
கடந்த எட்டு
பத்து வருடங்களாக பழக்கம்.2018இல் நண்பர்களுடன் இணைந்து காயல்பட்டினத்தில் நடத்திய
முதல் புத்தகக்காட்சியில் பங்கேற்று உரையாற்றி மரமும் நட்டு விட்டு சென்றார். புன்னகையில்
பிசைந்துருவாக்கப்பட்ட இன்முகம்.
தோப்பில் காக்காவின் எண்ணையும் இவரிடமிருந்துதான்
பெற்றுக் கொண்டு புத்தக் காட்சிக்கு அவரையும்
அழைத்து சிறப்பித்தோம்.
புத்தகக்காட்சியில்
பாடிய நண்பர் கேஜே ஷாஹுல்ஹமீதை அழைத்து மிகவும்
சிலாகித்ததோடு திருநெல்வேலியில் நடந்த தனது ஒரே மகனின் திருமண விழா உள்ளிட்ட சில விழாக்களில்
பாட வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தவர்.
எனது மகளின்
திருமண நிகழ்விற்கு அவரையும் அவரது இணையரையும் அழைத்திருந்தேன்.வரும் முன்னர் கூடவே
ஒரு குறிப்பும் கொடுத்தார். தோழர் எனக்கு இறைச்சியுணவு ஒத்துக் கொள்ளும்.ஆனால் இணையர்
மரக்கறி உணவு மட்டுமே கொள்வார் என்றார். அவரின் இணையருக்காக முந்திரி நெய்ச்சோறு செய்து
வைத்திருந்தோம். எதிர்பாராத ஒரு விபத்தில் அவர்களது ஊர்தி சிக்கியதால் அவர்களால் மணவிழாவிற்கு
வரவியலாமல் போயிற்று.அதற்காக வருந்தினார்.
அதன் பிறகு
திருநெல்வேலியில் நடந்த அவரது புத்தக வெளியீடு உள்ளிட்ட ஓரிரண்டு இலக்கிய சந்திப்புகளில்
சந்தித்துள்ளேன்.எனது பயணக்கட்டுரை நூலைக் கொடுத்தேன்.அதன் பிறகு பல வருடங்களாக எத்தொடர்புமில்லை.
திருநெல்வேலி
மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை விழா2024 விற்காக வெளியிடப்பட்ட ‘நெல்லைச்சீமையின் ஒரு நூற்றாண்டுச்
சிறுகதைகள்’ தொகுப்பை அவர் தலைமையிலான அணியினர்தான் தொகுத்திருந்தனர்.
அந்நூலைப்பற்றி
பேசுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் அவரைத் தொடர்பு கொண்டேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகான
உரையாடல்.மிகுந்த மகிழ்வுடன் பேசியவர் பேச்சை நிறைவு செய்யும் தருணத்தில் அக்டோபர்2024
இல் நடைபெற்ற தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் உங்களை பேச பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறேன்
என பேச்சு ஓட்டத்தினூடே சொல்லி முடித்தார்.
இரண்டொரு
நாட்களிலேயே அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு. தோழர்! மாவட்ட ஆட்சியரிடம் பேசி விட்டேன்.
அங்கிருந்து உங்களை அழைப்பார்கள் பேசிக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி அழைப்பும் வந்தது.போனேன்.பேசினேன்.வந்தேன்.
மாவட்ட ஆட்சியரிடம்
வெறும் சாளை பஷீர் என்ற எழுத்தாளனுக்காக மட்டும் அவர் பேசவில்லை. நமது இந்த தூத்துக்குடி
புத்தகத்திருவிழாவில் சமூகத்தின் எல்லா பிரிவினருக்கும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு
வாய்ப்பளித்திருக்கிறோமா? என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாகவும் அவர் தனது கேள்வியிலுள்ள
நீதத்தை திறந்த மனத்துடன் ஏற்றதாகவும் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்களின்
சிறுகதை தொகுப்பொன்றை போடச்சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அத்தொகுப்பிற்கென
எனது சிறுகதைகள் இரண்டையும் கேட்டுப்பெற்றிருந்தார்.
அதன்பிறகு
சில நாட்களில் பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட
நீதிமன்றத்தினருகே அவரை சந்தித்தேன். எளிய
ஈருருளியில் கச்சிதமான தொங்கு பையுடன் வந்தார். முதுமையின் வரவை அறிவிக்கும் பொருட்டு
அவரது முகத்தில் தளர்வு வந்திருந்தது. தனது ‘பொருநை முதல் நயாகரா வரை என்ற கனடா பயணக்குறிப்புகள்
நூலை தந்தார். நானும் அவருக்கு சீர்மை பதிப்பகத்தின் சில நூற்களை கையளித்தேன். அவரிடம்
ஆறுதலாக பேசுவதற்காகவென்றே இந்த சந்திப்பை நாடினேன். ஆனால் அவரோ ஏதோ ஒரு மாணவியின்
தேவையை நிறைவேற்றச் செல்லும் அவசரத்தில் இருந்ததால் ஒன்றும் சொல்லவியலவில்லை. மறுத்தும்
நான் போக வேண்டிய சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வளாகத்தினுள் என்னை இறக்கி விட்டு
சென்றார்.
சென்னை புத்தகக்காட்சி2025
க்கு வரப்போவதாக அவரது முகநூல் அறிவிப்பை பார்த்தவுடன் சீர்மை அரங்கிற்கு வரும்படி
வாட்சப்பில் தகவல் வைத்திருந்தேன். அவர் வரவில்லை. அதன் பிறகு அவருக்கு தொலைபேசியிலும்
அழைத்திருந்தேன். எடுக்கவுமில்லை.
கடந்த நான்கைந்து
நாட்களாகவே எதேச்சையாக அவரைப்பற்றிய நினைவுகள்
வந்து வந்து போயின.காலையில் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும்போது காயல் புத்தகக்காட்சி2018
இன் இணை ஏற்பாட்டாளரும் நண்பருமான ஹபீப் இப்றாஹீம் தனது வாட்சப்பில் தோழரின் பிரிவுச்
செய்தியை பகிர்ந்திருந்தார்.
கடந்த சில
காலமாகவே இதய நோயில் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.ஆனால் அதைப்பற்றி பெரியதாக அலட்டவுமில்லை.
நண்பர்களிடம் பரவலாக்கவுமில்லை. தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடத்தும்
புத்தகத் திருவிழாவை சிறப்பாக ஒருங்கிணைப்பதிலும் புதிய இளைய படைப்பாளிகள் எவராயினும்
ஊக்கப்படுத்தி வெளியில் கொண்டு வரும் தீவிர கலையிலக்கிய செயற்பாட்டாளாராகவும் தன் வாழ்வின்
இறுதித்துளி வரை நீடித்திருக்கிறார்.போலி படைப்பாளர்களை இனங்கண்டு ஒதுக்கவும் தயங்காத
நேர்மையாளர்.
வாசிப்பு
சுமையினால் அவர் தந்த அவரின் பயணக்குறிப்பு நூலை வாசிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.அவர்
தந்தபோதே வாசித்து பகிர்ந்திருந்தால் அவர்
மனம் நிறைந்திருப்பாரல்லவா?
No comments:
Post a Comment