Saturday, 12 July 2025

‘தாசேட்டன்டே சைக்கிள்’ – தாங்கும் தணலான தாசேட்டன்

 


முன்பை போல கூடுதல் திரைப்படங்களைக் காண முடியவில்லையென்றாலும் கிடைக்கும் இடைவெளிகளில் தேர்ந்தெடுத்த படங்களைப் பார்க்க முடிகிறது. அப்படியாகக் கிட்டிய ஆர்ப்பாட்டமில்லாத வலுவான மலையாளத் திரைப்படம் ‘தாசேட்டன்டே சைக்கிள்.’ அகில் காவுங்கல் இயக்கத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் வெளிவந்தது.


 

தனியார் நிறுவன காவலாளியான கதாநாயகனின்(ஹரீஷ் பேராடி) செட்டிமையான குடும்பம். விடலைப்பருவ விட்டேத்தி மகன், பணி ஒய்வு பெற்ற விட்டேத்தி தந்தை. வயதுக்குப் பொருத்தமில்லாத நடவடிக்கையும் நடிப்பும் அவருக்கு சொந்தமாக இருப்பதால் அப்படிக் குறிப்பிடுகிறேன். வட்டியேறும் வீட்டுக்கடன்,செய்தித்தாள்,மின் கட்டண நிலுவைகள் என அனைத்தும் சேர்ந்து கை நழுவிப்போன பொற்கால ஏக்கங்களுடன் உரசுவதால் அவ்வப்போது கொப்பளிக்கும் மனைவி என வலமும் இடமும் தட்டிமுட்டி நகரும் வாழ்க்கை.

 வேலை பார்க்குமிடத்தில் வரும் வாடிக்கையாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு இறுதியில் அவ்வேலையை விட்டு வெளியேறும் தாசேட்டன் வாழ்வாதாரத்திற்காக தையல்காரனாக தெருவோர மரக்கறி விற்பவராக என எல்லா கூத்துகளும் கட்டுகிறார்.

 அவர் அடைய நேரும் அவமானங்களுக்கு மறுபுறம் தையல்கடை முதலாளி, சக தெருவோர விற்பனையாளர்கள் என ஏதாவதொரு வடிவில் சிறு உதவிகளும் ஆறுதல்களும் கண நேரக் காற்றைப்போல தாசேட்டனை தழுவுகிறது.

தாசேட்டனே பூங்காற்றாகி நிற்கும் ஒரு பெருங்காற்றுதான். சமூக எதிரிகளால் அச்சுறுத்தப்படும் திருநங்கைக்கு தன் பணியிடத்து ஓய்வறையை  காப்பரணாக நல்குகிறார். தான் இனிப்பு உண்ணாதபோதிலும் திருநம்பியளிக்கும் சாக்லேட்டை:முதலில் தந்ததல்லவா” எனக் கூறி மறுக்காமல் ஏற்கிறார்.

 

தற்செயலான ஓரிரவில் அந்த திருநங்கையுடன் உரையாட நேரும்போது சுற்றுப்பணியிலுள்ள காவலர்கள் குறுக்கிட்டு “ இத்தனை வயதாகியும் உனக்கு வெட்கமில்லையா?” எனக் கேட்கின்றனர்.

 

இதற்கு தாசேட்டன் கொடுக்கும் மறுமொழி “ இது முதலில் என் மகனாக இருந்து இப்போது மகளாகி விட்டவர். அவரைப்பார்க்க வந்தேன்” என்கிறார். சற்றே உறைந்த பின் முன்னகர்கிறது காவல் ஊர்தி.

 “காவலர்களிடம் ஏன் அப்படிச் சொன்னீர்கள்” என்ற அந்த திருநங்கையின்  கேள்விக்கு “ அப்படித்தானே சொல்ல வேண்டும்” என்கிறார் தாசேட்டன்.

 தகிக்கும் வெய்யிலுக்கும் சூறைக்காற்றுக்கும் சிறு தலையசைப்பை மட்டும் எதிர்வினையாக்கி விட்டு தன் மலர்வை கொண்டு மொத்த நாளையும் நிறைக்கும் சிறுமலரையொத்த தாசேட்டன் என்ற ஹரீஷ் பேராடியின் நடிப்புக்காக மட்டுமே இத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

 தந்தை,மனைவி வேடங்களுக்கு பொருத்தமான ஆட்களைப் போட்டிருக்கலாம். என்றாலும் தாசேட்டனின் மனைவியிடமிருந்து அகாலத்தில் வெளிப்படும் பேய்ப் புன்னகைக்காக அவளை மன்னித்து விடலாம்.



 

No comments:

Post a Comment