Wednesday, 27 November 2024

திருவிதாங்கூர் -- தென்னெல்லை

தனக்கானதை மீட்ட பெருமித உணர்வாக தமிழ் நாட்டிற்கும் தனது பறிக்கப்பட்டக் கரமாகக் கேரளத்திற்கும் ஒரே சமயத்தில் தோன்றும் நிலப்பரப்பு குமரி மாவட்டம்.

அய்ந்திணைகளில் பாலையைத் தவிர்த்து நான்கு திணைகளையும் தன்னுள் கொண்டுள்ள நிலம். சென்ற காலத்தில் மொழிப்பிரிவு,சாதிப் பிளவு,மன்னராட்சிக் கொடுமை என வேறுபட்ட சுடு திரவக்கலவை கொண்ட நிலம். தமிழ்நாட்டு, கேரள முஸ்லிம்களுக்கு அவர்களுடைய பண்பாட்டு இணைப்பின் முந்நீர்க்கபாடம் அமைந்துள்ள மண்.

ஒரு தலைமுறைக் காலத்திற்கும் மேலாக இம்மண்ணோடு தொடர்புடையவன் என்ற முறையில் இம்மாவட்டத்துடன் எனக்கு அணுக்கமுண்டு. என் ஊரின் வரலாற்றைப் பின் தொடரத் தொடங்கிய நாட்களிலிருந்து  உள்ளூர் வரலாற்றாய்வாளர்களும் நண்பர்களுமான கோட்டாறு அஹ்மது கபீர் காக்கா,மிடாலம் அன்சார் ஆகியோரின் மூலம் குமரி மாவட்டம் தொடர்பாகக்  கிடைத்துக் கொண்டிருக்கும் தரவுகளும் தகவல்களும் இந்த அணுக்கத்தினை இன்னும் அணு நெருக்கமாக்கியிருக்கின்றன.

ரிஹ்லா பயண முகமையைத் தொடங்கிய நாட்களிலிருந்து உடன் பயணித்து வருபவர் நண்பர் மிடாலம் அன்சார். அவருடன் பல தடவை குமரி மாவட்டத்தின் பழம் வரலாற்றை அது திருவிதாங்கூராக இருந்த காலத்திலிருந்தே அறிவதற்கான ரிஹ்லா ஒன்றை நடத்துவதைப் பற்றி உரையாடியிருக்கிறோம்.

அவ்விருப்பம் நான்கு ரிஹ்லாக்கள் நடந்த பிறகே சாத்தியமாக வேண்டும் என விதித்திருக்கிறது போலும். சில கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ரிஹ்லா திருவிதாங்கூருக்கான அறிவிப்பு 2024 நவம்பரில் வெளியிடப்பட்டது.

அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும் யாரும் முன்பதிவு செய்யவுமில்லை.இது பற்றி என்ன ஏதென்று கேட்பாருமில்லை. இதுவரைக்கும் நடந்த ரிஹ்லாக்களில் கண்டிராத பட்டறிவு இது. எட்டாம் நாளில் மெல்லத் திறந்தது கதவு. தமிழ்நாட்டிலிருந்து மூன்று வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தங்கள் பெயர்களைப் பதிந்தனர்.

 இந்த ரிஹ்லா தமிழ் நிலம் போல சேரள நிலத்திற்கும் சேர்த்துதான் என்பதால் மலையாளத்திலும் ரிஹ்லா பதாகையை விளம்பரப்படுத்தினோம். கேரளத்திலிருந்து கல்வி&கலைத் துறையைச் சேர்ந்த நால்வர் இணைந்தனர். அத்துடன் நான்கு தமிழ்நாட்டு,கேரள நண்பர்களும் இணைந்தனர்.

ஆக பத்து பேர்கள். ஒரு ரிஹ்லாவை நடத்துவதற்குக் குறைந்தபட்சம் பதினைந்து பேர்கள் இணைந்தால்தான் அப்பயணம் கையில் பொறுக்காமல் நடக்கும். ஆள் குறைந்தால் அடையாள ரீதியாகவாவது நடத்துவது என்பது கொள்கை முடிவு. ஆனால் அதற்கும் சல்லி வேண்டுமே.கொஞ்சம் திகைப்புதான்.

இச்சிரமங்களை அஹ்மது கபீர் காக்கா,மிடாலம் அன்சாருடன் கலந்தாலோசித்த பிறகு பின்வருமாறு முடிவெடுத்தோம். முடியாதபட்சத்தில் இதைக் குறைந்த பட்ச எண்ணிக்கையிலானப் பங்கேற்பாளர்களை வைத்தாவது நடத்திடுவோம். பொருள் பற்றாக்குறைக்கு அனுசரணையாளர்களைக் கண்டு பிடிக்கலாம் என அவர்களும் உறுதியளித்தனர்.

இதற்கிடையில் கனமழை எச்சரிக்கை வேறு .இறை நாட்டத்திற்கப்பால் எதுவுமில்லை. நம்பினோர் கைவிடப்படுவதில்லை. வாசமும் மணமுமாக எல்லாம் முழுமையாக நடந்தேறின.அஹ்மது கபீர் காக்காவும் மிடாலம் அன்சாரும் சிறப்பாகப் பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பயண ஊர்தி நாகர்கோவிலிலிருந்து தக்கலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னேறியது. பாதையின் முன்பு தென்பட்ட வேளிமலைக் குறித்து உடன் வந்த கேரளத்து ஆசிரியர் குலாம் முஹம்மது கேட்டறிந்தார். குமரி மாவட்டத்தின் அணியும் அரணுமான மலைகளுக்கு இன்று பிளவை,செதில் சொறி நோய் வந்திருக்கின்றன. நான் மூன்று பத்தாண்டுகளாக கண்டு வந்த கவினுறு மலை முடிகள் இன்றில்லை.

 திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் அதானி துறைமுகத்திற்காக இம்மலைகளின் தசையை ஆள்வோர்கள் வெட்டித் தின்கின்றனர். தேச அம்மையின் புத்திரர்களிடமிருந்தோ நவ துளைகளும் அடைபட்ட மௌனம்.

மூன்று நாட்களும் நாங்கள் போன ஊர்களில் நல்ல வரவேற்பு. ஜமாஅத்தார்கள்,ஊர் ஆளுமைகள் சிறப்பாக வரவேற்றனர். வட்டச்சட்டி போலிருக்கும் தமிழ்நாட்டின் இக்குட்டி மாவட்டத்தில் ஒவ்வொரு சில கிலோ மீட்டர்களில் உள்ள முஸ்லிம் ஊர்களில் வேறுபட்ட உணவுவகைகள். அவை தேங்காய் பாலாகவும் நெய்யாகவும் உணவுக்குள் மணக்கின்றன. கிண்ணத்தப்பமும் கலந்தப்பமும் இன்னமும் பின் தொடர்கின்றன.

 திருவிதாங்கோடு,குளச்சல்,தேங்காய்ப்பட்டினம் முதலான ஊர்களைப்போன்று ஆளுரிலும் பழமையான கல் பள்ளிவாயில்கள் உள்ளன. மேற்சொன்ன மூன்று ஊர்களிலும் அவை சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அது போல அந்த கல் பள்ளிவாயில்களை இடிக்காமல் புதிய பள்ளிவாயில் கட்டிடங்களை எழுப்புங்கள் என ஜமாஅத்தாரிடம்  வற்புறுத்தக் கிடைத்தது ஓர் ஆறுதல். ஆளூரின் பழமை காக்கப்படும் என நம்புவோமாக.

 மண்டைக்காடு கடற்கரைக்கு  முன்னிரவில் போனோம். நாற்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னர் வெந்து தணிந்த நிலம். மண்டைக்காடு வன்செயல் நடந்த போது எனக்கு வயது பதிநான்கு.எங்கள் வீட்டில் ரோஸ் என்ற கேரளத்து மீனவ சமூகப் பெண் பணியாள் இருந்தார். கடற்புரத்து வழக்கில் மண்டைக்காடு கதைகளைச் சொன்னவரிடம்தான் முதன்முதலில் ஆர்.எஸ்.எஸ். என்ற பெயரையே நான் அறிந்தேன். காக்கி அரைக் காற்சட்டைக்காரர்கள் ஏதோ ஒரு பொடியைத்தூவி தீப்பிடிக்க வைத்தனர்.மீனவர்களும் கடலின் மணல்பரப்புக்குள் வலைகளை மறைவாக விரித்து வைத்து கலவரக்காரர்களைக் கடலுக்குள் செலுத்தினர் என பொடிக்குரலில் விவரிப்பார். அவர் சொன்ன மற்ற கதைகள் நினைவிலில்லை.

 முஸ்லிம்கள்  குமரி மாவட்டத்தில் மிகச் சிறுபான்மையினராக இருந்த போதிலும் கடந்த கால மன்னராட்சிகளிலும் அதன் பின்னர்  இந்தியா என்ற வரைபடம்  உருவாகிய பிறகும் அமைதியுடனும் நிம்மதியுடனும் முஸ்லிம்,கிறித்தவர் வாழ்ந்து வந்தனர். தெள்ளிய நீர் கலங்கிடும்  ஒரு காலமும் வந்து சேர்ந்தது.

வடமொழிப் பெயரைக் கொண்ட ஆர் எஸ் எஸ். தன்னை உள்ளூர் சமூக பண்பாட்டு மொழிக் கூறுகளுக்கேற்ற மாதிரிஹிந்து முன்னணி’ எனப் பெயர் மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டில் ஒத்திகைப் பார்க்க தேர்ந்தெடுத்த  இடம் மண்டைக்காடு.

பிளவுச் செயல்பாடுகளுக்கான விதை 1951 இல் நிறுவப்பட்ட வெள்ளிமலை ஆசிரமத்தின் வடிவில் விழுந்தது. 1963 & 1972 ஆம் ஆண்டுகளில் குமரி முனையில் விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னத்துடன் விவேகானந்த கேந்திரமும் நாடு முழுக்கவுள்ள ஹிந்து உயர்சாதி பனியா தொழிலதிபர்கள்,வணிகர்களின் நிதியுடன் ஒன்றிய அரசின் முழு ஆதரவில் உருவாக்கப்பட்டன.

 சமய வகுப்புகள்,திருவிளக்கு பூசை என்ற பண்பாட்டு வடிவங்களில் வெள்ளிமலை ஆசிரமும்,கிராமக்கட்டுமானத்தின் வழியாக சேவைத்தளத்தில் விவேகானந்த கேந்திரமும் குமரி மாவட்டத்தில் களத்தை அணியமாக்கினர். முப்பது வருட கால உழைப்பு. 1980 இல் ஹிந்து முன்னணி உருவாக்கம்.1982 இல் மண்டைக்காடு வழியாக அரசியல் தளத்தில் அறுவடையைச் செய்து  பெரும் வளையத்தின் இறுதிக் கண்ணியை ஹிந்து முன்னணி முழுமைப்படுத்திற்று.

 மண்டைக்காடு கடற்கரையில் நடந்த பெண் சீண்டல் நிகழ்வு ஊதிப்பெருக்கப்பட்டு முதல் தீக்குச்சி உரசிப் போடப்பட்டது. ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ‘கன்னிமேரி மாவட்டமாக மாற்ற சதி’ என்ற பரப்புரை ஏற்படுத்திய வலுவான அடித்தளத்தில் புதிய வதந்திகள் எரிபொருளாகின. மண்டைக்காட்டில் தொடங்கி குமரி மாவட்டத்தின்  கடற்கரையோர ஊர்களும் உள் நிலப்பகுதிகளும் பற்றியெரிந்தன.

குமரி மாவட்ட மீனவர்களுடன் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்அவ்வப்போது முரண்கள் ஏற்படுவதுண்டு. இரு பக்கத்திலிருந்தும் கும்பல்  திரட்டப்பட்டு மோதல்கள் நடக்கும். பின்னர் அது அத்தோடு வடிந்து போகும்.

இது போன்ற மோதல்களின் அக,புற சித்திரங்களை தோப்பில் முஹம்மது மீரானின் கூனன் தோப்பு உள்ளிட்ட படைப்புகளில் காணலாம். மண்டைக்காடு  நாடார்களுக்கும் மண்டைக்காடு புதூர் கிராமத்தின் மீனவர்களுக்குமிடையேயான வெறும் குழு மோதலாக தீர்ந்திருக்க வேண்டிய இம்முரணில் ஹிந்து முன்னணி நுழைந்தது. அவர்கள் கேரளத்திலிருந்து ஆர்.எஸ்.எஸினரை இறக்கினர். ஓர் ஊரின் சச்சரவு  மாவட்டமளாவிய பெரும் வன்செயலாக மாற்றப்பட்டது.

மண்டைக்காடு வன்செயல் முடிந்து இரு வருடங்கள் கழித்து 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிசாரா சட்டமன்ற உறுப்பினராக வி.பாலச்சந்திரன் பத்மநாபபுரத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் ஹிந்து முன்னணியின் முழு  ஆதரவு பெற்ற  வேட்பாளர் என்பதால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஹிந்துத்வ அணியின் முதல் வரவு எனலாம்.

1996 இல் பாஜக வேட்பாளராக பத்மநாபபுரம்  சட்டமன்றத் தேர்தலில்  சி.வேலாயுதம் தேர்வானார். 2021 இல் நடந்த நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் எம்.ஆர்.காந்தி வெற்றிப் பெற்றார்.

மண்டைக்காடு வன்செயல் குறித்து விசாரிப்பதற்கு  மேநாள் நீதிபதி பி. வேணுகோபால் தலைமையில் விசாரணை ஆணையம் அன்றைய எம்ஜி ஆர் அரசால் அமைக்கப்பட்டது.

 ஆணைய அறிக்கையெல்லாம் வெளியாகியது.  அரசும் அதன் பரிந்துரைகளை ஏற்பதாக அறிவித்தது. மண்டைக்காடு வன்செயல்களில்  இராமகோபாலன், இல.கணேசன், பொன்.இராதாகிருஷ்ணன், எம்ஆர்.காந்தி, உள்ளிட்டோரின் தீவிரமான நேரடிப் பங்களிப்புகள்  வெளிப்படையானவை. ஆனால் சட்டத்தின் நிழல் கூட அவர்களைத் தீண்டவில்லை.

 ஆணைய அறிக்கையில் அரசின் அழுத்தத்தால் காவல்துறையினரின் தவறுகள் பூசி மெழுகப்பட்டிருப்பதுடன் நாடார் பக்க சாட்சிகளும்  நன்கு பயிற்றுவிக்கப்பட்டு வாக்குமூலங்களைக் கொடுத்ததாகவும்  அறிக்கையைப் பற்றியக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

 இவ்வன்செயலை அடிப்படையாகக் கொண்டு இரு புனைவுகளும் வெளிவந்துள்ளன.எழுத்தாளர் பொன்னீலனின்மறுபக்கம்’  (என்.சி.பி.ஹெச்.வெளியீடு), எழுத்தாளர் முகிலை இராசபாண்டியனின் ‘தேரி மணல்’ நாவலும்(கோவன் பதிப்பகம்). இவ்விரு நாவல்களிலும் மண்டைக்காடு வன்செயல் பற்றிய சித்திரங்களில் பல குறைபாடுகளுடன் போதாமைகளுமிருப்பதாக விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.

 ஆனால் இன்று இந்த ஆவணங்களை விட்டால் மண்டைக்காட்டின் வன்செயலை அறிவதற்கு வேறு வழியுமில்லை பாய்க்காலுமில்லை. அக்காலக் கட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் இன்று எப்படியும் அறுபதைக் கடந்திருப்பார்கள். அவர்களில் சிலரைக் கண்டாவது நடந்தவைகளைப் பற்றி இன்னும் விரிவாக அறிந்துக் கொள்ள வேண்டும்.

 மண்டைக்காடுக் குறித்து குமரி மாவட்டக்காரரான எழுத்தாளர்  ஜெயமோகன் ஒரு காற்புள்ளிக் கூட தன் பேனாவால் கீறவில்லை. தனக்கு அறிமுகமேயில்லாத இஸ்லாமிய வாழ்வியலையும் சமூகத்தையும் பற்றிய பிழையும் சரியும் கலந்த  புனைவு/அபுனைவுப்பதிவுகளுடன் கொஞ்ச காலம் தொழிற்சங்கத்தில் இருந்ததைத் தகுதியாகக் கொண்டு கம்யூனிசத்தைத் தாக்கும்  ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் படைத்தவர்.

 அவர் முழு நேர பிரச்சாரக்காக பணிபுரிந்த அமைப்பினால்  அவரின் கண்களுக்கெதிரே அவரின் சொந்த நிலத்தில் நிகழ்த்தப்பட்ட உயிரிழப்புகளும் பொருளிழப்புகளும் அவருக்குள் எதையுமே நிகழ்த்தவில்லை போலும்.

 மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி குமரி மாவட்டத்தில் ஹிந்துக்களும் கிறித்தவர்களும் கிட்டத்தட்ட சமவிகிதத்தினர். சமப் பெரும்பான்மையினர்.முஸ்லிம்களோ நான்கு சதவிகிதம் மட்டுமேயுள்ள .மீச்சிறுபான்மையினர்.

 மண்டைக்காடு வன்செயல்களுக்காக ஹிந்துத்வ ஆற்றல்கள் கற்பிக்கும் பல காரணங்களில் குமரி மாவட்டம் கிறித்தவப் பெரும்பான்மை மாவட்டமாகி விடும் என்ற பரப்புரை தலையாயது.

 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஹிந்துக்களும் கிறித்தவர்களும் கிட்டத்தட்ட சமப் பெரும்பான்மையினர் எனக் மொத்தமாகக் கூட்டிக்குவித்து கணக்குக்காட்டப்பட்டாலும் கிறித்தவ மக்கள் தொகைக்குள்ளிருக்கும் உள் பிரிவுகள்,  வெவ்வேறு சாதிக் குழுக்கள் குறித்த  விவரங்களைப்பார்க்கும் போது களப் பருண்மை விளங்கும்.

 மீனவக் கிறித்தவர்கள்,நாடார் கிறித்தவர்கள்,வெள்ளாளக் கிறித்தவர்கள்,சாம்பவக் கிறித்தவர்கள், முதலியார் கிறித்தவர்கள் என்ற சாதியப் பிரிவுகளுடன் ரோமன் கத்தோலிக்கம்,சீர்திருத்த சபை, இரட்சணிய சேனை என்ற சபை வேறுபாடுகளும் உள்ளன. கிறித்தவம் என்ற பெயரைத் தவிர இக்குழுக்களுக்கிடையே எந்த கொள்வினை,கொடுப்பினையுமில்லை.

 மண்டைக்காடு வன்செயலானது  ஹிந்து, கிறித்தவ மோதலாக வெளியில் சொல்லப்பட்டாலும் மோதல் சமயத்தில் முஸ்லிம்களும் மீனவக் கிறித்தவர்களும் தான் தாக்கப்பட்டனரேத் தவிர மற்ற சாதிக் கிறித்தவர்களுக்கு எவ்வித சேதாரமுமில்லை.

 வன் செயல்களின் எப்பகுதியிலும் எந்நிலையிலும் முஸ்லிம்களுக்கு எவ்விதப் பங்கும் ஈடுபாடுமில்லை. எனினும் கிடைத்த ஒரு வாய்ப்பில் தங்களது பல  இலக்குகளையும் நோக்கங்களையும்  ஹிந்துத்வ இயக்கங்கள் அடைந்தனர்.  

 ஈத்தாமொழியில்  ஏற்படுத்தப்பட்ட  பொருளாதார இழப்புகளின் தரவுகள் வேணுகோபால் விசாரணை அறிக்கையில் தரப்பட்டிருக்கின்றன.. இந்துக்களுக்கு அய்ந்தரை இலட்சங்கள்.கிறித்தவர்களுக்கு பத்து இலட்சங்கள். முஸ்லிம்களுக்கு அய்ந்து இலட்சங்கள் வரை இழப்புகள் நேர்ந்திருக்கின்றன.

 ஹிந்து நாடார் சாதியினர் செறிந்து வாழும் பகுதிகளில்  முஸ்லிம்களுக்கு தென்னந்தோப்புகள்,விளைகள் சொந்தமாகவிருந்தன. அங்கு காவலாளிகளாகவும் பராமரிப்பாளர்களாகவும் நாடார் சாதியினரே பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். வன்செயல் வெடித்தவுடன் அச்சொத்துக்கள் வெட்டிச் சூறையாடப்பட்டு கொள்ளையிடப்பட்டதோடு  தீயிட்டு அழிக்கப்பட்டன. இக்கணக்குகளையும் சேர்த்தால் மொத்த மண்டைக்காடு வன்செயலிலும் பொருளாதார சேதத்தில் முதலிடம் முஸ்லிம்களுக்குத்தான்.

 அவ்வன்செயலில் கடையுடன் தன் கீழ் வரிசைப் பற்களையும் இழந்த ஈத்தாமொழி முஸ்லிம் இளைஞரொருவர் நோட்டுப் புத்தகத்துடன் காயல்பட்டினம் பள்ளிவாயிலுக்கு வந்து நிதியுதவிக் கேட்டார். அழுக்கேறிய வெள்ளை வலைத்தொப்பியுடன் ஒரே நாளில் கிழடு தட்டிப்போன முகமுமாக.

 சாதிய ஒடுக்குமுறைகளைத் தவிர மத ரீதியான சிறு சச்சரவுக் கூட ஏற்படாமலிருந்த குமரி மாவட்டம் வெறுப்பு என்ற கூராயுதத்தால் பிளக்கப்பட்டது. மிகக் குறைந்த விதி விலக்கான தருணங்கள் தவிர வாழ்வின் எல்லா நிலைகளிலும் இணைந்தும் பிணைந்தும் நீடித்திருந்த சமூக ஒற்றுமை வெட்டிப் பிளக்கப்பட்டது.

மண்டைக்காடு ஆட்டம் அரசியல் சமூக வெளிகளில் பெரும்பான்மை சாதியின் ஓர்மையையும் பிடியையும் செறிவாக்கி அவர்களின் மேனிலையாக்கத்தை உறுதிப்படுத்தியதுதான் மிச்சம். நாடார் பெரும்பான்மைக் கிராமங்களில் இருந்த தங்கள் சொத்துக்களை முஸ்லிம்கள் விற்று விட்டு நிரந்தரமாக வெளியேறினர். திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளத்தின் பல பகுதிகளுக்கு அவர்கள் புலம் பெயர்ந்தனர். மண்டைக்காடுக் கோயில் திருவிழா நடவடிக்கைகளில் பங்கேற்று வந்த கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அதைத் தவிர்த்தனர். காலங்காலமாக திருவிழா கடை போட்டு வந்த முஸ்லிம்கள் அறவே இல்லாமலாகினர்.

வெறுப்பின் முதல் விதை விழுந்தபோதே அரசு விழித்திருக்க வேண்டும். குமரி முனை விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம் முளைக்கும் சமயம் முதல்வராக காமராஜரின் அரசு அதற்கு வழிவிட்டது. 1975 இல் ஆட்சியில் இருந்த திமுக அரசு விழித்துக் கொண்டு விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்திற்கு அறுநூறு அடி மேற்கே உள்ள உள்ள மைனர் ராக் பகுதியில் 33 அடி உயரத்தில் கருங்கல்லில் திருவள்ளுவர் சிலை அமைக்க முடிவெடுத்தது. இதன் பணி 1990 இல் தொடங்கி 2000 இல் சிலை திறக்கப்பட்டது.

அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. திருவள்ளுவர் சிலை உயரமும் நிமிர்வும் கொண்டதாக இருக்கலாம். ஆனால் விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்திற்கான பொது ஏற்பை ஹிந்துத்வ ஆற்றல்கள் சமூகத்திற்குள்ளிலும் அதிகாரத்தின் மேல் மட்டத்திலும் ஒரே நேரத்தில் உருவாக்கினர். இது திருவள்ளுவர் சிலை விடயத்தில் நடைபெறவில்லை. அது வெறும் நிர்வாக முடிவாக மட்டுமே செயல்படுத்தப்பட்டது.

பார்த்தோம் என்றிருக்க வேண்டும் என்பதற்காக மண்டைக்காடு கடற்கரையை ஒற்றை நோட்டமிட்ட பிறகு வண்டியைக் கிளப்பினோம்.மீதமிருந்தநாட்களில் திட்டுவிளை,திருவிதாங்கோடு,குளச்சல்,தேங்காய்ப்பட்டினம்,களியக்காவிளை,பூவாறு,பாலராமபுரம்,கோட்டாறு எனப் போய் வந்தோம்.

 இரு மாநிலங்களின் சந்தியாக இம்மாவட்டம் விளங்கினாலும் தன் மொழிப் பன்மயத்தன்மையை மிக இயல்பாகப் பேணி வருகிறது.பெரும்பான்மையாக தமிழும் ஓரங்களில் மலையாளமும் மலை முகடுகளில் காணி மொழியும் மட்டுமே கொண்ட நிலம் குமரி மாவட்டம் என இது நாள் வரையில் நினைத்திருந்ததை மாற்றும் வகையில் வீட்டில் உர்தூ பேசும் தக்னிகளும் வாழ்ந்திருக்கின்றனர் என்றனர் அன்சாரும் கபீர் காக்காவும். இந்நிலம் காக்க மார்த்தாண்ட வர்மாவிற்காக போரிட்டு உயிர் நீத்தவர்களின் பின் தோன்றல்கள்தான் இங்கிருந்த தக்னிகள்.

கோட்டாறும்,திட்டுவிளையும்,ஆளூரும்,தக்கலையும்,திருவிதாங்கோடும்,தேங்காய்ப்பட்டினமும் ஆன்மிகச் செல்வர்களை தன்னகத்தே பொதிந்துள்ள ஊர்கள்.காயல்பட்டினத்து ஆன்மீகத் தொடர்புகளை இங்கெல்லாம் அறியக்கிடைத்தது.

 மொழியினடிப்படையில் இம்மாவட்டம் பிரிக்கப்பட்டது குறித்த பச்சை உண்மைகளையும் தற்செயலாகத்தான் சந்தித்தோம்.இதை ரிஹ்லா திருவிதாங்கூருக்குக் கிடைத்த சன்மானக் கொத்து என்று சொல்ல முடியும். அத்தனை நுண் விவரங்கள்.

இப்பிரிவினைக்கு மூல வித்தாக வெளியில் தமிழ்ப்பற்று எனச் சொல்லப்பட்டாலும் உள்ளில் தாணுலிங்க நாடார் x நேசமணி ஆளுமை மோதல்கள், அதிகாரக்கட்டிலுக்காக நாயர் x நாடார் சாதி மேலாதிக்கப் போட்டி ஆகியவைகளும் தலையாயக் காரணிகளாகியிருக்கின்றன.

இப்பிரிவினைகளிலும் முஸ்லிம்கள்தான் கூடுதல் இழந்திருக்கின்றனர். குமரி மாவட்ட எல்லையோரத்தில் உள்ள மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் கல்வி,பண்பாட்டுத்துறையில் அவர்கள் முன்னர் வரைப் பெற்று வந்தவற்றை இழந்திருக்கின்றனர். மக்கள் தொகை விகிதப்படி சதவிகிதம் குறைந்திருக்கிறது. அது போக இவர்களின் தாய்மொழி உரிமையை பறிக்கும் விதத்தில் தமிழ்நாட்டரசு கொண்டு வந்த அரசாணையையும் சுட்டிக்காட்டினர்.பெரு மதத் தெய்வங்களைப்போலவே  பெரு மொழி தெய்வங்களும்  மொழி ரீதியான விளிம்பு நிலை சிறுபான்மையினரைப் பலிகேட்கின்றன.

தோப்பில் முஹம்மது மீறானின் நிலம், திருவிதாங்கூர் அரசாட்சியில் குமரிமக்கள் அடைந்த துயரங்கள், மதத்தைத் தின்ற சாதிய உறவின் கட்டிறுக்கம், அர்வி மொழி வாழ்வனுபவங்கள்,கறாமாத்துக்கள் என கேட்க பார்க்க கதைக்க எவ்வளவோ இருக்கின்றன குமரி/திருவிதாங்கூர் மண்ணில்.

ரிஹ்லா திருவிதாங்கூரின் இறுதி நிகழ்வாக அஹ்மது கபீர் காக்காவின் சேகரத்திலுள்ள பழம் ஏடுகளையும் ஓலைச்சுவடிகளையும் பார்வையிடுவதாகத் திட்டமிட்டிருந்தோம். அவரவர் ஊர் நோக்கிப் புறப்படும் அவசரத்திலிருந்ததால் அது சரியாக நடைபெறவில்லை.

இம்மண்ணின் ஆளுமைகளான கோட்டாறு அஹ்மது கபீர் காக்காவும் மிடாலம் அன்ஸாரும் குமரி மாவட்டப் பரப்பையும் தாண்டி தமிழ் முஸ்லிம் வரலாற்றாய்வு. தமிழ், அர்வி, அறபி மலையாள இலக்கியங்கள், உள்ளூர் வரலாறு, தொன்மம், சுவடி சேகரம் என்பனவற்றின் மனிதர்களாவர். அவர்களோடு எப்போது உரையாடக் கிடைத்தாலும் வரலாற்றுத்துணுக்குகளை பொழிந்துக் கொண்டே இருக்கக் கூடியவர்கள்.

 தங்கள் சொந்த வாழ்வின் அசௌகரியம்,கடினங்களிலிருந்து தாங்கள் நேசிக்கும் வாழ்க்கைக்கான நேரத்தையும், ஆற்றலையும் கடைந்தெடுக்கக் கூடியவர்கள். அவர்களைப் போற்றுலும் புரத்தலும் சமூகத்தின் கடனாமே. 


#ரிஹ்லாதிருவிதாங்கூர்RIHLATRAVNCORE



No comments:

Post a Comment