Thursday, 7 July 2022

திருமணக் கடன்

 எனது பைக்கை ஓரங்கட்டிக் கொண்டிருக்கும்போது  திருமண அரங்கில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில்  மார்க்க அறிஞரொருவர் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார். “ மணமகனின் தந்தை ஹிஷாம் ஹாஜி சமூக உருவாக்கத்திற்காகவே தன்னைக்கொடுத்து  தன் வாழ்வை பொருள்படுத்திக் கொண்டவர். வாப்பாவைப்போலவே மணமகனும் நற்குணங்கள் நிறைந்தவர்”.

பொதுவாகவே நான் திருமண விருந்துகளை விரும்புமளவிற்கு திருமண நிகழ்வுகளை விரும்புவதில்லை. சோம்பேறித்தனத்துடன்  ஒரு மணி நேரம் அந்த தேய்வழக்கு உரைகளையே கேட்க வேண்டும் என்ற துயருக்காகவும்தான்.

ஆனால் இந்த திருமணத்திற்கு போயாக வேண்டும் என முடிவெடுத்தேன். முடிவெடுத்ததற்கு  நண்பனின் மகனின் திருமணம் என்பதற்கு அப்பால் இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் தலையாய காரணமும் கூட.

 இத்தனைக்கும்  இன்று நடந்த இந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் இம்மதியம்தான் என் கைக்கு கிடைத்தது. மறைந்த என் ஆருயிர் நண்பன் பூச்சை ஹிஷாம் என நாங்கள் கூப்பிடுவோம். அந்த ஹிஷாம் ஹாஜியாரின் ஒரே மகன் நூகு இம்ரானின் திருமண அழைப்பிதழ்தான் அது.

 1990களின் நடுப்பகுதியில்தான் எனக்கு அவனுக்கெல்லாம் திருமணம் நடந்தது. அப்போது நான் களப்பணியொன்றில் முப்பொருளையும் கொடுத்து ஓடிக்கொண்டிருந்த நேரம். அப்படியான ஒரு பயணத்திற்கு போகும் வழியில் அவனது வீட்டினருகே நண்பன் ஹிஷாமை சந்தித்தேன். என் கைகளைப் பற்றிக் கொண்டு ”மச்சான் அடுத்த வாரம் எனக்கு நிக்காஹ். கண்டிப்பாக வரணும் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே  கைகளை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.


இன்றைக்கு விட அன்று எனக்கு திருமண நிகழ்வுகளில் பங்கெடுப்பதில் உள்ள ஒவ்வாமை தீவிரமாக இருந்த காலம். வயசுக்கேற்ற கிறுக்கு. அவனது திருமணம் முடிந்து பல நாட்கள் கழித்துதான் நான் ஊர் திரும்பினேன். அவனது வீட்டினருகிலேயே திரும்பவும் நண்பன் ஹிஷாமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சமும் புன்னகை மாறாமல் அதே தீவிரத்துடன் ஆனால் மென்மையாக என் கைகளைப் பற்றிக் கொண்டவன் “ மச்சான் எங்கலியாணத்துக்கு வரலியே” என்றான். அந்த சொற்களை அப்படியே தலைக்கு மேல் போகும் காற்றாக்கி கடந்து விட்டேன்.

 இவைகள் நடந்து கால் நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இடைப்பட்ட காலத்தில் சாலையில் காண நேரும்போது ஒரு புன்னகை ஒரு சலாம் ஒரு விசாரிப்பு எனக் கடந்து  விடுவோம். இந்தக்காலக்கட்டங்களில் அவன் ஒரு சமூகப்பணியில் தலையாய பொறுப்பாளியாகவுமிருந்தான்.

 நதிகள் எல்லா நாட்களிலும் அமைதியாகவே ஓடிக் கொண்டிருக்குமா என்ன? சில வருடங்களுக்கு முன் எந்த விடைபெறலும் கூறாமல் கூட்டாளி  ஹிஷாம் நீள் துயிலுக்குள் சென்று விட்டான். அவன் தன் இறுதிக்கணங்களில் இருக்கிறான் என்ற செய்தியே அவனது இறுதிக்கணங்களில்தான் எனக்கு தெரிய வந்தது. அவனுக்கு இறுதியாக என்னால் கொடுக்க முடிந்தது ஒரு உறைந்த முத்தமும் இறுதிth தொழுகையுமே.

 தண்ணீர் தன் தடம் தேடி வருவது போல அவன் திருமணத்தில் நான் பங்கெடுக்காததற்காக  ஹிஷாம் சொன்ன சொற்கள் தங்களுக்குள் பெரும் பாரங்களை ஏற்றிக் கொண்டு எனக்குள் மீண்டன. “திரும்பவும்  சரி பண்ணவியலாத ஒரு தவற்றையல்லவா செய்து விட்டோம்” என நினைக்கும்போதெல்லாம் நோகும் அளவிற்கு  துயர் பற்றும் சொற்களாகி விட்டன அவை.

  நண்பன் ஹிஷாமின் மகன் நூகு இம்ரானின் திரு,மண பைத்தானது அரங்கிலிருந்து அவனது வீடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனை  மறித்து அவனது இரு  கைகளையும் பற்றிக் கொண்டு துஆச் செய்து அவனது நெற்றியில் முத்தமிட்டேன். இது நடந்த இடத்திற்கும் அவனது வாப்பாவும் என்  நண்பனுமாகிய  ஹிஷாம் என் கைகளைப் பற்றிக் கொண்ட இடத்திற்கும் சில அடிகள்தான் தொலைவு.




 மகனே நூகு இம்ரான்!இணையுடன்  நீயும் ஈருலக நிறை வாழ்வு வாழ வல்லோனை பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka