Tuesday, 20 May 2025

பத்ம சிறீ முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான்

முப்பது வருடங்களாகப் பழக்கம். அன்னாருக்கு எண்பத்தேழு வயதாகிறது.பலரின் உடல் நடை பாவனை எல்லாவற்றையும் வயது துணியை சுருட்டுவது போல தன் கரங்களுக்குள் சுருட்டிக் கொள்ளும்.

அலீ மனிக்ஃபானுக்கு முகம், மாறா புன்னகை,பல் வரிசை, நடை,நினைவாற்றல் என எல்லாம் இறையருளால் சீராக உள்ளன. கண்களில் மட்டும் கொஞ்சம் சிக்கல்.நீர் வடிகிறது. தொலைவுப்பார்வையில் குறைபாடுள்ளது. சிறிய பரிகாரத்தில் சரியாகக் கூடியது எனத் தோன்றுகிறது,. ஆனால் ஆங்கில மருத்துவம் மீதான அவரின் மாறா விமர்சனம் அவரை பார்வைக் குறைப்பாட்டுடன் வாழ வைத்திருக்கிறது. அவரை முதன் முதலாகப் பார்த்த நாள் முதல் கண்ணாடி அணிந்துப் பார்த்ததில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் நடந்த மலபார் இலக்கியத் திருவிழாவிற்கு நானும் அவரும் விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தோம். அச்சமயம் ஆட்கள் கைத்தாங்கலாக வந்தார். நேற்றைய சந்திப்பில் தானாகவே நடந்து வந்தார். இடையில் அந்த சிக்கல் ஏற்பட்டதற்கு கோழியிறைச்சியை உண்டதுதான் காரணம் என்றார். அது பற்றி அவரிடம் விளக்கமாகக் கேட்க வேண்டும். அவரின் வாழ்க்கையே செய்தியாக இருப்பதால் எதையுமே தவற விடுவதற்கில்லை.

காயல்பட்டினத்திலுள்ள அவரது மகன் மூஸா மனிக்ஃபான் வீட்டிற்கு நேற்று வந்திருந்தார். வாப்பாவிற்கு கண் தெரிகிறதா  என்பதை சோதித்தறிய பேனாவுடன் குறிப்பேடும் கொடுத்து எழுதச் சொன்னார் அவரது மகன்.  “ நான் காயல்பட்டினத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என ஆங்கிலத்தில் எழுதி திரும்பக் கொடுத்தார். நடுக்கமும் தளர்வுமற்ற அழகிய கையெழுத்து  மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ்.

 

கோழிக்கோட்டிலுள்ள தன் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என மகனிடம் சொல்கிறார். ஏன் அவ்வளவு அவசரம்? எனக் கேட்டதற்கு “அங்கு போய் நான் புத்தகங்களை வாசிக்க வேண்டும்” என்கிறார். உருப்பெருக்கி ஆடியின் உதவியால் புத்தகங்களை வாசிக்கிறார்.வெளியில் எங்கும் போவதில்லை. ஒன்றுபட்ட பிறை நாட்காட்டிக்காக ஊர்களையும்,நாடுகளையும் கடந்த முப்பதாண்டுகளாக சுற்றி வந்த கால்களுக்கு இனி எங்கும் போவதற்கில்லை. புத்தக வாசிப்பு மட்டுமே அவருக்குத் துணை. ஒரு நாள் ஓடமும் வண்டியில் ஏறத்தானே வேண்டும்.இரவிருக்கவே பகலும் இரவான மாதிரி இருக்கிறது.

எட்டாம் வகுப்பைத் தாண்டாத அலீ மனிக்ஃபானுக்கு கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில் நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, புவிபரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் எனப்படும் துறைகளில் ஈடுபாடும் செயல்பாடும் உண்டு.

விடை பெற்றுக் கிளம்பும்போது “வாப்பாவுக்கு வட்சப்பில் செல்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள். அவர் மறுமொழியளிக்கிறார்” என்ற தகவலுடன் அவர் மகன் மூஸா மனிக்ஃபான் எனக்கு விடை கொடுத்தார்.


தொடர்புடைய பதிவுகள்

1.இயற்கையே ஆசிரியனாய்.........முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான்

2.அலீ மனிக்ஃபான் ஒளிப்படங்கள்




 

 

 


 

No comments:

Post a Comment