Thursday 9 November 2023

'தோந்நிய யாத்ரா' நூல் மதிப்புரை -- எழுத்தாளர் மீரான் மைதீன்

 

"தோந்நிய யாத்ரா" என்ற மலையாளச் சொல்லின் பொருள்,தோன்றிய பொழுதின் பயணம்.சாளை பஷீரின் இந்த நூல் பஷீர் எனக்குத் தந்து நாட்கள் நிறைய ஆகிவிட்டது.ஐந்தாறு நாட்கள் தீவிர எழுத்திலிருந்து இன்று வாசிப்பின் பக்கம் திரும்பியபோது சிக்கியது.

மலையாள நிலத்தில் நிகழ்த்திய பயணங்களின் வழியே அவரின் அனுபவங்களை நல்ல புதினம்போல எழுத்தாக்கி இருக்கிறார்.சாளை பஷீர்.

நம் பிரியப்பட்ட ஆசான் பஷீரின்,பேப்பூர்,தலையோலப்பரம்பு முதலான இடங்களில் நம்மையும் அழைத்துப் போகிறார். அப்படியே பாலக்காட்டிலுள்ள தஸ்ரக்கிலுள்ள ஆளுமை ஓ.வி.விஜயனின் நினைவகம் என அவரின் பயணத்தில் நாமும் இணைவதுபோன்ற நடபடியில் அற்புதமான அனுபவமாகிறது.

. அவரவர்களின் எழுத்து மொழியினை நமக்கு வசப்படுத்தும் ஒரு காரியத்தை சாளைபஷீர் அழகிய மொழியில் நமக்கு கடத்துவது இந்த நூலின் பேரம்சமாக இருக்கிறது.

தொடரும் அவரின் யாத்திரைகளில் நாம் மேலும் அறிய இயலாத நல்ல அனுபவங்களைப் பெறுகிறோம். சும்மா ஒரு தகவலாக மட்டுமில்லாமல் தேர்ந்த வார்த்தைகளால் நல்ல இலக்கியமாக இதனை செய்திருக்கிறார்.

நவீனகால மனிதன் ஊர்களையும் கிராமங்களையும் உருக்கி நகரங்களாய் உருட்டித் திரட்டுகிறான்.ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைக் கொல்லவும் கற்றுக்கொண்டான்.ஆனால் கிராமங்களை ஊர்களைப் போல ஆறுகளை உருமாற்றும் கலையை இன்னும் கற்கவில்லை என்று பல்வேறு வரலாற்று சிறப்புகளைக் கொண்ட பொன்னானி நகர் பற்றிய பயணஅனுபவத்தில் பஷீரின் எழுத்து மிகமுக்கியமான ஒருபதிவாக இருக்கிறது.

பொன்னானியின் பெரிய பள்ளிவாசல் பதினைந்தாம் நூற்றாண்டில் நிறுவியபிறகே வெறும் துறைமுக இறங்குதளமாக இருந்த பொன்னானி முறையான நகரமாக மாறியிருப்பதை பதிவு செய்கிறார்.

பயணநூல்,பயணத்தின் அனுபவத்தில் எழுதியநூல்,பயணத்தின் வழியான ஆய்வுநூல்,அல்லது பயண அனுபவ சுவீகாரத்திலிருந்த வெளிப்படும் புனைவு என பலவகைகளில் சாளை பஷீரின் இந்நூலைக் குறிப்பிடலாம். தமிழ்ச்சமூகம் கவனிக்கத்தக்கவான ஒரு நூலாக காண்கிறேன்.இதுஒரு நல்ல வழிகாட்டி நூலும் கூட.








1 comment:

  1. மிக சிறப்பான நூல் .இன்னும் விரிவாக எழுதலாம் எழுதுகிறேன்.

    ReplyDelete