Wednesday, 22 June 2022

தோந்நிய யாத்ரா 2 -- கொண்டோட்டி - சதுரங்களை விஞ்சிய வரைகள்

 மேடும் பள்ளமும் வளைவும் திரிவும் கொண்ட  கேரளத்தில் பேருந்து பயணமென்பது தலை சுற்ற வைக்கும் ஒன்று. அதிலும் தனியார் பேருந்துகள் என்பன  குடை இராட்டினமேதான். “கேறு கேறு “ என்ற நடத்துனர்களின் கூவலில் தலை கிறுகிறுப்பு தொடங்கும்.  நெளியும்  சாலைகளில் அதன் சுழன்றாடுகையும் பாட்டுக்கூச்சலுமாக வண்டியை விட்டு இறங்கும்போது நமது ஆன்மாவிற்கும் உடலிற்கும் வேறு பிரிந்த  ஒரு மோன நிலை கைகூடியிருக்கும்.

இரண்டரை மணி நேர பொன்னானி கோழிக்கோடு பயணத்திற்கு மூன்று மணி நேர ஓய்வு தேவைப்பட்டது.  அறைக்கு அருகிலுள்ள  வீட்டு சமையல்  உணவகத்தில் பொரித்ததும் ஆக்கியதுமான மீன், அப்பளத்துடன் கூடிய நாடன் உணவை இறக்கிய பிறகு ஒரு தெளிவு பிறந்தது. மூளைக்கு வயிறு கடத்தும் மொழி அத்தனை வலுவானது.


பாசித் ஹம்சா

அசர் வாக்கில்  நாலெட்ஜ் சிட்டியைச் சேர்ந்த ஆய்வு மாணவரான  மஞ்ஞேரி பாசித் ஹம்சா இணைந்து கொண்டார். இருபத்தோரு வயது நிரம்பிய பாசித் ஹம்சா  ஆலிமிற்கான கல்வியைக் கற்றுக் கொண்டே பொருளியலில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார். இஸ்லாமிய சட்ட மரபு,ஹதீது இலக்கியம்,கீழைத்தேயவியல்,மதம்,மாப்பிளா சமூகம் என்ற துறைகளில் ஆய்ந்து கொண்டிருப்பதுடன் வெளிநாட்டு கருத்தரங்குகளில் ஆய்வறிக்கைகளும் அளித்துள்ளார். ஆய்வு,இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கிய katib.in என்ற ஊடக சேகர இணைய தளத்தின் நிறுவன ஆசிரியருமாவார். ஆழமும் நிதானமும் ஒருங்கே அமையப்பெற்ற இளைஞர்.

அடித்து பிடித்து நாங்கள் கொண்டோட்டி போய்ச்சேரவும் மணி நாலே முக்கால் ஆகி விட்டது. ஐந்து மணிக்கு மாப்பிளா  கலா அகாடமி (https://mappilakalaacademy.org/?page_id=1342&lang=en) (எ) மொயின் குட்டி வைத்தியர் நினைவகத்தை அடைத்து விடுவார்கள்.  தமிழ் நாட்டிலிருந்து வருகிறோம் என்று சொன்னவுடன் முகம் மலர்ந்தது.  ‘போதும் போதும்’ என்கிற அளவிற்கு சுற்றிக்காட்டினார்கள். ஆனால்  நம் நாட்டிலோ  நான்கு மணிக்கு போய் நின்றாலும் ‘ டயம் ஆச்சு சார். நாளக்கி வாங்க’ என முகத்தில் சாத்திஅனுப்பும் சற்குணம்



 


 மொயின் குட்டி வைத்தியர் நினைவகத்திற்கு வருவது இது இரண்டாம் முறை. முதல் பயணமென்பது காக்கை குளியல்தான். இந்நினைவகத்தின்  மூலவரான  மொயின் குட்டி வைத்தியரைப்பற்றி  எழுதுவதற்கு முன் இரண்டு விஷயங்களைப்பற்றி சொல்லியாக வேண்டியுள்ளது. அவை இந்நினைவகத்தில்  புதியதாக இணைக்கப்பட்டிருக்கும் அம்சங்கள். ஒன்று  கண்டங்களின் சஞ்சாரி மொய்து கிழிச்சேரியின் அரும்பொருட்கள் சேகரம். அடுத்தது மாப்பிளா எழுச்சியின் ஒளிப்படக் காட்சியகம்.

 மொய்து கிழிச்சேரி

பள்ளிவாயில்களில் கேட்ட ஞான போதனைகளின் தாக்கத்தில் பத்தாம் வயதில் ஐம்பது ரூபாய்களுடன் தன் உடலையும் மனத்தையும்  எடுத்துக் கொண்டு  ரயிலேறியவர்  மொய்து  கிழிச்சேரி.  ஏழு வருடம் வட இந்தியா, பதிநான்கு வருடங்களில் நாற்பத்தி மூன்று நாடுகள் கண்ட உலகோடி.

(https://salaibasheer.blogspot.com/2021/12/blog-post.html#more).

அவர் தனது உலகு காண் சஞ்சாரத்தில் சேகரித்த அரும்பொருட்களை எழுபத்தைந்து இலட்சம் ரூபாய்களுக்கு ஈடாக கேரள அரசிடம் ஒப்படைத்து விட்டார். அரசிடம் இதை ஒப்படைக்கு முன்னர் பல தனியாட்கள்  இந்த சேகரங்களுக்கு கோடிக்கணக்கில்  விலை நல்கியும் அவர் அசையவில்லை. தனியாரிடம் போனால் அவர்களைத்தவிர வெளியுலகிற்கு தெரியாமல் போய் விடும். அரசிடம் போனால் அது காலாகாலத்திற்கும் செய்தி சொல்லிக் கொண்டேயிருக்கும் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

மொய்து  கிழிச்சேரியின் இந்த சேகரங்களுக்காகவும்தான் நான் கொண்டோட்டிக்கு ஓடி வந்தது. குடுவை, குடாக்கு, ஆயுதம் வானொலிப்பேழை, ஒலி நாடா கருவி, கச்சை, வலந்து( கலன்), விளக்கு, குர்ஆன் படி, தொலைபேசி, கடிகாரம், பாதக்குறடு என அலங்காரமாக உள்ளது. எத்தனை நிலங்களின் நினைவுகள் அவைகளுக்குள்ளில்  ஊறிக்கிடக்கும்? பச்சை நிற மலாயா கச்சை(பெல்ட்)யைக்கண்டவுடன் என் அப்பா, வாப்பாவுடன் மாப்பிளாமாரின் கேரளமும்  உடன் எழும்பும்  ஒரு காணுகை.

சௌகரிய எல்லைகளை தகர்த்து  திரும்பி வருவதைப்பற்றிய உறுதிப்பாடற்று  இடர் மிகு தலங்ளில் கால் பதிப்போரே உலகத்தின் மறை பக்கங்களை திறந்து விட்டிருக்கின்றனர். இங்கிருக்கும் பொருட்கள் அல்ல இவ ற்றின் வழியாக இவற்றிற்குள்  உறையும்  மொய்து கிழிச்சேரிதான் நமக்கு வேண்டியது. அவர் பற்றிய  வரலாறு  குறும்பட  வடிவில் வைக்கப்பட வேண்டும். 



மாப்பிளா ஒளிப்பட அரங்கு

நினைவகத்தின் கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றார் பணியாளர். அங்கு மாப்பிள்ளா எழுச்சி தொடர்பான  முழுமையான ஒளிப்பட ஆவண மாடத்தை நிறுவியுள்ளனர். இன்றிலிருந்து நூற்றியொன்று வருடங்களுக்கு முன்பான   நெருப்பின் கண்ணீரின் வரலாறு.    


மாப்பிளா எழுச்சியின் சுருக்கப் பின்னணி இதுதான்: முஸ்லிம்களும் தலித்துகளும் 
தெற்கு மலபாரின் விவசாயக்கூலிகள் ஆவர்.  நிலமும் அதிகாரமும் ஆதிக்க சாதிகளின் பிடியில் இருந்தது .வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு வரை நிலத்தின் விளைச்சலில் தங்களுக்குரிய நீதமான பங்கை பெற்று வந்தார்கள் தெற்கு மலபாரின் விவசாயிகள். இதைப் சாத்தியப்படுத்தியவர் அன்றைய ஆட்சியாளர் திப்பு சுல்தான்.

திப்பு வீழ்த்தப்பட்டு வெள்ளையர்களின் ஆட்சிக்காலம் வந்த போது நிர்வாக கட்டமைப்புகளுக்குள் தாவியேறிய  ஆதிக்க  சாதியினர் வெள்ளையரசை தங்களுக்கு சாதகமாக வளைத்து  குடியானவர்களுக்கு பாதகமாகவும்  நில உடைமையாளர்களுக்கு சாதகமாகவும் நிலச்சட்டங்களை இயற்றினர். இது விவசாய மாப்பிளா முஸ்லிம்களிடையேயும் தலித்துகளிடையேயும் வறுமையை விதித்ததுடன் அவர்களை  நிலமற்றவர்களாகவும் மாற்றியது.  வறுமையும் பட்டினியும் உண்டாக்கிய  அக புற நெருக்கடிகளுடன் இன்னும் சில அநீதிகளும் வந்திணைந்து கொண்டன.

துருக்கியில் நிலை கொண்டிருந்த முஸ்லிம்களின் உலகத்தலைமையான உதுமானிய கிலாஃபத்தை  பல குயுக்திகள் கீழ்மைகளின் வழியாக பிரிட்டிசு பேரரசு பதினெட்டாம் நூற்றாண்டில் வலுவிழக்க செய்து சிதைவை நோக்கி நகர்த்தியது. உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களின் அதிகாரத்திலும்  உரிமைகளிலும்  பாதுகாப்பு வளையத்திலும் பெருந்தகர்வை ஏற்படுத்திய  இச்செயல் வெள்ளையர்களின் மீதான தெற்கு மலபாரின் மாப்பிளா முஸ்லிம்களின்  தகிப்பை இன்னும் கூட்டியது.

இந்த கொதிப்புணர்வுகளை மம்புரத்தில் மறைந்து வாழும் செய்யது அலவி தங்ஙள் (ரஹ்) அவர்கள் வழிகாட்டி ஒருங்கிணைக்க பொது ஆண்டு (பொஆ)1849 இல் மாப்பிளா எழுச்சி கிளர்ந்தது. இருபத்தி நான்கு வயதிற்கும் குறைவான 64 மாப்பிளா போராளிகளை வெள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர்.

 1920களில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த பிரிட்டிசாருக்கெதிரான ஒத்துழையாமை இயக்கத்துடன் அக்கட்சி நடத்திய கிலாஃபத்  இயக்கமும்  தீவிரமாக நடந்தேறின. இந்த கிலாஃபத் ஆதரவு கூட்டங்களில் ஏராளமான நாயர் சாதி தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவுக் குரல் எழுப்பினர். மார்க்க அறிஞர்களும் இந்த பன்முக அநீதிக்கெதிராக பங்காற்றினர். இதன் விளைவாக ஏரநாடு, வள்ளுவ நாடு பகுதிகளில் மாப்பிளா எழுச்சியானது  எரிக்குன்னன் பாலத்து மூளயில் ஆலி என்ற ஆலி  முஸ்லியார் தலைமையில்  அதன் உச்ச கட்டத்தை பொஆ1921 இல் எட்டியது.

கிட்டத்தட்ட ஒரு  நூற்றாண்டு வரை இக்கோபம் கனன்றது.  மாப்பிளா முஸ்லிம்கள், கிராமம் கிராமமாக வேட்டையாடி அழிக்கப்பட்டனர்.அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. சொந்த மண்ணிலிருந்து போராளிகளின் குடும்பத்தினர் & உறவினர்களுடைய  தடங்களை அகற்றித் துடைத்து கோயம்புத்தூர் உள்ளிட்ட அயல் நிலங்களுக்குள் பிடுங்கி எறிந்தனர் பிரிட்டிசார். போராடும்  பலஸ்தீன, இந்திய முஸ்லிம்களின் வாழ்விடங்களும் அடையாளங்களும் இன்று இவ்வாறு தகர்க்கப்படுவதற்கான முன்னோடியாக நின்று வழிகாட்டியது அன்று இந்நிலத்திற்குள் கடந்தேறிய  வெள்ளையர்கள்தான்.

திரூரங்காடி வலிய ஜுமுஅத்து பள்ளியில் மார்க்க அறிஞராக  கடமையாற்றி வந்த ஆலி முஸ்லியார் வெள்ளை ஆக்கிரமிப்பிற்கெதிரான போரின் மைய விசையாக மாறினார். திரூரங்காடியையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் வெள்ளையர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிக்கையிட்டு  தன்னை அப்பகுதியின் சுல்தானாகவும் அறிவித்தார்.  1921 ஆம் ஆண்டில் வெள்ளை சிப்பாய்களுக்கும் ஆலி முஸ்லியார் தலைமையிலான மாப்பிளா படையினருக்கும் கடும் மோதல் மூண்டது. பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஆலி முஸ்லியாரும் உடனிருந்தோரும் பிடிக்கப்பட்டு கோயமுத்தூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர் என வெள்ளையர்களின் ஆவணங்களில் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர்  ஒளூ செய்து இரண்டு இரக்அத்துகள் தொழுத ஆலி முஸ்லியார் தனது உயிர் அன்னிய ஆக்கிரமிப்பாளனின் தூக்கு கயிற்றில் போகக் கூடாது என மனமுருக பிரார்த்தித்த தொழுகையிலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. ஒப்புக்கு அவரது  சடலத்தை  வெள்ளையர்கள் தூக்கிலேற்றி இறக்கியதாக ஒரு குறிப்பு ,‘ நெல்லிக்குத்து முகம்மதலீ முஸ்லியார் மலையாளத்தில் எழுதிய ‘மலையாளத்தில்  மகாரதன்மார்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இவர் ஆலி முசலியாரின் மகன் வழிப்பேரனாவார். ஆலி முஸ்லியாருடன் சிறையில் இருந்தவர்கள் மூலம்  அவரது குடும்பத்தினருக்கு இத்தகவல் கிடைத்திருக்கும் வாய்ப்பு ஏராளம். அன்னிய வெள்ளையர்கள் தங்களது ஆவணங்களில்  இத்தகைய  அசாமானிய இறப்பை பதிவார்கள் என எதிர்பார்க்கவியலாது. வரலாறென்பது காலனிய சட்டகங்களுக்கப்பாலும்  இருக்கிறது.

தீரத்தின் ஒளி கூடிய பார்வையுடன் ஏமனி தலைப்பாகையையும் தரித்திருக்கும் ஆலி முஸ்லியாரின் படத்தை கண்கள் எதிர் கொண்டவுடன் அனைத்தும் பொங்கி நாசியின் வழி இரத்தக்கஸ்தூரி பரவி நிறைகிறது. 



ஆலி முஸ்லியாரின் மறைவிற்குப்பிறகு  இச்சமரம் வாரியன் குன்னத்து குஞ்ஞஹ்மது ஹாஜியாரால் முன்னெடுக்கப்பட்டது. மஞ்ஞேரி, திரூரங்காடி,பெரிந்தலமன்னா  முதலான பகுதிகளை வெள்ளையர்களிடமிருந்து விடுவித்து தனியாட்சி அமைத்தவர் வாரியன் குன்னத்து ஹாஜி. பிடிக்கப்பட்ட வாரியன் குன்னத்து குஞ்ஞஹ்மது ஹாஜியை பொதுவிடத்தில் வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றது வெள்ளைப்பட்டாளம். இதுவரை கிடைக்காதிருந்த தீரன் வாரியன் குன்னத்து குஞ்ஞஹ்மது ஹாஜியின்  நிழற் படம் சென்ற ஆண்டுதான் இலண்டனில் கண்டெடுக்கப்பட்ட து.

இப்போராட்டத்தின் நாயகர்களுடன்  நேரடி சாட்சிகளையும்  ஒளி ஆவணப்படுத்தியிருப்பது  இந்த அரங்கை மேலும் வலுவுள்ளதாக்குகிறது. வாக்கும் வினையும் ஒளிர்ந்தணையும் தலம். தலையாய போராளிகளின் தலைமறைவிடம், மாப்பிளா சுஹதாக்களை  நல்லடக்கம் செய்தவர், அவர்களது மறைவிடத்தில் அன்னமும் குடிப்பும் வழங்கியவர் என மாப்பிளா எழுச்சியின் நேரடி சாட்சிகள் பற்றிய குறிப்புகளாலும் படங்க:ளாலும் இந்த அரங்கு வாழ்விற்கும்  இறப்புக்குமான ஊடாட்டத்தில் நின்றொளிர்கிறது.

பல அநீதிகளை ஒற்றையாக  ஒரே சமயத்தில் எதிர்கொண்ட  இப்போரை மாப்பிளா எழுச்சி, மாப்பிளா  போராட்டம் என்றழைப்பதே முழுமையானதாகும். மாப்பிளா எழுச்சியை காலனிய மேலாதிக்க ஆற்றல்கள் ‘ மாப்பிளா கலகம் ‘ என்றும் பொதுவுடைமையாளர்கள் ‘ மாப்பிளா விவசாயக்கூலிகளின் புரட்சி” எனவும்  ஹிந்துத்வ நாஜிகள் “ மாப்பிளா மதவெறி” எனவும் அவரவர்களின் நோக்கங்கள், அரசியலுக்கேற்பவும் அழைத்துக் கொள்கின்றனர். சொற்களில்  மறைத்து வைக்கப்படும்  தொலைக்கப்படும் அரசியல்  கூரானது.




இந்திய நாட்டில் நிலத்தையும் அதிகாரத்தையும்  ஆயிரமாயிரமாண்டுகளாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு தர்மத்தின் கடவுளின் பெயரால் மனிதர்களை சாதி, குல ரீதியாக பிளந்து வந்த  மேலாதிக்க ஆற்றல்களுக்கு வலிக்கும் விதத்தில்  மாப்பிளாக்கள்  முன்னெடுத்த போராட்டத்தின் வீச்சையும் வேகத்தையும்   வட இந்திய ஹிந்துத்வ  நாஜிக்கள் சுணங்காமல் புரிந்து கொண்டனர். மாப்பிளாக்களின் வெற்றிகரமான முயற்சி இந்நிலத்தின் மீது வெகுமக்கள் மீதுமான தங்களது பிடியை ஒழித்து விடும் என அஞ்சிய அவர்களால்  பொஆ 1925 இல் ஆர்.எஸ்.எஸ்  தொடங்கப்பட்டது. தங்களின் ஆவணங்களிலேயே பகிரங்கமாக அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரலாற்றுண்மை இது.

துரோகத்தையும்  ஏய்த்தலையும் மனிதப் பாகுபாட்டையும் தவிர தங்களுக்கென எந்த ஒரு நல்ல தொடர்ச்சியையும் வரலாற்றையும் பெற்றிராத ஹிந்துத்வ நாஜிசக் கும்பல் இந்நாட்டின் ஆள்வோராய் இருக்கும்  கெடுகாலமிது. இந்த வாய்ப்பு தங்களுக்கு திரும்பக் கிடைக்காது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறபடியால் உண்மையான வரலாறுகளையும், தடங்களையும் அழித்து வரும் ஊழியின்  நாட்களில்  இது போன்ற ஆவணப்படுத்துதல்களும் நினைவகங்களும் இன்னும் இன்னும் தேவையாகின்றன.

நினைவகத்தில் வேறு  இரண்டு ஆவணங்களை பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு ஆவணம்  சுவாரசியமானது. பொஆ 1829இல் திருவனந்தபுரத்தில்  கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய இந்து பெண்கள் மேலாடையும் சட்டையும் அணிவதற்கான சம்மதம் வழங்கும் ஆங்கிலத்திலுள்ள  ஆவணம். உலக குருவிற்கு வெளிச்சம் வெளியிலிருந்துதான் வரவேண்டியிருந்திருக்கிறது.

 மகாகவி மொயின்குட்டி வைத்தியர்

மொய்து  கிழிச்சேரியின் அருங்காட்சியகத்திற்குள் நுழையும்போது முதலில் கண்ணில் பட்டது மகாகவி மொயின் குட்டி வைத்தியருடைய மண்ணறைப்படம்தான். கறுப்பு வெள்ளையிலான அந்நிழற்படத்தை பெரிதாக்கி ஒட்டி வைத்துள்ளனர்.  அன்னாரின் கபுரு கொண்டோட்டியின் குப்பா பள்ளிவாசலில்தான் இருக்கிறது என்ற  செய்தியை சொன்னார் நினைவகப் பணியாளர். மொத்த பயணத்தின் நோக்கமும் அங்கேயே நிறைந்து விட்டது. மீதமுள்ள நாட்கள் மேல் மிச்சமானவைதான்.  தேடி வந்த பெரு நிதியல்லவா அது?




 
தனது நாற்பதாம் வயது வரையே வாழ்ந்தவர் மகாகவி மொய்ன் குட்டி வைத்தியர். ‘ அனவாக்கி ரூஹுல் அமீன் தன் மொழியா” https://www.youtube.com/watch?v=0YFRYA72-b8 என்பன உள்ளிட்ட  வருடங்களுக்குள் அடங்காத பாடல்களை யாத்து அளித்து மலர்தலுக்கும் முதிர்தலுக்குமான  இடை வழியில்  தன் உச்சத்தை அடைந்தவர்.

