Monday, 18 July 2022

தோந்நிய யாத்ரா 3 – குப்பா பள்ளி, மம்புரம் தங்ஙள், குஜராத் தெரு – பாதைகளின் கனிகள்

குப்பா பள்ளி

மகாகவி மொயின்குட்டி வைத்தியரின் நினைவகத்திற்கு வலது பக்கம் கூம்பக  வடிவிலான கப்பிக்கல் கட்டிடமொன்று காலத்தின் கமுக்கங்களை தனக்குள் போட்டுக் கொண்டு வினோதத்துடன் நிற்கிறது. 

கூம்பக கட்டிடம்

அதனருகே குப்பா ஜியாரம், கொண்டோட்டி நேர்ச்சை என்றழைக்கப்படும் முஹம்மது ஷா அவர்களின் அடக்கத்தலம்  அமைந்துள்ளது. மும்பையின் கல்யாண் பகுதியை சார்ந்த முஹம்மது ஷா அவர்கள்  (இறப்பு  பொ.ஆ.1776)  கொண்டோட்டிக்கு வந்து நிரந்தரமாக தங்கி விட்டார். அவர்  நடைமுறைப்படுத்திய மார்க்கத்தின் பெயரிலான நடைமுறைகள்  மலபார் முஸ்லிம்களுக்கு அறவே  அறிமுகமில்லாதவை. பொன்னானியின் மார்க்க அறிஞர்கள் இந்த புதிய புகுத்துதலை எதிர்த்தார்கள். குப்பா பள்ளி வாசலில் பாரசீக மரபில்  கட்டப்பட்ட தக்கியாவும் அது சார்ந்து உருவான சடங்குகளும் கேரள முஸ்லிம்களிடம் எதிர்மறை தாக்கங்களை  ஏற்படுத்தின.


கொண்டோட்டி ஜியாரம்
கொண்டோட்டி ஜியாரம்

மலபார் முஸ்லிம்களின் ஆன்மீக  வரலாற்றில் நீண்ட  விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும்  உள்ளான ஒன்று கொண்டோட்டி தக்கியாவும் அது சார்ந்த தரீக்கத்துமாகும்.

பொன்னானி - கொண்டோட்டி கைத்தர்க்கம் என்றழைக்கப்படும்  நீண்டகால விவாதங்களுக்கு  இதுவும் ஒரு மூலகாரணமாகும். கொண்டோட்டி தக்கியாவின் போக்கினை மம்புரம் தங்ஙள்களும் கண்டித்துள்ளனர்.சுருங்கச் சொன்னால் ஒரு வழித்திரிவு  எனலாம்.

கொண்டோட்டி குப்பாபள்ளியில் ரொம்ப நேரம் நிறகத்தோன்றவில்லை. எதிர்மறை அதிர்வுகளினால் ஒரு சடைவு. பாசித் ஹம்சாவின் சகோதரி வீட்டிற்கு கிளம்பினோம். 

வேர்களைப்போல உள்ளோடியிருக்கும் உள்பாதையொன்றிற்குள் பெரும்பாதையிலிருந்து வண்டியை திருப்பினார் பாசித் .கேரளத்தின் இடைவழிகள் எப்போதும் நம்மை ஒரு மர்மப்பகுதிக்கு அழைத்துசெல்லப்படும்  கிளர்ச்சியை உண்டுபண்ணிக் கொண்டேயிருப்பவை. இடது பக்கம் திரும்பினால் இனி காடுதான் தொடங்கும்போலிருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கும்போதே  பசும் விளைக்கு நடுவே  மரம் மறைத்த மாமத யானையாக கிணற்றுடன் வீடொன்று நின்று கொண்டிருக்கும்.

மேடும் பள்ளமுமான நிலம் என்பதால் கேரளத்தில் வீடு கட்டுபவர்கள் அந்த பள்ளத்தை நிறைத்து சமதளமுண்டாக்க மணலுக்கே ஒரு தொகை போட வேண்டியிருக்கும். இல்லாவிடின் உருள வைக்கும் எல்லாவகை சாத்தியங்களையும் கொண்ட  நீர்த்தாரை போல இறங்கும் ஒற்றையடிப்பாதையொன்றை சார்ந்திருக்க வேண்டும்.  ஆனால் பாசித் ஹம்சாவின் சகோதரியின் வீடு அத்தகைய இடர்களிலிருந்து தப்பியிருந்தது.

பொதுவாகவே வீட்டின் கீழ்பாகம்தான் எல்லோரும் எப்போது புழங்கும் பகுதி. ஆனால் இவர்களோ சாலையுடன் தொடர்புபடும் வகையில் ஒரு குட்டிப்பாலம் மட்டும் போட்டு  நடப்பு வீட்டைக்கட்டியுள்ளனர்.பள்ளமான பகுதியில் மாடிக்கொப்பான கூடுதல் பகுதிகளை கட்டியிருக்கின்றனர்.

வீட்டினுள் வழமை போல மேல் கீழ் என  இரு பாகங்களையும் இணைக்கும் ஏணிப்படி இருக்கிறது. மாடியில் ஏறுவதற்கு மாறாக கீழ் தளத்திற்கு  இறங்குகின்றனர். மாடியை இடம் பெயர்த்த நேரிய தலை கீழ் இட மேலாண்மை மிக அபாரம். கச்சிதமான எழில் நிறை வீடு.

கடிகுடிக்குப்பிறகு பாசித் ஹம்சாவின் இரு சக்கர வண்டியிலேயே மம்புரம் சென்றோம்.மஃரிபாகி விட்டிருந்தது. மக்பராவை அடைத்து விட்டிருந்தார்கள். இரவுகளில் திறப்பதில்லையாம். வாயிலருகில் ஆலிம்கள் கொஞ்சம்பேர்  பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். மனத்தை குலைக்கும் பரபரப்புகளோ கூச்சல்களோ இல்லை. இந்திய தர்கா சுற்றுப்புறங்களில்  காணப்படும்  தூய்மைக்குறைவை கேரளத்தில் பார்க்கவே முடியாதது மிக்க ஆறுதலாக இருந்தது.

 

மம்புரம் ஜியாரம்

மம்புரத்தில் அடங்கியிருக்கும் மம்புரம் தங்ஙள் என்ற  செய்யிது அலவி தங்ஙள் அவர்கள்  பா அலவி செய்யிதுகள் மரபைச்சேர்ந்தவர். மலபாரில் மகத்தான ஆன்மீக பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்திய இந்த தலைமுறையினர் அலீ(ரழி) அவர்களின் மரபுத்தொடரான ஹுசைனி குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். எமன் நாட்டின் ஹழ்ரமவுத் பகுதியிலிருந்து மலபாரில் குடியேறியவர்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் கரையில் நிறைய அரபி வணிகர்கள் வருகை புரிந்தனர். சாமுத்திரி மன்னருக்கும் இவர்களுக்கும் நல்லுறவு நீடித்தது. பொஆ 1741 இல் செய்யிது ஷேகு பின் செய்யது முஹம்மது ஜிஃப்ரி அவர்கள் மலபாருக்கு வருகை புரிந்தனர். அதன் தடமொற்றி தனது பதினெட்டாம் வயதில் இங்கு வந்த மம்புரம் தங்ஙளும் மம்புரத்தில் மார்க்கப் பணிகளுக்காகவே நிரந்தரமாக தங்கி விட்டார்.

ஹிஜ்ரி1166, துல்ஹஜ் பிறை 23இல் செய்யிது முஹம்மது பின் சஹ்ல் மௌலா தவீலா என்ற மார்க்க அறிஞருக்கும் செய்யிது ஃபாத்திமா இணையருக்கும் மம்புரம் தங்ஙள் பிறந்தார். திருக்குர்ஆனை ஏழு வயதில் முழுமையாக மனனமிட்ட அவர்  காதிரிய்யா தரீக்கத்தின் முதன்மை ஷேகுகளில் ஒருவரும் கூட.

சமூக மார்க்க பணிகளில் ஊன்றி செயல்பட்ட மம்புரம் தங்ஙள் மத நல்லிணக்கம், உரிமைகள் மீட்பு, காலனியாதிக்க எதிர்ப்பு  நடவடிக்கைகளிலும் தீவிரமாக இயங்கியவர். மார்க்க பேணுதல் மிக்க  அன்னார் தனது இல்லத்தை  மம்புரம் பள்ளிவாயிலை ஒட்டியே அமைத்திருந்தார். மம்புரம் தங்ஙளுக்கு இந்தோனேஷியாவின் திமோரிலும் மணவுறவு இருந்தது. ஐந்து பிள்ளைகளின் வாப்பாவான அன்னாருக்கு ஒரே ஆண் பிள்ளையாக பிறந்தவர்தான் செய்யிது ஃபழ்ல் பூக்கோயா தங்ஙள். 

ஃபழ்ல் பூக்கோயா தங்ஙள்

மலபாரின் ஆதிக்கசாதி நிலவுடைமையாளர்களுக்கும்  பிரிட்டிஷாருக்குமிடையே நிலவிய  கள்ளக் கூட்டுக்கெதிரே கிளர்ந்த ஆயுதப்போராட்டத்தின் மைய விசையாக விளங்கியவர்  மம்புரம் தங்ஙள். அன்னாரின் மகனான செய்யிது ஃபழ்ல் பூக்கோயா தங்ஙள்  ஏமனுக்கு சென்று அங்குள்ள  தோஃபார் பகுதியின் (இன்றைய ஒமான்)ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளார்.  பிரிட்டிஷாரின் நெருக்கடியின் விளைவாக கன்ஸ்தாந்தினோபிளுக்கு(இஸ்தான்புல்) நாடு கடந்தார்கள். அன்று நிலை நின்றிருந்த உதுமானிய கிலாஃபத்தில் அமைச்சராகவுமிருந்து அங்கேயே இறந்து அடங்கியுமுள்ளார்கள்.

துருக்கிக்கும்  ஹிஜாசுக்கும் இடையே  தொடர்வண்டிப்பாதை அமைத்து அதை  இயக்கி காட்டியது உள்ளிட்ட பெருஞ்சாதனைகளின் நாயகர் அன்னார். செய்யது ஃபழ்ல், ஃபழ்ல் பாஷா என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்ட அவர்  முஸ்லிம் உம்மத்தின் உலகளாவிய தன்மையை செயல்வழி நினைவூட்டியவர்.

பிரிட்டிஷாரின் உறக்கம் கெடுத்த  நாயகர்கள் மம்புரம் தங்ஙளும் அன்னாரின் ஒரே மகனும். பிரிட்டிஷாருக்கெதிரான சேரூர் போராட்டத்தில் காயமுற்ற மம்புரம் தங்ஙள், அந்த விழுப்புண்களின் விளைவாகவே  தனது தொண்ணூற்றி நான்காம் வயதில் ஹிஜ்ரி 1260 முஹர்ரம் பிறை07(பொஆ 1845) ஞாயிற்றுக்கிழமை உயிர் நீத்தார்கள். மகனார் செய்யிது ஃபழ்ல் பூக்கோயா தங்ஙளும்  கன்ஸ்தாந்தினோபிளில் மண் மறைந்திருக்கிறார்.

வரலாற்றின் அரிய மலர்களாய் தோன்றும் இம்மனிதர்கள் கண்டங்களை காலடிகளால்  அளந்த உலக நாயகர்கள். இறைச்செய்தியையும்  நீதியையும்  தங்கள் பயணப்பொதியாக்கி மொழி, நாடு, இனம், நிறம், கடல், ஆகாயம் என்பனவற்றை கணுக்கால் ஆழத்தில் கடந்து சென்றவர்கள். வேர்களைத் கண்டடைவது போலவே வேர்களைத் துறத்தலின் வழியாகவும்  திருவுரு  மனிதர்கள் மானுடத்திற்கு நிறைய கொடுத்துள்ளனர். தேசம், தேச அரசியல் போன்ற பிற்கால பிளவுபடுத்தும் கருத்துருவாக்கங்களிலிருந்து  பீறிடும் தேசபக்தி நோய்களுக்கு,  மக்களை வகிர்ந்து போடும் பூவுலக எல்லைகளை பொருளிழக்கச் செய்த மாமனிதர்களை நச்சு முறிவாக முன்னிறுத்த வேண்டியுள்ளது.

மம்புரம்  செல்லும்போது அங்குள்ள பள்ளிவாயிலில் ஓரிரவு தங்குங்கள். இன்னும் சேகரமாகும் என நண்பர் மிடாலம் அன்சார் சொல்லியிருந்தார். தோது அமையவில்லை. ஒரு கவளத்தில் அடங்கும் பசியல்ல இது. பெருங்கொண்ட  இடங்களெல்லாம் எப்போதுமே தம்மிடம் நாம் திரும்ப திரும்ப வருவதைக் கோருபவை.

இரவுணவை தன் நண்பன் வீட்டில் ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார் பாசித். மம்புரம் பாலம் தாண்டி உள்ள ரஷீத் நகர் சென்றோம். பாசித்துடன் படிக்கும் மாணவர் ஃபுஆதின் வீடிருக்கும்  இடம். குபுஜ் என்ற வெண் கோதுமை  ரொட்டியும்  சுட்ட கோழி இறைச்சியும் சாயாவுமாக மிகக் குறைந்த நேரத்தில் இரவுணவை வீட்டார் ஆயத்தமாக்கினர். உண்டி கழிந்த பின் புஆது பாடினார். நபி நேசப்பாட்டு. கண்களால் மட்டுமே பேசும் புஆது  பாட்டென வரும்போது ஒரு கணமும் சுணங்கவில்லை. திருவாக காத்திருக்கும் கரு. ஆலிமுக்கு படித்துக் கொண்டே வழக்கறிஞருக்கும் பயில்கிறார்.

 

புஆது

என்னை வண்டியேற்றி விட்டுவிட்டு பாசித் கிளம்பினார். அறைக்கு திரும்ப இரவு வெகு நேரங்காத்திருக்க வேண்டியதாயிற்று. பொதுவே கேரளத்தில் இரவு பேருந்து சேவைகள் குறைவு. இரவு ஏழு மணிக்கே வண்டிகளை குறைக்கத் தொடங்கி விடுவர். வளைந்து சாடி குளிர்சாதன பேருந்தொன்று வர கோழிக்கோட்டு அரசு (கே.எஸ்.ஆர்.டி.சி) பேருந்து நிலையத்தில் வந்திறங்கினேன். நிலைய முன் திண்ணையில் வெம்பிய நெடும் பப்பாளியான மனித உடல்கள். பின்னிரவு பயணத்திற்காக காத்திருக்கும் பயணிகள். செய்தித்தாளை விரித்து ஆழ் உறக்கம். டங் மணியடித்து யானை வண்டிகள் முன் பின்னாக இழுபட்டுக் கொண்டிருந்தன.

வைக்கம் முஹம்மது பஷீர் இருக்கையைக் காண்பதற்காக மறுநாள் காலையில் கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்றேன். அந்த துறையை இழுத்து மூடி மலையாளத்துறையின் கீழ் ஒப்படைத்திருக்கின்றார்கள். அந்த துறைத்தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘ பஷீர்  இருக்கை தற்சமயம் இயங்கவில்லை. முன்னர் இயங்கியபோது இருந்தவற்றை ஓர் அறையில் வைத்து பூட்டியுள்ளோம். நீங்கள் வந்து பார்க்கும் அளவில் எல்லாம் இங்கு ஒன்றுமில்லை” எனக்கதவை சாத்தினார். வரிப்பணத்தில் வாழ்க்கையை கழிக்கும் இவர்களின் நினைவில் தானொரு கல்வியாளன், தான் ஏற்றெடுத்த பணியை இலவசமாக ஒன்றும் செய்யவில்லை என்பது ஒரு போதும் இருக்காது போலும்.

பெருந்தொற்றுக்கு முந்திய வருடத்தில் வைக்கம் பஷீர் இருக்கையுடன் தொடர்பு கொண்டபோது ‘ தாராளமாக வாருங்கள். அவர் குறித்த ஏராளமான ஒளிப்படங்கள் உள்ளன” என்றனர். காலம் பிந்திய வருகையில் இழந்தது வைக்கம் முஹம்மது பஷீர் இருக்கையை  மட்டுமல்ல அவரின் ஒளிப்படக்கலைஞர் புனலூர் இராஜனையும் கூடத்தான். வைக்கம் முஹம்மது பஷீரின் வாழ்வியல் தருணங்களை காலஞ்செலவாக்கி பதிந்தவர் அவர். 


அந்த படங்களடங்கிய கோப்பு நூல் ஒரு காலப்பெட்டகம். அதனை  டிசி புக்ஸ் நிறுவனத்தினர் ‘ ஓர்மச்சாய ( நினைவின் நிழல் )’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர். எவ்வளவு முயன்றும் கேரளத்தில் எங்கும் கிடைக்கவில்லை. புனலூர் இராஜன்தான் டிசி புக்ஸ் உரிமையாளரிடம் பேசி எனக்கான ஒரு படியைப் பெற்றுத் தந்தார். வாசித்த நூல்களை நான் பொதுவே  வெளியில் கொடுத்து விடுவதுண்டு. இறுதி வரைக்கும் என்னிடம் இருக்க வேண்டியது என நான் நினைக்கும் மிக கொஞ்ச நூல்களில் இதுவும் ஒன்று.

வைக்கம் முஹம்மது பஷீருக்கு மட்டுமில்லை. எம்.டி.வாசுதேவன் நாயர், கமலா சுரைய்யா, பொற்றேக்காடு, தகழி சிவசங்கரன் பிள்ளை,அக்கித்தம் உள்ளிட்ட கேரளத்தின் தலையாய படைப்பாளிகளை கறுப்பு வெள்ளைப் படங்களாக தன் படவிக்குள் பகர்த்தியெடுத்தவர் புனலூர் இராஜன்.


புனலூர் இராஜன்


“ இறைவனால் அருள் செய்யப்பட்டு கேமிராவுடன் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட ஒற்றன் “ என எம்.டி.வாசுதேவன் நாயராலும், ‘ இதயத்தின் அண்டை வீட்டுக்காரன்’ என  வைக்கம் முஹம்மது பஷீராலும் நேசிக்கப்பட்டவர் புனலூர் இராஜன். ஒளிப்படக்கலையை  அன்றைய சோவியத் ஒன்றியத்தில் போய்க் கற்றவர். காலத்தில் ஊறிக்கிடக்கும் தனது வரலாற்றுப்புகழ் வாய்ந்த ஒளிப்படங்களை ஒரு போதும்  பணமாக்கி பார்க்க முயலாதவர்.

இப்பயணத்தில் அவரை சந்தித்து விட வேண்டும்  என்ற எண்ணத்தில் செல்பேசியில் அவர் பெயரை தட்டச்சும்போது  இறந்த செய்தி வந்து விழுந்தது.  பெருத்தொற்றின் முதல் அலை காலகட்டத்தில்  அதாவது ஆகஸ்ட் 2020 இல்  இதய  நோயால் பிரிவு நேர்ந்திருக்கிறது.

புனலூர்  இராஜனுடன் சேர்த்து  கேரளத்தில் பார்த்து விட வேண்டும் என்ற பட்டியலில் இருந்தவர்களில் உலகோடி மொய்து கிழிச்சேரியும் ஒருவர். அவரும்  2020  அக்டோபரில்  சிறுநீரக செயலிழப்பின் விளைவாக உயிரிழந்திருக்கிறார்.சமன் செய்யவியலாத இழப்புகள. தீராமல்  ஒழுகிக் கொண்டிருக்கும் கணங்களின் விசைக்கு முன்னர் எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான ஒத்திசைவின்  தாளம் தப்பி விடத்தான் செய்கிறது. 

மொய்து கிழிச்சேரி

மாலையில் அதர் புக்ஸ் பதிப்பகத்தின்  ஜலால் வந்திணைந்து கொண்டார். தன்னில் தானே நடக்கும் இளவல். எலிஃப் ஷஃபாக் எழுதிய ‘ காதலின் நாற்பது விதிகள்’ சூஃபி நாவலை மலையாளத்தில்   மொழியாக்கியக் குழுவில் இவரும் உண்டு. ஆள் மாப்பிளா பாட்டுகளின் பாடகருங்கூட.

நண்பரும் எழுத்தாளரும் ஊடக பயிற்றுனருமான கோழிக்கோடு நவ்ஷாதுடன் கோழிக்கோட்டின் தெற்கு கடற்கரையின் குஜராத் தெருவிலுள்ள  குதாம் பழம்பொருளங்காடி & காட்சியகத்திற்கு  சென்றோம்.நனவிலிருந்து நனவிலிக்குள் தவறி விழுந்த உணர்வு. கட்டிடத்தின் உள்ளும் புறமும் பழைமை  சொட்டிக் கொண்டிருந்தது. 

குதாம் பழம்பொருளகம்

குதாமின் உரிமையாளர் பஷீர்க்கா வெளிநாடு வாழ் கேரளியர். செல்வர். தொழில் நிமித்தமாக  இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு சென்றிருக்கிறார். உள்நாட்டு அயல் நாட்டு பயணங்களில் காணும் அரிய தொல் கலைப்பொருட்களை பொழுதுபோக்காக சேகரிக்கப் போய் அது பெரும் சேகரமாகி விடவே  பிறந்திருக்கிறது குதாம். வணிக தேவைகளின் மேல் தங்கி நிற்கிற நிறுவனமல்ல . கற்பிக்கும் அருங்காட்சியகம். போன காலத்தின் மேல் கோடிகள் விலையாக  படர்ந்திருக்கிறது. குதாமின் வருகைக்குப் பிறகுதான் குஜராத் தெருவானது  கலையகங்களால் நிறையத் தொடங்கியுள்ளது.

குதாமுக்கு ஒட்டினாற் போல  மஞ்சள் நீர்ப்பூவாகி நிற்கும்  டிசைன் ஆசிரமம் (https://www.designashram.org/home )கோழிக்கோட்டின் தலை சிறந்த கட்டிட  வல்லுநர்களில் ஒருவரான விருதாளர் பிராஜேஷ் ஷைஜாலுக்கு சொந்தமான கட்டிடக்கலை நிறுவனமிது. உண்மையில் இதையொரு கலை பண்பாட்டு சமூக வெளியாகத்தான் அவர் நிறுவியுள்ளார். தான் கட்டும் கட்டிடத்தில் வசிக்கப்போகும்  மனிதர்களின் தனித்தன்மைக்கேற்ப சூழலியல், மரபு, நவீனத்தையும்  பிசைந்து சமூக கரிசனத்துடன் கூடியதான கட்டிடங்களை  எழுப்பி வரும் வெற்றிகரமான கட்டிட வல்லுநர் அவர்.

டிசைன் ஆசிரம வெளிப்புறம்

டிசைன் ஆசிரம் உட்புறம்

 அரசமரம்  நடுநாயகமாக நிற்க  அழகியல்  செயல்பாடுகளால் நிறைகிறது டிசைன் ஆசிரமம். நூறு வருடங்கள் பழைமையான கட்டிடத்தை தங்கள் கனவுகளுக்கேற்ப  வார்த்துள்ளனர் பிராஜேஷ் ஷைஜால் இணையர்.

ஓபன் மைக் என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும் கலை  இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகளுக்கு வளாக முற்றத்தில்  இடமளிக்கின்றார்கள். காசு வாங்குவதில்லை. போகிற வருகிற நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளே நுழைய விடமாட்டார்கள்.. இடம் கேட்டு அணுகுபவர்களின் தரப்பின்னணியை அறிந்த பிறகே இசைவு கிடைக்கும். பெயர் பெற்ற இசைக்கலைஞர்கள் இங்கு கச்சேரிகள் நடத்தியிருப்பதாக நவ்ஷாத் சொன்னார்.

கலை இலக்கிய பயணிகளுக்கும் முக்கிய ஆளுமைகளுக்கும் நடுத்தரமான   கட்டணத்தில் உணவுப் பரிமாறலுடன் கூடிய  துப்புரவான தனித் தங்குமிடங்கள் உள்ளன. இணையவழி/ செல்பேசி தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் பொறுப்பாளரான மோகனேட்டன் மங்களூர்க்காரர். வீணை இசைப்பதோடு  வாய்ப்பாட்டும் பாடக்கூடிய  புன்னகைக்கும் ஆன்மா.

