அரஃபா நோன்பை பிடித்த என் பெயர்த்தி காலையில் கண் விழித்து என்னிடம் வந்தாள். தான் ஓர் அழகான கனவை கண்டதாகக் கூறி விவரிக்கத் தொடங்கினாள்.
அவளின் மழலை மொழியில் விவரித்ததால் எனக்கு புரிய கொஞ்சம் சிரமப்பட தெளிவாக சொல்லும்படிக் கேட்டேன். இலேசாக சொல்லத் தொடங்கியவள் சடைந்து நிறுத்தியவாறே “ அப்பா! ஏங்கனவுக்குள்ள நீங்க வந்தா மட்டுந்தான் அது ஓங்களுக்குப் புரியும்” என்றாள்.
--------------------
இந்நிகழ்வை நண்பரும் கவிதாயினியுமான ரியாஸா எம். ஸவாஹிரிடம் பகிர்ந்து இதை கவிதைக்குள் செலுத்தித் தாருங்களேன் என்றேன். அவரின் பல நெருக்கடிகளுக்கிடையே நான் புக முடியாத பெயர்த்தியின் கனவை அவரது கவிதைக்குள் செலுத்தியுள்ளார்.
சிறுமியின் கனவுக்குள் நீந்த நினைக்கும் தாத்தா
~~~~~~
சொற்களை
கோர்வை செய்யத்
தெரியாச் சிறுமி
கனவு கண்டு சிரிக்கிறாள்
அவள் கண்கள்
கனவுகள் ஒளிரும்
சுவனத்து மேகதூதம்
மாதுளம் பற்கள்
மினுங்கத் திறந்த இதழ்களில்
கொப்பளித்தது குளிர் மெழுகு
ஏக்கமும் ஆவலும் எண்ணடங்காத் தவிப்பையும்
மொழிந்திடத் துடித்தது
மிருதுவில்
திரண்ட ஒலியன்
கோர்த்துக் கட்டிய
பாசிமணி ஒளிர
தாளம் தாளமாய்
மணிக்கட்டைப் புரட்டுகிறாள்
புருவங்கள் சிலிர்க்க
சொண்டு குவித்துக் கூவுகிறாள்
அவள் கண்களில்
பீறிட்டுப் பொழிகிறது காந்தாரம்
பூரிக்கும் அவள் மொழிதலை
புரிந்து கொள்ள முடியாத்
தாத்தாவின் பரிதவிப்பில்
கொப்பளிக்கிறது
ஏழு பாலைகளின் தவிப்பு
கிழக்கு மேற்கை நிறைக்கும் சிறகாய் விரியும்
தவித்தலின் வாசத்தை
தன் புயங்களில் பூட்டியவள்
ஆத்மாவைப் பாடுகிறாள்
"கனவென்பது
ஆத்மாவின் ஓசை. ......
ஆசைகளின் ஓர்மம்,......
ஓர்மத்தின் சுவை,......
சுவைகளின் கொந்தளிப்பு,......
ஒருவர் கனவுள்
மற்றொருவர் நீந்த முடியாது "
---- கவிதாயினி ரியாஸா எம்.ஸவாஹிர்
No comments:
Post a Comment