Monday, 24 February 2025

தோன்றலும் மறைதலுமான ஆட்டம் (நிலங்களின் வாசம் – றியாஸா ஸவாஹிரின் கவிதை நூல் குறித்து )




கடந்த சில நாட்களாக என்னுள் அலையடித்துக் கொண்டிருந்தவற்றை வானவில் நேசங்கள் கவிதையினூடாக மீள அடைகிறேன்.



வானவில் நேசங்கள்

//பிரிந்து
போனவர்களெல்லாம்
என்னவானார்கள்
அவர்களெல்லாம்
எங்கே
போய்விட்டார்கள்
என்
கையெழுத்தை
தட்டி
நிமிர்த்திய
வெளியூர்
ரீ(டீ)ச்சர்
ஆலிலையில்
தொப்பி
கோத்து
அணிவித்த
உயர் வகுப்பு
அக்கா
சங்குமாலை
அணிந்து
யாசகம்
கேட்டு வந்த
மூக்குத்திப்பெண்
கண்காட்சியொன்றில்
சித்திரங்களிலன்றி
என்னிலேயே
வழுக்கி
வழுக்கி
வழுக்கி
விழுந்த
உயரமான
இளைஞன்
என்
கவிதைகள்
வாசமென
குறுஞ்செய்திகள்
அனுப்பி
அன்பைக்குவித்த
ஒருத்தி
இன்னும்
இன்னும்
பிரிந்து
போனவர்கள்
எல்லாம்
என்ன
ஆனார்கள்
அவர்களுக்குப் பிடித்த
பாடலை
அவர்களுக்குப் பிடித்த
மரங்கொத்தியை
அவர்களுக்குப் பிடித்த
ஊமத்தம்பூவை
எப்போதாவது
காண்கையில்
சம்பந்தமே
இல்லாமல்
அற்புதமாய்
விரிந்து
அரை
நொடிக்குள்
மறைகிறார்கள்
இடம்
தெரியாவண்ணம்
அவர்கள்
சென்றதற்கு
நானும்தான்
காரணம்
எந்தப் பொழுதில்
இறுதிச்சந்திப்பென்று
யாரறிவார் //
புவியின் வன் அடுக்குகளில் கரந்துறையும் வைரங்களான றியாஸா ஸவாஹிரினுடைய கவிதைப்படிமங்களைத் தீண்ட முயலாமல் இலை நுனியில் வாசங்கொள்ளும் நீர் தாரகைகளின் மாயங்களுக்குள் சிக்கி மருள்கின்றன அறிவும் மனதும்.
ஒரு நாளின் மயங்கு பொழுதில் குங்குமமும் பொன்னும் இழைந்த அணி கண்டு ஆவல் பொங்கும் பொழுது வெட்டென இரவுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ளும் கதிரோனைப்போல் திறப்பிலும் பூடகங்களிலுமாக மாறி மாறி விளையாடுகிறது நிலங்களின் வாசத்தின் மொழி.
வீட்டில் பிடி வனம், அடர் வெண்மை, ஏழு நிற மின்மினுப்புமான தூய வெள்ளை நிறப்பறவை, மழை ஒரு போதும் சொல்லிக் காட்டுவதேயில்லை, நாம்தான் பரபரப்புகளில் மூழ்கி ஆழியின் பிஞ்சுமுத்துகளை அள்ளத் தவறுகிறோம் என பிரபஞ்சத்தாரையின் இலயங்களின் இழையைப் பற்றியவாறே கவிதைகள் துளிர்க்கின்றன.
றியாஸா ஸவாஹிர் ஓர் ஓவிய ஆசிரியையும் கூட. மழையே அது தன்னில் பேரருள் எனும்போது அது நிறக்கலவையாகி பொழிதல் என்பது அருளுக்கு மேல் அருள். வண்ணத்துக்குள் மழையா மழைக்குள் வண்ணமா என்ற பேதம் அற்றுப்போகிறது.
மொழிகளின் மந்திரக்காரி’ என்ற கவிதையில்
//பரிதவிப்பின்
பெருஞ்சுழல்
சிறு
மொழியை
மூர்ச்சையடையச் செய்கிறது
இறுகாத
முடிச்சுகளை
அவிழ்க்க
மொழிகளின்
மந்திரக்காரியை
அழைக்கிறேன்//
என தான் வியக்கும் மூத்த பெண் கவிதாயினி ஒருத்தியைப் போற்றுகிறார் நூலாசிரியர்.ஆனால் இவ்வாறு வியக்கும் அவர் உட்பட தேர்ந்த கவிஞர்களின் வரிகளிலிருந்துதான் மொழி தன் புதிய திறப்புக்களையும் சாத்தியங்களையும் கண்டு கொள்கிறது.
உரைநடை என்பது கவிதையை பின்தொடரும் நாய்க்குட்டி என்ற தேவதச்சனின் வரிகள் திறந்து விட்ட சாளரங்களுக்கு அப்பால் புதிய திறப்புக்கள் முகிழ்க்கின்றன. மாய எதார்த்த வகைமை எழுத்தாளர் ஒருவரின் படைப்புக்களிலிருந்து இளம் ஓவியர்கள் தங்கள் தூரிகைகளுக்கான புதிய இரையை கண்டு வருகின்றனராம். றியாஸா ஸவாஹிரின் மொழியிலிருந்து பெருஞ்சுழல் தன் பரிதவிப்பை அவிழ்த்துக்கொள்ளட்டுமாக.
‘என் உடல் என் விடுதலை’ என்ற முழக்கம் கலை/படைப்பாளிகளுக்குள்ளும் அவர் தம் படைப்புகளுக்குள்ளும் நீட்சியடைந்து கட்டற்ற விடுதலையைக் கோரியபடி இருக்கின்றன. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாகவும் வடிவாகவும் தோன்றும் இக்கோரல்களின் பின்னே ஒளிந்திருக்கும் ஒடுக்கத்தையும் மூட நம்பிக்கையையும் மறுதலை இருளையும் கண்டு வியக்காமலிருக்க இயலவில்லை.
அவசங்களிலிருந்து விடுபட குடிப்பவனின் நிலையைத்தான் ஒத்திருக்கிறது அது விடுபடலுக்கு மாற்றாக தளையை மேலும் இறுக்குகிறது. ஒழுங்கவிழ்ப்பென்பது அடிமைத்தனத்தின் புதிய பெயர் என்பதுடன் அது இன்னும் இன்னும் தனிமைக்குள்ளும் மனிதனை உதிர்த்துப்போடுவதோடு தனி மனித மைய வாதத்திற்கும் ஈற்றில் அதி மனித மனப்பிறழ்விற்கும்தான் இட்டுச் செல்கிறது.
இப்பிரபஞ்சத்திலும் அதனை இயக்கும் விதிகள் எதிலும் கட்டற்ற தன்மை என்று ஒன்றில்லை. விண்,மண்ணின் இருப்புக்களும் அவற்றில் நிலை கொண்டிருக்கும் பெரும் பொருட்களும் அதனதன் வரைகளுக்குள்ளும் ஒழுங்குகளுக்குள்ளேதான் நீந்துகின்றன.அவைகள் அந்த கட்டுப்பாட்டை உடைத்தால் எல்லாம் குலைந்து போகும்.
மொத்த அண்ட அசைவின் சிறு நுனிதான் ஓர் இலையின் சலசலப்பென்பதை கவித்துவமாக உரைப்போர்க்கு இந்த விபரீதங்கள் பிடிபடாமல் போவதற்கு என்ன பெயரிடுவது எனத் தெரியவில்லை.
இது போன்ற கட்டற்ற விடுதலைக்கோரலின் அபத்தங்கள் எதுவும் றியாஸா ஸவாஹிரின் கவிதைகளுக்குள் நிகழாமலிருப்பது நிறைவளிக்கிறது. தனக்கு வாய்த்திருக்கும் மொழியி வரத்தால் மனித இயல்பின் நுண்ணுணர்வுகளுக்குரிய இடத்தை வழங்கி அடுக்கியும் கலைத்தும் சிதைக்காமல் படைக்கிறார்.
நூலை வாங்க:

No comments:

Post a Comment