நன்கு திட்டமிடப்பட்ட ,கட்டணமுள்ள ரிஹ்லா பயணங்களுக்கப்பால்
பெரிதாக திட்டமிடப்படாத கட்டணமற்ற அல்லது மிகச்சிறு
செலவுள்ள வட்டார, மின்னல்,குறு ரிஹ்லாக்களை நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.
அந்த வரிசையில் இது இரண்டாவது மின்னல் ரிஹ்லா. ஏற்கனவே
நடந்த மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல். காண்க:
17/06/2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகலில் தொடங்கி அன்றைய
மாலையில் நிறைவுற்றது மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்.
இங்கு போகும் திட்டம் இவ்வருட ரமளானின் பகல் பொழுதின் வெப்பச்சுழியில்
தோன்றியது. ஏர்வாடி காஜா காதர் மீறான் பந்தே நவாஸிடம் பகிர்ந்ததில் உடனே சம்மதம். முதல்
மின்னல் ரிஹ்லாவிலும் நாங்களிருவரும்தான் கூட்டாளிகள். ரிஹ்லா மனிதன் அவர்.
திங்கள்கிழமை அறிவிப்பை வெளியிட்டோம். உடனே அழைப்புகள்
வந்தன. சென்னையிலிருந்து இருவரும் ஊரிலிருந்து ஓராளும் விருப்பம் தெரிவித்தனர். சென்னையிலுள்ளவர்கள்
வர சாத்தியமில்லை.அதனால் ஊக்குவிக்கவில்லை. இரு சக்கர ஊர்தி சிக்கலால் ஊரிலுள்ளவர்
வரவியலவில்லை.
காயல்பட்டினத்திலிருந்து எழுபது கிலோமீட்டர்கள் தொலைவு.
களக்காடு ஏர்வாடியிலிருந்தும் கிட்டத்தட்ட அதே தொலைவுதான். தூத்துக்குடி – திருநெல்வேலி
தேசிய நெடுஞ்சாலையில் வாகைக்குளத்திற்கும் தெய்வச்செயல்புரத்திற்கும் இடையிலுள்ள பொட்டலூரணி
விலக்கில் வலதுபக்கம் உட்செல்லும் சாலையில் சென்றால் பத்து கிலோ மீட்டர்கள் நீளும்
பதையின் முடிவில் இருக்கிறது மீனாட்சிபுரம்.
மீனாட்சிபுரம் என்று கேட்டால் யாருக்கும் விளங்குவதில்லை.ஆளில்லா
கிராமம் எனக் கேட்டால் உடனே வழி சொல்கிறார்கள். நான் ஊரிலிருந்து இரண்டு பேருந்துகள்
மாறி தெய்வச்செயல்புரத்தில் இறங்கிக் கொண்டேன். பைக்கிலேயே ஏர்வாடியிலிருந்து வந்த
காஜா காதர் மீறான் பந்தே நவாஸ் அங்கு வந்து என்னை ஏற்றிக் கொண்டார். செக்காரக்குடி
வரைக்கும்தான் அரசுப் பேருந்து வந்து செல்கிறது. மீனாட்சிபுரத்துக்கு தனி ஊர்தி இல்லாமல்
செல்லவியலாது.
பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைக்கெதிராக போராட்டங்கள்
நடந்ததற்கான அடையாளமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.வானம்
பார்த்த நிலம். மானாவாரி வேளாண்மைக்கு ஏற்ற
கரிசல் மண்.ஆங்காங்கே பருத்தியைப் பயிரிட்டிருந்தனர்.
கீழ, நடு, மேல
என மூன்றாகவிருக்கும் செக்காரக்குடியில்தான் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் புகழ் பெற்ற
பழைமையான ரேக்ளா பந்தயம் எனப்படும் மாட்டு வண்டி பந்தயத்தை நடத்துகின்றனர்.மதிய உணவு,நீர்,தின்பண்டங்களை
செக்காரக்குடியில் வாங்கிக் கொண்டோம்.