மகாகவியின் கொதிக்கும் படைப்பூக்கத்தினால் அவரின்  பால்ய, வாலிபக்கால  அட்டவணை தவணைகள் கலைக்கப்பட்டு  காலமானது ஒற்றை நீட்ட சட்டமாக்கி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  அவர் பெற்ற பயிற்சி, அவரளித்த படைப்புகள், அவரது வருடங்கள்  என்பவற்றை கணக்கிட்டு பார்க்கும்போது வாழ்வென்னும் கலசத்திலிருந்து ஒரு துளியைக்கூட தவற  விடாமல் தனது இலக்கை நோக்கி பொன் துல்லியத்தில் செலுத்தியுள்ளார். அந்த உச்சத்தில் இருந்தபடியே  விடையும் பெற்று விட்டார். அவரது புகழ் நீடித்து  நின்றிட வேண்டும் என்பதற்கான  வல்லோனின் ஏற்பாடு இது.

பொஆ1852 இல் கொண்டோட்டி ஓட்டுப்பாறக்குழி எனுமிடத்தில் ஆலுங்கல் கண்டியில் உண்ணி மம்மதுவிற்கும்  குஞ்ஞாமினா இணையருக்கும் பிறந்த மொயின் குட்டி வைத்தியர், ஊரிலுள்ள ஓதுபள்ளி(மக்தப்)யிலும் தர்ஸிலும்  மார்க்கக் கல்வியையும் அது தொடர்பான கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். வண்டூர் ஜுமுஆ பள்ளியில் அவரின் படிப்பு நிறைவடைந்தது. மருத்துவ குடும்பத்திலுள்ளவர் என்பதால் தன் தந்தையிடமிருந்தும் உள்ளூரின் மற்ற அறிஞர்களிடமிருந்தும் அரபி,உர்தூ, சமஸ்கிருதம், பாரசீகம், மலையாளம், ,கன்னடம், பியாரி, ஆங்கிலம்  முதலான மொழிகளைக்கற்றுள்ளார்.

உள்ளூர் கவியும் அறிஞருமான சுள்ளியன் பீரான் குட்டியிடமிருந்து தமிழைக் கற்ற மகாகவி மொயின் குட்டி வைத்தியர்,  தமிழில் உள்ள சமகால இஸ்லாமிய இலக்கியங்கள் தொடர்பான அறிமுகத்திற்கும் மேற்கொண்டு தமிழ் கற்பதற்குமாக காயல்பட்டினம் சென்றிருக்கிறார்.

பதினேழாம் நூற்றாண்டைச்சார்ந்த காயல்பட்டினத்தின் காசிம் புலவர் நபிப்புகழ் பாடும் திருப்புகழை இயற்றியவர்.

அருணகிரி நாதரின் திருப்புகழைப்போல இயற்ற யாராலும் முடியுமா? என அறை கூவல் விடுத்தார் திருவடிக்கவிராயர். அவர்  காசிம் புலவரின்  தமிழாசிரியருங்கூட.

ஆசிரியரின் அறைகூவலை ஏற்று திருப்புகழ் பாணியில் நபிப்புகழ் பாக்களை இயற்றினார் காசிம் புலவர்.

தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் தனக்கென சிறப்பிடத்தை பெற்ற இப்பாடலின் படிகளை பெற்றுச் சென்றுள்ளார் மொயின் குட்டி வைத்தியர்.

சமஸ்கிருதம். தமிழ். பாரசீகம்  முதலான செவ்வியல் மொழிப் பயிற்சியின் விளைவாக அம்மொழிகளிலுள்ள செவ்வியல் இலக்கியங்களுடன்  அவை சார்ந்த  மரபுகளையும் தொன்மங்களையும் கதைகளையும் கற்றுத்தேர்ந்துள்ளார் மகாகவி.

நிஜாமுத்தீன் மியா, அபூபக்ர் புலவர், ஹம்சா லெப்பை, அப்துல் மஜீது மஸ்தான், குணங்குடி மஸ்தான்,  தமிழ்ப்புலவர்கள், அறிஞர்களுடனான தொடர்பும் பயிற்சியும் விவாதமும், இந்துஸ்தானி, தமிழ், திராவிட  இசை மரபுகளின் அறிமுகமும் மகாகவிக்குள்ளிருந்த கவித்துவத்தை செறிவாக்கியுள்ளது. உள்ளூரின் தொல்குடி,கிறித்தவ இசை மரபுகளிலிருந்தும்  நிறைய பெற்றுக் கொண்டிருக்கிறார். தலயஞ்சேரி ஃபாத்திமாகுட்டி என்ற கவித்திறன் வாய்ந்த பெண்ணை மணந்திருந்த மகாகவிக்கு மூன்று குழந்தைகள் கிடைத்தும் அவர்களிலிருந்து நேரடி தலைமுறை எதுவும்  வாய்க்கவில்லை. ஹிஜிரி 13/09/1309 , பொஆ12/03/1892 இல் அன்னார் இறந்தார்.

 மகாகவியின் படைப்பு தொடக்கம்

தனது பதின்மூன்றாம் வயதில் சிறார்களுக்கான  ‘ எலிப்படா (எலிப்படை)’ பாட்டை இயற்றியதோடு படைப்புக்கணக்கு தொடங்கியிருக்கிறது. பதிநான்காம் வயதில் சலீகத் படா ( சலீகத் படை ) வை இயற்றுகிறார். பதினைந்தாம் வயதில் கராமத் மாலா ( கராமத் மாலை ) என்ற புகழ் மாலையை தனது புரவலரும் ஆன்மீகத் தலைவரும் வழிகாட்டியுமான ஷேகு இரண்டாம் இஸ்தியாக் ஷாவிற்காக இயற்றுகிறார்.

பதினெட்டாம் வயதில் ( பொஆ1870இல்) சலாசில் படா ( சலாசில் படை) பாட்டு. இப்பாடல்களுக்கான கருவை புகழ் பெற்ற அறிஞரும் கொண்டோட்டி தக்கியேக்கால் ஜுமுஆ மஸ்ஜிதின் காழியும் சூஃபியுமான  முஸ்லியாரகத் கோயாமுட்டி முஸ்லியார் கொடுக்க மகாகவி அவற்றை  பாடல்களாக்குகிறார்.

கோழிக்கோட்டின் சாமுத்திரி அரசனின் அவை விழாவில் பங்கெடுத்தபோது ஒரு மாது ஆடிய நடனத்தின் தாக்கத்தில் ‘ நர்த்தகியோடு ‘( நடனக்காரிக்கு) என்ற தலைப்பில் பாடல்களை இயற்றினார். இப்பாடல் மகாகவியின் சமஸ்கிருத புலமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஏராளமான கத்துப்பாட்டு( கடிதப்பாட்டு), கெஸ் பாட்டு, ஒப்பன பாட்டு, கோல்களி பாட்டு, கலியாண பாட்டு போன்றவற்றையும் இயற்றியுள்ளார். இவைகளில் பெரும்பாலானவை அச்சிலேறவில்லை. ஆனால் பழைய தலைமுறையினரின் தலைகளிலும் நாவுகளிலும் அவை  நின்று வாழ்கின்றன.

 மகாகவியின் செவ்வியல் படைப்புகள்:

பதுருல் முனீர் ஹுஸுனுல் ஜமால்

புகழ் பெற்ற பேரன்புக்காவியமான பதுருல் முனீர் ஹுஸுனுல் ஜமால் பாடலை தனது இருபதாம் வயதில்(பொஆ 1872) இயற்றுகிறார். இப்பாடல் எண்பத்தைந்து இசல்( தாளக்கட்டு போன்றதொரு இசை அளவீடு)களைக் கொண்டது. ஜின்,ஷைத்தான் தொன்மங்களுக்கு குறைவில்லாத காவியம்.

இந்தக்காதல் கதைக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. அறிஞர்களோ இதை  பல கோணங்களில் அணுகுகின்றனர். உடல் சார்ந்த காதல் எனச்சிலரும் , சூஃபி வழியிலானது என வேறு சிலரும் பார்க்கின்றனர். மனிதனின் இயல்பான எதிர் பால் விழைவையும் ,உடலின்ப தேவைகளையும் அளவு மீறாமல் மிக இயற்கையாக தனது இப்படைப்பில் மகாகவி கையாண்டுள்ளதை அவதானிக்க இயலும். இயல்புக்கும் விரசத்துக்குமான பிரிகோட்டை அறியாதவர்கள் கற்றுத்தேற வேண்டிய இலக்கியம் பதுருல் முனீர் ஹுஸுனுல் ஜமால்.   உர்தூ, பாரசீக இலக்கியங்களில் ஏற்கனவே பிரபலமாகியிருந்த பதுருல் முனீர் ஹுஸுனுல் ஜமால் காவியத்தை பாரசீக அறிஞர் நிஜாமுத்தீன் மியாவிடமிருந்து பெற்றுக் கொண்டார் மகாகவி மொயின்குட்டி வைத்தியர்.

பதுருல் முனீர் ஹுஸுனுல் ஜமால் காவியம் இயற்றி இவ்வருடத்துடன் நூற்றி ஐம்பது ஆண்டுகள் நிறைந்துவிட்டன. இதன் நிறைவு கொண்டாட்டங்களை  கேரள அரசின் சார்பில் வருடம் முழுக்க நடத்தப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

பதுருல் முனீர் ஹுஸுனுல் ஜமால் பாடலை 1990கள்  வரை கேரள எல்லையுடன் ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப்பகுதி  ஊர்களில் இஷாவிற்குப்பிறகு வீட்டிலுள்ள முதிய பெண்கள் இளம் பெண்களுக்கு போதித்து வந்திருக்கிறார்கள். தொழில் நுட்பத்தின் பெருக்கத்தில் இது போன்ற வீட்டு கற்பித்தல் முறைகள் காலத்தின் சுழிக்குள் அமிழ்ந்திறங்கி விட்டன.


பதுருல் முனீர் ஹுஸுனுல் ஜமால் காவியத்தின் முழு வடிவத்தை மலையாளத்தில் மாப்பிளா கலா அகாடமி வெளியிட்டுள்ளது. இதன் சுருக்கத்தை எம்.என்.காரச்சேரி மலையாளத்தில் ஆக்கியுள்ளார். இச்சுருக்க நூல் தோப்பில் முகம்மது மீரானின் தமிழாக்கத்தில்  64 பக்கங்கள் கொண்ட நூலாக ‘ ஹுஸ்னுல் ஜமால்’ என்ற பெயரில் சாகித்ய அகாதமி வெளியிட்டது.  தற்சமயம் இந்நூல் அச்சில் இல்லை. மறு அச்சிடும் எண்ணமும் இப்போதைக்கில்லை என விசாரித்தபோது சொன்னார்கள்.

 பத்ர் படப்பாட்டு

பொஆ1876இல் பத்ர் படைப்பாட்டை மகாகவி இயற்றும்போது மலபாரில் பிரிட்டிசாரின் மேலாதிக்கம் ஓங்கியிருந்த நேரம். மாப்பிளா போராளிகளுக்கும்  பிரிட்டிசாரின் ஆதரவைப்பெற்ற ஜென்மிகள் என்றழைக்கப்படும் ஆதிக்கசாதி நிலப்பிரபுகளுக்குமிடையே பகை முட்டி நின்ற  காலமும் கூட.

கூலிக்காரர்கள், கலாசிகள், சுமை தூக்குபவர்கள்,கால் நடைமேய்ப்பவர்கள் என மதம், சாதி எல்லைகளைக் கடந்து அனைவரின் உதடுகளாலும் பத்ர் படைப்பாட்டின் இசல்கள் இசைக்கப்பட்டிருக்கின்றது. கிஸ்ஸப்பாட்டு சங்கம்( கதைப்பாடல் குழு பாடிப்பறயல் ( பாடியுரைத்தல்) குழுக்களின் வழியாக மலபாரின் முக்கு மூலையெங்கும்  பத்ர் படைப்பாட்டு மக்கள்மயமாகியிருக்கிறது.

காலனியாதிக்கம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் ஏழை குடியானவர்களின் நலன்களை ஆதரிக்கும் விதமாகவும் மறைமுக செயல் ஊக்கியாக பத்ர் படைப்பாட்டு விளங்கியிருக்கிறது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உரிமைகளற்ற பிரிவினருக்கு உடனடி ஊக்கியாகவும் விளங்கியதுடன் போராளிகளின் மனங்களை வலிமைப்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் பத்ர் படைப்பாட்டு அனைவரினதும் துயராற்றுநர்.

நூற்றியாறு இசல்களையும் நூற்றி நாற்பது பக்கங்களையும் கொண்ட பத்ர் படைப்பாட்டானது  மாப்பிளாக்களிடையே முஹ்யித்தீன்  மாலைக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற பாடல் எனலாம். கடந்த நூற்றி நாற்பது ஆண்டுகளாக இப்பாடலின் கணக்கற்ற படிகள் அச்சடிக்கப்பட்டு பெருகிக் கொண்டேயிருக்கின்றன.

 உஹது படப்பாட்டு(1879)

தனது இருபத்தேழாவது வயதில்  மகாகவி இயற்றிய  உஹதுபடைப்பாட்டு 118 இசல்களைக் கொண்டதாகும். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கெதிரான  மாப்பிளாமாரின் தனியாள் போராட்டங்களின் போதாமை, வலுவின்மை, தொடர்ச்சியான நிலையான தோல்விகளை களையும் விதமாகவும் திட்டமிடல், ஒருங்கிணைக்கப்படல்,ஒழுங்கு,தலைமை போன்ற தேவையான பண்புகளை விதைக்கும் விதத்திலும் உஹது படைப்பாட்டுகள் அமைந்திருக்கின்றன.

 மலப்புரம் படப்பாட்டு (1883)

பொஆ1728 இல் நடைபெற்ற உள்ளுர் தலைவர் பாற நம்பி என்பவருடன் மாப்பிளாக்களுக்கு ஏற்பட்ட மோதலை  விவரிக்கும் பாடல். இப்போராட்டத்தில் இரத்த சாட்சியமானவர்களின் குடும்பங்களிடம்  நேரடியாக சென்று மகாகவி மாதக்கணக்கில் கள ஆய்வு செய்த பின்னர் எழுதப்பட்ட பாடல் தொகுப்பு.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 1921 மாப்பிளா எழுச்சியிலும் மலப்புரம் படப்பாட்டு மிகத் தலையாய பங்கு வகித்திருக்கிறது. பூக்கோட்டூர்  ஈகியரின் ( இரத்த சாட்சிகள்) மடிகளிலிருந்து பிரிட்டிஷார் இப்பாடலின் படிகளைக் கண்டெடுத்திருக்கின்றனர்.

நிலைமையின் தீவிரத்தினை  புரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசு  ‘பாடிப்பறயல் ‘ (பாடிக்கூறுதல் அல்லது இசை சொற்பொழிவு) என்ற பொது நிகழ்ச்சியை  தடை செய்தனர். இந்த பொது நிகழ்ச்சிகளின் வழியாகத்தான் மலப்புரம் படப்பாட்டும் அதன் விளக்கமும்  பொது மக்களிடம் போய் சேர்ந்தன. முஸ்லிமல்லாத பிற சமய மக்களின் நடுவிலும்  மகாகவி மொயின் குட்டி வைத்தியரின் பாடல்கள்  புழங்கின.

 ஹிஜ்ரா காவியம்

நபி முஹம்மது (சல்) அவர்களின் ஹிஜ்ரா பயணத்தை பாடும் இக்காவியம் 26 இசல்களைக் கொண்டது. இக்காவியத்தை எழுதி முடிக்கும் முன்னர்  மகாகவி வைத்தியர் இறையேகி விட்டார். ஹிஜ்ரா காவியத்தின்  மீதமுள்ள வரிகளை மகாகவியின் வாப்பா உண்ணி மம்மது வைத்தியர் நிறைவு செய்தார்.
----------------------
மாப்பிளா கலா அகாடமி என்றழைக்கப்படும்  மொயின் குட்டி வைத்தியரின் நினைவகத்தில் மகாகவியின் வரலாற்றிற்கும் இந்த காவியங்களுக்கும் சேர்த்து  ஒலி ஒளி வடிவ கேட்புகளுக்கு  ஏற்பாடு செய்தால் நலம். மகாகவியின் வாழ்க்கை வரலாறு நூல் மலையாளத்தில் மட்டுமே உள்ளது. அயல் நில பார்வையாளர்களுக்காகவாவது  ஆங்கிலத்திலும்   வெளியிடப்பட  வேண்டும். எதிர்ப்பின் காலமிது. எதிர்ப்பிலக்கியத்தின் நாயகர்களை இப்படித்தான்  எல்லைகளை தகர்த்து கடத்தவியலும்.

மாப்பிளா கலா அகாடமி(எ) மொயின்குட்டி வைத்தியர் நினைவகத்தில் மகாகவியின் பெரும்பாலான படைப்புக்களை அச்சு, எண்ணியல் வடிவங்களில் கொண்டு வந்திருக்கின்றனர். அவை விலைக்கு கிடைக்கின்றன. மீதமுள்ள படைப்புக்களை கொண்டுவருவதற்கு முன்னர் அவற்றின் மீதான உரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்  என சொன்னார்கள்.

சிறார்களுக்கு மாப்பிளா பாட்டுடன் மாப்பிளா நிகழ்த்துகலைகளையும் சேர்த்து மூன்று வருடம் பயிற்றுவிக்கின்றனர். பெரியவர்களுக்கு மாப்பிளா பாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கான ஒரு வருடத்திற்கான பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சியின் நிறைவில் தேர்வும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மிகக் குறைந்த கட்டணமே பயிற்சிக்காக வாங்கப்படுகிறது.

திறன் வாய்ந்த மாப்பிளா கலைஞர்களை அடையாளங்கண்டு விருதிற்கு பரிந்துரைத்தல், அகவை முதிர்ந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம், நோய் பரிகார தொகை பெற்றுக் கொடுத்தல் என்பன போன்ற பணிகளையும் இ ந்நிறுவனம் செய்து வருகிறது. 

கேரள அரசினால் 1999 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்நிறுவனம்  பாணக்காடு பூக்கோயா தங்ஙள், பாணக்காடு ஷிஹாபு தங்ஙள், வைக்கம் முஹம்மது பஷீர், சி.எச். முஹம்மது கோயா, கோரம்பயில் அஹம்மது ஹாஜி, வி.எம்.குட்டி மாஸ்றர், எம்.என்.காரச்சேரி,என்.பி.முஹம்மது உள்ளிட்ட பல ஆளுமைகள், எழுத்தாளர்கள்,பண்பாட்டு,அரசியல் செயலாளிகளின் தொடர் அழுத்தத்தின் கனி எனலாம்.  

நினைவகப் பணியாளர் மலர்ந்த முகம் சுபைருல் அமீனுக்கு  நன்றி சொல்லிக் கொண்டு மகாகவி மொயின்குட்டி வைத்தியர் இறுதி  ஓய்வு கொள்ளும் கொண்டோட்டி குப்பா பள்ளிவாயிலுக்கு சென்றோம். புது மாப்பிள்ளையின் கிறக்கத்திலிருப்பவரிடம் என்ன பேசிட இயலும்? வாழ்க்கைக்கான தளவாடத்தை இசையின் வழியாக சமூகத்திற்கு கைமாற்றியவர். துளியிலிருந்து பெருகிக் கொண்டேயிருக்கும் கடல். இயலாமை கொந்தளிக்க கம்பித் தடுப்பை பிடித்தவாறே நின்றிருந்தேன்.  

                                       


அருஞ்சொல் விளக்கம்

அசர் – ஒரு நாளின் மூன்றாவது வேளைத் தொழுகையான மாலைத் தொழுகை

ஹதீது – நபிகளாரின் மொழிகள்

குடாக்கு – ஹூக்கா என்றழைக்கப்படும் உக்கா. நீர் வழி புகை பிடிக்கும் கருவியின் இன்னொரு பெயர்

ஒளு  - தொழுகைக்கான உறுப்பு தூய்மை செய்தல்

இரக்அத் – தொழுகையின் அலகு

 

தொடர்புடைய பதிவுகள்:

தோனயாத்ர -- 1, பொன்னானி

 

 

 

 

 


 

2 comments:

  1. السلام عليكم ورحمة الله وبركاته
    காக்கா அருமையான பதிவு, இதை வாசிக்கும் போது
    உங்களுடன் பயணம் செய்த உணர்வு ஏற்படுகிறது.
    பல அரிய தகவல்களை திரட்டி தந்துள்ளீர்கள்.
    جزاکم الله خیرا
    إن شاء الله
    நாளைக்கே கொண்டோட்டிக்கு போக முடிவெடுத்துள்ளேன்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    கட்டுரை மிக அருமை இதை வாசிக்கும் போது மொய்தீன் குட்டி வைத்தியர் சுமாரகதில் இருந்து சில வருடம்களுக்கு முன்பு நம்மூறிட்கு ஆய்விற்கு வந்த இக்பால் கோபிலான், முணீர் ஆகியோரின் நினைவே வருகிறது இக்பால் கோபிலான் அவர்கள் மொய்தீன் குட்டி வைத்தியர் அவர்கள் காயல்பட்டினத்தில் உள்ள பல புலவர்களின் பாடலையே மலையாளத்தில் மொழி பெயர்ததாக சொன்னார்கள் குறிப்பாக காசிம் புலவர் நாயகம், மற்றும் ஆலிபுலவர் மற்றும் சில புலவர்களுடையதை எடுதிருக்கலாம் என்றே சொன்னார்கள். கோபிலான் அவர்கள் இருந்த காலத்தில் என்னை சிலமுறை குண்டோட்டிக்கு அழைத்தும் எனக்கு போய் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் அல்லாஹ் நமக்கு அங்கு செல்லும் வாய்ப்பை தறுவானாக ஆமீன்.

    இவன்
    பிரபு n s சுல்தான் ஜாமலுத்தீன்

    ReplyDelete