிலிர்ப்பில் சுழல் மட்டுப்பட்டது.

வெளிநாட்டில் வருடகாலங்கள் இருந்து விட்டு ஊர் திரும்பிய றாத்தாவை பார்க்கப் போயிருந்தேன்.தின்பண்டப் பொட்டலங்களை நீட்டியவாறே “தொழில் எப்பிடிப் போவுது?”விசாரித்தாள்.

”மாணிக்கத்த விக்கிறதில்ல இப்ப மாணிக்கங்கள செய்றன்.”

“என்ன புஸ்தவம் போட ஆரம்பிச்ச பொறவு தத்துவமா பொழியுது?”

“ஒன்னுக்கே அசந்தா எப்புடி? இன்னோரு தத்துவத்தயும் சொல்றங் கேளு.”

“வந்த இடத்திற்கே ஒளி திரும்பி விட்டது என்கிறார் ரூமி.”

“ஜின் வாசலாத்து வீட்டு மஞ்ச பல்புட வெளிச்சத்தயும் சேர்த்துதான் ரூமி சொல்றாரு.” மூக்கிலிருந்து சளி முகத்தில் தெறித்தது கூடத் தெரியாமல் சிரித்து உருண்டாள்.

“அந்த பேய்கள இன்னுமாடா மறக்கல.”

                                                                        

சொல் முதலி

 றாத்தா =அக்கா 

வாசலாத்து= வசியம்

காக்கா =அண்ணன்

சில்லா நோய் நீக்கம்,தியானம்  போன்றவற்றிற்காக நினைவிடங்கலில் நாற்பது நாள் தங்கல்

வாப்பா=தந்தை

உம்மா=தாய்

ஹல்க்=குரல்வளை

தஹஜ்ஜுத்= இரவின் மூன்றாம் பகுதி

அரே கோன்ரே பாகல்… மர்ஜாயேகாத் தூ எந்த பைத்தியம்ட அது? நீ செத்து விடுவாய்.

பைத் =பாடல்

-----------------------------------   

பல்பு சிறுகதை யாவரும் இணையதளம்

No comments:

Post a Comment

அனந்தபுரி