கருத்தரங்க உரைக்குறிப்புக்கள்:
அர்வி வரைவிலக்கணம்
தமிழ் சைவ வைணவ சமணத்தமிழ் என்பது போல முஸ்லிம் தமிழ்..
இதனால் மொழியில் ஒரு மதச்சமநிலை உண்டாகியது எனலாம்.
தமிழ் எழுத்துருவில்
எழுதப்படும் முஸ்லிம் வட்டார வழக்குகளயுமே அர்வி என்றழைக்க வேண்டும் .
ஆனால் இவையனைத்தையுமே
அர்வி என்றழைப்பதை விட இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
என்றே அழைக்க வேண்டும் என இலங்கை ஆய்வாளர் எம்.ஏ.நுஃமான் சொல்கிறார்.
அர்வியின் தேவை
அறபுகளுக்கும் தமிழர்களுக்குமிடையே தொடர்பாடல் மொழியாக
இருந்த அர்வியின் தேவை இஸ்லாமின் பரவலுக்குப் பிறகு இன்னும் கூடுதலாக உணரப்பட்டது.
(எ.கா )தஃப்சீர், ஹதீஸ் கலை, நல்லுரைகள்…
அத்துடன்
அறபி மொழியின் உச்சரிப்புக்களை அப்படியே தமிழில் கொண்டு வருவதில் உள்ள போதாமைகளை அர்வி
போக்கியது. எ.கா: அல்லாஹ் என்ற பதத்தின் தமிழ் உச்சரிப்பு.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள
சமயங் கலந்த தமிழினால் இஸ்லாமிய கருத்தாக்கங்களை கலைச்சொற்களை உணர்த்த வெளிப்படுத்த
இயலாத தன்மையொன்று இருக்கிறது. அதைப் போக்குவதற்காகவும் அர்வி வந்தது.
அர்விக்கு
மொத்தம் நாற்பது எழுத்துக்கள். இதில் 28 அறபி, 12தமிழ் எழுத்துக்கள். தமிழ் சொற்களுக்கு
நெருக்கமான அறபி எழுத்துக்களுக்கு சிறப்பு குறியீடு இடப்பட்டது. (எ.கா) ட, ச, ப, ங
தமிழில் இல்லாத
18 ஒலி வடிவத்தை அறபு எழுத்துக்கள் பெற்றிருப்பதினால்தான் அறபை தமிழில் எழுத முன்னோர்கள்
முயலவில்லை. பன்னிரண்டு தமிழ்ச்சொற்களுக்கே அறபியில் சமமான எழுத்துக்கள் இல்லாததினால்
குறைந்த இடரை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அதாவது தமிழை அறபியில் எழுதினர்.
அர்வியை தனி
மொழி என சொல்வதை விட அறபுக்கும் தமிழுக்குமான இடை மொழி என வகைப்படுத்தலாம். அது ஒரு
தனி மொழி என்ற விவாதமும் இருக்கிறது.
அர்வி முறைப்படுத்தப்படல்,
படைப்புக்கள்
போர்த்துக்கீசியரின்
அவமதிப்புகளுக்கு அஞ்சி பனை ஓலைச்சுவடிகளில் இருந்த அர்வி படிகளை முஸ்லிம்களே தீயிட்டும் நீர் நிலைகளில்
போட்டும் அழித்துள்ளனர். பழவேற்காடு போன்ற ஊர்களில் அறபி, அர்வி புத்தகங்களை காரைச்சுவர்களுக்கு நடுவே வைத்து பூசி விட்டிருந்திருக்கின்றனர்.
அர்வியை முறைப்படுத்த
வேண்டும் என்ற தேவையும் மேற்கண்ட சூழலை ஒட்டியே எழுந்தது. அறபியில் இல்லாத தமிழின் வல்லின எழுத்துக்களுக்கு அர்வி மூலம் தீர்வு
காணப்பட்டது. இதை செய்தது ஹாஃபிழ் அமீர் (வலீ).
சிலச் சில
ஊர்களில் சில எழுத்துக்களை மாறுபட்டுக் கையாள்கின்றனர். (எ.கா)காயல்பட்டினம், நாகப்பட்டினம்
ஒரு வகை, இலங்கையில் ஒரு வகை, இராமநாதபுர மாவட்டத்தில் இன்னொரு வகை.
காயல்பட்டினத்திலிருந்து
கீழக்கரைக்கு புலம் பெயர்ந்தவர்கள் காயல்பட்டின அர்வி எழுத்து முறையையே கையாண்டனர்.
அர்வியில்
முதலில் வெளி வந்த குர்ஆன் தஃப்சீர் ஃபத்ஹுர் ரஹ்மான் ஃபீ தர்ஜூமதி தஃப்ஸீரில் குர் ஆன் ( முதல் ஐந்து ஜுஸுக்கள் மட்டும்)இலங்கையிலிருந்து
ஆகும். காலம் . ஹிஜ்ரி 1291. இது தமிழ் எழுத்துருவில் தற்சமயம் நண்பர் ஜனீர் பதிப்பித்துள்ளார்.
அதற்கு அய்ந்து
ஆண்டுகள் கழித்தே ஹிஜ்ரி 1296 இல் சதக்கத்துல்லாஹ் அப்பாவின் பூட்டனான ஆலிம் ஹபீப்
முஹம்மது இப்னு சதக் முஹம்மது இப்ராஹீம் அல்காஹிரி(1878-1883) ஃபுதுஹாத் அர்ரஹ்மானிய்யா
ஃபீ தஃப்சீர் கலாம் அர்ரப்பானிய்யா, (முழுமையானது), அறபு எழுத்துகளில் வெளியானது, மும்பை.
பொஆ1880/81
(இரண்டாம் பதிப்பு 1911): நூஹ் இப்னு அப்துல் காதிர் அல்காஹிரி, (ஜாவியாவை சேர்ந்தவர்)ஃபத்ஹ்
அல்கரீம் ஃபீ தஃப்சீர் அல்குர்ஆன் அல்அழீம், முழுமையானது, அறபு எழுத்துகளில் வெளியானது,
மும்பை.
பொஆ1886/87இல்
நூஹ் இப்னு அப்துல் காதிர் அல்காஹிரி, ஃபத்ஹ் அல்கரீம், அத்தியாயங்கள் 1-4, அறபு எழுத்துகளில்
வெளியானது,
ஹதீஸ் விளக்கம் ஃபத்ஹூல் வ நஸ்ஹுல் ஹதீஸ் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது.
ஃபதாவா ஆலம்கீரிய்யா,
மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் மகானி, அஹ்காமு ஷாஃபியிய்யா, அஹ்காமு ஹனஃபிய்யா, தக்க ஷுரூத், அதபு மாலை, பெண் புத்தி மாலை, பெரிய
ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை, காயத்துல் இஹ்திசார் மாலை, தம்பாக்கு
மாலை, இஹ்யா மாலை, கல்யாண பித்அத்து மாலை, ரசூல் மாலை, மீறான் சாஹிப் மாலை, தோத்திர
மாலை, ஷரீயத்து மாலை, தரீக்கத் மாலை, ஹக்கீகத் மாலை, ஃபாத்திமா நாயகியை பாட்டுடை தலைவியாக்கி
தலை ஃபாத்திஹா( பேறு கால வேதனை சமயத்தில் ஓதுவது), ஹதியா மாலை, மஃரிபத் மாலை, ஞான ஒப்பாரி,
நான்கு இமாம்கள் சரிதம், நபிமார்கள் சரிதம், பெரிய நபிமார்கள் கிஸ்ஸா, ஃபுதூஹுஷ்ஷாம்,
குலஃபாவுர்ராஷீதீன் சரிதை,வேத புராணம், ஃபத்ஹுத் தய்யான் ( ஷாஃபி ஃபிக்ஹ் நூல்), துஹ்ஃபத்துத்
தாமியீன் ஃபீ தர்ஜூமத்தில் ஃபத்ஹூல் முயீன்
(ஃபத்ஹுல் முயீனின் தர்ஜுமா).
நூற்றுக்கணக்கான
பதங்கள், காரணங்கள்( கராமாத்), கதீஜா நாயகி காரணப்புராணம், முஹ்யித்தீன் காரணப் புராணம்,
கீர்த்தனா ரஞ்சிதம். இவற்றை சுமக்கும் பெரும் பாணர் மரபு இன்றளவும் எங்களூரில் நீடிக்கிறது.
கஸீதா,தக்மீஸ்,
மர்ழியா, மத்ஹு, தஃப்சீர், தர்ஜூமா,நாகூர் நாயகம், திப்பு சுல்தான் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் குறித்த செய்திகள், மருத்துவம், சமையல் குறிப்புக்கள்,
படம் வரைதல், தற்காப்புக்கலைகள்,விடுகதைகள், நகைச்சுவை துணுக்குகள், பாலியல், புனைவுகள்
உள்ளிட்ட பதினெட்டு தலைப்புக்களில் அர்வி கிரந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சூஃபி கிரந்தங்களும்
ஏராளம்.
மேற்கண்டவை
அனைத்தும் அர்வியில் உள்ளவை. இவற்றில் சில பின்னாட்களில் மவ்லவி.மு.ஹசன் காதிரி அவர்களால்
தமிழ் எழுத்துருவில் கொண்டு வரப்பட்டது.
அர்வியிலும்
தமிழிலுமுள்ள அர்வி கிரந்தங்களை சென்னை திருவல்லிக்கேணி
ஷாஹுல் ஹமீதிய்யா & சன்ஸின் ஷாஹுல் ஹமீதிய்யா பிரஸ் நிறுவனத்தினர் இன்றும் அச்சிட்டு விற்கின்றனர்.
காயல்பட்டினத்தில் அர்வி
பதங்கள் வீட்டிலுள்ள
பெண்களால் பல்வேறு நிற மசி கொண்ட கலங்களால்( மூங்கில் எழுதுகோல்கள்) அழகாக எழுதப்படுபவை.
வீட்டிலிருந்து பயணம் புறப்படும் ஆண்களுக்கு அதனை , குர்ஆனின் படியை தலையில் வைத்து
ஓதி அனுப்புவர். இந்த படிகளை எழுதி கொடுப்பவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுப்பர்.
காயல்பட்டினத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பதம் உண்டு. ஒரு வீட்டில் உள்ளது இன்னொரு வீட்டில் இருக்காது. பழையன கழிதல் என்ற அடிப்படையில் சேதமடைந்த அர்வி ஏடுகள் கடலில் போடப்பட்டிருக்கின்றன.
---
-- ---
----
அர்வியின் இன்றைய தேவை
அர்வியின்
தமிழாக்க பனுவல்களில் ஏற்பட்ட பிழைகளை , விடுபடல்களை
அர்வி மூல நூற்களைப்பார்த்துதான் ஹசன் காதிரி அவர்கள் திருத்தினார்கள். காரணம் ஒரு
சொல்லில் ஏற்படும் மாற்றம் பெரும் அபத்தங்களை உண்டுபண்ணி விடும்.இதல்லாமல் பல அர்வி
பனுவல்களை மொழியாக்கும்போது நேரெதிரான வகையில் மொழியாக்கப்பட்டுள்ளன. எனவே இந்த தவறுகளைக்
கண்டுபிடிக்கவும் மேல் ஆய்வுகளுக்குமாக அர்வி மொழியும் அதன் பனுவல்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
தேசம் தேசியம்
– அது ஒரே இனம் ஒரே மொழி ஒரே நிலம் ஒரே பண்பாடு
என பேசும் எதுவாகவும் எதுவாகவும் இருக்கலாம். அந்த ஒற்றைக் கதையாடல் உருவாவதற்கு முன்னரே
அதற்கெதிரான ஒரு அகன்ற தாராளத் தன்மையை எல்லைகளொழிந்த தன்மையை இயல்பாகவே தனக்குள் கொண்டுள்ளதும்
அர்வியின் தலையாய குணாம்சம். இந்தியப்பெருங்கடலிலிருந்து
பசிபிக் தீரம் வரை பரவியிருந்த ஒரு அகன்ற வாழ்க்கை. அது ஒரு விசாலத்தின் குறியீடு.
அர்வி நூற்கள் உறையுமிடங்கள்
காயல்பட்டினத்தின்
ஆண் மத்ரசாக்களிலும், பல வீடுகளிலும், ஒன்றிரண்டு தனியாட்களிடமும் அர்வி நூற்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டரசின்
சென்னை ஆவணக்காப்பகம், ரப்பானிய்யா மத்ரசா கோட்டக்குப்பம், பள்ளப்பட்டி மஹ்தூமியா மத்ரசா,
எருமைப்பட்டி, கமுதி, அரூஸிய்யா தைக்கா, தென் கேரளம்,பிரிட்டன்,ஹாலந்து , இந்தோனேஷியா
போன்ற நாடுகளில் அர்வி கிரந்தங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பல வருடங்களுக்கு
முன்னர் வரை அர்வியில் கடிதப்போக்குவரத்து, கணக்கெழுதுதல் ( எ.கா. பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்
கணக்குகள் அர்வியில் அய்யர் ஒருவரால் எழுதப்பட்டது) நடைபெற்று வந்துள்ளது.
கன்னியாகுமரி
மாவட்டத்தின் சில ஊர்கள்,திண்டுக்கல் ம.மூ.கோவிலூர், புத்தாநத்தம், சேலம் முஹம்மதியாபுரம்,
தஞ்சாவூர்,சென்னை மண்ணடியின் சில பகுதிகள், புளியந்தோப்பு, தொண்டியார் பேட்டை ஆகிய
ஊர்களில் இன்றளவும் மத்ரசாக்களில் அர்வி மூலமாக கற்பிக்கின்றனர்.
இலங்கையிலும்
காயல்பட்டினத்திலும் பருவ இதழ்கள் அர்வியில்
வெளி வந்துள்ளன.
அர்வியில்
பைபிள் 1926 ஆம் ஆண்டு வெளி வந்திருக்கிறது என தைக்கா சுஐபு ஆலிம் தெரிவித்துள்ளார்கள்.
மொழிக்கும்
மதத்திற்குமான அழகிய இணக்கப்பாடுதான் அர்வி.
செவ்வியல் மொழிகளான செமித்திய குடும்பத்தைச் சார்ந்த அறபிக்கும் திராவிட மொழிக்
குடும்பத்தைச்சார்ந்த தமிழுக்கும் இடையேயான
வெற்றி வெற்றி முயக்கம். அறபி பரவிய பல இடங்களில் குறிப்பாக ஆஃப்ரிக்க நாடுகளில் உள்ளூர்
மொழியை பின்னுக்கு தள்ளி விட்டு அறபியே தலையாய இடத்தை பெற்றிருப்பதை மனங்கொள்ள வேண்டும்.
வீழ்ச்சிக்கான காரணங்கள்
- அறபி & தமிழ் என இரு மொழியை ஒரே தாளில் அச்சிடும்
வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம்
- அறபி, உர்தூ
மொழி பரவலாகியது.
- தாவூத் ஷா போன்ற மறுமலர்ச்சிவாதிகளின் குரலில் ஒட்டியிருந்த
மூர்க்கம் / ஆதிக்க சாதி இந்துக்கள் / மேல் தட்டினரின் முகத்துக்கு
அஞ்சி அர்வியை எதிர்த்தார். அளவிற்கு கூடுதலான அர்வி எதிர்ப்பு அவரிடம் இருந்துள்ளது.
- மாநிலத்தின் தலையாய மொழியாக தமிழ் வளர்ச்சி கண்டது.
- ஆங்கிலத்தின் இன்றியமையாமை
- வட மொழி எழுத்துக்களான ஷ, ஜ, ஹ போன்றவை தமிழுக்குள்
வழக்கில் வந்தது.
- பள்ளிக்கூடங்களின் வரவு / உரை நடைகளில் உள்ள மேம்பாடு
- திராவிட இயக்கத்தின் எழுச்சியோடு உடனெழுந்த தமிழ்
அடையாள உருவாக்கத்தோடு தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டது.
-------------------
என் பார்வை
வட மொழி பனுவல்களுக்கு
ஏற்பு வழங்கும் தமிழ் உலகின் பெரும்போக்கினர்,
அர்வியின் எழுத்துரு அறபியில் இருப்பதால் அர்வியை
ஏற்றுக் கொள்ள மறுப்பது வேதனைக்குரிய விடயம்.
அறிவியல்
தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது மொழியிலும் மொழியைப்பற்றிய வரைவிலக்கணத்திலும் சிறியதும் பெரியதுமான மாற்றங்களை
கொண்டு வந்திருக்கின்றன. தமிழையே ரோமன் எழுத்துருவில் எழுதலாம் என்றெல்லாம் முன் மொழியப்படும்
இக்காலகட்டத்தில் ஒரு மொழிக்குரிய இலக்கணத்தில் தனக்குரிய இடத்தையும் வரைவையும் அர்வி கொண்டிருக்கிறது என்பதை சொல்ல இயலும்.
