Monday, 4 August 2025

நாட்டார் வரலாறு (ஒருநாள் பயிலரங்கு) கோட்டாறு

இறையருளால் நாட்டாரியல் வரலாறு ஒரு நாள் பயிலரங்கு கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் கோட்டாறில் சிறப்பாக நடந்தேறியது.இரு வருட கால கனவும் இரண்டு மாத கால உழைப்பும் கனியாயிற்று.

இதே ஆகஸ்ட் மாதம் 2023இல்தான் ரிஹ்லா ஷீத் என்ற தலைப்பில் சேதுச் சீமையில் ரிஹ்லா பயணமொன்றை நடத்தினோம்.

அது ரிஹ்லா பயண முகமையின் இரண்டாவது பயணம்.பல இடங்களுக்கு சென்று விட்டு கதைகளின் ஊற்றுக்கண்ணான இராமேசுவரம் தீவுக்கும் அதன் ஒரு பகுதியான தனுஷ்கோடிக்கும் சென்றோம்.

தீவின் நுழைவாயிலில் நிற்கும் அறபு ஆஃப்ரிக்க வணிகத் தடத்தின் உயிரிக்குறியீடான பப்பரப்புளி எனப்படும் BAOBAB மரம், தொடர் நிலையமருகே நிலை கொண்டிருக்கும் முதல் மனிதனின் இரு மகன்களான ஆபில் காபிலின் நெடிய மண்ணறைகள்,இராமநாத சாமி கோயிலில் காக்கை முனிவர் வழிபட்டதற்கான புராணக்கதைகள்,1964 இல் ஏற்பட்ட முப்பூத பேரிடரில் ஆட்கள் ஏறித் தப்பிய தனுஷ்கோடி கூனி மாரியம்மன் கோயில் மேடு, பேரிடரில் எஞ்சிய கிறித்தவ தேவாலயம், தமிழ் திரைப்படங்களைக் காண்பதற்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும்  நீந்தியும் நாட்டுப்படகுகளிலும் பாக் நீரிணையைக் கடந்த இந்திய இலங்கையர்கள், இலங்கை உள்நாட்டுப்போரின் ஏதிலிகளின் இறங்கு கரையான மண் தீடைகள், ஆதம் பாலம், அக்கரையின் ஆதம் பாவா மலை என முப்பரப்புக்களிலும் புதையுண்டும் நீந்தியும் மிதந்தலையும் வகை தொகையற்ற நிகழ்வுகளின் கதைகளின் கதையாடல்களின் அம்பாரங்களைக் கண்டோம்.

மேற்கண்ட எல்லா நினைவு நனவுகளையும் என்றென்றைக்கும் இல்லாதாக்கும் வண்ணம் அரசு தார்ச்சாலையை போட்டிருந்தது.முப்பூத பேரிடரின் சிதிலங்கள், அடையாளங்கள் பற்றி எவ்விதஅக்கறையும் கவலையுமில்லாமல் அவை கதிரோனிடமும் கடலின் உப்புக்காற்றிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இராமேசுவர,தனுஷ்கோடி வெளியெங்கும் இறைந்து கிடக்கும் தொன்மங்கள்,கதைகள்,கதையாடல்களை நெய்தெடுக்கப்படவில்லையெனில் அவையும் இல்லையென்றாகி விடும். எனவே இவற்றை தேடித் திரட்டிப் பதிவதை தூண்டும் விதமாக நாட்டரியல் வரலாறு பயிற்சி வகுப்புகளுக்கான ஓர் ஏற்பாட்டைத் தொடங்க வேண்டும் எனத் தோன்றியது.அதுதான் UNTOLD – HISTORY COLLECTIVE என்ற ஊர்தி.

பாளையங்கோட்டைசதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர்களும் நண்பர்களுமான செய்தலீ,ஷாஹுல் ஹமீது ஆகியோருடன் கலந்தாலோசித்து ஒரு நாள் பயிலரங்கிற்கான நிகழ்ச்சி வரைவு, வளவாளர்கள்,பங்கேற்பாளர்கள் பட்டியல், தோராய செலவு என அணியமாக்கினோம்.

இந்த வரைவு இருவர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. முதலாமவர் அன்பின் நண்பரும் மார்க்க அறிஞரும் வரலாற்றாய்வாளருமான முஹம்மது சுல்தான் பாகவி ஆலிமவர்கள். அன்னார் உடனே இதை சரி கண்டதோடு தன் கையிலிருந்தும் தன் வட்டத்திலிருந்தும் முதல் நிதியை திரட்டியளித்தார். அதிலிருந்துதான் இதை முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்கம் பிறந்தது.

இரண்டாமவது ஒரு தனியார் நிர்வாகம். அதன் நிர்வாகிகள் அடக்கம் இது பற்றி விரிவாக வரைவு முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. எல்லாவற்றையும் சரி கண்டவர்கள் அதன் பின் மூச்சே காட்டவில்லை. அத்துறை சார்ந்து தொடர்பேயில்லாமல் ஒரு நிகழ்ச்சியை ந்டத்தி முடித்ததின் வழியாக எதிர் மறையான  மறுமொழியை தெரிவித்து விட்டனர். எனினும் பல மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம் எனத் தோன்றியது. இதிலேயே இரண்டு ஆண்டுகள் நழுவி விட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டறைச் சேர்ந்த வட்டார வரலாற்றாய்வாளர்கள் அஹ்மது கபீர்,மிடாலம் அன்ஸார்,குளச்சல் அஸ்கர் ஆகியோர் இதை நாம் கோட்டாற்றிலேயே நடத்திடலாம் எனத் தெம்பளிக்க விதை தன் நீள் உறக்கத்தைக் கலைத்துக் கொண்டு திறந்தது. அணியின் இரண்டு மாத கால  கூட்டு திட்டமிடலிலும் உழைப்பிலும் குமரி மாவட்ட வட்டார வரலாற்று ஆய்வியல் பேரவையுடன் அன் டோல்ட் ஹிஸ்டரி கலெக்டிவ் அமைப்பும் இணைந்து நடத்திய  நாட்டரியல் வரலாற்றுப் பயிலரங்காக அது மலர்ந்தது. இப்பயிலரங்கத்தின் வெற்றி அடைவில் பேராசிரியர்கள் ஷாகுல் ஹமீது, செய்தலீ ஆகியோருக்கும் கணிசமான பங்குண்டு.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்,திருவாரூர் ஒன்றியப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்திலுள்ள கேரளப்பல்கலைக்கழகம்,திருநெல்வேலி சாராள் டக்கர் கல்லூரி,பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, மலப்புரம் தாயீ பயிலகம் ஆகியவற்றிலிருந்து பேராளர்களாக பேராசிரியர்களும்,ஆய்வு மாணவர்களும், திருவனந்தபுரம்,கன்னியாகுமரி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை,திருநெல்வேலி ஏர்வாடி,காயல்பட்டினத்திலிருந்தும்வழக்குரைஞர்,இயற்கை விவசாயி.பேச்சாளர்,மொழிபெயர்ப்பாளர் என பலதரப்பட்ட  வாழ்நிலைகளைக் கொண்ட தன்னியல்பு ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.கணிசமான அளவில் பெண்களும் பங்கேற்றனர்.

ஆலிம்கள் வரிசையில் முஹம்மது சுல்தான் பாகவியும் சிராஜூத்தீன் அஹ்ஸனியும் பங்கேற்றனர்.சிறப்புஅழைப்பாளராக அணு உலை எதிர்ப்பு போராளியும் சமகால அறிவாளிகளில் ஒருவருமான சுப.உதயகுமார் அவர்களும் பங்கேற்றார்.நிகழ்ச்சியின் வளவாளர்களான பேராசிரியர்கள் தனஞ்செயனும் கார்மேகமும் தங்களது வகுப்புக்களால் நிகழ்வை அடர்வுள்ளதாக்கினர்.

தியாகி ஹாஜி அப்துற்றஹீம் சேவு ஸாஹிப் அரங்கை கட்டணமில்லாமல் தந்துதவிய அதன் அறங்காவலரான உ.ஷாஹுல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னிருந்து அதன் இறுதிக் கட்டம் வரை உடனிருந்து தேவையான உதவிகளை வழங்கினார்.

முஸ்லிம் சமூகத்தின் தொன்மங்கள்,வாய்மொழி வரலாறுகள்,புனிதர்களின் கறாமாத்துக்கள்(அற்புதங்கள்) ,தமிழிலும் அர்வியிலும் எழுதப்பட்டுள்ள காரணம்,பதம்,மாலைகளில்  கரந்துறையும் வரலாற்று,மானிடவியல் துணுக்குகள் உள்ளிட்டவைகளுடன் விளிம்பு நிலை சிறுபான்மை நாட்டாரியல் கூறுகள் பனுவல்கள் தொன்மங்கள்  இன்னும் முறையாக அகழ்ந்தெடுக்கப்படாத நிலத்தடி கனிம சேகரமாக திகழ்கின்றன. அத்திசையில் ஆய்வுகள் முழுமையாகவும் பரந்தும் முழு வீச்சிலும் நடைபெற வேண்டும். அதற்காககவும் எடுக்கப்பட்ட முதல் முன்னெடுப்பு இது.

தமிழ் ஆய்வு அறிவுச்சூழலில் முஸ்லிம் நாட்டாரியல் குறித்து கரிசனமும் நாட்டமும் மிக அரிதாகவே காணப்படுவது கவலையளிக்கும் விடயம்.பழங்குடி.அலைகுடி சமூகங்கள் பற்றி நடந்த ஆய்வுகளில் ஒரு துளிகூட இத்திசையில் செய்யப்படாதது வருந்துதற்குரியது.

முதல் முயற்சியிலேயே எல்லாம் கனிந்து மடியில் வீழும் என எதிர்பார்க்கவியலாதுதான்.இன்னும் போக வேண்டிய தொலைவு ஏராளம்.இறையருளும் மனித வளமும் கூடும் ஒரு தருணத்தில் மலைகளும் மண்டியிடத்தானே வேண்டும்.

-------------------------------------------------------------- --------------------------------------------- -------------------

நாட்டார் வரலாறு (ஒருநாள் பயிலரங்கு)

நிகழ்விடம்:
தியாகி ஹாஜி அப்துற்றஹீம் சேவு சாஹிப் அரங்கம், மாலிக் தீனார் பள்ளி, கோட்டாறு, நாகர்கோவில்
காலம்:
02/08/2025 சனிக்கிழமை காலை 09:30மணி முதல் மாலை 03:30 மணிவரை
தலைமையுரை:
‘இலக்கியச்சுடர்’ அகமது கபீர் (தலைவர், வட்டார வரலாற்று ஆய்வியல் பேரவை குமரி மாவட்டம்)
ஆய்வுரைகள்:
1. நாட்டார் வழக்காறுகளும் வரலாறும்
முனைவர் ஆ.தனஞ்செயன் (தலைவர் (பணி நிறைவு), நாட்டார் வழக்காற்றியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை)
2.நாட்டார் வரலாற்றை திரட்டிய அனுபவங்கள்
முனைவர் அ.கா.பெருமாள் (நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்)
3. வாய்மொழி/நாட்டார் வரலாறு: தரவுகள் சேகரித்தலும் முறையியலும்
முனைவர் ச.கார்மேகம் (நாட்டார் வழக்காற்றியல் துறை, தூய சவேரியார் கல்லூரி,பாளையங்கோட்டை)
மற்றும்,
குழு விவாதங்கள், உள்ளூர் வரலாற்றாய்வாளர்களின் பகிர்வுகள்
ஏற்பாடு:
வட்டார வரலாற்று ஆய்வியல் பேரவை, குமரி மாவட்டம்
&
UNTOLD – HISTORY COLLECTIVE
















No comments:

Post a Comment

நிலத்து மழை