“குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள் நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள்.
வெள்ளைத்
தாளில் அவ்வரிகளை எழுதினேன். முதல் எழுத்து அச்சு போல வந்தது.எழுதி முடித்த பிறகு மொத்த
வரிகளுமே எறும்புக் கூட்ட வரிசையாகி ஊர்ந்ததால்
தாளைக் கிழித்துப் போட்டேன்.
டிடிபி சென்டருக்கு
போய் மினுக்கி அச்சிட்டு வாங்கி வந்த பிறகே
நிறைவாக இருந்தது. படுத்துக் கிடந்தாலும் கண்ணில் படுகிற மாதிரி புத்தக பீரோவின்
பக்கவாட்டில் வசம் பார்த்து ஒட்டினேன். அறைக்குள் வழமையாக இருக்கும் கண் கூசும் கதிரொளி
மட்டுப்பட்டிருந்தது.ஊருக்குப் போன பிறகு அங்கும் இது மாதிரி எழுதி மறக்காமல் ஒட்ட வேண்டும்.
பேருவளை அன்வர்
நாநா சொன்ன பிரபல மாணிக்க வணிகர் நளீம் ஹாஜியாரின் முதல் சதக்கா
கதைக்குப் பின்னர்தான் இப்படியானதொரு சொல்லை ஒட்டி வைக்க வேண்டும் எனத் தோன்றியது.அதைப்
பார்த்துக் கொண்டு படுத்திருக்கும்போது கை கால்களில் நீளம் சேர்கிறது.
இரத்தினபுரி,எஹிலியகொட,நிவித்திகல
போன்ற ஈர மண்டலங்களிலிருந்து வந்திறங்கும் பட்டை தீட்டிய நீல,மஞ்சள் மாணிக்கங்களுக்காக
பதட்டத்தையும் சல்லியையும் கட்டிக் கொண்டு
கொழும்பிலிருந்து பேருவளைக்கு போகவும் வரவுமாக அன்றாடம் மூன்றரை மணி நேர விலா தெறிக்கும் பேருந்து ஓட்டம். காக்காவின் மனதில்
பதட்டமில்லாதிருந்தால் மட்டுமே கோச்சை தேர்ந்தெடுப்பார். கோச்பயணமென்பது அபூர்வமானதாகவே
நடந்தது.
மூட்டை சுமக்க
வேண்டியதில்லை. மாதச்சம்பளத்துக்குக் கால் கடுக்க கடையில் நிற்கத் தேவையில்லை. சட்டைக்கை
மடிப்பில் கல்மடியை சுருட்டி வைத்துக் கொண்டு நடந்தால் போதும். ஒரு வருடத்துக்கான வருமானம்
நாய்க்குட்டியைப் போல நமக்குப் பின்னால் வந்து விடும் என்ற ஊராரின் உண்மையும் மிகைப்படுத்தலுமான
நம்பிக்கைகள்தான் கடல்,நிலம் தாண்டி தமிழகத்து ஆட்களை பேருவளைக்கு ஈர்த்துக் கொண்டிருந்தது.
மாணிக்கத்தடங்களைத்தேடி நடந்த மொரோக்கோ நாட்டு அவ்ஸாஃப் அஹ்சன் என்ற பயண
எழுத்தாளர் ‘The Precious Dust of the First Man’ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில்
சரந்தீபில் கிடைக்கும் நீல மஞ்சள் மாணிக்கங்களை மடகாஸ்கரிலும் மியான்மரிலும் கிடைக்கும்
மாணிக்கங்களுடன் விரிவாக ஒப்பிட்டு விட்டு கடைசியில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
“இங்கு விளையும்
மாணிக்கங்களின் தரத்தைப்போலவுள்ள தரம் கீழை, மேலைத் திசைகளிலுமில்லை. ஆக எளிய சொற்களில்
சொல்ல வேண்டுமானால் மாம்பழத்துக்கும் எலந்தைப்பழத்துக்கும் உள்ள வேறுபாட்டைப்போல” என்று
எழுதிய பிறகு பேருவளையின் புகழ் மேலும் பரவியது. அதை வாசித்தவர்களுக்கு வாழ்வில் ஒரு
முறையேனும் இலங்கைக்கு போக வேண்டும் எனத் தோன்றியது.
அப்படியும்
இப்படியுமாக பேருவளைக்கு வந்து சேரும் நூற்றுக்கணக்கான மக்கள் திரளின் இரு துளிகள்தான்
நானும் என் உடன் பிறந்த சுல்தான் காக்காவும்.
பத்தை கூடிடும்
பேருவளையிலுள்ள எங்கள் அலுவலகத்தைத் திறக்கும்
முன் காக்காவும் நானும் தினசரி இளைப்பாறிச்செல்லும் வீடல்லாத வீடாக இருந்தது அன்வர்
நாநாவின் இல்லம். பத்தையில் புதினமாகக் காணக்கிடைக்கும் அருமணி மனிதர்களில் ஒருவர்
அவர்
சிறு பிள்ளைகளுக்கு
வாழை,அன்னாசி,பப்பாளி,வில்வம்,தோடம் உள்ளிட்ட பழங்களுடன் தின்பண்ட விற்பனையும் பத்தையில்
மாணிக்கக்கல் வாங்க வரும் வெளியூர் வணிகர்களுக்கு மதிய உணவு சமைத்துப் பரிமாறுவதுமாக
அன்வர் நாநாவின் கனாஅத்து ஓடுகிறது.
இரண்டு ஆண்கள்,மூன்று
பெண்கள் என மக்களைப்பெற்ற அன்வர் நாநாவிற்கு தன் பிள்ளைகளை நினைக்கும்போது உண்டாகும்
துயரத்தைப்போல வேறெப்போதும் ஏற்படுவதில்லை.
மகன்களின் வருமானம் விறகுக்கட்டுக்கும், வெளிநாட்டிலிருக்கும் மனைவியின் வருமானம் மளிகைப்பொருட்களுக்கும்
மருத்துவ செலவுக்குமாக சரி.
திருமணமாகாத
பெண் பிள்ளைகளைப் பற்றி பேச்சு வந்தால் ‘கப்ருலபோய்
கிடக்கிறது நல்லம்” எனக் குரல் நடுங்குவார் அன்வர் நாநா. வேலை ஓய்ந்த நேரங்களில்தான்
அவரின் மனம் உச்ச கட்ட சுழற்சியை அடையும். அவரால் கட்டுப்படுத்தவியலாத தளர்வு உடலில்
ஊர்ந்து ஏறும். உலக முடிவு நாளோடு தன் பெண் பிள்ளைகளின் திருமண நாளை இணைத்துப் பார்த்து
மனம் களைத்து அதுவாக தாண்டிச்செல்லும் வரை வெம்பிக் கொண்டிருப்பார்.
மார்க்கட்டின்
மீன்,இறைச்சி,மரக்கறியின் விலை ஏற்ற இறக்கங்கள்தான் அவரின் அன்றைய மதியம் வரைக்குமான
மன நிலையைத் தீர்மானிப்பது. அதைப் பொறுத்து அவர் நீட்டும் வெள்ளை வீதுரு குவளைகளில் சீனி கலக்கிய தெமிலி அல்லது வெறுந்தேயிலையைக்
குடித்த பிறகு கொழும்பிலிருந்தே கலங்கி வந்த காலைப் பொழுது தெளியாமலிருப்பதில்லை. இடர்
மிகுந்த பத்தையின் விலங்குகளை எதிர்கொள்வதற்கான ஊக்க மருந்தின் வீரியம் அதிலிருப்பதாக
கல் மோசடிகளில் மாட்டாமல் தப்பிக்கும் நேரங்களில் தவறாமல் காக்கா நினைப்பதுண்டு.
“பவலய்க்கு சாப்பாடு வய்க்கவா”? என தன் பல்லற்ற வாயினால்
கேட்கும் அன்வர் நாநாவின் கீழ் நாடி மேலுதட்டை உந்தி ஏற்றுவதினால்
ஒரு சாடைக்கு தேயிலை போச்சியின் வாயைப்போல
தோன்றும். அவர் உருண்ட சதுரங்கொண்டிருந்ததால் ‘சீல் வால்ரஸ்’ என்றும் பெயரிட்டிருந்தார்
என் காக்கா. ஒருபோதும் இஸ்திரியை அறியாத சட்டைக்கு மேலே சாரத்தை
சுருட்டி உடுத்து செருப்பணியாமலேயே திருமண,மவ்த் வீடுகளுக்குப் போய் வருவார்.
அயலிலுள்ள
திருமணத்திற்கு போய் விட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த அன்வர் நாநாவிடம் உள்ளூர் கல் வணிகரொருவர் பொதியொன்றை நீட்டியிருக்கிறார்.
இதை சாப்பாட்டுப்பொதி என நினைத்து அன்வர் நாநா ஏமாந்து விடாமலிருக்க அவரே முந்திக்கொண்டு “ஒங்களுக்குத்தான்
கால்ல போடுறதுக்கு கொழும்பிலேந்து வாங்கிட்டு வந்தேன்” என்றார்.
வக்கி வளவளப்பாக்கப்பட்ட
ஆட்டுக்கால்களைப்போல் தோற்றமளித்த டி எஸ் ஐ
தோல் செருப்பு காகிதத்தில் பொதியப்பட்டிருந்தது. இத்தனை காலம் அம்மணமாக திரிந்த காலை போர்த்துகிறோம் என மகிழ்ந்துக் கொண்டிருந்த
கல் வணிகரிடம் “இந்த மண்ணுல தங்கப்பவுனு புரண்டு கிடக்குறது தெரியுந்தானே.அது எப்பய்க்கும்
ஏங்கால்ல பட்டுக் கிட்டே இரிக்கணும்” என தன் சுட்டுவிரலில் தொங்கவிட்டவாறே அப்பொதியை
குறுஞ்சிரிப்புடன் திரும்ப நீட்டினார் அன்வர்
நாநா.
தனது அன்பளிப்பை
அன்வர் நாநா மறுத்து விட்டதால் ஏற்பட்ட ஏமாற்றத்தை விட இதுவரை பார்த்திராத அன்வர் நாநாவின் குறு நகைப்பைப்
பற்றி யோசித்துக் கொண்டிருந்தார் அவர்.
“தப்பா நெனய்க்க
வேணாம்.ஒங்க புதுச் செருப்புக்கு ஜசாக்கல்லா ஹைரா”
என்றவாறே சிறு சிறு எட்டுகளில் நடையைக் கிளப்பினார்.
கொஞ்சம் தொலைவிற்கு தன் பெருவிரல்களைக் கவனித்தவாறே சென்றார் அன்வர் நாநா. கொழுத்த வாத்து இரு பக்கமும்
சமனாகஅசைந்து அசைந்து சென்றது.
அன்வர் நாநாவின்
சொற்கள் விளங்காமல் சிறிது நேரம் அவர் போன
பாதையையே கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கல் வணிகர். சொற்களின் மேல் எல்லோராலும்
புரிய முடியாத எண்ணங்கள் வந்தமர்ந்துக் கொள்வதாலேயே அவைகள் பாரங்கொண்டவையாகி விடுகின்றன
என்பது தாமதமாகப் புரிந்தது.தன் கையிலிருந்த செருப்புப் பொதியை பள்ளி வாயில் வளாக மரத்தடியில்
வைத்து விட்டு நடந்தார்.
தன் மீது
மாதத்திற்கொன்றாக காக்கா சூட்டும் பட்டப்பெயர்களைப்
பற்றியெல்லாம் அன்வர் நாநாவிற்கு ஒரு கணக்கேயில்லை. தன்னை “டே அம்பர்” எனக்கூப்பிடும்போது
மட்டும் அவர் தன் உதட்டை முன்னுக்குத் தள்ளி சிரிப்பார்.பொடியனாக இருந்ததிலிருந்து
இப்போது வரைக்கும் அவருடன் மாறாமலிருக்கும் ஒரே விடயம் இந்த சிரிப்பு மட்டும்தான் என அவரின் கூட்டாளியும்
சகலையுமான கலாம் நாநா அடித் தொண்டையிலிருந்து குரலை துளாவியெடுத்துச் சொல்வார். பொதுவாகவே
அவர் ஒன்றை நினைத்து கொஞ்ச நேரங்கழித்துதான் பேசவே முடியும்.
என் காக்காவிற்கும்
அன்வர் நாநாவிற்கும் இடையே வயது வித்தியாசமுமில்லை கணக்கு வழக்குமில்லை. ஊரிலிருந்து வரும்போது அவருக்கு
மஸ்கோத்தும் குதிரை மார்க் வெள்ளை சாரனும் காக்கா கொடுப்பது
வழமை.நூறு ரூபாய் பெறுமதியுள்ள பகல் சாப்பாட்டுக்கு இருநூறு ரூபாய்களை கையில் மடக்கிக்
கொடுப்பார். உண்டு விட்டு கை துடைத்து எழும்பி கேட்டைத் தாண்டுவதற்குள் வீட்டுக் கடையிலிருக்கும்
பழங்களை அள்ளி காகித உறையிலிட்டு சீதனத்தைப் போல நீட்டுவார் அன்வர் நாநா.
“அவர் தந்த
பழங்கள்ட கணக்கப் பாத்தா நாம சாப்பிட்டது சும்மான்னுலோ வருது” என்பது தெளிந்த பிறகு அவர் கூடுதலாகத் தரும் பழங்களுக்கு
கொடுப்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக பணத்தை
சிறு தொகைகளாகவும் பொடிச் சல்லியாகவும் மாற்றி வைத்துக் கொள்வோம்.
இரண்டாவது
நாளாக பத்தைக்கு கல் வரவில்லை. இரத்தினபுரியைச் சுற்றி அடர் மழை பெய்ததால் கல் அகழ்வுப்பணிகள்
நடக்கவில்லை. ஏற்கனவே பார்த்து விடுபட்ட கற்களுடன் வில்ஜாதிக்கற்களும் வாங்கல் கூடிப்போனதினால்
விலை மூத்த கற்களுமே பத்தையில் வளர்ப்புப் புறாக்களைப்போல சுற்றிக் கொண்டிருந்தன. வேலையில்லாததால்
மூளை வயிற்றைப்பற்றி நினைக்கத் தொடங்கியது.லுஹர் பாங்கு இன்னும் சொல்லியிருக்கவில்லை.
அன்வர் நாநா வீட்டை நோக்கி மதிய உணவிற்காக நடக்கத் தொடங்கினோம்.
பின்னாலிலிருந்து
காலணி சீய்த்தலுடன் “ இருநூறு ரூவா சல்லியொன்டு எடுக்க ஏலுமோ ஹாஜி”?என்ற நொய்ந்த குரலின் இடைவெளிக்குள்
வியர்வை நெடியை கொண்டு வந்த காற்று அதை திசை மாற்றியது.முகத்தைப் பார்க்காமலேயே காக்கா
தனது இடுப்பு வாரைத் திறந்து காசெடுத்து நீட்டினார். ‘ஹ’ என்ற ஒலி கிளம்ப காலணி ஓசை
தொலைவிலாகியது.
எனது பார்வையைப்
புரிந்து கொண்டவராக “ நான் அவர்ட்ட கடன் வாங்குனேன்னு நீ நெனச்சிருப்பால்லே. அதுதான்
பேருவள”என்றவாறு சிரித்தார். காக்காவின் இந்தக் கூர்மையினால்தான் பேருவளையில் தாக்குப்பிடிக்க
முடிகிறது என அவரின் ஊர், இலங்கை நண்பர்கள் நடுவே அவருக்குப் பெயருண்டு.
“படிய வர்ற
மாடு எது முட்டித்தள்ள வர்ற மாடு எதுன்டு வெளங்கனும்பா. அதோட சாடயயும் பேச்சயும் வெளங்கணும்.
இல்லாட்டி சல்லி போய்ரும் என அலையடித்து செல்வது போல கையை அசைத்துக்காட்டினார்.
“அதுக்குப்பொறவு
என்ன நடக்கும்?” இடைவெளியெடுத்துத் தொடர்ந்தார். “ஏமார்றதுக்கு ஒரு பொட்டயன் வந்திக்கிறாங்குற
செய்தி தீப்பிடிச்ச மாதிரி பேருவளைல உள்ள பச்ச
புள்ளய்க்கும் வெளங்கீரும்.அதுக்குப் பொறவு நாம ஒத்தக் கல்லக்கூட வாங்கவே ஏலாது. அவன் சொல்ற வெலயப் பாத்து நமக்கே
ஒரு பயம் வந்துரும்.ஒரு ஊர மனிசன வெளங்கனுன்டா
மொதல்ல அவன் பயன்படுத்துற மொழியயும் அதுக்குள்ள இக்கிற தொனியயும் திட்டம் புடிக்கத்
தெரியணும். தொழிலுல அதுதான் மொதப்பாடமே” என்றார்.
பத்தைக்குள்
இத்தனை புதைகுழிகள் இருப்பதை நினைத்து முதுகு வியர்த்தது.அவைகளை தோண்டுவதும் மூடுவதும்
ஒரே ஆள்தானோ?என்ற குழப்பம் தலைக்குள் மினுக்கிட்டு மறைந்தது.
அவர் இது போன்ற சிக்கல்களை எப்படி முன்னர் சமாளித்தார்
என்ற விவரங்களைக் கூறுமாறுக் கேட்டேன். சொல்லத் தொடங்கினார்.
பத்தையில்
கூட்டமும் நல்ல வெய்யிலும் உள்ள ஒரு மதியப்பொழுதில் “ஒரு ஆள் வெல கேட்ட” என சத்தியமடித்து
கேட்பைச் சொன்னவரிடம் ‘வில கேட்டது ஒங்கட நோனாத்தானே” என அவரின் கண்களை பார்த்த பார்வையை விலக்காமல்
திருப்பிக் கேட்டிருக்கிறார். வந்தவர் காக்காவின்
கையைப் பற்றிக் கொண்டு “வெல கிடய்க்காத வேகத்துல சொல்லிட்டன்” என மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
“பொய்ய
எப்பிடிக் கண்டு பிடிச்சியோ?”
“.எவ்ளோ கேட்ட
பொறவும் ஒரு ஆள் கேட்டாருங்குறதயே திரும்ப
திரும்ப சொல்லவும் சந்தேகம் வந்துது. அதோட பொய் சொல்றவன் கண்ணுல ஊட்டமிருக்காது”.
இது போல தொடர்ந்த
பல தந்திர உடைபடுதல்களினால் காக்காவிற்கு ‘ சம்மான்
பரிகாரி’ எனப் பெயரிட்டிருந்தனர் பத்தைக்காரர்கள்.
“ஒன்னு தெரியுமா
ஒனக்கி?”என்றவாறே தன் சட்டைப்பையிலிருந்து உறையிடப்பட்ட அட்டையொன்றை உருவினார். “இதுல
நம்ம கெட்டித்தனத்துக்கு மேல ஒன்னு இக்குது. இங்கப்பாரு”.அட்டையை என் கையில் தந்தார்.
சதுரம் சதுரமாக
உருட்டப்பட்டிருந்த கறுப்பு மசிஅறபியெழுத்துகள்.மனிதரின்
தீங்கிலிருந்து பாதுகாவல் தேடும் துஆ. “நான் சிலோனுக்கு வர்ற மொதல் ஸஃபர்ல உம்மா எழுதித் தந்த கார்மான துஆ. துஆலாம் உடனே மனப்பாடமாவீட்டு.
உம்மாட கொரல் நெஞ்சுக்கிட்ட பட்டுக்கிட்டே
இக்கிறதும் ஒரு தைரியந்தானே.” என்றவரின் முகத்தைப் பார்க்காமல் அட்டையை அவரின்
கையில் வைத்தேன்.
மேகத்தின்
அடுக்குகளுக்கு இட்டுச் செல்லும் தேக்கு மர உத்திரத்தினருகில் அமர்ந்து வீட்டில் யார்
பயணப்பட்டாலும் இராகமெடுத்து ஓதும் உம்மாவின் குரலையும் ஓதும் போது எங்கள் தலை மீது
படியும் அவளின் வலுவேறிய கைத் தொடுகையையும் பல முறை நினைத்துப் பார்த்து அதில் எதுவும் விடுபடவில்லை
என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
பேருவளையின்
பேச்சு வழக்குகளுக்குள் மறைந்திருக்கும் உளவியலையும் உத்திகளையும் பற்றி காக்கா வரிசையாக
சொல்லிக் கொண்டே வந்தார்.பேருவளைக்கென சொல் முதலி தொகுத்தால் காலம் போகப் போக அதற்குள்
அரும்பொருளின் அந்தஸ்து ஏறி விடும். இது போல சங்கதிகளுக்கு அருமணிகளை விட பெறுமதி கூடுதல் என கிழக்கிலங்கையின்
ஏ.றீ.எம்.இத்ரீஸ் மாஸ்ரர் தன்னுடைய ‘சோனக மண்’
வரலாற்றுத்தொடரில் எழுதியிருக்கிறார்.
அன்வர் நாநாவின்
வீடும் வந்து விட்டது. தெமிலி கொண்டு வந்த பிக்அப் வண்டி வீட்டு வாசலை மறைத்தவாறு நின்றிருந்தது.
சுமையை இறக்கி முடிக்கும் வரை காத்திருந்தோம்.உள்ளே
நல்ல கூட்டம். ஆட்கள் குறைந்தவுடன் “வாருங்கோ”என்றார் அன்வர் நாநா.
சோற்றுடன்
மாசிக்கருவாடு சம்பல், சலாது,ஆக்கின மீன்,தேங்காய் தலைப்பாலில் வெந்து மசித்த வம்பட்டு,அன்னாசித்
துண்டம் என வெள்ளை வீதுரு கோப்பைகளில் பரத்தி வைக்கப்பட்டதைப் பார்க்கும் போது ராத்தாக்கு
மாமி வீட்டிலிருந்து தவடி தவடியாக சைக்கிள்
ரிக்சாவில் வந்திறங்கிய திருமணச்சீர் தாலங்களின் நினைவு வந்தது.
அளவாக கடுகிட்டு
தாளித்த மஞ்சளிட்ட மோர்க்குழம்பை வாயகன்ற பீங்கானில்
கொண்டு வந்து வைத்தார் அன்வர் நாநா. மீன் ஆணத்தின் மணத்திற்கு இணையாக நின்றது அதன்
தேங்காய் நெய் தாளிப்பு வாசம். இலங்கைக்கு வந்த புதிதிலேயே இதைச்செய்யும் முறையை அன்வர்
நாநா வீட்டாருக்கு காக்கா பழக்கிக் கொடுத்திருந்தார்.
மீன் கோப்பையை
சோற்றில் காக்கா சரிக்கப்போகும் வேளையில் “அத எடுக்க வேணாம் சுத்தான் நாநா” என குறுக்கே
கை நீட்டி காக்காவின் கையிலிருந்த பீங்கானை அன்வர் நாநா உருவியதில் கொஞ்சம் ஆணம் உணவு
விரிப்பில் சிந்தியது..
“நரிதானே புழோணும் ஆடு என்னத்துக்கு”என முணுமுணுத்தவாறே
அந்த பீங்கானை சமையல்கட்டினுள் வைத்து விட்டு வந்தவர் “இந்தாங்கோ காரல் மீன் கோப்ப
இதான் ஒங்களுக்குள்ளது ” என புதியப் பீங்கானை நீட்டினார்.
