Wednesday, 6 December 2023

மஅபரும் மலபாரும் – மலபார் இலக்கியத்திருவிழா 2023,கோழிக்கோடு கருத்தரங்கு

கருத்தரங்க உரையின் குறிப்புக்கள்





ஆதி தன் திரு நாமத்தால்….

அடியன் ஈ வாக்கு துடர்த்தான்

நாதியான் புவியமைத்தான்

நாதனில் ஹம்தணைத்தான்.


மலையாளத்திலிருந்து  சமஸ்கிருத சொற்களை வெளியேற்றி விட்டால் அங்கு எஞ்சியிருப்பது தமிழ்தான். துஞ்சத்து எழுத்தச்சன் தஞ்சாவூர் சைவ மடத்தில் தமிழ் பயின்று சென்றவர்.அக நானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் பெரும் பகுதி இயற்றப்பட்ட மண்ணில் நின்று இப்படியொரு உரையாடல் நிகழ்த்தக் கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி.

மஅபர், மலபார் வரையறை

அறபியர்களாலும் பாரசீகர்களாலும் மஅபர் எனப்படுவது காயல்பட்டினத்தை குறிப்பாக்கினாலும் தேங்காய்ப்பட்டினம் முதல் ஆந்திரத்தின் நெல்லூர் வரையிலான சோழ மண்டல கடற்கரை உட்பட பரந்த பகுதிக்குத்தான் மஅபர் எனப்பெயர். கன்னியாகுமரி முதல் மங்களூர் வரையிலான நிலப்பகுதி மலபார் என்று அழைக்கப்பட்டது. ஹிஜாஸ்,ஏமன்,மொராக்கோ,வடக்கு,கிழக்கு ஆஃப்ரிக்கா, ஃபாரசீகம்,சீனா, மலேயா,இலங்கை,முஹல்லத் தீவு, இலட்சத்தீவு  போன்ற  நிலங்களின் புழக்க தளம்தான் மஅபர் மலபார் பகுதிகள். மலைவாரத்தின்( Foot Hills, மலையடிவாரம், தாழ்வாரம்) மரூதான் மலபார். மலைவாரம் - மலவாரம் - மலவார் - மலபார்.

எனினும் ஆங்கிலேயர்கள் வடகேரளத்தின் பெரும்பகுதியையே மலபார் என்று குறிப்பிட்டனர். தற்சமயம் சாவக்காடு தொடங்கி கண்ணனூர் வரைதான் மலபார் என சுருக்கப்படுகின்றது. மலப்புரம் நகரத்திற்குள் மலபார் சுருங்காமலிருக்க வேண்டும். வரலாற்றாய்வாளர்களின் பார்வை வட கேரளத்தை விட்டு  தாண்ட மாட்டேனென்கிறது. அதே போல கண்ணனூருக்கு அந்த பக்கம் காசர்கோடு பக்கமும் நமது பார்வை திரும்ப மறுக்கிறது.  மலபார் என்பது கன்னியாகுமரி முதல் முல்கி( மங்களூர் தாண்டியுள்ள ஊர் ) வரைதான்.

 

மலபாருக்குள்  தமிழ்  மக்களின், தமிழின் தொடர்ச்சி

கோட்டயத்திலும் ஆழப்புழையிலும் பாலக்காட்டிலும் அறபுக்களை விட கூடுதல் குடியேறியவர்கள் லெப்பைமார்களும் ராவுத்தர்களும்தான். ஹனஃபி மத்ஹபானது இவர்களின் வழியாகத்தான் மலபாரில் நுழைந்தது. ஈராற்றுப்பேட்டை, காஞ்சிரம்பள்ளி போன்ற பகுதிகளில் பள்ளிவாயில்களையும்  கட்டியது மஅபரின் தேனி மாவட்டத்தை சேர்ந்த கம்பம், உத்தமபாளையம் முஸ்லிம்கள்தான்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ( குறிப்பாக முஸ்லிம்கள்,மீனவ சமூகங்களின்) திருவனந்தபுரம் மாவட்டம் பெருமாள் துறை வரை ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வரை ஒரே பேச்சு வழக்குதான். தேங்காய்ப்பட்டினத்திற்கும் பெருமாள் துறைக்கும் இன்றளவும் மண உறவுகள் உண்டு. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்த பத்ம நாப புரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தலைநகரத்தை திருவிதாங்கூர் மகாராஜா மாற்றும்போது திருவனந்தபுரம்  நகரத்தின் சாலைக் கம்போளத்தில் வணிகர்களையும் பாலராமபுரத்திலும் நெய்யாற்றின்கரையிலும் நெசவாளர்களையும் மஅபரிலிருந்து குடியேற்றினார். இவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ்  முஸ்லிம்களும் தமிழ் செட்டியார்களும் தமிழ் பிராமணர்களும் அடங்குவர்.

பழைய காலத்தில் தேங்காய்ப்பட்டினம்தான் மஅபரையும் மலபாரையும் இணைக்கும் கண்ணி, நுழைவாயில்  வழித்தாவளம் எனலாம். காரணம் அன்றைக்கு கடல்வழி மூலமாக மட்டுமே பயணங்கள் இருந்தன.  இதன் வழியாகத்தான்  நாஹூர் நாயகம், சதக்கத்துல்லாஹில் காஹிரி, மம்புரம் தங்கள், காழி முஹம்மது உள்ளடக்கமான சூஃபிக்களும் மார்க்க அறிஞர்களும் வணிகர்களும் இரு பக்கமும் போகவும் வரவுமாக இருந்துள்ளனர்.

இதன் காரணமாகவே இப்பகுதி மக்களின் மொழியில்  தென் கேரள உச்சரிப்பை விட வடக்கு கேரளத்தின் உச்சரிப்பு நெடிதான் அடிக்கும். அதே போல காசர்கோட்டிலும் தமிழ் நெடிதான் கூடுதல். மாப்பிளா என்றால் மலபாரில் ஒரு சமூகத்தின்பெயர். ஆனால் காசர்கோட்டிலும் தமிழ் நாட்டிலும் மணமகனுக்குத்தான் அந்தப்பெயர்.

 அறபுமலையாளம், அர்வி,மாப்பிளா பாடல்கள்

 கன்னியாகுமரி முதல் மங்களூர் வரை மாப்பிள்ளைப் பாட்டுக்களுக்கு முக்கிய இடமுண்டு என்றாலும் இதன் விளைநிலம் மலபார் ஆகும். மலபாருடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக தமிழகத்தின் குளச்சல், தேங்காய்ப்பட்டினம் போன்ற ஊர்களிலும் தென் கர்நாடகக் கிராமங்களிலும் ஒருகாலத்தில் மாப்பிள்ளைக் கலைகளில் தேர்ச்சிபெற்ற ஆசான்கள் நிறைந்திருந்தனர்.

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளத்தை செம்மைப்படுத்தி தனி மொழியாக மாற்றுவதற்கு முன்னரே அறபு மலையாள இலக்கியம் தோன்றிவிட்டது. எழுத்தச்சன் அத்யாத்ம இராமாயணம் எழுதுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முஹ்யித்தீன் மாலையை கோழிக்கோடு காழிமுஹம்மது அவர்கள் இயற்றியுள்ளார். அறபுமலையாளம் தோன்றுவதற்கு முன்னர் அறபுத்தமிழ் இங்கு நடைமுறையில் இருந்தது. 

மாப்பிள்ளை முஸ்லிம்களின் மொழி நடையாக மலையாள வட்டார வழக்குடன் தமிழ் கலந்த கலப்புமொழி அப்பகுதியில் பேசப்பட்டுவந்ததால் இம்மொழி நடையைத்தழுவியே முஹ்யித்தீன் மாலை இயற்றப்பட்டுள்ளது.

கொடுந்தமிழுடன் சமஸ்கிருதம் கலக்கப்பட்டு  உருவான மணிப்பிரவாளம் உயர் சாதியினரின் மொழியாக இருந்தது. மதத்திலும் அரசியலிலும் இவர்கள்  ஆதிக்கம் செலுத்தியதால்  சேர அரசின் மொழியாகவும் மாறியது. மோயின்குட்டி வைத்தியருக்குப்பிறகு அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமஸ்கிருத உச்சரிப்பிற்கு ஏற்றவாறு இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய எழுத்துமுறை மலையாளத்திலும் புகுத்தப்பட்டதால் அந்த எழுத்து முறை மலையாளத்தை தமிழிலிருந்து தூரமாக்கியது.

சமஸ்கிருதப்படுத்தப்பட்ட  மலையாளத்தை உயர் வகுப்பினரும் நாயர்களுமே உச்சரித்தனர். மற்ற சமூகத்தினரின் மொழியில் தமிழின் ஆதிக்கமே கூடுதல். அதிலும் மாப்பிளாமார்களின் தனித்த மொழி வழக்கில் சமஸ்கிருதமயப்பட்ட மலையாளத்தை விட தமிழே கூடுதல் ஆதிக்கம் செலுத்துகிறது.

அறபுத்தமிழிலிருந்து அறபுமலையாளம் தோன்றியதா என்ற விவாதம் இப்பொழுதும் உண்டு. எனினும் அறபுத்தமிழ் காலத்தால் முந்தியது என்பதை அறபுமலையாள ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அறபுமலையாளத்தில் நீடித்துவந்த அறபுத்தமிழின் ஆதிக்கம், இரண்டு மொழிகளும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்திருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் அப்துர்ரஹ்மான் மங்காடும், ஹூஸைன் ரண்டத்தானியும் உரைக்கின்றனர்.

அறபுமலையாளத்தில் காணப்படும் அறபுத்தமிழ் செல்வாக்கிற்கு இதுவே முன்னோடியாகும். மலையாளம் தமிழிலிருந்து விடுவிக்கப்பட்டு தனிமொழியாக மாற்றப்பட்ட பின்னர் அறபுமலையாளமும் காலப்போக்கில் மாறுதல்களை அடைந்தது.

அறபுத்தமிழ் வரலாற்றை எழுதுபவர்கள் மொழிவழி மாநிலங்கள் உருவானபிறகு உள்ள தமிழக வரலாற்றுடன் சுருக்கி எழுதுவதால் இதன்வரலாறும் மறைந்துவிடுகிறது.

தென்கேரளாவில் எழுந்த அறபுத்தமிழ்பாடல்களைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதற்கு இதுவும் காரணமாகும்.

இப்பகுதிகளில் அறபுமலையாளம் பரவியிருந்தபோதும் பல ஊர்களிலும் இஸ்லாமிய அடிப்படைக்கல்வி அறபித்தமிழிலும் கற்பிக்கப்பட்டுவந்தது.

அறபுமலையாளமும் அறபுத்தமிழும் இணைந்த பாட நடைமுறையும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை இந்நிலை நீடித்தது.  மலையாளமும் அறபும் தமிழும் கலந்த மொழி நடையிலிருந்து இவ்விலக்கியம் உருவெடுத்தது.

அறபுமலையாளப்பாடல்களை இயற்றியவர்கள் பயன்படுத்திய தமிழ்ச்சொற்கள் நூல்களை மறுபதிப்பு செய்பவர்களாலும் விளக்கவுரை எழுதுபவர்களாலும் சமஸ்கிருத உச்சரிப்புக்கு ஏற்றவாறு அல்லது நவீன மலையாளத்திற்கு ஏற்றவாறு திருத்தப்பட்டு வருகிறது. இப்பாடல்களில் பழந்தமிழிலிருந்து திரிந்த சொற்கள் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படலாம்.

மாப்பிள்ளைப் பாட்டுக்களின் முடிசூடா மன்னன் என்று போற்றப்படும் மகாகவி மோயின்குட்டி வைத்தியர் காயல்பட்டினத்தில் சிலகாலம் தங்கியிருந்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களிடம் பயின்றதோடு நபிப்புகழை  திருப்புகழ் பாணியில் பாடிய வரகவி காசிம் புலவரின் பாடல் கிரந்தங்களையும் பயின்றுள்ளார்.

 கேரளத்தில் நடைபெற்ற மாப்பிள்ளைப் பாட்டு, கவியரங்குகளில் முஸ்லிம் தமிழ் இலக்கியங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ‘இஸல் பூத்த கிராமம் என்று போற்றப்படும் கேரளத்தின் வடக்கெல்லையான காசர்கோடு மாவட்டத்தின் மொக்ரால் என்ற ஊரில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பாடல்களை அரங்கேற்றியுள்ளனர்.

