Saturday, 7 February 2026

அருஞ்சுனை-கால் நாள் ரிஹ்லா #5

நண்பரும் ஒளிப்படக்கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான சுபுஹான் பீர் முஹம்மது காக்கா வழமைபோல பரபரப்பான விடுமுறைக்காலத்தில் இருந்தார்.வளைகுடாவில் பணி புரியும் சுபுஹான் காக்கா எப்போதும் தனது விடுமுறைகளை குடும்பத்திற்குப் போக நட்புகள் காணுகை,ஒளிப்படம் (Subhan's Photographyஎன பயணங்களை அமைத்துக் கொண்டிருப்பதால் ஆளைப் பிடிப்பது சிரமம்.

சுபுஹான் பீர் முஹம்மது


தற்செயலாக சிக்கியவரிடம் செல்லப்ப ஆசாரியின் கதைகளைக் கேட்டு தலை குலுங்கி ஓய்ந்த ஒரு நேரத்தில் சுனை,புறையூர் கடம்பா போய் வரலாமென்றார்.

வலையொளியார் சாலிஹும் இணைந்துக் கொள்ள ஆறுமுகநேரி,அம்மன்புரம் வழியாக குரும்பூருக்கருகிலுள்ள மேலப்புதுக்குடி சுனைக்குச் சென்றோம்.சுனைக்கு எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு வருகிறேன்ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் திசைகள் சுழன்றிருந்தன.

நான் கடைசியாக வந்து பார்த்தபோது திறந்த வெளி, கரி படிந்த சில அடுப்புக் கூட்டங்கள், அய்யனாருக்கான பீடத்துடன் எப்போதாவது ஆட்கள் தென்படும் இடமாக மட்டுமே சுனை இருந்தது.

ஹிஜ்ரியாண்டு ஜமாத்துல் அவ்வல் மாதம்  பிறை பத்தன்று புறையூரில் நடக்கும் இறை நேசர் சிந்தா மதார் கந்தூரி விழாவிற்காக  குடும்பங்களைக் கூட்டிக் கொண்டு வரும் மக்கள் திரளாலும்  கோடை விடுமுறையின் இளவல்களாலும் சுனை தன்னை அறியும் சமயம்.

ஆல மரத்தின் விழுது சுனையின் தரை தொடுவது தெரியுமளவிற்கு தெளி நீர்.நீச்சலும் ஆழமுமறியாமல் அவ்வபோது சில இறப்புகள் நடந்தாலும் அன்றையக் காலத்தின் விடுபடலுக்கான தலங்களின் பட்டியலின் வரிசையில் ஆத்தூர்,கஸாலி மரைக்காயர் சாலை,ஏரல்,சேதுக்கு வாய்த்தான்,புறையூர் கடம்பாவுடன் மேலப்புதுக்குடி சுனையும் உண்டு.வாசகர்களுக்காக மேலப்புதுக்குடி சுனை என எடுத்து எழுத வேண்டியுள்ளதே தவிரசுனைஎன்ற பெயருக்கப்பால் ஊரையும் பெயரையும்  நாங்கள் அறிந்திருந்ததில்லை.

ஊர்திகளின் பெருக்கம்,திருமணம்/தொழிலுக்காக புலம் பெயரும் சாதி சனங்களின் குலச்சாமி நினைவேக்கம்,சரவணா ஓட்டல் அண்ணாச்சியின் வனத்திருப்பதி கோயில் உருவாக்கம்,சென்னைதிருச்செந்தூர் இடையே நேரடி தொடர்வண்டி போக்குவரத்து எனப் பல்வேறு காரணிகளினால் சுனை இன்றுஅருஞ்சுனைக் காத்த அய்யனார் கோயில்வளாகமாக நாடார் சாதியினரின் பொருட் செலவில் உருவெடுத்திருக்கிறது.

சிறு கடைகள்,மணல் வெளிக் கடைகளுடன் ஈரிருளி கடைகளும் பெருகியிருக்க பல்வேறு ஊர்களிலிருந்து வந்துள்ள பக்தர்கள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கொஞ்சம் பேர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேறு சிலர் வழிபட்டுக் கொண்டுமிருந்தனர்.

பெருங்கண்ணாடித் திரையால் போர்த்தப்பட்டிருந்ததைப் போல சுனை காட்சியளித்துக் கொண்டிருந்தது.சாலிஹும் சுபுஹான் காக்காவும் கோயிலுக்குள்ளும் வெளியுமாக புகுந்து புகுந்து படமெடுக்க சூடமும் எண்ணெயும் கலந்த வாடை ஒவ்வாததினால் ஓரமாகப் போய் அமர்ந்துக் கொண்டேன்.ஒவ்வொரு படமெடுக்கும்போதும் சாலிஹ் அதன் நுட்பங்களை சுபுஹான் காக்காவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.












பொதுவே ஒளிப்படக்கலைஞர்களுடன் பயணிப்பதில் எனக்கு முடி அளவில் ஒவ்வாமையுண்டு.எதைப் பார்த்தாலும் உறுத்தல் ஏற்பட்டு அது கைகளின் வழியாக கேமிராவுக்கும் நீளுகிற அவர்களின் செய்கையைத்தான் சொல்கிறேன்.அப்படியான விலகல்கள் எவ்வளவு பிழையானவை என்பதை எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் நிரூபிக்கும்.ஒரு படைப்பாளிக்கு இன்னொரு படைப்பாளியை புரிந்து ஒத்திசைந்துக் கொள்ள முடியவில்லையென்றால் சராசரி மனிதர்களுக்கு அது கிறுக்கும் வீணுமாகத் தெரிவதில் வியப்பதற்கொன்றுமில்லை.

புறையூர் கடம்பாவுக்குக் கிளம்பினோம்.கூடுதல் ஆட்கள் போகாத தேரி மணல் காட்டுப்பாதையில் தர்கா ஒன்று நின்றிருந்தது.அருகில் ஓடிய வாய்க்காலில் நாலுமாவடி தேவாலயத் துணிகளைத் தனியாளாய் துவைத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

இச்சாலையில் கிட்டத்தட்ட அய்ம்பது வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வொன்றையும் சுபுஹான் காக்கா நினைவு கூர்ந்தார்.

அக்காலக் கட்டங்களில் மகப்பேறுக்காக தாய்மார்களை காயல்பட்டினத்திலிருந்து நாகர்கோவில் காதரீன் பூத் மருத்தவமனை புத்தேரி அல்லது நாசரேத் புனித லூக்கா மருத்தவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள்.

சுபுஹான் காக்காவிற்கு நாசரேத்தில் தம்பி பிறந்தான்.பிறந்த கொஞ்ச நேரத்தில் அவன் இறந்து போக ஊருக்குக் கொண்டு போக ஒரு வாடகை வண்டியும் வர அணியமாக இல்லை.அழுது கொண்டிருந்த தனது தாயாரை ஊர் வரைக்குமாவது அமைதி காக்கச் சொல்லி விட்டு தம்பியின் மய்யித்தை துணியில் பொதிந்த வாப்பா ஒரு டிரக்கர்காரனை அழைத்து வந்து  விட்டார்.வண்டியும் ஊரைப்பார்த்துக் கிளம்பி விட்டது.

நாங்கள் நின்றுக் கொண்டிருக்கும் இதே சாலையில்தான் அந்த டிரக்கரும் வந்திருக்கிறது.என்னதான் இருந்தாலும் பெற்றவளல்லவா?உம்மாவிடமிருந்து ஒரு விம்மல் கிளம்பி அடங்கபொணத்தயா கொண்டு வர்றீங்கஎன்ற ஓட்டுநர் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டார்.” யப்பா நடுக்காட்டுல வண்டிய நிறுத்தாதே’’என சுபுஹான் காக்காவின் வாப்பா எவ்வளவோ கெஞ்சியிருக்கிறார்.அன்று மட்டுமல்ல இப்பகுதி இன்றும் காடுதான்.இப்பகுதியில் காட்டுத்துறையின்காப்புக்காடுஎன்ற அறிவிப்புப் பலகையையும் பார்த்தோம்.

ஒன்றுக்கும் ஓட்டுநர் மசியவில்லை.மனைவி,மகன்,இறந்த மகன் மூன்றையும் ஒரு தரம் உற்றுப் பார்த்தவர் வண்டியின் இருக்கைக்கு அடியில் கிடந்த இரும்புக்கழியை பாய்ந்து எடுத்திருக்கிறார்.”வண்டி போகலன்னா இங்க ரண்டு பொணமாயிரும்என்றவுடன் கிளம்பிய வண்டி ஊர் வந்தவுடன் ஓட்டுநரின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பேசியதற்குக் கூடுதலாகவே பணமும் கொடுத்தனுப்பியுள்ளார் வாப்பா.வாட்டசாட்டமான  தோற்றத்துடன் இரும்புக் கழியும் ஆவேசமுமாய் இன்னொன்றாய் இருந்தார் வாப்பா என்றார்.

அதற்கு கிட்டத்தட்ட இணையான ஒரு நிகழ்வு தான் மதுக்கூர் செல்லுபோது நிகழ்ந்ததாக சொல்லிக்காட்டினார் சுபுஹான் காக்கா.இறந்த தன் பிள்ளையை துணியில் சுற்றியவாறு கையில் ஏந்திய இளம்பெண்ணொருத்தியுடன் பாட்டியும் அரசுப்பேருந்தில் ஏறியிருக்கின்றனர்.பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வைதீகப்பிராமணொருவர் இளம் தாயின் கண்ணீரைக் கண்டவுடன்பொணத்த எப்படிக் கொண்டு போகலாம்?எனக் கூச்சலிட்டு ஆட்சேபித்துள்ளார். அச்சமயம் அருகில் அமர்ந்திருந்த தனக்கு எதுவும் தோன்றவில்லை.நேராக அவரிடம் போய்அவங்க காசில்லாததினாலத்தான் பஸ்ஸுல போறாங்க.ஒன்னு  நீங்க அமைதியா இருங்க.அப்படி இல்லன்னா ஒங்களுக்குப் பிடிக்காட்டி  வண்டிய விட்டு எறங்கிப் போயிருங்கஎன்றவுடன் அவர் இன்னும் குரலெடுத்திருக்கிறார். அடுத்த சொல்இனி கத்துனா அடிப்பேன்.” ஆள் கடகடவென பேருந்தை விட்டு  இறங்கிப் போனாராம்.

ஊருக்கு சுபுஹான் காக்காவை ஒளிப்படக்கலைஞராக மட்டுமே தெரியும்.ஆனால் அவருடன் பயணிக்கும்போதுதான் செல்லப்பாசாரி கதைகள், பகடிகளுடன் எத்தனை விதமான கதைகளை அவரின் சன்னமான குரலிலிருந்துக் கேட்டுக் கொள்ளவியலும்.நாற்பத்தைந்து வருட வளைகுடா வாழ்க்கை.முன்று பெண் பிள்ளைகளை மண முடித்து வைத்து இடுப்பை இப்போதுதான் நிமிர்த்தியிருக்கிறார்.பெரிதாக நிலைத்த வருமானம் என அவரால் உண்டு பண்ண இயலவில்லை.ஆனால் அதைக் குறித்து  அவருக்கு ஆவலாதியுமில்லை.

இலங்கையின் மூத்த படைப்பாளியும் அணுக்க ஆன்மாவுமான எஸ்.எல்.எம். ஹனீஃபா மாமாவின் கதையும் இசையும் சேர்ந்த  கலையிரவுகளை இங்கேயும் போடுவோம் காக்கா என்றேன்.உடலுக்கும் உயிருக்கும் ஒத்திசைவு இருப்பதற்குள் இதை நடத்திப்பார்த்து விட வேண்டும் என்பதையும் அவரிடம் சொல்லும்போது  “பாப்போம்என்றார்.இதையும் சன்னக்குரலில்தான் சொன்னார்.

கையோடு கொண்டு வந்திருந்த பூச்சிப்படவி(டிரோன் கேமிரா)யைப் பறக்க விட்டு பரிசோதித்துப் பார்த்தார்.சில சமயங்களில் அது நம் கண்ணுக்கு  சம உயரத்தில் நின்று சண்டைக்குக் கூப்பிட்டது. வீறாப்பு இரைச்சலுடன் உயரம் ஏறும் போது அதை பலத்து வீசும் காற்று கொண்டு போய் விடுமோ என்ற சிறு பதட்டமிருந்தது.கதிரவன் இறங்கிக் கொண்டிருந்ததால் தர்கா வளாகத்தில் அஸர் தொழுதோம். அருகிலுள்ள கூடத்தில் இரு வெற்று மதுக் குப்பிகள் நின்றும் இன்னுமிரண்டு கிடந்தும் காட்சியளித்தன.ஏகாந்த வெளிகளை மதுவால் களியாடுவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியமானதொன்று.

புறையூர் கடம்பாவோடு உலாவை நிறைவு செய்வது எனத் தீர்மானித்தோம். கடம்பாக் கால்வாய் நடுவே மூன்று கொக்குகள் தங்களுக்கான உலகில் இருந்தன.எங்களின் நடமாட்டத்தை அவை பொருட்படுத்தவேயில்லை.படமெடுக்க முனையும்போது அவற்றில் இரண்டு பறந்து போக ஒன்று மட்டும் எஞ்சியது.கிட்டியதைப் படவியால் சுருட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பழைமையான நீர் நிலைகளில் புறையூர் கடம்பா குளமும் ஒன்று.திருவைகுண்டம் அணையை விடப் பழைமையானது என்கிறார்கள். கடலில் பாதி கடம்பா என்ற சொல் சரிதான்.அதன் அகன்ற பரப்பில் கதிரவனும் கொக்குகளும் இருப்புகளாகவே இல்லை.காற்றுக்கு மட்டுமே வசப்படும் அதன் எல்லைகளுடன் அவ்விடத்தின் நிறை மௌனமும் அங்கேயே இருக்கச் சொல்லியது.இரவு விரைந்ததால் ஆறுதலான காலளைதல் சாத்தியப்படவில்லை.

என் மூத்த மகள் சிறுமியாக இருக்கும்போது குடும்பத்துடன் வந்து குளித்ததுதான்.அந்தக் குளியலுக்கும் இப்போதைய வரவுக்குமிடையில் கால் நூற்றாண்டு திரண்டு நிற்கிறது.கால்வாயின் பக்கவாட்டுப்படிகளில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன்.மதகுக் கண்களிலிருந்து இசையாகிப் படர்ந்தது தாமிரபரணியின் குளத்து வடிவம்.காலனியாதிக்கக் காலத்தில் கட்டப்பட்ட மதகின் சுவற்றில் 1897 எனஆண்டு பொறித்திருந்ததாக நினைவு. கட்டமைப்பு இன்னமும் வலுவாகத்தான் நிற்கிறது.

 கடம்பாவில் விழுந்துக் கிடந்த கதிரோனின் எதிரொளியை செம்பனை உருவில் படம் பிடித்த காக்கா என்னையும் சாலிஹையும் நிழலாக்கி படமெடுத்தார்.

அடுத்து இங்கு வரும்போது குளிக்க மட்டுமே  வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்குளிப்பதுடன் வருடங்களின் கனத்த சுவற்றை கரைத்தழிக்கவும்தான்.



.




அடுத்து இங்கு வரும்போது குளிக்க மட்டுமே  வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்குளிப்பதுடன் வருடங்களின் கனத்த சுவற்றை கரைத்தழிக்கவும்தான்.


ஒளிப்படங்கள்: சுபுஹான் பீர் முஹம்மது(Subhan's Photography)






No comments:

Post a Comment