தமிழகம் கேரளத்தில்  இது போன்ற  WRITER’S INN  எனப்படும் படைப்பாளிகளுக்கான விடுதிகள் நானறிந்த வகையில்  பாலக்காட்டு மாவட்டத்தின்  வட கோட்டத்தாரா, அகாலி என்னுமிடத்தில் செயல்படும் சத் தர்ஷன் (https://satdarshan.org/).   இந்த படைப்பாளிகளின் விடுதியை   நண்பரும் தமிழ்நாட்டுக்காரருமான  ஆனந்த்  நடத்தி வருகிறார். தமிழகத்தின் ஆளியாறுக்கு அருகில் அடர்ந்த இயற்கைச்சூழலில் இவ்விடுதி அமைந்துள்ளது. அடுத்தது கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில்  வானகம் என்ற பெயரில் காலச்சுவடு  பதிப்பகமும் பாடகர் டிஎம் கிருஷ்ணா குடும்பத்தினரும் இணைந்து தொடங்கியுள்ளனர். இது முழுமை பெறுவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.

பிறிதொன்று பாலக்காடு மாவட்டம்  கினாச்சேரியில் உள்ள  எழுத்தாளர் ஓவி விஜயன் நினைவகத்தில் கேரள அரசினால்  கட்டப்படுகிறது. விரைவில் பணிகள் நிறைவுறும் என சொன்னார்கள். தமிழகத்தில் இது போன்றதொரு படைப்பாளிகளின் விடுதியை கலை இலக்கிய புரவலர்களான தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். கோரிக்கைதான் வலுவாக செல்ல வேண்டும்.

கோழிக்கோடு கடற்கரையில் விற்கும் மட்டி வடையை தேடி வருகின்றது கூட்டம். போண்டாவில் ஓட்டுடனுள்ள கடல் மட்டியை பதித்து விற்கின்றனர். ஆறியளந்த போண்டாவின் நிறமும் எண்ணெய் வாசமும் ஒவ்வாமையை உண்டாக்க தேநீர் மட்டும் குடித்தேன். சுவை அரும்புகளின் துயர் மறக்க கடலருகில் சென்று அமர்ந்தோம். இருட்டிற்குள் சாம்பல் மானாகி மங்கிக்கிடந்தது கடல்.

என்னுடைய  கோழிக்கோட்டு பயணத்தை அறிந்த நெடுநாள் நண்பர் தஸ்தகீன் ஷரஃபுத்தீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடற்கரையில் உள்ள கண்ணம்பரம்பு மைய்யித்துக்காட்டிற்கு சென்று வாருங்களேன் என்றார். 2016 இல் கேரள கர்நாடக எல்லையில் நடந்த சாலை விபத்தில் தன் ஆறு வயது மகனை இழந்தவர் அவர். அவனின் அடக்கத்தலம் இங்குதான் உள்ளது.

 மைய்யத்துக்காட்டின் உள்ளே சென்றபோது அது இன்னொன்றாக இருந்தது. இறுதி அமைதிகளின் கூம்பாரம்.  ஒடுக்கம் தன்னையிழந்து விரிந்து கிடந்தது. முறையான அணுகு சாலைகளும் விளக்குகளுமாக அடக்கப்பட்டவர்களின் வயது வருடங்களுக்கேற்ப வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோழிக்கோடு நகராட்சியும் பள்ளி பரிபாலனக்குழுவும் இணைந்து நிர்வகிக்கும் இதன் பரப்பளவு பதின்மூன்று ஏக்கர்.

பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வாந்திபேதி,பெரியம்மை பெருந்தொற்றுக்களினால் கொத்து இறப்புக்கள் ஏற்பட்டபோது அந்த உடலங்களை சீந்துவாரில்லை. அவைகளுக்கு எல்லா வகையான பொருளிலும் இறுதிப் புகலிடமாக விளங்கியது இந்த மைய்யத்துக்காடுதான்.கொரோனா பெருந்தொற்றுக்காலம் உட்பட இன்றளவும்  அடையாளமற்ற கைவிடப்பட்ட உடலங்களுக்கும் கண்ணம்பரம்பு மைய்யத்துக்காடுதான் இறுதிப் புகலிடம்.

சிறுவனின்  கப்ரை கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமெடுத்தது. ஒவ்வொரு கபுராக தேடிக் கொண்டு வரும்போது எனது தெருவைசேர்ந்த பெண்மணியின் பெயர் பொறித்த மீசான் கல்லைக் காண நேரிட்டது..திகைப்பு நீங்காமலேயே சிறுவனின் கப்ரையும் கண்டுபிடித்தோம். வாழ்க்கை நாடகங்களின் மீது எதிர்பாரா திசைகளிலிருந்து  விழுந்து தழுவும் திரை. இது இங்கு இப்படித்தான் முடிய வேண்டும் என்பதை  தீர்மானிப்பவர் யார்? பிரார்த்தனைகளுக்குப்பிறகு கிளம்பினோம். நவ்சாதிடம் ஏதோ சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் எதற்குமே விடையிறுக்கவில்லை.

மறுநாள் அதர் புக்ஸ்  உரிமையாளரும் பல் மருத்துவருமான அவ்சாஃப் ஹூசைனுடனான ஒரு தேநீர் சந்திப்பு. பின்னர் பழங்குடி அருங்காட்சியகக் காணல், மாலையில் மீண்டும் கோழிக்கோடு கடற்கரை என கழிந்தது. இரவு இரயில் பிடித்து திருவனந்தபுரத்திற்கு கிளம்பினேன்.

மருத்துவர் அவ்சாஃப் ஹுசைன் அதர் புக்ஸ் 

அருஞ்சொற்பொருள்

 குப்பா – கும்மட்டம், குவி மாடம்

ஜியாரம் , மக்பரா – புனிதர்களின் அடக்கத்தலம்

தக்கியா – ஆன்மீகப் பயிற்சிக்கூடம், சில ஊர்களில் பெண்களின் வழிபாட்டிடத்திற்கும் தக்கியா, தைக்கா என அழைக்கின்றனர்

கைத்தர்க்கம் – வாத எதிர்வாதங்கள்

தரீக்கத் ,காதிரிய்யா தரீக்கத் – இறைவனை அறிந்து சரியான பாதையில் செல்லவும் உளத்தூய்மை பெறவும் வழிகாட்டும் வழிமுறையானது தரீக்கத் என்று அறியப்படுகிறது. இதற்காக ஞானாசிரியரிடம் பயிற்சி பெறுவர். இதுவே சூஃபித்துவ மரபு என்று  பிரபலமாகியது. இம்மரபில்  காதிரிய்யா, ஷாதுலிய்யா, நக்‌ஷபந்திய்யா, சுஹ்ரவர்த்திய்யா போன்ற பல  பயிற்சி பாசறைகள் உருவாகின. பகுதாத் நகரில் அடக்கமாகியிருக்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை ஞானாசிரியராகக் கொண்டு பயிற்சி பெறும் வழிமுறையானது காதிரிய்யா தரீக்கத் என்று அழைக்கப்படுகிறது. ஞானாசிரியர்கள்  வெறுமனே ஆன்மீகம் என்று ஒதுங்கியிருக்காமல் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களில் தங்களின் சீடர்களுடன் போராடியதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் உள்ளன. நல்லாட்சி புரிந்த ஆட்சியாளர்களின் ஞானாசிரியர்களாக சூஃபிகள் விளங்கினர்.

மஃரிப் – சந்தி கால தொழுகை, கதிரவன் மறைந்தவுடன் தொழப்படும் தொழுகை

ஆலிம்  -- மார்க்க அறிஞர்

செய்யிது – நபிகளாரின் பின் தோன்றல் தொடரை சார்ந்தவர்.

தங்ஙள்  -- கேரளம், முஹல்ல தீவு, இலட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த சூஃபி ஞானிகள்

ஹிஜ்ரி ஆண்டு  - நபிகள் நாயகம்  மக்காவிலிருந்து மதீனாவிற்கு நாடு துறந்த சென்ற வருடத்தை அடிப்படையாக வைத்து முஸ்லிம்கள் கணக்கிடும் பிறை அடிப்படையிலான நாட்காட்டி

ஷேகு,  ஷேஹ்  --சான்றோர்

வாப்பா  - தந்தை

கப்ர் – இறந்தவர்கள் அடக்கப்பட்ட மண்ணறை

மீசான் – மண்ணறையின் தலைமாட்டில் நாட்டப்படும் அடையாளக்  கல் / பலகை

 

                                                 தொடர்புடைய பதிவுகள்






 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment