Wednesday 13 December 2023

மலபார் இலக்கியத்திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் ஒரு செவ்வி

 

 -- ஷரீஃப் ஹுதவி (மலபார் இலக்கியத்திருவிழாவின் முதன்மை பொறுப்பாளர், மலையாளப்பேராசிரியர், புக் பிளஸ் பதிப்பகம், தெளிச்சம் ஆய்விதழ் ஆகியவற்றின் முதன்மை ஆசிரியர்)

ஷரீஃப் ஹுதவி

-- எம். நவ்ஷாத் ( எழுத்தாளர், ஊடகப் பயிற்சியாளர், மலபார் இலக்கியத்திருவிழா திட்டக் குழு உறுப்பினர்)


எம்.நவ்ஷாத்

ஆகிய இருவரும் இணைந்து அளித்த செவ்வி.


கேள்வி

கேரள இலக்கியத் திருவிழா, மாத்ருபூமி இலக்கியத் திருவிழா என கேரளம் இரு பெரும் இலக்கிய கொண்டாட்டங்களை சந்தித்து வரும்போது  மலபார் இலக்கியத் திருவிழாவை நடத்த வேண்டிய தேவை என்ன வந்தது?

பொதுவே இங்கு  மிகப்பெரிய அளவில் நடப்பது டிசி புக்ஸினுடைய  டிசி கிழக்கே முறி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் கேரளா இலக்கியத் திருவிழாவாகும். ஆனால் பல விஷயங்களில்  அவர்களின் அணுகுமுறை பலவிதங்களில் வித்தியாசமானது. தாராளவாதம், மதச்சார்பின்மை, சில வேளைகளில் இஸ்லாமிய வெறுப்பு, தலித் வெறுப்பு  கொண்ட ஒரு பொது புத்தியின் உள்ளில் நின்று கொண்டு பெரும் வணிக ரீதியாக நடத்தப்படுவதுதான் கேரள இலக்கியத் திருவிழா.

அவர்கள் கொண்டு வரும் ஆளுமைகளை எழுத்தாளர்களைப்பார்த்தால் இலக்கியத் தரம் என்பதைக்காட்டிலும் நடிகர் மஞ்சு வாரியர், சத்குரு போன்ற பிரபலங்களையே இடம் பெறச் செய்கின்றனர். சத்குரு என்ன வகையான இலக்கியம் படைத்தார்? எனத் தெரியவில்லை.

பொருள் பொதிந்த விவாதங்களை கேரள இலக்கியத் திருவிழாவில் முன்னெடுக்காமலில்லை. அவர்களை மொத்தமாக வணிகப்போக்குள்ளவர்கள் என சொல்லவியலாது. எனினும் பிரபலங்களைக் கொண்டு வந்து அதன் மூலம் கூட்டம் சேர்ப்பதே அவர்களின் நோக்கம். அத்துடன் கோழிக்கோட்டின் மலபாரின் வாங்கும் திறனைப் பயன்படுத்தி  டிசி புக்ஸின் புத்தகங்களை விற்றுத் தீர்ப்பதுதான் அவர்களின் நோக்கம். டிசி புக்ஸ் தவிர்த்த ஏனைய எந்த பதிப்பகத்தாருக்கும் அவர்கள் இடமளிப்பதில்லை. சிறு பதிப்பகங்களை நுழைய விடுவதுமில்லை. அவர்களின் புத்தகங்களை விற்க சம்மதிப்பதுமில்லை.

இவற்றிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டதுதான் மலபார் இலக்கியத் திருவிழாவின் புத்தக கண்காட்சி. இங்கு புக் பிளஸ்சின் புத்தகங்களுடன் டிசி புக்ஸ், மாத்ருபூமி உள்ளிட்ட பெரு ஓட்ட பதிப்பகத்தாருடன் ஐபிஎச்,அதர் புக்ஸ், வஜனம் உள்ளிட்ட தனித்த பதிப்பகங்களுக்கும் இடமுண்டு.

கேரள இலக்கியத் திருவிழாவிற்கும் மலபார் இலக்கியத் திருவிழாவிற்கும் பார்வையிலும் கண்ணோட்டத்திலும் கோட்பாட்டளவிலும் முற்றிலும் வேறுபாடுண்டு. கேரள இலக்கியத் திருவிழா என்பது கூடுதலான வணிகமயம், பெரும்போக்கு, மேல் சாதி ஆதிக்கம், இடது ஆகியவற்றின் உணர்தலுடன் சேர்ந்து நிற்கும் ஒன்று.

மலபார் இலக்கியத் திருவிழாவோ விளிம்பு நிலை, முஸ்லிம், உள்ளூர் பார்வை கொண்டது. உள்ளூர் பார்வை எனப்படும்போது அது குறுகியதல்ல, மாறாக இலட்சத்தீவு, தமிழ்நாடு இங்கு முன்னிறுத்தப்படுகிறது. அஸாமிலிருந்து கவிஞர் அழைக்கப்பட்டுள்ளார். தென் கிழக்காசிய பண்பாட்டைப் பற்றியும் இந்து பெருங்கடல் குறித்தும் விரிவாக பயின்றுள்ள உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் எங்க் செங்க் ஹோவை இங்கு வரவழைத்துள்ளோம்.

கடலினால் உண்டான நாடு மலபார்.இங்குள்ள முஸ்லிம்கள், கிறித்தவர்,யூதர்களாயினும் கடலினால் உருவானவர்கள். பிராமணருக்கு மட்டுமே கடல் ஆகாது. கடலுக்கு போவதென்பது கூடாத செயல். முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் கடலில்லாமல் வாழ்க்கையில்லை. எனவே கடல் என்ற மையக்கருவில் ஊன்றி நின்றுக் கொண்டு  தீரம்,துறைமுகம், திரை என்ற தலைப்புக்களில் அரங்குகளை ஏற்படுத்தி இலட்சத்தீவு போன்ற இடங்களிலிருந்து அறியப்பட்ட எழுத்தாளர்களையும் அறிவுஜீவிகளையும்  கொண்டு வந்து கடலை முன்னிறுத்திக் கொண்டு பல நிலைகளிலான விவாதங்களை செய்கிறோம்.

மாத்ருபூமி  திருவனந்தபுரத்தில் நடத்திடும் இலக்கிய திருவிழாவில் நேரில் பங்கெடுத்ததில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை வைத்துப் பார்க்கும்போது தங்களது திறன்களை நிரூபித்த இலக்கிய ஆளுமைகளையே அவர்கள் கொண்டு வருகிறார்கள் என்றேப்படுகிறது.

கேரள இலக்கியத்திருவிழாவில் பல்வேறுபட்ட மக்கள் திரள் பங்கேற்கின்றனர். மலபார் இலக்கியத் திருவிழாவிலோ முஸ்லிம் வருகையாளர்கள்தான் கூடுதல். எனினும் வெகு மக்கள் வரவில் கேரள இலக்கிய த்திருவிழாவிற்கு இணையாக மலபார் இலக்கியத் திருவிழா நிற்கிறது எனக் கூற இயலும். மலபார் இலக்கியத்திருவிழா நடத்தும் இளைஞர்களுக்கு  இலக்கியம் தெரியாது, இலக்கியத்தில் அவர்களுக்கு பிதாமகன்கள் இல்லை, இது போன்ற இலக்கியத் திருவிழாக்களை நடத்தி அவர்களுக்கு பழக்கமில்லை. எளிய வீடுகளில் இருந்து வரும் சராசரி மனிதர்களே இதை நடத்துகின்றனர். அவர்களில் யாரும் இலக்கியத்தில் பெரிதாக ஒன்றும் செய்திருக்கவில்லை.

ஆனால் கேரள இலக்கியத் திருவிழாவோ அரசிடம், தூதரகங்களிடம் நிதி உதவிகளையும் நல்கைகளையும் பெற்றுக் கொண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள், வானூர்தி போன்ற நிறுவனங்களுடன் விருந்தோம்பல், பயண துறையினருடனும் ஒப்பந்தம் பண்ணிக் கொண்டு  நடத்துகின்றனர்.

இவையெதுவுமின்றி வெறும் இரண்டு அனுசரணையாளர்களைக் கொண்டே இந்த இளைஞர்கள் மலபார் இலக்கியத் திருவிழாவை நடத்துகின்றனர்.

கேள்வி

இதை சாத்தியப்படுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுத்தது? இதை நடத்துபவர்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்?

கடந்த  ஒரு வருட காலமாகவே இதைக் குறித்து ஆலோசித்த நிலையில் ஆறு மாதங்களாக தீவிர செயல்பாட்டிலிருக்கிறோம்.

இதை நடத்துவது மலப்புரம் மாவட்டத்தின் செம்மாடை தலைமையகமாகக் கொண்ட  புக் பிளஸ் பதிப்பக அணியினர்தான்.புக் பிளஸ் நிறுவனம் தொடங்கி ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கோழிக்கோட்டிலும் கொல்லத்திலும் விற்பனையகங்கள் உள்ளன. இது வரை முன்னூறு புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். இந்த இலக்கியத் திருவிழாவின் பல நோக்கங்களில் புக் ப்ளஸ் பதிப்பகத்தை பிரபலப்படுத்துவதும் ஒன்று.

கேள்வி

எல்லோரும் அறியும் விதத்தில் இந்த இலக்கியத் திருவிழாவைப்பற்றி பேரளவிலான போதிய விளம்பரங்கள்  இல்லை. நடந்த விளம்பரங்கள் சிற்றிதழ்களின் பாணியிலல்லவா நடந்துள்ளது?

சமூக ஊடகங்களில்தான் இதன் விளம்பரம் நடந்தது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில்தான் எல்லா தகவல்களையும் அறிவிப்புக்களையும் விளம்பரங்களையும் வெளியிட்டோம். முக நூலை ‘ அங்கிள்களுக்கானது” என விமர்சிக்கும் இளைஞர்கள் கூடுதல் புழங்குவது இன்ஸ்டாகிராமில் என்பதால் இது இவ்வாறே நடந்தது.

ஆனால் இறுதிக்கட்டத்தில் கோழிக்கோட்டின் எல்லாப்பகுதிகளிலும் தட்டிகளும் பதாகைகளும் வைத்தோம்.

கேள்வி

மலபார் இலக்கியத் திருவிழா எனப் பெயரிருந்தாலும் அதன் மையக்கருவாக புற நிலங்களான குறிப்பாக காயல்பட்டினம், இலட்சத்தீவுகள், குஜராத் தீரங்கள், யமனின் ஹழ்ர மவ்த், ஆஃப்ரிக்கா, அந்தமான் நிக்கோபர்,  மலேசியா போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளனவே?

மலபார் என்பது வெறும் புவிப்பரப்பு அல்ல. ரோமாபுரி, அறபு நாடுகள், சீனம், ஆஃப்ரிக்கா போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள் உருவாக்கியதுதான் மலபார். இந்த நிலங்களனைத்தையுமே நாங்கள் மலபாராகத்தான் காண்கிறோம். அது ஒரு பண்பாட்டு நிலம். அதனால்தான் மஅபர் மலபார் அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இது  போன்ற இலக்கிய அமர்வுகளை சிறிய அளவிலேனும் மேற்கண்ட தொலை நிலங்களில் நடத்துவது பற்றியும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. 

கேள்வி

மலபார் இலக்கியத் திருவிழாவிற்காக உழைக்கும் ஆளணிகளை குறைவின்றி பார்க்க முடிகிறது? இதை எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்? நிதி வளங்கள் எப்படி?

முன்னாள் மாணவர்கள், புக் பிளஸ்சின் ஆதரவாளர்களின் நன்கொடையில் மட்டுமே இது நடைபெறுகிறது. நிதிப்பற்றாக்குறையும் உள்ளது.

மலப்புரம், கோழிக்கோட்டிலுள்ள கல்வி நிலையங்களைச்சேர்ந்த விருப்பமுடைய  மாணவர்கள் பெயர் கொடுத்து இங்கு வந்து தன்னார்வலர்களாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மூன்று நாட்களுக்குரிய உணவு, தங்குமிடத்துடன் சீருடை மட்டுமே வழங்கியுள்ளோம்.

கேள்வி

வெவ்வேறு சிந்தனைப்பிரிவினருக்கு மலபார் இலக்கியத்திருவிழாவில் எந்த அளவிற்கு இடமுண்டு?

சுன்னிகள், ஸலஃபிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு என எல்லோரும் உண்டு. சுருக்கமாக சொன்னால் சங்கிகள் அல்லாத மற்றெல்லோருமுண்டு. இங்கு சமூக நல்லிணக்கமே தலையாயது. கோழிக்கோட்டின் முதன்மை விஷயமே அதுதான். இங்கு பஞ்சாபிகள், ஃபார்சிகள், சீக்கியர்கள்,குஜராத்திகள் என எல்லோருக்குமே இடமுண்டு. அந்த மரபு போற்றி காக்கப்பட வேண்டுமென்பதுதான் நோக்கம்.

கேள்வி

இங்கு மரபு உடை அணிந்த ஆலிம்கள் ஒரு புறம் மறு புறம் தீவிர இலக்கிய அரங்குகள், விவாதங்கள் என களை கட்டுகிறதே? கேரளத்தில் இது இயல்பாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் வேறெங்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் இதைக் காண இயலுவதில்லை. பொதுவே முஸ்லிம்களுக்கு இலக்கியச்சுவை இல்லை. மார்க்க அறிஞர்கள் இது போன்ற விஷயங்களிலிருந்து தொலைவானவர்கள் என ஒரு தவறான பரப்புரை எப்போதும் நடந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அதற்கு நேர் மாறானதை இங்கு காண இயலுகிறது.  இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வாழ்விலிருந்து இலக்கியம் தொலைவான ஒன்றில்லைதானே? எழுத்தறிவில்லாத ஒரு மனிதனுக்கு கூட நாட்டார் பாடல், கதை இசை என்பன உண்டு. பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவதும்  நூலகங்களில் உள்ளதும் புத்தகத்தில்  இருப்பதும்தான் இலக்கியம் என்பது இலக்கியத்தை குறித்த நவீனக் கருத்தாக்கமே. ஆனால் உண்மையில் அது அப்படியில்லை. மனித நாகரீகத்தின் வரலாற்றை கவனிக்குமிடத்து எல்லா சமூகங்களுக்கும் கதைகளும் கதை சொல்லலும் இருக்கின்றன. நம்மனைவருக்கும் செறிவான கதை சொல்லும் மரபுண்டு. அது மாப்பிளாக்களுக்குமுண்டு.

இங்கு மலையாளம் என்ற மொழி செம்மை பெறுவதற்கு முன்பே அறபி மலையாளம் இருக்கிறது. மலையாளத்தில் முதல் படைப்பிலக்கியம் வருவதற்கு முன்பு அறபுமலையாளத்தில் நிறைய  படைப்புகள்  வந்து விட்டன. பதிப்பிப்பது, அச்சிடுவது என்பனவற்றிற்கு வயது இருநூறு வருடங்கள்தான். ஆனால் அதற்கு முன்னரேயே கையெழுத்துப் படிகளுக்கு நீண்ட பெரிய வரலாறுண்டு. அதன் தொடர்ச்சியாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டும். அத்தொடர்ச்சியில் எவ்வித இடைமுறிவுகளும் இல்லை என்பது மிகவும் மகிழ்வுக்குரிய ஒன்று.

தற்சமயம் அச்சுப்பண்பாடு என்பது வளர்ந்து எண்ணியப்படுத்தல்( டிஜிட்டலைசேஷன்) ,காணுதல் என நுண் வெளிப்பாடுகளுக்கும் சமூக ஊடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் புதிய ஊடக வெளிகளுக்குமாக  நகர்ந்துள்ளது. இவை போதிய அளவிற்கு வளர்க்கப்பட வேண்டும்.இதில் முஸ்லிம்கள், தலித்துக்கள், ஆதிவாசிகள் ஆகியோர் முனைப்புடன் உள்ளனர். எனினும் முஸ்லிம்கள் அளவிற்கு தலித்,ஆதிவாசிகள் இதில் ஈடுபடுமளவிற்குள்ள வளங்கள் போதாது.

கேரள முஸ்லிம்களின் பெரும் பேறு என்னவென்றால் வளைகுடா நாடுகளினுடைய எண்ணெய்ப்பொருளாதாரத்தின் விளைவாக அவர்கள் பொருளாதாரத்தில் வலுவாக உள்ளனர். இதில் நிறைய பக்க விளைவுகளுமுண்டு. இதற்கு மிகவும் தீங்கான இன்னொரு பக்கமும் உண்டு. மரபுகள், பள்ளிவாயில்களின் கட்டிடக்கலைகள் இழக்கப்படுகின்றன.அறபிமலையாளம் இழக்கப்படுகிறது. இவ்வளவு தீமைகள் இருந்தாலும் வளைகுடாப்பொருளாதாரம் இல்லையெனில்  விஷயங்கள் நடந்திருக்காது.

வளைகுடாவைக் கொண்டுதான் முஸ்லிம்களுக்கு வெளிப்புழக்கம் கிட்டியிருக்கின்றது. ஷார்ஜா, தோஹா, அபூதபி புத்தகக் கண்காட்சிகளுக்கு எல்லா பதிப்பகத்தாரும் போகத் தொடங்கியுள்ளனர். கெய்ரோ, இலண்டன் புத்தக கண்காட்சிகளுக்கு  செல்பவர்களும் உண்டு.

அச்சுப் பண்பாடு, புத்தகப் பண்பாடு செறிவாக உள்ள சமூகம்தான் மாப்பிளாக்கள். அச்சு வருவதற்கு முன்னுள்ள இலக்கியமான மாலைப்பாட்டு, ஸஃபினாப் பாட்டு , படைப்பாட்டுகளில் தத்துவார்த்தமும், நேசமும் உண்டு. பக்திப்பாடல்களிலும் நெடியதொரு மரபுண்டு. அதன் தொடர்ச்சிதான் இன்று நீங்கள் காணுபவை.இதொன்றும் மாப்பிளாக்களுக்கு மொத்த குத்தகை கிடையாது. எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் இவை உண்டு.

கேரளத்தில் முஸ்லிம் இயக்கங்களின் இருப்பினால் நிறைய பதிப்பகங்கள், வெளியீடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இவை இன்னும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதில் மோசமான பக்கமும் உண்டு. முஸ்லிம் இயக்கங்களுக்கிடையில் “தாங்கள்தான் உண்மையான முஸ்லிம், மற்றவர்கள் வழி தவறியவர்கள் ” என்ற சச்சரவுமுண்டு. இத்தகைய பிரச்சினைகள் இருக்கவே அறிவுப்பண்பாடும் உரையாடலும் இருக்கின்றன. இதனால் கூட இத்தகைய சிக்கல்கள் நடக்கலாம்.

உர்தூவிலும் அர்வியிலும் இத்தகைய மரபு எல்லாக்காலத்திலும் ஏற்பட்டுத்தான் இருக்கிறது. உர்தூவில் அப்படி இருக்கிறது என்பதை அறிவோம். அர்வியில் அதாவது சரந்தீபிலும்( இலங்கை) மஅபரிலும்( தமிழ்நாடு) இலட்சத்தீவிலும்  அப்படியாகக் கேள்விப்பட்டதுண்டு. எங்கேயோ வந்து போன இந்த உறவுகளின் துண்டிப்பில் நாம் மறு இணைப்பை செய்ய வேண்டியதுள்ளது.

கேள்வி

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட  மலையாளத்திற்கும் மாப்பிளாக்களின் மலையாளத்திற்கும் மோதல் உண்டா?

மலையாளத்திலும் வேறெந்த மொழியிலும் சரி மொழியியலில் தரப்படுத்தப்பட்ட ஒரு மொழி நடை இருக்கும். அது போல ஒவ்வொரு சமூகத்தினதும்  வட்டார மொழி வழக்குகள் உண்டு. மலையாளத்தில் மாப்பிளா மொழி வழக்கு என்பது பிராமண அல்லது மேல்சாதி மலையாளத்திலிருந்து அதாவது வள்ளுவ நாட்டு  வழக்கிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். மாப்பிளா வழக்கு மொழி என்பது பெரும்பாலும் ஏரநாட்டு, கோழிக்கோடு, கோலத்து நாடு கண்ணூர், காசர்கோடு பகுதிகளிலுள்ள  பேச்சு வழக்காகும்.

ஏற்கனவே சொன்னது போல மலபாரிலுமே மொழி வழக்குகளில் பன்மயத்தன்மை இருக்கிறது. மலபாருக்கு என ஒற்றை  வழக்கு மொழி அதாவது ஒற்றை மாப்பிளா மொழி என இல்லை. மோயின்குட்டி வைத்தியரின் மரபில் தமிழ்,உர்தூ, ஃபார்சி மொழிகளின் பதங்களை தாக்கத்தை காணவியலும். தனித்துவமிக்க மலையாளமயமாக்கப்பட்ட அறபிச் சொற்கள். ராஹத்து, ஹாஜத்து இது போன்றவை இங்கு பொதுவே எல்லோரும் முஸ்லிம்மல்லாதோரும்  பயன்படுத்தும் சொற்களாகும்.

நேற்று மலபார் இலக்கியத்திருவிழாவில் அமர்வொன்று நடைபெற்றது. அதில் திரைப்பட இயக்குநர் முஹ்சின் பராரி சொல்கையில், “ நான் பாடல்கள்  எழுதும்போது எனக்கு இயல்பாக வருவது எனது ஊர் மொழிதான். நான் பல வேளைகளில் அதை தன் தணிக்கை செய்வேன். காரணம் அம்மொழியானது மாப்பிளாக்கள், ஏரநாட்டுக்காரர்கள் அல்லாதவர்களுக்கு அது புரியுமோ எனத் தெரியவில்லை. அது அவர்களுக்கு புரியாது என்பதால் அதை தன் தணிக்கை செய்து விடுவேன்” என்றார்.

உம்பாச்சு என்ற கவிஞர் தனது பல கவிதைகளையும் படிமங்களையும்  வடகரா(கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஊர்) மொழி வழக்கில்தான் எழுதுவார். பேராசிரியர் எம்.என்.விஜயன் மாஸ்டர் என்ற இடதுசாரி அறிவுஜீவியிடம்  உம்பாச்சு ஒரு முறை கேட்டார் “ நான் வடகரா, மாப்பிளா வழக்கில் எழுதும்போது அது தரப்படுத்தப்பட்ட பொது மலையாளத்தில் புழங்குவோருக்கு விளங்குவதில்லை. எனவே அதற்கு அடிக்குறிப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது அல்லது அவர்கள் அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது” என்றபோது அதற்கு விஜயன் மாஸ்டர் “ கோட்டயத்திலும், திருவிதாங்கூரிலும் பேசப்படும் மலையாளம் உங்களுக்கு புரியவில்லைதானே? எனவே அவர்களுக்கு புரியாத கவிதைகளை அவர்களும் வாசிக்கட்டும். அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக நீங்கள் உங்கள் மொழியில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். நீங்கள் எப்படி வாழ்கிறீர்களோ, எப்படி உணர்கிறீர்களோ, எப்படி சிந்திக்கிறீர்களோ, அதை நேர்மையாகப் பதிந்தால் போதும். கொஞ்சம் பேருக்கு இது புரியவில்லை என்பதற்காக இதை மாற்ற முனைய வேண்டாம்.  அவர்களுடையதை நீங்கள் முயன்று படிப்பதைப்போல அவர்களும் உங்களுடையதை கேட்டறிந்து படித்துக் கொள்வர் ” என்றாராம்.

மொழிகளுக்கிடையே மோதல்  நடக்கட்டும். அதன் மூலம் ஒரு நல்லிணக்கப்பாடு உண்டாகி மொழி மேலும் செறிவுள்ளதாகும். அப்படி கூடுதல் செறிவாகுதல்தான் நல்லது. அதல்லாமல் ஒரு சமூகம் தங்களது வட்டார வழக்கையும் சொற்களஞ்சியத்தையும் ஒளித்துக் கொண்டு இன்னொரு மொழிக்கு இடம் பெயர வேண்டுமென்பதில்லை.

தொடர்புடைய இணைப்புக்கள்

மஅபரும் மலபாரும் – மலபார் இலக்கியத்திருவிழா 2023,கோழிக்கோடு கருத்தரங்கு


அறபித்தமிழ் - சோழமண்டலக் கரையின் பண்பாட்டு முத்திரைகள் கருத்தரங்கு – மலபார் இலக்கிய திருவிழா2023, கோழிக்கோடு


மலபார் இலக்கியத் திருவிழா கோழிக்கோடு 2023 -- ஒளிப்படக்கோவை


‘கவிதையின் சமன்’ -- மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

 

 

 

No comments:

Post a Comment