அர்வி இன்று
இயல்பாக தன் வீழ்ச்சியை அடைந்திருந்தாலும் பல நூற்றாண்டுகளின் சாட்சியம் அது. காலங்கள்
அதற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
நடைமுறை வாழ்வில்
அர்வியின் தேவை இல்லாமல் ஆயிருக்கலாம். ஆனால்
வரலாற்றை அறிவியல் முறையில் பதிய பாதுகாக்கத் தவறிய நமது பாவத்திற்கான தவ்பா என்பது
அர்வியை அழிய விடாமல் காப்பதுதான். காரணம் நமது முன்னோர்களின் வாழ்வும் பண்பாடும் ஆத்மீகமும்
வரலாறும் என எல்லாமும் பொதிந்த காலப்பேழை அது.
“ …. அர்வியின்
வீழ்ச்சியை இந்திய அறிஞர்கள் நிறைவாகவும் ஆறுதலாகவும் உணர்ந்தனர். தமிழ்த் தேசியவாதிகள்
அஞ்சியது போல் அர்வி தன்னை ஒரு தனி மொழியாகவும்
முஸ்லிம்களை தனியொரு தேசிய இனமாகவும் முன்னிறுத்திடவில்லை
வட இந்தியாவில்
உர்தூவிற்கும் ஹிந்திக்கும் இடையே வளர்ந்து வந்த பிளவானது முஸ்லிம் பிரிவினைவாதத்திலும்
இந்தியப் பிரிவினையிலும் போய் முடிந்தது என்ற அச்சத்தினால் மட்டுமில்லை இந்தியாவிற்கு
மிக அருகிலுள்ள சிலோனின் முஸ்லிம்கள் தமிழில்
பேசினாலும் ‘தமிழர்கள்’ என்பதின் கீழ் உட்பட
மறுதலித்து தங்களை ‘மூர்கள்’ என்றே அழைத்தனர் என்பதினாலும்தான் தமிழ்த் தேசிய வாதிகள்
அஞ்சினர். -- ஆய்வாளர்
டார்ஸ்டன் சாக்கர்.
இலங்கை முஸ்லிம்களை
தமிழர்கள் என அழைக்க முற்பட்ட பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு
வாக்குரிமை அளிப்பதை எதிர்த்தார். இதிலிருந்து நீங்கள் நிறைய புரிந்து கொள்ளவியலும்.
மொழியின்
பெயரால் மனிதர்களை அடக்கியாள நினைப்பதும் வெட்டிப்பிளப்பதும் சிறிய சமூகங்களின் இருப்பை சமூக பண்பாட்டு விழைவுகளை
நிராகரிப்பதும் ஃபாஸிசத்தில்தான் அடங்கும்.
காலத்தின்
ஓட்டத்தில் மொழிகள் உருவாவதும் வளர்வதும் புதிய வடிவங்கள் எடுப்பதும் தேய்வதும் தவிர்க்க
முடியாத இயக்கம் எனும்போது அந்த இயல்பான இயக்கத்தை அச்சுறுத்தலாக பார்ப்பது ஒடுக்க
முனைவது மானிட நேசிகளுக்கு உகந்ததல்ல.
தமிழ் மொழியும்
, பிராமி சித்திர எழுத்து, வட்டெழுத்து, கிரந்த
எழுத்து என மாறி மாறிதான் இன்றைய வடிவத்தைப் பெற்றுள்ளது.
லூசோ தமிழ்
சமயவினா – விடை என்பது லிஸ்பன் நகரில் ரோமன் எழுத்து வடிவில் அச்சிடப்பட்ட நூல். இது
தமிழ்மொழி நூல், ஆனால் ரோமன்எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. தனிநாயகம் அடிகள் போன்ற
அறிஞர்கள் இதுவே தமிழின் முதல் நூல் என்கிறார்கள்.
இன்றைக்கும்
மலாய் மொழியில் எழுதப்படும் புத்தகங்கள் அனைத்துமே ஆங்கில எழுத்து வடிவில் மட்டுமே
எழுதப்பட்டு வருகின்றன. வரி வடிவம் ஆங்கிலம் என்பதால் அதை ஆங்கிலமொழி என்று கூறிவிட
முடியாது. மொழி மலாய்மொழி.
எழுத்தை அடிப்படைவாதமாக
ஏற்றுக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. மொழி என்னவென்று பார்த்தால் போதும்.
கீழே உள்ள இணைப்பு உங்களுக்கு உபயோகப்படலாம்.
ReplyDeletehttps://www.bbc.com/travel/article/20240212-arwi-the-lost-language-of-the-arab-tamils