ஒரே ஒரு பள்ளிக்கூடம் தட்டுப்பட்டது.பிள்ளைமார்,கோனார்,தலித்துகள்
என மூன்று சாதியினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.மீனாட்சிபுரத்தில் நாயக்கர்,பிள்ளைமார்
சமூகத்தினர் வசித்திருந்திருக்கின்றனர்.
மீனாட்சிபுரம் கிராமம் திருவைகுண்டம் வட்டம்,கருங்குளம்
ஒன்றியம் என இணையச் செய்திகளில் இருந்ததால் ஒரு மணி நேர ஓட்டத்தில் அடைந்து விடலாம்
என நினைத்திருந்தேன். கருங்குளமும், திருவைகுண்டமும் காயல்பட்டினத்திலிருந்து முக்கால்
மணி நேரத் தொலைவில்தான் உள்ளன.
ஆனால் மீனாட்சிபுரத்தை வந்தடைய இரண்டே கால் மணி நேரம் எடுக்கிறது.
மீனாட்சிபுரத்திலிருந்து மாவட்டத்தலை நகரமான தூத்துக்குடி முப்பத்தேழு கிலோ மீட்டர்கள்
தொலைவிலும் வட்ட நகரான திருவைகுண்டம் முப்பது
கிலோ மீட்டர்கள் தொலைவிலும் உள்ளன. நம் நினைப்பிற்கும் இலக்கிற்கும் இடையில் நிலங்களின்
பெருந்தொலைவு நீண்டு விரிந்து கிடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை நாட்டியிருக்கும் மீனாட்சிபுரம் பெயர்ப்பலகை
வரை செல்கிறது தார்ச்சாலை. அதன் பிறகு மண் தடம்தான் கிராமத்திற்கு இட்டுச் செல்கிறது.
மீனாட்சிபுரத்தைத் தாண்டி பாதை இல்லை. வயல் மட்டுமே உள்ளது. பூமியின் கடைசித் தொங்கல்
என நினைக்க வைக்கும்படியான அமைவிடம்.
வெய்யில் என்பது இங்கே ஆண்டு முழுவதும் பெய்யக்கூடிய இன்னொரு
பயிர். வெய்யில் தணிந்து மந்தாரமாகவிருந்ததால் போக்குவரத்தில் சிரமமில்லை. மண்பாதையின்
வலது புறத்தில் ஓட்டுக்கூரை கொண்ட முதல் வீடு நிற்கிறது. ஊருக்குள் இரண்டாகப் பிரியும்
தடத்தில் வலது பக்க பாதையின் வழியாக மணியாச்சி போகலாம்.இங்கிருந்துபதினேழு கிலோ மீட்டர்கள்.
டிவிஎஸ்50 இல் மூன்று சிறார்கள் தென்பட்டனர். மணியாச்சிக்கு போகிறோம் என்றனர்.அதன்
பிறகு ஒரு நடுத்தரவயதுக்காரர் இரு சக்கர ஊர்தியில் விரைந்தார். பாதை அறிந்தவர்கள் மட்டுமே
பயணிக்கக் கூடிய காட்டுப்பாதை.
இடது புற பாதையில் உறுதியான கட்டுமானத்தில் சீனிவாசப் பெருமாள் கோயிலும் சிறிய கல் அறையும்,
கல் நார் கூரையும் கொண்ட பராசக்தி மாரியம்மன் கோயிலும் இருக்கின்றன. பெருமாள் கோயிலை
தற்போது கேரளத்தில் குடியிருக்கும் இவ்வூர்க்காரரொருவர் அரை கோடி ரூபாய்கள் செலவில்
புதுப்பித்திருக்கிறார்.மேல செக்காரக்குடிக்கு அருகிலேயே இக்கோவில்களுக்கான அறிவிப்பு
பலகைகள் நடப்பட்டுள்ளன.இணைய தகவல்களின் படி ஆண்டுக்கொரு தடவை நடக்கும் கொடை விழாவிற்காக
இவ்வூரின் முன்னாள் குடிமகன்கள் வந்து செல்கிறார்களாம். கோயிலுக்கு அருகிலுள்ள மரத்தில்
சார்த்தப்பட்ட பட்டுத் துணி புதியதாக இருந்தது.
