தர்கா நகரிலுள்ள ஜனீர் சேரின் வீட்டில் அன்றிரவு தங்கல் எனத் தீர்மானிக்கப்பட்டு வண்டியின் முதுகை அழுத்திக் கொண்டிருந்த பயணப்பொதிகளை அவரின் வீட்டில் இறக்கி வைத்து விட்டு பேருவளை நகருக்குள் நுழைந்தோம்.
மொத்த இலங்கையினதும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களினதும் வரலாற்றில் பேருவளைக்கான இடம்
தலையாயது. பொது ஆண்டு 7 இல் இஸ்லாம் இங்கு வந்தது என சொல்லப்படுகிறது. அந்த சான்று
ஆய்வுகளுக்குள் நாம் நுழைந்தேறப்போவதில்லை. ஆனால் இதுவும் அருகிலுள்ள காலி துறைமுகமும்
காலனியாதிக்கக் காலங்களிலும் அதற்கு முன்பும் உள்ள துறைமுகங்கள். பெங்கால் தொடங்கி
இந்தியாவின் கிழக்கு,மேற்கு தீரங்களுடனும் அறபுக்கடல் தண்டி அறபு,ஆஃப்ரிக்க கடற்கரைகளுடனும்
வணிக,சமய தொடர்புள்ள துறைமுகம் என காலி,பேருவளை உள்ளிட்ட இலங்கையின் துறைமுகங்களை குறிப்பிட்டு
சொல்ல இயலும் என்பதால் பேருவளைவாசிகள் கோரும் அந்த முதல் உரிமைக்கான சாத்தியங்கள் கூடுதல்
என்றே படுகிறது.
கெச்சிமலைக்கும் அதன் அருகிலுள்ள இலங்கையின் முதல் மஸ்ஜிது எனக்கோரப்படும் பேருவளை மருதானையிலுள்ள மஸ்ஜிதுல் அப்ராருக்கும் சென்றோம்.
![]() |
மஸ்ஜிதுல் அப்ரார், மருதானை,பேருவளை |
கெச்சிமலை
தர்காவில் வருடந்தோறும் நபிமொழி தொகுப்புக்களில் பெரியதும் தலையாயதுமான ஸஹீஹுல் புஹாரியை
ஹிஜ்ரி ஆண்டின் எட்டாவது மாதமான ஷஅபான் மாதத்தில் வருடந்தோறும் பாராயணஞ்செய்கிறார்கள்.
இலங்கை முழுவதுமிலிருந்து முஸ்லிம்கள் இங்கு அவ்வமயம் திரள்கின்றனர். இதன் அடியொற்றிதான்
காயல்பட்டினத்திலும் புஹாரி ஓதல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு வருடங்கள் நிறையப்போகிறது.ஓதலின்
நிறைவில் அபூர்வ துஆவும் நேர்ச்சையும் உண்டு.
நாங்கள் போன சமயம் கெச்சிமலை தரீக்கத்தின் கலீஃபாக்களில்
ஒருவர் நவ்ஷாதோடு ஆங்கிலத்தில் தங்குதடையின்றி உரையாடினார்.செயல்திறன் மிக்க இளைஞர்கள்
சூழ வேலைகளின் முனைப்பிலிருந்தவர் எங்களுக்காக போதிய நேரம் ஒதுக்கினார். கல்வி,ஆன்மீகத்
தேவைகளுக்காக தமிழகத்திலும் இந்தியாவிலும் நிறைய சுற்றியவர். இரசமான மனிதர்.
மஸ்ஜிது அப்ராருக்கும் சென்றோம்.அங்கு பணிபுரியும் இரண்டு
மௌலவிகளில் ஒருவர் கேரளத்தில் ஓதியவர்.நவ்ஷாதுடனும் அப்துல்கறீமுடனும் மலையாளத்தில்
பேசினார்.
நல்ல மழைப்பொழிவிற்கிடையே பேருவளையின் சீனங்கோட்டை வழியாக
ஜாமியா நளீமிய்யாவிற்குச் சென்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் தொழில் பார்த்த
இடமென்பதால் பழைய மனிதர்களை சந்திப்பதற்காக நான் மட்டும் சீனங்கோட்டையில் இறங்கிக்
கொண்டேன்.
சீனங்கோட்டைக்கும் எனக்குமான உறவென்பது வாழ்க்கை உறவு எனலாம்.
என் வாப்பா,சகோதரர்கள், ஊர்க்காரர்கள் தொடங்கி
நான் வரை மாணிக்க வணிகம் செய்த ஊர். தொழில் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதன் இரண்டு
வருடங்கள் கழித்து மாணிக்கத்தை விட பெறுமதியானதொன்றை சுமந்து கொண்டு இவ்வூருக்கு வந்திருக்கிறேன்.
தொடக்கத்தில் தென்னங்கயிறு திரித்தும் மீன் பிடித்தும்
வாழ்ந்து வந்த பேருவளை மக்களின் வாழ்க்கைப் போக்கு மாறியது நளீம் ஹாஜியாரின் வருகைக்குப்
பிறகுதான். சிறு வயதில் கொடும் வறுமையை சந்தித்த நளீம் ஹாஜியாரின் அந்த வறுமைதான் மாணிக்கத்தின்
பக்கம் அவரை திருப்பிய விசை எனலாம்.
![]() |
நளீம் ஹாஜியார் |
இளமையில் வறுமையானது ஒரு மனிதனை வாழ்வின் இரு எதிரெதிர் முனைகளுக்கு தள்ளக் கூடியது. நளீம் ஹாஜியாரின் வறுமை அவரை வாழ்வின் நல்ல பக்கத்திலேயே நிரந்தரமாக இருத்தி விட்டது.
மேட்டுக்குடி மக்களின் உடைமையாக மட்டுமே இருந்து வந்த மாணிக்க
வணிகத்தை பேருவளையின் எல்லா வாழ்நிலை மக்களுக்கும் திறந்து விட்டவர்.தனது மாணிக்க சம்பாத்தியத்தில்
வாங்கவிருந்த முதல் சொத்தை, அதுவும் நாட்டின்
அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள இடமது.அதை ஏதிலிகள் பராமரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு
பதிவு ஆவணத்தை மாற்றி எழுதியவர்.பேருவளையில் நிற்கும் ஜாமியா நளீமிய்யாவும் அவரது ஈதலின்
நீட்சிதான்.
நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் அவரது ஈகையின்
கரங்கள் நீண்டுள்ளன. காயல்பட்டினத்தில் தாமரைப்பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் எல்.கே.மேனிலைப்பள்ளியாக
இன்றிருக்கும் அன்றைய எல்.கே.தொடக்கப்பள்ளியும் அவரது ஈதலின் மற்றுமொரு சாட்சி.
சந்தையில் மதிப்பிறங்கிப்போன பூனைக்கல்(கேட்ஸ் ஐ) ரக மாணிக்கக்கல்
தொகையின் கையிருப்பினால் நொடித்து போகவிருந்தனர் பேருவளையின் சிறு வணிகர்கள் . மதிப்பிழந்த அக்கல்
இரகத்திற்கு சந்தையில் செயற்கை கேள்வியை உண்டு
பண்ணி கூடுதல் விலை கொடுத்து வாங்கி ஏராளமான சிறு வணிகர்களை மீட்டவர் நளீம் ஹாஜியார்.அக்கல்
அவரது வீட்டினுள் அம்பாரமாக குவிந்த அக் குவியலை அவர் என்னதான் செய்தாரோ? தன் சொந்த
ஊருக்கு மட்டுமில்லாமல் பிரேமதாச அதிபராக இருக்கும்போது தரை தட்டிய இலங்கை அரசின் திறைக்
களஞ்சியத்தையும் மீட்டவர்.
இப்படி மறைந்த நளீம் ஹாஜியாரைப்பற்றி வரைந்துக் கொண்டே
போகலாம். நளீம் ஹாஜியார் இன்றில்லை. ஆனால் இன்றைக்குள்ளும் நாளைகளுக்குள்ளும் ஈதலின்
வழியாக அவருக்கான இடம் சாசுவதமாக செதுக்கப்பட்டு விட்டது.
ஒரு காலத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் முன்பு வரை மாணிக்க வணிகம் காயல்பட்டினத்துக்காரர்களுக்கும் பேருவளைக்காரர்களுக்கானதாக மட்டுமே இருந்தது.
இன்று இந்திய பனியாக்களின்(மார்வாடி,குஜராத்தி)கைகளுக்கு சென்று விட்டது.
எங்களூரின் நெடிய மாணிக்க வணிகத்தின் தொடர்ச்சி அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டி விட்டது
எனலாம். இந்த வீழ்ச்சியை இது ஒரு வெறும் வணிகம் ஆதாயம்,இழப்பு என்ற கணக்குகளோடு மட்டிறுத்தவியலாது.
இலங்கையுடனான காயல்பட்டினத்தின் பன்னூற்றாண்டு உறவென்பது
சமூகம்,பண்பாடு,நெறி,மண உறவு எனஅதன் முழு பொருளில் நின்றொளிர்ந்த நிலவு. அந்நிலவு நிகழ்காலத்திலிருந்து
மெல்ல சறுக்கி வரலாற்றின் மடித்தட்டில் போய்
படிந்து விட்டது.
வளைகுடா வேலைவாய்ப்பின் வாயிலும், உயர் படிப்பிற்கான வாய்ப்புகளும்
உலகமயமாக்கலின் தொடர்ச்சியான தகவல் தொழில் நுட்ப வேலைவாய்ப்பு பெருக்கமும் மார்வாடி
கைப்பற்றலின் காரணியோடு ஒன்றிணைந்து இந்த வீழ்ச்சியை நடத்தி முடித்திருக்கின்றன.
ஒரு வணிகத்தில் மாற்றங்களும் எழுச்சி வீழ்ச்சிகளும் இயல்பானதுதான்.
இருந்தாலும் தரகுக்கு ஆசைப்பட்ட காயல்பட்டினத்துக்காரர்கள் ஒரு சிலரின் வரம்பு மீறிய
விழைவினாலும் இந்த கைமாற்றம் நடந்துள்ளது என்பதும் கசப்பும் இருட்டுமான உண்மையே.
ஆதாய விகிதம் மங்கிப்போகவும் இலங்கையில் வணிகம் புரிந்து
வந்த காயல்பட்டினத்தின் பெரு மாணிக்க வணிகர்கள் காலத்தின் சுழிப்பில் ஒதுங்கிப்போக
எஞ்சிய சிறு,குறு வணிகர்களில் பெரும்பாலானோர் இந்திய பனியாக்களுக்கான தரகர்களாக மாறி
விட்டனர்.ஆனால் தனது கையை விட்டுப்போன வணிகத்தின் பேரங்களில் எதிரணியினருக்கு தரகு வேலையை ஒரு போதும்
பனியாக்கள் பார்ப்பதில்லை. கைவிட்டுப்போனதை முதுகுக்குப்பின்னர் எறிந்து விட்டு அடுத்த
தொழிலுக்குள் நீந்தி விடுவர்.
எல்லா துறைகளுக்கும் உள்ளது போல தலைமுறைகளாக கடத்தப்படும்
மாணிக்க வணிகத்திற்கான நினைவேக்கக் கதைகளிலிருந்து நிகழ்கால சாத்தியங்களை உருவியெடுக்க மூர்க்கங் கொள்ளும்
இளந்தாரிகள். வீட்டின் கதவிற்கான அடைக்குத்தான் பெறுமதி என மருட்டி வாங்கப்பட்ட தலையளவிற்கான
செதுக்குறாத மாணிக்கக்கல்லை விற்று பல கோடி ரூபாய்கள் பெறுமதியுள்ள கொழும்பு மெயின்
வீதியிலுள்ள கட்டிடம் வாங்கல்,இலங்கை மதிப்பில் சொன்ன விலையை டாலரில் சொல்வதாக நினைத்துக்
கொண்டு காசோலை எழுதி நீட்டிய ஜப்பான் வணிகர், தாறுமாறான விலைக்கு விற்க முனைபவர்களுக்கு
பாதணியில் புனிதமேற்றி கிளிசரின் வைத்தியம் செய்து பரிகரித்த காயல் காக்கா என மாணிக்க
தளமானது அதன் புதினமும் சராசரியுமான மனிதர்களோடு வரலாற்றிற்கான புனைவிற்கான வெளியாக
பெருத்து கொள்வாருக்காக காத்துக் கிடக்கிறது.
இந்த ஏக்கக் கதைகளையெல்லாம் கழுவித் துடைத்தாற் போல பெரு
மழையால் கழுவப்பட்டுக் கொண்டிருந்தது பேருவளையின் மாணிக்கப் பத்தை. வீதியிலிருந்து இரண்டெட்டில் செல்ல முடியுமாக இருந்த அன்வர் நாநா வீட்டின்
முகப்பு பாகப்பிரிவினையில் புதிர்க்கட்டமாக மாறிப்போயிருந்தது.
வீட்டின் வெளி முற்றத்தில் தகரம், ஒட்டுப்பலகையினால் செய்யப்பட்டு
நிற்கும் வலையடிக்கப்பட்ட குறுங்கடைதான் சிறார்களின் ஈர்ப்பு மையம். அதன் உள்ளிலிருக்கும்
உவர்ப்பும் புளிப்புமான உப்புக்காடியில் ஊறிப்பெருத்துக் கொண்டிருக்கும் தெசிக்காய், வண்ணக்காய்களுடன் கூடிய வட்ட வட்ட போத்தல்கள், உரமிடப்படாத ஊட்டமும் சுவையும் செறிந்த வாழைப்பழங்களைக்
கொண்ட குலை,செய்தித்தாளில் சுற்றப்பட்ட பப்பாசிக்காய்கள்.
இச்சரக்குகளுக்கு இரவைத்தவிர மற்ற நேரங்களில் குட்டி வாடிக்கையாளர்களின்
தவறாத வருகை. பத்தை உள்ள நாட்களில் தெரிந்த மனிதர்களுக்கு மதிய உணவு விற்பனை என எப்போதும்
எல்லா வகை மனிதர்களுக்குமான அணுகுத்தளமாக இருந்தது அன்வர் நாநாவின் கலகலப்பான வீடு.
இன்று எல்லாம் மாறி முக்கால் திட்ட கோட்டைச்சுவருக்குள் ஒளிந்திருக்கிறது அவரது வீடு. கூப்பிட்ட குரலுக்கு விடையில்லை.அங்குமிங்கும் தேடிய பிறகு மாடியிலிருந்து அவரது இளைய மகள் இறங்கி வந்தாள்.கீழ் வீட்டில்தான் வாப்பா இருக்கிறார் என அழைத்துச் சென்றாள்.
அகன்ற கட்டிலில் அவர் தனியே படுத்துக் கிடந்தார்.அவர் படுத்து நான் பார்த்ததேயில்லை. சதுரத்தின் கட்டுக்கு குறைவில்லை. ஆனால் வேட்டைக்காரனின் கூர்மையுடைய அவரது கண்களிரண்டும் தங்கள் செயல்பாட்டை நிறுத்தியிருந்தன. எழுப்பி விவரம் சொன்ன பிறகு “ஓஓ” என்றார். பேசினேன். சதுரத்தைப்போலவே மூளையும் தெளிவாகத்தான் இருந்தது.அவருக்கான அடிப்படைத் தேவைகளை அவரே சமாளித்துக் கொள்கிறார். உணவு மட்டும் ஓராள் ஊட்ட வேண்டும். கண் புரைக்கான மருத்துவ பரிகாரம் தவறியிருக்கிறது. அது கையோடு கண் பார்வையையும் கொண்டு போய் விட்டது.
நோயைப்போலவே அதற்கான மருத்துவத்தைப் பற்றிய அறிவும் வீட்டார்க்கு
இன்றியமையாதது என்பதற்கு அன்வர் நாநாவின் அரை வாழ்வும் மற்றுமொரு சாட்சி. மனைவியும்
இறந்து விட்ட நிலையில் கட்டிலுக்குள்ளும் கண்ணின் இருளுக்குள்ளும் சுருட்டி வைக்கப்பட்ட
வாழ்வைப் பற்றி என்ன சொல்ல? வெளிச்சமாகவிருந்த தனது இரவுகளையும் பகல்களையும் பற்றி
நினைத்துக் கொண்டிருப்பாரா? அல்லது வெளிச்சத்தைப்போலவே சொற்களும் பறிக்கப்பட்ட நினைவுகளுக்குள்
மோதி மோதி கரைந்துக் கொண்டிருப்பாரா? அது தனிமையா?
அல்லது ‘தானிலி’மையா?யாருக்குத் தெரியும்?
எனது வடகிழக்கு பயணக்கட்டுரை நூலான ‘என் வானம் என் சிறகு’
ஐ அன்வர் நாநாவிற்குத்தான் அளிக்கை செய்திருந்தேன். அதை கண்களோடிருக்கும்போதே அவர்
கையில் கொடுத்து விட்டேன். அன்வர் நாநாவிற்கு அப்போதும் இப்போதும் சரி கோர்வையாக பேசத்தெரியாது. குமைந்த சொற்களில் வெளிப்படும்
மனிதர்கள் மீதான அவரின் அவதானமும் ஒற்றைச் செயலின் வழியாக வாழ்வெனும் மாபெரும் பள்ளத்தாக்கை
நிறைத்து விடும் அபாரமும்தான் அவரிடம் நான் மனங்கொள்வது.
அவருடைய மிக எளிய
வாழ்க்கையின் ஒற்றை இழையிலிருந்து பெறப்படும் வாழ்வின் தீராத கண்ணோட்டத்தை, இலக்கைத்
தொட்டுணர்த்தி செல்ல கட்டுரையை விட புனைவுதான் ஏற்ற வடிவம் இன்ஷா அல்லாஹ்.
அன்வர் நாநாவின் பாரமான நினைவுகளுடன் ஜாமியா நளீமிய்யா
வளாகத்திற்கு போய் சேர்ந்தேன். பழைய நண்பர்களையும் பெரியவர்களையும் சந்தித்தேன். முனைவர்
சுக்ரி அவர்கள் இல்லாத வளாகத்திற்கு இப்போதுதான் எனது முதல் வருகை.
ஜாமியாவின் பணிப்பாளரான சுக்ரி அவர்களின் மறைவுக்குப்பிறகு
ஜாமியாவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஏ.ஸீ.அகார் முஹம்மது அவர்களை அவரின் இணையரின்
விபத்து பிரிவிற்குப்பிறகு இப்போதுதான் சந்திக்கிறேன். பேச்சு வன்மையுடன் நினைவாற்றலும்
பகடி கலந்த கூர்த்த விமர்சன சொல்லுக்கும் உரியவர்.
நண்பர்கள் நூலகத்திற்குள் புகுந்து மேய வெளியில் மழைஅடர்ந்துக்
கொண்டிருந்தது. காரின் இருளும் இரவின் இருளும் செறிந்த மழைப்பொழிவில் பரந்த ஜாமியா
வளாகத்தினுள்ளிருப்பது சொல்லுக்குள் வர மறுக்கும் உணர்வை தந்தது. ஃபளீல் ஷேஹ், ஏபிஎம்
இத்ரீஸ் ஷேஹ், இன்ஸாஃப் ஸலாஹுத்தீன் போன்ற அருமருந்தன்ன நண்பர்களை எனக்கு தந்த வளாகம்.
ரிஹ்லா குழுவில் என்னைத்தவிர மற்றவர்களுக்கு ஜாமியா வளாகம்
புதியதென்பதால் ஜனீர் சேரின் வீட்டிற்கு போய்
இரவு தங்கி விட்டு மறுநாள் பகலில் மீண்டும் நன்றாக வெளிச்சத்தில் பார்ப்பதற்காக ஜாமியா
நளீமிய்யா வளாகத்திற்கு வந்தோம்.
இலங்கையின் முஸ்லிம் கல்வி வலயத்தில் ஜாமியா நளீமிய்யா
புதியதொரு பாய்ச்சலைத் தந்த நிறுவனம் எனச் சொல்லலாம். குர்ஆன், ஹதீது, இஸ்லாமிய சட்டக்கலை,
இஸ்லாமியப் பண்பாடு, தத்துவஞானம், நாகரீகம், மதங்கள், நவீன சிந்தனைகள் தத்துவங்கள்
பற்றிய ஒப்பீட்டாய்வு, இஸ்லாமியக் கல்வியோடு பொதுக் கல்வியையும் பயிலக்கூடிய விதத்தில்
பாடத்திட்டத்தை அமைத்து இஸ்லாத்தையும் அதன் தத்துவம், கோட்பாடு, கொள்கைகளையும் ஆழ்ந்து
கற்று, அதே நேரத்தில் நல்ல சிந்தனைகள், தத்துவங்கள் என்பனவற்றிலும் அறிமுகமும் பயிற்சியும் கொண்ட அறிவுத்தலைமுறையை உருவாக்குவதே
தங்களின் நோக்கம் என அறிவித்து முன் நகர்கிறது ஜாமியா.
மரபார்ந்த நெறி வழி
பாடத்திட்ட சட்டகங்களிலும் சிந்தனைப் போங்கிலும் ஒரு கலைப்பை தந்த முன்னெடுப்பு
இது. லக்னௌவில் இயங்கும் நத்வத்துல் உலமாவின்
தாக்கத்தை உள்ளடக்கிய சமநிலை(வசத்திய்யா)கண்ணோட்டத்தின்
ஈவு.
இந்நிறுவனத்தின் செல்நெறியில் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது.இலங்கையின்
முதல் முஸ்லிம் குடிமைப்பணி அலுவலரும் முன்னோடி கல்வியாளர்களில் ஒருவருமான எ.எம்.எ.அஸீஸின்
திட்டமும் கனவும் நளீம் ஹாஜியாரின் பொருள் சாட்சியமும் இணைந்து சமைத்த சாதனைதான் ஜாமியா
நளீமிய்யா.
![]() |
எ.எம்.எ.அஸீஸ் |
![]() |
நளீமிய்யாவின் முதல் முதல்வர் தாஸீம் நத்வி |
மனித முயற்சிகளில் முற்று முழு நிறைவை எட்ட முடியாது என்ற உலக நியதிப்படி ஜாமியா நளீமிய்யாவின் போதாமைகளைப் பற்றியும் அதன் நெருங்கிய வட்டத்தில் உள்ள ஆளுமையொருவர் பல வருடங்களுக்கு முன்னரே என்னுடன் விவாதித்துள்ளார். மரபார்ந்த ஆலிம்களால் சமூகத்திற்கு கிடைத்து வரும் சேவை நளீமி பட்டதாரிகளிடம் இல்லை என்ற குறைபாட்டுடன் பெரும்பாலான நளீமிகள் அரசு/வெளிநாட்டரசின் துறைகளில் வேலைகளைப் பெற்று அப்படியே அதில் கரைந்து போய் விட்டனர் என்ற முறைப்பாடும் உள்ளது.
சமூக முதலீட்டில் இயங்கும் பொது நிறுவனங்களின் கனிகளை விளைச்சலை
எந்த அளவு எத்தனை சதவிகிதத்தில் சமூகம் திரும்பப் பெற்றிருக்கிறது என்ற கணக்கு கூட்டலும்
அதனடிப்படையிலான எதிர்பார்ப்பும் முழுக்க முழுக்க சரியானதுதான்.
ஜாமியா வளாகத்தின் நந்தவன புற்களோடு புற்களாக கலந்துறையும்
நளீம் ஹாஜியாரின் சுவடற்ற மண்ணறையை ஜியாரத்
செய்த பின்னர் வளாக சுற்றல் தொடங்கியது.
ஜாமியா நளீமிய்யா வளாகத்தினுள்ள மஸ்ஜிதின் கட்டுமானம் சிறப்பானது.
தூண்கள் எதுவுமின்றி நிலத்திலிருந்து புறப்பட்டு எல்லாப்பக்கங்களிலிருந்தும் வளரும்
குவி மாடம் உச்சியில் கூடுகிறது.
குவிமாடத்தின் அடியிலுள்ள வளைந்த திறப்புகளிலிருந்து அளந்து
நுழையும் இயற்கை வெளிச்சமும் காற்றின் போதிய நடமாட்டமும் விண்ணும் விசும்புமடங்கிய
பிரபஞ்ச மூலகங்களுடன் உள்ளுறை மனிதர்களை அழகியல்
நுட்பத்துடன் இணைத்தபடி இருக்கின்றன. இவ்வேற்பாட்டில் மின்செலவு கணிசமாகக் குறைகிறது.
சொல்
முதலி
பத்தை -- கல்
சந்தை
நாநா--
காக்கா,அண்ணன்
தேசிக்காய் -- எலுமிச்சைப்பழத்தின் சிங்கள மரூ.
போத்தல் -- பாட்டல் என்ற ஆங்கிலசொல்லின்
மரூ. குத்தி, கண்ணாடிக் குப்பி
பப்பாசி -- பப்பாளி
ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி - 3
No comments:
Post a Comment