மனைவியின் பையில் வேறொரு ஆவணத்தை தேடிக் கொண்டிருக்கும்போதுகிடைத்தது இந்த அடையாள அட்டை.
2002 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது சஊதி அரசால் வழங்கப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இரு மாமாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் குறைவு.
காலத்தின் புரள்தலில் அன்றிருந்த எத்தனையோ இன்றில்லை. ஹஜ்ஜுக்கென தனி கடவுச்சீட்டு தேவைப்பட்டிருக்கவில்லை. ஹாஜிகளுக்கு ஒன்றிய அரசின் மானியமிருந்தது. ஹஜ்ஜுக்கு 'காப்பாளர்' என்ற நிலையில் எனது குழுவில் வந்த இருவர் இன்றில்லை.உம்மாவும், இரு சகோதரிகளும்தான், நிறைய நண்பர்களும் இல்லை.தொழில் விடயங்களில் அன்றிருந்த கூட்டுறவு இல்லை. ஏன் அன்றிருந்த நானே இன்றில்லைதானே!
எனது அன்றைய இன்றைய தோற்றத்தை ஒப்பிடுகையில் " கோடையில் ஒரு நாள் மழை வரலாம், என் கோலத்தில் இனி மேல் எழில் வருமோ?' என்ற திரைப்பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தற்கால கோடையில் மழையென்ன புயலே வரும்போது கோலத்தில் எழில் எப்படி இல்லாமல் போகும்?
பெரும் நிறைவுகளுக்கு நடுவே நெளியும் இழப்புக்கள் மனத்தை வாட்டக் கூடியவைதான். எனினும் இழப்புகளில்தான் இருப்பவற்றின் அருமை புலனாகிறது. இழப்பை எண்ணி இருப்பதை மறந்தால் அதுவும் ஒரு வகை நன்றிக் கேடே!
எல்லா உருண்டோட்டடங்களுக்கப்பாலும் வாழ்வு இனியது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!
No comments:
Post a Comment