கோயிலுக்கு போகும் முன்னர் பாழ்பட்ட அறிகுறிகள் எதுவுமின்றி
பராமரிப்புள்ள ஒற்றை அறை கொண்ட வீடொன்று கதவிலக்கம்
இடப்பட்டு பூட்டியிருந்தது. அதற்கு சற்று தொலைவில் இரு அறைகளும் ஒரு கொட்டகையும் இருந்தன.அதற்குள்
ஒரு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாட்டுக் கொட்டில். மாடுகள் மேய்ச்சலுக்கு
சென்றிருக்கின்றன. உரிமையாளர் பகலில் மட்டும் வந்து செல்கிறார் போலும்.
கொட்டகைக்குள் எங்கள் பைக்கையும் நிறுத்தினோம். அருகிலேயே
அழகிய ரேக்ளா வண்டியொன்று வண்ணம் மங்காமல் நிற்கிறது.ஆதாரம் போனாலும் அரிதாரம் நிற்கும்
புதுமை. உணவுப்பொதிகளை அங்குள்ள கம்பில் தொங்க
விட்டு திரும்பிய பிறகு நாய்க்குட்டியொன்று வாலையாட்டிக் கொண்டு காலைச் சுற்றியது.
மீனாட்சிபுரத்தில் கண்ட முதல் உயிரி.தாய் நாய் மந்தையோடு சென்றிருக்க வேண்டும்.
ஊருக்குள் நடக்கத் தொடங்கினோம். மூன்று தெருக்கள்தான்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வாழ்ந்திருந்ததாக பதிவுகள் உண்டு. கிராமத்தின் இன்றைய
தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது முந்நூறிலிருந்து ஆகக் கூடினால் ஐந்நூறு பேர்கள்
வரை வாழ்ந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. ஆட்கள் போய் ஒரு மாமாங்கம் ஆகப்போகிறதே.குடிசை
வீடுகள் இருந்து அழிந்திருக்கலாம்.
படிப்படியாக நடந்த
வெளியேற்றத்தின் தொடர்ச்சியாக இறுதியாக ஊர் கைவிடப்பட்ட ஆண்டு 2014 என நண்பரும் நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளருமான காட்சன் தெரிவித்தார்.
இங்குள்ள பள்ளிக்கூட பலகையில் 2014 ஆம் ஆண்டு வரை பாடங்கள்
நடத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை தான் கண்டதாகவும் காட்சன் தெரிவித்தார். பள்ளிக்கூடச்
சுவர்களில் காம எழுத்துக்களும் குறிகளும் குறைவின்றிக் கிறுக்கப்பட்டிருக்கின்றன.தரையில்
கூளம் குப்பையில்லை. ஓரங்களில் வெற்று மதுக்குப்பிகள். ஆளற்ற சூழலால் கிறுக்கல்களை
செயல்படுத்த எவ்வித தடங்கல்களுமில்லை.
ஓடு,காரை,கல் என மூன்று அமைப்புக்களில் பாழ் வீடுகள் நிற்கின்றன.
மொத்தத்தில் பத்து வீடுகளுக்குள்தான் இருக்கும். இதில் இரு வீடுகள் மட்டும் ஓங்குதாங்கான
வேலைப்பாடுகளுள்ள கல் வீடுகள்.
பாழ்பட்ட வீடுகளில் ஓடு மேயப்பட்ட சிறு வீடுகளை விட பெரிய வீடுகள்தான் கைவிடப்பட்டதின்
கழிவிரக்கத்தை கூடுதல் கோருகின்றன. சிறிய செட்டிமையான வீடுகள் நிரந்தரத்தையும் தற்காலிகத்தையும்
அருகருகே பிடித்து வைத்திருப்பதினால் பிரிவும் பாழும் அவற்றை காற்றைப்போல தீண்டிச்
செல்கின்றன.
இது போன்ற ஆளற்ற இடங்களில் ஜின்கள் ஒதுங்குவதுண்டு என்பதால்
அவற்றின் சந்திப்பை எதிர்பார்த்துச் சென்றோம். கொழுத்து வெளுத்த வவ்வால்கள்தான் அமைதி
கலைந்து எழுந்து பறந்தன. ஜின்கள் வவ்வால் வடிவில் கூட வரவியலும்தானே?இப்படியான ஒதுங்கு
உயிரிகள் தென்பட்டால் பேசி விவரங்கேட்கலாம்தான்.நாம் அவற்றைக் கண்டு அஞ்சுவது மாதிரி
அவையும் எங்கள் வரவில் கலைந்திருக்கக் கூடும்.
வாழ்வு மறந்த வீடுகளுக்குள் நுழைந்த பிறகு ஒருவரை மற்றவர்
சிறிது நேரத்துக்கு காணவில்லையென்றாலும் அவர் பாழ் நில மர்மங்களுக்குள் சென்று விட்டாரோ?
ஜின் தோழமை எதுவும் ஏற்பட்டு விட்டதா?என்ற எண்ணம் எழாமலில்லை. சென்று வெளியேறிய வீட்டின்
பின்புறம் சிறுகோவிலொன்று.அதன் முன் கட்டப்பட்டிருந்த வெண்கல மணியை ஒலித்தோம். கடைசி
மூச்சின் மறு ஒலிபரப்பு.
அமைதியை குலைக்காத காற்றின் வீச்சு மட்டுமே எங்கும் நிறைந்துள்ளது.மனித
இயக்கம் அதன் உச்சத்தில் இருக்கும் நண்பகல் பொழுதில் அதை விட்டு எங்கோ அடித்துச் செல்லப்பட்டு
பெருங்கடல்,பரந்த பாலை பரப்பின் மையத்தில் குடியிருக்கும் நினைப்பு.கழற்றவியாலத மௌனத்திற்குள்ளும்
அசைவின்மைக்குள்ளும் ஒரு வலுக்கட்டாயமில்லை.
ஏகாந்தவாசத்திற்கும் தன்னில் தான் ஊறுவதற்குமான இடமிது.
ஏகாந்தத்தை நாடும் எல்லோருக்கும் இவ்வளவு தொலைவெல்லாம்
வரும் சாத்தியமில்லைதா. ஏகாந்தம் பேருருக் கொள்ளும் இது போன்ற இடங்களின் வழியாக நம்
வாழிடங்களில் நம்மைச்சுற்றியுள்ள அமைவிடங்களில் கரந்துறையும் ஏகாந்தப் புள்ளிகளை அடையாளங்கொள்ளவியலும்.
எ.கா: கடல்,நதி தீரங்கள்,ஊருக்கு வெளியே,நெடுஞ்சாலைகளின் பக்கவாட்டிலுள்ள சிறு காடுகளில்,ஒதுக்குப்புறமான
வழிபாட்டிடங்களில் என முயன்றால் கண்டுகொள்ளவியலும்.
பாழ் வீடுகளில் வவ்வால்களுக்குப் புறமே ஒரு நத்தைக்கூட்டைக்
கண்டோம். பாம்போ,கரையான் புற்றுக்களோ இல்லை.தெருக்களிலுள்ள மின் வடங்களில் வந்தமர்ந்து
போகும் மைனா, சிவப்பு கெண்டைக்குருவி எழுப்பும் ஒலிகள் தவிர இன்னொரு ஒலி இல்லை.காக்கையை
எங்கும் காண முடியவில்லை.
எல்லாவற்றையும் காற்றின் தனி இசையும் பனை மர மடல்களினூடான
சடசடக்கும் அதன் பக்க இசை மட்டுமே மிகைத்திருந்தது. நடந்து அமர்ந்து கிடந்து போன முன்னாள்
ஊர்வாசிகளின் பேச்சரவங்களை,எண்ண உணர்வு அடுக்குகளை காற்றானது எங்கோ கொண்டு பதுக்கி
வைத்திருக்கும்.
அரை மணி நேரத்திற்குள் சுற்றி முடித்தாகி விட்டோம்.உணவுப்
பொதியை எடுத்தால் அது வரை கண்ணில் பட்டிராத ஓர் அணில் அதனைத் தேடி வந்திருந்தது. எங்களைக்
கண்டவுடன் அதற்கு ஒரு திகைப்பு.இலக்கமிடப்பட்ட வீட்டின் படியில் அமர்ந்து பொதிகளைப்ப்
பிரித்தோம். அதில் ஒரு பொதியை கறும்பியிருந்தது அணில். அது தனக்கு என்பதற்கான உரிமைக்
கோரல்.
உண்டுக் கொண்டிருக்கும் போது மாட்டுக்கொட்டகைக்காரர் வளர்க்கும்
பூனை சீமை உடைக்குள் நின்று ‘மியாவ்’ என்றது. கைகழுவப்போகும்போது இரு அண்டங்காக்கைகள்
வேலிக் கற்களின் மீதமர்ந்து கரைந்தன.
அன்னத்தையும் நீரையும் காணும் வரைக்கும் இவை காற்றுக்குள்
துளி ஒலி கூட எழுப்பாமல் சலனமொழிந்து கரந்துறைந்திருந்தனவா?
அல்லது அருவப்புள்ளிகளாகி வெளியில் மிதந்தலைந்தனவா? பருக்கைக்குள்ளும் துளிக்குள்ளும்
ஒளிந்திருப்பது உயிர் மருந்தன்றோ?
இந்நிலத்தை கைகழுவிய பின்னர் மீனாட்சிபுரம்வாசிகள் தூத்துக்குடி
நகரத்தின் மீனாட்சிபுரத்தில் குடியேறியுள்ளனர். குடிநீர் பற்றாக்குறையுடன்,பேருந்து
வசதி,மருத்துவமனை இன்மைகளும் படிப்படியாக ஆட்களை இங்கிருந்து வெளியேற்றியிருக்கிறது.
யாருக்காவது உடல் நலமில்லையென்றாலும் குடிநீர் எடுப்பதற்கானாலும்
மூன்று கிலோமீட்டர்கள் வரை நடந்துதான் செக்காரக்குடி
போக வேண்டும். பெருமளவிலான ஆட்கள் வெளியேறிய பிறகு அரசினால் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
விட்ட மூச்சை பிடிக்க முயன்ற கதை.
எல்லா வைராக்கியங்களுடனும் இக்கிராமத்தின் கடைசி மனிதராக
ஒற்றையாளாக நாயக்க முதியவொருவர் வாழ்ந்து சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
இன்று கோயில் சிலைகளும்
சிற்றுயிர்களும்தான் மீனாட்சிபுரத்தை தங்களுக்குள் குடிவைத்திருக்கின்றன.
தொடர்புடைய பதிவு
மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம் (மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்) --ஒளிப்படங்கள்
இவண் இவணின் வீடு கட்ட தேவையான கருங்கல் வாங்க
ReplyDeleteஇருபது வருடங்களுக்கு முன் சென்றுள்ளேன்
அப்பவே ஆளரவமற்ற பகுதி அது.
குவாரிக்காரர் எனது ஆர்வத்தை கண்டு வியந்து
விலைகுறைவாக நல்ல கல்லும், அதைகொண்டு
வந்து சேர்க்க அவரே வண்டியும் ஏற்பாடு
செய்துகொடுத்தார்.
பின் உடனடியாக கிளம்புங்கள்இருட்டினால்
பாதைதெரியாது என்றார்.
நல்ல மனிதர்.
இவண் அன்று வைத்திருந்ததும் டிவிஎஸ் 50
தான்.
சரி எதற்காக இந்த முயற்சி.
இதன் நோக்கம் என்ன.