மஅபர் பகுதியிலிருந்து  தக்கலை பீர் முஹம்மது அப்பா, ஹம்ஸா புலவர் போன்றவர்களும் காயல்பட்டினத்திலிருந்தும்  இங்கு  கவிஞர்கள் பங்கெடுத்த கவியரங்குகள் பற்றிய குறிப்புகளும் உண்டு.

கலைகளின் பிறப்பிடமான மொக்ரால் கிராமத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட மாப்பிள்ளைக் கவிஞர்கள் தோன்றியதற்கு தமிழ்ப் புலவர்கள் கொண்டிருந்த வலுவான தொடர்புகளும் காரணமாகும். இவ்வூர் அறபுத்தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் நிறைந்த பகுதியாக திகழ்ந்தது.

‘இஸல் கிராமமான இவ்வூர் புகழ் பெற்ற ‘பட்சிப் பாட்டுகள் என்ற பறவைப் பாட்டுக்களின் பிறப்பிடமாகவும் இருந்தது. தமிழின் இயல் என்பதன் பிறழ்வே மாப்பிள்ளை இலக்கியத்தில் ‘இஸல் ‘என்று கூறப்படுகிறது.

சதக்கத்துல்லாஹ் காஹிரியின் சகோதரர் ஷாம் ஷிஹாபுத்தீன் அவர்கள் அர்வியில் எழுதிய பெண் புத்தி மலையை அப்படியே அறபு மலையாள லிபியில் மலபாரில் எழுதி வெளியிட்டுள்ளனர்.

அக்காலத்தில் அறபுமலையாளம் தெரிந்தவர்களால் அறபுத்தமிழை இலகுவாக வாசித்து விளங்க முடிந்தது. அறபுத்தமிழ்நூல்களை மொழிபெயர்க்காமல் அறபுமலையாள எழுத்துருவிலும் அச்சிட்டனர்.முஹ்யித்தீன் மாலை போன்ற அறபுமலையாள நூல்கள், அறபுத்தமிழ் எழுத்துருவிலும் தமிழகத்தில் அச்சிடப்பட்டன.

 மாப்பிளா பாடல்களில் நேரடி தமிழ்ச்சொற்கள்

”அறபுத்தமிழில் எழுதப்பட்ட ஸக்கூம் படைப்போரை அடியொற்றி   ’ஸக்கூம்படப்பாட்டு என்ற நூல் அறபுமலையாளத்தில் எழுதப்பட்டது. மகாகவி மோயின்குட்டி வைத்தியர் போன்ற பல மாப்பிள்ளைக்கவிஞர்களும் ஸக்கூம் படப்பாட்டிலிருந்து பல இஷல்களை எடுத்துக்கொண்டனர்.

மலையாளக் கவிஞர்கள் சமஸ்கிருதச்சொற்களை அதிக அளவில் பயன்படுத்துவது நடைமுறையாக இருக்க மாப்பிள்ளைக்கவிஞர்கள் தமிழ்ச் சொற்களை அதிக அளவில்பயன்படுத்தியுள்ளனர்.

”இறைவன்,பரன்,கோன், புகழ்ச்சி, வாழ்த்து, அரிகோர், வேந்தர், வரிசை,  அண்டம்,பொய்,மெய்,இன்பம்,நெடில்(ஒட்டகம்), பட்டாங்கு, மகுடம், புவி, பார்,நெறி,மரக்கலம்,மடவி,கணவன்,வள்ளல்,”...........போன்றநூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

மன்றாடுவீர்,கூறினார்,அவர்சொன்னார், கோன்  அவன் பொறுக்கும், உரைகேட்டு,  பொங்கியெழுந்து, போர்கழிந்து, இந்த தினம் தனில் ,மண்ணில் பிறந்து, இறைமனை எரிக்கக்கண்டு, அல்லும் பகலும்... போன்ற மலையாள உச்சரிப்பிற்கு மாறுபட்ட ஏராளமான சொற்றொடர்களையும் காணமுடியும்.

முஹ்யித்தீன் மாலைக்குப் பிறகு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகள் கழித்து குஞ்ஞாயின் முஸ்லியார் அவர்கள்இயற்றிய கப்பப்பாட்டு, நூல் மாலை, நூல் மத்ஹ் முதலியன மாப்பிள்ளை இலக்கியத்தை முஸ்லிம் தமிழ் இலக்கியத்திற்கு இன்னும் நெருக்கமாக்கியது. குஞ்ஞாயின் முஸ்லியார் நபி(ஸல்) அவர்களைப் புகழ்ந்துபாடியநூல் மத்ஹ் என்ற காவியம்  அறபுத்தமிழ் காவியமோ என்று கருதும் அளவிற்கு தமிழ்நடையில் உள்ளது. இந்நூலில் எண்பது  விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளது.

------------------------------- 

 சூஃபித் தொடர்பு

 மஅபரிலிருந்து மக்தூமிகள் கொச்சிக்கு வருவதற்கு முன்னரேயே மங்களூரு சென்று விட்டனர். கோட்டயம் மாவட்டம் காஞ்சிரம்பள்ளிக்கும் மக்தூமிகள் பின்னர் சென்றுள்ளனர். தென் கேரளத்தில்தான் அவர்கள் பரவலாக அறியப்பட்டுள்ளனர்.பூவாறு,பெருமாள் துறை, ஈராற்றுப்பேட்டை, ஓச்சிரா,காயங்குளம், கணியாபுரம் என பட்டியலிடலாம்.மக்தூமிகளின் பின் தோன்றல்களை கேரளத்தில்  லெப்பைமார் / லெப்பைக்குட்டி என்பர்.

அல்லஃபல் அலிஃபின் ஆசிரியர் உமர் அல் காஹிரிக்கு ஜிஃப்ரி தங்ஙள் உஸ்தாத் ஆவார்கள். மௌலல் அல் புஹாரி அவர்கள் மஅபருக்கு செய்த பணிகள் மகத்தானது. அன்னாரின் பெயரில் அர்விப்பாடல்கள் உள்ளன. பொதுவாகவே  காயல்பட்டினத்திற்கும் மலபாருக்கும்  ஷேய்ஹ் – முரீத் உறவுகள் இங்குமங்குமாக மாறி மாறி உள்ளது. ஓச்சிராவில் சதக்கத்துல்லாஹ் காஹிரியின் பின் தோன்றல்கள் அடங்கியுள்ளனர். சதக்கத்துல்லாஹில் காஹிரியின் மகன் முஹம்மது லெப்பை  அல் காஹிரி இயற்றிய மீஸான், அஜ்னாஸ்தான் மஅபரிலும் இலங்கையிலும் மலபாரிலும் மங்களூரிலும் பள்ளி தர்ஸின் மாணவர்களுக்கு முதன் முதலில் கற்பிக்கப்படும் அறபி இலக்கண நூற்கள்.

வேலூரின் லத்தீஃபிய்யாவிற்கும் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்திற்கும் மலபாருக்கும் இடையேயான கல்வி, ஆன்மீக உறவு இன்றளவும் வலுவானது ஆழமானது.

 கண்ணூரிலும் வளப்பட்டினத்திலும் மாப்பிளை லெப்பை ஆலிம் அவர்கள் செய்த பணி அளப்பரியது. சதக்கத்துல்லாஹ் அல் காஹிரி குற்றிச்சிறவில் தர்ஸ் நடத்தியுள்ளனர். ஆலப்புழா மாவட்டம் வடுதலாவும் காயல்பட்டினத்துடன் நெருங்கிய வரலாற்றுத் தொடர்புள்ள ஊர்.வடுதலா காட்டுப்புரம் பள்ளியின் திறப்பு விழாவிற்கு மாப்பிளை லெப்பை ஆலிம் அவர்கள் சென்றுள்ளார்.

தேங்காய்ப்பட்டினத்திலும்  குற்றிச்சிற பள்ளியிலும் நாகூர் நாயகம் கல்வத் இருந்துள்ளனர்.  ஹஜ்ஜிலிருந்து திரும்பும் வழியில் பொன்னானியில் நாகூர் நாயகம் அவர்கள் ஜைனுத்தீன் மக்தூம் அவர்களிடம் தங்கி சென்றுள்ளனர்.

மலபாரின் போர்த்துக்கீசிய எதிர்ப்பு போராட்டத்தில்  ஜைனுத்தீன் மக்தூம் அவர்களைப்போலவே நாஹூர் நாயகத்திற்கும் பெரும் பங்களிப்பு இருப்பதாக வாசித்திருக்கிறேன். (எ.கா) அமினித்தீவு பாம்பு பள்ளி. ஆனால் கேள்விப்படும் செய்திகளாகவேதான் அவை இருக்கின்றன. எனினும் தெளிந்த சான்றுகள் தேவை. கூடுதல் ஆய்வுகள் நடக்க வேண்டும்.

வட மலபாரிலுள்ள  கண்ணூர் வளப்பட்டணம் இச்ச அப்துல் காதர் மஸ்தான் போன்ற ஸூஃபிக் கவிஞர்கள் அறபு மலையாளத்திலும் தமிழ் எழுத்துருவிலும் தங்களின் பாடல்களை எழுதியுள்ளனர். முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் ஸூஃபிகளாக இருப்பதுபோன்று ஆரம்பகால மாப்பிள்ளைப் புலவர்களும் ஸூஃபிகளாகவே இருக்கின்றனர். இப்புலவர்கள் இயற்றிய பாடல்களை தமிழின் துணையில்லாமல் புரிந்துகொள்ள இயலாது.

மாப்பிள்ளை இலக்கிய மொழியின் வளர்ச்சியில் இலட்சத்தீவிற்கும்பங்குண்டு. மஅபரின் காயல்பட்டினம், தேங்காய்பட்டினம் பகுதிகளும் இதில் அடங்கும். காதிரிய்யா தரீக்கத் தொடர்பான செயல்பாடுகள் கேரளாவிற்கு இந்த ஊர்களின் வழியாக நடைபெற்றுவந்தன.

இலட்சத்தீவின்  அந்த்ரோத் தீவிற்கும் காயல்பட்டினத்திற்குமிடையேயான  சூஃபி மகான்களின் தொடர்புகள் உள்ளன. காயல்பட்டினம் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் அந்த்ரோத்தின் மகான் ஒருவர் மண் மறைந்துள்ளார்.

சூஃபி தமிழ்ப்புலவர்களின் நூல்கள் கேரளக்கரையில் மிகுந்தசெல்வாக்குடன் விளங்கியதால் அங்குள்ள இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுப்பது வழக்கமாக இருந்தது.தமிழ்ப்புலமை பெறவும் செய்யுள் இயற்றும் விதிமுறைகளைக் கற்கவும் முஸ்லிம்தமிழ்ப்புலவர்கள் உறுதுணையாக இருந்தனர்.

எனவேமாப்பிளப்பாட்டுகள்குறித்த ஆய்வுகளை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றனர்.

பாரசீகத் தொடர்பு

இந்தியாவில் ஃபார்ஸிய நாகரிகத்தின் தாக்கம் தரை வழியாக வடக்கிந்தியாவிலிருந்து வருவதற்கு பல காலங்களுக்கு முன்பே கடல் வழியாக தெற்கின் கரையை எட்டி விட்டது.

சவூதியின் எண்ணை வளம் திறப்பதற்கு முன்னர் மஅபர் பகுதி மக்களின் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வெளிநாட்டுப்பயணமென்பது ‘ பெர்சியா’ தான். பெர்சியா என்றால் இராக்,இரான் அடங்கலான பாரசீகம், குர்திஸ்தான், சூரியாவின் பெரும் பகுதிகள்.

காதிரிய்யா தரீக்கத்தும் பாரசீகத்திலிருந்து வந்ததுதான். கான்காஹ்வும் தைக்காக்களும் பாரசீக மரபைச் சேர்ந்தவை. காக்கா. க்கா என்ற சொல்லும்  ஃபார்சி வழியாக  வந்த குர்திஷ் சொல். பாங்கும் ஃபார்ஸி சொல்லே. காயல்பட்டினத்தின் காதிரிய்யா தரீக்கத்தின் கான்காஹ்வான மஹ்லறா கட்டியது அப்துல்லாஹ் மௌலானா பகுதாதி. அர்வி எழுத்துருவில் உள்ள முப்புள்ளி ஃபார்ஸி மொழி தாக்கமே.

தமிழின்  முதல் நாவல் என்றழைக்கப்படும் ( இதில் விவாதமுண்டு ) மாப்பிள்ளை லெப்பை ஆலிமால் அர்வியில் எழுதப்பட்ட  தாமிரப்பட்டணம் நாவல் பாகிரி எதித் இப்னு மாலிக் அத்தாயி என்ற ஃபார்சி எழுத்தாளரால் எழுதப்பட்ட அறபி நெடுங்கவிதையின் தழுவல்.

இஸ்லாத்தின் வருகையோடு ஃபார்சியோடு அறபும் இணைந்து வலம் வந்தன.

கலைத் தொடர்புகள்

ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை குளச்சலிலும் பூவாற்றிலும் அரபன முட்டு ஆசான்கள் இருந்திருக்கின்றனர். டோலிப்பாட்டு காயல்பட்டினத்திலிருந்து  இலட்சத்தீவிற்கு போயுள்ளது.

------------------------------ 

நிறைவாக….

மேல் வாசிப்பிற்கு, முனைவர் ஜெ.ராஜா முஹம்மதின் Maritime History of Coromandel Muslims ஐ வாசியுங்கள். இது திருச்சிராப்பள்ளி ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

மஅபரிலிருந்து மூன்று முறைகள் மலபாருக்கு  மரபார்ந்த  பயணம் நடைபெற்றுள்ளது. அதில் ஒரு முறை காயல்பட்டினத்தின் கலைக்குழுவினர் மாப்பிளா கலா அகாடமியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். வரும் ஜனவரியில் மாப்பிளா கலா அகாடமியிலிருந்து காயல்பட்டினத்திற்கு போய் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர் இன்ஷா அல்லாஹ்.

எனது தோந்நிய யாத்ரா பயணக்கட்டுரை நூலில் எட்டு கட்டுரைகளில் ஆறு இலக்கிய வரலாற்று ரீதியாக மலபாரைப்பற்றியதுதான்.

காயல்பட்டினத்தில் வரலாற்று ஆய்வு மையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். இது போன்ற வேலைகளை அதன் மூலம் கொஞ்சங்கொஞ்சமாக செய்யத் தொடங்கியுள்ளோம்.

ஒவ்வொரு நோன்பு பெருநாள் முடிந்த பிறகும் மலபாரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஜியாரத்திற்காக மஅபரின் சோழ மண்டல கடற்கரையோரம் கூட்டங்கூட்டமாக மக்கள் பயணித்து வருகின்றனர்.இது  வரலாற்று நினைவின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.

 நண்பரும் எழுத்தாளரும் ஆய்வாளருமாகிய எம்.நவ்ஷாதின் தொடர்களுக்குப்பிறகு  மலபாரிலிருந்தும் ஆய்வாளர்கள், இளம் மாணவர்கள் காயல்பட்டினத்திற்கு கூடுதலாக வந்து போகின்றனர். காயல்பட்டினம் உள்ளிட்ட மஅபரின் மற்ற பகுதிகளுக்கும் சென்று மலபாரின் ஆய்வாளர்கள் காத்திரமான ஆய்வை செய்ய வேண்டும்.




தொடர்புடைய இணைப்புக்கள்:


அறபித்தமிழ் - சோழமண்டலக் கரையின் பண்பாட்டு முத்திரைகள் கருத்தரங்கு – மலபார் இலக்கிய திருவிழா2023, கோழிக்கோடு



மலபார் இலக்கியத் திருவிழா கோழிக்கோடு 2023 -- ஒளிப்படக்கோவை



மலபார் இலக்கியத்திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் ஒரு செவ்வி



‘கவிதையின் சமன்’ -- மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023



 

2 comments:

  1. அருமையான கட்டுரை..

    ReplyDelete
  2. நிகழ்காலத்தில் இஸ்லாமியத்தமிழ் சமூகம் அறிந்திருக்க வேண்டிய அவசியமான வரலாற்றுப்பதிவு.
    நன்றியும் வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete