Sunday, 1 June 2025

உருளோஸ் மிஞ்சினால்.....

 நின்று போன கைக்கடிகையை செப்பனிட்டு வாங்கிய போது நானூற்றிருபது ரூபாய்கள் செலவு. தலையாய உதிரி உறுப்பான மூவ்மெண்ட் பழுதாகி விட்டது. மூவ்மெண்ட்தான் கைக்கடிகையின் இதயம். போலியைத் தவிர்த்து தரமான இதயத்தையே போட்டுள்ளேன் என கைக்கடிகையை  என்னிடம்  நீட்டினார் வினைஞர். வாங்கிப்பார்க்கும்போது பன்னிரண்டாம் இலக்கத்தின் வலது பக்கமுள்ள சில நொடிக் கோடுகள் இறந்த காலத்திற்குள் கரைந்து விட்டிருந்தன.  

என் மகள் திருமணத்தின் போது  எனது மூன்று மக்களும் பரிசளித்த  ஊதா நிறங்கொண்ட அகன்ற முகப்புள்ள டைட்டன் கைக்கடிகை.  ஆழ்கடலும் வானும் சிறு சதுரமாக என் கை மேல்தான் என நினைக்க வைத்துக் கொண்டிருந்த அணி மணி. சப்ர் செய்து வாங்கிக் கொண்டேன்.

செப்பனிட்ட பிறகும் மூன்று முறைகளும் நிற்பதும் ஓடுவதுமாக விளையாட்டுக் காட்டவும் ஒவ்வொரு தடவையும் வினைஞரிடம் செல்லவும் அவரும் சலிக்காமல் சரியாக்கியதாகச் சொல்லித்தரவுமான விளையாட்டு மூன்றாம் தடவையோடு நின்று விட்டது. அவர் தந்தது தரமான உதிரி உறுப்பில்லை. சங்கதி போலி. வாடிக்கையாளர் ஒரு கட்டத்தில் வந்து வந்து  சலித்து இனிமேல் வரமாட்டார் என்ற துணிவில்தான் இந்த விளையாட்டை விளையாடுவார்கள் போலும்.

புதியதொன்று வாங்க வேண்டுமென்றால் துட்டை எண்ணி வைக்க வேண்டுமே என்ற அயர்வில் இன்னொரு வினைஞரிடம் சென்றேன். அவர் அதைக் கழற்றிப்பார்த்து விட்டு துடைத்து திரும்ப தரும்போது பன்னிரண்டாம் இலக்கத்தின் இடப்பக்கமுள்ள சில நொடிக்கோடுகள் தங்களின் காணாமல் போன சகோதரனைத் தேடிப்போயிருந்தன. முன்னூறு ரூபாய்கள் தந்தால் நான் தரமான உண்மையான மூவ்மெண்டைப் போட்டுதருகிறேன் என சொல்ல நான் மிதிவண்டியைஎடுத்து எங்கும் நிறுத்தாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

பார்க்கும் போதெல்லாம் பழுதடைந்த வானம் பற்றிய குறைபாடு வந்து வந்து போகவும் புதியது வாங்குவது என தீர்மானமாகியது.சூழலியலுக்கு கேடில்லாத மின் கலன்(குவார்ட்ஸ்) அற்ற தானியங்கி அல்லது சுருள் விசை கடிகைகளைத் தேரலாம் என  டைட்டன் உள்ளிட்ட தரமான நிறுவனங்களின் விலைப்பட்டியலை மேய்ந்தால் எல்லாம் ஏழாயிரம் ரூபாய்களுக்கு மேல்தான்.அமேசானில் தேடினால் எனது கட்டுப்படி விலைக்குள் காட்டுகிறது, ஆனால் தரத்துக்கு உத்திரவாதமில்லை.

வெளிநாட்டில் கேட்ட போது விலை குறைவுதான். ஆனாலும் எனது சல்லி வரம்பிற்குள் அது இல்லை. எனவே குவார்ட்ஸைத் தேடுவோம் என உள்நாட்டு ஹெச் எம் டி கைக்கடிகைகளை முயன்றேன்.அதைத் தேர்வதற்குக் காரணம் இத்தனை நாள் டைட்டனைக் கட்டியாகி விட்டது. ஹெச் எம் டி பொதுத்துறை நிறுவனம். அடுத்ததாக அதன் கைக்கடிகைகள் கல்லு போல கிடக்கும் என சிறு வயதில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலொன்றை வாங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் நாட்டம். ஒரு வழியாக என் உற்றார் ஒருவர் எனக்கு அதை வாங்கி பரிசளித்தார். சித்தாக்காக கறுத்த முகப்புடன் பொருளும் வீடடைந்து விட்டது. கைப்பட்டி மட்டும் கொஞ்சம் நீளம். வெட்டினால் அளவு சரி.

வானொலியைப்போல கடிகைகளோடு எனக்கு விருப்பம் கூடுதல். எனது ஆறு பத்தாண்டுகளின் வாழ்க்கையில் இது அய்ந்தாவது கைக்கடிகை. ஒன்பதாம் வகுப்பு பயிலும்போது வகுப்பு நண்பன் ஷாஹுல் ஹமீது நைலான் பட்டியுள்ள கைக்கடிகையை அணிந்து வருவான். இரவல் வாங்கிப் போட்டுக் கொள்வேன். ஆங்கிலம் எடுக்கும் ‘ஆன மண்டயா’ அக்பர் சார் வகுப்பு வரும் போது மட்டும் எனக்கு அதை அவன் தர மாட்டான். காரணம் அவர் வகுப்பு எப்போது முடியும் என்கிற கணக்கைப் பார்க்க வேண்டும் என்பான்.

ஒரு வழியாக என் மூத்த காக்கா சவூதியிலிருந்து வாங்கி வந்த மஞ்சள் நிற Q&Q கடிகை வந்து சேர்ந்தது.நீண்ட நாட்கள் அதன் மேல் உயர்ந்த திரவிய வாசனை வீசிக் கொண்டிருந்தது.தேடிக்கிடைத்தது என்பதால் சட்டைப்பையிலிருந்து யாரும் பார்க்காத படிக்கு அதன் கண்ணாடி முகத்தை பஞ்சு துணிக்கை வைத்து துடைப்பேன். நெட்டை ஜாஃபர் அதை எல்லோரிடமும் சொல்லி விட்டான்.

அறிவியல் தேர்வில் நான் பார்த்து எழுதியதை சொல்லிக் கொடுத்த தகர டப்பா ஜாஹிருக்கும் எனக்கும் சண்டை. அவன் என் கைக்கடிகையை சுவற்றில் மோதி உடைப்பதிலேயே குறியாக இருந்தான். சதுரங்கொடுத்து முட்டியதால் கடிகை தப்பியது.. இதுதான் என் முதல் கடிகை.இது என்னை விட்டு எப்படி நீங்கியது என்பது நினைவிலில்லை.

அதிலிருந்து நான்ககைந்து  வருடங்கள் கழித்து நான் முதன் முதலாக சம்பாதித்து வாங்கியது வெள்ளை நிற முகப்புள்ள டைட்டன் கைக்கடிகை.கோழிக்கோடு நகரத்தில் அய்ந்நூறு ரூபாய்கள் விலையில் வாங்கினேன். 1993ஆம் ஆண்டு என நினைவு. அதுவும் நான் பணியாற்றிய இடத்தில் நேரந்தவறாமையை வாழ்க்கையாக ஆக்கியிருந்ததால் வாங்க வேண்டிய கட்டாயம். அதற்காக வாங்கிய கடனை ஐந்து மாத சம்பளத்தில் கழித்துக் கடன் தீர்ந்தது.

அது ஏழு வருடங்கள் உழைத்திருக்கும் என நினைக்கிறேன். அது பழுதானவுடன் எங்கள் வீட்டில் பணி புரிந்திருந்த வன்னிய முதியவரொருவருக்கு கொடுத்தேன். அதை அவர் பழுது நீக்கி பவிசாக சில வருடங்கள் கட்டி நடந்தார். அவர் வருவதற்கு முன்னர் கையில் சுண்ணாம்பை உருட்டி ஒட்டி வைத்த இடது மணிக்கட்டுதான் முதலில் வரும்.

அதன் பிறகு சென்னையில்  பரிந்த ஊதா நிறத்தில் டைட்டன் தான் வாங்கினேன்.விலை மறந்து விட்டது. இதுதான் என்னுடன் நீண்ட வருடங்கள் மாரடித்த கடிகை.கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள்.அதையும் நானாக கைவிடவில்லை. என் வீட்டு முதல் சீர் என்பதால் மக்களின் கட்டாயத்தின் பேரில் இப்பதிவின் முதலில் கண்ட கைக்கடிகையை அவர்கள் வாங்கித் தந்தார்கள். எனக்காக இணையத்தில் வாங்கப்பட்ட முதல் பொருள்.

இது மகளின் திருமண நினைவுக் கடிகை என்பதால் கைவிட மனதில்லை. இப்போதைக்கு ஓடுகிறது.அவ்வப்போது நின்று மீண்டும் ஓடி வாழ்வின் நித்திய அநித்தியத்தை உணர்த்தும் பொறி. ஓடினாலும் நின்றாலும் கூடவே இருக்கட்டும்.

புதிய கைக்கடிகையுடன் இதையும் வலது இடது கைகளில் கட்ட வேண்டியதுதான்.இதில் மூன்றாவது மனைவி ஒருத்தி உள்ளாள். குவார்ட்ஸ் பைக்கடிகை. புதுதில்லி காந்தி ஸ்மிருதி(கோட்சே காந்தியைக் கொன்ற இடம்)இல் உள்ள விற்பனையகத்தில் வாங்கியது.காந்தியின் அரசியலோடு எனக்கு முரண்கள் உண்டெனினும் அவரிடம் எனக்கு பிடித்தவை இராட்டையும் பைக்கடிகையும்.

வலது இடது கரங்கள் முன்பதிவாகி விட்டதால் இந்த பைக்கடிகையை காலை மாலை உடற்பயிற்சி வேளைகளில் கழுத்திலும் பையிலும் தரையிலுமாக வைத்து நேரம் பார்க்கிறேன்.



உருளோஸ் மிஞ்சினால்  கழுத்திலோ காதிலோ இடுப்பிலோ தொங்க விடுங்கள்.

(உருளோஸ் (HOROLOGE)  --  கடிகைக்கான டச்சு மொழிச்சொல். இலங்கையில் இன்னமும் பயன்படுத்தப்படுகிறது.)



No comments:

Post a Comment