நானும் பள்ளிப்பருவத்தில்
ஊர் கடற்கரையில் மீன் பிடித்தவன்தான். குட்டிப்பாறை,திருக்கை என முயற்சி
திருவினையாகியிருக்கிறது. அவ்வப்போது நடந்த நண்டு வேட்டையைத்தவிர காலத்தின் ஓட்டம்
தூண்டிலிலிருந்து என்னைத் தொலைவிலாக்கி விட்டது. தூண்டிலுக்கு மட்டுந்தான் தொலைவு.
மற்றபடி கடல் பயணத்தின் வழியாகவும் ஆறுகளின் திட சாட்சியான மலைப்பிஞ்சுகளின்
வீட்டுச் சேகரங்கள் வழியாகவும் நீரின் அண்மைக்குக் குறைவேயில்லை.
மீன்களை அவர்களின் ஆழி
உலகத்திலிருந்து விடுவித்து நில உலகிற்கு அவ்வப்போது அழைத்து வரும்
‘தத்துவார்த்தப்’ பணியிலுள்ள வலையொளியார் சாலிஹ் கொஞ்ச நாட்களாக அமலி நகருக்கும்
கல்லாமொழிக்கும் அழைத்துக் கொண்டேயிருந்தார். ஜென் முறையிலாவது ஊழ்கம்
கைகூடுகிறதா? என்பதை சோதித்தறிய நடந்தேறியது மீன்பிடி மாலை.
26/01/2026 திங்கள்கிழமை மதியம் ஒரு மணிவாக்கில்
சாலிஹிடமிருந்து ’’ஒரு புதிய இடத்திற்குப் போகிறோம்’’ என வட்சப்பில் தகவல் வந்தது.
மூன்று மணியளவில் கிளம்பினோம். இடம்:காயல்பட்டினம் வடபாகம் கிராமம். அதாவது
தாரங்கதார வேதியியல் தொழிற்சாலையின்(DCW) பின்புறம் வரும் கடற்பகுதி. எங்களுக்கு
முன்னரேயே சாலிஹின் நண்பர்கள் மூவர் அங்கு கிளம்பி விட்டிருந்தனர்.
காயல்பட்டினத்திலிருந்து
ஆத்தூர்/குரும்பூர் செல்லும் புறவழிச்சாலையின் இடது புறத்தில் பிரியும் மண்
பாதையில் பயணம் தொடர்ந்தது. இப்பகுதிகளுக்கு நான் இதுவரை சென்றதில்லை. ஏராளமான
உப்பளங்கழிகள் தென்படத் தொடங்க வேதியியல் தொழிற்சாலையின் பின்னாம்புறத்தில் வந்து
சேர்ந்தோம். இவ்வளவு நெருக்கத்தில் இந்த ஆலையை இப்போதுதான் பார்க்கிறேன்.
1958-59 ஆம்
ஆண்டுகள்.காமராசரின் ஆட்சி. குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டம் தாரங்கதாராவில்
சாஹு சிரியன்ஸ் ஜெயின் என்பவர் நிறுவிய தாரங்கதாரா வேதியியல் தொழிற்சாலையின் கிளை
காயல்பட்டினத்தில் நுழைந்தேறியக் காலகட்டம்.
கொல்லாமை,ஊனுண்ணாமையை
மதமாகக் கொண்ட ஜைனர்கள் ‘பனியா’ எனப்படும் இந்திய தேசிய முதலாளி வர்க்கத்தைச்
சார்ந்தவர்கள். நாடெங்கும் சாலையோர வட்டிக்கடைகள் தொடங்கி பென்னம் பெரும் தொழில்களுக்கு
உடைமையாளர்கள்.
உள்ளூர் மக்களுக்கு
வேலைவாய்ப்புக் கிடைக்கும் என விருப்பமூட்டி காயலர்களிடமும் சுற்று வட்டார கிராம
மக்களிடமும் மாநில அரசிடமும் பெற்ற நிலத்தில் ஆலையை அமைத்தனர்.
முதலில் குடிசைக்
கொட்டகையில் ஞெகிழி உருளையுடன் தொடங்கிய கார சோடா உருவாக்கம் இன்று சி-
பிவிசி,பிவிசி,செயற்கைஇரும்பு ஆக்ஸைடு நிறமிகள்,செயற்கை ருடில்,இடைநிலை வேதியியல்
பொருட்கள்,அம்மோனியம் பை கார்பனேட்,சோடியம் பை கார்பனேட்,ஹைட்ரோகுளோரிக்
அமிலம்,திரவ குளோரின்,ட்ரை குளோரோ எதிலீன்,ஊடாக்ஸ்,இரும்பு குளோரைடு,சோடியம்
ஹைப்போ குளோரைட்டு,சோடா சாம்பல்,கார சோடா உள்ளிட்ட இன்னும் சில வேதியியல்
பொருட்களையும் உருவாக்குகிறார்கள். இவற்றிற்கான ஆற்றல் தேவைகளுக்காக ஆலை
வளாகத்திலேயே நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையமும் உள்ளது.
இத்தனைப் பொருட்களின்
உருவாக்கக்கழிவுகள் எங்கு போகும்? என் சிறு வயதில் வைகறைப்பொழுதில் ஊர் முழுக்க
குளோரின் வாடையை நுகர்ந்திருக்கிறேன். பனிக்காலத்தில் அதன் தாக்கத்தில்
காயல்பட்டினத்தின் வான் வெளியே மங்கி விடும். கண்ணுக்கு முன் வானம் கலங்கி வெண்
திரையாகி நம் முன் விழுந்தது போலிருக்கும். அவ்வப்போது ஊருக்குள் இராக்காலங்களில்
அழுகிய முட்டையின் துர் நாற்றம் பரவியிருக்கிறது. பருவ மழைக்காலங்களிலும் மற்ற
காலங்களிலும் எங்களூரின் மன்னார் வளைகுடா செந்நிறத்தில் மாறி விடும். ஊரில் கடந்த
இருபதாண்டுகளில் கண்,கால்,இடுப்பு என இதுவரை கேள்விப்பட்டிராத இடங்களில் புற்று
நோய்க்கட்டிகள். புற்றினால் இறப்புகள் கூடுதலாகவே ஆலையின் மாசு குறித்த
விழிப்புணர்வு உண்டாகியது.
ஊரின் வான்,கடல்
பரப்புகளில் வேதியியல் கழிவுகளை புகையாகவும்,திரவமாகவும் வெளியேற்றியதன் விளைவு. கடல்
நீரில் இயல்பான அளவை விட பன்மடங்குக் கூடுதலாக பாதரசக் கழிவுகள். பொது மக்களும்
உப்பள உரிமையாளர்களும் பல போராட்டங்களை நடத்தி முடித்தனர்.
மாவட்ட ஆட்சியர்,மாநில
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என முறையீடுகள் போய் இறுதியில் தென் மண்டல பசுமைத்
தீர்ப்பாயத்தில் ஊரின்‘கெபா’ சூழலியல் பொது நல அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. வழக்கைத்
தீவிரமாக விசாரித்த நடுவர் அவ்வப்போது விசாரணையில் கடுமையுங்காட்டினார். இறுதியில்
பழம் உண்டு கொட்டையை உமிழும் வௌவாலின் நீதிதான்.
டிசிடபிள்யூ விடயத்தில் அரசும்
நீதியதிகாரம் பெற்ற அமைப்புகளும் ஒரு
கீற்றைக்கூட கிள்ளிப்போடவில்லை. நண்பர்கள் குழு நடத்தி வரும் காயல்பட்டினம்
இணையதளத்தின் வாயிலாகக் கடலை அன்றாடம் கண்காணித்ததின் விளைவு கடல் செந்நிறமாக மாற்றமடைவது நின்றது. ஆனாலும்
திரவக்கழிவை நிற நீக்கம் செய்து கடலில் விடுவதாக ஊகமுண்டு.
தமிழ்நாட்டரசிற்கு
சொந்தமான 700 - 800 ஏக்கர்கள் பரப்பிலான நிலங்களை ஈன விகிதத்தில் குத்தகைக்
கட்டணம் செலுத்தி தன் பிடியில் வைத்துள்ளது ஆலை. இது தொடர்பில் அரசிற்கும்
இவர்களுக்கும் நீதி மன்றத்தில் வழக்கும் மேல் முறையீடும் நடைபெற்று வருகிறது. வடக்காத்தூரில்
தனிக்குழாய் பாலம் அமைக்கப்பட்டு தாமிரபரணியின் நீர் வளமும் இவர்களால் வரைமுறையில்லாமல்
உறிஞ்சியெடுக்கப்படுகிறது.
பழைய நினைவுகள் அலைகளைப்போல
மீண்டுயர்ந்து வந்தன. உப்பளங்கழிகளுக்கிடையே பல்வேறு பாதைகள் புதிர் சதுரமாகிக் கிளை
பரப்பிச் செல்கின்றன. அவற்றிற்குள் செல்லும்போது திசையழிகிறது. கதிரவன் நால்
திசைகளிலும் சுழல்வதானத் தோற்ற மயக்கம்.
விளக்கு முதலான
கருவிகளுடன் முதலாவது கண்காணிப்புக் கோபுரம் தென்பட அதன் கீழே ஊதா நிற சீருடையணிந்தக்
காவலர் தென்பட்டார். ஏதாவது சொல்வார் ஆட்சேபிப்பார் என எதிர்பார்த்தோம். ஒன்றுஞ்சொல்லாமல்
நின்றார்.
சாலிஹின் அணியினரையும்
தொலைபேசியில் தொடர்பு கொள்ளவியலவில்லை. கூகுள் வரைபடமும் சரிவரவில்லை. ஆங்காங்கே
தென்பட்ட தொழிலாளர்களிடமும் காவலாளிகளிடமும் வழி கேட்டு தொடர்ந்தோம். எனினும்
கடற்கரையை அடைவது கடினமாக இருந்தது.
மீன் பிடிப்பதற்காக வந்த
இன்னொரு அணியினரைப் பின் தொடர்ந்து புன்னக்காயல் செல்லும் வழியில் சென்று ஒரு வழியாக சாலிஹின் நண்பர்களுடன் இணைந்தோம்.
ஆலைக்குப் பின்புறம்
வழியாக கடலில் சென்று கலக்கும் உப்பாறு ஓடைப்பகுதியில் சாலிஹின் நண்பர்கள் மீன்
பிடிக்க முனைந்துள்ளனர். அதை அங்கு பணியிலிருந்த ஆலைக் காவலர் தடுத்துள்ளார்.
அதில்தான் சூக்குமம். மர்மத்தின் நாடி. கழிவுகளைக் கடலில் கலக்கும் கமுக்கம்
வெளியாகி விடும் என்ற அச்சம்தான்.
உப்பாற்றில் இவர்களின்
ஆலைக்கழிவு ஒழுகிச் செல்லும் இடங்களின் அருகிலுள்ள நிலங்களில் நடப்பவர்களின் கால்கள்
புதைந்து வெந்தவர்களின் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கின்றன. இம்மாதிரிக்
காயப்படுபவர்களுக்கு மூச்சு முடையில்லாமல் பரிகாரம் செய்து வீட்டுக்கனுப்ப வடக்கு
ஆத்தூரின் பிரபல தனியார் மருத்துவமனையொன்றிடம் புரிந்துணர்வு ஏற்பாட்டையும் செய்து
வைத்துள்ளனர் ஆலை நிர்வாகத்தினர்.
பல வருடங்களுக்கு முன்பு
இவர்களின் ஆலைக்கு முன்னால் அறிவிப்புப் பலகையொன்றை நிறுவினார்கள். அது இவர்களின்
கொடூர மனத்திற்கும் முரண் நகையான செயல்பாடுகளுக்குமான பகிரங்க சாட்சி. “உயிரைக்
கொன்று உண்ணாதே” என்ற சொல்லமைப்புடன் குருதி சிந்தலுடன் அறுபட்டுக்
கிடக்கும் மாட்டின் படமொன்றும் அதில் வரையப்பட்டிருந்தது.
இந்த ஆலைக் குறித்த
விழிப்புணர்வெல்லாம் வருவதற்கு முன்னர் நடந்த இன்னுமொரு நிகழ்வு. இது நடந்து
கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளிருக்கும். தொடர் வண்டித் துறையில் பயணச்சீட்டுப்
பரிசோதகராகப் பணி புரிந்துக் கொண்டிருந்த ஏ.கபீர் ராஜா என்றழைக்கப்படும் ஏ.கே.ராஜா
என்பவர் ஆலைகளுக்கு வேதியியல் மூலப் பொருட்கள் வினியோகிக்கும் வணிகத்தையும்
உபரியாக செய்து வந்தார். டிசிடபிள்யூ ஆலைக்கும் அவர் விநியோகஸ்தர். அவர் தனது
முகவரி அட்டை/அலுவலகக் கடிதத் தாள்களில் 'ஏ.கே.ராஜா' என்றுதான் குறிப்பிடுவார்.
ஒரு நாள் டிசிடபிள்யூ
ஆலையில் கூட்டமொன்று நடந்திருக்கிறது. ஆலையின் அலுவலர்கள், உரிமையாளர்களுடன்
வினியோகஸ்தர்களும் பங்கெடுத்த கூட்டமது. ஏ.கே.ராஜாவும் அதிலுண்டு. அங்கு
வந்திருந்த ஏ.கே.ராஜாவின் நண்பரொருவர் "கபீர்! எப்படியிருக்கீங்க?" என
நலம் கேட்டுள்ளார். இந்நிகழ்விற்குப் பிறகு ஆலையிலிருந்து சரக்கிற்கான கோரல்
எதுவும் ஏ.கே.ராஜாவிற்கு வரவேயில்லை. காரணத்தை ஆலை நிர்வாகிகளிடம் கேட்டபோது
"ஒரு முஸ்லிமுக்கு ஆலையின் ஆதாயம் செல்லக் கூடாது என எங்கள் தாத்தா
கட்டளையிட்டிருக்கிறார்"என்றனராம்.
வேதியியல் ஆலையின்
அமைவிடத்திற்கு சாகுபுரம் என்ற வடமொழிப் பெயர் சூட்டி தனிப் பஞ்சாயத்தாக்க எடுத்த
முயற்சி அன்றைய ஊர்ப் பெரியவர்களால் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் சாகுபுரத்திற்கென
தனி அஞ்சல் நிலையமும் அஞ்சல் குறியீட்டெண்ணும் வாங்குவதில் வெற்றியடைந்துள்ளனர்
ஆலை நிர்வாகத்தினர்.
எக்கட்சியின் தலைவர்கள்
இப்பகுதிக்கு வருகை புரிந்தாலும் ஆலையின் விருந்தினர் மாளிகையில் தங்கிச் செல்லும்
வழமையுடன் அரசியல் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு கனக்கும் ‘கொத்து’களும்
பருவம் பொய்க்காமல் வழியறிந்து செல்கின்றன. சுற்று வட்டார ஊர்களில் ‘உதவித்
தெளிப்பு’ நடவடிக்கைகளையும் ஆலையினர் தவறாது செய்து வருகின்றனர்.
ஆலையினர் தங்களின்
தேவைகளுக்காக நிறுவி நடத்தி வரும் ஒன்றிய
அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்ட கமலாவதி மேல்நிலைப்பள்ளியில் தங்களது
பிள்ளைகளை சேர்ப்பதை காயல்பட்டினத்துவாசிகள் பெருமையாகக் கருதினர். இது அன்று
என்றில்லை. இன்றைக்கும் அப்படித்தான்.
விடிந்தும் விடியாமலும்
ஊருக்குள் வரும் பள்ளிப்பேருந்திற்காக தங்கள் பிள்ளைகளை அழைத்து வரும் தாய்மார்கள்
முடுக்கில் வைத்து பிள்ளைகளுக்கு பல் தேய்த்து விட்ட காலமும் உண்டு. இதற்காக
அவர்கள் கையோடு குவளை நீரும் பற் தூரிகையையும் கொண்டு வருவர்.நீறிக் கனத்துக்கொண்டிருந்த
மனம் புன்னக்காயலுக்குள் நுழைந்தவுடன் சற்றேக்
கலைந்தது.
கொற்கை,மஞ்சள்
நீர்க்காயல்,பழையகாயல்,காயல்பட்டினம்,வீரபாண்டியன்பட்டினம்,சோனகன்விளை முதலான
ஊர்களை உள்ளடக்கிய பண்டைய கடல் வணிகக்காயல் நிலப்பரப்பின் ஒரு பகுதி புன்னக்காயல்.
காலனியாதிக்கக் காலத்தில்
முதலில் போர்த்துக்கீசியர்களும் பின்னர் டச்சுக்காரர்களும் இங்கு தாவளமைத்திருந்தனர். தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் 1578ஆம் ஆண்டில் ஜான்டி
பாரியா என்பவரால் புன்னக் காயலில் நிறுவப்பட்டது. கத்தோலிக்க
சமயத்தவரான பரதவர்களை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள புன்னக்காயலில் தற்சமயம்
மீன்பிடி மட்டுமே நடைபெறுகிறது. இவ்வூரின்இளம் தலைமுறையினர் உலகம் முழுக்க
கடலோடிகளாகவும் வணிகக் கப்பல்களில் பணியாற்றுவோராகவும் உள்ளனர்.
‘பின்னக்காயல்’ என
உள்ளூர்க்காரர்களால் அழைக்கப்படும் புன்னக்காயலுக்கு வருவது இதொன்றும் முதன்
முறையில்லை.பலமுறை வந்து போன இடம்தான்.இப்பயணம் ரிஹ்லா பதாகையின் கீழ் வருவதால்
எழுத வேண்டிய தேவை.
”யன்னே(என்ன)….” என்ற
சராசரி பின்னக்காயலாரின் விளியில் ‘னே’க்குப்பின்னர் நீளும் ஒலி உயிர்,மெய்
எழுத்துக்களுக்குள் அடங்க மறுப்பதால் அதை இசைக்குறியீடுகளில்தான் எழுத முடியும். கடல்
பரப்பின் மேல் நின்றாடும் காற்றையும் தாண்டி அவர்கள் இவ்வாறுதான் தங்களுக்குள்
பேசிக் கொள்ளவே இயலும். படகின் ஒரு முனையில் உள்ளவர் தன் குரலை அடித்து நீட்டி
சிற்றலையாக்கினால் மட்டுமே மறு முனையில் உள்ளவரின் செவிக்கு அவர் சொல்வது போய்ச்
சேரும். தரையில் பேசிக் கொள்வது பேசத்தொடங்கினால் தொண்டை வறண்டு தளர
வேண்டியதுதான்.
‘பின்னக்’காயலின் மொழியின்
இழுவைச் சுவையையும் மிஞ்சுவது அவர்களின் வசை மொழிகள். தேயிலையில் இஞ்சிச்சாற்றைப்
போல இறங்கும் வசைகள் இல்லையென்றால் எங்கேயோ ஏதோ கோளாறு எனக் கொள்ளலாம்.
தூண்டில் வளைவின் வழியாக
கிட்டத்தட்ட அதன் முனை வரை சென்று தூண்டில் போட்டோம். ’போட்டோம்’ என்பதை விட
‘போட்டார்கள்’ என்பதுதான் சரி. நான் பார்வையாளன் மட்டுமே. மீன் பிடி சாதனங்களை
பராமரிப்பதில் உள்ள சில தடைகளினால் தூண்டில் தொகுதி வாங்க முனையவில்லை. மீன்
பிடிக்கு வாழ்க்கைப்பட்டால் பிடித்தமான வேறு சிலவற்றை குறைக்க வேண்டி வரும். எனவே
‘மீன்பிடித்த’ த்தை இன்னொரு கணத்திற்கும் மீன் ஊழ்கத்தை இப்போதைக்குமாக
அமைத்துகொண்டாகி விட்டது.
கரடு முரடான
பாறைத்துண்டங்களுக்கும் ஊழ்க எத்தனத்திற்கும் அவ்வளவாக ஒத்து வராது போல. எப்படியோ நம்
சீமையின் வற்றா நதிப் பொழிமுகம் இதுதான் என்ற நினைப்பில் நேராகி விடுகிறது குறைக்
கணக்கு.
நண்பர்களுடன் கடைசியாக
வந்திருந்தபோது தூண்டில் வளைவிற்கும் புன்னக்காயல் ஊருக்குமான நில வழித் தொடர்பு
2024 இன் பெரு மழையால் துண்டிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் அதை சரி
செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு இயற்கை
பேரிடர்களும் ஏதாவதொரு தடத்தை விட்டுச்செல்லாமலிருப்பதில்லை. பெரு மழைக்கு முன்னர்
தூண்டில் வளைவின் பக்கவாட்டிலுள்ள கடற்கரை தூய்மையாகவும் துல்லியமாகவும் இருந்தது
இப்போதோ கோலப்பட்டுக் கிடக்கிறது.
அய்வரணியில் என்னைத் தவிர
மற்ற நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த தூண்டில்களில் இறால் துண்டங்களை
இரையாகக் கோர்த்து திசைக் கொன்றாய் எறிந்தனர்.
முதலில் இரு குட்டி
கருந்திரளி மீன்கள் சிக்கின. அடுத்து கெழுத்தி மீன்களிரண்டு. கெழுத்தி மீனைப்
பொதுவாக ஆட்கள் விரும்பி உண்ணுவதில்லை. அவை கழிவையுண்பவை என்ற பொது நினைப்பு. கடலில்
எது கழிவு?எது உணவு?
நான் கெழுத்தியை வாங்கிக்
கொண்டேன். இருந்தாலும் எதிர் வந்த இரு உள்ளூர் மீனவர்களிடம் மீனைக்காட்டிக்
கருத்துக் கேட்டோம். மதிப்பெண்கள் 70:30 என்றிருந்ததால் அங்கேயே துப்புரவு பண்ணி
வாங்கிக் கொண்டேன். வெட்டப்பட்டத்துண்டுகளுக்கு சீலா மீனின் பருப்பமும் வலிப்பமும்.
இவற்றின் சுவைக்காக அடுத்த நாள் மதியம் வரை காத்திருக்க வேண்டும்.
மற்றவர்கள் மீன் பிடித்தலைத்
தொடர காற் புள்ளியளவும் நடந்தேறாத ஊழ்க எத்தனங்களைச் சுருட்டிக் கொண்டு
நானும் சாலிஹும் ஊர் திரும்பும் பாதையை ஆத்தூர் வழியாக அமைத்துக் கொண்டோம்.
மணி விலாஸ் உணவகத்தில் காரம் குறைவான பூண்டு ஊறுகாய் வாங்கிய பின் காஃபிக்கு சொன்ன
நேரத்தில் நண்பர்களான இணையர் ஊரிலிருந்து அழைத்தனர். காஃபியும் வந்தது. நடப்பைச்
சொன்னவுடன்”எங்களயும் கூப்பிடக்கூடாதா காக்கா? எப்டி உட்டுட்டு போவயோ
ஏதாப்போவியோ”மாப்பிள்ளையும் மனைவியும் மாறி மாறிப் பாட்டு.
இரு நாட்கள் கழித்து
நடந்த புறையூர் கடம்பா கால் நாள் ரிஹ்லாவிற்கு இவ்விணையரை அழைத்தேன். மூச்சு
பேச்சில்லை. இது மாதிரிக் கேட்டவர்களில் 90% பேர்கள் ஒரு போதும் இது போன்ற
பயணங்களில் இணைந்ததேயில்லை.”ஓசாரப்பேச்சு ஒழவுக்காகாதுதானே.” இவர்களுடனான பேச்சின்
முனைப்பில் காஃபியின் இன்பத்தை இழந்ததுதான் சொச்சம்.
காத்திருந்த மறு நாள்
மதியம் வந்தது. பொரித்ததில் முதல் துண்டம் எனக்குத்தான். நூல் கனத்திற்கு
சேற்றின் மணம். ஆனால் வீட்டாருக்கும் சாலிஹிற்கும் ஆவலாதியில்லை. கெழுத்தி நாட்டம்
அதன் முடிவைக் கண்டாலும் கருந்திரளிக் கைவிடவில்லை.

.jpeg)






.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment