Tuesday 31 December 2019

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் -- பகுதி 2



ஆங்கில மூலம்: கௌதம் பாட்டியா, பென்குயின் வெளியீடு

 லாரி  பேக்கர் கட்டிடக்கலையைப் பற்றி லாரி பேக்கர் ….






 நண்பர்கள் கழகத்தை ( QUAKER  SOCIETY )    சார்ந்த தோழர்களிடம் தங்கியிருந்தேன். அவர்கள் காந்தியடிகளுக்கு நெருக்கமானவர்கள். காந்தியடிகளிடம் இந்திய சீன மக்களின் வாழ்வியலைப்பற்றி எழுச்சியூட்டுகின்ற உரையாடலை நிகழ்த்திடும் பேற்றை பெற்றேன்.


காந்தியடிகளிடம் அமர்ந்திருக்கும் நாட்களில் சீன நாட்டுத் துணியினால் செய்யப்பட்ட எனது காலணியைப் பற்றி அவருக்கு  விளக்கிக் கூறுவேன். அதன் பின்னர் எனது வீட்டிற்கு திரும்பும் வழியில் உள்ள தெருக்களில்  ‘ வெள்ளையனே வெளியேறு ‘ என்ற முழக்கத்தையும் கேட்க வேண்டி வரும். இது மிகவும் வித்தியாசமான பட்டறிவாக இருந்தது.

இந்தியாவில் நான் கட்டாயமாக தங்கியாகி இருக்க வேண்டிய கால கட்டத்தில் மாளிகைகளையும், சேரிகளையும் கண்டேன். மிகப்பெரிய ஆட்களுடனும் பழகியுள்ளேன். வறிய தாழ்ந்த மக்களிடமும் கலந்துறவாடியுள்ளேன். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டு வந்த காலகட்டம் அது .

அந்த சமயத்தில் பிரிட்டனிலிருந்து திரும்ப வந்து இந்தியாவில் தங்கி பணி புரிந்திடும் பேராவல் எனக்கிருந்தது. அதை  காந்தியடிகளிடம் தெரிவித்தேன். அவரும் நான் இந்தியாவிற்கு திரும்பிடுவதை ஊக்கப்படுத்தினார்.

எனினும் நான் போரால் சிதைக்கப்பட்ட பமிங்க் ஹாமுக்கு { Birmingham , Biritan} இறுதியாக திரும்பினேன். போர் முடிவிற்கு வந்தவுடன் கட்டிடக் கலைஞர்கள் பெருமளவில் தேவைப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
இருந்த போதிலும் , இந்தியாவில் பல லட்சக்கணக்கணக்கான் மக்களுக்கு வீட்டின் தேவை என்பது மிகவும் பெரியதாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு வீட்டை கட்டுவதற்கான உதவியை செய்யக்கூடிய ஆட்கள் கிடைப்பது குறைவாக இருந்தது. 

ஆனால் பிரிட்டனில் இந்த மாதிரி உதவி செய்யக்கூடிய ஆட்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இந்தியாவை விட கூடுதலாக உள்ளது. எனவே அடுத்த சில மாதங்களில் நான் இந்தியாவை நோக்கி கப்பலில் பயணப்பட்டேன்.
சமய சமூக நலப்பணி  ஆற்றும் அமைப்பொன்றில் { MISSIONARY  }  நான் ஒரு கட்டிடக்கலைஞனாக சேர்ந்து கொண்டேன். அந்த நலப்பணி அமைப்பானது பல மதப் பிரிவினரிடையே பணியாற்றும் உலகளாவிய அமைப்பாகும். தொழு நோயாளிகளின் பால் அக்கறை காட்டுவதுதான் அவர்களின் முழு முதல் பணியாகும்.

இந்தியாவிற்கு நான் வந்தவுடன் அன்றைய இந்தியாவின் ஒன்றுபட்ட மாகாணம் என்றழைக்கப்பட்ட ஆக்ரா , அவத் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் பணியாற்ற அனுப்பப்பட்டேன். சமய சமூக நலப்பணியாளர்களான முதிய தம்பதியரிடம் என் பணிக்கான வழிமுறைகளை நான் கற்க வேண்டியிருந்தது.
என்னை “ ஸாஹிப் “ “ வெள்ளைக்காரன் “  “ ஏகாதிபத்தியவாதி “ என அழைக்கத்தொடங்கவும் நான் நடுங்கிப்போனேன்.

பரந்த சொகுசு வீடு ஒன்றில் ஏராளமான பணியாட்களுடன் நான் வசிக்க வேண்டி வந்தது. இரவு உணவுக்கு என தனி ஆடையை நான் அணிய வேண்டியிருந்தது. செய்யக்கூடியவை , செய்யக்கூடாதவை என கண்டிப்பான நடத்தை முறைகள் இருந்தன.

இந்த நடைமுறைப்படி நான் குதிரையின் மீது ஏறிச் செல்லலாம் ஆனால் மிதி வண்டி ஓட்டக்கூடாது. இரண்டு வாரங்கள் கழிந்த பிறகு நான் இந்த நடைமுறைகளுக்கு என் எதிர்ப்புணர்வைக் காட்டினேன். ஒரு மிதி வண்டியை வாங்கினேன். அதில் ஏறி 7 கிலோ மீட்டர் பயணித்து தொழு நோய் மருத்துவமனையில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவருடன் தங்கச் சென்றேன்.
எனக்கு உடனடியாக சில சிக்கல்கள் தோன்றின. எனது பணியோ உணர்வூக்கம் நிறைந்ததாக இருந்தது. அந்த உணர்வு ஊக்கம்தான் என்னை கிராமப்புற இந்தியா முழுக்க சுமந்து சென்றது.


தொழு நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள்  “ தொழு நோயாளி “ என அழைக்கப்பட்டனர். இந்த சொல்லாடலில் அத்தனை பெரும் அச்சமும் கெடு கூறுகளும் தொக்கி நின்றன. சராசரி மனிதர்களுடன் கலந்துறவாடாமல் அவர்கள் பிரித்து ஒதுக்கப்பட்டு காப்பிடத்திற்கு  [ASYLUM]  கும்பலாக ஓட்டிச் செல்லப்பட்டனர்.

ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது நவீன மருந்துகள் தோற்றுவிக்கப்பட்டன. அவைகளில் சில தொழு நோயை குணப்படுத்துவதில் உதவிகரமாக இருந்தன. மிக மோசமான இந்த நோயின் நற் பேறற்ற பலி உயிர்களின் மருத்துவ பரிகார விஷயத்தில் புதிய அணுகுமுறை வந்தது. இந்த மருந்துகளின் மூலம் குணம் அடைவது சாத்தியம் எனில் அந்த சமயத்தில் தொழு நோயாளிகள் நம்பிக்கையுடன் செல்வதற்கு மருத்துவமனைகள் தேவைப்படும்.
தங்கள் வாழ்நாள் முழுக்க  சமூக புறக்கணிப்பு செய்யப்படுவதைக் காட்டிலும் மேற்கண்ட புதிய மாற்றங்கள் மூலம் அவர்கள் படிப்படியாக சராசரி வாழ்க்கைக்கு திரும்ப இயலும்.

எனது தலையாய பணி என்னவெனில்  ,பெரும் அச்சம் தரக்கூடிய பழைய காப்பிடங்களை முறையான மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும். அத்துடன் குடியிருக்கவும் மறு வாழ்வு பெறவுமான நடுவங்களை {CENTRE} உருவாக்க வேண்டும். ஆனால் இந்த மாதிரியான புது வகை பரிகார முறைகளுக்கு முன்னோடிகள் ஒன்றுமில்லை. மருத்துவ நிபுணர்களும் மிகக்குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர். 

அவர்களுக்கு இந்த புது பிரச்சினைகள் குறித்து தவிர்க்க இயலாத வகையில் வேறுபாடான ஏன் மோதலான கருத்துக்களைக் கூட கொண்டிருந்தனர்.
என்னை எனது பணியில் வழிகாட்டுபவர் யார் ? அறிவுறுத்தல்களுக்காக நான் யாரை போய் பார்ப்பது ? உண்மையில் எனது வாடிக்கையாளர்கள் யார் ? 


எனக்கு சம்பளம் வழங்கும் சமய சமூக நலப்பணி அமைப்புதான் எனது வாடிக்கையாளரா ? அல்லது பெரும் கலக்கத்தை உண்டு பண்ணும் இந்த நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் நோயாளிகளின் இன்னல் நீக்க தன்னலம் கருதாது பணியாற்றும் மருத்துவர்களா ? அர்ப்பணிப்பு மிக்க பணியாளர்களா ? அல்லது நோயாளிகளா ?

 நான் எனது வாழ்க்கைப்போக்கின் இந்த சந்தியில் ஒரு முடிவை தேர்வு செய்தேன். மருத்துவமனையில் வாழ வேண்டும் என்பதே அந்த முடிவாக இருந்தது.

எனக்கு ஊதியம் தரும் சமய சமூக நலப்பணி அமைப்புதான் ஒவ்வொரு செயல் முறைத்திட்டத்திற்கும் [ PROJECT ] எவ்வளவு செலவழிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்தது. மருத்துவர்கள் தங்களின் பணிக்கு என்ன தேவை என்பதைப் பற்றி தெளிவான கருத்துடன் இருந்தனர். ஆனால் இறுதியாக நோயாளிகள்தான் உள்ளபடியே எனது கட்டிடத்தில் வசிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு உடல் நலத்துடன் நம்பிக்கையும் தன் மானமும் திரும்ப கிடைக்க வேண்டும். அத்துடன் ஒரு வாழ்க்கைக்குள் புது நுழைவும் கிடைக்க வேண்டும். ஒருவருக்கு இதை விட சிறந்த வாடிக்கையாளர் வேண்டுமா என்ன ?


விரைவிலேயே நான் புதிய சிக்கல்களில் அமிழ்ந்து போனேன். நான் சோதனை நடத்தச்சென்ற கட்டிடங்களும் அவற்றின் கட்டுமான உத்திகளும் கட்டப்பயன்படுத்திய பொருட்களும் எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவை. எனக்கு போதிக்கப்பட்ட கட்டிடக்கலைக்கும் , நான் கற்கும் நாட்களில் வடிவமைத்தவற்றிற்கும் இந்த கட்டிடங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மண் சுவர்களையும் அவற்றிலுள்ள வெடிப்புகளையும் கையாள வேண்டும் என என்னிடம் எதிர்பார்த்தனர். செங்கப்பிக்கல் ( LATERITE )உள்ளிட்ட இதுவரை நான் கேள்விப்படாத கட்டுமான பொருட்களையெல்லாம் எதிர் கொள்ள வேண்டி வந்தது. 

மக்கள் மாட்டுச் சாணத்தைக்கூட முக்கியமான வீட்டு கட்டுமான பொருளாக மக்கள் கருதினர். கறையானையும் படுக்கையிலுள்ள மூட்டுப்பூச்சியையும் கூட நான் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்த்தனர்.

குறுகிய காலத்திற்குள் பருவமழை தொடங்கி விடும் என என்னை எச்சரித்தனர். அந்த எச்சரிக்கை சொற்கள் எந்த அளவிற்கு மலைப்புடனும் அச்சத்துடனும் வெளிப்பட்டது என்றால் முரட்டுத்தனமாக என் மீது பாயக் காத்திருக்கும் ஒரு விலங்கைப்போல பருவ மழை எனக்கு காட்சி அளித்தது.

பின்னர் உண்மையில் அப்படித்தான் நடந்தது. அது மூர்க்கமான காட்டு விலங்கைப்போல பழி தீர்க்கும் வெறியோடு திடுமென பாய்ந்து என் மீது இறங்கியது.

உண்மையில் கூற வேண்டுமென்றால் அந்த முதல் சில மாதங்களில் நான் அதிகரித்த அறியாமையையும் உதவியற்ற நிலையையும் உணர்ந்தேன்.
பருவமழை , கறையான் , கரிசல் மண் குறித்து அறிந்து வைத்திருந்த மதி நுட்பமற்ற கிராமத்து ஆளை விட நான் என்னை மிகவும் குறைந்த அறிவுடையவனாக உணர்ந்தேன். நான் என்னுடன் பாட நூற்கள் , குறிப்புரை ஏடுகள் , கட்டுமானக் கையேடுகள் ஆகியவற்றை கொண்டு வந்திருந்தேன். 

ஆனால் இவற்றைக் கொண்டு வந்ததற்கு மாற்றாக சஞ்சிகைகளில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை கொண்டு வந்திருக்கலாம் என எனக்கு பட்டது.
என்ன செய்வது ?எனது பிறந்த இடத்திற்கே திரும்புவதா ?

“ வெள்ளையனே வெளியேறு”  என்ற முழக்கம் முன்னெப்போதையும் விட இப்போதுதான் வலுவாகவும் உரத்தும் ஒலித்தது. வெளியேறி விட்டால் நல்லதாக போய் விடும் இல்லையா  ?

ஆனால் வெளியேறுவதற்கான காலம் ஏற்கனவே கடந்து விட்டது. நான் இந்த அசாத்தியமான பொருத்தமற்ற சிக்கல்களுக்குள் பனியில் சிக்கியவன் போல் உறைந்து போயிருப்பேன். ஆனால் அந்த சிக்கல்களெல்லாம் ROYAL INSTITUTE OF BRITISH ARCHITECTS       என்ற கட்டிடக்கலைஞர்களின் பயிலகத்தின் முறையான தகுதி பெற்ற உறுப்பினராகிய எனக்கு உண்மையிலேயே ஒரு பொருட்டா ?

ஆனால் சாமானிய மக்களின் கட்டிடம் கட்டும் கலையின் பால் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டேன். அந்த கிராம வாசிகள் வாய்ப்பு வளமற்ற கரடுமுரடான பொருட்களையும் பயன்படுத்தினர். அன்றாட வாழ்வில் பயனுள்ள வீடுகளையும் பொருட்களையும் கட்ட உதவும் அங்கீகரிக்கப்பட்ட கருவிகளைப் போன்றும் அவர்கள் வீடு கட்ட பயன்படுத்தும் கருவிகள் இல்லை. நான் இதுவரை கண்டிராத மண் , கரடுமுரடான சிறு கற்கள் , மூங்கில் , உலர்ந்த புல் , தரங்குறைந்த மரத்தண்டுகளைக் கொண்டு அவர்கள் தங்களுக்கான அழகிய வீடுகளை கட்டுவதைக் காண்பதிலேயே எனது பெரும்பான்மையான நேரம் கழிந்தது.


ஒன்றரை மீட்டர் அளவுள்ள மரத்தண்டுகளை வைத்து கட்டப்பட்ட 6 மீட்டர் சுற்றளவுள்ள கூம்பு வடிவிலான வட்டமான வீடுகளை நான் கண்டேன்.
கள்ளி கற்றாழை , படர்கொடிகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட நீண்ட இழைகளைக்கொண்டு  நெய்து கட்டப்பட்ட  குச்சி சுள்ளிகள் , இரும்பு வளையங்களைக் கொண்டு வட்ட வடிவில் உத்தர நெடு விட்டமானது அமைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் பேரழிவை உருவாக்கக்கூடிய புயல் காற்று வீசும் இடங்களில்தான் இத்தகைய வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் முறையாக செங்கல் , சுண்ணாம்பு சாந்து , வலுப்படுத்தப்பட்ட கற்காரை பாளங்களினால் { REINFORCED CONCRETE SLABS } கட்டப்பட்ட கட்டிடங்களை விட உள் நாட்டு கட்டிடக்கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்ட மேற்கண்ட எளிய வீடுகள்தான் புயலில் தாக்குப் பிடித்து நின்றன.

 ‘ நிலைப்படுத்தப்பட்ட நிலம் ‘ என்ற ஒன்றை நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் நாடு முழுக்க உமி , மூங்கில் பட்டைகள் , பனை நார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக்கொண்டு மண் சுவர்கள் பதப்படுத்தப்படுகின்றன. மண் சுவர்களில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை சரி செய்ய சுண்ணாம்பு நீர் , பன்றியின் சிறு நீர் உள்ளிட்ட பல வகையான திரவங்களை பயன்படுத்துகின்றனர்.

நான் கற்றுக்கொண்டிருக்கும் இந்த புதிய கல்வியில் உள்ள வியக்கத்தக்க ஈர்க்கத்தக்க பகுதி என்னவென்றால் இந்த புதுமையான அம்சங்கள் பலனளிக்கக்கூடியவையாக இருந்தன.  நான் செல்லுமிடமெல்லாம் என் முன்னாலும் சுற்றிலும் வீழ்ந்து கிடந்த என்னால் தீர்க்கவே முடியாது என நான் நினைத்த பல பிரச்சினைகளுக்கும் விடையிருப்பதை என்னால் உணர முடிந்தது.

செல்லுமிடங்களில் எல்லாம் நான் கண்ட உள் நாட்டு கட்டிடக்கலையை உண்மையில் புரிந்து கொண்டதோடு அவற்றை முழு மனதுடனும் நம்பினேன். அப்படி இல்லையென்று வைத்துக்கொண்டால் எனக்கு பல வருடங்கள் ஆகியிருக்கும்.

இந்த உள் நாட்டு கட்டிடக்கலையானது உடனடியாக கிடைக்கக்கூடிய உள்ளூர் பொருட்களை மட்டும் பயன்படுத்தி நிலையான கட்டிடங்களை எப்படி கட்டுவது என்ற ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாகும் .

இந்த உள் நாட்டு கட்டிடக்கலையானது உள்ளூரின் தட்ப வெப்ப நிலைமைகள் , நிலவியல் { GEOGRAPHY } , பிரதேசத்தின் இயல்புகள் [TOPOGRAPHY] , கனிப்பொருட்கள் , தாவரங்கள் , பூச்சிகள் , பறவைகள் , விலங்குகள் உள்ளிட்ட இயற்கையின் விளைவாக ஏற்படும் இடர்ப்பாடுகள் ,  அண்டை அயலாரின் பகை உணர்வு  போன்றவற்றிற்கு தாக்குபிடிக்கக்கூடியதாகும். அத்துடன்  உள்ளூர் மத , சமூக பண்பாட்டு வாழ்வு முறைகளின் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கியதுமாகும்.

நான் அறிந்த திகைக்கவும் வியக்கவும் வைக்கக் கூடிய இந்த அதிசய சாதனையை இருபதாம் நூற்றாண்டின் நவீன கட்டிடக்கலைஞன் உட்பட  எவரும்  சாதித்ததில்லை.

அமெரிக்காவை வெளிப்படுத்தியதற்காக கொலம்பஸ் மதிக்கப்படுகின்றார். ஆனால் பெருந்தொகையினரான மக்கள் அவரின் வெளிப்படுத்துதல் ஆராவாரத்திற்கு வெகு காலத்திற்கு முன்னரேயே அங்கு வசித்து வருகின்றனர். 

அதே போல்தான் எனது சிறிய தனிப்பட்ட வெளிப்படுத்துதல்களையும் நான் செய்துள்ளேன். நான் விரிவான கட்டுமான முறைகளை வெறுமனே அறியும் வாய்ப்பை பெற்றவன் என்பதை தெளிவாக உணர்ந்தேன். ஆனால் நான் புதிதாய் அறிந்த இந்த கட்டுமான முறையானது  500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒன்றும் புதிய விஷயம் கிடையாது.

நான் இந்த புதிய அறிவை என் சொந்த பணியில் பயன்படுத்த விரும்பினேன். ஒரு வேளை என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்பவர்கள் இவை அனைத்தையும் கனவுலக கோட்பாடுகள் என ஒதுக்கித் தள்ளி விட்டார்களானால்  தெளிவான இந்த முடிவற்ற உள் நாட்டுக் கட்டிடக்கலை நுட்பங்களின் வெறும் பார்வையாளனாக நான் மாறி விடுவேன்.

 அத்தோடு எனது இந்த வெளிப்படுத்தல்களை எந்த வகையிலும் நடைமுறைப்படுத்த இயலாதவனாகி விடுவேன் என்பதையும் நான் நன்கு உணர்ந்திருந்தேன்.


இன்னும் சரியாக சொல்லப்போனால் முறையான கட்டிடங்களை வடிவமைப்பதற்காக என்னுடைய வரை பலகையின் பக்கம் தயக்கத்துடன் திரும்பினேன். என்னுடைய தற்போதைய கல்வியின் பெறு பேறுகள் அல்லது விளைவுகள் வீணாகி விட்டது என என்னால் கூற இயலாது.


சுட்ட செங்கல் , கல் , ஓடு , மரத்தண்டு போன்ற அதிகம் ஏற்கப்படக்கூடிய உள்ளூர் பொருட்களைப் புதிய முறையில் பயன்படுத்துவது பற்றி  நிறைய பயின்றேன்.  புதிய முறை என சொல்லும்போது அது எனக்கு மட்டும்தான் புதியது. ஏனெனில் உள்ளூரில் அவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றவைதான்.


நான் புது வகையான காரைச் சாந்தை பயன்படுத்தினேன். என்னுடைய உண்மையான வாடிக்கையாளர்களை அதாவது கட்டிடத்தை பயன்படுத்துபவர்களை பாதிக்காத வருத்தமளிக்காத வகையிலும் உள்ளூர் பாணியிலும் கட்டிடங்களை நான் வடிவமைத்தேன். லாரி பேக்கர் கட்டிடக்கலையின் { உண்மையில் அப்படி ஒரு பெயருள்ள கட்டிடக்கலை உண்டா ? } 

 இரண்டாவது பெரிய காலடி இது என நினைக்கின்றேன்.
இதற்கிடையில் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டு விட்டார். நானோ விடுதலை பெற்ற இந்தியாவில் தங்கி விட்டேன்.

அகத்தூண்டுதல் உண்டாக்கும் ஒரு ஊக்கத்தை வியத்தகு மருத்துவரான பி.ஜே.சாண்டி அவர்களிடம் நான் நிறைய பெற்றேன். ஃபைஜாபாத்தில் உள்ள ஸாஹிபின் சொகுசு வீட்டிலிருந்து என் மிதிவண்டியில் வரும்போது பி.ஜே.சாண்டி அவர்கள் என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.அவருக்கு அழகிய சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளை நான் மண முடித்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் தொலை தூரத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் குடியேறினோம். அந்த பகுதியானது திபெத் , நேபாளத்துடன் எல்லைகளைக் கொண்டிருந்தது.

அங்கு நாங்கள் எங்கள் வீட்டையும் அத்துடன் மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்கள் போன்றவற்றையும் முழுமையான உள்ளூர் பாணியில் அமைத்தோம். அங்கு நாங்கள் 15 வருடங்கள் வசித்தோம். இந்த கால கட்டத்தில் என்னை ஈர்த்த தொழில் நுட்பங்களை நான் நிறைய முயன்று பெற்றேன்.
 நான் உள்ளூர் தொழில் நுட்பங்களை மேலும் மேலும் கற்பதில் மும்முரமானேன். 

அந்த தருணத்தில் என்னுடைய உதவியைக்கேட்டு வெளி உலகிலிருந்து இமயமலை பகுதிக்கு நிறைய பேர் வந்தனர். இதன் விளைவாக மெல்ல மெல்ல நான் அதி நவீனமான ஒரு உலகினுள் இழுக்கப்பட்டேன்.

என்னிடம் உதவி கேட்டு வந்தவர்களில் வியக்கத் தக்க ஒரு முதிய அமெரிக்க மாது இருந்தார். அவர்  பெயர்  Welthy Honsinger  Fisher . இந்தியா முழுக்க  வயது வந்தோருக்கான கல்வி பற்றிய போதனைகளை பரப்புவதில்  அவர் அக்கறை கொண்டிருந்தார்.

புதியதாய் கற்கும் வயது வந்தோருக்காக எப்படி எழுதுவது என அவர் எழுத்தாளர்களுக்கு பயிற்றுவிப்பார். அதே போல  நாடகம் , பொம்மலாட்டம் , இசை ,கலை ஆகியவற்றை கற்பித்தலுக்கு எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் அவர் போதிப்பார். ஆனால் அவர் முதலில் சொன்னபடி அவருக்கு தேவையானது ஒரு உண்மையான “ இந்திய கிராமீய அமைப்பு “ ஆகும்.

தனது எழுபது வயதுகளில் பலவீனமாக இருந்த அந்த பெண்மணி மிக தொலைவான கடினமான பயணம் செய்து இமய மலைப் பகுதியில் இருந்த எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவர் தனது எழுத்தறிவு கிராமத்திற்கான திட்ட வரைபடத்தை பெற்றுச் செல்லும் வரையில் எங்களுடனேயே தங்கியிருந்தார். பின்னர் நான் அவரிடத்திற்கு சென்று மனையை நிலப்பகுப்பு செய்து கட்டிடம்  கட்ட உதவினேன்.

அவரது வேறு சில நண்பர்கள் இந்தியாவில் மன நோய் பரிகாரப் பணியை தொடங்க விரும்பினர். அவர்கள் ஒரு பன்னாட்டு குழுவினர். எனினும் அவர்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களுடன் பணியாற்றும் ஒரு குழுவினர். அந்த குழுவில் தென்னிந்தியாவைச் சார்ந்த மன நோய் பகுப்பாய்வாளர் ஒருவரும் உண்டு. இமயமலைப்பகுதியில் உள்ள என்னுடைய வீட்டை விட்டு வெகு தொலைவிற்கு அவர்களும் என்னை இழுத்துச் சென்றனர்.

அவர்களுக்கு நவீன வசதிகளுடைய ஒரு மருத்துவமனையும் வேண்டும். அத்துடன் அந்த மருத்துவமனை கட்டிடமானது மனம் பாதிக்கப்பட்ட  இந்திய நோயாளிகளுக்கு ஏற்ற  சரியான சூழ் நிலையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என விரும்பினர்.

இது ஒரு முன்னோடி திட்டம் என்ற வகையில் இதற்கு மிகப்பெரிய சிந்தனையும் அக்கறையும் அர்ப்பணிப்பும் கொடுக்கப்படும்போது மருத்துவத் துறையின் இதர பிரிவினரின் கவனத்தையும் ஆய்வையும் இத்திட்டம் பெறும்.

மருந்தும் அறுவை சிகிச்சையும் நவீன கருவிகள் தொழில் நுட்பங்களுடன் வளர்ந்திருந்தாலும் உள்ளூர் நோயாளிகளை குணப்படுத்த அவை மட்டும் போதுமானதாக இல்லை என்பது உணரப்பட்டது.

குறிப்பாக நீண்ட காலம் பிடிக்கக் கூடிய மருத்துவ பரிகாரங்கள் தேவைப்படும் நோயாளிகள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் நோய் குணமாவதில் தலையாய பங்கு உண்டு. எனவே குறிப்பாக ஊரகப்பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகள் , நிறுவகங்கள் விஷயத்தில் எனது பணி வளரத் தொடங்கியது.

தொலை தூரத்தில் உள்ள மாவட்டங்களில் சிதறி வாழும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சிறிய கட்டிடங்களே தேவைப்பட்டன. சிறிய பெரிய அளவு என்பதை விட அந்த கட்டிடங்கள் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தன. நகரத்தில் அடர்ந்து வாழும் மக்களை விட ஊரக பகுதிகளில் உள்ள புறக்கணிக்கப்பட்ட மக்களின் தேவை மிக இன்றிமையாததாக இருந்தது. 

காரணம் நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வாழ்விடம் விஷயத்தில் தாராளமாக மாற்று வாய்ப்புகள் இருந்தன. அத்துடன் தொலை தூர பகுதிகளில் வாழும் இந்த மக்களின் கொடுக்கல் வாங்கல் அனைத்துமே பணத்திற்கு பகரமாக  பண்ட மாற்றுமுறையிலேயே நடந்தன.

கட்டிடங்களை கட்டுவதற்கான பொருட்களை வாங்குவது என்பது மிகவும் கடினமான விஷயம். எனவேதான் இயன்ற அளவிற்கு உறுதியான நீடித்து உழைக்கக் கூடிய செலவு பிடிக்காத கட்டிடங்களை வடிவமைத்து கட்டுவது என்பது மிக மிக இன்றிமையாததாக இருந்தது.

இதற்காகவும் இது போன்ற காரணங்களுக்காகவும் நான் கிரயம் தொடர்பாக விழிப்புடன் இருக்க தொடங்கினேன். உள் நாட்டு பொருட்கள் அல்லது இருபதாம் நூற்றாண்டின் சராசரி கட்டுமான தொழில் நுட்பங்கள் , பொருட்களைக் கொண்டு  கட்டுமான பொருட்களின் கிரயத்தை குறைப்பது தொடர்பாக நிறைய நேரத்தை செலவழித்தேன்.

மில்லியன் கணக்கான மக்கள் வாய்க்கும் வயிற்றிற்குமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் காட்சிகளானது என்னை எல்லா வகையான பகட்டுகளையும் விரயங்களையும் அருவருத்து வெறுத்துத் தள்ள வைத்தது.
                                                                                                                               

 தொடர்பான பதிவுகள் :









No comments:

Post a Comment