Tuesday 31 December 2019

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் -- பகுதி 1


ஆங்கில மூலம்: கௌதம் பாட்டியா, பென்குயின் வெளியீடு




எளிய மக்கள் செய்வதை அவதானித்தே நான் எனது கட்டிடக்கலையை கற்றேன். எளிய மக்கள் செய்வதாலேயே இந்த கட்டிடக்கலை  எப்போதும் மலிவானதாகவும் எளிமையாகவும் இருக்கின்றது. அவர்கள் கட்டிடக்கலைஞர்களையெல்லாம் பயன்படுத்துவதில்லை. குடும்பத்தினர்களே வீடுகளை கட்டிக்கொள்கின்றனர்.

பழைய கட்டிடங்களில் மர சட்டகங்களில் உள்ள சிறு துளைகளுடன் கூடிய வேலைப்பாடுகளை பார்த்திருப்பீர்கள் . அவைகள் கதிரவனின் ஒளியையும் , வெக்கையையும் அளவாக உள்ளே அனுப்பும்.



கற்காரை (காங்கிரீட் ) சட்டகங்களில் பொருத்தப்பட்ட கண்ணாடிப் பலகமானது ( PANEL ) ஒளியையும் , வெப்பத்தையும் குறைக்காது என என்னால் அறுதியாக உறுதியாக கூற முடியும்.

எனது வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியர்களே. அவர்களில் எவரும் வெளி நாடுகளிலிருந்து திரும்ப வந்து இங்கு வசிப்பவர்கள் இல்லை.  நான் அடிப்படையிலேயே  ஏழைகளுடன் உழைக்கின்றேன். அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் எப்போதும் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றேன். அவர்களுக்கு தேவைப்படுவது அனைத்தும் வெளிப்படையில் இந்நாட்டு அம்சங்களே.

ஒரு கட்டிடக்கலைஞன் என்ற அடிப்படையில் ஒரு கட்டிடத்தை கட்டி அதை  “ லாரி பேக்கர் நினைவிடம் “ என நினைவு கூர வைப்பதற்காக இங்கு நான் முயற்சிக்கவில்லை. மோகன் அல்லது சுப்பன் என்கின்ற சராசரி மனிதன் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசிக்கும் ஒரு வீடுதான் எனது நோக்கம். ---- லாரி பேக்கர்

லாரி பேக்கர் இந்தியாவில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்துள்ளார். மீனவர் குடியிருப்பு , நிறுவக  ( INSTITUTION ) வளாகங்கள் , குறைந்த விலை மண் குடில்கள் , குறைந்த விலை பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் என குறிப்பிட்டு சொல்லும்படியான விதம் விதமான பெரும் பணித்திட்டங்களில் பங்களிக்ககூடிய வாய்ப்பும் ஆற்றலும் படைத்த மிகக்குறைந்த கட்டிடக்கலைஞர்களில் அவரும் ஒருவர். திருவனந்தபுரத்தில் மட்டும் அவர் ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டியுள்ளார். இதல்லாமல் 40 கிறிஸ்தவ தேவாலயங்கள் , எண்ணற்ற பள்ளிக்கூடங்கள் , நிறுவகங்கள் , மருத்துவமனைகளும்  அடங்கும்.

 நிறைய கட்டிடங்களை வடிவமைத்ததாலும் , கட்டிடக்கலை பொறுப்பாண்மைக் குழுக்களை செயலாக்கியதாலும் மட்டும் மற்ற கட்டிடக்கலைஞர்களிடமிருந்து லாரி பேக்கர் தனித்து விளங்கவில்லை. தான் பணி புரியும் சூழலிலிருந்து படைப்பூக்க மிக்க செழுமையையும் கட்டிடக்கலையின்  உள்ளூர் மாதிரிகளையும் தனிப்பட்ட வாழ்வியல் போக்குகளையும் உள்வாங்கிக் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மண்ணில் உறுதியாக  ஊன்றி நிற்கின்ற சுகமான எளிதான வீடுகளையும் நிறுவகங்களையும் உருவாக்கிக்கொடுத்தார். 

இதுதான் அவரின் பணியை இன்னும் சிறப்பானதாக ஆக்கியது. இந்த மாதிரியான கட்டிடங்களில் வசிப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்களின் சிறப்பு தேவைகளை மனதில் கொண்டுதான் இவையனைத்தும் செய்யப்பட்டது.

இம்மாதிரியான வேறுபட்ட பெரும்பணித்திட்டங்களை வடிவமைக்கும்போது பெருமளவு மறக்கப்பட்ட உள்ளூர் வடிவமைப்பு  & கட்டிட முறைகள் , நகரங்களிலிருந்து பெயர்த்தெறியப்பட்ட மக்களின் கட்டிடக்கலை விருப்பங்கள் போன்றவற்றையே லாரி பேக்கர் தேர்ந்தெடுத்தார். நகரங்களிலிருந்து பெயர்த்தெறியப்பட்ட மக்களின் கட்டிடக்கலையானது  மேற்குலகினால் கைவிடப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தான் வடிவமைக்கும் ஒவ்வொரு கட்டிடத்திலும்  லாரி பேக்கர் கீழ்க்காணும் அமசங்களை பொருத்தமான முறையில் உறுதிப்படுத்திக்கொள்வார்.
--- உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப கட்டப்பட வேண்டும்.

---- நடைமுறையான பாரம்பரிய கட்டுமான முறைகளைத் தழுவிய சமகால  நகர்ப்புற கட்டுமான முறைகளை கடைப்பிடிக்கப்பட வேண்டும் .

கட்டிடக்கலைக்கு பேக்கரின் பங்களிப்பை தெளிவாய் அறிந்து கொள்ளுதல் என்பது இக்காலகட்டத்தில் மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.
தனது சொந்த வளர்ச்சித் தொடர்பான விஷயங்களில் உள்  நோக்கிய சரியான சுய விசாரணை செய்யும்படி  வளரும் நாடுகளை தேடலுள்ள மன சாட்சியானது தூண்டுகின்றது. இந்த தருணத்தில்தான் பேக்கரின் கட்டிடக்கலையைப் பற்றி நாம் அறிய வேண்டியுள்ளது.

இந்த கால கட்டத்தில்தான் லாரி பேக்கர் முதன்மை கதாபாத்திரமாக தனித்து விளங்குகின்றார். நாட்டின் தொலை தூரமான ஒரு மூலையில் தன்னந்தனியாக அமர்ந்து கொண்டு கட்டிடக்கலை தொடர்பான தனது எண்ணற்ற முயற்சிகளை பரிசோதித்துக் கொண்டும் அவை தொடர்பான விளைவுகளையும் முடிவுகளையும் பற்றி தகவல் தந்து கொண்டும்  இருந்தார்.

பன்னாட்டு கட்டிடக்கலை பாணி என்பதை தனது எழுத்திலும் பணியிலும் பேக்கர் அழுத்தந்திருத்தமாக மறுத்தார். இந்தியாவில் பெருங்கேடு விளைவிக்கக்கூடிய  காலங்கடத்துகின்ற ஒன்றாகத்தான் அதை அவர் பார்த்தார்.

சண்டிகட் நகரத்தை வடிவமைத்த ஃப்ரெஞ்ச் நாட்டு கட்டிடக்கலை வல்லுனர்  லே கார்பூபுஸியர் ( LE CORBUSIER ) ஏராளமான கையாட்களை பெருகச்செய்துள்ளார். அவர்களோ உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய கட்டிடக்கலை தொழில் நுட்பத்தை நாடுகின்றனர். இதன் பெறு பேறுகளை ( RESULT ) இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இருக்கின்ற 1950 ஆம் ஆண்டுக்கு பிந்திய கட்டிடங்களிலும் காணலாம்.

பலவகையான  மனித தேவைகள் , விருப்பங்களை ஒரே தொகுதியான  ஒரே படித்தான வடிவமைப்பு , விருப்பத்தேர்வுகள் ,சாதனங்கள்  மூலம் நிறைவு செய்ய முடியும் என்ற கருத்தை  லாரி பேக்கர் எப்போதும் ஏற்கவில்லை.

தனி மனித தேவைகள் என்பது இந்தியாவின் பல்வேறுபட்ட சூழல் , வேறுபடும் பண்பாட்டு உரு மாதிரிகள் , வாழ்க்கை முறைமைகளில் இருந்து தோன்றுவதாகும். இவற்றை நுட்பமாக உணர்ந்து உள்ளூர் சாதனங்களை பயன்படுத்தி பல வகைகளாகவும் வெவ்வேறு வடிவங்களாகவும்  வெளிப்படுத்தக்கூடிய கட்டிடக்கலை மூலம் மட்டுமே மேற்கண்ட தேவைகளை நிறைவேற்ற முடியும் என லாரி பேக்கர் கருதினார்.

ஓரிடத்தின் கட்டிடக்கலையை பெயர்த்தெடுத்து இன்னொரு இடத்தில் அப்படியே செயல்படுத்துவது என்பது கட்டிடக்கலையின் மூலம் நாடப்படும் அடிப்படை வாழ்விட தேவைகளையே குலைத்து விடும் என லாரி பேக்கர் கருதினார்.

எடுத்துக்காட்டாக , உள்வாங்கப்பட்ட பாலைவன கட்டிடக்கலை உரு மாதிரிகளை ( PATTREN  ) கொண்டு வந்து வளமான கேரளக்கடற்கரையோரம்  நடைமுறைப்படுத்தியதால் பாரம்பரிய வாழ்விட முறைகள் சீர்குலைந்தன. 

மொத்தமாக வீடு கட்டும் திட்டங்களிலும் இது போன்ற விஷயங்களை காணலாம். இந்த வீடுகளில் வெளி அல்லது இடமானது பொருத்தமற்ற முறையில் வகுத்து பிரிக்கப்பட்டிருக்கும். இதன் விளைவாக இந்த வீடுகளில் வசிப்பவர்கள் அசௌகரியமாக வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் பேக்கர் ஒரு பழமைவாதியுமில்லை. வாழும் கட்டிடக்கலை என்பது முறையான முழு இணைவிலும் நெகிழ்வுத்திறனிலும் மட்டுமே செழித்தோங்கும் என்பதை அவர் வலியுறுத்தி வந்திருக்கின்றார்.

 கட்டிடங்களுக்குள் வசிப்பவர்களின் மாறும் தேவைகளுக்கும் , கலையுணர்வுக் கூறுகளுக்கும் ஏற்ப முகம் கொடுக்கும் திறனானது கட்டிடக்கலைக்கு இருக்க   வேண்டும். அந்த திறனிலிருந்துதான் உண்மையில் கட்டிடக்கலையின் நீடித்திருக்கும் ஆற்றல் உண்டாகின்றது.

கட்டிடக்கலை என்பது மற்றெந்த நுண் தொழிலைப்போலவும் மலர்ந்து விரிந்து கொண்டே இருக்கின்ற ஒரு உயிராக்க விளைவாகும். இதில் கடைபிடிக்கப்படுகின்ற   பாரம்பரிய கட்டுமான உரு மாதிரிகள் என்பது மிக கட்டிறுக்கமான தனி ஆள் படைப்பாக்கமல்ல. மாறாக  பல தலைமுறையினரின் கூட்டான பட்டறிவாகும்.

கட்டிடக்கலைஞர்களின் தலைமுறை தொடர்ச்சியிலிருந்தும்  , மனதில் ஆழ்ந்து படிந்த சூழலியலில் இருந்தும் , இவைகளிலேயே திளைத்து வாழ்ந்தவர்களிடமிருந்தும் தனக்கான  உத்வேகத்தை லாரி பேக்கரின் கட்டிடக்கலை பெற்றுக் கொள்கின்றது .ஆனால் லாரிபேக்கரை பொருத்த மட்டில்  கேரளாவையே அவர்  தனது சொந்த மாநிலமாக தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

கேரளாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களில் உள்ள வறிய மக்களின் குறிப்பான தேவைகளுக்காக லாரி பேக்கர் வளர்த்தெடுத்த கட்டிடக்கலையானது அதே போன்ற சூழ்நிலைகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய வாய்பாட்டுச்சூத்திரம்  ( FORMULA ) கிடையாது.

 எனினும் அதன் புரட்சிகரமான எளிமைக்காகவும்  தற்கால இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த கட்டிடக்கலை சித்தாந்தத்தோடு முரண்படுகின்ற தன்மையிலிருந்துமே முளைத்தெழுகின்றது லாரி பேக்கரின் ஒட்டு மொத்த கட்டிடக்கலை தொழில் நடைமுறை சித்தாந்தம்.

லாரி பேக்கரின் பணி என்பது அவரின் உள்ளார்ந்த வலிமையின் வினைத்திறன் மிக்க சான்று விளக்கம் என்பதுடன் கூடவே   பாரம்பரியம் , தொழில் நுட்பம் , வாழ்க்கை முறை பற்றிய அவரது சொந்த விளக்கமும் கூட .

தொடர்புடைய பதிவுகள்:


செங்கல் கவிஞன் லாரி பேக்கர்- பகுதி 2

செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - நிறைவுப்பகுதி

லாரி பேக்கர் வீடும், அவர் கட்டிய கட்டிடங்களும், திருவனந்தபுரம்

சுவாசிக்கும் வீடுகள்

19/08/2013

No comments:

Post a Comment