Saturday, 28 May 2022

தோந்நிய யாத்ரா -- 1,பொன்னானி -- பொன் நிகர் விரி நீர் -- நில வேர்கள்


திட்டமிடப்படாத, தோன்றிய பொழுதிலான பயணமொன்றை மேற்கொள்ள வேண்டும் என பெருந்தொற்று முடக்கு காலத்திலிருந்தே தோன்றிக் கொண்டிருந்தது.

இவ்வருட புனித ரமளான் மாத விடைபெறலின்பிரிவுத்துயரானது ஒரு பிய்ந்து போதலை கோரவும். வெளிக்கிளம்புவதற்கான நெருக்கடியானது  பின் வரும் நிழலாக வந்து சேர்ந்தது. கடல் அகழியில் ஓயாது  சரியும் மணல் போல மனத்திற்குள் வெற்றிடம் குழிந்து கொண்டே இருந்தாலும் இறக்கைகள் எஞ்சும் வரை பறக்க வேண்டியதுதான்.

2022 மே ஐந்தாம் தேதியன்று புறப்படுவதற்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது கோழிக்கோட்டிலிருந்து ஆய்வு மாணவர்கள், ஒளிப்பட ஆவணப்படுத்தலுக்காக ஊர் வருவதாக சொல்லவும் பயணத்தை இரண்டொரு நாட்கள் தள்ளி வைக்க வேண்டி வந்தது.

ஆய்வு மாணவர்களான பாசில் இஸ்லாம்,, ஹன்னான், தவுஃபீக் ஆகியோர் வந்து சேர்ந்தார்கள். சுதந்திரமாக செயல்படும் இவர்கள்  QAWM.IN என்ற இணைய தளத்தை நிறுவி முஸ்லிம் சமூகத்தின் சமூக பண்பாட்டு அசைவுகளை ஒளி, சலனப்படங்களின் வழியாக  ஆவணப்படுத்தி வருகின்றனர். பெரிய பொருள் பின்புலம்  எதுவும் இல்லாமல் தங்கள் செலவுக்காசிலிருந்து இந்த பணியை மேற் கொண்டு  வருகின்றனர். அரசும் தன்னார்வ நிறுவனங்களும் செய்ய வேண்டிய வேலையை இந்த சிறு அணில்கள் தம் முதுகில் சுமக்கின்றன. ஊரில் மூன்று நாட்கள் தங்கி படங்களாக்கிக் கொண்டே இருந்தனர்.

ஏழாம் தேதி  சனிக்கிழமை பின்னேரம்  திருநெல்வேலியிருந்து புறப்படும்  பெங்களூரு சிறப்பு தொடர் வண்டியில் ஆய்வு மாணவர்களுடன்  சுல்தான் பாகவியும் நாலெட்ஜ் சிட்டி மாணவர் ஹாரிசும்  இணைந்து கொள்ள  பயணம்  தொடங்கியது. பயணச்சீட்டு பதிவு செய்த பிறகும் ‘ இந்த பயணம் போவனுமா? ‘ என்ற பிரகன்டத்தில்  மனம்  தளும்பிக் கொண்டேயிருந்தது. அவ்வப்போது வந்தொழியும் சூனியச்சுழலை  இரக்கம் நீக்கி  காலால் சவட்டிப்பிடிக்கவும்  ஒரு வழியாக  அது தாழ்ந்து அமுங்கியது.

 இந்த பயணத்தை  முழுவதுமாக திட்டமிடப்படப்படாத ஒன்று  என சொல்லவியாது. அப்படியான ஒரு பயணமொன்றிற்கு இன்னும் உடலும் மனதும் அணியமாகவில்லை.. இப்பயணத்தை அரைத் திட்டமிடப்படாத  பயணம் என வேண்டுமானால்  வரையறுக்கலாம், காணுமிடங்களாக  கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களின்  சில பகுதிகளை நினைத்திருந்தேன்.  நாட்களையும் அட்டவணையையும் திட்டமிடவில்லை. இயல்பாக வந்து சேர்ந்து கொண்டாலே தவிர  பொன்னானி நீங்கலாக  மற்ற இடங்களுக்கு யாரையும் கூட்டு சேர்க்க வேண்டாம் என தீர்மானம். பயணக்கூட்டாளிகளால் பல போது நன்மைகள் நடந்தாலும் சில போது அவர்களின் அட்டவணைக்கேற்ப நாம்  வளைய வேண்டி வருகிறது. ஆறுதலாக எதையும் பார்க்க முடியாமல் ஒரு பறவையின் கண்களின் வழியாக மட்டுமே எல்லாவற்றையும் உள் வாங்க வேண்டி வரும் நெருக்கடி. வேர்களைப்போல் ஆழ இறங்காத பயணம் என்பது வெறும் கடந்து போதல் மட்டுமே

“ தம்பி! மூணு நாள் பேச்சுக்கு தங்க இடம் மட்டும் தந்தால் போதும்,. சாப்பாடுலாம் வெளில பாத்துக்குர்றேன்.” என்ற கோரிக்கையுடன் கோழிக்கோட்டில்  தங்குவதற்கு ஊர் தம்பி ஒருவரின்  இடத்தைக் கோரியிருந்தேன். உற்சாகமாக  ‘ வாங்க காக்கா’ என்றான். அலைபவர்கள் தாங்கள் தங்க வேண்டி வரும் வெளியிடங்களில் யாருக்கும் பாரமாகாமல் இலை மேல் துளியாக  இருக்கப் பழகி விட்டாலே பயணங்களின் பாதி பகுதி இறகாகி விடும்.

முக்கால் மணி நேரம் தாமதமாக தொடர் வண்டி திருச்சூர் வந்தடைந்தது. என்னுடன் பாசில் இஸ்லாமும் ஹாசிரும் பொன்னானி கிளம்ப மற்றவர்கள் கோழிக்கோட்டை நோக்கிப் புறப்பட்டனர். எடப்பாள் வழியாக  பொன்னானி வந்து சேரவும் காலை எட்டே முக்கால்  மணியாகி  விட்டது.

பொன்னானிக்கு நான் வருவது இது இரண்டாம் முறை. முதல் தடவை வந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு என நினைவு. தொடங்கிய அடுத்த அடிகளில் கலைந்து போன ஓர் ஆவணப்பட முயற்சிக்காக  ஆர்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட நண்பர்கள் குழாமுடன் வந்திருந்தேன். அந்நேரம் தரிபட்டது என்னவோ சில மணி நேரங்கள்தான். காலத்தை இழுத்துக் கொண்டு ஓடும்  பாரதப்புழையின் பொன் தீரத்தின்  அந்தியில் மதியிறங்கி நின்றதில்  எஞ்சிய  போதாமை வலு விசையாக உருக் கொண்டு  பொன்னானிக்கே  மீளவும் கொண்டு வந்து சேர்த்து விட்டது.

நவீன கால மனிதன் ஊர்களையும் கிராமங்களையும் உருக்கி நகரங்களாக உருட்டித் திரட்டுகிறான். ஆறுகள் உள்ளிட்ட  நீர்நிலைகளைக் கொல்லவும் கற்றுக் கொண்டான். ஒரே ஒரு விடயத்தில் மட்டும் அவன் வெற்றி பெற இயலவில்லை. கிராமங்களை ஊர்களைப்போல  ஆறுகளை உருமாற்றும் கலையை  இன்னும் கற்கவில்லை. ஒரு வாழ்விடத்தில் நாம் காப்பாற்றி வைத்த தொல் எச்சங்களைத் தவிர நூறு சதவிகித  பழைமையாக எஞ்சுவதென்பது அங்குள்ள  ஆறும் கடலும் மட்டுமே. பொன்னானி நகரத்தின் ஆறுதல் என்பது தொல் வரலாற்று  எச்சங்களுடன் பொன்னானி ஆற்றையும் மெருகு குலையாமல் அவர்கள் வைத்துள்ளதுதான். கேரளத்தின் இரண்டாம் பெரிய நதியான பாரதப்புழை  அல்லது பொன்னானியாறு தொடங்குவது  தமிழ்நாட்டின் ஆனைமலைப்பகுதியாகும். பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் பல சிற்றாறுகள் அதனுடன் இணைந்து பெரிய ஆறாக உருவெடுக்கிறது.. நீல ஆறு,  நிளா ஆறு என்றும் ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பாரதப்புழை அரபிக்கடலை அடையும் போது  பொன்னானி  ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. சேர மன்னர்கள் காலத்தில் பொன்வானி(பொன்+ வானி) என்ற பெயரில் அறியப்பட்டது.. பின்னர் மருவி பொன்னானி ஆனது எனவும் கூற்றுள்ளது.  வானி என்றால்  தமிழில் ஆறு எனப்பொருள்படும்.

காயலும்  பொழி முகமும் ( மலையாளத்தில் அழிமுகம் என்கின்றனர்) அரபிக்கடலும்  பொன்னானியை பொன்னார் மேனியாக்குகின்றன. அரபு வணிகர்கள் தாங்கள் கொள்முதல் செய்த சரக்குகளுக்கு பொன் நாணயங்களை கொடுத்ததினால் அதுவே மருவி ‘பொன்னானி’ எனப் பெயராயிற்று என ஒரு கூற்றுண்டு.. அரபியில் பொன்னானியை ஃபன்னான் என அழைக்கின்றனர்.  ஃபன்னான் என்றால்  கைவினைஞர் எனப்பொருள். அதுவே மருவி பொன்னானி ஆகியிருக்கலாம் எனவும்  ஒரு சொல்லுண்டு.

 பொன்னானியின் அழகை  பார்ப்பதற்கென ஒரு நேரமுண்டு.  அதன் தெற்கு திசையிலுள்ள காயல் பக்கம் நின்று கொண்டு அந்தி கதிரிறங்கும் வேளையில்  பாரதப்புழையைக் காண வேண்டும்.  இப்பிரபஞ்சத்தின் தூலப்பொருட்கள்  ஒன்று மற்றதின் சாட்சியாவதின்  நேரலை நிகழ்வு. போர், அறிவு, வணிகம், கல்வி, அதிகாரம், பொன் இரத்தினம், மிளகு, சிலுவை, இரத்தம், இவை எல்லாம்  என் மார்பின் மீது நிகழ்த்தப்பட்டு இதோ என் மடித்தட்டின் கலனில் காலத்தால் கரைந்து விடாமல் சேகரமாக  இருக்கின்றன என தன் நினைவின் திரவியங்களை அரபிக்கடல் சேருமிடத்தில்  பாரதப்புழை திறந்து காட்டும்   நற் பொழுது.   

 


பொன்னானிவாசியான  ஹூதைஃபா ரஹ்மானின் இல்லத்திற்கு சென்றோம். பாசில் இஸ்லாம் மூலமாக ஆள் அறிமுகம். பொன்னானியின் முஸ்லியாரகத்து, மக்தூமி  போன்ற  பெயர் பெற்ற  குடும்பங்கள் வரிசையில்,  கோடாம்பியகம் என்ற குடும்ப வழியில் வந்தவர். பழைய சோவியத் சிறார் இலக்கியங்களில் வரும்  வாசிக்கும் பழைய யானையின்  சாயலில்  கறுப்பு சட்டகமிட்ட கண்ணாடியணிந்திருந்தார். “ இடது பக்சத்தின்ட ஒரு மணம்”  என நாசி சொல்லியது.

 தற்காப்புக் கலை ஆசான், வைத்தியர், சூஃபி, பள்ளி ஆசிரியர், கிறங்கு உலகம்  என பல முகங்களில்  வாழ்ந்து மறைந்த  பொன்னானியின் கே.வி. அபூபக்ர் மாஸ்றரைப்பற்றிய  முனைவர் பட்ட  ஆய்வொன்றை செய்திருக்கிறார் ஹீதைஃபா. கூர்த்த பார்வையும் விமர்சனமும் எள்ளலும் ஒருங்கே கொண்டவர். ஆள் இடதும் வலதுமில்லை. சுதந்திர எழுத்தாளராக பணியாற்றுகிறார்.

ஹூதைஃபாவின் வீட்டில் தாடியுடன் கூடிய மூத்தவரின் ஓவியமொன்று இருந்தது. ஹுதைஃபாவின்  மறைந்த வாப்பா கோடாம்பி  ரஹ்மான் அவர்களின் படமது.  தேடி நடந்த ஓர் ஆளுமை.  அவர் எழுதிய  பல நூற்களுடன் வைக்கம் முகம்மது பஷீருடனான தனது நேரடித் தொடர்புகள்  குறித்து மலையாளத்தில் எழுதிய ‘ விசுவ விக்யாதனாய பஷீர்’ ( உலகப்புகழ் பெற்ற பஷீர் ) என்ற நூல்  ஹுதைஃபாவின் வாப்பாவிற்கு  புகழைத் தேடி தந்தது. வாப்பாவிடம் கற்றிருக்கின்றபடியால் தன்னால் தமிழில் வாசிக்கவியலும் என ஹூதைஃபா சொன்னார். அவரின் நூலகத்தில் தி.ஜானகி ராமன், சுந்தரம் இராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரின் நூல்களும்  உள்ளன.

ஹீதைஃபாவின் நண்பர்கள்  பைக்குகளுடன் வந்து சேர பொன்னானி உலா தொடங்கியது. புகை மண்டிய  ஓலைக்குடில் உணவகமொன்றில் ஆக்கிய மாட்டிறைச்சி, ஈரல், முட்டை மசாலா, ரொட்டி, புட்டு, சிறுகடி, சாயா என இஸ்த்தல் நடந்தேறிய பிறகு  சாலையோரம் உள்ள ஏமனி பெரியார் சய்யிது அலீ இப்னு அப்துர்ரஹ்மான் ஹத்தாது (ரஹ்)அவர்களின்  நினைவிடத்திற்கு சென்றோம். இங்கு மண் மறைந்திருக்கும் ஏமனி பெரியவரின் வரலாறு அவ்வளவாக துலக்கமில்லை. ஆனால் மக்கள் தவறாமல்  ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றார்கள்.   


வலிய ஜாரம் (ஜியாரத்) என்றழைக்கப்படுகின்ற பண்டைய ஏமனிதலைமுறை குடும்பத்தினரின் சிறிய கொட்டாரத்திற்கும் அந்த வளாகத்திற்குள் அமைந்துள்ள ஏமனி மகான்களின் ஜியாரங்களுக்கும் சென்றோம். காயல்பட்டினம் என்றறிந்தவுடன் வலிய ஜாரத்தின் பொறுப்பாளர்,  “ கலந்தர் மஸ்தான் சாகிப  தெரியுமே. வரும்போதெல்லாம் பெரிய டப்பா நெறய சீனி மாவு கொண்டு வருவாரே” எனக் கண் விரித்தார், என் கூட இருந்தவர்களைப்பார்த்து “ கேட்டோ அது அடி பொழி சாதனமானு” என வியப்பு மங்காமலிருந்தார்.

ஜியாரத்தைப்பற்றி கொஞ்சந்தான்  சொன்னார். உள்ளூரில் அவர்களுக்கிடையே நடக்கும்  பெயர்களுக்கிடையேயான  போட்டி பற்ரி நெடுங்கதையை தொடங்கி விட்டிருந்தார். தொங்கல் காணாமல் போய்க் கொண்டேயிருந்தது. ஒரு சொல்லும் தலைக்குள் ஏறவில்லை.. ஒரு வகையில் இடம் மிச்சம். பிராண்ட் சச்சரவுகளின் பரிதிக்கும் நமக்கும் ரொம்ப தொலைவு

அறியப்படுகின்ற அறியப்படாத அரபு ஆஃப்ரிக்கா உள்ளிட்ட  பரப்புரையாளர்களால்  நிறைந்திருக்கும்  பொன்னானி  நகரத்தின் வயது எப்படியும்  அய்ந்நூறு வருடங்களுக்கும் சற்றே  கூடுதல்  எனக் கணிக்கப்பட்டாலும் நகரமல்லாத பொன்னானியின் வயது இரண்டாயிரமாண்டுகளைத் தாண்டும். Periplus of the Erythraean Sea ( எரித்ரியன் கடலைச்சுற்றிய கடற் பயணம்) என்ற ஆவணம் குறிப்பிடும்  திண்டீஸ் (திண்டி) துறைமுகம்  பொன்னானி என்று கருதப்படுகிறது..

சமகாலப்  பொன்னானியானது பழைய பொன்னானி புதிய பொன்னானி என இரண்டாகிப்  பெருகியுள்ளது. பொன்னானி நகரத்திற்கு நகராட்சி அந்தஸ்தும் உள்ளது. கடல் வணிகத்தின் வீழ்ச்சியோடு பழைய பொன்னானி நகரத்திலிருந்து புதிய பொன்னானிக்கும்  புதிய வாய்ப்புகளுள்ள சுற்று வட்டாரங்களுக்கும் கொஞ்சங்கொஞ்சமாக  மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இஸ்லாம்  இந்தியாவின் மேற்கு கடற்கரையை வந்தடைந்த அடுத்த காலகட்டத்திலேயே பொன்னானிக்கும் வந்தடைந்து விட்டது. ரிஹ்லத்துல் முலூக் நூல் இடும் தொடக்க கால காழிமார்களின் பட்டியலில் பொன்னானி,புதுப்பொன்னானி பகுதிகளின் காழியாக அப்துல் மஜீத் இப்னு மாலிக் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

விரிவடைந்த பொன்னானி நகரில் தொண்ணூறு பள்ளிகளிக்கு மேல் உள்ளன. பறங்கியர்களுடன் போரிடுவதற்காக அன்றைய  எகிப்து(மிஸ்ர்) சுல்தான்(அன்றைய முஸ்லிம்களின் கலீஃபா) அனுப்பிய போர் வீரர்கள் தங்கியிருந்த பள்ளி மிஸ்ரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் போன சமயம் கேரள அரசின் முசிறி  மரபு வழி திட்டத்தின் கீழ் அந்த பள்ளியின் பழைமையை பாதுகாக்க நிதி ஒதுக்கப்பட்டு சீரமைத்துக் கொண்டிருந்தார்கள். வடக்கே பள்ளிவாயில்களை கோயில்களாக மாற்றிக் கொண்டிருக்க தமிழ் நாட்டை  ஆண்ட ஆளுகின்ற  திராவிட கட்சிகளுக்கு பள்ளிவாயில் என ஒரு திடப்பொருள் இருப்பதே எப்போதும் நினைவிற்கு வருவதில்லை. இவ்வகையில் கேரள அரசின் முயற்சி பாராட்டத்தக்கது.

பொன்னானியின் பெரிய ஜுமுஆ பள்ளிவாசலான வலிய ஜுமுஅத்து பள்ளிவாசலை  பதினைந்தாம் நூற்றாண்டில் நிறுவியவர்கள் முதலாம் ஜைனுத்தீன் மக்தூம்  என்றழைக்கப்படும்  ஷேஹ் ஜைனுத்தீன் அல் மக்தூம் இப்னு அலீ  மஃபரி அவர்கள். இந்த  காலகட்டத்தில்  பொன்னானி முறையான நகரமாக உருவெடுத்திருக்கலாம். அதற்கு முன்னர் வரை  துறைமுக  இறங்குதளமாக இருந்திருக்கலாம்.

 மௌன வெய்யில் சொரியும் காலை. கேரளத்தின் பருவ மழை தொடங்குவதற்கு முன்னரான பிழிச்சலின் காலகட்டம். பசுஞ் சூழலிலிருந்து எழும்  நீராவி காற்றில்  நிறைந்திருப்பதால் எத்தனை தடவை குளித்தாலும் தீராத வியர்வை,  உடலின் உப்பை விரும்பிக் குடிக்கும் வெய்யிலில் அலைந்து தளர வேண்டாம் என்பதால் கடற்கரைக்கு செல்வதென தீர்மானித்தோம்.  பொன்னானி கடற்கரையின் நீளம்  கிட்டத்தட்ட எட்டு பத்து கிலோ மீற்றர்கள் இருக்கும். பொழிமுகம் வரை நீளும் இதன் நிலத்து மருங்கில் முழுக்க முஸ்லிம் மீனவர்களின் வசிப்பிடங்கள். ஒழுங்குடனும் சீராகவும் அமைக்கப்பெற்றவை.பொதுவாக மீனவர் குடியிருப்புக்களில் காணப்படும் நிலைமை அங்கில்லை

முற்பகலின் கடல் என்பது ஒரு கொடும் நினைவு. நீருக்குள் கதிரோன் சொட்டிக் கொண்டிருக்க  கடற்கரையின் இரண்டு வெவ்வேறு  இடங்களில் அமர்ந்து உரையாடினோம்.ஹூதைஃபா சொற் பிறப்பியல் (எடிமாலஜி) ஆர்வலரும் கூட. பேசிப் பேசி பொழிமுகம் அமைந்திருக்கும் படிஞ்ஞாரக்கரா( மேற்குக்கரை) வந்து சேர்ந்தோம். முசிறிக்குப்பிறகு கேரளத்தில் அடுத்த தலையாய துறைமுகத்தலம் பொன்னானிதான். கோழிக்கோட்டின் சாமுத்திரி அரசர்கள் பொன்னானியை தங்களின் இரண்டாம் தலை நகராக ஆக்கிக் கொண்டனர். அவர்களின் கடற்படைத்தளபதிகளான குஞ்ஞாலி மரைக்காயர்கள் பொன்னானியைச் சேர்ந்தவர்கள். குஞ்ஞாலி மரைக்காயர்களின் முன்னோர்கள் தமிழ்நாட்டின் நாகூர் உட்பட  சில கடற்கரையோரப்பகுதிகளிலிருந்து கேரளத்திற்கு அரிசி வணிக நிமித்தம் குடியேறியவர்கள். வணிகத்திலும் கடல் ஓட்டத்திலும் வல்லவர்கள். இவர்களின் இந்த கடல் நிபுணத்துவம்தான் போர்த்துக்கீசிய பரங்கிகளை பல நூற்றாண்டுகள் தூங்க விடாமல் செய்திருக்கிறது.

பொழிமுகக் கரையில்  கடலரிப்பு தடுப்பிற்காக பாறைகள் கொட்டப்பட்டிருக்கின்றன. தோணிகளில் மணல் அள்ளிக் கொண்டிருக்க கொஞ்சம் பேர் மீன் வலை வீசினர். கடல் நீர் நதிக்குள் முனைப்புடனிருந்தது. வெய்யிலின் பாய்ச்சல் தணியவே  வலிய ஜுமுஅத்து பள்ளிக்கு சென்றோம்..

பொன்னானி நகரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளிவாயில்கள் இருந்தாலும் இந்த பள்ளிவாயில்தான் நகரத்தின்  மைய சுழற்சி விசை. இப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு நிறைய ஆன்மீக, ஒழுக்க, சமூக,பண்பாட்டு பணிகளை உருவாக்கி வழி நடத்தியுள்ளனர் முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்கள். பொன்னானி பயணத்தின் தலையாய நோக்கங்களில் ஒன்று  முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்களைப்பற்றி எனது பக்கங்களில் காலாகால நினவுகளுக்காக  கொஞ்சம் விரிவாக பதிவிட வேண்டும்  என்பது அழுத்தமான நிய்யத்.

வலிய ஜுமுஅத்து பள்ளியின் நடுவே பித்தளையிலான எண்ணெய்  திரி விளக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திற்கு விளக்கத்திரிக்கல் ( விளக்கினருகில் இருத்தல்) எனப் பெயர். மத்ரசா என்ற நிறுவனமோ சனது உள்ளிட்ட பட்டங்களோ உருவாகியிராத காலமது. முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்கள் தலைமையில் பள்ளி தர்சு எனப்படும்  கற்பித்தல் முறையில் பல்வேறு தலைப்புக்களில் பாடங்கள் நடத்தப்பெறும். இறுதி நிலையில் உள்ள மாணவர்களுக்கு  இந்த விளக்கினருகில் அமர வைத்து பாடங்கேட்கப்படும். இந்நிகழ்வே அம்மாணவர்களின் கல்வி நிறைவாகக் கொள்ளப்பட்டு,  ஆலிம்,  மௌலவிகள் எனப்பொரு:ள்படும் ‘முஸ்லஹியார்( சீர்திருத்துபவர்)’ என்ற பெயரில் அழைக்கப்படுவர்.  அதுவே பின்னர் மருவி முஸ்லியார் ஆகியது.


இன்றளவும் மஃரிபு வேளையில் இந்த விளக்கத்திரிக்கலில் விளக்கேற்றப்படுகிறது. இந்த ஆன்மீகப்பாசறையில் எண்ணற்ற அறிஞர்கள், நாதாக்கள், இரத்த சாட்சிகள் உருவாகியுள்ளனர். அத்தகைய ஷுஹதாக்களில் ஒருவர்தான் பொன்னானியைச்சேர்ந்த  மீன் விற்ற சிறுவனொருவர்.

பொன்னானியின் தெருக்களில் மீன் விற்று வரும் முஸ்லிம் சிறுவனொருவனை முதலாம் ஜைனுத்தீன் மக்தூம்  அவர்கள்  பார்க்கிறார். அவனின் தோற்ற வடிவின் வழியாக  அவர்களின் அகத்துக்குள்   நுழைந்தேறிய சலனங்கள் காட்சியாக விரிகின்றன.அழைத்து விசாரிக்கப்படுகிறான். தந்தையை இழந்த அச் சிறுபையன் பிழைப்பிற்காக மீன் விற்றேயாக வேண்டிய அவலம் விளங்க வருகிறது. மாதாமாதம் அவனது குடும்பத்திற்கு வேண்டிய  தொகையை தான் தந்து விடுவதாகவும் அவன் மீன் விற்பனையை  நிறுத்தி விட்டு தன்னிடம் கல்வி பயிலலாம் எனவும் ஆலோசனை வழங்குகிறார் முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்கள். செயல்கள் அவ்வண்ணமே நடந்தேறுகின்றன.

அவன் மணப்பந்தலில் கைபிடித்து வாழ்க்கை ஒப்பந்தம் பகர்ந்து கொண்டிருக்கும்போது  போர்த்துக்கீசியர் ஒரு முஸ்லிம் இளைஞியை கப்பலுக்குள் கொண்டு சென்று விட்டனர் என்ற தகவல் எட்டுகிறது.

அப்பெண்ணை மீட்பவருக்கு சுவனம் கிடைக்கும் என மணப்பந்தலில் ஒரு குரல் எழும்ப  புது மாப்பிள்ளையை தடுத்து நிறுத்துவார் யாருமில்லை.” துணைக்கு ஓராளையும் அழைத்துக் கொண்டு வாளும் தோணியுமாக கடலேகி போர்த்துக்கீசியர்களின் கப்பலை அடைகிறான் அவ்விளைஞன். 

கப்பலில் கால் மிதித்த வேகத்திலேயே போர்ச்சுக்கீசியர் சிலர் மடிய அப்பெண் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக கரைக்கு திருப்பியனுப்பப்படுகிறாள். சுதாரித்துக் கொண்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்த இளைஞரை சுற்றி வளைத்து ஏழு துண்டங்களாக்குகின்றனர். அவை வெளியங்கோடு, வடகரை, பேப்பூர், தானூர், கோட்டை, வைப்பின்,திருவன்னூர் பகுதிகளில் கரையொதுங்குகின்றன. அந்த இளைஞனின்  பெயர் குஞ்ஞி மரைக்காயர்.

அவரின் உடலங்கள் கரையொதுங்கிய  ஊர்களில் அஷ்ஷஹீது என்ற முன்னொட்டுடன் அவரின் பெயரால் நினைவகங்கள் உள்ளன.அவரின் தீரம் குறித்த நாட்டார் பாடல்களில் அம்மகத்தான தியாகம் இன்றளவும் நினைவில் போற்றப்படுகிறது  சில வருடங்களுக்கு முன்பு வெளியங்கோட்டில் உள்ள குஞ்ஞி மரைக்காயர்  நினைவகத்திற்கு செல்லும்போது நான் இவ்வளவு வரலாற்றை தெரிந்திருக்கவில்லை. ஆயினும் உடலின் ஒரு துண்டம்தான் இங்குள்ளது என் அங்குள்ளோர் சொன்னபோது இது ஒரு தொன்மம் மட்டுமே எனத் தோன்றியது. ஆனால் அவரோ இறப்பைக் கொண்டு வாழ்வை நீட்டித்துக் கொண்டவரல்லவா? 

இந்திய மண்ணில் காலனியாதிக்கத்திற்கெதிரான முதல் அறைகூவல் முஸ்லிம்களிடமிருந்துதான் கிளம்பியுள்ளது. போர்த்துக்கீசிய காலனியத்துக்கெதிரான  தீரமிக்க போருக்கு  கடைக்காலிட்டது முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்களின்  ஃபத்வாதான். கோழிக்கோட்டின் காப்பாடு கடல் தீரத்தில் கரையிறங்கிய வாஸ்கோடகாமாவிடம்  சிலுவை வன்மத்தையும் வணிக மேலாதிக்கத்தையும்  முன்னறிந்தவர் முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்கள்.சாமுத்திரி மன்னரையும் அவர் தம் கடல் தாண்டா நாயர் படையினரையும் கடலோடிகளான குஞ்ஞாலி மரைக்காயர்களையும் ஒருங்கிணைத்து  காலனிய எதிர்ப்பு  ஐக்கிய முன்னணி கட்டியவர்கள் அன்னார்.

மக்தூம் உள்ளிட்ட நாதாக்களின் இல்மின் எதிர்ப்புணர்வின் கூடுகைத்தலம் பொன்னானி. நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்து திரும்பும்போது பொன்னானியில் முதலாம் ஜைனுத்தீன் மக்தூம்  அவர்களின் இருப்பிடத்தில் சில நாட்கள் தங்கி விவாதித்துள்ளனர். போர்த்துக்கீசிய காலனியாதிக்க எதிர்ப்பு போரின் வழிகாட்டுதல்களில் முதலாம் ஜைனுத்தீன் மக்தூம்  அவர்களின் ஈவைப்போலவே  நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் அவர்களின் பங்கும் தலையாயது. பொன்னானி  நகரம்  மலபாரின் மக்கா என்றழைக்கப்படுவது இது போன்ற ஆன்மீக அரசியல் சான்றாண்மை  மிக்க ஆளுமைகளாலும் தொடர் செயல்பாடுகளினாலும்தான்

பொன்னானியின் மைய அச்சான  முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்கள் கோழிக்கோட்டிலும் சாலியத்திலும் நஹ்வு, ஃபிக்ஹில் கற்றுத் தேர்ந்ததுடன் எகிப்தின் அல் அஸ்ஹரிலும்  உயர்கல்வி கற்றுள்ளார்கள்

பின்னர் மக்காவில் சில ஆண்டுகள் தங்கியபோது  ஜலாலுதீன் சுயூத்தி,சைய்யிது அபூபக்கர் ஹள்றமி,அஹ்மது இப்னு ஷம்சுதீன் போன்ற இமாம்களுடன் தோழமை ஏற்பட்டது. நூருத்தீன் மஹல்லி,கமாலுத்தீன் திமஷ்கி,ஷிஹாபுத்தீன் ஹிம்ஸ்வி போன்ற இமாம்கள் இவர்களுடன் பயின்றவர்களில் முக்கியமானவர்களாகும்.

 முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்கள் மார்க்க துறை விற்பன்னர் மட்டுமல்ல  பன்முக  ஆளுமையாகவும் திலங்கியவர்கள். சமூகக் காப்பாளராகவும் புரவலராகவும் காழியாகவும் வெளி நாட்டு வணிகர்களுக்கும் உள்ளூர் அரசர்களுக்கும் இடையில் தொடர்பாளராகவும் அரசியல் விற்பன்னராகவும் இருந்தவர்கள். 

அவர்கள் நடத்திய பள்ளி தர்சு அன்றைய அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தரத்துக்கு இணையாக இருந்திருக்கிறது. இதனால் ஜாவா, சுமத்திரா, இலங்கை போன்ற பகுதிகளிலிருந்து இங்கு உயர்கல்வி கற்க வந்து சென்றனர். தென் தமிழகத்தின் தேங்காய்ப்பட்டினம் முதல் தென்கர்நாடகாவின் முல்கி பகுதி வரையுள்ள கரையோர  முஸ்லிம்களின் உயர்கல்வி மையமாக  பொன்னானி விளங்கியது.

இரண்டாம் ஜைனுதீன் மக்தூம் அவர்களின் ஷாஃபி ஃபிக்ஹ் நூலான ஃபத்ஹுல் முயீன் உலகின் பல பகுதிகளிலும் கற்பிக்கப்படுகிறது. முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்களின் தந்தை அலீ அஹ்மது (ரஹ்) அவர்கள் காயல்பட்டினத்திலிருந்து  மார்க்கப்பணிக்காக கொச்சிக்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் மக்தூமி பெரியார்களின் பெயர்களின் பின்னொட்டாக மஅபரி என்ற சொல்  குறிப்பிடப்படுகிறது. மக்தூமிகளின் வேர் நிலம் ஏமன் அல்லது எகிப்து என்ற இரு வேறு கருத்துக்கள் உண்டு. வணிகம், பரப்புரைக்காக தமிழகத்தின் மதுரை, கீழக்கரை உள்ளிட்ட ஊர்களில் பணியாற்றிய பின்னர் காயல்பட்டினத்தில் நிலை கொண்டிருந்தனர்.

பிரபலமான “ தஹ்ரீது அஹ்லில் ஈமான் அலா ஜிஹாதி அப்தத்தி சுல்பான்” என்ற  போராட்ட எழுச்சியூட்டும் செய்யுள்கள் அடங்கிய நூல், தசவ்வுஃபை பற்றி நூற்றி எண்பத்தெட்டு  வரிகளைக்கொண்ட  செய்யுள் நூலான ‘ஹிதாயத்துல் அத்கிய்யா இலா தரீக்கத்துல் அவ்லியா’ உள்ளிட்ட பதினாறு நூல்களின் ஆசிரியர்  முதலாம் ஜைனுத்தீன் மக்தூம் அவர்கள்.

‘ தஹ்ரீது ‘ நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டு கிடைக்கிறது.‘ஹிதாயத்துல் அத்கிய்யா’ நூலின் ஆங்கில மொழியாக்கமும்  கோழிக்கோட்டின் அதர் புக்ஸ் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

சென்ற முறை வந்திருக்கும்போது உள்ள நேர நெரிசலினால்  வலிய ஜுமுஅத்து பள்ளி, மக்தூம் அடக்கத்தலம் காணுகை சரிவர நடைபெறவில்லை. அக்குறை தீரும் மட்டும்  அந்த வளாகத்தினுள் நேரஞ்செலவழித்தோம்.

பள்ளிவாசலின் வலது வசத்திலுள்ள பொது மைய்யத்துக்காட்டின் தென் கிழக்கெல்லையில்தான் முதலாம்  ஜைனுத்தீன் மக்தூம்  அவர்களின் மண்ணறை உள்ளது. மண்ணறை எனக் குறிப்பிடக்காரணம்  அன்னாரின் அடக்கத்தலம்  எனத் தனியாக அடையாளங்காட்ட இயலாது.  ஜைனுத்தீன் மக்தூம் அவர்களின்  குடும்பத்தார் அடங்கப்பெற்ற வளாகத்தினுள்தான் அவர்களின் கப்ரும் உள்ளது. மார்க்க வரையறையைப் பேணி அன்னார் தங்களது மண்ணறையை தனித்துவமாக எடுத்துக்காட்டும் எந்த ஏற்பாட்டையும் செய்யலாகாது என்ற வசிய்யத்துடன்தான் இறுதி விடைபெற்றுள்ளனர். 

அன்னாரின் நினைவு நாளில் அங்கு கந்தூரி கொண்டாடப்படுவதில்லை.வெளியிலிருந்து ஆட்கள் அதற்காக குவிவதுமில்லை.

ஒன்றியப்பகுதியான மாஹிக்கு அருகிலுள்ள சோம்பாலில் இறுதி ஓய்வு கொள்ளும் ஓய்வு கொள்ளும் இரண்டாம் சைனுத்தீன் மக்தூம் அவர்கள், முதலாம் சைனுத்தீன் மக்தூம் அவர்களின் மகன் முஹம்மது அல் கஸ்ஸாலியின் மகனாவார். அன்னார்தான் துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் நூலை இயற்றியவர்...

அவர்களின் கப்றும்  அதே மார்க்க  வரையறையினால்தான் தனித்துவமாக கட்டி எழுப்பப்படவில்லை. ஒரு மரத்தினடியில்தான் அன்னாரின் மண்ணறை உள்ளது என சொல்ல மட்டுமே முடிகிறது  என அங்கு சென்று வந்தவர்கள்  தெரிவித்துள்ளனர்..ஜைனுத்தீன் மக்தூம்கள் மஃபர் மலபாரின்  வரலாற்று நாயகர்கள். ஆறடி அடையாளத்தை துறந்து  பேரடையாளத்தை தரித்துக் கொண்டவர்கள். திரு உருக்களை  சதுர செவ்வகங்களுக்குள்  சிறை பிடிக்கவியலாது.

குவியும் ஓர்மைகள்  அதிராமலே தவிர அந்த மண்ணறைத்தலத்திலும் அதனையொட்டியுள்ள வலிய ஜுமுஅத்து பள்ளியிலும் தரிபட இயலவில்லை. தொழுகை, திக்ர்,திலாவத்திற்கு அப்பால்  பள்ளிவாசல்களை  சமூக நல செயலூக்கமுள்ள ஆற்றல் மையங்களாக நடத்த முடியும் என்பதற்கான பெரும் வகை மாதிரிகளாக  விளங்குவது பொன்னானி வலிய ஜுமுஅத்து பள்ளிவாயிலும் கோழிக்கோடு குற்றிச்சிற மிஷ்கால் நாகுதா பள்ளிவாயிலும்தான்.

வலுத்து உரத்த நிகழ்வுகள் நிறைந்த அந்த நூற்றாண்டுகளின் அதிர்வுகளை  தனக்குள் பிடித்து நிறுத்திக் கொண்டு அதை ஆற்றல் நிறை துடிப்புகளாக  மாற்றிக்கடத்துவதை  வலிய ஜுமுஅத்து பள்ளியின் கீழ் தளத்திலும்  மேல் இரண்டு  தளங்களிலும் உணர முடிகிறது. அந்த பெரு ஓட்டத்தின் முன் சலனம் நீக்கி  நம்மை  ஒப்புக் கொடுப்பதன் வழியாகவே மட்டுமே அந்த மகா பளு நிரவிய கணங்களுக்குள் நாம் நுழைந்தேற இயலும்.

பழமை சிதையா புது மெருகுடன் பள்ளிவாயில் மிளிர்கிறது. அதன் மேல்தளங்கள் உள்ளிட்ட எல்லா பகுதிகளும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. மேல் இரண்டு தளங்களும் தொழுவதற்கும் பார்வையாளர்களுக்கும்  அனுமதிக்கப்படுவது  நற்குறியே.

]வட கேரளத்தின் அல்லது மலபாரின் மக்கா என்ற பெயருக்கேற்ப  வலிய ஜுமுஅத்து பள்ளியானதுஇரவும் பகலும் திறந்தேயிருக்கும்.அத்துடன் மக்காவில் விடுக்கப்படுவது போன்று தஹஜ்ஜுத்திற்கும் (பின்னிரவு உபரி தொழுகை) பாங்கொலிக்கப்படுகிறது.

பள்ளிவாயிலின் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளமொன்றிற்கு ஏணிப்படி செல்கிறது. அங்கு இன்று வரை விளக்கு, மின் வசதிகள் செய்யப்படவில்லை.

காரணம் நம் இணைச்சமுகமான அனல் உயிரிகளுக்கான( ஜின்கள்) கற்றல் கூடம் அது என்பது பொன்னானி மக்களின் தொன்மம்.

இரண்டாம் தளத்தின் மேலே கால் திட்ட இருள் சூழ் தியான முறி. முதலாம் ஸைனுத்தீன் மக்தூம் தனது பெரும் செயல்பாடுகளுக்கான ஆற்றலை பற்ற கல்வத் கூடம்.

இதே போல ஒரு தொன்மம் காயல்பட்டினத்திலும் நிலவுகிறது. எனது முஹல்லாவானகொடிமர சிறு நெய்னார் பள்ளிவாயிலில் உறையும்  இறைநேசர்  பெரிய சம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்கள் பகலில்  மனுக்களுக்கும்(மனிதர்கள்) இரவில் ஜின்களுக்கும் ஓதிக்கொடுத்த மகான் என சொல்லப்படுவதுண்டு. ஜின்களின் கற்றல் சமயத்தில்  அங்கு கடக்க நேரும் மனிதர்கள் அமானிட  உணர்தல்களைப் பெற்றதாக  இளம் வயதில் மூத்தோர்கள்  சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அக்கால மஅபர் மலபார் அறிஞர்களின்   கல்விக் கொடை  விரிவும் பரப்பும் கொண்டது. எழுதுகோலுடன் வாளேந்தவும் தயங்காத அந்த ஆசான்களின் வாழ்வும் பிரிவும் இன்றைய அரசியல் சூழலில் நம் தலைமுறையினர் மனங்கொள்ள வேண்டிய ஒன்று. 

பொன்னானி வலிய ஜுமுஅத்து பள்ளிவாயிலின் வட மேற்கு பக்கம் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கான பயிற்சி நிறுவனமான மவுனத்துல் இஸ்லாம் சபையும் அதன் எதிரே பழைமையான குளமும் நிற்கின்றன.  நடுத்தர அகவை கடந்த மனிதர்கள் குளத்தங்கரையில் தங்கள் அந்திபடும்  நினைவுகளை மென்று  கொண்டிருந்தனர்.

பொன்னானி பயணத்தின் நிறைவுக்கட்டம். ஒட்டு  மொத்த பொன்னானியின் நீர் சாட்சியான  பாரதப்புழையில் உலாவ வேண்டும் என்ற  ஆசை ஜங்கார் என்ற போக்குவரத்து படகுச் சேவை மூலம் நிறைவேறியது.  பொன்னானி மீன் பிடி துறைமுகத்தையொட்டி இந்த சேவை நடைபெறுகிறது. மனிதர்களுடன் கார்,பைக் உள்ளிட்ட ஊர்திகளை பத்து ரூபாய் கட்டணத்தில் ஏற்றிச் செல்கிறார்கள். அசாமின் பிரம்மபுத்திரா நதியில் இதே போன்று  நடத்தப்பெறும்  ஜங்கார் பயணத்தில் ஆடு,பன்றிகளுக்கும் கட்டணம் வாங்கிக் கொண்டு மிதத்தலின் சுவையை வழங்குகிறார்கள்.

 

ஜங்காரில் என்னருகில் நின்று கொண்டிருந்த வெண்மை சொட்டும் சீருடையணிந்த மத்ரசா மாணவனொருவன் முழுக்க முழுக்க தன்னை மட்டுமே படம் எடுத்துக் கொண்டிருந்தான். ‘ ஆத்தயும் படகயும் எப்போ எடுப்பே?” எனக்கேட்டவுடன் பச்சை சிரிப்பு.

மறு கரையிலிருந்து நாங்கள் திரும்பும்போது மாலை ஏழு மணியாகி விட்டது. அதுதான் இறுதிச் சேவை என்பதால் அளவுக்கு கூடுதலாக ஆட்கள் ஏறவே   படகை செலுத்த மறுத்து விட்டார் ஓட்டுநர். கொஞ்சம் பேரை வலுவில் இறக்கிய பிறகே பயணம் தொடர்ந்தது. வழமைக்கு மாறான வலதும் இடதுமான  படகின் தளும்பலை  உணர்ந்த பாசில் இஸ்லாமின் முகத்தில் சிறிய திகைப்பு. கலிமாவை மொழிந்தாயிற்று. வெளி இருள் நீரின் இருள் என இரண்டு இருள்களுக்குள் மூச்சுத்திணறலோடு முடிவு வரும் என்பதை  நினைக்கும்போது மட்டும் மனத்திற்குள் கொஞ்சம் அசௌகரியம் உண்டாயிற்றே தவிர பெரிய அச்சமொன்றும் ஏற்படவில்லை. தவிர்க்க முடியாதவற்றை அஞ்சி ஆவதென்ன?

சென்றதை விட திரும்பும் பயண நேரம் கூடுதல் என்பது போல தோன்றிக்கொண்டே இருக்க பாதுகாப்பாக கரையடைந்தோம்.ஹூதைஃபா வீட்டில் இராத்தங்கி விட்டு மறு நாள் வைகறையில் கோழிக்கோடு கிளம்பியாகிற்று. பொன்னானியில் பார்க்கவும் கொள்ளவும் இன்னமும் உண்டு 

சொல்லகராதி

பிரகண்டம் – நிம்மதி குறைவு

ரிஹ்லத்துல் முலூக் நூல் – இயற்றிய அரபியிலுள்ள  பயண நூல்

காழி – மார்க்க நீதிபதி

நிய்யத் -- நாட்டம்

மத்ரசா --  மார்க்க கல்வியகம்

சனது – படிப்பு நிறைவிற்கான பட்டம்

தர்சு -- வகுப்பு

அஷ்ஷஹீது, ஷுஹதா  - இரத்த சாட்சி

ஃபத்வா – மார்க்க தீர்ப்பு

இல்ம் -- அறிவு

ஹஜ் – மக்காவை நோக்கிய புனிதப் பயணம்

நஹ்வு, ஃபிக்ஹ்  -- மொழி இலக்கணம், சட்ட நுணுக்கங்கள்

ஃபத்ஹுல் முயீன் – ஷாஃபி சிந்தனைப்பள்ளியின்  ஃபிக்ஹ் நூல்.

தஹ்ரீது அஹ்லில் ஈமான் அலா ஜிஹாதி அப்தத்தி சுல்பான் ---

ஹிதாயத்துல் அத்கிய்யா இலா தரீக்கத்துல் அவ்லியா --

மைய்யத்துக்காடு --  நீத்தார் அடக்கத்தலம்

துஹ்ஃபத்துல் முஜாகிதீன் – கேரளத்தில் போர்த்துக்கீசியரின் ஆக்கிரமிப்பை விவரிக்கும் நூல்

மஃபர் – தமிழகத்தின் கடற்கரையோர பகுதியையும்,ப் தமிழகத்தையும் குறிக்கும் சொல். மிகவும் குறிப்பாக சொல்வதானால் காயல்பட்டினம், கீழக்கரை,மதுரை பகுதிகளை குறிக்கும் சொல்

மஅபரி --  மேற்கண்ட பகுதியை சேர்ந்தவர்

மலபார்  - வட கேரளம்

திக்ர் – இறைத்துதி

திலாவத் - ஓதுதல்

ஜின்கள் – அனல் உயிரிகள். மனிதர்களைப்போன்றவர்கள். ஆனால் நெருப்பினால் படைக்கப்பட்டவர்கள்.

கல்வத் - இறை நினைவிற்கான தனித்த இருப்பு, தியானம்

தஹஜ்ஜூத் --பின்னிரவு உபரி தொழுகை

முஹல்லா  - குடியிருப்பு பகுதி

------------------------  

 தொடர்புடைய பதிவுகள்:

 பொன்னானி -- ஒளிப்படக்கோவை

தோனயாத்ரா -- 2,கொண்டோட்டி



No comments:

Post a Comment