பேருவளை மருதானைக்கரையிலிருந்து இந்தியப்பெருங்கடலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குட்டித் தீவு.
காண்பதற்கு தென்னந்தீவாக காட்சியளிக்கும் பேருவளைத் தீவு. காலனியாதிக்கவாதிகளால்
பர்பரின் தீவு என்றும் வரலாற்றின் ஏடுகளில்
வெல்மடுவா,காக்கைத்தீவு,என்றும் அழைக்கப்படும் நிலத்திட்டு. உள்ளூர்க்காரர்கள்
கலங்கரை விளக்கம். எனும் பெயரைக் கொண்டே இத்தீவை
அழைக்கிறார்கள்.
புத்தகம்/மொழிபெயர்ப்பு
என உவைஸ் தேடலின் திசையில் போக மீதமுள்ளவர்கள் படகுக்காரர்களிடம் பேரம் பேசி அஸருக்குப் பிறகு கிளம்பினோம்.
உலைச்சட்டி நீராகி இந்தியப் பெருங்கடல் திளைத்துக் கொண்டிருந்தது. நிலமாக மட்டுமிருந்திருந்தால் இரட்டை மூச்சில் ஓடி எட்ட வேண்டிய தொலைவு. அந்த எளிய தாண்டலை ஆழமேறிய கடல் தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தது.அண்மைக்குள் உறையும் ஒரு தொலைவுதான் எல்லாவற்றையும் அண்மையாக்குகிறது.
சோற்றுத்தட்டில்
ஊன்றப்பட்டது போலிருந்த தென்னை மரங்களடர்ந்த அந்த திட்டில் போய்க் காலூன்றினோம். திரும்ப
வேண்டும் எனத் தோன்றும்போது செல்பேசியில் அழையுங்கள் என படகுக்காரர் தனது எண்ணை தந்து
விட்டு கரையேகினார். தென்னை மரங்களுடன் கலங்கரை விளக்கமும், கைவிடப்பட்ட கட்டிடமும்
கொஞ்சம் புல் பற்றைகள், பெயர் விளங்கா செடி கொடிகளுமாக உள்ள தீவு.
தீவின் கண்ணுக்கெதிரே கரை உள்ளதால் கரையின் சலனங்களின் தெறிப்பில் தீவின் தனிமை தன்
தனிமையை இழந்திருந்தது. கடலின் ஆழமும் அலையின் அலசலும் அந்த தனிமை இழப்பை ஒரு தோற்றப்பிழை
என்பதாக உணர்த்தின.
மர வேர்கள்
மூட்டுகளாகவும் விரல் நரம்புகளாகவும் ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருந்தன.அப்படியான ஓரிடத்தில்
அமர்ந்தோம். கொஞ்சம் சுற்றிப்பார்த்து காலாறினோம். இது போல ஒரு கூட்டம் தீவுகளை தன்னுள் வைத்திருக்கும் இலட்சத்தீவு
நினைவிற்கு வந்தது. அப்பவளத்தீவுகளின் விருப்ப
மனிதன் இஸ்மத் ஹுஸைனை நினைவு கொண்டது மனம் .தீவுக்கு தீவுக்காரன்தான் சாட்சி நிற்கவியலும்.
அவர் இப்பயணத்தில் இணையவியலாமல் போனதின் சங்கடங்களை நானும் நவ்ஷாதும் எங்களுக்குள்
சொல்லிக் கொண்டோம்.
சரியாக அமரும்
விதத்தில் ஓரிடத்தைத் தேடினோம். வரிசையாக நின்ற மரங்களுக்கப்பால் கொஞ்சம் பாறைத்திட்டுக்கள்
இருந்தன. அவற்றை கடந்து அமர்ந்தோம், சில அடிகள் தொலைவில் பள்ளம். கடலரிப்பை தடுப்பதற்காக
கொட்டப்பட்டிருந்த பாறை இடுக்குகளுக்குள் கடலலையொன்று நுழைந்து கொந்தளித்து தணிவதற்குள்
மற்றொரு அலை. அது முடிவதற்குள் இன்னொன்று. இடையில் சிறு சிறு ஓய்வு. யாருக்காகவுமில்லாமல்
தன்னில் தானாகும் களி.
கொஞ்சம் கொஞ்சம்
பேச்சு என நடந்து கொண்டிருந்த அந்த அமர்வு மழையின் வரவால் நிறைந்தது. மழையினால் இருப்பு
தடைப்பட்டாலும் மழையிலிருந்து தப்புவதற்கு
இத்தீவில் வழியில்லை எனும் ஞானம் உறைக்கவே அதை திறந்த வெளியில் சந்தித்தே தீருவது எனத்
தீர்மானித்தோம்.
ஆளாளுக்கு
அவரவர்களுக்கு தெரிந்ததைப் பாடினோம். நான் நாகூர் ஹனீஃபாவிலிருந்து தொடங்க அப்துல்கறீம்
மலையாள சூஃபிப்பாடல்களைப்பாட மழை உரத்தது.எல்லோரினதும் இருப்பு கரைந்து சிறுத்திருந்தோம்.
சிராஜ் மஷ்ஹூர் இதை தன் கவிதைகளுக்குள் செலுத்தப்போவதாக சொல்லி அதன் ஓரிரண்டு வரிகளையும் சொல்லிக் காட்டினார். இப்பதிவை எழுதும் வரை அவர்
இக்கவிதைக்கு உருக் கொடுக்கவில்லை.
அலைகளின்
அலைவில் கரை மீண்டவுடன் அப்துல்கறீம் ஈரம் தோய்ந்த கடற் மணலில் தன் விரல்களினால் எழுத்தணிந்தார்.இப்பயணத்திற்கு
விரலினூடாக எழுத்தின் சாட்சி. ஒரு வழியாக மழைப்பொழிவிற்கிடையே
தேநீரும் சிறுகடியுமாக கூடடைந்தோம்.
மறுநாள் காலையில்
கொழும்புக்கு புறப்பாடு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு முதலில் சென்றோம்.
வரலாற்றார்வலரும் இலங்கை வானொலியின் ஒலிபரபாளருமான ஃபஸான் நவாஸ் வரவேற்றார்.
எனக்கு இது
இரண்டாவது வருகை. 2010 ஆம் ஆண்டு நானும் நண்பர்
எஸ்.கே.ஸாலிஹும் இலங்கை வானொலிக்காக மட்டுமே இலங்கைப் பயணம் வந்திருந்தோம்.
மின் ஊடகத்தில்
வானொலி மட்டும் தனியாட்சி செய்து கொண்டிருந்தக் காலகட்டம்.காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின்
கடல் தீர மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் வாழ்வியலுக்குள் முஸ்லிம் சேவை வழியாகவும்
மொத்தத்தில் எல்லோரினது களியுலக தேவைகளை வர்த்தக சேவை வாயிலாகவும் நிறைவேற்றி வந்தது
இலங்கை வானொலிதான்.
தமிழகத்திலும்
புதுச்சேரியிலுமாக அகில இந்திய வானொலியின் ஆறு நிலையங்கள். அதிலும் சென்னை நிலையத்திற்கு
நடுவணலை,சிற்றலை,பண்பலை என ஐந்து அலைவரிசைகள் இருந்தும் தமிழகம் மட்டுமல்ல கேரளத்து
நேயர்களையும் கவர்ந்தது இலங்கை வானொலிதான். கேரளத்து அகில இந்திய வானொலியின் மூத்த
நேயர்கள் இதை இன்றளவும் நினைவுகூர்கிறார்கள்.
அகில இந்திய
வானொலி அதிலும் குறிப்பாக அதன் தமிழகத்து நிலையங்களில் பிராமண/ஹிந்து பண்பாடுகளுக்குத்
தான் நூறு விகித நிகழ்ச்சிகள்.மத சிறுபான்மையினர் என்ற ஒரு மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள்
என்ற நினைவு அவர்களுக்கு எப்போதும் வந்ததில்லை.
தற்கால மின்னணு
ஊடகங்களில் இவ்வளவு போட்டிகளுக்குப் பிறகும் மத,சாதி காழ்ப்புகள்,தன் முனைப்பு, பதவியுர்வு
போட்டி பொறாமை வழக்குகளுக்கு முன்னுரிமையளித்து தமிழகத்து அகில இந்திய வானொலி நிலையத்தார்
பொது ஒலிபரப்புத்துறையை சீரழித்து விட்டனர்.
1983 இல்
தொடங்கிய இலங்கை இன முறுகலினால் தமிழகத்திற்கான இலங்கை வானொலியின் ஒலிபரப்பு முடங்கிப்
போயிற்று.பழைய வானொலிக் கேட்பு தொடர்ச்சியை மீட்கும் விதமாக இலங்கை வானொலி நிலைய உயர்
அலுவலர்களுடன் பேசுவதற்காகத்தான் 2010 பயணத்தை மேற்கொண்டிருந்தோம்.
ரிஹ்லா சரந்தீப்
பயணத்தில் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு வானொலி தொடர்பான விடயங்களில் பெரிதாக ஆர்வமில்லை.எங்களது
பயணக் குழுவில் அய்ம்பது வயதைத் தொட்டவர் என அப்துல் மஜீத் நத்வியும் அய்ம்பதைக் கடந்தவன்
என்ற பட்டியலில் நானும்தான். மற்றவர்களெல்லாம் நாற்பது,முப்பதுகளின் இளைஞர்கள்.அவர்களின்
இளமைகளில் வானொலியை தள்ளி நிறுத்தும் வகையில் இந்திய வானில் தொலைக்காட்சிகளின் வருகை
பெருகத் தொடங்கிய காலம்.
தான் தனியரசனாக
நின்றொளிர்ந்த வானொலியின் தேவையும் அருமையும் அவர்களுக்கு பெரிதாகத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.இரவில்தான் நிலவு மணக்கும். பகலில் அல்லவே.
இலங்கை வானொலிக்கான
எனது முதல் வரவின் போது இங்கு ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சி செய்தோம். காலம் முழுக்க
வானொலிக் கேட்போனாக இருந்து முதன்முதலாக வானொலியில் பேசுவோனாக மாறிய இனிய தருணம்.நான்
முதன் முதலாக சென்று பார்த்த வானொலி நிலையம் என்பது சென்னை நிலையம்தான். ஒரு கோரிக்கைக்காக
சென்று உடனே திரும்பி விட்டோம். ஆனால் இலங்கை வானொலியில் நான் உணர்ந்த அருகமையும் நெருக்கமும்
எனக்கு சென்னையிலும் தமிழகத்தின் மற்ற நிலையங்களிலும் ஏற்படவில்லை.
நிலையத்தின்
தாழ்வாரங்களில் இலங்கையின் முன்னோடி ஒலிபரப்பாளர்களின்
படங்களை மாட்டியிருந்தனர். அந்த வரிசையில் கே.எஸ்.இராஜாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது.
தமிழக இலங்கை வானொலி நேயர்களின் மனங்கவர்ந்த அறிவிப்பாளர்கள் இருவர்தான். ஒன்று பி.ஹெச்.அப்துல்ஹமீது.
இன்னொருவர் காலஞ்சென்ற கே.எஸ்.இராஜா.
இலங்கை வானொலியின்
மின்னல் வேக அறிவிப்பாளர் எனப் பெயரெடுத்த கே.எஸ்.இராஜா, அந்நாட்டின் உள்நாட்டுப் போரினால்
கொன்று தின்னப்பட்டவர்.அந்த படத்தைப்பார்த்தவுடன் அவரது துள்ளும் குரலும் அகால இறப்பும்
கைகோர்த்துக் கொண்டு நினைவுகளை கனமாக்குகின்றன.
பி.ஹெச்.அப்துல்
ஹமீதின் படமில்லையே என்ற கேள்விக்கு காலஞ்சென்றவர்களின் படங்கள் மட்டுமே இங்கு மாட்டப்படும்
என்ற மறுமொழி கிடைத்தது. காலஞ்சென்ற ஒலிபரப்பாளர்களில் சிங்கள,தமிழ் ஒலிபரப்பாளர்களின்
படங்கள் மட்டுமே மாட்டப்பட்டிருந்தன. பி.ஹெச்.அப்துல் ஹமீதுக்கப்பால் ஒரு முஸ்லிம்
முன்னோடி ஒலிபரப்பாளர் கூட இல்லையா என உடன் வந்த இலங்கை நண்பரிடம் கேட்டேன். கசந்து
புன்னகைத்தார்.
கழித்துக்
கட்டப்பட்ட ஒலிபரப்புக் கருவிகளை பட வரிசைக்கப்பால் தொடர் வரிசையாக நிறுத்தியிருந்தார்கள்.
பருத்த உடல் வாகுடன் ஒலி உறைந்து பல்வகையான மானிகளுடன் கடந்த காலத்திலிருந்து அவைகள்
நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன.குஞ்சு அகன்ற கூடுகள். தங்களிலிருந்து நழுவிய குரல்களை
இப்பொறிகள் நினைவிலிறுத்திக் கொண்டதைப் போல அக்குரல்களும் தங்களின் தாவளத்தை மறக்காதிருக்குமா?
தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மூன்றுக்கொன்று உயர அகலத்தில் இழுவைப்பேழையின் அளவிற்கு குறை கடத்தி (செமி கண்டக்டர்) ஒலிபரப்பிகள் வந்த பிறகு இடம் அடைக்கும் உயர அகல ஒலிபரப்பிகள் விடை பெற்றுக் கொண்டன. அவைகளை பழைய இரும்பின் எடைக்கு போட்டு விடாமல் நினைவின் கூறாக காட்சிப்படுத்தியிருப்பது நல்ல விடயம்.
தந்தித் தொழில்நுட்பம்
நம்மிடமிருந்து விடைபெற்று விட்டாலும் வானொலி இன்றும் பொருத்தப்பாடுடையதாகவே திகழ்கிறது.இது
பல பேரிடர்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு மட்டுமே வாய்த்த பேச்சையும் எழுத்தையும்
மின் துடிப்புக்களாக்கி சுமந்து சென்ற அருவ தூதர்களான தந்தி,வானொலி/ளி போன்றவைகளுக்கென
அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.
மேலை நாடுகளிலும்
இந்தியாவை விட சிறிய நாடுகளான மலேஷியா,தாய்லாந்திலும் இத்தகைய அருங்காட்சியகங்கள் இருக்கின்றனவாம்.
பெங்களுருவில்
தனியார் ஒருவர் வைத்திருக்கும் ‘சிற்றலை வானொலி அருங்காட்சியகம்’ போக தமிழகத்திலும்
கூடுதலாக அறியப்படாத அங்கொன்றும் இங்கொன்றுமாக வானொலி அருங்காட்சியகர்கள் இருப்பதாக
வானொலி மனிதரும் நண்பருமான பேராசிரியர் தங்க
ஜெய் சக்தி வேல் தெரிவித்தார்.
பழைய ஒலிபரப்பிகளைத்
தொட்டுத் தீண்டி உரையாடிக் கொண்டிருக்கும்போது கே.ஜெயகிருஷ்ணா என்ற எழுபதுகளில் இருக்கும் மனிதர்
தென்பட்டார்.
![]() |
இடமிருந்து ஐந்தாவது கே.ஜெயகிருஷ்ணா |
‘பொங்கும்
பூம்புனல்’ நிகழ்ச்சி பற்றி 1970களில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை இரண்டைக் கேட்டவர்களுக்குத்
தெரிந்திருக்கும். காலை ஏழே கால் மணிக்கு ஒலிபரப்பாகும் நேயர் விருப்பப் பாடல்கள்.
எனது உம்மா
வீடு என்பது இரட்டை வீடுகளைக் கொண்டது. வாப்பா இருக்கும் வீட்டில் பிலிப்ஸ் குமிழ்
வானொலி இருக்கும். அதிலிருந்து வடமிழுத்து நாங்கள் படுத்திருக்கும் வீட்டில் ஒலிபெருக்கியில்
நிகழ்ச்சிகள் அஞ்சலாகும். காலை ஏழு மணிக்கு ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டு பீறிடும்
நீருற்றின் தாரகைகளைப்போல பெருகும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி. அதன் தலைப்பிசையோடு
தொடரும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பில்தான் பத்து வயதிலிருந்த நான் பள்ளியெழுவது.
அந்தக்குரலின்
உரிமையாளர்தான் கே.ஜெயகிருஷ்ணா..அய்ம்பது வருடங்களுக்குப் பிறகு அக்குரல் புறப்படுமிடத்தை
முதன்முறையாக பார்க்கிறேன்.மணியோசைக்கும் யானைக்குமிடையே அரை நூற்றாண்டு இடைவெளி. தமிழ்ச்சேவையின்
பணிப்பாளராகப் பணியாற்றி நிறைந்த பின்னரும் வானொலியை விட மனமில்லாமல் கே.ஜெயகிருஷ்ணா
இன்னமும் இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
முஸ்லிம்
நிகழ்ச்சி,ஃபுர்கான் ஃபீ இஃப்திகார், மயில் வாஹனம் சர்வானந்தா, அய்ம்பதாண்டுகளாக கதை
சொல்லியாகவே வாழ்ந்து மறைந்த இலங்கை வானொலியின் சிறார் கதை புகழ் மாஸ்டர் சிவலிங்கம்,அறிவுக்களஞ்சியம்,நாடகம்,
என எனதும் என் வயதையொத்த சிறார்களின் குழந்தைமையை நிரப்பிய ஒலிக்கொடை.
இலங்கை வானொலி
தமிழ்ச்செய்தி பிரிவின் பணிப்பாளரும் உள்ளூர் வரலாற்றார்வலருமான ஃபஸான் நவாஸ், தென்றல்
எஃப் எம் தமிழ் ஒலிபரப்பின் பணிப்பாளரான அக்கரைப்பற்றைச்
சேர்ந்த வழக்கறிஞர் ஏ.எம்.தாஜ் ஆகியோர் முஸ்லிம் சேவையின் பழங்கூறுகள் பலவற்றை விளக்கினர்.
![]() |
ஏ.எம்.தாஜ் |
முன்னர் இலங்கை வானொலியில் நேரத்தை அறிவிக்கும் முன்னர் இரட்டை மணியோசையொன்று ஒலித்திருந்ததை அதன் நேயர்கள் அறிந்திருப்பார்கள்.கணினியின் வரவிற்குப் பிறகும் மணியோசையெழுப்பும் இரண்டு இரும்புத் துண்டங்களை வைத்திருப்பதோடு அதை இப்பொழுதும் அவ்வப்போது பயன்படுத்தியும் வருகின்றனர்.
இலங்கையில் வானொலிக்கான பவிசுஅந்நாட்டில் இன்னும் எஞ்சியிருந்தாலும் நிலையத்தின் பராமரிப்பில் போதாமை தென்படுகிறது.நாடு பொருளாதார வலுவிழந்திருப்பது தலையாயக் காரணமாக இருக்கலாம்.
தொடர்புடைய பதிவுகள்
ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 1
ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி - 2
ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி - 3
ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 4
No comments:
Post a Comment