Tuesday 31 December 2019

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - நிறைவுப்பகுதி

ஆங்கில மூலம் : கௌதம் பாட்டியா, பென்குயின் வெளியீடு








எல்லாவிதமான பகட்டுக்களையும் வெறுத்து ஒதுக்கும் லாரி பேக்கரின் இந்த நடைமுறையானது லாரி பேக்கர் கட்டிடக்கலை என்று அழைக்கப்படும் கட்டிடக்கலையின் இரண்டு முக்கிய குணாம்சங்களை நமக்கு காட்டுகின்றது.
“ சிறியது “ என்பது அழகானது மட்டுமல்ல அத்தியாவசியமானதும் கூட அது “ பெரியது “ என்பதை விட இன்னும் அத்தியாவசியமானதும் கூட.

உண்மையான கட்டிடச் சிக்கல்களுடன் உலகின் வசிப்பிட தேவைகளையும் கட்டிடக்கலைஞர்களாகிய நாம் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டுமென்றால் இயன்ற அளவு மலிவாக கட்டுவது எப்படி என்பதை நாம் கற்றாக வேண்டும்.
ஆகவே எனது விருப்பங்களும் பணிகளும் விரிவாக்கம் பெற்றிருந்தன. பேக்கரின் இரையை முறையான கல்வி உலகு மெல்ல கவ்வ தொடங்கியிருந்தது. அதே போல மருத்துவ உலகும் எச்சரிக்கை கலந்த விருப்பத்துடன் இருந்தது.


கிராமீய பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளுடன் நகர்ப்புற கல்லூரிகளும் கூட நூலகம் , கேட்போர்கூடம் { auditoriam}  போன்றவற்றை கட்ட விரும்பினர். பல்வேறு பயிலகங்களுக்கு வடிவமைத்துக் கொடுப்பது என்பது எனது அன்றாட தொழிலாகி விட்டது.

மேலதிகமாக வந்த  மத ரீதியிலான கட்டிடங்களை கட்டுவதற்கான அழைப்பையும் என்னால் மறுதலிக்க இயலவில்லை. பகட்டு கூடாது என்ற நிபந்தனையுடன் எனது வரை பலகையில் ஆசிரமங்கள் , ஜெபக்கூடங்கள் ,தேவாலயங்கள் இருந்தன.  எனது இயல்பில் இரு பிளவுகள் இருந்ததை எண்ணி குழம்பியிருக்கின்றேன். அதாவது சன நாயகத்தில் நம்பிக்கை உள்ளவன் என என்னை நானே கூறிக்கொள்கின்றேன். அதே நேரத்தில் அனைத்து அதிகாரம் கொண்ட கட்டிடக்கலைஞனாகவும் இருக்க விரும்புகின்றேன் என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

பிறரின் மத நமபிக்கைகள் , நடைமுறைகள் விஷயத்தில் நான் சகிக்கக்கூடியவனாக இருந்திருக்கின்றேன். ஆனால் அவர்களது நம்பிக்கைகளுக்கு கூட பொருத்தமற்ற , தவறான சில மதக்குழுக்களின் வேண்டுதல்களை நான் கண்டித்திருக்கின்றேன்.

என்னைப்பொருத்தவரை ஒரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ற வகையில்தான் கட்டிடங்கள் அமைய வேண்டுமேயல்லாது லாரி பேக்கரின் விருப்பத்தில் அல்ல. அதே நேரத்தில் அந்த வாடிக்கையாளர் தன்னுடைய மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் விதமானது என்னை புண்படுத்துவதாக இருக்கும் பட்சத்தில் அவருக்காக வடிவமைப்பதை இயலாத ஒன்றாக நான் கண்டிருக்கின்றேன்.

சுருக்கமாக கூறுவது என்னவென்றால் படைத்தவனுடன் நேரடியாக ஒன்றுவதற்கான ஒரு வழிமுறை இருக்கின்றது. மனிதன் எந்த இடத்திலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எக்கால கட்டத்திலும் இதை மனிதன் உணர முடியும். தனித்துவமான மதச் சூழல் என்பவையெல்லாம் தேவையற்ற ஒன்றே. மக்கள் அவற்றில் உதவி தேடினாலும் கூட அவை தேவையற்ற ஒன்றுதான்.
ஒரு வீடானது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் ?

ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கே உரிய  தனிப்பட்ட பாணியில் குடும்பத்துடன் ஒன்றாக வசிப்பதற்கு தோதுவாக அந்த  இல்லமானது அமைக்கப்பட வேண்டும்.

இந்த வீட்டிற்கான திட்டமிடலும் வடிவமைப்பும் நன்றாக அமைக்கப்பட்டது என்பதற்காக அதன் வெளிப்புறமானது பகட்டானதாக அமைய வேண்டும் என்பதில்லை. வணங்குவதற்கும் சடங்குகளை செய்வதற்கும் மக்கள் ஒன்றாக கூடும் வழிபாட்டு கட்டிடங்களுக்கும் இதுதான் முறை.

இது போன்ற வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான பொருத்தமான வெளியை தன்னால் இயன்ற அளவிற்கு உண்டு பண்ண முயல்வான் ஒரு கட்டிடக்கலைஞன்.

முதலும் முடிவுமற்ற நிரந்தர ஆற்றலுடன் பிணைப்பை தேடும் இது போன்ற கட்டிடங்களின் முகப்பை பகட்டாக அமைப்பது என்பது சரியில்லை.
எந்த கட்டிடமானாலும் சரியே ! அவற்றின் முகப்பிற்கு எதிரானதுதான் லாரி பேக்கரின் கட்டிட பாணியாகும். இதுதான் அதன் தனித்தன்மையான கவனிக்க தக்க குணாம்சமும் ஆகும்.

பித்தோராகடில் எங்களது தங்கல் முடிவுறுவும் காலத்தில் சிறப்பான விரும்பத்தக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. கட்டிடம் கட்டுதலில் செலவை குறைப்பது தொடர்பாக அரசும் மெதுவாக விசாரிக்க தொடங்கியது. மிகவும் தேவை என வலியுறுத்தப்பட்ட ஆனால் அத்தியாவசியமற்ற விரும்பத்தகாத கட்டிடக்கலை நடவடிக்கைகளை பற்றி மூத்த அரசு செயலாளர்கள் உண்மையிலேயே கரிசனம் கொள்ளத் தொடங்கினர்.

அரசு முகமைகளினால் கட்டப்படும் அரச கட்டிடங்களின் செலவை குறைப்பதற்கு ஏதாவது சாத்தியமான வழிகள் உண்டா  என்பது பற்றி என்னிடம் முதலில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கேட்கப்பட்டது. இந்த தருணத்தில் எனது சக கட்டிடக்கலைஞர்களினிடையே நான் செல்வாக்கை இழக்கத் தொடங்கியிருந்தேன்.

என்னிடம் அரசு ஆவணக்கட்டிடத்தின் வரைபடம் காட்டப்பட்டதாக நினைவு. அதன் நுழைவு தாழ்வாரமானது பெரும் தொகையிலான படிக்கட்டுகளும் மிகையான அலங்காரங்கமுடைய தூண்களைக் கொண்ட புனித பால் பெரிய தேவாலயத்தின் மேற்கு முகப்பைப்போல இருந்தது. 

பொது மக்கள் இது போன்ற கட்டிடங்களை பயன்படுத்த மாட்டார்கள் என்பதுடன் அதில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் நாற்பதுக்கும் குறைவாகவே இருந்தது.

இவ்வளவு பெரிய முகப்பு தாழ்வாரம் எதற்கு என நான் கேட்டதற்கு திரு. ஜவாஹர்லால் நேருவினால் அது திறக்கப்பட உள்ளதினால்தான் அவ்வளவு பெரிய முகப்பு தாழ்வாரம் தேவைப்படுகின்றது என விடை தரப்பட்டது. அரசு அலுவலர்களிடம் ஏற்பட்ட இந்த சிறு உராய்வுகளை நான் ரசித்தேன். அதோடு நான் அதிகாரப்பூர்வ ஆலோசகராகவும் ஆகி விட்டிருந்தேன்.

பல்வேறு காரணங்களுக்காக இமாலய வீட்டிலிருந்து நாங்கள் எங்களது வேர்களை கிளப்பி தெற்கு நோக்கி அதாவது கேரளாவிற்கு சென்றோம். உள்ளூர் மூங்கில் கட்டிடக்கலைப்  பாணியின் உச்ச கட்ட அழகுடைய மாநிலம் கேரளா.

மீண்டும் நாங்கள் ஒரு தொலைவான கிராமப் பகுதியில் முதலில் எங்களுக்கான வீட்டையும் மருத்துவமனையையும் நாங்களாகவே கட்டினோம். அது முழுக்க முழுக்க உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உள்ளூர் பாணியிலேயே அமைக்கப்பட்டது.

வட இந்தியாவை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைப்பில் வாழ்வதற்காக நாங்கள் இங்கு குடியேறினோம். கேரளாவிற்கும் இந்தியாவிற்குமான உறவானது பிரிட்டனுக்கும் மீதமுள்ள அய்ரோப்பாவிற்கும் உள்ள உறவைப் போன்று இருந்தது.

இங்குள்ள மக்கள் தனித்த மனப்பான்மையுடையவர்களாகவும் பெருமிதம் மிக்கவர்களாகவும்  விளங்கியதோடு அவர்களின் வழிமுறைகளும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் தங்களுக்கு தாங்களே பிறரை விட மேலானவர்களாக  கருதிக் கொண்டனர்.

மிக கூடுதாலான மக்கள் கல்வியறிவு பெற்று விளங்கினர். குறிப்பாக பெண்களும் நல்ல கல்வியறிவு பெற்று விளங்கினர். இதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. எடுத்துக் காட்டாக உள்ளூர் கட்டிடப் பொருட்களை பயன்படுத்துவதற்கு நிறைய கவர்ச்சிகரமான வழிமுறைகள் உண்டு.தென்னை ஓலைகள் கீறி பின்னப்பட்டு ஓலைக்கூரையாக வேயப்படுகின்றது. இது பார்ப்பதற்கு இதமாகவும் தட்ப வெப்பத்திற்கு மிகச் சிறந்த காப்பாகவும் விளங்குகின்றது.

தங்கள் மேலதிக  நேரத்தில் இந்த பின்னல் வேலையைச் செய்பவர்கள் அனேகமாக பெரிய பெண்கள்தான் . இப்போது அனைத்து பெண்களும் பள்ளிக்கூடத்திற்கும் கல்லூரிகளுக்கும் செல்லத் தொடங்கி விட்டனர். எனவே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் கூரை மறு வேய்தலுக்கு தேவையான தென்னங்கீற்றுகளை பின்னுவதற்கு நேரமும் இல்லை . அதற்கான .ஆர்வமும் மங்கி விட்டது.

இது போன்ற பல காரணங்களுக்காக பழைய பாணிகளை கைவிட்டு சிமிட்டியையும் வலுவூட்டப்பட்ட கற்காரையும் தாராளமாகப்  பயன்படுத்தும் நவீனப் கட்டிடப்போக்கு வலுவடையத் தொடங்கியது.

நான் வழமையாக என் மனைவியின் மருத்துவமனை வேலைகளை பங்கு போட்டுக் கொள்வேன். ஆனால் கூடுதலாக கட்டிட வேலைகளில் ஈடுபட்டுவிடுவதனால் எனக்கு அதற்கு மிக குறைய நேரமே இருந்தது.

 நிறைய ஆட்களும் நிறுவனங்களும் கட்டுமான செலவை குறைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். கேரள பேராயர் { Bishop }    மாநாட்டிற்குப்பிறகுதான் இந்த ஆர்வம் கூடத்தொடங்கியது. அந்த மாநாட்டில் சராசரி ஏழை குடிமகனின் நல்வாழ்விற்காக ஒன்றிணைந்து உழைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்காக முயற்சிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் ஒவ்வொரு மாவட்ட கிளைப்பிரிவிலும் குறைந்த பட்சம் ஒரு மலிவான சிறிய வீட்டைக்கட்டி சாதி இன வேறுபாடு பாராமல் ஏழை குடும்பம் ஒன்றிற்கு அளிக்க  கட்டாயம்  முயற்சிப்பது என பெரும் முழக்கங்களுடன் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் மூன்று வருடங்கள் கழிந்த பிறகு பார்த்தால் ஓரிரண்டு வீடுகள்தான் அப்படி கட்டப்பட்டிருந்தன. இந்த தோல்வியை ஆராய கலந்தாரய்வு ஒன்றிற்கு மார் கிரிகோரியஸ் என்ற திருவனந்தபுரத்து தலைமை குரு அழைப்பு விடுத்தார். அந்த கலந்தாரய்வு அமர்வில் பங்கேற்றவர்கள் “ மலிவான கட்டிடம் என்று ஒன்று இல்லை “ எளிதாக சொல்லி விட்டனர்.

குறைந்த விலை கட்டிடம் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் 40 சதுர அடியில் ரூபாய் 3000/= ( $400/= அன்றைய மதிப்பு ) சிறிய வீடு ஒன்றை இரண்டு வார கால அவகாசத்தில் கட்டித்தருமாறு கேட்டனர்.

அதே போல கட்டி முடிக்கப்பட்ட வீட்டை பார்ப்பதற்கு மாநாட்டின் பெயராளர்கள் { Representative } பார்க்க வந்தனர். வந்து பார்த்தவர்கள் “ இந்த வீடு ஏழைகளுக்கான மிக நல்ல வீடு “ என நாங்களே வியக்கத்தக்க வகையில் அறிவித்தனர். எனவே பாதி செலவில் கட்டக்கூடிய இது  போன்றதொரு இரண்டாம் வீட்டை கட்டும்படி தலைமை குரு கேட்டார்.

இந்த தொடக்கத்திலிருந்து வரிசையாக சிறிய வீடுகள் , பள்ளிக்கூடங்கள் , மருத்துவ குடில்கள்  (CLINIC ) , மருத்துவமனைகள் , தேவாலயங்கள் என கட்டப்பட்டன. என்ன நடக்கின்றது என அரசு பார்க்க தலைப்பட்டது.
மாநில முதல்வரும் மனம் மாறி விட்டார். சிறு தொகையை ஒதுக்கி மாநில மொழி பயிலகத்தை கட்டும்படி அவர் கூறினார். இந்த தொகையில் கட்டுவது சாத்தியமில்லை என அரசின் பொதுப்பணி & வீடு கட்டுமான துறை சொல்லி விட்டது.

அரசு நிறுவனங்கள் ,  பகுதி அரசு  நிறுவனங்களுக்கான எனது கட்டுமான பணி தொடர்ந்தது. குறிப்பாக சொல்வதென்றால் தாராளமான , கீர்த்தி மிக்க வளாகத்தை கொண்டுள்ள Centre For Development Studies (CDS ) என்ற உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனத்தை கட்டினேன்.

இந்த நிறுவனத்தை திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர் பின் வருமாறு அறை கூவல் விடுத்தார்.

“ இந்த நிறுவனத்தை உருவாக்கி நடத்திய வழியிலேயே தங்களுடைய பொருளாதார கோட்பாடுகளையும் செயலாக்கி நிரூபிக்க வேண்டும் “
இந்த காலகட்டத்தில் கட்டுமான துறையில் உள்ள தன்னல சக்திகளிடமிருந்து எனக்கு மிகப் பெரும் சிக்கல்கள் வரத் தொடங்கின. கட்டிடத்தின் மொத்த அல்லது பகுதி கட்டுமான செலவிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதம் அவர்களுக்கு ஊதியமாக கிடைத்துக்கொண்டிருந்தது. அவர்கள் செலவு தொகையை குறைக்க ஆயத்தமாக இல்லை.கைவினைஞர்களுக்கும் அதே போல்தான் ஊதியம் கொடுக்கப்படுகின்றது. அவர்களும் தங்களது ஊதியத்தை குறைக்க அணியமாக இல்லை.

என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை தந்து கட்டிடம் கட்டச் சொல்வார்கள். அத்துடன் நான் குறிப்பிடும் கட்டுமானச் செலவின் இரட்டிப்பு தொகைக்கு கூட கட்டிடங்களை கட்டவியலாது என வழமையான கட்டுமானக்காரர்கள் குறிப்பிடுவதாக என் வாடிக்கையாளர்கள் சொல்வதைக் கேட்டு எனக்கு அலுத்து விட்டது.

செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் சொன்னதை செய்யக்கூடிய கொத்தனார்களையும் , தச்சர்களையும் கொண்ட ஒரு குழுவை கூட்ட வேண்டும். அவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கற்பதோடு பழைய வீணானவற்றை கை விடுவார்கள். இந்த முறையானது எனக்கும் , கட்டிடப் பணியாளர்களுக்கும் , வாடிக்கையாளர்களுக்கும் இலாபகரமானதாக இருந்தது.

எடுத்துக் காட்டாக அவர்களில் சிலர் உன்னதமான செங்கல் கலைஞர்களாக ஆகியதோடு அழகான செங்கல் வேலைப்பாடுகளை உண்டாக்குவதில் அபரிமிதமான நிறைவும்பெற்றனர். லாரி பேக்கர் கட்டிடக்கலை என்றழைக்கப்படும் இந்த கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களுக்கு காரணமான கைவினைஞர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன். 

அவர்களின் உதவியோடுதான் என்னால் சிறிய வீடுகள் தொடங்கி 3000 பேர் வரை அமரக்கூடிய பெரிய தேவாலயம் உள்ளிட்ட  எந்த ஒரு கட்டிடத்தையும் கட்ட முடிந்தது. மூன்று வகையான இருப்பிட தேவைக் குழுவினர்கள் இந்த செயல்திட்டத்தின் வாயிலாக பலன் பெறுவதை அறிந்து குறிப்பாக நான் மன நிறைவுற்றேன்.

எடுத்துக் காட்டாக ஒரு கடுங்காற்றில் மீனவ கிராமத்தின் குடிசைகள் கடலால் அடித்துச் செல்லப்பட்டன. அந்த மீனவ கிராமத்தின் வீடுகள் மீண்டும் லாரி பேக்கர் முறையில் கட்டப்பட்டன. ஏழைகளுக்கு மிக்குறைந்த செலவில் நிறைய வீடுகளை பல நிறுவனங்கள் கட்டின. அதன் பிறகு சமூகத்தின் உயர்ந்த தட்டில் உள்ளவர்கள் தங்களுக்கான இருப்பிடங்களை எளிமையான குறைந்த செலவில் கட்டித் தருமாறு கோரினர்.

கீழ் நடுத்தர பிரிவு மக்களுக்கு குறைந்த செலவு கட்டிட தொழில் நுட்பம் என்பது ஒரு பெரும் வெகுமதிதான். உடைகளை உடுத்துவது கல்வி கற்பது பிள்ளைகளுக்கு திருமணம் முடிப்பது போன்றவற்றில் தங்களுக்கான ஒரு வாழ்க்கை படித்தரத்தை பேண வேண்டும் என கீழ் நடுத்தர பிரிவு மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர்களின் உழைப்பு ஊதியத்திற்குள் வீடு கட்டுவதற்கான சேமிப்பை சாதிக்க முடியவில்லை. அதை தங்களால் எட்ட முடியாத ஒன்றாகவே அவர்கள் கருதுகின்றனர்.

இப்போது அப்படிப்பட்டவர்கள் வீடு ஒன்றை கட்ட முடியும். செலவு குறைப்பு என்பதில் பொதிந்துள்ள தத்துவத்தை அவர்கள் விரைவாக புரிந்து கொள்கின்றனர். அத்துடன் வீடு கட்டுவதில் உள்ள உண்மையான முதன்மைத் தேவைகளையும் அவர்கள்  புரிந்து கொள்கின்றனர். குறைந்த செலவு கட்டிட நிபுணரை அவர்கள் நம்புகின்றனர். தங்களால் இயன்ற அளவிற்கு உதவிடவும் செய்கின்றனர்.

அரசானது மேலும் விருப்பத்தை தெரிவித்தது. அவர்கள் செலவு குறைப்பு வழிமுறைகளைப்  பற்றி ஒரு அறிக்கை கேட்டனர். விநோதமான கருத்துக்களையுடைய ஒரு தனியாளிடம் அரசானது அதிகாரப்பூர்வமான அறிக்கை கேட்பதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

என்னுடன் வெளியிலிருந்து மூன்று அரசு நிபுணர்களும் சேர்ந்து அறிக்கையை முன்வைத்தோம். முதல்வர் ஒரு ஆய்வரங்கை கூட்டினார். அதில் இந்த அறிக்கை புடைத்து எடுக்கப்பட்டது. அறிக்கை பரிந்துரைத்தவற்றில் நடைமுறை சாத்தியமானவை ஏற்கப்பட்டன. சாத்தியமற்றவைகள் நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக அறிக்கையில் உள்ள அனைத்தும் ஏற்கப்பட்டன. ஆனால் வருடங்கள் பல கழிந்த பின்னர் அந்த அறிக்கையானது மிகச் சிறிய அளவில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

தொழில் துறையில் உள்ளோர் கடினமான நடைமுறைக் கோட்பாட்டாளர்கள் ஆவர். செலவு குறைக்கும் கொள்கையை அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் எடுத்து சென்றார்கள். சிறிய வீட்டிலிருந்து பெரிய தொழிற் சாலைகள் , வார்ப்பட களங்களை கட்டுவது என்பது பெரிய விஷயம்தான். ஆனால் அது சாத்தியமாயிற்று.

சக்கரம் தனது சுற்றை முழுமையாக்கி விட்டது. இந்த தொழிலதிபர்கள் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்துகின்றனர். நானோ அவர்களுக்கான பெரும் தொழிற்சாலைகளை கட்டுவதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிலகங்கள் , விடுதிகள் ஆகியவற்றையும் கட்டுகின்றேன்.
இறுதியாக எனது பணி வாழ்க்கையில் நிலை பேறாக நான் கண்டது இதுதான் : திட்டமிடுதலும் வடிவமைப்பதுமான இந்த முழுத் தொழிலானது களிப்பும் ஈர்ப்பும் நிறைந்த ஒன்றாக  மாறி விட்டது.

எப்போதும் இயற்கைக்கு நெருக்கமாக வாழ்ந்து வருவதால் இறைவனின் படைப்பின் வடிவமைப்புக்களில் நான் நிறைய படிப்பினைகளை கற்றுக் கொண்டேன். சதுரமும் நீள்சதுரமும் மிக அரிதாகவே இருந்தன. வளையமானது மிக கூடுதலாக பயன்படுத்தப்பட்டிருந்தது. நேர் கோடு என்பதும் அரிதுதான். ஆனால் வனப்பு மிக்க வளைகோடுகளை  நிறைய காண முடிந்தது.

சுவையான அறிவியல் அவதானம் என்ன வென்றால் ஒரு நிலப் பரப்பினை சூழ சுவர் கட்டும்போது அந்த பகுதியானது வட்ட வளையமாக இருந்தால் சுவரின் நீளம் குறையும். ஆனால் அந்த நிலப்பகுதியானது சதுரமான நீள் சதுரமான அமைப்பில் இருந்தால் சுவரின் நீளம் கூடுதலாகும். செலவு குறைக்கும் நடவடிக்கைகளில் இது இன்றியமையாத ஆக்கக்கூறாகும். அத்துடன் வெளி அல்லது இடம் தொடர்பான திட்டமிடுதலில் ஏற்படும் சிக்கல்களுக்கு சதுரம்  நேர் கோடுகளுக்கு மாற்றாக வட்ட வளையத்தையும் வளை கோட்டையும் பயன்படுத்தி விடை கண்டுள்ளேன். அதன் மூலம் கட்டிடமானது களிப்பு நிறைந்ததாக ஆகி விடும்.
``
லாரி பேக்கர் பாணியிலான குறைந்த விலை கட்டிடக்கலை தொடர்பான இணைய தளங்கள் :

http://www.earth-auroville.com/index.php

--------------------------------


தொடர்புடைய பதிவுகள்:
த்

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் -- பகுதி 1

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் -- பகுதி 2

லாரி பேக்கர் வீடும் , அவர் கட்டிய கட்டிடங்களும் -- திருவனந்தபுரம்

சுவாசிக்கும் வீடுகள்




No comments:

Post a Comment