மீன் பீங்கானை
அன்வர் நாநா அப்படி திடீர் புடீர் என பிடுங்கியதில் எரிச்சல் ஊறியது. சாப்பிட வந்த ஆட்கள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால்
அன்வர் நாநாவிற்கு முதல் ரக அறுத்துக் கிழிப்பை காக்கா நடத்தியிருப்பார். வம்படுவின்
தேங்காய்ப் பால் சுவையில் அதைத் தொடர வேண்டாமென அவருக்கு தோன்றியது.பீங்கானை பறிக்கும்போது
அன்வர் நாநாவின் கண்களுக்குள் குத்தூசியொன்று மின்னியது போல இருந்ததாக வெளியில் வந்த
பிறகு சொன்னார் காக்கா.
அன்று சனிக்கிழமை
என்பதால் கொஞ்சம் நேரத்தோடு பத்தைக்கு வந்து விட்டோம். இரயில்வே கேட் வரை கல் பத்தையிலுள்ள
கூட்டம் நீண்டிருந்தது. புதியதாக வெட்டி ஒப்பமிட்டு வந்த கல் தொகையைக் காட்டுவதற்காக சாதிக் நாநாவை
தேடி இருவர் வந்தனர். அவர் வழமையாக நின்று கல் வாங்கும் மின் கம்பியருகே காணப்படாததால்
அங்குமிங்கும் தேடி விட்டு அருகிலிருப்பவர்களிடம் விசாரித்தனர். அவருக்கு தோல் சொறிச்சலுடன்
முகம் கை கால் எல்லாம் வீங்கிக்கிடப்பதால் பத்தைக்கு இரண்டு நாட்களாக வரவில்லை என்ற
தகவலறிந்த பின் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இந்த தகவலை வழமையாக மதியம் சோறு உண்ண வரும் ஆட்களிடம் தெரிந்துக் கொண்ட பிறகு
மீன் பீங்கான் மர்மத்தை அன்றைய அசரின் வெறுந்தேயிலைப் பொழுதில் முழுமையாக திரை விலக்கினார்.அன்வர் நாநா.
“ஆள் பெரிய கோடீசுவரனா மாணிக்க யாபாரியா ஈந்தா போதுமா?
ஒரு கெழமயா சாப்புட்டதுக்கு சல்லிய கேட்டா தாரல்ல.
அப்பம் பலயனத்தானே கொடுக்கோணும்” என்றார். மேற்கொண்டு
தொடர விரும்பாமல் காலை அசைத்துக் கொண்டு மௌனமாக இருந்தார்.
பிறகு எழுந்து மூலையில் சதுரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சாக்குப்பைகளை நோக்கிச் சென்றார்.:“இரிந்தா
இந்த மனுசன மாதிரி இரிக்கோணும்.” இதை சொல்லும்போது அவருக்கு இலேசாக மூச்சிரைத்தது.
ரண்டு வரிசமீக்கும்.
சாக்குல சல்லி இல்லாததச் சுட்டி கைல கீரயும் கொச்சிக்காய் பக்கற்றோட மாகட்டுலேந்து
நான் வந்து கொண்டீக்கும்போது புறத்தாலேந்து
ஏங் கீச யாரோ
தொட்டாப்போல ஈந்திச்சி.திரும்புனா அபுலஸன் ஹாஜியார்.புட்டுப்பழம் போல மனுசன்.சலாம்
சொல்லீட்டு சொண்டு கொடுக்காம என்ன முந்திப் போயிட்டார்.
பவல் சாப்பாடு
ஓஞ்ச நேரத்துல ஊட்டு வாசல்ல ஆட்டுக்குட்டி உசரத்துக்கு ரண்டு சாக்கக் கண்டன். ஒரு மாசத்துக்கு
காணுற கணக்குக்கு அரிசி,பரிப்பு,கிதுல் கருப்பட்டி,பால்மா,நெய்யி, பான்,மாசி,வெறவுக்
கட்டுலாம் ஈந்திச்சி.
எல்லா மாசமும்
முப்பதாந்தேதி பிந்தாமே சுபஹ் தொழுதுட்டு ஊட்டுக்கு வாரதுக்குல்ல வாசப்படில இருட்டோட
இருட்டா ரண்டு சாக்கும் ஈக்கும். ரண்டு பெருநாளய்க்கும் புது உடுப்பும் தாரதுண்டு ஹாஜியார்”.
கண்களில் நீர் மினுங்க ‘இந்த பத்தைல நடக்குற இமிட்டேசன், பொல்லு
அநியாயத்துக்கு ஊருக்குள்ள கடல்தான் வரோணும்.அபுலசன் ஹாஜிட சதக்காதான் அதத் தடுத்து
வச்சிக்குது.” கைக்கெட்டும் தொலைவில் கடல்
காத்து நிற்பதான தோரணையில் அன்வர் நாநாவின் முகம் இருந்தது.
நீங்க பாக்குற
இந்த சாக்குலதான் மொத மொதலா குசினி சாமான் வந்த. அவ்ளோ பறக்கத்தான
சாக்கு இது”.அவற்றை எடுத்து இரண்டு தடவை உதறி நாற்சதுரம் கச்சிதமாக வருகிற மாதிரி மடித்து
மூலையில் வைத்தார்.
கல் வணிகத்தில்
ஏற்படும் இழப்புகளைப் பற்றி மட்டுமே தன்னிடம் ஊர் மனிதர்கள் பகிரும்போது அபுல்ஹஸன் ஹாஜியாரின்
புன்னகை மாறா முகமும் நளீம் ஹாஜியார் பூசும் அத்தர் மணமும் அவருக்குள் உருவாகும் சொற்களின் அம்மணத்தை தடுத்து
விடும்.
தாங்கள் இழந்ததாக ஊர் வணிகர்கள் கூறும் தொகைகளை நினைவில்
ஒதுக்கிக் கொண்டு படுக்கையில் வைத்து மனதிற்குள்
கூட்டிப்பார்ப்பார் அன்வர் நாநா. அது பிசகும்போது
கைவிரல்களை மடக்கி எண்ணுவார். கணக்கு அடைபடுவதற்குள் தூக்கம் மேலிட்டு விடும்.
ஏதாவதொரு நாள் கூட்டலுக்கான எண்கள் அவரைத் தேடி வரவில்லையெனில் முந்திய நாளின் கூட்டலை
மீட்டிக் கொண்டிருப்பார்.
கல் வணிகனான
தனது மூத்த மகன் விசயத்திலும் அவர் எதிர்மறை எண்ணத்தையேக் கொண்டிருந்தார். கடினமாய்
உழைப்பவனென்றாலும் கல் வணிகம் செய்யும் அவனின் காதில் மந்தமிருப்பதால் அவனுக்கு மதிக்குறைவும்
இருக்க வேண்டும் என அவர் திடமாக நம்பினார்.மருத்துவரா அப்படிச்சொன்னார்? என அவரது உறவினரொருவர் கேட்டதற்கு “ஆனயப் பாக்குறதுக்கு பூதக் கண்ணாடி
தேழ்வயில்ல” என எரிந்து விழுந்தார். ஏதோ திரும்பச் சொல்ல வாயெடுத்த அவரது உறவினர் அன்வர்
நாநாவின் முகத்தைக் கண்ட பின் மௌனித்து விட்டார்.
தண்டவாள இரும்பில்
அடித்து நீட்டிய பொலிவுள்ள கைகால்களுடன் தெளிவும் வலுவுமான பேச்சும் உடைய சகலையின் மகனை தன் மகனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதெல்லாம்
அவரின் மன அமைதி குலைந்துக் கொண்டிருந்தது.
அந்தி மயங்கி
மஃரிப் பாங்கு சொல்வதற்கு சில நிமிடங்களே இருந்த நேரத்தில் அன்வர் நாநா பள்ளிவாயிலுக்கு
கிளம்ப இருந்தார். வீட்டு வாயிலை அணைத்தாற் போல வண்டி ஒன்று வந்து நின்றது. “பள்ளிக்கு
போற டைன்ல றோட்ட மறைக்குறானே” என கண் கூர்த்தவாறே ஓட்டுநரைத் தேடினார். வண்டியிலிருந்து மூவர் பாய்ந்து இறங்கினர்.சாளரத்
திண்டில் காலை வைத்தவாறு ஒருக்களித்து நின்று சிகரட் இழுத்துக் கொண்டிருந்தான் சகலையின்
மகன். வந்தவர்களில் மெலிந்து உயரமாக இருந்தவன் ‘கள்ள வேஸ் மகன் ஹர்றேங்குட்டி’ என்றவாறே சகலை மகனின் பிடரியில்
கைகளைக் கூட்டி இறக்கினான்.
சந்திக்குழியை
குறி வைத்து இரண்டாவது ஆள் எற்றும்போது கீழே விழுந்த அவனின் முகத்தில் ஒரு திகைப்புமில்லை.
அதற்குள் அவன் நாயைப்போல தன் இரண்டு கைகளையும் விறைப்பாகத் தரையில் ஊன்றியிருந்தான்.
மீண்டும் அடிக்க கையை ஓங்கியவர்கள் பின்னர் அதைத் தாழ்த்தினர். ஒருவர் பின் ஒருவராக மூவரும் அவன் தலையில்
கூட்டிக் காறி உமிழ்ந்தனர். அது பஞ்சுத்துணிக்கைப் போல அவன் தலையில் ஒட்டியிருந்தது.வளவில்
நின்றிருந்த கொட்டாகாட்சி இன தாயும் குட்டிகளுமான
மூன்று ஆடுகளையும் அவிழ்த்து வண்டியில் ஏற்றிக்கொண்டு போகும்போது சிங்களத்திலும் தமிழிலும்
கூடவே சில புதிய சொற்களிலும் ஏசினர்.
நடப்பதைப்
புரிந்து எதிர்ச் செயல் ஆற்றுவதற்குள் எல்லாம் முடிந்து விட்ட திகைப்பிலிருந்தார் அன்வர்
நாநா. கலைந்திருந்த தலை முடியைக் கோதியவாறே “ அது ஒன்னுமில்ல சாச்சா.அவங்கள்லாம் கூட்டாளி
மாரு”என்றபடி சகலை மகன் வீட்டிற்குள் போனான், தான் பதறி ஏதாவது செய்திருந்தாலும் அது
உண்மையிலேயே அங்கு தேவைப்படாத ஒன்று என்பதை சற்று சுணங்கிதான் அவரால் புரிந்துக் கொள்ள
முடிந்தது.
வந்தவர்கள்
ஏசிய புதிய சொற்கள் அன்வர் நாநாவிற்கு பிடிபடாததால் அது மலே மொழியாக இருக்கும் என நினைத்துக்
கொண்டிருந்தார்.அந்த எண்ணத்தை மேலும் தொடர்வதற்குள் கண் சுருக்கி வாய் சுழற்றி ஓசையெழும்பாமல் அழுத பின்
தன் மகனுக்கு கோடு போடாத புது வெள்ளைச் சாரனொன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்.
இத்தனை சங்கட
சந்தோசங்களுடன் நகர்ந்துக் கொண்டிருந்த அன்வர் நாநா குடியிருக்கும் கூட்டு இல்லமென்பது
ஒரே வீடுதான். எல்லாப் பேச்சு மூச்சுகளையும் தடுத்து திரும்ப கீழே அனுப்புவதினால் பிசுக்கேறியிருந்த
காங்கிரீட் முகடுடைய பௌதிகக் குடில். அவற்றிற்குள் சிறுத்த பெருத்த இரு வேறு அண்டங்கள்.
வீட்டிற்கு
வரும் பெண்களிடம் நிறுத்தத் தோன்றாமல் பேசிக் கொண்டிருக்கும் சகலையின் மனைவி அவள்தான்
அன்வர் நாநாவின் மைத்துனி. அவளின் உரையாடலில் அடிக்கடி வந்து விழுவதும் நடுவில் அழுத்தி உச்சரிக்கப்படுவதுமான
‘ப்ரெஸ்பட்டேரியன்’ என்ற ஒற்றைச் சொல்லை ஒல்லாந்தர் காலத்து கேக்காக இருக்கக்கூடும் என நினைத்திருந்தார் அன்வர்
நாநா.
ஒரு நாள்
காலை தேயிலை போடுவதற்காக சீனியைத் தேடும்போதுதான் ஒரு மாதத்திற்கான சீனி பத்தாம் நாளிலேயே
முடிந்தது விளங்கியிருக்கிறது. வீட்டுக்கோழி கொத்தியிருப்பது திட்டமாகவே “அபுலசன் ஹாஜியார்
அளவுக்கு இல்லண்டாலும் ஊட்டுக்குள்ள நம்மளால முடிஞ்ச சதக்கா”ன்னு சொல்லி சீனியின் மறைவுக்காக
சப்ர் செய்துக் கொண்டார்.
தேவாலயம்
சார்ந்த பள்ளிக்கூடத்தில் தான் படித்ததைத்தான் தன்னுடைய மைத்துனி ‘ப்ரஸ்பெட்டேரியன்’
என பெருமையடித்துக்கொண்டிருந்தது விளங்கிய பிறகு தனியாக இருக்கும் நேரங்களில் தன் தொய்ந்த
கன்னத்தையும் தாடையையும் இழுத்துப் பிடித்து அச்சொல்லை எத்தனை முறை உச்சரித்துப் பார்த்தாலும் அது “பஸ்
பஸ்“ என்பதாகவே அவர் காதுகளுக்குக் கேட்டது.மகனின்
குறைபாடு தனக்கும் வந்து விட்டதோ என வருந்தினார்.
பல முறை முயன்ற
பின் சோர்ந்து போகும் சமயம் சீனி டப்பாவின் நினைவு வரும். நாட்கள் போகப்போக சமையலறைக்கட்டிலுள்ள
எல்லா மளிகைப் பொருட்களையும் அவ்வாறு அவர் சமநிலைப்படுத்தப்பட்ட துயரத்துடன் நினைக்க
வேண்டி வந்தது.
உண்டதற்கு
பணம் தராமல் தன்னை ஏமாற்றியவர்கள், பத்தையில் ஏமாற்றுபவர்கள் என இரண்டு வகைப் பட்டியலை
தன் மகளிடம் சொல்லுவார். அவளும் அதை கார்கில்ஸ்
சிறீலங்கா அன்பளிப்பாகக் கொடுத்த ரெக்சின் உறையிட்ட டயரியில் எழுதுவாள். டயரியை தன்
மெத்தைக்கடியில் பாதுகாத்து வந்தார் அவர். பணத்தை கூட அவர் மூடியில்லாத நெஸ்பிறே டப்பாவில்தான்
போட்டு வைப்பார்.ஏமாற்றுக் கதைகளை புதியதாகக் கேள்விப்படும்போதெல்லாம் பாவப்பட்டவர்களுக்கு
உணவளிக்கத் தவறுவதில்லை
தான் இதுவரை
சாப்பிட்டதெல்லாம் நஞ்சாகப் போகும் என சத்தியமிட்டு வில்ஜாதிக் கற்களை அருமணிக்கற்கள்
என நம்ப வைத்து உள்ளூர் ஆள் ஒருவர் ஏமாற்றி விற்றிருக்கிறார். விஷயம் சுணங்கி விளங்கி அடுத்த நாள் போய்க்கேட்ட தில் “பேருவள கோச்சு
பீலிய தாண்டக்கிடைக்காது” என நான்கு பேர் கூடி மிரட்டியுள்ளனர். தனக்கு நேர்ந்த இந்த
நடப்பை வணிகத்திற்கு புதியவரான வெளியூர் சிறு
வணிகரொருவர் மதியம் சாப்பிட வந்த இடத்தில் அன்வர் நாநாவிடம் சொன்னார். மேல் விவரம்
கேட்பதற்குள் அம்மனிதர் அங்கிருந்து போய் விட்டிருந்தார்.குன்றா அமைதியுடன் நடந்ததை
சொன்ன அந்த மனிதரின் முகத்தைக் கூட நினைவில் கொள்ள முடியாமல் போனதில் அவருக்கு நிலை
கொள்ளவில்லை.
