சுவாசிக்கும் வீடுகள்
“சுவர்களும் அதற்கு
கதவுகளும் கொண்ட எனது வீட்டிற்கு நான் செல்ல வேண்டும், எனக்கான
குடியிருப்பு என்று உலகின் எந்த ஒரு மூலையில் கிடைத்தாலும் அதைப் பற்றிய கவலை
எனக்கில்லை, அது அட்லாண்டிக் கடலின் மீது இருந்தாலும் சரியே……".
சமீபத்தில் வாசித்த கட்டுரையில் வரும் வரிகள் அவை.
இந்த
நிலப்பரப்பில் தனக்கென சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு வாழ்விடம் வேண்டும் என விரும்பாத
மனிதர்களே இல்லை.
பறவைகளும்
விலங்குகளும் காட்டில் வசிக்கும் ஆதி வாசி மனிதர்களும் தங்களுக்கான வசிப்பிடத்தை
இயற்கையை ஒட்டியே அமைத்துக்கொள்கின்றனர். இயற்கையும் தனது பசுமையான
கரங்களைக்கொண்டு அவைகளை ஆதுரத்துடன் பொதிந்து கொள்கின்றது.
ஆனால்
நாட்டில் வாழும் மனிதன் தனது இருப்பிடத்தை . காடு , வயல் , மலை , நீர் நிலைகளை
அழித்து அமைக்கின்றான். இயற்கையின்
பேரழிவுகளில்தான் தான் வாழ இயலும் என உறுதியாக நம்பவும் செய்கின்றான். .
வாழ்வின்
முதல் தட்டில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. தங்களிடம் குவிந்துள்ள
அபரிமிதான செல்வம் மூலம் நினைத்த கணத்தில் பகட்டான வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர்.
அரசு பணியில்
உள்ளவர்கள் கடனை அரசிடமிருந்து பெற்று ஒரு வீட்டை கட்டுகின்றனர். அந்த கடனை
தங்களது பணிக்காலம் முழுக்க அவர்கள் திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
வாழ் நாள்
தவணை என்ற நெடுஞ்சுமையை விரும்பாத அரசு ஊழியர்களும் இருக்கின்றார்கள். அவர்கள்
தங்களது மேசைக்கு அடியிலும் கனத்த கவர்களிலும் வீட்டிற்கான கனவை மேல் வருமானம்
மூலம் சாதித்து விடுகின்றனர்.
ஆனால் நடுத்தர
மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு ஒரு வீட்டை கட்டுதல் என்பது ஒரு கனவைப்போல் அத்தனை
எளிதானதல்ல. கட்டுமானப்பொருட்களும் நிலமும்
இரக்கமில்லாமல் ஏறும் விலை வாசிக்குள்
சிக்கியிருக்கின்றன.
சிறு
வணிகர்கள் , விவசாயிகள் , பணிப்பாதுகாப்பும் உத்திரவாதமும் இல்லாத தொழிலாளர்கள்
ஆகியோரின் நிலை என்ன ? தங்களது வசிப்பிட
லட்சியத்தை மெய்ப்படுத்த அவர்கள் முன் வழிகள்தான் என்ன ?
நகைகளை விற்றோ
வாழ் நாள் சேமிப்பை கரைத்தோ வட்டிக்கு கடன் வாங்கியோதான் வீடு கட்டும் கனவிற்கு
அருகிலாவது அவர்கள் செல்ல முடியும்.
இந்த இரக்கமில்லாத ஓட்டத்தினை மிகத்துல்லியமாக
பயன்படுத்திக்கொள்கின்றனர் தேசிய பெரும் முதலீட்டாளர்கள். நிலத்தின் உண்மை
மதிப்பினை விட பல மடங்கு விலை கொடுத்து வளைத்து போடுகின்றனர். பின்னர் அவற்றில்
வானை உரசும் உயரத்திற்கு அடுக்கு மனைகளை கட்டித்தள்ளுகின்றனர். அவற்றை நமக்கு விற்பனை செய்யும் போது கொள்ளை
லாபத்தை நோகாது பார்க்கின்றனர் மார்வாடி , குஜராத்தி பனியாக்கள்.
இவ்வளவு
சிரமங்களுக்குப் பிறகு கட்டப்படும் நம் வீடுகள் மனித வாழ்விற்கு உகந்ததாக
இருக்கின்றதா ?
நமது நகரங்களில் பெருவாரியான மக்கள் வாழும் வீடுகள்
தீப்பெட்டி போல் அடுக்கப்பட்டிருக்கின்றன அல்லது
மேசை இழுப்பறை போல் செருகப்பட்டிருக்கின்றன. இவை போக அகலமான பரப்பளவில் கட்டப்பட்ட
வீடுகளையும் கூட வாழும் வீடுகள் என கூறிடவியலாது.
காற்றுடனும் ,
நிலத்துடனும் , நீருடனும் , விண்ணுடனுமான உறவுகள் நாம் வாழும் வீடுகளில் ஒன்று
தடைபட்டிருக்கும் அல்லது சீரற்ற வகையில் அவை கையாளப்பட்டிருக்கும்.
கான்கிரீட்
கூரையும் பக்க வாட்டு சுவர்களும் பகலில் கதிரவனின் வெப்பத்தை மொத்தமாக உறிஞ்சும்.
இரவு முழுக்க அந்த வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டினுள் உமிழும்.
அளவிற்கு
அதிகமாக ஒளியும் வெப்பமும் வீட்டின் உள்
பகுதியை தாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாளரங்கள் அல்லது கண்ணாடி சுவர்கள்.
அந்த வெப்பத்தை தணிக்க குளிர் சாதனம்.
குளிர் சாதனம் இயங்கும்போது ஏற்படும் சுற்றாடலின் சீர் குலைவு என ஒரு வகையில் நாம் வாழும் வீடுகள் உயிரின் களையை
இழந்த வீடுகள்தான்.
ஆற்று மணலும்
கருங்கல்லும் கொள்ளை போகின்ற செய்திகள் ஊடகங்களில் அடிபடும்போது நாம்
வருத்தப்படுகின்றோம். ஆனால் நமது வீடு கட்டும் கனவின் கனிதான் இந்த கொள்ளைக்கான முதல்
வித்து என்பதை நாம் உணரத்தவறிவிடுகின்றோம்.
நாம் கட்டிய
வீடுகளை 25 ஆண்டுகள் கூட நீடிக்க விடுவதில்லை.
இடித்து புதிய பாணியில் கட்ட வேண்டும் என விரும்புகின்றோம். இதல்லாமல் நாம்
கட்டும் தற்கால கட்டிடங்கள் 50 ஆண்டுகளைத் தாண்டுவது என்பது அய்யத்திற்குரிய
விடயமே.
நாம் வாழும்
வீடுகளானாலும் சரி அல்லது பொது கட்டிடங்களாக இருந்தாலும் சரி சில பத்தாண்டுகள் கழிந்த
பிறகு அவை தரமிழந்து காங்கிரீட் கேன்சர் ,விள்ளல் , விரிசல் , வெடிப்பு என அற்ப
ஆயுள் உள்ளவையாக மாறி விடுவதை காண முடிகின்றது.
மனித
வாழ்வைப்போலவே உறுதியற்றதாகி விட்ட கட்டிடங்களின் ஆயுள் காலம். பின் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் புதிய
புதிய வீடுகளைக்கட்டிப்பார்க்கத்துடிக்கும் நம் நுகர்வு மனம். இந்த காரணங்களின்
விளைவாகத்தான் நமது மூச்சு மண்டலங்களாகிய ஆறுகளையும் மலைகளையும் விழுங்கிடும் சமூக
பகைவர்கள் கிருமிகளைப்போல பல்கிப்பெருகுகின்றனர்.
இங்கு
கிரானைட் ஊழல் வெடித்து சிதறிய நேரத்தில் லாரி பேக்கரின் “ மக்களுக்கான எளிய
கட்டிட கலை “ யைப்பற்றி வாசிக்க நேர்ந்தது. அந்த வாசிப்பானது கேரள பயணம் வரை
கொண்டு சென்றது .நண்பர்கள் அய்வர் திருவனந்தபுரம் சென்றோம்.
அங்கு நாலஞ்சிறா பெனடிக்ட் நகரில்
சாலையோரமாக உள்ள சிறிய குன்றின் அடியில்
எங்கள் ஊர்தியை நிறுத்தினோம்.
வண்டியை
நிறுத்திய இடத்தில் இரும்பாலான முன் வாசல் ஒன்று
இருந்தது.
அந்த இரும்பு
வாசலின் சட்டம் அமைக்கப்பட்ட முறை வித்தியாசமாய் இருந்தது .நாம் அன்றாடம்
பயன்படுத்தி கழித்த இரும்பு கம்பிகள் , செப்பு சுருள் , திருப்புளி , துண்டு
இரும்பு ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
முன் வாயிலை கடந்து வளைந்து சென்ற
படிக்கட்டின் இடது புறம் காஸ்ட் ஃபோர்ட் (
COST
FORD ) என்ற தன்னார்வ நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி
கொண்டிருந்தது.
இடது புறம்
விலகிச்சென்ற படிக்கட்டுகளின் முடிவில் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் வீடு ஒன்று
இருந்தது. அது தன் அமைதியில் திளைத்து கொண்டிருந்தது. சுற்றிலும் இருந்த
பசுமைச்சூழலில் மரம் செடி கொடிகள்
நிறைந்திருந்தது. அவற்றோடு ஒன்றாக பத்தோடு பதினொன்றாக எதையும் உறுத்தாத
புன்னகையுடன் அந்த வீடு நின்று கொண்டிருந்தது
அந்த சிவந்த வீட்டின் முகப்பில் உலோக மணி ஒன்று தொங்கி
கொண்டிருந்தது. கயிற்றில் கட்டப்பட்ட கருப்பு வவ்வால் போல தொங்கி கொண்டிருந்தது. அது
கடந்த காலத்திற்குள் லயித்து உறங்கிக்கொண்டிருந்தது
கயிற்றை
இழுத்தபோது மணியின் உறக்கம் கலைந்தது. ‘ டிங்க் ’ என்ற நாதத்தின் முதல் துளியை
வீட்டிற்குள் அனுப்பியது அந்த மணி.
முதல் நாதத்தை தொடர்ந்த
ரீங்காரத்தை மணி தனக்குள்ளேயே சுழல விட்டது. அந்த ரீங்காரத்தின் இதத்தில் மீண்டும் கடந்த காலத்திற்குள் சென்று மெய்
மறக்கத்தொடங்கி விட்டது.
அழகிய ஓசையை
விதம் விதமாக எழுப்பினாலும் மின்சாரத்தில் இயங்கும் அழைப்பு மணியின் முதல் அழைப்பே
நம்மை படபடப்பிற்குள்ளாக்கும் . நமது மனதின் சம நிலையை குலைக்கவும் செய்யும்.
மின்சார அழைப்பு மணியின் வருகைதான் வெண்கல மணியின் அருமையை நமக்கு
நினைவூட்டுகின்றது. பேக்கர் பாணி வீடுகளை வெண்கல மணியாகவும் நாம் வாழும்
வீடுகளை மின்சார மணியாகவும் ஒப்பிடலாம்.
எந்த ஒரு நல்ல
விஷயத்தையும் அதன் முதல் வருகையில் நம்மால் உணர முடிவதில்லை. வேண்டாத விளைவுகளை
கொண்டு வரும் புதிய விஷயங்களின் வருகைக்கு பிறகே கை கழுவப்பட்ட நல்ல விஷயங்களின்
அருமையை நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள
முடிகின்றது.
.அவ்வீட்டின்
சுவர்களில் காந்தீய வாதியான கட்டிட கலைஞனின் வாழ்வும் கனவும்
ஒட்டிக்கொண்டிருந்தது. எங்களது நுழைவு ஏற்படுத்திய சலனத்தில் அவை அந்த
சுவற்றிலிருந்து விடுபட்டு காற்றில் அலையலையாய் மிதக்க தொடங்கின. கலையும்
கவிதையும் இசையும் அந்த செயற்கை வர்ணம் பூசப்படாத செங்கற் சுவர்களில் ஓசையின்றி
தங்களது நடனத்தை தொடங்கியிருந்தன. வாழ்வும் கனவும் லட்சியமும் ஒரே நேர் கோட்டில்
பயணித்ததற்கான அடையாளச்சின்னமாக லாரி
பேக்கர் வாழ்ந்த அந்த வீடு திகழ்கின்றது.
வாழ்விடம்
தொடர்பான நமது தவறான புரிதல்களும் நடைமுறைகளும் பல நெருக்கடிகளை உருவாக்கி அவற்றை
நமக்கே திரும்ப அளிக்கின்றது. மக்கள் வாழும் இடங்களின் மதிப்பு செயற்கையாக
வீங்குகின்றது. மலைக்கும் மடுவிற்குமான அளவு ஏற்றத்தாழ்வுகளினால் சமூக ,மொழி ,
பண்பாட்டு, பொருளாதார தளத்தில் இயல்பு
நிலை குலைகின்றது. அதனால் மோதல்களும்
, பிளவுகளும் ஏற்படுகின்றன.
ஒரு தவறான
தொடக்கமானது முடிவில்லாத பல நச்சு வளையங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது. நமது
பேராசையானது உலக மயமாக்கத்தின் தாராளமயமாக்கத்தின் இருப்பை இங்கே உறுதிப்படுத்துகின்றது.
அவை இந்த நாட்டின் சந்தையை ஆள்கின்றன. அவை பெற்றெடுக்கும் நுகர்வு வெறி மக்களின்
மனதை ஆட்டிப்படைக்கின்றது.
பிறர் மீதான
வெறுப்பையும் பேரினவாதத்தையும் உள்ளுறை குணமாக கொண்டுள்ள ஹிந்துத்வ ஃபாஸிசமானது உலக
மயமாக்கத்தின் விசுவாச செக்யூரிட்டியாக விறைத்து நிற்கின்றது.
உலக
மயமாக்கத்தின் ‘ தோலிருக்க சுளை
விழுங்கும் ‘ கொள்ளையை மக்கள் உணர்ந்து கொள்ளாமல்
இருக்க திசைதிருப்பும் மத வெறி அரசியலை கிளறிக்கொண்டே இருக்கின்றது இந்திய
ஃபாஸிசம்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பது எந்த
கட்சியாக இருந்தாலும் இதுதான் நிலை.
நவீன இந்தியா
இந்த நச்சுச் சுழலில் நிரந்தரமாக சிக்கி விடும் அபாயம் உள்ளது. அதற்கான கூறுகள்
இந்திய குடிமைச்சமூகத்திடம் ஓரத்து அழுக்காக படிந்துள்ளது என்பதை முன்னுணர்ந்தார்
காந்தி..
அதற்கு
மாற்றீடாக எளிமையான வாழ்வை ஒரு சித்தாந்தமாக முன் வைத்தார். அதன் வாழும் வகை
மாதிரியாகவும் அவர் திகழ்ந்தார்.
காந்தியின் தொலை
முன்னோக்கானது கெடு வாய்ப்பாக இங்குள்ள ஆளும் வர்க்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் தேசத்தந்தை தன் வாழ்நாளெல்லாம்
எதிர்த்து போராடிய ஆதிக்க தேசத்திலிருந்து
வந்த ஆன்மா ஒன்று காந்தியில் தனது தேடலை கண்டடைந்தது.
மனிதனின்
வாழ்விடத் தேவையானது எத்துணை துயரம் மிக்கதாக மாற்றப்பட்டுள்ளது. கண்ணியமான ஒரு
வாழ்விற்குத்தேவையான வசிப்பிடத்தை அமைப்பதற்குள் அவனது வாழ்வு கரைந்து
விடுகின்றது. இவற்றை தாண்டி அமைக்கப்படும் வீடுகள் வாழ்க்கையின் அனைத்து
அம்சங்களுக்கும் எதிராக அமைந்துள்ளது.
இந்த
வாழ்வியல் துன்பியலானது தங்களது ஆன்மாவை துன்புறுத்திய ஒரு புள்ளியில்தான்
காந்தியும் பிரிட்டனைச்சார்ந்த கட்டிட கலைஞரும் ஒன்றிணைந்தனர்
“ நீ
அறிவையும் தகுதியையும் கொண்டு வருகின்றாய். இங்கு எங்களது தேவைகளை நீ அறிந்து
கொள். சராசரி மக்களுக்கான உயர்வான விஷயம் கிராமங்களில்தான் இருக்கின்றதே தவிர
பம்பாய் போன்ற பெரு நகரங்களில் இல்லை “
இந்த மூன்று
வரி அறிவுரைதான் லாரி பேக்கர் என்ற அந்த பிரிட்டானிய கட்டிட கலைஞனுக்கு காந்தி கை
மாற்றிய சொற்கள்.
அந்த வரிகளிலேயே
வாழ்நாளைத்தொடர்ந்த லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர் தன் வாழ்வின் முதிர்ந்த பருவத்தில்
இவ்வாறு கூறினார் , “ நான் முதலில் காந்தியின் போதனைகள் அசாத்தியமானவை என்றே
நினைத்தேன். ஆனால் நான் எனது 40 வருட கால கட்டிட கலை வாழ்க்கையிலும் 70 வயதை கடந்த எனது மொத்த வாழ்க்கையிலும்
காந்தியின் சொற்கள் வரிக்கு வரி சரியானவை என உணர்ந்தேன் “.
பிரிட்டனில்
மதப்பற்றுள்ள ஒரு மெதடிஸ்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார் லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர்.
சுருக்கமாக லாரி பேக்கர் என அழைக்கப்பட்டார் தந்தை ஒரு கணக்காளர். தந்தையை போலவே
மகனும் ஒரு கணக்காளனாக வர வேண்டும் என எந்த ஒரு சராசரி குடும்பத்தாரைப்போலவே
அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் லாரன்ஸ்
வில்ஃப்ரட் பேக்கரின் மன விருப்பத்தின் சிற்றறைக்குள் கட்டிட கலைஞன்தான் சிறு புள்ளியாய் புதைந்திருந்தான். இளம்
பருவத்தில் தந்தையின் கை பிடித்து லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர் நகர் வலம் வருவான்
..அந்த சமயங்களில் அந்த சிறு புள்ளியானது கட்டிடங்களையும் வரைகலையையும் நோக்கியே
அவனது ஆன்மாவை கவியச்செய்தது.
லாரன்ஸ்
வில்ஃப்ரட் பேக்கரது தந்தை சார்ள்ஸ் ஒரு தேவாலயப்பாடல் குழாமின் தலைவராக
இருந்தார். அன்னையோ இசைக்கருவி வாசிக்க்கூடியவர். அவரது பெற்றோரிடமிருந்து
அவருக்கு மரபணு தொடர்ச்சியாக கிடைத்தது இந்த இசைப்பாரம்பரியமே. லாரி பேக்கர் ஜோஹான்
செபாஸ்டியன் பாக் என்ற ஜெர்மானிய இசை மேதையின் ரசிகரும் கூட.
செபாஸ்டியன்
பாக் பாணி இசையின் சில கீற்றுகளை கேட்க நேர்ந்தது. அவை விடியல் வேளை கதிரவனின்
முதல் கிரணம் போல் தனித்து கசிந்து பின்னர் தேக்கம் கலைத்து மதகுகளின் வழியே பீறிடும்
நீர்த்தாரையாக ஓடுகின்றன. அதன் பின்னர் எல்லாம் கைவரப்பெற்ற அமைதியுடன் ஓடும்
ஆற்றைப்போலவும் ஒலிக்கின்றன. தனிமையை நாடி ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் போல
அந்த இசைப்பெருக்கின் ஒரு கிளைக்கீற்று தன் அந்தரங்கத்தை கொண்டாடியபடியே இருக்கின்றது.
“ கட்டிட கலையும்
இசையை போன்றதுதான். அது ஒரு அடித்தள கருவிலிருந்து தொடங்கக்கூடியது. நீரோடையானது அருவியாக படர்ந்து பெருகி பாயும்போது
வழியில் தென்படுபவற்றை தழுவியும் உள்வாங்கியும் செல்லும். அது போல் இசையினதும் கட்டிடக்கலையினதும் எல்லைக்குள்
நின்றபடியே நீங்கள் விசாலிக்க முடியும்” என
தனது கட்டிடப்பாணியின் தொழில் நுட்பங்களை குறித்து விளக்குகின்றார் லாரி பேக்கர்.
லாரன்ஸ்
வில்ஃப்ரட் பேக்கர் இந்தியா வந்து காந்தியை சந்திக்கும் முன்னரே காந்திய சிந்தனையின் அய்ரோப்பிய
நீட்சியாகத்தான் வாழ்ந்து வந்தார்.
தனது கிறிஸ்தவ மத நம்பிக்கையை சடங்குகளின்
வெற்று தொகுப்பாக அவர் காணவில்லை. தனது கடவுள் நம்பிக்கையை தேவாலயத்துடன்
குறுக்கிக்கொள்ளவுமில்லை. பெற்றோர் மூலம் தனக்கு அறிமுகமான இயேசுவின் வழியே மனித
குலத்திற்கு சேவை செய்வதை தலையாய வழிபாடாக லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர் கண்டார்.
இந்த
தரிசனம்தான் கட்டிட கலைஞனான லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கருக்கு ஒரே நேரத்தில் பல
வாழ்க்கையை வாழும் வாய்ப்பை வழங்கியது. அகிம்சைவிருப்பு , போர் வெறுப்பு , மருத்துவ தாதி , ஓவியர் ,
மருந்தாளுனர் , இசைக்கருவி வாசிப்பாளர் ,மயக்க மருந்து நிபுணர் என பல வண்ண நிற மாலையணிந்த மனிதனாக வலம் வரச்செய்தது.
காந்தியின்
தேசத்தில்தான் லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கரின் ஆன்ம தேடுதல் நிறைவடைந்தது என
சொல்லலாம். 1917 இல் பிரிட்டனில் பிறந்த லாரி பேக்கர் 1945 இல் காந்தியை
சந்திக்கின்றார். சீனாவில் தொழு நோயாளிகளுக்கான சேவையில் அவர் இருந்தாலும் காந்தி
என்ற ஆளுமையின் தாக்கம் அவரை இந்தியாவிற்குள் அய்க்கியமாகச்செய்தது.
இரு புள்ளிகள்
ஒன்றரக்கலந்து ஒன்று மற்றதை வலுப்படுத்தியதன் பின்னர் தனித்தனி திசைகளில் பிரிந்து ஒரே மன
ஓட்டத்துடன் இறுதி வரை செயல் திறத்துடன் இயங்கிக்கொண்டே இருந்தன.
உத்தரகாண்ட்
மாநிலம் பித்தோராகட் மாவட்டத்தில் உள்ள இமயமலையின் பனி பூசிய அடிவார பழங்குடி
கிராமம் அது. இந்தியாவிற்கும் திபெத்திற்குமான எல்லையினருகில் அக்கிராமம்
அமைந்திருந்தது. அதில் தனது இந்திய வாழ்வை 1948 ஆம் ஆண்டு துவக்குகின்றார் லாரன்ஸ்
வில்ஃப்ரட் பேக்கர்.
பாறையும்
பனியும் மக்களும் பண்பாடும் முட்டி மோதும் நாற்சந்தியில் அமர்ந்திருந்தார் வில்ஃப்ரட்
லாரன்ஸ் பேக்கர். அங்கிருந்து கொண்டு சராசரி இந்தியனின் வாழ்க்கையையும்
வாழுமிடத்தையும் ஆராய்ந்தார். பிரிட்டனில் தான் பெற்ற கல்வியோடும் , தனது
அய்ரோப்பிய வாழ்வு முறையோடும் ஒப்பிடுவதாகவே அவரது அந்த ஆய்வு அமைந்தது.
அந்த
ஆராய்ச்சியானது அவருக்குள் மேதாவிச்செருக்கை கிளறவில்லை. அவர் அவற்றை ஒரு ஓரத்தில்
சுமை இறக்குவது போல் இறக்கி வைத்து விட்டு தன்னை காற்றில் மிதக்கும் ஒற்றை இலை போல
உணர்ந்தார். கல்வியிலும் வாழ்க்கையிலும் நிறைந்திருந்த முன் முடிவுகள் அவரை விட்டு
கழன்று விழுந்திருந்தன.
தனது மேம்பட்ட
அய்ரோப்பிய வாழ்க்கை முறைக்கும் சராசரி இந்தியனின் வறிய வாழ் நிலைக்கும் உள்ள
வேறுபாட்டை அவர் உணர்ந்தார்.
அதை அவரே
பின்வருமாறு கூறுகின்றார், “ லட்சக்கணக்கான மக்கள் அன்றாட உணவிற்கே அல்லல்படும்
காட்சிதான் என்னை வாழ்வின் எல்லா விதமான ஆடம்பரங்களையும் விரயங்களையும் கைவிட
வைத்தது . நான் இங்குள்ள வறியவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். நான் எதையும்
புத்தாக்கம் செய்யவில்லை. கொலம்பஸைப்போல ஏற்கனவே இருப்பவற்றைத்தான் திறந்து
காண்பித்துள்ளேன் ”.
சராசரி ஏழை
இந்தியர்கள் அன்றாட வாழ்க்கைக்கு போராடினாலும் தங்களது வாழ்க்கை நிலைக்கு ஏற்ப
மிகப்பொருத்தமாக வீடுகளை அமைப்பதை கண்டார். கட்டிட கலையில் தான் கற்ற கல்வியின்
மூலம் பெற்ற அடைவுகளுக்கும் ஏழை இந்தியனின் வீடு கட்டும் முறைக்கும் உள்ள பெருத்த
இடைவெளியை அதிசயித்து உணர்ந்தார்.
சில
வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ராஜஸ்தான் மாநில பாலைவன
வாழ்க்கை முறையை காட்டினார்கள். அந்த பாலைவனத்தில் பகலில் 50 டிகிரி
சென்டிகிரேடிற்கும் மேலாக வெப்பம் தகிக்கின்றது. இடையிடையே புலன்களை அறுத்து துளைக்கும்
மண் புயல். இரவிலோ நடுக்கும் குளிர். இந்த
அதீதமான கால நிலைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் பெரிய அளவில் செலவு செய்து மெனக்கெடுவதில்லை.
பாலைவன
மண்ணில் நீர் விட்டு குழைக்கின்றனர். அது களிமண் பக்குவத்திற்கு வந்தவுடன்
நாற்புறமும் சுவரை எழுப்புகின்றனர். கூரையானது பாறை பாளங்களையும் பாலைவனப்புற்களையும்
கொண்டு அமைக்கப்படுகின்றது . அவர்கள் வசிப்பதற்கு இப்போது ஒரு மண் குடில் தயார்.
அவர்களின்
பகல் பொழுது கால் நடைகளை மேய்த்தலிலும் தண்ணீருக்கான நெடும்பயணத்திலும்
கழிகின்றது. வெப்பமும் தட்பமும் எகிறும்போது மண் குடிலானது அவர்களை தனக்குள்
இதமாய் அணைத்துக்கொள்கின்றது. ஏகாந்த
வெளியில் அவர்களின் வாழ்க்கை எறும்பு போல மெல்ல ஊர்ந்து கொண்டேயிருக்கின்றது.
பாலை வனத்தின்
மடியானது இரவும் பகலும் மரணத்தை பொழிந்து கொண்டேயிருக்கின்றது. அந்த மடியிலிருந்தே
வாழ்விற்கான இழையை சலிப்பில்லாது மீட்டிக்கொண்டே இருக்கின்றனர் அங்கு வசிக்கும் பழங்குடிமக்கள்.
ராஜஸ்தான்
பாலைவனத்தில் மட்டுமல்ல உட்பட இந்தியாவின்
மலைப்பாங்கான கிராமப்புறங்களிலும் , சம வெளிகளிலும் வாழும் மக்களின் வாழ்விடங்கள் இந்த
முறைகளில்தான் எழுப்பப்படுகின்றது.
பித்தோராகட் பகுதி வாழ் மக்கள் மண் , மூங்கில் ,
உலர்ந்த புல் , இலை தழைகள் , பதர் ,சேறு , கள்ளிச்செடி கற்றாழை, படரும் கொடி
வகைகளின் நார் ஆகியவற்றை பயன்படுத்தி
வீடுகளை அமைப்பதை லாரி பேக்கர் கண்டார். அந்த வீடுகளில் கோரை , பிரம்பு , மூங்கில் போன்றவை சிறந்த தீத்தடுப்பானாகவும்
விளங்குவதையும் நேரில் அறிய முடிந்தது.
.மூங்கிலினால்
கட்டப்பட்ட வீடுகள் காங்கிரீட் வீடுகளைக்காட்டிலும் புயலின் போது தாக்குபிடித்தன. நில
நடுக்கத்தின் போது மண் , பாறையினால் கட்டப்பட்ட வீடுகள் அப்படியே இருந்தன. ஆனால் விறைத்து
நின்ற காங்கிரீட் வீடுகளில் விள்ளலும் விரிசலும்
ஏற்பட்டன.
விலங்குகள்,பறவைகள்,தாவரங்கள்,காற்றிலும்
மண்ணிலும் ,மழை நீரிலும் உள்ள
தாதுக்கள் போன்றவை ஏற்படுத்தும்
சேதாரங்களிலும் அரிமானங்களிலும் மேற் கண்ட வீடுகள் வெற்றிகரமாக
தாக்குபிடித்தன.
அதே போல்
சுண்ணாம்பை மண்ணுடனும் செங்கல் பொடியுடனும் கலக்கும்போது கிடைக்கும் சாந்தானது
சிமிண்டிற்கு இணையாக இருந்தது. சிமிட்டியை விட அது மலிவானதாகவும் கிடைத்தது.
இந்தியாவின்
பொது போக்கில் வாழும் மக்கள் அற்பமாக கருதுகின்ற அவ நம்பிக்கையுடன் பார்க்கும் பொருட்களிருந்துதான்
எளிய மக்கள் தங்களது வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன் படைக்கின்றனர். இந்தியாவின்
ஆன்மா இந்த எளிய மக்களின் வாழ்வியல் குறியீடுகளில்தான் தங்கியுள்ளது.
எங்களூரில்
147 வருடம் பழமையான மஹ்லறா என்ற ஒரு நினைவிடம் உள்ளது. அதில் 100 அடி உயரமும் 100
அடி அகலுமும் உள்ள கவிகை மாடம் ஒன்று உள்ளது . அதனை தாங்குவதற்கு தூண்கள் எதுவும்
கிடையாது. இதனை சுண்ணாம்பு , மணல் , கடுக்காய் , பதநீர் ,கருப்பட்டி ஆகிய
மூலப்பொருட்களை கொண்ட கலவையினால் கட்டியுள்ளார்கள். இன்று வரை அந்த நினைவிடம் எந்த
வித சேதாரமும் இல்லாமல் கம்பீரமாக நிற்கின்றது.
அதே போல் காவிரியின்
குறுக்கே உள்ள கல்லணை கரிகால் சோழனால் கி.மு. 2 இல் கட்டப்பட்டது. சுண்ணாம்பு செங்கல் தூள் கலவையினால் உருவாக்கப்பட்ட
அந்த அணை உறுதியானதும் உலகிலேயே மிகப்பழமையானதுமாகும்.
இந்தியாவில்
எளிய மக்களின் இருப்பிடமாக இருந்தாலும் சரி , பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்களாக
இருந்தாலும் சரி அவைகள் மலிவான மூலப்பொருட்களைக்கொண்டுதான் பெரும்பாலும் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றின் உருவாக்கமும் இருப்பும் இயற்கைச்சூழலையும் நிலத்தின் வளங்களையும் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இந்த முறையில்
கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும்போது ஏற்படும் கழிவுகளும் கூட நிலம் , நீர் ,
காற்று , தாவரம் உள்ளிட்ட பிற உயிரினங்களின் வாழ்விற்கு எந்த சிறு உறுத்தலையும் கூட
ஏற்படுத்தவில்லை என்பதையும் லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர் கண்கூடாகவே கண்டார்.
பெரு வாரியான
இந்திய மக்களின் கட்டிடம் கட்டும் முறை, இயற்கைச்சூழலோடு மிக அணுக்கமான வாழ்வு ,
மனித துயரின் மீதான கரிசனம் இவைகள் கலந்த கலவைதான் லாரி பேக்கர் கட்டிடக்கலையின் கருவாகும்.
திருவனந்தபுரத்தில்
உள்ள சென்டர் ஃபார் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் என்ற பொது கட்டிடத்தையும் , தம்பானூர் பேருந்து
நிலையத்தை ஒட்டி ஒற்றைத்தூண் அமைப்பில் கட்டப்பட்டுள்ள
இந்தியன் காஃபி ஹவ்ஸ் என்ற உணவகத்தையும் பார்த்தோம். இவையல்லாமல் புதிதாக
கட்டப்பட்டு கொண்டிருக்கும் சில பொது கட்டிடங்களையும் பார்க்க முடிந்தது.
இவையனைத்தும் லாரி பேக்கர் பாணி கட்டிடங்களாகும்.
நாட்டுப்புற
கேரளீயர்கள் தங்களது வீடுகளை தனியாகத்தான் அமைப்பார்கள். அவர்கள் தனிமை
விரும்பிகள் . ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் இடை வெளி தாராளமானதாக
இருக்கும்.. அந்த இடைவெளியின் சுற்றெல்லைக்குள் கிணறு , மரங்கள் , துணி
துவைக்குமிடம், கழிப்பறை ,குளியலறை இருக்கும். அந்த வெளியில் வீடும் விண்ணும்
மண்ணும் தளைகள் ஏதும் இல்லாமல் சஞ்சரித்து கொண்டே இருக்கும்.
எனவேதான் லாரி
பேக்கர் பாணி கட்டிடங்கள் இயற்கையை நேசிக்கும் கேரளத்தில் வெற்றியடைந்தன.
CDS வளாகத்தில்
புதியதாக எழும்பிக்கொண்டிருந்த கட்டிடங்களை கவனித்தோம்.
அவற்றில் சதுரவடிவில்
நான்கு செங்கல்களை வைக்கின்றார்கள். அந்த சதுரத்தின் நடுவே சிறிய சதுர இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர். ஒன்பது
அங்குலம் தடிமனுள்ள மொத்த சுவரையும் இப்படித்தான் எழுப்புகின்றனர். சுவரை காரை
கொண்டு பூசுவதில்லை.
சுவற்றின் நடுவில் உள்ள இடைவெளியில் காற்றோட்டம்
சீராக இருக்கின்றது. இந்த இடைவெளியின்
விளைவாக வீட்டின் வெளிச்சுவரில் படும் கதிரவனின் வெப்பமும் , குளிர் கால
சில்லிப்பும் முழுமையாக நேரடியாக வீட்டிற்குள் கடத்தப்படுவதில்லை. அவற்றின் உட்
செல்லும் அளவை குறைப்பதில் சுவரின் இடை வெளிக்குள் உலவும் காற்று ஒரு வடிகட்டி போல
செயல்படுகின்றது.
இந்த பாணி
வீடுகளில் சுவர்களை காரை கொண்டு பூசிடுவதில்லை. அந்த சுவர்களுக்கு செயற்கை
வேதியியல் வர்ணமும் அடிப்பதில்லை.
சமையலறையில்
மட்டும் காரை கொண்டு சுவற்றை பூசுகின்றனர். காரணம் சுவற்றில் உள்ள செங்கலில்
இருந்தும் செங்கல்களுக்கு இடையே உள்ள சுண்ணாம்பு பூச்சிலிருந்தும் சில சமயங்களில் பொடிப்பொடியாக
துகள்கள் உணவிற்குள்ளோ அல்லது சமையல் பாத்திரங்களுக்குள்ளோ விழும் வாய்ப்பிருக்கின்றது .
சாந்து பூச்சும்
வர்ணமும் இல்லாமலேயே செங்கற்களின் சிவந்த சிரிப்பு ஒன்றே மொத்த வீட்டிற்கும்
அழகூட்டுகின்றது. செங்கற்களில் உள்ள நுண்ணிய துளைகள் வழியே புறமே உள்ள காற்று
மிகவும் சன்னமாக வீட் டிற்குள்ளே ஈர்க்கப்படுகின்றது.
அந்த பூசப்படாத சுவரானது இயற்கையின் அய்ம்பெரும்
ஆற்றல்களுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள சூட்சுமமான உறவை உயிரோட்டத்துடன்
தொடர்ந்து நிகழ்த்தி கொண்டே இருக்கின்றது. ஆனால் நாமோ சுவற்றிற்கு சிமிட்டி
சாந்தால் பூசி மெழுகி போதாக்குறைக்கு வேதியியல் கலவைப்பொருள்களை கொண்ட வர்ணம் வேறு
அடிக்கின்றோம். இந்த மூச்சடைக்கும் பூச்சு முறையினால் வாழும் வீடானது
அலங்கரிக்கப்பட்ட கல்லறை போன்று ஆகி விடுகின்றது.
அத்துடன் கூரையில்
விழும் மழை நீரானது சுவர்களில் ஓடி வழிந்து இறங்குவதை தடுக்க அச்சுவரிலேயே தேவையான
இடத்தில் மறைப்பமைவும் இருக்கின்றது.
சாளரங்களுக்கு
மரத்தின் தேவை மிக மிக குறைவு அல்லது அறவே தேவைப்படுவதில்லை. காரணம் சுவரை
எழுப்பும்போது சாளரம் தேவைப்படும் பகுதிகளில் ஒரு செங்கல் அளவிற்கு இடை வெளி
விட்டு தேவையான அளவிற்கு துளைகளை சுவரில் உண்டாக்குகின்றனர். இந்த முறையானது அளவு
கடந்த வெளிச்சமும் , வெப்பமும் வீட்டினுள்ளே கடத்தப்படுவதை தடுக்கின்றது.
சில
கட்டிடங்களில் இம்மாதிரி துளைகளை அமைக்காமல் சாளரத்திற்கான இடைவெளியில் மரம்
அல்லது கம்பியிலான நாற்சட்டம் ஒன்றை அமைத்து அவற்றை வலை கம்பி கொண்டு போர்த்துகின்றனர்.
இதுவும் அளவு கடந்த சூடும் ஒளியும் வீட்டிற்குள் வருவதை கட்டுப்படுத்துகின்றது.
இந்த
ஏற்பாடுகளின் விளைவாக கோடையிலும் கூதல் பருவத்திலும் வீட்டினுள் மிதமான தட்ப
வெப்பம் நிலவுகின்றது. வீட்டினுள்ளே காற்றும் , ஒளியும் நிதானமான போக்குவரத்தை
கடைபிடிக்கின்றன. குளிர் சாதனத்தின் தேவையே எழுவதில்லை.
லாரி பேக்கர்
பாணியிலான கட்டிடங்கள் பொதுவில் சிவந்த மேனியோடு காட்சியளிக்கின்றன. ஆளுக்கு ஆள்
மாறுபடும் மனித குணங்களையும் கை ரேகையையும்போல அவை ஒவ்வொன்றிலும் ஒரு தனித்தன்மை
பொதியப்பட்டிருந்தது.
நமது வீடுகளில் படுக்கையறை , தனியறை , சரக்கு
அறை , சமையலறை , குளிப்பிடம் , கழிப்பிடம்
போன்ற ஏராளமான அறைகள் இருக்கின்றன. அந்த அறைகளுக்குரிய கதவுகளுக்கும் ,
நிலைச்சட்டங்களுக்கும் மரம் அல்லது இரும்பு தேவைப்படும்.
ஆனால் பேக்கர்
பாணி கட்டிடங்களில் படுக்கையறை , கழிப்பறை போன்ற தவிர்க்க முடியாத இடங்களில்
மட்டும் கதவுகளை பயன்படுத்துகின்றனர். மற்றவற்றிற்கு சுவற்றை வளைத்து மறைப்பை
உண்டாக்குகின்றனர்.
வீட்டின்
கூரைக்கு சில இடங்களில் ஓடுகளைப்பயன்படுத்தியுள்ளனர். கேரளாவில் மரங்கள் ஏராளமாக
கிடைப்பதால் மரத்தாலான கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூரைகளுக்கு மூங்கில் கழையை
பயன்படுத்தி முட்டு கொடுக்கின்றனர்.
நமது
மாநிலத்தில் பனை மரமும் , தென்னை மரமும் ஏராளமாக இருப்பதால் அவற்றை
பயன்படுத்தலாம். அந்தந்த பகுதிகளில் என்னென்ன பொருட்கள் எளிதாகவும் ,
அபரிமிதமாகவும் கிடைக்கின்றதோ அவற்றை பயன்படுத்தி சிக்கனமாக வீட்டை கட்டுவதுதான்
இந்தக்கலையின் முக்கிய அம்சமாகும்.
வீட்டிற்கான மூலப்பொருட்களை எடுக்கும்போது
அங்குள்ள இயற்கை வளங்கள் சுரண்டப்படக்கூடாது . சுற்றாடலின் சம நிலை குலையவும்
கூடாது. லாரி பேக்கரின் கட்டிடம் கட்டும் முறை
என்பது திணை சார்ந்த கலை மட்டுமல்ல இயற்கையை நேசிக்கும் ஒரு வாழ்வியலும் கூட .
மூங்கில்
அல்லது பனை மரத்தில் தங்கியிருக்கும் கூரையின் பலத்தையும் நீடித்த தன்மை பற்றியும்
நமக்கு அய்யம் எழலாம்.
கேரள மாநிலம் மலப்புரம்
மாவட்டத்தில் நண்பர் வீட்டில் விருந்தொன்றிற்கு சென்றிருந்தேன். பொறித்த கோழி ,
காரமான குழம்புடன் மாட்டுக்கறி , நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பும்
வெங்காயமும் கலந்த நெய்ச்சோறு ,
பாயசம் காத்திருந்தது . விருந்தை முடித்து
விட்டு வீட்டை சுற்றி வந்தேன். குறு மிளகு , தென்னை , முருங்கை , மாமரம் , ரப்பர்
போன்றவற்றுடன் மூங்கில் மரமும் நெடு நெடுவென நின்றிருந்தது.
நான் குறு
மிளகு செடியை இது வரை பார்த்ததில்லை. எனவே அதையே கூர்ந்து பார்த்து
கொண்டிருந்தேன். ஆனால் வீட்டுக்காரரோ என்னை பார்த்து
“ உங்களூரில்
மூங்கில் உண்டா ? “ என அற்புத பொருளை கேட்பது போல் கேட்டார். அவர் ஏன் அப்படி
கேட்டார் என யோசித்து பார்த்தேன்.
அவரின்
வீட்டிலேயே அதற்கான விடை கிடைத்தது. ஓட்டிலானல் வேயப்பட்ட அவர் வீட்டு கூரைக்கு
மூங்கில் கழைகள்தான் குறுக்கும் நெடுக்குமாக பாரத்தை தாங்கும் முட்டுகளாக நின்றன.
அவர் அந்த வீட்டில் 30 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து பேரனும் கண்டு விட்டார். அந்த
வீடும் அவரின் நிறைந்த வாழ்க்கைக்கு சாட்சியாக அங்கே நீடித்திருக்கின்றது.
லாரி பேக்கர்
பாணி வீடுகளில் கூரைகள் பெரும்பாலும் மரங்கள் அல்லது ஓடுகளில்தான்
அமைக்கப்பட்டிருக்கும். இரும்பு , சிமிண்ட் ஆகியவற்றின் வரைமுறையற்ற பயன் பாட்டை
குறைப்பதே இதன் நோக்கம்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காங்கிரீட் கூரையை
விரும்புவர். அப்படிப்பட்டவர்களுக்கு காங்கிரீட்டின் அடியில் மேலும் கீழுமாக வைக்கப்பட்ட
இரு ஓடுகளை வரிசையாக பதிப்பர். இதன் விளைவாக காங்கிரீட் மீது விழும் கதிரவனின்
வெப்பமானது ஒடுகளுக்கிடையே உள்ள சிறு இடை வெளிகளின் காரணமாக கணிசமாக குறைந்து விடும்.
காங்கிரீட்டை
பரப்பி நிரவும் முறையாலும் கூரையை வளைவாக
அமைப்பதினாலும் கூரையின் கனமானது கணிசமாக குறைக்கப்படுகின்றது.
லாரி
பேக்கரின் பாணி கட்டிடங்கள் உறுதியற்றவை. இதில்
கட்டிட செலவு குறைவு என்பதெல்லாம் வெறும் மாயை. இந்த முறையில் சிறிய வீடுகள்
மட்டுமே கட்ட முடியும். நீண்ட நாள் தாக்கு
பிடிக்கக்கூடிய பெரிய அகன்ற கட்டிடங்களுக்கான வாய்ப்பே இல்லை என்ற பல எதிர் மறை எண்ணங்களுடன்
கேரளத்தில் பார்த்தவர்கள் ஏராளம்.
அந்த அவ
நம்பிக்கைகளுக்கு லாரி பேக்கர் சொன்ன விடைதான் 10 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள CENTRE FOR
DEVELOPMENT STUDIES { CDS -- Thiruvanandhapuram } என்றழைக்கப்படும்
மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம்.
எதிர்பார்க்கப்பட்ட
செலவில் மூன்றில் ஒரு பங்குத்தொகையை மிச்சப்படுத்தும் வகையில் அந்த கட்டிடத்தை ஒரு
அறைகூவலாகவே கட்டி காட்டினார் லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர். இந்த கட்டிடம் கட்டி
முடித்து 41 வருடங்கள் நிறைவு பெற்று விட்டன. பொதுவாக தனியார் ஒப்பந்தக்காரர்களால்
அல்லது பொதுப்பணித்துறையினரால் கட்டப்படும்
அரசு & பொது கட்டிடங்களுக்கு நேரிடும் கேடு பாடுகள் எதுவும் CDS கட்டிடங்களில் இல்லை.
. லாரன்ஸ்
வில்ஃப்ரட் பேக்கர் பெற்ற வெற்றிக்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் ?
தொழு நோயாளி
இல்லம் , ஆழிப்பேரலை காப்பு வீட்டு திட்டம் , சுற்றுலா போக்கிடம் [ RESORT ], மன நோயாளி காப்பு மனை , நடன கிராமம் , மீனவர் குடில்கள் , படப்பிடிப்பு கலையகம்
{ STUDIO } , குழந்தைகள் புகலிடம் , மருத்துவ மனை , தேவாலயம் , பல்கலைக்கழகம் ,
நில நடுக்க ஒதுக்கிடம் , பார்வையற்றோர் புகலிடம் , சேரி வாசிகளுக்கான வீடுகள் ,
பெண்கள் விடுதி ,விவசாய பயிலகம் , அரசு அருங்காட்சியகம் என பேக்கர் கட்டித்தள்ளிய
கட்டிடங்கள் ஏராளம்.
அவர் கட்டாத
ஒரு இடம் உண்டு என்றால் அது சிறைச்சாலையாகத்தான் இருக்கும். சிறைச்சாலையானது அதில்
அடைக்கப்படும் மனிதர்களை சீர்திருத்தம் வகையில் கலை உணர்வுடன் கட்டப்பட வேண்டும்
என அவர் விரும்பினார். ஆனால் அதை கட்டும் வேலைக்கு தகுதியான வேறு ஆட்கள் உண்டு என
நினைத்தாரோ என்னவோ ?
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் என அவர் தனது
கட்டிட முறையில் ஒரு போதும் வேறுபாடு காட்டியதில்லை. அவர் கட்டிடங்களை வெறும்
மண்ணும் கல்லும் கொண்ட தாழ் நிலை பொருட்களாகவும் காணவில்லை. மனிதன் புழங்கும்
கட்டிடம் என்பது உயிர் துடிப்பு மிக்கது. அது அவனது எண்ணங்களிலும் நன்னடத்தைகளிலும் உணர்வுகளிலும், செயல்களிலும் கணிசமான
தாக்கத்தையும் விளைவையும் ஏற்படுத்தக்கூடியது என அவர் உறுதியாக நம்பினார்.
இன்றைய நகர
வாழ்க்கையும் புதிய புதிய நுகர்வு பொருட்களின் வருகையும் மக்களிடையே தலை
தூக்கியுள்ள வாங்கி குவிக்கும் வெறியும் செயற்கை மலையாக குப்பைகளை
உருவாக்குகின்றன.
அவற்றை
விண்ணில் கலப்பதா ? மண்ணில் புதைப்பதா ?
நீரில் கரைப்பதா ? கழிவை எங்கு ஒழித்து கட்டுவது ? என்கின்ற முடிவற்ற வினாக்கள் குப்பையைப்போலவே
உருவாகிக்கொண்டே இருக்கின்றன. உலகெங்கிலும் கழிவு மேலாண்மை என்பது பெரும் தலை வலி
பிடித்த சமாச்சாரமாக மாறி வருகின்றது.
லாரி பேக்கர்
பாணி கட்டிடங்களில் கூளம் , குப்பைகள் , சமையல் கழிவுகளுக்கான மறு சுழற்சி
ஏற்பாடும் உள்ளது. இரண்டு பிவிசி குழாய்கள் புகை போக்கி போல் மண்ணில்
ஊன்றப்பட்டுள்ளன. அவற்றில் மாறி மாறி கொட்டப்படும் கழிவுகள் 70 நாட்களில் மக்கி
உரமாகின்றன .
கட்டிடம்
கட்டும்போது வாய்ப்புள்ள இடங்களில் கூடுமானவரை மறு சுழற்சி முறையில் செங்கல் ,
இரும்பு , வண்ண கண்ணாடி குப்பிகள் , சில்லுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதனால் பொருட்களை புதியதாக வாங்கும் செலவு குறைகின்றது.
மேற்கண்ட
ஏற்பாட்டின் விளைவாக குப்பை தொல்லை வெகுவாக குறைகின்றது. சுற்றாடலையும் அண்டை வீட்டாரையும் தொந்திரவு செய்யாத ஒரு வீடு உருவாகின்றது.
நமது கட்டிட
கல்வி முறையில் காந்தியின் லட்சியமும் அதன் வழி பயணித்த லாரன்ஸ் வில்ஃப்ரட்
பேக்கரின் செயல்வடிவமும் உள்வாங்கப்படாதது பெரும் அநீதமாகும்.
ஓவியர் , சிற்பி
, மட்பாண்ட வனைஞர்கள், நெசவு வடிவமைப்பாளர்கள் ,வண்ண கண்ணாடி தயாரிப்பாளர்கள்
போன்றவர்கள் அழகியலின் தூதுவர்கள். இந்த உழைக்கும் படைப்பாளிகளுடன் தற்கால கட்டிட
கலை பயிலும் மாணவர்களுக்கு எவ்வித உரையாடலும் பயிற்சியும் நடை பெறுவதில்லை. கட்டிடங்களை
வெறும் கல் , மண் , இரும்பு , சீமை சிமிட்டியின் கலவையாக மட்டுமே பார்க்கும்படி
இந்த மாணவர்கள் பயிற்றுவிக்கின்றனர்.
இதன் விளைவாக
கட்டிட கலை பயிற்சி கழகங்களிலிருந்து வெளிவரும் மாணவர்களுக்கு மனித வாழ்வின்
அடிப்படையான அய்ம்பெரும் ஆற்றல்களோடு இயைந்து செயல்பட முடிவதில்லை. மனித வாழ்வின்
பருண்மைகளும் , அழகியலும் புரிவதில்லை.
அவர்கள் செத்த கட்டிடங்களையே உருவாக்குகின்றனர். அல்லது அவர்கள் உருவாக்கும்
கட்டிடங்கள் பச்சை பசேலென்ற பரப்பின் இதயத்தில் புடைத்து நிற்கும் வெண்ணிற புற்று
நோய் கட்டிகளாக காட்சியளிக்கின்றன.
தாராளமயமாக்கமும்
, உலக மயமாக்கமும் , கார்ப்பரேட் உலகும்தான் நமது ரசனைகளை ,விருப்பங்களை ,
தேர்வுகளை ஏன் மொத்த வாழ்வையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றனரே . அவர்கள்
எப்படி மண்ணுக்கும் மக்களுக்கும் இசைவான கல்வியை உருவாக்க சம்மதிப்பார்கள் ?
அதனால்தான் கொள்ளை லாபம் பார்க்கும் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் லாரி பேக்கரின் “
அனைத்து பிரிவினருக்கான எளிய வீடு கட்டும் கலை “ யை மூர்க்கமாக எதிர்த்தனர்.
95
வருடங்களுக்கு முன்னர் தேம்ஸ் நதி பாயும் தேசத்திலிருந்து புறப்பட்ட நீரொழுக்கு சேர நாட்டின் கரமனையாற்றில் பெரு
நதிப்பிரவாகமாக கலந்து ஆறு ஆண்டுகளாகின்றன. லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கர் என்ற மனித
நேயர் இன்று நம்மிடையே இல்லை. மொத்த இந்தியா அவரைப்புரிந்து கொண்டதோ இல்லையோ அச்சுத
மேனன் தலைமையிலான அன்றைய கேரள அரசு அவரை தங்களுக்குள் அய்க்கியமாக்கி கொண்டது.
அந்த
புரிதலின் விளைவாக உருவாகியதுதான் “ COSTFORD “ { Centre of Science and Technology for Rural
Development } என்ற லாப
நோக்கற்ற அரசு சாரா நிறுவனம். கேரளம் முழுக்க செயல்படும் இவர்கள் லாரி பேக்கர்
பாணியிலான கட்டிடங்களை கட்டி கொடுக்கின்றனர்.
அத்துடன்
வீட்டிற்கு தேவையான மின்னாற்றலை உண்டாக்க கதிரொளி , சாணம் உள்ளிட்ட மாற்று
முறைகளையும் கையாள்கின்றனர்.
அந்த
நிறுவனத்திற்கு சென்றிருந்த போது கட்டிட
கலையில் இறுதியாண்டு பயிலும் சென்னையை சேர்ந்த மாணவி ஒருத்தி உள்ளக ( INTERNSHIP )
பயிற்சிக்காக அங்கு தங்கியிருந்தார்.
அங்கு அவருடன்
உரையாடுகையில் லாரி பேக்கர் பாணியில் மொத்த கட்டிட செலவில் 30 % மிச்சப்படுத்த
முடிவதாகவும் தெரிவித்தார். வீட்டை கட்டும் செலவில் பெரும்பங்கு கட்டிடத்தொழிலாளிகளின்
கூலிக்குத்தான் செலவாகின்றது என்றும் எனவே வேகமாக இடை நிறுத்தாது கட்டிட பணிகளை
நிறைவு செய்வதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
லாரி பேக்கர்
பாணியை கற்க விரும்பும் கட்டிடக்கலைஞர்கள் , பொறியாளர்கள் ,மேலாட்கள் { MAISTRY } , கொத்தனார்களுக்கு LAURIE
BAKER CENTRE FOR HABITAT STUDIES என்ற நிறுவனம் மூலம் பயிற்சியும்
கொடுக்கின்றனர் பயிற்சியாளர்களுக்கு உணவும் , உறைவிடமும் அளிக்கப்படுகின்றது. அதற்காக எளிய கட்டணமொன்றும் பெறப்படுகின்றது.
தமிழகத்தில் இந்த பாணியில் கட்டிடம் கட்டும்
பயிற்சியை சில கட்டிட கலைஞர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் லாரி பேக்கர் பாணி வீடுகளை
கட்டியும் கொடுக்கின்றனர் என்ற செய்தியையும் காஸ்ட் ஃபோர்டில் சொன்னார்கள்
நம் மாநிலத்தில் லாரி பேக்கர் பாணியிலான
கட்டிடங்களை காண விரும்புவர்கள் கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்திருக்கும்
முட்டுக்காட்டில் உள்ள தக்ஷிண சித்ரா பாரம்பரிய கலைக்கிராமத்தை சென்று பார்க்கலாம். இதனை கட்டியவர் பென்னி
குரிய கோஸ் என்ற லாரி பேக்கரின் மாணவராவார்.
இங்கு
நிகழ்த்தப்படும் கலைகளோடு அதன் சுவர்களும் செங்கற்களும் சுழன்றாடுகின்றன. அவற்றின்
மதில்களில் தொங்கும் ஓவியங்கள் தனிமையில் இருப்பதில்லை. அறைகளோடு பேசிக்கொண்டே
இருக்கின்றன. புதிய பார்வையாளர்கள் அந்த அறைகளுக்குள் நுழைந்தவுடன் தங்களது
உரையாடலை அந்தரத்தில் நிறுத்தி விட்டு கடந்த காலத்திற்குள் ஓடிச்சென்று ஒளித்துக்
கொள்கின்றன. எவ்வித பிடிப்பும் இன்றி மிதந்த சொற்கள் மரத்தின் காய்ந்த இலைகள் போல ஒவ்வொன்றாக அந்த
காட்சி அறை முழுக்க விழுந்து கிடக்கின்றன.
தமிழகத்தின்
தலை நகரில் உள்ள அழகியல் மையம் லாரி பேக்கரை கொண்டாடுகின்றது.ஆனால் பொதுவாக தமிழக
மக்களிடையேயும் மாநில அரசிடமும் இதற்கான வரவேற்பு இல்லையே ஏன் ? என்ற கேள்வியும்
கிளம்புகின்றது. கிரானைட்டையும் ஆற்று மணலையும் கடைவாய்ப் பல் படாமல் விழுங்கும்
தேசத்தில் லாரன்ஸ் வில்ஃப்ரட் பேக்கரை யார் நினைக்கப்போகின்றார்கள் ?
.``````````````````````````````````````````````````````````````````````````````````````````````
தொடர்புடைய பதிவுகள்:
செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - பகுதி 1
செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - பகுதி 2
செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - நிறைவுப்பகுதி
லாரி பேக்கர் வீடும் -அவர் கட்டிய கட்டிடங்களும், திருவனந்தபுரம்
சுவாசிக்கும் வீடுகள்
செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - பகுதி 1
செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - பகுதி 2
செங்கல் கவிஞன் லாரி பேக்கர் - நிறைவுப்பகுதி
லாரி பேக்கர் வீடும் -அவர் கட்டிய கட்டிடங்களும், திருவனந்தபுரம்
சுவாசிக்கும் வீடுகள்
.
No comments:
Post a Comment