Saturday, 24 January 2026

ஆண்டொன்று போனால்….. 49 ஆவது சென்னை புத்தகக் காட்சி

 சீர்மைக்கு கிடைக்க வேண்டிய  இரண்டு அரங்குகள் ஒற்றை அரங்காக சுருங்கிப்போனதின் விசனமிருந்தாலும் மல்லிகை மணக்கும் நிக்காஹ் வீட்டின் கிறுகிறுப்புக்காகவே சென்னை புத்தகக் காட்சிக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது.

தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே தொடர்வண்டிகளுக்கான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்துக் கொண்டேன்.வழமையாக பயண வாசிப்பிற்கென பெரிதும் சிறியதுமான இரு புத்தகங்களை எடுத்துக் கொள்வதுண்டு.இம்முறை பயணமே புத்தகக் குவியலை நோக்கியென்பதால் கர்நாடக சாஹித்ய அகாதமி வெளியீடான குறைந்த பக்கங்களைக் கொண்ட பியாரி தொல்குடி கதைப்புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன்.

இலக்கிய மின்னிதழுக்கு முடித்துக் கொடுக்க வேண்டிய சிறுகதைக்காக மடிக்கணினியும் கூடவே வந்தது. பயணச்சீட்டை முன்பதிவு செய்த பிறகு புத்தகக் காட்சியின் தொடக்கம்,நிறைவு நாட்களில் சிறிய மாற்றமொன்றை செய்து அறிவித்தனர். இரக்கமற்ற கட்டணக்கழிப்பையஞ்சி நான் ஏற்கனவே உள்ள முன்பதிவை மாற்றவில்லை.

சீர்மையின் அரங்கிற்கு இது நான்காவது ஆண்டென்பதால் தொடக்க வேலைகளுக்கான பதற்றமெதுவுமில்லை.சீர்மையின் வடிவமைப்பாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான அஸ்வத் ஷரீஅத்தி தன் இணையருடன் காட்சி திடலுக்கு நேரத்தோடு வந்து சேர்ந்திருந்தார்.

அச்சகத்திலிருந்து புதிய புத்தகங்களில் கொஞ்சம்தான் வந்திருந்தது.அடுக்குகளில் புத்தகங்களை இருத்தி விட்டு நாமும் நாற்காலியில் அமரும்போது புது வீட்டில் குடியேறும் ஆசுவாசம்.

முதல் நாள் சிறப்பு வருகையாளராக எழுத்தாளர் பெருமாள் முருகன்.அலப்பறையும் ஆர்ப்பாட்டமுமில்லாத மனிதர்.எழுத்தாளர் ஜார்ஜ் ஜோசப்பின் புதிய சிறுகதை தொகுப்பான ‘அலங்கம்’ வந்து விட்டதா? எனக் கேட்டார்.

போன வருடமும் புத்தகக் காட்சியின் முதல் நாளை வாசகராக வந்து அலங்கரித்தவர் சேலம் மாவட்ட கிராமமொன்றின் மூத்தக் குடிமகன்.கிராமத்து மக்களுக்கு நூல்களை வாசிக்கக் கொடுத்ததிற்காக சங்கிகளின் புகாரின் பேரில் வருவாய்த்துறை அலுவலர்களால் விசாரிக்கப்பட்டவர்.அந்தக் கதைகளை சுவைபடச் சொன்னார்.சீர்மையின் குர்ஆன் தஃப்ஸீருக்காகவே வெளி மாவட்டத்திலிருந்து பதிவாக வரும் விவசாயி வந்து சென்றார்.இம்முறை புதிய குர்ஆன் விளக்கவுரைகள் வராததுக் குறித்து அவர் ஏமாந்திருக்கக் கூடும்.

புத்தகங்கள் வர வர வலசைப் பறவைகளைப்போல புதிய பழைய முகங்கள் வந்து போகத் தொடங்கினர்.அரங்கில் அமர்ந்திருந்தாலும் புத்தகக் காட்சியின் சந்தடியில் எப்புத்தகத்தையும் வாசிக்க இயலுவதில்லை.வந்து போகும் மனித முகங்களை வாசிப்பதற்கப்பால் வேறென்ன வாசிப்பு வேண்டும்?

இலக்கிய திறனாய்வாளரும்  யாவரும் இணைய இதழ் பொறுப்பாசிரியருமான கிருஷ்ணமூர்த்தி,இலக்கியத் திறனாய்வாளர் முகமது இப்ராஹிம், ‘வழி’ பயண இணைய இதழின் ஆசிரியரும் நாடு காண் மனிதருமான இளம்பரிதி ஆகியோரை முதன் முறையாக நேரில் சந்திக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கணித ஆசிரியரையும் அவருடன்  வந்த பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருமான இருவர் கூட்டணியைக்குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.வாங்கும் தலைப்புக்களில் இரண்டிரண்டு புத்தகங்களாக வாங்கிக் கொண்டனர். ஒருவர் புத்தகத்தை தேர்வு செய்ய வாங்கிய ஏராளமான புத்தகப் பொதிகளுக்கு மற்றொருவர்  காவல் நின்றார்.கண் நிறைந்த காட்சி.போன வருடமும் தாங்கள் வந்ததை மட்டும் என்னிடம் சொல்லி விட்டு சிரித்தபடியே வந்து சிரித்தவாறே கிளம்பினர்.இப்படியாக வரும் மனிதர்கள் சிலரின் பெயர்கள் நினைவு சிலரின் முகங்கள் மட்டும் நினைவு. சிநேகத்துடன் நெருங்கி வருபவர்களிடம் என் மறதிக்கான மன்னிப்பை எதிர்பார்ப்பு பிணையாக செலுத்தி விடுவதுண்டு.

என் வாசிப்பு வருடங்களில் தலையாய சில எல்லைக்கற்களை இவ்வருடம் தாண்டவேண்டியிருந்தது..என் மூத்த மகன் முனவ்வர் ஸாஜித் சென்னைபுத்தகக்காட்சிக்கு முதன்முறையாக வந்திருந்தான்.என் ஆசிரியர்களில் ஒருவரும் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் சிந்தனையாளருமான மு,குலாம் முஹம்மதின் கைப் பிடித்து நான் வந்த சென்னை புத்தகக்காட்சியின் வயது 19. அண்ணாசாலை காயிதே மில்லத் கல்லூரி வளாகம் என நினைவு.அதிலிருந்து சரியாக முப்பதாண்டுகள் கழித்து என் மகன் வந்துள்ளான் மூன்று பத்தாண்டுகள்.புது விதையொன்று மண்ணை மீற  ஒரு தலைமுறைக்காலம் தேவை போல.


எனது கதைத் தொகுப்பான’பித்தளைத்துட்டு’ வெளியானவுடன் அக்கதைகளொன்றில் கதை மாந்தனாக இருக்கும் என் சகலை மகன் இப்றாஹீம் அன்சாரி புதிய புத்தகத்தை வாங்குவதற்காக தன் கூட்டாளிப் பையனொருவனை அரங்கிற்கு அனுப்பியிருந்தான்.ரொம்ப நேரம் அரங்கை அலசி இறுதியாக எனது நாவலான ‘கசபத்’தை தனக்கும பித்தளைத்துட்டை இப்றாஹீம் அன்சாரிக்குமாக வாங்கிக் கொண்டான் அவ்விளைஞன்.

வந்தவனுக்குள் நீண்ட நட்பு வேரடித்துக் கிடந்தது.ஆலின் பழமை. இவன் என் பள்ளிக்கூட நண்பன் இஸ்மாயீலின் மகன் அபூபக்ர்இஸ்மாயீல். தந்தை இஸ்மாயீல் தற்சமயம் வடசென்னையில் ஆங்கில மருத்துவராக கடமையாற்றுகிறான்.இஸ்மாயீலின் தந்தை வழி பாட்டனார் என் தந்தையின் நண்பர்.பெண் கொடுத்த மாமனாரும் அவரின் தந்தையும் கூட என் தந்தையின் பள்ளிப்பருவ&வணிக நண்பர்கள்.எல்லாம் இலங்கைதான்.

அதாவது நூல் வாங்க வந்த இளைஞனின் தந்தை வழி பூட்டனார்,தாய் வழி பாட்டனார்&பூட்டனார் இவர்கள் அனைவருமே என் தந்தையின் நெருங்கிய நண்பர்கள்.இவர்களின் கூட்டுக் குடும்பத்திலும் எனக்கு நண்பர்களுண்டு.

எனது நாவலான ‘கசபத்’ஐ வாசிக்கும்படி சொன்ன தனது கூட்டாளியின் பரிந்துரைக்காக இளவல் சீர்மை அரங்கிற்கு வரவு.புதுதில்லியில் பணியாற்றும் இவ்விளவலுக்கு ஆங்கில இலக்கியம் வாசிக்கும் பழக்கமும் உண்டு.எப்படியோ நூற்றாண்டு பழமையான நட்புறவை கசபத் மீட்டிருக்கிறது.

அபூபக்ர் இஸ்மாயீல்

 
ஓரோர் ஆண்டும் ஓரோர் நினைவு.பொதுவில் நான் பழைய ஒளிப்படங்களை பார்ப்பதில்லை.பழம் நினைவுகள் பாரமானவை.காலத்தின் உறைவிற்கு அத்தனைக் கனம். முகநூலோ அவ்வப்போது வருடங்களைப் போட்டு பழைய படங்களை கிளறி செல்பேசியில் பளிச்சிட வைக்கிறது.கடந்த மூன்று வருட புத்தகக் காட்சிகளின் ஒளிப்படங்கள் திரையில் ஊசலாடுகின்றன.தலையில் ஒவ்வொரு வருடமும் ஒரு வெள்ளி புதியதாக முளைத்து மினுங்குவதை எப்படி எடுத்துக் கொள்ள?

No comments:

Post a Comment