அந்த சொற்கள்
ஒவ்வொன்றும் தான் நிற்கும் நிலத்திலிருந்து தன்னைப் பிடுங்கியெடுத்து எல்லாம் மங்கி தகிப்பேறி திசை கெட்ட ஓர் உப்பு நிலத்துக்குள் எறிவதை அறிந்தார்.
ஏமாந்த மனிதரின் அமைதி ததும்பிய அச் சொற்களின் அடியில் யானைக் கண் அளவிற்கு நெருப்பு
சுடரிட்டதைக் கண்டபிறகு உள் அமைதி போயிற்று.
தான் ஈந்தது
மட்டும்தான் தனக்கு என்ற பிரபல சொல்லை அதன் முழு பொருள் தர்க்கங்களுடனும் சொன்ன நளீம்ஹாஜியாரின் மவ்த்திற்குப்
பிறகுதான் பேருவளையில் குறிப்பாக பத்தையில்
இடை யாமத்தில் நாய்கள் தனியாகவும் கூட்டாகவும்
நாள் தவறாமல் ஊளையிடுகின்றன. அந்த ஊளையைக்
கேட்பவர்கள் யாரும் அதைத் தவற விட முடியாத படிக்கு ஏற்ற இறக்க நீட்சிகளுடனும் அவை இருப்பதாக பள்ளிவாயிலில்
பேச்சு.
“அத பாட்டுன்டு
நெனச்சா ஒன்னாம் நொம்பர் மோடத்தனம். நாய் எங்கயாவது பாடிக்கேட்டமா? எறங்கப்போற பலாய் முசீபத்துகளோட சங்கு அது. நாய்க்கு வெளங்கறது கூட நமக்கு
வெளங்க ஏலாது. அதான் துன்யா” என அன்வர் நாநா பள்ளிவாயிலில் பேசிக்கொண்டிருந்தவர்களின் வட்டத்திற்குள் தலையைப்போட்டுச் சொன்னார். நாய் பாடிய செய்தியைப் பரப்பியவர்கள்
அன்வர் நாநாவின் சொல்லைக் கேட்டு வெட்கமடைந்தனர்.
கூட்டத்திலிருந்த
மாறுகண் இளைஞனொருவன் அவர் கிண்டலடிக்கிறாரா?
என்ற அய்யத்தில் அவரது கண்களைக் கூர்த்தான். ‘மனாகிபும் ஹழராவும்
வைச்சா எல்லாம் ஹைராவும்” என யாரோ ஒருவர் சொல்ல விலை
உயர்ந்த அத்தரை தேய்த்திருந்த மனிதரொருவர் அதுக்குள்ள நார்சா
செலவு என்னோடது என சொன்னார். ஆட்கள் அதை சரியாகக் கேட்கவில்லையோ என்ற அய்யத்தில் மீண்டும்
ஒரு தடவை உரத்துக்கூறினார். அவர் சொன்னது எல்லோருக்கும் சரியெனப்பட்டது.பிரச்னைக்கு
விடை கண்டு விட்ட நிறைவில் கூட்டம் கலைந்தது.
ஊராருக்கு
கேட்ட அந்த கூட்டு ஊளையினால் அன்வர் நாநாவுக்கும் இரவில் உறக்கம் கெட்ட போது கடலிலிருந்து
கிளம்பிய சேற்று முடை வீட்டின் எல்லா பகுதிகளிலும் குடலைத்துண்டாக்கும் கூர்மையுடன்
வீசியது. மேலிருந்து இறங்கும் பலாய் முசீபத்துக்களுக்கான ஒலியும் மணமும் வந்து விட்டதனால்
மீதியுள்ள உருவத்தின் வரவும் முழு உறுதியானதை எண்ணி அவருக்கு வயிறும் மனமும் ஒரு சேரக்
கலங்கிற்று. இந்தக் குறி காட்டலின் தெளிவில்தான் பள்ளிவாயில் கூட்டத்தாரிடையே தன்னால்
அவ்வாறு அழுத்தமாக சொல்ல இயன்றதை நினைத்து அவர் கொஞ்சம் ஆறுதலடைந்தார்.
பத்தையில்
ஏமாற்றப்படும் வெளியூர் மனிதர்களிடம் பகலுணவிற்கான பணத்தை வாங்குவதில்லை என தீர்மானித்ததோடு
அதை விடாமல் கடைபிடித்தும் வந்தார்.ஏமாற்றுபவர்களின் பெயர்ப் பட்டியலை தன் டயரியிலிருந்து
எடுத்துக் காட்டி புதியதாக வருபவர்களிடம் எச்சரிக்கத் தவறுவதில்லை. ஏமாந்த கதையை சொல்லியவரிடமிருந்து
அந்த வில்ஜாதிக் கல்லைப் பணமளித்துப் பெற்று அதை தன் வீட்டு மீன் தொட்டியில் புதியவர்களுக்கு
காட்டுவதற்காக போட்டு வைத்திருக்கிறார்.மீன் தொட்டியைக் கடந்து போகும்போதெல்லாம் அதிலிருந்து
ஏதோ ஒரு கண் தன்னையே பார்ப்பதாக சொன்னபோது அது நினைவு மாறாட்டமாக இருக்கும் என சொல்லி
அவர் மகள் நகைத்தாள்.
அன்று சுடரிட்ட
நெருப்புத் துளிக்கும் தனக்கும் நடுவே காப்பரண்
உண்டாகியிருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு உருவாகியது. அது காலை வேளையைப்போல உறுதியானது
தவறிவிடாதது என நம்பினார். அதை இன்னும் திடப்படுத்துவதற்காக இருக்கிறதில் புதிய சாரனை
உடுத்து பள்ளிக்கு வழமையை விட நேரத்தோடு சுபஹ்
தொழச் சென்றார் அன்வர் நாநா.
நானும் காக்காவும்
ஊர் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமிருந்தன. நாளை மறுநாள் வானூர்தி என்றால்
ஒரு நாள் முன்னதாகவே கொழும்பு சென்று தங்கி விட்டு புறப்பட்டுச்செல்வது வழமை. எங்களது
மூன்று மாத வீசா முடிந்து ஊருக்கு புறப்படும் நாள் வரும்போது இலங்கை சல்லிக்கு அய்யாயிரம்
ரூபாய்கள் கணக்கில் அன்வர் நாநாவிற்கும் அது போல இன்னொரு வறிய மனிதருக்கும் கைமடக்கிக்
கொடுப்பதுண்டு.வணிகம் நன்றாக இருக்கும் நாட்களில் இத்தொகை கூடுமே தவிர குறைவதில்லை.
மழை ஓய்ந்த
பின் உள்ள மதியத்து சாலைக்குள் எருமைக்கண்ணின் பளபளப்பேறிக் கிடந்தது. பயண விடைபெறுவதற்காக
அன்வர் நாநா வீட்டுக்குச் சென்றோம்.நெய்ச்சோறும் பொறித்த கோழியிறைச்சியும் வட்டிலாப்பமும்
ஆக்கியிருந்தார்.வாழைப்பழமும் வெறுந்தேயிலையும் கழிந்து வலந்துகளை
ஒதுங்க விட்ட பிறகு வீட்டிற்கும் வளாகச் சுவற்றுக்கும் இடையே உள்ள வெளியில் அமர்ந்து
பேசிக் கொண்டிருந்தோம்.
சாலையைப்
பார்த்தவாறே பேசிக் கொண்டிருந்த அன்வர் நாநா “அவள்ட எனல் பட்டா அந்த எடத்துல ஒன்னுமே
மொளைக்காது. அவள ஹத்தியாலத்தான் குத்தோணும்” என்றார். இதைக் கேட்டு திகைத்த எங்களிருவரையும்
பொருட்படுத்தாமலேயே நடந்த கதையை அவிழ்த்தார்.
மரவள்ளிக்கிழங்கு
விற்பவளான அந்த சிங்களப்பெண் யாலே காட்டிலிருந்து கொண்டு வந்த தேனைக் கொடுத்து டாமி
ஹாஜியாரை மயக்கியதோடு அவரின் மனைவி மக்களை விட்டு பிரித்தும் விட்டிருக்கிறாள்.மதிப்பிடப்படாத
அவரின் நீல மஞ்சள் மணி சேகரத்தையும் அவள் காணாமலடித்ததாகவும் அவர் தன்னை விட்டுப் போகாமலிருக்க
அவள் தன் வீட்டு முற்றத்தில் தொங்கும் கலயத்தில் ஆவியைக் கும்பிட்டு அதற்கு வெல்ல அப்பமும்,பணியாரமும்
படைத்து வருவதாக சொல்லி முடித்தார். “தேன் பாணின்னு நெனச்சு ஊத்தய நக்குன ஹத” என்றவர்
சரிந்துக் கிடந்த தன் அழுக்கேறிய தொப்பியை
சரி செய்தார்.
பல்லும் மொழியுமற்ற
அவரின் பேச்சிலிருந்து நாங்கள் பொறுக்கிக் கோதுடைத்து விளங்கிக் கொண்டவை போக விளங்காத மீதமுள்ள சொற்களுக்குள்
ஒட்டிக் கிடக்கும் செய்திகளுக்காக மனம் துளாவியது.
தரைக்கும்
மினாராவுக்குமான ஒளிவு மறைவு சங்கதிகள் கூடு மறக்காத தேனீயைப் போல எங்கிருந்தாலும்
வட்டமடித்து அவரிடம் வந்து சேருகின்றன. அந்த சங்கதிகளில் மதிப்புக்கூடியது என அவர்
நினைக்கும் ஏதேனுமொன்று அவரின் மனத்திலிருந்து உயரும்போது அவருக்கு பிடித்தமான வில்வப்பழத்தின்
நொதித்த மணம் வீசாமலிருப்பதில்லை.
நான் கண்ட
வரைக்கும் அன்வர் நாநா யார் வீட்டுக்கும் போவதில்லை.
பத்தை திண்ணைகளிலும் தெரு முக்குகளிலும் தேயிலைக்கடைகளிலும் அமர்ந்து பேச்சளப்பதும்
கிடையாது. ஐவேளைத் தொழுகைகளுக்கு அடுத்தபடியாக அவர் வரிசைத் தவறாமல் செய்து வருவது சாப்பாடு விளம்பல், சிறு கடை விற்பனை,சந்தைக்கு
செல்லல் மட்டும்தான். பேருவளையின் நிழல் செய்திகளை அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையல் எனக்கருதியதால்
எங்களிருவரைத் தவிர அவரது குடும்பத்தினரிடம் கூட அவற்றைப் பகிர்வதில்லை அன்வர் நாநா.
மாத சுழற்சியில்
வரும் அடி வயிற்று வலியுடன் கஃபீல் சம்பளத்தை முடக்குவதும் இணையும் நாளில் “மாணிக்கம்
பொரள்ல ஊர்ல பொறந்தும் அதுட வாசன கூட இந்த மனுசன் மேல ஒட்டலியே” என மனம் புரள்வாள்
வளைகுடாவிலிருக்கும் அவரின் மனைவி.
அது போல உள்ள
சமயங்களில் ஊரிலிருந்து கொண்டு வந்த பலப்பிட்டி கருவா தைலக்குப்பியை எடுத்து முகர்வாள்.அதன்
பூடக கார மணம் தலையின் முடிச்சுகளுக்கு மட்டும் இலக்கு பிசகாமல் செல்வதற்கு வசதியாக
கண்களை இறுக மூடிக் கொள்வாள்.கவலைகளின் கனம் கூடும் சமயங்களில் அக்குப்பியை திறந்து
வைத்துக் கொண்டு நிறைய மௌனமும் ஓரிரு சொற்களிலுமாக பேசிக் கொண்டுமிருப்பாள். ஊருக்கு
போகும் வரைக்குமான மாதங்களை எண்ணி தைலக்குப்பிகளை வாங்கி வந்திருந்தாள்.
வீட்டிலுள்ளவர்
வெளிநாட்டில் இருப்பதற்கான எந்த செழிப்புத் தடயமும் அற்ற அன்வர் நாநாவின் வீடு. பிள்ளைகள்
பள்ளிகளில் பரிசாகப் பெற்ற தென்னை ஓலைகளில்
முடையப்பட்ட கைவினைப் பொருட்கள் மட்டுமே ஷோ கேசுகளில் இருந்தன. மீதியுள்ள இடங்களில்
சுவற்றின் வண்ணம் மங்கி தேமல் போல வெண்பட்டி தென்பட்டது.
கொண்டு வந்த
கைமடக்கை காக்கா அன்வர் நாநாவின் சட்டைப்பைக்குள் திணித்த உடன் சலாம் கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.அவர் வீட்டைத்தாண்டிய
சாலை சந்தியில் தீர்ந்த வணிகத்தின் தரகிற்காக
இருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர்.
சீனர்களும்,இந்திய
மார்வாடிகளும் வந்திறங்கிய பிறகு தடுக்குப்பாயை மடிப்பது போல நூறு நூறு தட்டுகள் கொண்ட
ஆண்டுகளின் அடுக்குகளாயிருந்த இலங்கை வாழ்க்கையை
மடித்துக் கொண்டு திசை மாறினர் காயல்பட்டினத்து கல் வணிகர்கள்.
பேருவளைக்காரர்கள்
கிண்டலடிக்கும் காயலர்களின் ‘பைய்யர்’ ‘லாட்டு’ என்ற பிழையான ஆங்கில உச்சரிப்புகளும்
வயதான ஓரிருவரின் நினைவுகளில் மட்டுமே எஞ்சியிருந்தன. “காயல்பட்டினம் மும்பாயிக்கு
பக்கத்திலயா ஈக்குது” என பூச்சன்னம் கொண்டு வரும் பூச்சைக் கண் பொடியனொருவன் தன்னிடம்
கேட்டதாக காக்கா சொன்னார்.
சீனர்கள்
ஆண்டு வாடகையில் வீடெடுத்துத் தங்கினர்.கடைகளின் பெயர்ப்பலகைகள் ஆங்கிலம் தமிழுடன்
சீனத்திலும் எழுதப்பட்டிருந்தன. நூறு சதவிகிதம் பியூர் வெஜிடேரியன் என இந்தியில் எழுதப்பட்ட கடையானது ஜய்ப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட சமயலர்களுடன்
விளக்கு அலங்காரமுமாக முளைத்திருந்தது. மார்வாடி குஜராத்தி வணிகர்கள் வீடுகளில் வந்து
கல் வாங்கும் நாட்களில் சமையலறையிலிருந்து குக்கரொலி எழும்பாமலும் வீட்டு வளவில் ஆடு,கோழி
திரியாமலும் பார்த்துக் கொண்டனர் பேருவளை கல் வணிக ஹாஜியார்கள்.
கேகாலை கித்துல்
பாணி தயிர்,எருமைத்தயிர் சட்டிகளை டிரக்கில் வைத்து கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தனர்
அரைக்கலுசன் அணிந்த சிங்கள இளைஞர்கள். உண்டு விட்டு எறியப்படும் சட்டிகளை நக்குவதற்காக
நாய்கள் மூட்டு மடக்கிக் காத்துக் கிடந்தன. கல் மனிதர்கள் வேலையொழிந்து வீடுகளுக்கு
திரும்பியிருந்தனர். மூர்க்கங்களை மூடிய பாவனை ரீங்காரங்களால் காலையிலிருந்து மொய்க்கப்பட்டுக்
கிடந்த பத்தையின் சாலை மதியம் மூன்று மணிக்குப் பிறகு இன்னொன்றாகியது. மலையிலிருந்து
புறப்பட்டு மலைக்கு செல்லும் பாதையின் தோற்றத்தை தருவதில் அது எப்போதும் சலிப்பதேயில்லை.
நாங்கள் வீடடைந்த
சிறிது நேரத்தில் ஏணிப்படியின் கீழ்ப்படிகளிலிருந்து
“சுத்தான் நாநா‘ என்ற தொய்ந்த விளியொன்று கேட்டது.
கால் மூட்டைத்தாங்கியபடி படியேற முடியாமல் வெற்றுக் கால்களுடன் சிமிண்ட் தரையில் நின்றபடி
அன்வர் நாநாதான் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.அவர் கையில் குட்டிபொதியொன்று இருந்தது.
அதற்குள் பச்சை நிறத்தில் ஆறும் தென்னை மரங்களும் வரையப்பட்டிருந்த பீங்கான் தட்டுகள்
செய்தித்தாளில் கவனமாகப் பொதியப்பட்டிருந்தன.
யேர்மன் சில்வர்
கோப்பை ,மூன்று பற்றரி போட்ட அலுமினியம் டார்ச் வரிசையில் இப்போது பீங்கான் தட்டுகள்.
நான் அதைப்பார்த்து
வியந்து கொண்டிருக்க “அடே அம்பர் நில்லுடா“ என குரலெழுப்பினார் காக்கா.அதற்குள் தன்
வீட்டை நெருங்கி விட்டிருந்தார் அன்வர் நாநா. பாவப்பட்ட மனிதர் வீடு தேடி வந்து கொடுத்து விட்டுப்போன அன்பளிப்பை
திரும்பக் கொடுத்து அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நான் சொன்ன பிறகு அவ்வெண்ணத்தை
காக்கா அரை மனத்துடன் கைவிட்டார்.
நாங்கள் கொடுத்து
வந்த கைமடக்கு பணத்தின் மதிப்பை விட பீங்கான் தட்டுகளின் விலை கூடுதல். என்பதை முதல்
பார்வையிலேயே அறிந்தவுடன் சுல்தான் காக்காவின் முகம் வாடியது. சுருட்டி முகத்தில் எறியப்படும்
தொழுகைகளைப்போல ஒவ்வொரு தடவையும் அன்வர் நாநாவிற்கு கொடுக்கப்படும்
தர்மம் வளைந்து நமக்கே திருப்பப்படுவதாக புலம்பிய
அவர் காரணங்களைத் தேடி அலுத்துப் போனார். கீழே விழுந்த நாணயங்களின் ஒலி சிரிப்பாக அலைந்தலைந்து கனவில்
தனக்குக் கேட்டதாகக் கூறி மேலும் குழம்பினார்.இந்த சுழல் வளையத்தை அடுத்த பயணத்தில்
மேலும் சுழல விடக்கூடாது எனத் தீர்மானித்தோம்.
அடுத்த பயணத்தின்
ஊருக்கு திரும்பும் நாளும் வந்தது. கொழும்புக்கு போகும் வழியில் வண்டியை நிறுத்தி அன்வர்
நாநாவிடம் கைமடக்கை வைத்த பிறகு யார் கூப்பிட்டாலும் வண்டியை நிறுத்தாமல் உடனே கிளப்பி
விட வேண்டும் என ஓட்டுநரிடம் சொல்லியிருந்தோம்.
வேனில் ஏறும்படி
என்னை அவசரப்படுத்தினார் காக்கா. ஏறியவுடன் பின்பக்கம் காட்டும் கண்ணாடியைத்தான் முதலில்
பார்த்தேன். காக்கா ஏற்கனவே அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்வர் நாநா தன் சாரத்தை
சரி செய்தவாறே வாயைக் குழப்பிக் கொண்டு திகைத்து
நிற்பது தெரிந்தது.
“அம்பர் இத
எதிர்பாத்திக்க மாட்டான்லே” என்ற என் காக்காவின் கேள்வியில் குதூகலமிருந்தது. நான்
“ம்” என்றேன். அன்வர் நாநாவின் நிற்பைப் பார்த்த பிறகு அவரிடம் நாம் தோற்றுக் கொடுத்திருக்கலாம்
என தோன்றிக் கொண்டேயிருந்தது.
ஊர் போய்
சேர்ந்தவுடன் பேருவளையிலுள்ள எங்கள் அலுவலகத்தின் பக்கத்து வீட்டிலிருந்து வாட்சப்பில்
குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார்கள். ஊருக்கு வரும் நாட்களில் அவர்களிடம்தான் அலுவலகத்
திறவுகோலை கொடுத்து விட்டு வருவது வழமை.
சிறு பொதியொன்றை
எங்களிடம் தரச் சொல்லி அன்வர் நாநா கொடுத்து விட்டு போனாராம். பொதிக்குள்ளிருப்பதை
படமெடுத்து அனுப்பினர். கைச்சுற்று விசையில் இயங்கும் டைனமோ ஆற்றல் வானொலிப்பேழை. ஜப்பான்
உருவாக்கம்.இலங்கையின் உள்நாட்டுப் போர் சமயத்தின்போது மின்சாரமில்லாத வடக்குப் பகுதிகளில்
பயன்படுத்தப்பட்டு தற்சமயம் எளிதில் கிடைக்காத பொருள்.
உள்ளிருந்து
கிளம்பிய தோல்வியின் சிறுமை வெட்கம் கலந்த ஏக்கமாக உருமாறி காக்காவின் முகத்தில் படர்ந்தது.
”நிலத்துலேந்து வானத்துக்கு என்னிக்குமே மழ பெய்ய ஏலாது “என்றார்.வெளியில் கிளம்பிய
குரல்களின் உச்ச கலவையொலியால் பேச்சை தொடரவியலாமல் என்னைப் பார்த்தார்.
கோமான் தெரு
கந்தூரிக்கு வீட்டினருகில் வந்திருக்கும் யானையின் மணியோசையோடு சிறார்களின் ஆர்ப்பரிப்பும் கலந்தது. சிவப்பு,வெள்ளை, மஞ்சள் நிற சுண்ணக்கட்டியால்
பிறையும் பொழுதும் யானை முகத்தில் வரையப்பட்டிருந்தன.அதன் கண்ணிற்கு கீழாக வளைந்திறங்கிய
மூவண்ணக் கோட்டின் வளைவில் மழலையின் வாய் திறந்த சிரிப்பு தங்கிவிட்டிருந்தது.
பாகன் தன்
வசம் இருத்தியிருந்த குழந்தையின் பாதங்களில் யானையின் காதுமடல் தொட்டுத் தொட்டு விலகும்போதெல்லாம்
அக்குழந்தை சிலிர்த்தவாறே காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தது.
சொல் முதலி
சதக்கா -- விருப்பக்கொடை
பத்தை--- கல்
சந்தை --
கனாஅத்து
-- தன்னிறைவாயிருத்தல்
கப்ரு ---
மண்ணறை
சாரம், சாரன் -- லுங்கி
நோனா --- மனைவி
சம்மான்
--- இந்தியன்
ஸஃபர்-- பயணம்
ஜசாக்கல்லாஹ் ஹைரா ---- இறைவன் நற்கூலியளிப்பானாக
தெமிலி – செவ்விளநீர்
சல்லி -- காசு
வீதுரு -- கண்ணாடி
கெழமை -- கிழமை என்பதன் மரூ. வாரம் எனப்பொருள்
பலயன் -- அரிப்பு உண்டாக்கும் மீன் பொருள்
சாக்கு --
சட்டைப்பை
கீஸ் --- பை
பொல் ---- மோசடி
பறக்கத் -- அருள் வளம் , நல்ல பெருக்கம்
ஹர்ஃபு -- எழுத்து
சப்ர் – நிலைகுலையாமை,
பொறுமை
மவ்த் -- இறப்பு
பலாய் முசீபத்
– இடர், துயர்
மனாகிபு,ஹழரா
– ஷாதுலிய்யா சூஃபி தரீக்கத்தின் ஓதல்,தியான முறை
ஹைர் – நலவு
நார்சா -- நேர்ச்சை
வலந்து -- கலன்,பாத்திரம்
கஃபீல் -- அனுசரணையாளர் , உத்திரவாதமளிப்பவர்
மைய்யத்துக்காட்டு -- இடுகாடு
--------------------------------------------------------------------
ஆகஸ்ட் 2025 நடுகல் இணைய இதழில் இக்கதை வெளிவந்தது.
நிலத்து மழை -- நடுகல் இணைய இதழ்
No comments:
Post a Comment