Wednesday, 25 September 2024

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 1

 இலங்கையில்  நான் மாணிக்க வணிகம் புரிந்து கொண்டிருந்த காலமது.  அப்படியான ஒரு பயணத்தில் என் உம்மாவிடமிருந்து கேள்வியொன்று எழுந்தது. விடையையும் கையுடன் கொண்டு வந்த கேள்வியது.

“நீங்கள்லாம் சிலோன்ல போய் வாங்கீட்டு வர்றியளே கல்லு அது எங்கேந்து வந்தது தெரியுமா?”


ஆதம் நபிய்ய சொர்க்கத்துலேந்து கீழே எறக்கும்போது அவங்களோட ஒட்டிக்கிட்டு வந்து பூமியில் சிதறுனதுதான் ஒங்க கல்லும் மாணிக்கமும்”.

இலங்கையில் இன்று கிடைக்கும் புஷ்பராகம், கோமேதகம் இனத்தைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் மியான்மரிலும், ஆஃப்ரிக்க கண்டத்திலலும் கிடைத்தாலும் அவற்றால் இலங்கையின் தரத்தை எட்டிப்பிடிக்க இயலவில்லை. இலங்கையின் மாணிக்கக் கற்களில் இருக்கும் கனிவு அவற்றில் இல்லை. முதல்மனிதன், முதல் இறக்கம் இவற்றிற்கு நிகர் இல்லைதானே?

ஆதம் நபியின் விண்ணிறக்கத்தை  நனவிலோ அல்லது நனவிலியிலோ மனங்கொண்ட பெரும் பயணி ஒருவர் இலங்கையில் இருந்திருக்கிறார். மண்ணையும் விண்ணையும் ஒன்றென கண்ட ஒரு பாய்ச்சலை செய்திருக்கிறார்.

ஆதம் பாவா மலைக்கு சற்று தொலைவிலுள்ள  ‘ உலகின் முடிவு” எனப்படும் மஞ்சு சூழ் காப்பிடத்தின் ஹார்ட்டன் பிளேஸ் குன்றிலிருந்து கயிறு கட்டி பாதாளம் அல்லது விசும்பு, இதில் இரண்டிலொன்றை கண்டுணர இறங்கியிருக்கிறார் ஒரு சாகச பயணி.  

இத்தகவலை உறுதிப்படுத்த போதிய அவகாசமில்லை. விண்ணையும் மண்ணையும் ஒரே இறங்குதளமாகக் கண்ட மனிதனின் சங்கதி சுவாரசியம் என்பதால் அதை ‘ நடந்தது’ என்றே வைத்துக் கொள்வோம். நம் விருப்பத்தை அதில் சுமத்தி  அழகு பார்த்து மெய்யில் கொஞ்சம் தண்மையை ஏற்றிக் கொண்டு சிறிது தொலைவு பயணிக்கலாம்.

தொள்ளாயிரம் மீட்டர் ஆழத்தில் ஒரு முடிவிலியை எதிர்பார்த்த அவருக்கு அவரின்  கால் நுனிகள் தொட்ட இடம், விண்ணும் மண்ணும் சந்தித்ததின் நிலப் படிமமாக நீண்டு கிடக்கும் பலாங்கொடையைத்தான். சுவனத்தின் மாணிக்கப்பரல்கள்  நிறைந்த இரத்தினபுரி மாவட்டத்தின் நகரமது.

பாவா ஆதம் மலைக்கு போகும் வழியில் உலகின் முடிவு குன்று பற்றிய தகவல்களை சொல்லிக் கொண்டே வந்தார் நண்பர் சிராஜ் மஷ்ஹூர்.

இலங்கை  என் பாதி தாயகமாக இருந்த போதிலும், பல தடவை வந்து போன போதிலும் ரிஹ்லா சரந்தீபில்தான் பாவா ஆதம் மலையை நாடி ஏழு பேர்களடங்கிய குழுவுடன் நெடும் பயணம் புறப்படும் வாய்ப்புக் கிட்டியது.



வறட்சியும் ஒடுங்கிய மஞ்சள் செம்மண் பாதையுமாக இருந்த மலைத்தடம்  சுற்றி சுற்றி ஏற ஏற ஒருவகை அயர்வை தந்தது. இடையே  லுஹர் அஸர் தொழுகைகளுக்காக நாங்கள் ஒளூ எடுத்த பாதையோர மூங்கில் பீலிகளில் ஒழுகும் மலை நீரின் தண்மை ஆசுவாசமளித்தது.

பிளைன் ரீக்காக அதுதான் வெறுந்தேயிலைக்காக மத்திய மாகாணத்தின் நோர்டன் பாலம் என்ற இடத்திலுள்ள தேநீர்க் கடையில் நிறுத்தினோம். நடுத்தர வயது மாதும் நடுக்கு வாதமுள்ள முதியவரொருவரும் அக்கடையில் இருந்தனர். இயற்கைக் கடன்களுக்காக கடையிலுள்ள கழிப்பறைக்கு செல்வதே ஒரு சதுர புதிர்ப்பாதைக்குள் செல்வது போலிருந்தது. பின்பக்கம் ஆறு ஓடிக் கொண்டிருக்க அந்தரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது கடை. மணிப்பூருக்கு போகும்போது இடைவழியில் உணவருந்திய  வண்ணத்து பூச்சி வடிவ உடையணிந்திருந்த மெய்த்தி முஸ்லிமின் கடைக்கு ஒப்பானது. அதுவும் ஓர் அந்தரத் தொங்கல்தான்.

நாங்கள் வண்டியை  நிறுத்திய இடம் வரலாற்றின் ஒரு துன்பியல் நிகழ்வு நடந்தவிடம். நோர்டன் பாலமருகே நீர்ப்பழுப்பேறிய மதகுகளும், கால்வாயுமாக சிறிய அணைக்கட்டிருந்தது. அந்த வெளியில் சிறிய சதுரக்கட்டொன்றில் வைக்கப்பட்டுள்ள இரப்பர் சக்கரமொன்றில் : “Martin Air 1974-12-04 killed 191, 10:10 pm crashed on virgin hills. Dutch Airline Holland என எழுதியிருந்தது.



மனமும் அறிவும் சடுதியில் பின்னோக்கி நகர்ந்தது. நாற்பத்தெட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த வானூர்தி விபத்து. ஹஜ் புனித பயணத்திற்காக இலங்கையை கடந்து சென்ற இந்தோனேஷிய வானூர்தியானது  சப்த கன்னியர் மலையின் குன்றில் மோதி தகர்ந்த துயரம். விளக்கு சமிக்ஞை குறித்த துணை வலவரின் தவறான புரிதலில் முன்னிரவின் இருளுக்குள் நூற்றி தொண்ணூற்றியொன்று உயிர்கள் சிதறியிருக்கின்றன.

எனது ஆறாம் வயதில் உம்மா வீட்டு நீள அறையில் மஞ்சள் மின் குமிழின் வெளிச்சத்தில்  இலங்கை வானொலியில் அந்த துயரச் செய்தியை கேட்ட நினைவு இன்னும் மங்கவில்லை. தேநீர்க் கடைக்காரர் தனது நடுங்கும் தலையும் குரலுமாக அந்த கொடு நிகழ்வை சிங்களத்தில் விளக்கினார். அப்போது அவர் பள்ளி செல்லும் சிறுவனாம்.

இன்னமும் இந்தோனேஷியாவிலிருந்து உறவினர்கள் தங்களது அன்பிற்குரிய நீத்தார்களின் மலையடிவார அடக்கத் தலத்திற்கு ஆண்டுதோறும் வந்து செல்கிறார்களாம். கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு போகும் வழியில் கொல்லப்பட்ட ஹாஜிகளின் நினைவாக அழகிய பள்ளிவாயிலொன்று எழுப்பப்பட்டுள்ளது.

மறைந்த சிங்கள பைலா பாடகர் அன்ரன் ஜோன்ஸ்.  இந்த விபத்து குறித்து  டிசி-8 என்ற பெயரில் பைலா பாடலாக பாடியுள்ளார். https://www.youtube.com/watch?v=2pwh6K0wC6Y.

ஆதம் மலைக்கு போகும் வழியில் அந்த சப்த கன்னியர் மலைக்குன்றை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.மலையின் கறுத்த மார்பில் தலை மயங்கிய கிடாவொன்று மூர்க்கத்துடன் முட்டிய வெண் தழும்பானது அகமும் புறமுமாக நிறைந்து கொண்டது. அந்த துயரார்ந்த இரவு மீள மீள நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

ஓடி ஓடி ஆதம் மலை அடிவாரத்தை எட்டும்போது கதிர் சரியும் நேரம். அடிவாரம் செல்லும் வரை காக்க வேண்டாம். இருட்டி விடும் என்பது மட்டுமில்லை கிட்ட நெருங்கும்போது உயரக் காட்சி சாத்தியப்படாது என்பதாலும் போகும் வழியிலேயே பாவா ஆதம் மலை சிகரத்தை பார்த்து விடுங்கள் என இலங்கையின் வாழும் காந்தியும் கம்பளை  தந்த சமூகச்செம்மல்  ஜனீர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார். அவர் பேச்சைக் கேட்டதால்  குன்றின் பார்வை சாத்தியமாயிற்று.



ஒரே நேரத்தில் சிங்கள பௌத்தர்கள், தமிழ் இந்துக்கள், இஸ்லாமிய,கிறித்தவ சமயத்தினர் என அனைவராலும் புனிதமாக போற்றப்படும் மலையிடம்.  

.கால் தட வடிவில் அமைந்த இம்மலை உச்சி பௌத்தர்களால் புத்தரின்சிறீபாதய(திருப்பாதம்)எனவும், இந்துக்களால்சிவனொளி பாதம்எனவும், ஆதம் ஹவ்வாவை மனித குலத்தின் தொடக்கம் எனக் கொள்ளும் முஸ்லிம், கிறித்தவர்களால்’பாவாஆதம் மலை’ ( ADAM’S PEAK)  எனவும் கொண்டாடப்படும் ரத்தினபுரி நுவரேலியா மாவட்டங்களில் அமைந்துள்ள மலை உச்சியான இதற்கு சமனொளி மலை’ என்ற பெயருமுண்டு. ‘சமன் ‘என்ற பௌத்தக் கடவுளின் அழைப்பை ஏற்று புத்தர் வந்து போனதின் அடையாளமாக அவரின் இடது கால் பதிவு இது என்கின்றனர் சிங்கள பௌத்தர்கள்.

பாலி மொழியிலுள்ள பௌத்தர்களின் புனித நூலாகிய தீபவம்சத்தில்சமந்த கூடம்’ (சமண கூட பர்வதம்) என இது குறிப்பிடப்படுகிறது. சிங்கள பௌத்ததின் இன்னொரு புனித நூலான மகாவம்சத்தில்புத்தர் இங்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

பொஆ 411 -12 காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த சீனப் பயணி ஃபாஹியானும் இத்தாலிய வணிகரான மார்க்கோபோலோவும் (பொஆ1298) இதை ஒரு தலையாய புனிதத் தலமாகக் குறிப்பிடுகின்றனர். பொஆ1344ல் இம் மலையில் ஏறிய இப்னு பதூதா இதனைசரந்தீப்”   எனக் குறிப்பிடுவதோடு உச்சியில் ஏறுவதற்கு இரு புறங்களிலும் இரும்புச் சங்கிலி பொருத்தப்பட மலைப்பாதை ஒன்று இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

சிராஃபைச்சார்ந்த பயணியும் எழுத்தாளருமான ஒன்பதாம் நூற்றாண்டின் இரானின் சுலைமான் அல் தாஜிர், சீனப்பயணி மா ஹூவான், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரானின் சைரஃபி, முர்ஜ் அல் ஜிஹாப் என்ற பெயருடைய பயண நூல் எழுதிய ஒன்பதாம் நூற்றாண்டின் அல் மசூதி, பதினைந்தாம் நூற்றாண்டின் நாகூர் ஷாஹுல்ஹமீது நாயகம்,பதினெட்டாம் நூற்றாண்டின் செய்யத் அஹ்மது ஷஹீத் ராய்பரேலி உள்ளிட்ட புகழ் பெற்ற பயண எழுத்தாளர்களும்,படைத்தளபதிகளும்,சீர்திருத்தவாதிகளும்,போராளிகளும் பாவா ஆதம் மலையை சென்று கண்டிருக்கின்றனர்.

இராவணனின் தலைநகராகிய திரிகூடம் இதுவே என இந்துக்கள் நடுவே ஒரு நம்பிக்கை உண்டு. ஈழத்துச் சைவ நூல்களானதட்சிண கைலாச மான்மியம்’, “திருக்கரைசைப் புராணம்ஆகியன பாவா ஆதம் மலையை சைவ அடையாளங்களுடன் குறிப்பிடுகின்றன..

அடிவாரத்தை எட்டும்போது கதிரொளி போய் விட்டிருந்தது. மலையும் காடும் உண்டாக்கும் இருள்களும் ஏற்கனவே இருக்கும் இருளுடன் வந்ணைந்துக் கொண்டன. இருப்புக்குள் வரலாற்றின் கனம் தானாக வந்தமர்ந்தது.

பாவா ஆதம் மலைக்கான முதல் படிக்கட்டின் வலது பக்கத்தில் ‘சிவனொளி பாத மலை’ என்றும் இடது பக்கம் ‘கௌதம புத்த பகவானின் சிறீ பாதஸ்தானம்’ என ஆங்கிலம், சிங்களம்,தமிழ் என மும்மொழிகளிலும் கற் பெயர்ப்பலகைகள்  நிறுவப்பட்டுள்ளன.



ஹஜ் வானூர்தி விபத்தின் நினைவுகளுடன் இனவாதத்தின் சாட்சியமும் வந்து சேர இன்றைய பிற்பகல் பயணமானது மனப்பாரம் மிக்கதாகவே மாறி விட்டிருந்தது. பாவா ஆதம் மலை என்ற முஸ்லிம்,கிறித்தவ கதையாடல்கள்,நினைவுகள்,தொன்மங்கள் எல்லாம் ஒன்றுமேயில்லையா?கைப்பும் துவர்ப்பும் ஒரு சேர பெருகியது.

தாராள மனம் படைத்த இலங்கையின் முஸ்லிம் செல்வர்கள் பாவா ஆதம் மலையடிவாரத்தில் கிடைக்கும் நிலத்தை வாங்கி அதற்கு “பாவா அதம் மலை பள்ளிவாயில்’ எனப் பெயரிட வேண்டும். இலங்கையின் மேலைக்கரையின் எதிர்ப்புறமுள்ள இராமேஸ்வரம் தீவின் ஆபில் காபில் நினைவிடங்கள்,ஷீத் ரஸ்தா(சேது வீதி ) உள்ளிட்டவைகளின் வரலாறு,தொன்மங்கள் அடக்கமாக பாவா ஆதம் மலையின் ஒளிப்படத்துடன் அது பற்றிய குறிப்புக்களும் இடம் பெற வேண்டும். கிறித்தவர்களும் இது போன்றதொரு முயற்சியை செய்ய வேண்டும். வரலாற்றின் தடங்களில் விதைக்கப்படும் கண்ணிவெடிகளை இங்ஙனம்தான் அகற்ற வேண்டும்.

படிக்கட்டுகளில் கொஞ்சம் தொலைவு ஏறினோம். மலையகத்தமிழரின் தமிழ்நாட்டு உச்சரிப்பைக் கேட்டுக் கொண்டே பேழைக்கடையொன்றில் முறுக்கும் தேநீரும் அருந்தினோம். தேத்தண்ணி அவ்வளவு நன்றாக இல்லை. குடிப்பிற்கான விடாயைத் தீர்த்துக் கொண்டோம்.


படிக்கட்டுகளுக்கிடையில்  சிறிய பாலமொன்றினடியில் மலை நீரோடை ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த நீரொழுக்கையும் ஆற்றையும் கடலையும் கண் பொத்தி ஒன்றன் பின் ஒன்றாக மனத்திற்குள் உருவகப்படுத்துங்கள் என்றார் நவ்ஷாத். முனைப்பான சூஃபி ஜென் சாதகரின் மென் வழிகாட்டுதல். கண் மயங்குதலுக்குப்பிறகு  என் மனம் அநாதிக்குள் மட்டுமே துளாவத் தொடங்கியது. முதல் பாதத்தின் சுவடுகளைத் தேடி எத்தனை பெரும் பாதங்கள் வழி நடந்த தடம்.

ஆதம்(அலை) இங்குதான் சுவனத்திலிருந்து இறங்கினாரா? என்ற ஆய்விற்குள் யாராலும் இறங்க இயலாது. இல்லை உண்டு என்ற தீர்க்கங்களுக்குள் நகரவியலாது. ஏனென்றால் அது நமது எல்லாவிதமான எல்லைகளுக்கும் அப்பால் நிற்கும் சங்கதி. பன்னூறாண்டுகளாக கடந்து வரும் ஒரு தொன்மத்தின் அடியொற்றி இம்மலையில் வழி நடந்த முன்னோடிகளின் எத்தனங்களில்தான் மனம் கொழுவிக் கொள்கிறது.

 தொடர்புடைய பதிவுகள்

 ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 2

 ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி - 3

 

 



No comments:

Post a Comment